ஞாயிறு, 21 ஜூன், 2020

மூன்றாம் தந்திரம் - 21. சந்திரயோகம்

மூன்றாம் தந்திரம் - 21. சந்திரயோகம்


பண் :

பாடல் எண் : 1

எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்துங் கலைபோல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே. 

பொழிப்புரை :

சந்திரனிடத்துப் பொருந்தியுள்ள கலைகள் நுண்மை யினின்று வளர்ந்து பருமையாக நிறைவெய்தும், (பின் பருமை யினின்றும் தேய்ந்து நுண்மையாக ஒடுங்கும்) வளர்பிறை தேய்பிறை என்னும் இருவகைப் பக்கத்திலும் அவை அவ்வாறாதல் போல உடம்பில் உள்ள சந்திர மண்டலத்தின் ஆற்றல்களும் நுண்மை யினின்றும் வளர்ந்து பருவுடம்பில் நிறைதலும், பருவுடம்பினின்றும் தேய்ந்து நுண்ணுடம்பில் ஒடுங்குதலும் உடையவாம்.

குறிப்புரை :

`சூக்குமம்` என்பது, ``சூக்கம்`` என மருவிற்று. உவமையில் வளர்தல் கூறியதனானே தேய்தலும் பெறப்பட்டது. அஃது, ``இருவகைப் பக்கத்துள்`` என்பதனானும் அறியப்படும் `அவ்வாறு எய்தும் கலைபோல` என்க. ஆம், அசைநிலை. ``துய்யது`` என்றது, சந்திரமண்டலத்தை, என்னை? சந்திரனோடு ஒப்பிக்கத் தக்கது அதுவேயாகலின், உவமையிற்போலப் பொருளிலும் `சூக்கத்தில், தூலத்தில்` என நீக்கப் பொருட்கண் வந்த ஐந்தாம் உருபு விரிக்க. ``காயம்`` என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `துய்யது காயத்தில் சூக்கத்தினின்றும் தூலத்தினின்றும் ஏறி இறங்கும்` எனக் கூட்டி உரைக்க. சந்திர மண்டலத்தின் ஆற்றலைத் தனக்கேற்ற வகையில் பெற்ற நுண்ணுடம்பையே நாயனார்மேல் (பா.625) `பரகாயம்` எனக் கூறியிருத்தல் இங்கு நினைவு கூரத்தக்கது.
இதனால், பிண்டத்தில் உள்ள சந்திர மண்டலம் அண்டத்தில் உள்ள சந்திர மண்டலத்தோடு ஒத்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள்
ஏகின்ற அக்கலை யெல்லாம் இடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே. 

பொழிப்புரை :

யோகத்திற்கு உரியனவாகின்ற சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை என்பவை முறையே பதினாறு, பன்னிரண்டு, பத்து என்னும் எண்ணிக்கையை உடையன. இயங்குகின்ற அவ் எல்லாக் கலைகளும் யோகி தனது அறிவால் அறிந்து அமைக்க அமைவனவே; அண்டத்தில் உள்ள சந்திரன் முதலியவற்றின் கலைகள் போல இயல்பாக அமைந்தன அல்ல.

குறிப்புரை :

யோகியால் அறிந்து அமைக்கப்படுதலாவது, ஒரு முறை பூரித்துக் கும்பித்து இரேசித்து முடிப்பது `ஒருகலை` எனப் படுதல். ``உள்`` என்னும் முதனிலை, `உள்ளன` எனப் பொருள் தந்தது. இடைவழி - நடு நாடி. ``இடைவழி ஆகின்ற யோகி`` என்றது, யோகியின் தன்மையை விதந்தவாறு. யோகத்தில் கொள்ளப்படும் `சந்திரன், சூரியன், அக்கினி` என்பன, இடை பிங்கலை சுழுமுனை நாடிகளின்வழி இயங்கும் பிராண வாயுக்கள் என்பது மேலே பலவிடத்தும் பெறப்பட்டது. உலகச் சந்திரனுக்குக் கலைகள் பதினாறாதலும், சூரியர் பன்னிருவர் எனப் படுதலும் ஆகிய ஒற்றுமைபற்றி இங்குச் சொல்லப்படும் கலைகளும் இயல்பாய் அமைந்தவை போலும் என மலையாமைப் பொருட்டுப் பின்னிரண்டு அடிகளைக் கூறினார்.
இதனால், யோகத்திற்குரிய சந்திரன் முதலிய மூன்றற்கும் உரியகலை யளவுகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஆறாற தாங்கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கிளர் ஞாலங் கவர்கொளப்
பேறாங் கலைமுற்றும் பேருங்கால் ஈரெட்டும்
மாறாக் கதிர்கொள்ளும் மற்றங்கி கூடவே.

பொழிப்புரை :

சூரியன் பன்னிரண்டு கலைகளையே உடைய தாயினும் அது சந்திரனது பதினாறு கலைகளையும், அதற்கு ஏதுவாய் நிற்கும் பதினாறு மாத்திரைப் பிராண வாயுவையும் உட்கொள்ளும் ஆற்றல் படைத்தது. அஃது அன்னதாவது, தான் அக்கினி கலையோடு சேரும்பொழுதேயாம்.

குறிப்புரை :

எனவே, `சந்திரனிலும் சூரியன் ஆற்றல் மிக்கது` என்றவாறு. இஃது உலகியல்பானே அறியப்படுமாயினும், `யோக முறையில் வேறாங்கொல்லோ` என ஐயுற நிற்குமாதலின், அது நீக்க வேண்டி எடுத்தோதினார். அன்றியும், ஒப்பினாற் பெற்ற பெயர் உடைமை பற்றியே உவமைக்கு உள்ளன வெல்லாம் பொருட்கும் கொள்ளல்வேண்டும் என்னும் கட்டளை இன்மையால் `இது கொள்க` என்றற்கும் ஓதினார். இனி `சூரியன் அக்கினியோடு சேர்ந்தே ஆற்றல் மிக்கு நிற்கும்` என்பது இங்கு இன்றியமையாது ஓதற்பால தாயினமையும் அறிக.
``ஆறாறு`` என்பதனை `ஆறோடு கூடிய ஆறு` என விரிக்க. `ஆதித்தன் ஆறாறதாயினும் கொள்ளும்` என ஒருசொல் வருவித்து இயைக்க. `சந்திரன் நாறாமலும், ஞாலம் கவர் கொளவும் கதிர் கலை களையும், காலினையும் கொள்ளும்` எனக் கூட்டி வினை முடிவு செய்க. நாறுதல் - தோன்றுதல். கவர் - கவர்த்தல்; ஐயுறல். அஃது இங்கு மருட்கை எய்தலின் மேற்று. பேறாங் கலை - சந்திரனுக்கு இயல்பாய் உள்ள கலை. பேர்தல் - இயங்குதல். மாறாக் கதிர் - என்றும் மறையாத கதிர்; சூரியன். இது, `மாறாக் கதிராகிய அது` எனப் பொருள் தந்தது. `மற்றும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. `அங்கியோடு` என மூன்றாவது விரிக்க. ஏகாரம் பிரிநிலை. இம் மந்திரம் பெரிதும் பாடம் வேறுபட்டுள்ளது.
இதனால், மேற்கூறிய சந்திரன் முதலிய மூன்றனுள் சூரியனது ஆற்றல் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொ டாறும் உயர்கலை பால்மதி
ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே. 

