ஞாயிறு, 21 ஜூன், 2020

மூன்றாம் தந்திரம் - 20. அமுரி தாரணை

மூன்றாம் தந்திரம் - 20. அமுரி தாரணை


பண் :

பாடல் எண் : 1

உடலிற் கிடந்த உறுதிக் குடி நீர்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாட்டலு மாமே. 

பொழிப்புரை :

உடம்பில் இயல்பிலே பொருந்தியுள்ள ஆற்றல் மிக்க, குடிக்கத் தகும் நீர், கடலில் சிறிய கிணற்றுக்கு இடப்படும் ஏற்றத்தை இட்டு இறைத்துக் கொள்ளுதலோடு ஒத்திருக்கும். (அஃதாவது, ``மிகுதியாய் வெளிப் போகும் சிறுநீரில் சிறிதளவு உளதாகும்`` என்பதாம்) அதனை உடலினின்று வெளிப்போதும் முன்பே வேறொரு வழியால் அவ்வுடலுக்கே ஆகுமாறு பாய்ச்சினால், உயிர் துன்பப் படாது நெடுங்காலம் நிற்கும்படி நிறுத்துதல் கூடும்.

குறிப்புரை :

``அமுரி`` என்றாயினும், ``நீர்`` என்றாயினும் ஒரு பெயர்ச் சொல்லால் ஓதின், ``அது சிறுநீரே போலும்`` என மலைய வரினும் வரும் என்னும் கருத்தால், அங்ஙனம் மலையாமைப் பொருட்டு, ``உறுதிக் குடி நீர்`` எனத் தொடர்மொழியால் பொருள் இனிது விளங்க ஓதினார். சிறுநீர் தீப்பொருளாய்க் கழிக்கப்படுவது ஆதலின், அஃது உறுதியைத் தருவதாய்க் குடிக்கத் தக்கதாகாமை வெளிப்படை.
``உடலில் இறைக்கில்`` என்றது, ``உடலினுள் இருக்கும் பொழுதே இறைத்தால்`` என்றவாறு. வேறொரு வழி, சுழுமுனைத் தண்டு; உடலில் உள்ள பல நாடிகளும் இதனைச் சுற்றிக்கிடத்தலால், அவற்றின்வழி அமுரியைப் பிராண இயக்கத்தால் உடல் எங்கும் செல்லுமாறு பாய்ச்சுதல் கூடும் என்க. யோக முயற்சி இல்லாதார்க்குப் பிராணன் அபானனாதல் பெரும்பான்மையாய்க் கீழ்ப்போய் ஒழிய, யோக முயற்சி உடையார்க்கு அஃது அவ்வாறாகாமல் சுழுமுனைவழிச் சென்று உடற்குப் பயன் தருதல்போல, அமுரியும் பிறர்க்குச் சிறுநீரோடு ஒன்றாய் வெளிப்போந்து ஒழிய, யோகியர்க்கு அவ்வாறாகாமல் உடற்கண் சென்று பயன்படுவதாம். அதனை அங்ஙனம் பயன்படச் செய்யும் முறையையே, ``உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்`` என்றார். ஒன்று - ஒன்றாய் நிற்கும் உடல். நடலை - துன்பம். ``உயிர் நாட்டலும் ஆம்`` என்றது, அமுரியின் பயன் கூறும் முகத்தால் பெயர்க் காரணத்தை விளக்கியவாறு.
இதனால், ``அமுரியாவது இது`` என்பதும், அதனைத் தரிக்கும் முறையும், அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டில் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகம தாமே.

பொழிப்புரை :

யோக முறையால் வடித்துக்கொள்ளப்படுதலால் ``சிவ நீர்`` எனச் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற இந்த அமுரியைப் பருகுதலை மேற்கொண்டால், ஓராண்டுக் காலத்தில் அறிவு மிக விளக்கம் பெறும். உடலுக்கு உள்ள நோய், இளைப்பு முதலிய குறைகள் நீங்கும். எட்டாண்டில் வாசி யோகம் கைவரும். அதனால், மன ஒருமை உளதாகும். அதனால் அமைதியான ஓர் இன்பம் தோன்றும். உடம்பு பொன் போல அழகு பெற்று விளங்கும்.

குறிப்புரை :

``தெளி தரும்`` என்றது, ``தெளித்துத் தரப்படும்`` என்னும் பொருளது. இதனானும், சிறுநீரே அமுரி அல்லது சிவ நீர் ஆகாமை அறியப்படும். ``பருகில்`` எனப் பொதுவகையாற் கூறினாரேனும், மேல், ``உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்`` என்றதே பொருளாம். ``ஓராண்டில் எட்டில்`` என்பவற்றை அவ்வவ் அடியின் முதற்கண் வைத்து உரைக்க.
இதனால், அமுரி தாரணையின் பயன்கள் பலவும் எடுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

நூறும் மிளகு நுகரும் சிவத்தின் நீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்காள்
தேறி இதனைத் தெளிஉச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே. 

பொழிப்புரை :

யோகியர்களே, நீவிர் பொடி செய்த மிளகை உண்ணுங்கள்; அதனால், சிறுநீர் சிவநீராய் மாறும். அவ்வாறு மாறுவதற்கு மருந்து ஒன்றும் வேண்டுவதில்லை. மிளகுப் பொடியின் ஆற்றலைத் தெளிந்து அறிவிற்கு நிலைக்களமான உச்சியில் அதனை அப்பினாலும் அவ்வாறாம். இன்னும் இதனாலே நரையும் மாறும்.