பொழிப்புரை :

`சூரியன், சந்திரன்` என்னும் இரண்டற்கும் மேற் சொல்லிய கலையளவில் வேறுபாடில்லை. ஆயினும், அக்கினிக்கு மேற்சொல்லப்பட்ட கலையளவு இழிபளவாக, உயர்பளவு அறுபத்து நான்காம். இதனை யோக முறையை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

அக்கினி கலைக்குத் திரிபு கூறுவார், பிறவற்றின் கலைகளில் ஐயம் வாராமைப் பொருட்டு அவற்றின் அளவுகளைப் பெயர்த்துங் கூறி வலியுறுத்தினார். `அடங்கு தீ, அழலுந் தீ` என அக்கினி இரு நிலைமை உடைத்தாதலின், அதற்கேற்ப அதன் கலை களும் இழிபு உயர்வுகளை உடையவாயின. இது பற்றியே அக் கினியைச் சில இடங்களில் இரண்டாக வைத்து எண்ணுவார் ஆசிரியர்.
இதனால், சந்திரன் முதலிய மூன்றனுள் அக்கினியின் கலைக்கு எய்தியதன்மேல் சிறப்புணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை
கட்டப் படுமீரெட் டாகும் மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாகவே. 

பொழிப்புரை :

அக்கினி முதலிய மூன்றற்கும் சொல்லப்பட்ட கலை அளவுகளை ஒன்றற்கு உரியது மற்றொன்றற்கு ஆகுமாறு பொருத் துதல் கூடாது.

குறிப்புரை :

என்றது, `அதனதன் அளவில் கூட்டுதல் - அல்லது குறைத்தல் கூடாது` என்றவாறு. இங்ஙனம் வலியுறுத்தி ஓதியதனால், மேற்கூறிய அளவை மாற்றின் தீங்கு பயக்கும் என்பது பெறுதும். மேற்கூறிப் போந்த அளவுகளை எல்லாம் மீளவும் வகுத்தோதியது வரையறையை வலியுறுத்தற் பொருட்டாதல் அறிக. சுட்டப்படுதல் - சிறப்பித்துச் சொல்லப்படுதல். கட்டப்படுதல் - வரையறுக்கப்படுதல்.
இதனால், கலைகளின் அளவு வரையறையே அவற்றால் விளையும் நன்மைக்கு ஏதுவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக்
கட்டப் படும்தா ரகைக்கதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே. 

பொழிப்புரை :

அக்கினிக்கு அறுபத்து நான்கு, சூரியனுக்குப் பன்னிரண்டு, சந்திரனுக்குப் பதினாறு எனக் கலைகள் மேற்கூறியவாறு வரையறுக்கப்படும் பொழுது அவற்றிற்கு மேலும் நட்சத்திரக் கலை என நான்கு சொல்லப்படும். ஆகவே, அவையும் கூடக் கலைகள் தொண்ணூற்றாறாம். இத்தொண்ணூற்றாறு கலைகளையும் தத்துவ தாத்துவிகங்களாகிய தொண்ணூற்று ஆறுமாகக் கொள்க.

குறிப்புரை :

அங்ஙனம் கொள்ளுதலால் வரும் பயனும், ``நட்சத்திரக் கலையாவன இவை`` என்பதும் வருகின்ற மந்திரத்துட் பெறப்படும். நட்சத்திரக் கலை நான்கு உளவென்பது உணர்த்து தலேயன்றி, அனைத்தையும் எண்ணித் தொகை கொள்ளுதலும் செய்கின்றாராதலின், அதன் பொருட்டு மேற்கூறிய அவ்வளவு களையும் உடன் கூட்டி எண்ணினார். `சுட்டியிட்ட, கட்டியிட்ட` என்பவை குறைந்து நின்றன. ``கலாதி`` என்றது கலையைத் தோற்ற முறையிலும், ஒடுக்க முறையிலும் முதலாக வைத்துக் கூறியவாறு.
இதனால், கலையளவிற்கு எய்தாதது எய்துவித்து முற்ற முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலம்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லார் திருவடி நண்ணிநிற் பாரே. 

பொழிப்புரை :

தொண்ணூற்றாறு கலைகளும், `இடை, பிங்கலை, சுழுமுனை` என்பவற்றுடன், நடுநாடி வழியாகக் கீழ்ப் போய்த் தொடர்கின்ற, இதுகாறும் சொல்லப்படாத மூலாதாரத்திலும் ``பூரகம், கும்பகம்`` என்பவற்றில் ஏற்ற பெற்றியால் பொருந்திப் பின் மேல் எழுந்து தலையிலே சேர்தலால், யோகிகள் சிவனது திருவடியை அடைய வல்லவராவர்.

குறிப்புரை :

``இடை, பிங்கலை`` என்பவற்றில் பூரகத்தாலும், சுழுமுனையில் கும்பகத்தாலும் பொருந்துவன முறையே சந்திர கலை சூரிய கலை அக்கினி கலைகளாதல் மேலெல்லாம் இனிது பெறப் பட்டமையின் ``மூலம்`` என்றது நட்சத்திரக் கலை பொருந்தும் இடத்தையே குறித்தது என்பது நன்கு பெறப்படும். ``அவ்விடத்துத் தொடர்தலும் கும்பகத்தாலே`` என்றற்கு ``நடுநாடி யூடே தொடர் மூலம்`` என்றார். ``சொல்லா மூலம் தொடர் மூலம்`` எனத் தனித்தனி கூட்டி யுரைக்க. எல்லாக் கலையும் உடன் சிரத்துச் சேர்தலால், ``பெத்தத்தில் தத்துவ வன்னரூபனாய் (சிவப்பிரகாசம், 64) உள்ள சீவன் அவ்வுருவத் தோடே சிவனடியைச் சேர்பவனாவன்`` என்பது மேல் தொண்ணூற் றாறு கலைகளையும் தொண்ணூற்றாறு தத்துவங்களாகக் கொள்க என்றதனால் பெறப் பட்டது. `சிவனது திருவடி சீவர்களது தலைமேல் உள்ளது` என்பது யோக நெறி. `இறைவன் அடியை அவன் அடியவர் தம் முடிமேற் கொள்வர்` என்பதனைச் சரியையாளரும், கிரியையாளரும், தாம் வழிபடும் மூர்த்தியின் திருவடி தம் சென்னி மேல் பொருந்துமாறு வீழ்ந்து வணங்குதலாகவும், யோகியர், சகத்திராரத்தும், நிராதாரத்தும் இறைவன் திருவடியைத் தியானித்தலாகவும், ஞானியர், தமது ஞான சத்தி கிரியா சத்தி இரண்டனையும் இறைவனது ஞான சத்தி கிரியா சத்திகளில் அடங்கப்பண்ணி அவனது அருள்வழி நிற்றலாகவும் கொண்டு ஒழுகுவர் என்க.
இனி, ``எல்லாக் கலையும் எழும்பிச் சிரத்துடன் சேர்தலால் திருவடி நண்ணி நிற்பார்`` என்றதனால், அங்ஙனம் சேரும் நிலையை அக்கலைகள் படிமுறையால் பெற்று நிறைவுறுதலே சந்திரயோகம் என்பதும் விளங்கும்.
இதனால், மேற்கூறிய கலைகள் பயன் தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்
தங்கிய தாரகை யாகும் சசிபானு
பங்கிய தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே. 

பொழிப்புரை :

`அக்கினிகலையில் சந்திரன், சூரியன்` என்னும் இரண்டன் கலைகள் தாக்குதலால் அவற்றொடு வைத்து எண்ணப் படுகின்ற நட்சத்திரக் கலைகள் தோன்றும். இங்கு, `சந்திரன், சூரியன், அவற்றின் கூறுகளாகிய நட்சத்திரம்` என்று சொல்லப்படுவன வெல்லாம் சத்தியது ஒளிப்பகுதிகளே. அதனால், இவை பிரணவ யோகிகட்கு நவமண்டலமாயும் நிற்கும்.

குறிப்புரை :

இம்மந்திரத்துச் சொல்லப்பட்ட பொருள்களுள் முதலது ``அங்கி மதிகூட`` (பா.847) என்னும் மந்திரத்திலும், ஈற்றது வருகின்ற மந்திரத்திலும் விளங்கும். சின்னம் - துண்டம்; என்றது கலையை. `கதிர் இரண்டு` என்பது ஒரு சொல் தன்மைப்பட்டு நிற்க, `சின்னக்கதிர் இரண்டு` என்பது, பின் முன்னாகத் தொக்க ஆறாவதன் தொகை யாயிற்று. `பங்கு` என்பதன் அடியாகப் பிறந்த `பங்கிய` என்பது, `பக்கு நின்ற` எனப் பொருள் தந்தது. திரோதான சத்தியையே இங்கு, `பரா சத்தி` என்றார். யோகியர்க்கு அஃது அவ்வாறு சிறந்து நிற்றலின். அதன் ஒளியாவது குண்டலி சத்தி. சந்திர கலை முதலியவாய் நிற்கும் வாயுக்களையே `குண்டலி சத்தி` என்றது, அவை அச்சத்தியை விளக்கி அதனோடு ஒற்றித்து நிற்றல்பற்றி. இவ்வாற்றால், இவை குண்டலி சத்தியாதல் இனிது விளங்குதற் பொருட்டே பிரணவ யோகிகட்கு இவை நவமண்டலமாய் நிற்றலும் உடன் கூறினார். தொண்ணூற்றாறு கலைகளையும் முன்னர்த் தொண்ணூற்றாறு தத்துவமாகக் கூறிப் பின் அவற்றைக் குண்டலி சத்தியாகக் கூறியவதனால், தத்துவ வன்ன ரூபியாகிய சீவன் சந்திர யோகத்தால் குண்டலி சத்தி வடிவாய்ச் சந்திர மண்டலத்தை அடைந்து சிவனது திருவடியைச் சேர்வான் என்பது போந்தது. `பரையொளியாகும்` என மாறிக்கூட்டுக.
இதனால், கலைகளுக்கு எய்தியதன் மேற் சில சிறப்பு இயல்புகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே. 

பொழிப்புரை :

`பிரணவயோகம்` எனப்படுகின்ற பெரிய நெறி, `பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சந்திரன், சூரியன், அக்கினி, நட்சத்திரம்` என்னும் நவமண்டலங்களை (ஒன்பான் வட்டங்களை) உடையது.

குறிப்புரை :

இங்கு, `பிரணவம்` என்றது பிராசாதத்தினை. மண்டலம் அல்லது வட்டமாவது பகுதி. ஒன்பான் வட்டங்களுள், தீயைப் பஞ்ச பூதங்களிடை, ``கனல்`` என்றும், முச்சுடரில் இறுதிக்கண் ``அங்கி`` என்றும் இருகால் ஓதியதனாலும், மேலேயும் (பா.835, 837) அக்கினிக்கு இருவகைக் கலையளவு கூறினமையாலும் `அடங்கு தீ, அழலுந் தீ` எனத் தீயை இரண்டாகக் கொள்ளுதலும், பூதத் தீ அடங்கு தீயும், சுடர்த் தீ அழலுந் தீயும் ஆதலும் பெறப்படும்.
பிருதிவி வட்டம் முதலிய ஒன்பான் வட்டங்களை, ``பிரணவ மாகும் பெருநெறி`` என்றமையால், அவை பிராசாத கலைகளின் தானங்களேயாயின. அத் தானங்கள் பன்னிரண்டனுள் இறுதி நான்கும் நிராதாரமாதலின், சந்திர கலை முதலிய நால்வகை கலைகளும் அவ் விடத்துச் சொல்லமாட்டா. எனவே, எஞ்சிய எட்டுத் தானங்களோடு சோடசகலைத் தானங்கள் இரண்டு கூடத்தானங்கள் பத்தாம். ஆயினும், `அருத்த சந்திரன், நிரோதினி` என்னும் இருகலைகட்கு இடையேயும், அவற்றின் தானங்கட்கிடையேயும் உள்ள வேற்றுமை சிறிதாகலின் அத்தானங்கள் இரண்டையும் ஒன்றாகக் கொள்ளத் தானங்கள் ஒன்பதாய், அவை இங்குக் கூறிய ஒன்பான் வட்டங்களாயும் அமையும். இவற்றுள், அழலுந் தீயை மரபுபற்றிச் சுடர்களோடு வைத்து எண்ணினாரேனும், `அது மூலாதாரத்தில் உள்ளது` என்பதே யோக நூல் துணிபாதலின், அதனை அங்ஙனமே வைக்க, `மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை, நெற்றி, தலை, தலையின் பின்புறம்` என்னும் இடங்கள் முறையே, `அங்கி, பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், நட்சத்திரம்` என்பவற்றின் வட்டங்களாம் என அறிக. பிராசாத கலைத் தானங்களை இவ்வாறான ஒன்பான் வட்டங்களாகக் கூறியது, ``மேற்கூறிய சந்திர கலை முதலிய நால்வகைக் கலைகளும் இப்பிராசாத கலைத் தானவகையினால் இங்குக் கூறிய பிருதிவி கலை முதலிய ஒன்பான் கலைகளாயும் நிற்கும்`` என்பது உணர்த்துதற்கு என்க. அரணியம் - காடு; என்றது ஒளிக்கற்றையை. முரணிய - தம்முள் மாறுபட்டு விளங்குகின்ற.
இதனால், மேல் தோற்றுவாய் செய்யப்பட்ட நவ மண்டலங்கள் (ஒன்பான் வட்டங்கள்) இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவிற் சகலத்தி யோனிகள்
தாரகைத் தாரகை தானாம் சொரூபமே. 

பொழிப்புரை :

நட்சத்திரங்கள் சந்திரன் தேயும் பக்கத்தில் விளங்கு தலன்றி, அது வளரும் பக்கத்தில் தனியே விளங்கா; சந்திரனது ஒளியிலே ஒன்றி அதுவாய்விடும். யோகத்தில் ``நட்சத்திரங்கள்`` எனப்படுபவை, பூமியில் உள்ள பலவகை உயிர்கள். எனவே, யோகியின் சந்திர மண்டலம் விளங்கி நிற்கும்பொழுது உலகப் பொருள் பற்றிய உணர்வுகள் முன்னை மந்திரத்துட் கூறிய நட்சத்திர மண்டலத்தில் வேறு நின்று விளங்காது, சிவ உணர்விலே ஒன்றிவிடும்.

குறிப்புரை :

பூ - பூமி. ``சகலத்து யோனிகள்`` என்பதில் அத்து வேண்டாவழிச் சாரியை. சிறப்புப் பற்றி உயிர்களையே கூறினா ராயினும், பிற உலகப் பொருள்களும் கொள்ளப்படும். சொரூபம் - மெய்யுணர்வு; என்றது சிவ உணர்வை. உலகுணர்வை ``நட்சத்திரம்`` என்றதற்கு ஏற்பச் சிவ உணர்வை, ``சந்திரன்`` என்னாமையால், இஃது ஏகதேச உருவகம். இதனானே ``சந்திர மண்டலத்தின் ஆற்றலாவது சிவ உணர்வே`` என்பது அறியப்படும். ``சொரூபத்துக்கண்`` என இறுதிக்கண் ஏழாவது விரிக்க. ``தாரகை தாரகைக்கண் சொரூபத்தின் கண் தானாம்`` எனக் கூட்டுக. தாரகை இரண்டில் முன்னது நட்சத்திர மண்டலமாகிய இடம்; பின்னது நட்சத்திரம். தான், பன்மை ஒருமை மயக்கம். மூன்றாம் அடி இடைநிலையாய் நிற்க, ஏனையடிகள் தொக்கு எடுத்துக்காட்டுவமையாயின.
இதனால், சந்திர யோகத்தில் நிகழ்வன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

முற்பதி னஞ்சின் முளைத்துப் பெருத்திடும்
பிற்பதி னஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்
அப்பதி னஞ்சும் அறியவல் லார்கட்குச்
செப்பரி யான்கழல் சேர்தலு மாமே. 