குறிப்புரை :

நூறுதல் - பொடித்தல். ``நூறு மிளகு`` எனக் கொண்டு, எண் வரையறையாக உரைத்தல் கூடாமை அறிக. நுகரும், பன்மை ஏவல். ``மாந்தர்கள்`` என்பது பாடமாக ஓதின், இதனை, ``நுகர`` எனச் செயவென் எச்சமாக ஓதுக. ``நீர் சிவத்தின் மாறும்`` என மாற்றி யுரைக்க. சிவத்தின் - சிவமாக. ``மருந்தில்லை`` என்றதனால் இங்குக் கூறப்பட்டவை யோகியர்தம் ஒழுக்கப் பகுதியாய், அமுரி தாரணை யாய யோகத்திற்குத் துணையாவனவாயின. கப்புதல் - மூடுதல் `கப்பஇடின்` என்பதில் அகரமும், ``கப்பிடினும்`` என்னும் எச்ச உம்மையும் தொகுத்தல் பெற்றன. `உச்சிக்கு அப்பிடின்` எனப் பாடம் ஓதி, `உச்சிக்கு என்பது உருபு மயக்கம்` என்றலும் ஆம். ``இதற்கு`` என்பது உருபு மயக்கம்.
இதனால், அமுரி தாரணைக்குத் துணையாவன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனுமங் கில்லையே.

 அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளுங் கபாலமே.

பொழிப்புரை :

உண்ணத் தகுவதனையும், தகாததனையும் அறிய மாட்டாத சிலர், தம்வழி நிற்பாரை, கடற்கரையின் அருகில் கானலிலே உள்ள உப்பங்கழியின் நீரை அப்படியே முகந்து உண்ணுமாறு பணிப்பர். அந்நீரை நுரையையும், பிற மாசுகளையும் நீக்கி உண்ண வல்லவர்க்கே பயன் உளதாம்.

குறிப்புரை :

இது ஒட்டணி. இதனுள் ``உவரி`` என்பது அடை பொதுவாக்கி மொழிதலும், ஈற்றடி அடை விரவத்தொடுத்தலும் ஆம்.(தண்டியலங்காரம், 51) இதனாற் பெறப்படும் பொருள் வருமாறு:- சுவாதிட்டானத்திற்கு அருகில் நின்று குறிவழியே வெளிப்போதுகின்ற சிறு நீரையே சிலர் `அமுரி` எனச் சொல்லிப் பிறரை உண்பிக்கின்றனர்; அஃது அறியாமைப்பாலது. அச் சிறுநீரைக் குற்றம் களையும் முறையறிந்து களைந்து உண்ண வல்லவர்க்கே அமுரியால் விளையும் பயன் உளதாகும்.
கானல் - கடற்கரையை அடுத்த இடம். `கானல்` எனவே, கரை, கடற்கரையாயிற்று. `உவரி` என்பது காரணக் குறியாய் உப்பங்கழி நீரைக் குறித்துச் சிறுநீர் மேலும் நோக்குடைத்தாயிற்று. வரைதல் - கொள்ளுதல். ``வரை வரை`` என ஏவல் முற்று, வலியுறுத்தற்கண் அடுக்கி வந்தது. இது பன்மை ஒருமை மயக்கம். முதற்கண் நின்ற திரை, அலை. அஃது ஆகுபெயராய் அதன்மேல் மிதக்கும் மாசுகளைக் குறித்தது. ``நரை திரை மாறும்`` என்றது, `மூப்பு நீங்கி இளமை உண்டாகும்` எனவும், ``நமனும் அங்கு இல்லை`` என்றது கூற்றுவன் வருதலும் அவரிடம் இல்லை எனவும் கூறியவாறு. ``நமன்`` என்பது அவனது வருகைமேல் நின்ற ஆகுபெயர். வரைதலைத் தள்ளுதலாக்கி, அதற்கியைய உரைப்பாரும் உளர்.
இதனால், `அமுரி` என்பதனை உள்ளவாறு உணராத வழிப் பயன் இன்மை கூறப்பட்டது.
இதன்பின், பதிப்புக்களில் காணப்படும் ``அளக நன்னு தலாய்`` என்னும் செய்யுள் நாயனார் திருமொழி அன்று என்பது, யாப்பமைதியானே எளிதின் விளங்கும். அன்றியும், மகடூஉ முன்னிலையாக நாயனார் மந்திரம் செய்யாமையும் நோக்கற்பாற்று. யாப்பமைதியைச் சீர்செய்தற்கு நிகழ்ந்த சிறு முயற்சி, ``அழகிய நன்னுத லாயோ ரதிசயம்`` எனவும், ``இளகிடும் மேனி`` எனவும் காணப்படுகின்ற பாட வேற்றுமைகளால் அறியப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 5

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே.

பொழிப்புரை :

அமுரியை, `வீரத்தைத் தரும் மருந்து` என்றும், `தேவர் உண்கின்ற அமுதம்` என்றும், `மகளிரோடு மெலிவின்றிக் கூடுதற்குரிய மருந்து` என்றும் எங்கள் நந்தி பெருமான் அருளிச் செய்தார். `இஃது இறைவனே மக்கட்குப் படைத்துத்தந்த இயற்கை மருந்து` என்று குருமொழியால் அறிகின்றவர்கள், இதன் பயனை இவ்வுலகத்தில் கண்கூடாகக் காணும் மருந்து இது. இதன் பெருமையைப் பொதுமக்கட்குச் சொல்லுதல் கூடாது.

குறிப்புரை :

`சொன்னால் இதனைப் பெறும் முறை அறியாமையால் சிறுநீரையே உண்பவராவர்` என்பது கருத்து. நாரி, பன்மை ஒருமை மயக்கம். ஆதி - இறைவன். சோதி மருந்து, வினைத்தொகை. இதன்கண் உயிரெதுகை வந்தது.
இதனால், அமுரியின் சிறப்பு விரித்துக் கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...