பொழிப்புரை :

பிண்டத்தில் உள்ள சந்திர மண்டலமும், அண்டத்தில் உள்ள சந்திர மண்டலம் போலவே தனது முற்பக்க நாள் பதினைந்தில் தோன்றி வளர்ந்து, பிற்பக்க நாள் பதினைந்தில் நிறை வினின்றும் தேய்ந்துவிடும். அதனால், அவ்விருவகைப் பதினைந்து நாள்களையும் அறிந்து முற்பக்க நாளில் யோகம் புரிய வல்லவர்கட்கு, சொல்லுதற்கரிய சிவனது திருவடியைச் சேர்தலும் கூடும்.

குறிப்புரை :

``அப்பதினைஞ்சும்`` என்பதில், `பதினைஞ்சு` என்னும் பால்பகா அஃறிணைப் பெயர் பன்மையாய் நின்றது. `அறிய வல்லார்` என்றதனால், இங்கு, ``முற்பக்கம், பிற்பக்கம்`` எனப்பட்டவை உலகில் காணப்படும் பக்கங்கள் அல்ல; யோக நிலையில் உள்ளவையே என்பது விளங்கும். ``அவை இவை`` என்பது வருகின்ற மந்திரத்தால் பெறப்படும்.
இதனால், பிண்ட, சந்திரனுக்கும் அண்ட, சந்திரன்போல இருவகைப் பக்கங்கள் உளவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அங்கி எழுப்பி அருங்கதிர் வட்டத்துத்
தங்குஞ் சசியினால் தாமம்ஐந் தைந்தாகிப்
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்
திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே. 

பொழிப்புரை :

முதற்கண் மூலாக்கினியை எழுப்பிப் பின் அவ்வக் கினியோடே சூரிய வட்டத்தில் தங்குகின்ற சந்திர கலையாகிய வாயு அங்ஙனம் ஓடித் தங்குதற்கு நாள்கள் பத்தாகிவிடப் பின் அவ்வக்கினி, நட்சத்திரங்களாகிய புலன் உணர்வு ஒழியும்படி சந்திர மண்டலத்தில் சென்று சேர்கின்ற யோக நாள்களே முற்பக்க நாள்களாம்.

குறிப்புரை :

சூரிய வட்டம், இங்கு மும்மண்டலங்களுள் ஒன்றாய அது. தாமம் - வரிசை; இது நாளின் அடைவைக் குறித்தது. ``ஆகி`` என்பதனை `ஆக` எனத் திரிக்க. கதிர் அங்கி - சூரிய வட்டத்தில் உள்ள அக்கினி. இது திங்களைச் சேர்கின்ற யோகம் `முற்பக்கம்` என்க. மந்திரத்து இறுதியில் `முற்பக்கம்` என்பது எஞ்சி நின்றது. இதனானே, `யோகம்` என்பது அது நிகழ்கின்ற காலத்தைக் குறித்தமை தெளிவு.
இதனால், பிண்ட சந்திரனுக்கு உரிய முற்பக்க நாள் இவை என்பது கூறப்பட்டது.
`சந்திர கலையாகிய வாயு இவ்வாறு வளர்ந்து செல்வது முற் பக்கம்` என்றதனானே, `சூரிய கலையாகிய வாயு இவ்வாறாதல் பிற் பக்கமாம்` என்பதும் உய்த்துணர வைக்கப்பட்டவாறு அறிக. முற்பக்க நாள்கள் முடிந்தபின் பிற்பக்க நாள் தொடங்குதல் ஒருதலையாதல் பொருட் பெற்றியாகலின், யோகத்திலும் முற்பக்கம் முடிந்தபின் யோகியால் பிற்பக்க யோகம் ஒருதலையாகச் செய்யப்படும். அவ்வாறு செய்யாதொழியின், விளைவுகள் வேறு வேறாம் என்க.

பண் :

பாடல் எண் : 13

ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. 

பொழிப்புரை :

இங்குக் கூறிய இருவகைப் பக்கங்களின் படி வளர்ந்தும், தேய்ந்தும் நிற்கின்ற சந்திர கலை பதினாறும் அண்டத்தில் உள்ளது போலவே பிண்டத்திலும் பொருந்தி உள்ளதை உயர் நெறியில் வேட்கையில்லாதோர் நினைப்பதில்லை. அதனால், வாழ்நாளை வீணாளாக்கிய குற்றம்பற்றி அவர்கள்மேல் சீற்றங் கொள்கின்ற கூற்று வன் அவர்களை இழிபிறப்பில் தள்ளியபின், அதிலே சென்று வீழ்ந்து மேல் ஏற வழியறியாது திகைத்தலையே அவர்கள் உடையராவார்கள்.

குறிப்புரை :

கரு - பிறப்பு. ``குழி`` என்றதனால் அஃது இழிபிறப் பாயிற்று. `வீழ்த்தபின்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
இதனால், பிண்ட, சந்திரனை நினையாதவரது குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அங்கி மதிகூட ஆகும் கதிரொளி
அங்கி கதிர்கூட ஆகும் மதியொளி
அங்கி சசிகதிர் கூடஅத் தாரகை
தங்கி அதுவே சகலமு மாமே. 

பொழிப்புரை :

இடை நாடி வழியாகப் பூரிக்கப்படும் சந்திர கலை யாகிய வாயு அக்கினி கலையாகிய சுவாதிட்டான கும்பகத்தில் முன்னர்ப் பொருந்தி நிற்பின், பின்னர் வல நாடி வழியாகப் பூரிக்கப் படும் சூரிய கலையாகிய வாயுவே அவ்வக்கினி கலையில் சென்று பொருந்துவதாகும். அவ்வாறே, சூரிய கலையாகிய வாயு முன்னர்ச் சென்று அக்கினி கலையில் பொருந்தின், பின்னர்ச் சந்திரகலையே அதன் கண் சென்று பொருந்துவதாகும். இவ்வாறு அக்கினி கலையில் சந்திர கலை, சூரிய கலை என்னும் இரண்டும் பொருந்திய பின்னரே, அதனை மூலா தாரத்திற் செலுத்துதலாகிய அந்த நட்சத்திர, கலை மூலா தாரத்தில் சென்று தங்கி, அதுவே அனைத்துக் கலைகளுமாய் அங்கு நிரம்பி நிற்கும்.

குறிப்புரை :

என்றது, ``சந்திர கலையைச் சுவாதிட்டானத்தில் பூரித்த பின்னரே சூரிய கலையை அங்குப் பூரித்தல் வேண்டும்`` எனவும், `இரண்டையும் அங்குப் பூரித்த பின்னரே நட்சத்திர கலையை அங்கு நின்றும் மூலாதாரத்தில் பூரித்தல் வேண்டும்` எனவும் மேற்சொல்லிய கலைகளைத் தொகுக்கும்முறை கூறியவாறு. ``அங்கியிற் சின்னக் கதிரிரண்டாட்டத்துத் - தங்கிய தாரகை யாகும்`` என மேலேயும் (பா.841) கூறினார். `இதுவே முறை` என்றதனால், `மூலாக்கினி இவ்வாற்றானே எழுப்பப்படும்` என்பதும் அறியப்படும். படவே, மேல் (பா.845) ``அங்கி யெழுப்பி`` என்றது, `இவ்வாற்றால் எழுப்பி` என்றதாயிற்று. ஆகவே, அவ்விடத்தில், `சசியால்` எனச் சந்திரகலை ஒன்றையே கூறியது தலைமை பற்றியாதல் விளங்கும்.
மூன்றிடத்தும், ``அங்கி`` என்பதன் பின் ஏழாவது விரிக்க. சசி கதிர், உம்மைத் தொகை. அகரச்சுட்டு, நட்சத்திர கலையது இயல்பாக மேற்கூறியதனைச் (பா.841) சுட்டிற்று. ``அது`` என்றது, தங்குதலாகிய அத்தொழிலை உணர்த்திற்று. ``சகலமும் ஆம்`` என்றது, `எல்லாக் கலைகளும் ஒருங்கு தொக்க தொகை நிலையாம்` என்றபடி.
இதனால், சந்திர கலை முதலிய கலைகளை ஆக்கி மூல அங்கியை எழுப்புமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை
பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே. 

பொழிப்புரை :

``பன்னிரண்டு`` என வரையறுக்கப்பட்ட சூரிய கலைகள் பெண் கலைகள். ``பதினாறு`` என வரையறுக்கப்பட்ட சந்திர கலைகள் ஆண் கலைகள். இவைகளை இந்த அளவுகளில் குறையாமல் பூரித்து, மூலாக்கினி விளங்கும் இடமாகிய சுவாதிட்டானத்தில் கும்பித்தால், அவ்விடத்துத் தெவிட்டாது தோன்றுகின்ற இன்பம் பேரின்பமே.

குறிப்புரை :

சூரிய சந்திரர்களை முறையே ஆண்மையும், பெண்மையும் உடையவராகக் கூறுதல் மரபாயிருக்க, இங்குச் சூரிய கலை சந்திர கலைகளை மாறிக் கூறியது என்னை யெனின், சந்திர கலையே சந்திர மண்டல ஆற்றலை மிகுவித்தல் பற்றி என்க. இது பற்றியே யோகத்தில் சந்திர கலையை முன்னர் வைத்துக் கூறுதல் பெரு வழக்காயிற்று. ``பன்னிரண்டு, பதினாறு`` என்பவைகளை எடுத்தோதி யதனால், முன்னை மந்திரத்தில் ``கூட`` என்றது, `இந்த அளவில் குறையாது கூடியபின்` என்பது பெறப்பட்டது.
`ஒரு கலை` எனப்படுவது, ஒரு முறை பூரித்துக் கும்பித்து, இரேசித்தலாம், என்பது மேலேயும் (பா. 835) கூறப்பட்டது. `பூரக, கும்பகம்` என்னும் முறையில் நிகழும். இரேசகங்களுக்கு மேல் (பா.556) சொல்லப்பட்ட மாத்திரை அளவுகள் சந்திர கலைக்கு உரியன. பதினாறு கலைகளையுடைய சந்திர கலைக்கு மாத்திரை அளவு சொல்லப்பட்டதனானே, பன்னிரண்டும் பத்தும் நான்கும் ஆகிய கலைகளை உடைய சூரியகலை அக்கினி கலை நட்சத்திர கலைகட் குரிய மாத்திரை அளவுகள் கணக்கிட்டுக் கொள்ளப்படும் என்க. அக்கினி கலைக்குப் பூரித்தலாவது சுவாதிட்டானத்தில் கும்பிக்கப் பட்ட வாயுவை மணி பூரகம் முதலிய ஆதாரங்களில் செல்ல மேற் செலுத்தல். கும்பித்தலாவது, ஆஞ்ஞை முதலிய மேல் இடங்களில் அவ்வாயுவை நிறுத்துதல். இரேசகமாவது அவ்விடங்களிற் சென்ற வாயுவை இரு மூக்கு வழியாகவும் வெளிச் செலுத்துதல்.
`பேராமல் பெய்யில்` என இயையும். புக்கு - முயன்று. மூலாதாரத்தில் உள்ளது காரண நிலையில் நிற்றலால், அஃது எழுந்து செல்லும் நிலையை, ``நேராகத் தோன்றும் நெருப்பு`` என்றார். இங்கு, `நெருப்பு` என்றது அஃது அடையும் இடத்தைக்குறித்தது. கும்பித்த பின் சந்திர மண்டலத்தில் உளதாம் இன்பத்தை, கும்பித்ததனானே உளதாகக் கூறினார். இஃது உடற்கண்ணே தோன்றுவதாயினும் வீட்டின்பமே என்றற்கு, ``ஆனந்தம் ஆனந்தம் ஆனதே`` என்றார். ஆணும், பெண்ணும் கூடியவழி இன்ப நுகர்ச்சியும், அவ்விருவரும் ஒருங்கே தீப்புக்கவழித் துறக்க இன்பமும் உளவாம் என வேறு பொருளும் இதன்கண் தோன்றிற்று.
இதனால், ``அங்கி கதிர் கூட, அங்கி மதி கூட`` என்றவற்றின் அளவுபற்றி ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வலத்திட்டுப்
பேணியிவ் வாறு பிழையாமற் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே. 

பொழிப்புரை :

சூரிய கலையைப் பூரித்துப் பின் இடநாடி வழி இரேசித்தும், சந்திர கலையைப் பூரித்துப் பின் வலநாடி வழி இரேசித்தும் பிராணாயாமத்தை இவ்வாறு பன்முறை தவறாமல் போற்றிச் செய்வீராயின், ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் உம் உடல் தளர்ச்சி யடையாமலே யிருக்கும்.

குறிப்புரை :

`சந்திர கலை சூரிய கலைகளைப் பூரித்தவழியே இரேசித்தலே முறை` என்பது, மேலே (பா.777) கூறப்பட்டமையின், இது பூரித்தவழியாலன்றி வேறு வழியால் இரேசித்தலும் வேறொரு முறையாதல் கூறியதாயிற்று. ``பேணி`` எனவும், ``பிழையாமல்`` எனவும் கூறியவாற்றால், `இம்முறையை மேற்கொண்டு செய்யு மிடத்துப் பிழைபடாதவாறு குறிக்கொண்டிருத்தல் வேண்டும்` என்பது அறியப்படுகின்றது. ஆணி - இணைப்புக் கருவிகள். `வலக் கால் இடக் கால்களை எதிர்ப் பக்கங்களில் மடக்கிப் பின்னி, இருக்கையில் இருந்தால், அசைவின்றி யிருக்கலாம்` என வேறொரு பொருளும் இதன்கண் தோன்றிற்று.
இதனால், சந்திர கலை சூரிய கலைகளை இயக்குதற்குரிய பிறிதொருமுறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்கும்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே. 

பொழிப்புரை :

சிவன், யோகிகளது உள்ளத்திற்குத் தோன்றும்படி தருகின்ற தச நாதங்களில் சங்கொலி ஒழிந்த ஒன்பது நாதங்களாய் முதற்கண் அவர்கட்கு அநுபவப் படுவான். பின்பு மேலிடமாகிய ஆஞ்ஞையில் விளக்கொளி போலக் காட்சியளிப்பான். அஞ்ஞானம் ஆகிய இருள் நீங்கி ஞான ஒளி வெளிப்படுகின்ற நான்காம் சத்தி நிபாதமாகிய காலைப் பொழுதில் காலைச் சங்கொலியாயும், காலைக் கதிரொளியாயும் கேள்வியிலும், காட்சியிலும் அனுபவமாவான்.

குறிப்புரை :

``பாலிக்கும்`` என்பது எச்சம்; ``ஆலிக்கும்`` என்பது முற்று. ``நெஞ்சம்`` என்பதை முதற்கண் வைத்து, நான்காவது விரிக்க. ஆலித்தல் - மகிழ்தல், ஒலித்தலுமாம். தச நாதங்கள் மேலே (பா.593) கூறப்பட்டன. ``மேலைக்கு, காலைக்கு`` என்பவற்றைத் தொல் காப்பியர், `இக்குச்சாரியை` என்பர்; பிற்காலத்தார், `உருபு மயக்கம்` என்பர். `முன்னே ஆலிக்கும்` என மேலே கூட்டி முடிக்க. `காலைச் சங்கும், காலைக் கதிரவனும் ஆவான்` எனப் படிமுறையை வகுத்துக் கூறவே, சந்திர யோகத்தால் சந்திர மண்டலம் இவ்வாறு படிமுறையான் வளர்தல் பெறப்பட்டது.
இதனால், சந்திர மண்டல வளர்ச்சியின் படிமுறை தெரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவன் அண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவன் ஈசன் இடமது தானே.

பொழிப்புரை :

சூரிய கலை சந்திர கலைகள் சரவோட்டத்தில் மக்களது வாழ்நாளைப் படிமுறையாகக் குறைத்து நிற்பன. உடல் அழியாது நிலைபெறும்படி பொழிகின்ற அமுத மழை, யோகத்தால் ஆற்றல் மிகுகின்றவனது உடலினுள்ளே நீங்காது நிலைபெற்றுள்ளது. பிராணாயாமத்தால் நாடிகள் மாற்றத்தை எய்தப்பெறுகின்ற யோகி, `அண்டம்` எனப்படுகின்ற தலைக்கு அப்பால் நிராதாரத்திற் சென்று அதனை ஒளி மண்டலமாகச் செய்ய, அவன் அங்குக் காண்பது சிவனது இருப்பிடத்தையே.

குறிப்புரை :

அளத்தல். இங்குப் படிமுறையால் கழித்தல். பொதிர்த்தல் - பெருத்தல். ``பொதிர் அவன், அதிர் அவன்`` என்பன வினைத்தொகைகள். `அவன் எதிர் காண்பது ஈசன் இடமே` என ஒருசொல் வருவிக்க. அது, பகுதிப் பொருள் விகுதி. தான், அசை நிலை. வாழ்நாள் கழிதலை முன்னே விதந்து, பின் யோக முறை யையும், பயனையும் விதந்தமையால், `காலம்பெற அம்முறையை மேற்கொண்டு அப்பயனையே பெறுக` எனக் குறித்ததாயிற்று.
இதனால், `சந்திரயோகத்தை வாழ்நாள் கழியுமுன்னே மேற்கொண்டு, அதன் பயனைப் பெறல் வேண்டும்` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலார்
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே. 

பொழிப்புரை :

நாபித் தானத்தில் தோன்றிப் பின் மேல் ஓங்குகின்ற குண்டலி சத்தியைத் தலைப்படுதற்குரிய மந்திரத்தை அறிபவர் அரியர். அதனை அறிந்தால், தந்தைக்கு முன்னே மகன் பிறத்தலாகிய புதுமை காணப்படும்.

குறிப்புரை :

``கனல்`` என்னாது, ``சோதி`` என்றதனால் அது குண்டலியேயாதல் அறிக. மூலாதாரம் குண்டலிக்குத் துயிலிடமாக, அது விழித்தெழுந்து செயற்படும் இடம் மணிபூரகம் முதலிய ஆதாரங்களேயாதல் பற்றி, மணிபூரகத்தினையே குண்டலி தோன்றும் இடமாகக் கூறினார். அந்தித்தல் - சந்தித்தல். ``மந்திரம்`` என்றது அசபையை. சுவாதிட்டானம் முதலிய ஆதாரங்களுள் கீழ்க்கீழ் உள்ள ஆதாரங்களில் நிற்கும் கடவுளர், மேன்மேல் உள்ள ஆதாரங்களில் நிற்கும் கடவுளருக்கு மைந்தர் ஆதலாலும், ஆதாரங்களைக் கீழ்நின்று மேற்சொல்லும் முறையானே அடைந்து நீங்க வேண்டுதலானும் ``தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான்`` என மருட்கை விளையக் கூறினார். ``மகன் இருந்தான்`` என்பதும் பாடம். `பிராணாயாமத்தை வறிதே செய்யாது, அசபா மந்திரத்துடன் செய்து, அதனால் குண்டலி சத்தியை மணிபூரகத்திலே அடையப்பெற்று, அச்சத்தி யோடே மேல் ஏறிச் சென்று சந்திர மண்டலத்தை அடைந்த வழியே யோகம், சந்திர யோகமாம்` என்றபடி. மந்திரமின்றியும், குண்டலியைத் தலைப் படாமலும் செய்யப்படுவது அட யோகம் என்க.
இதனால், ``உண்மைச் சந்திர யோகமாவது இது`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல்
வேதியன் அங்கே வெளிப்படுந் தானே.

பொழிப்புரை :

நூல்களைக் கற்பினும் அவற்றின் பயனைச் சிறிதும் உணரமாட்டாத அறிவிலிகள், அவற்றைப் பிறர் உரைப்பினும் உணர் வாரல்லர். ஆதலின், அவர் நிற்க. நீவிர் யாம் கூறிய முறையால் குண்டலி சத்தியை அது தோன்றுகின்ற மணிபூரகத்தில் சந்தித்தலோடு ஒழியாது, அதன் முடிவிடமாகிய சந்திர மண்டலத்திலும் விடாது பொருந்தி நிற்றல் வேண்டும். அவ்வாறு நிற்க வல்லிராயின், அவ்விடத்தில் சிவன் வெளிப்பட்டுத் தோன்றுவான்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் கூட்டி உரைக்க. ``ஆதியும் அந்தமும்`` என்னும் உம்மைகள் எச்ச உம்மைகள் ஆதலின், அதற்கு, மேல் உரைத்தவாறு உரைக்கப்பட்டது. ``ஆதி, அந்தம்`` என்பவை ஆதாரங்களை முறையாற் குறித்தன.
இதனால், அசபா யோகமும் சந்திர மண்டலங்காறும் சென்று முற்றிய வழியே சந்திர யோகமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

பாம்பு மதியைத் தினலுறும் அப்பாம்பு
தீங்கு கதிரையுஞ் சேரத் தினலுறும்
பாம்பும் மதியும் பகைதீர்த் துடன்கொளீஇ
நீங்கல் கொடானே நெடுந்தகை யானே. 

பொழிப்புரை :

குண்டலினியாகிய பாம்பு சந்திரகலை, சூரியகலை என்னும் இருகலை வாயுவையும் ஒருங்கே உட்கொண்டு சிறந்து எழும். பின் பெருந்தகையோனாகிய சிவபிரான் அந்தப் பாம் பினையும், சகத்திராரத்தில் உள்ள சந்திரனையும் மாறிநிற்க விடாமல் ஒன்றியிருக்கச் செய்து, அவ்வொன்றுதலில் தானும் நீங்காது நிற்பான்.

குறிப்புரை :

குண்டலியைப் பாம்பாகக் கூறுதல் வடிவுபற்றியன்றியும் சந்திர சூரிய கலைகளையும், அப்பெயர்த்தாகிய காற்றினையும் உண்ணும் செயல் பற்றியுமாம் என்பதும் குறிப்பால் உணர்த்தியவாறு. மதியைத் தினல் உறுதலை வேறாக முன் வைத்துக் கதிரைத் தினல் உறுதலை உம்மை கொடுத்துப் பின் வைத்தமையால், சந்திர கலையே சிறப்புடைத்தாதல் பெறப்பட்டது. இராகு கேதுக்களாகிய பாம்புகள் சந்திரன், சூரியன் என்னும் இரு கோள்களையும் விழுங்குகின்றன எனக் கூறும் உலக வழக்காகிய நயம்தோன்ற நின்றது இம்மந்திரம்.
குண்டலிப் பாம்பும் சகத்திராரத்தில் உள்ள சந்திரனும் மாறி நிற்றலாவது, குண்டலிப் பாம்பு சந்திரனுடன் தனது முகத்தைப் பொருந்தவையாது, வாலைப் பொருந்த வைத்திருத்தல். சந்திர யோகத்தால் அப்பாம்பு கீழ்மேலாகச் சுழன்று முகத்தை அச்சந்திர னிடத்து வைத்து விளையாடுவதாம். அவ்விளையாட்டில் சிவபிரான் நீங்காது நிற்றலாவது, சிவ உணர்வு மறையாது விளங்குதல். சிவபெரு மான், ``பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகைதீர்த்து உடன் வைத்த பண்பன்`` (தி.6 ப.5பா.4) ஆதல் அறிக.
`சந்திர சூரியரை விழுங்கிய பாம்பு பின், சந்திரனோடு நட்புக் கொண்டு சிவபிரானிடம் விளையாடுகின்ற சிறப்புடையது, சந்திர யோகம்` என ஓர் வியப்புத் தோன்றக் கூறியவாறு; இதனுள் இன வெதுகை வந்தது. இம்மந்திரம் பாட வேறுபாடு மிகக் கொண்டுள்ளது.
இதனால், சந்திர யோகம் சந்திர மண்டலத்தில் சிவபிரானை அடையச்செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்
பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று
நயந்தரு பூரணை உள்ளம் நடத்தின்
வியந்தரு பூரணை மேவும் சசியே. 

பொழிப்புரை :

சர நிலையில் சந்திர கலை இயங்கும்பொழுது உறங்காமல் விழித்திருந்து, சந்திர கலை நின்று சூரிய கலை இயங்கும் பொழுது உறங்கி, இரண்டு கலையும் சேர இயங்கும்பொழுது யோகத்திற் சென்றால், சந்திர மண்டலம், விரிவடைதலாகிய பௌர்ணிமை நிலையை எய்தும்.

குறிப்புரை :

அயின்றது - அயிலப்பட்டது. யோகத்தில் பதினாறு கலையாகப் பூரிக்கப்படும் சிறப்புப்பற்றி, ``அயின்றது, பயின்றது`` என்பன சந்திர கலையையே குறித்தன. சந்திர கலை வீழ்தலைக் கூறி யொழிந்ததனானே, சூரிய கலை இயங்குதல் பெறப்பட்டது. இரு கலைகளும் சேர இயங்குதலை, ``பூரணை`` என்றார். அஃது யோகத்திற்குரிய காலமாதல் பற்றி, ``நயந்தரு பூரணை`` எனச் சிறப்பித்தார். உள்ளத்தை நடத்துதல், மனோலயம் செய்தல். எனவே, யோகம் புரிதலாயிற்று. `நடத்தி` என்பது பாடம் அன்று.
`யோகி சரவோட்டத்தில் சந்திர கலை இயங்கும் பொழுது உறங்குதல் கூடாது` என்பதும், `சந்திர கலை, சூரிய கலை இரண்டும் சேர இயங்கும் பொழுது யோகத்திற் செல்லுதல் வேண்டும்` என்பதும் இங்குக் கூறப்பட்டவை. இதனால், யோகிகட்குச் சர நிலையில் சந்திர கலை இயங்குதல் முற்பக்கமும், சூரிய கலை இயங்குதல் பிற்பக்கமும், இரண்டும் இயங்குதல் பூரணையும் ஆயின. உலகர் இவற்றை மறுதலைத்துக் கொள்வர்.
இதனால், சந்திர யோகம் செய்வார்க்குரிய சில கால முறைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 23

சசியுதிக் கும்அள வந்துயி லின்றிச்
சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்
சசிசரிக் கின்றள வுந்துயி லாமற்
சசிசரிப் பிற்கண்தன் கண்டுயில் கொண்டதே. 

பொழிப்புரை :

சந்திர யோகத்தில் சந்திர மண்டலம் தோன்று மளவும் சோம்பல் இன்றி யோகத்தில் முயன்று, அது தோன்றியபின் அதினின்றும் பெருகும் அமுதத்தைப் பருகிச் சரவோட்டத்தில் சந்திர கலை இயங்காமல் சூரிய கலை இயங்கும் பொழுது உறங்குதல் தக்கது.

குறிப்புரை :

``துயில்`` இரண்டனுள் முன்னது சோம்பல். ``சரிப் பின் கண்`` என்பதில் சரி - சரித்தல்; முதனிலைத் தொழிற்பெயர். `பின்` என்பது இங்குப் பெயராய் நின்று, சரிப்பிற்குப் `பிற்கண்` என ஏழன் உருபு ஏற்றது. ``கொண்டது`` என்பது கால மயக்கம். இதன்பின், `முறை` என்பது சொல்லெச்சமாய் நின்றது. முன்னை மந்திரத்தின் முன் இரண்டடிகளில் கூறியவற்றையே இம் மந்திரத்தின் பின்னிரண் டடிகளில் கூறினார்; முன்னை மந்திரத்தின் பின் இரண்டடிகளில் கூறிய வற்றை இம் மந்திரத்து விளங்கக் கூறினமை பற்றி அவை நெகிழ்ந் தொழியாது நிற்றற்பொருட்டு.
இதனால், முன்னை மந்திரப் பொருள் இனிது விளங்கக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழஅல் லார்இச் சசிவன்னர் தாமே. 

பொழிப்புரை :

ஊழிகள் பல சென்றாலும் உலகிலே வாழ்கின்ற காய சித்த யோகிகள், தாம் யோகத்தில் இருக்கின்ற நாழிகையையே முழம் அளக்கும் கையாகக் கொண்டு எமனது ஆற்றலை அளப் பார்கள். ஆயினும், இங்குக் கூறப்படுகின்ற சந்திர யோகிகள் ஊழிக்கு முதல்வனாய் உள்ள சிவனேயாகின்ற உயர்நிலையை அடைவர்; உலகியலில் தாழ்தற்கு உரியரல்லராவர்.

குறிப்புரை :

``நாழிகை`` என்பது கடைக்குறைந்து நின்று, ``நாழி என்னும் முகத்தல் அளவைக் கருவி கையிடத்ததாக`` என வேறோர் பொருளையும் தோற்றுவித்தது. நமன், ஆகுபெயர். அளத்தல், உட்படக் கொள்ளுதல். ``இச் சசிவன்னர்`` என்பதை மூன்றாம் அடியின் முதற்கண் வைத்து உரைக்க.
இதனால், காய சித்தரினும் சந்திர யோகிகள் மேம்பட்டு நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

தண்மதி பானுச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
கண்மதி வீழ்வள விற்கண மின்றே.

பொழிப்புரை :

மக்களது உணர்வு அவர்களது தலையில் உள்ள சந்திர மண்டலம் உருப்பெற்றுத் தோன்றிய பின் அவர்களது சந்திர கலை சூரிய கலைகளாகிய வாயுக்கள் இயங்கும் வழியிலே விளங்கி, உலகம் மதிக்கின்ற இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலங் களிலும் நிகழும் நிகழ்ச்சிகளை முறையே கண்டு விளங்கிய பின், முடிவில் அச்சந்திர மண்டலம் வீழ்ச்சி அடையும்பொழுது ஒரு நொடி நேரமும் இல்லாதொழியும்.

குறிப்புரை :

``ஆகவே, உணர்வின் விளக்கமாகிய மெய்யுணர்வைப் பெற வேண்டுவார் மேற்கூறியவாறு சந்திர யோகத்தால் சந்திர மண்டலத்தை விளக்கம் பெறச் செய்தல் வேண்டும்`` என்பது குறிப் பெச்சம். ``உணர்வு`` என்னும் பொருட்டாகிய ``கண்`` என்பதனை ``வெண்மதி தோன்றிய நாளில்`` என்பதற்கு முன்னே கூட்டி, அனைத்தையும் முதற்கண் வைத்து உரைக்க. நான்காம் அடியில் ``தண்மதி`` என்பது பாடம் அன்று. `கணமும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.
இதனால், சந்திர யோகம் மெய்யுணர்விற்கு இன்றியமை யாததாமாறு விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

வளர்கின்ற ஆதித்தன் தன்கலை ஆறும்
தளர்கின்ற சந்திரன் தன்கலை ஆறும்
மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே. 

பொழிப்புரை :

சந்திரனிலும் ஆற்றல் மிகுகின்ற சூரியனது கலைகள் ஆறும், சூரியனும் ஆற்றல் மெலிகின்ற சந்திரனது கலைகள் ஆறும் தனித்தனி இருதயத்திற்குமேல் பன்னிரண்டங்குலம் சென்று சந்திர மண்டலத்தில் பரவி நின்றதன் பயனை அறிகின்றவர் உலகத்து அரியர்.

குறிப்புரை :

வாயு சுழுமுனை வழியாக மேற்செல்லும் பொழுது இருதயத் தானத்தை அடைந்தபின் வலிமிகுமாகலின் அவ்வாறு மிக்குச் செல்வதை, ``மலர்ந்தெழுதல்`` என்றும் சந்திர மண்டலத்தை அடைந்த வாயு பயனுடைத்தாகலின், அதனை, ``அலர்ந்து விழுதல்`` என்றும் கூறினார்.
``சந்திர கலை சூரிய கலையினும் மிக்கிருத்தல் உடல் உயிர்கட்கு முற்பக்கத்து முதிர்ச்சியும், அது சூரிய கலையினும் குறைந்திருத்தல் பிற்பக்கத்து முதிர்ச்சியுமாம் ஆதலின், இரண்டும் சமமாதல் அட்டமியாம். ஆகவே, முற்பக்கத்தை முதிரச் செய்யா விடினும் பிற் பக்கத்தை முதிரச் செய்யாமலேனும் இருத்தல் வேண்டும்`` என்றவாறு.
இதனால், சூரிய கலை சந்திர கலைகளைச் சமமாகச் செய்கின்ற சமநிலை யோகம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற வின்மையிற் கட்டுண்ணும் மூலத்தில்
ஓமதி யுள்விட் டுரையுணர் வாலே. 

பொழிப்புரை :

யோகிக்கு உணர்வு பெருகுகின்ற உயிர் போல் வதாகிய சந்திர கலை குறைகின்ற நாளே விந்து இழப்பாகின்ற காலம் என்க. ஆகவே, முன்னை மந்திரத்திற் கூறியவாறு சந்திர கலையைக் குறைவுறாதபடி செய்கின்ற சமநிலை யோகத்தையுடைய யோகிக்கு எக்காலத்தும் விந்து இழப்பாகாது. ஏனெனில், மூலாதாரத்தில் உள்ள ஓங்கார உணர்வு நுண்ணிய நாதமாத்திரையாய்ச் சந்திர மண்டலத்துட் சேர்க்கப்பட்டதனால் ஆகிய உரை உணர்வுகளால் காமம் மீதூரா தொழிய, விந்து தனக்கு மூலமாகிய சுவாதிட்டானத்தில் கட்டுண்டு நிற்கும் ஆதலால்.

குறிப்புரை :

``உயிர் மதி`` எனக் கொண்டு கூட்டி, உவமத் தொகை யாக்குக. ``எனல்`` என்னும் வியங்கோட்சொல்லை, ``போம் வழி`` என்பதன் பின் கூட்டுக. ``போம் வழி`` என்பதும், `எங்கணும்` என்பதும் காலத்தை உணர்த்தின. ``யோகி`` என்றே போயினார், முன்னை மந்திரத்துட் கூறிய யோகம் இடையறாது நிற்றலின், ``அது போகாது`` எனச் சுட்டுப் பெயர் வருவித்துக்கொள்க. இறுதியடியை மூன்றாம் அடிக்கு முன்னே கூட்டியுரைக்க. ``மூலம்`` என்பது, ``விந்துவுக்கு மூல மான இடம்`` எனவே பொருள் தந்தது. ``மூலத்திற் கட்டுண்ணும்`` என மாற்றி, ``ஆதலால்`` என்னும் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. `விட்ட` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. விட்ட - விட்டதனால் ஆகிய.
`சமநிலை யோகத்தை உடைய யோகிக்குச் சந்திர மண்டல உணர்வு குறைவுபடாது நிற்பக் காமம் மீதூராது ஒழியும்` என்றதனால், அவ்யோகம் யோகிக்கு இன்றியமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

வேறுறச் செங்கதிர் மெய்க்கலை ஆறொடுஞ்
சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும்
ஈறில் இனன்கலை ஈரைந்தொ டேமதித்
தாறுட் கலையுள் அகலுவா வாமே.

பொழிப்புரை :

மேல் சூரிய கலை பன்னிரண்டினின்று வேறாகத் தோன்றக் கூறிய ஆறனுடன், சுவாதிட்டானத்தினின்றும் கீழ்ச் சென்று மூலாதாரத்தைத் தாக்குவதாகிய அக்கினி கலை நான்கு தொடர்ந்து பொருந்தி நிற்கும் இயல்புடையன. அவற்றால் பத்தாகின்ற சூரிய கலைகளோடு சந்திரனது அடக்கமான கலை ஆறு கூடின், அந்நிலை யோகிக்கு மேற்கூறிய உரை உணர்வுகள் முழுதும் அற்றொழிகின்ற அமாவாசியை நாளாம்.

குறிப்புரை :

``ஆதலின், மேலே (பா.859) கூறிய அட்டமி நிலையில் அக்கினி கலை எழாதவாறு காக்க`` என்பது குறிப்பெச்சம். சூறுதல் - அகழ்தல். `மதித்து` என்னும் குறிப்பு வினைப்பெயர், பன்மை யொருமை மயக்கம். ``மதித்து உட்கலை ஆறுள்`` என மாற்றுக. உட் கலை - அடங்கும் கலை. ஆறுள் - ஆறு கூடிய காலத்தில். அகலுதல் - நீங்குதல். இதற்கு `உரை உணர்வு` என்னும் எழுவாய் முன்னை மந்திரத்தினின்றும் வந்தது. `சந்திர மண்டலத்து உரை யுணர்வு முற்றும் அகல்உவா` என்றதனால், அப்பொழுது காம இச்சை மிக்கு, விந்து சயம் சிறிதும் இலதாதல் பெறப்பட்டது. சூரியனது பேரொளியுள் சந்திரன் அடங்கி நிற்றலே உவா (அமாவாசியை) ஆதல் உலகியல்பும் ஆதல் அறிந்துகொள்க.
இதனால், மேற்கூறப்பட்ட சமநிலை யோகத்தின் இன்றியமை யாமை எதிர்மறை முகத்தாற் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

உணர்விந்து சோணி உறஇனன் வீசும்
புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்
உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே. 

பொழிப்புரை :

புணர்ச்சிக் காலத்துச் சந்திர கலை குறையுமாயின், சூரிய கலை உணர்விற்கு முதலாகிய வெண்பாலினையும், உடம்பிற்கு முதலாகிய செம்பாலினையும் மிக இழக்குமாறு தனது ஆற்றலைச் செயற்படுத்தி நிற்கும். ஆகவே, உணர்வும், உடம்பும் போல்வன வாகிய சூரிய கலை, சந்திர கலைகளாகிய அவை தம்மில் ஒத்து நிற்பின், உணர்விற்கு முதலாகிய வெண்பாலும், உடம்பிற்கு முதலாகிய செம்பாலும் ஒருபோதும் மிக இழக்கப்படா.

குறிப்புரை :

எனவே, ``அப்பயன் கருதியே மேல் (பா.859) இருகலையும் சமமாதல் வேண்டும் எனக் கூறப்பட்டது`` என்றவாறு. இரண்டாம் அடியை முதற்கண் கூட்டி உரைக்க. முதற்கண் நின்ற உணர், முதனிலைத் தொழிற் பெயர். `சோணிதம்` என்பது குறைந்து நின்றது. வெண்பாலினை ``உணர்வு`` என்றதனால், செம்பால் உடம் பாதல் பெறப்பட்டது. உற - மிகுதியாய்க் கழிய. புணர்வு - புணர்ச்சி. இந்து - சந்திரன். `இந்து தான் வீசும் கதிரிற் குறையில்` என்க. `உணர்வும் உடம்பும்` என்னும் தொடர் இருமுறை வந்து, மேற்கூறிய வாறு வேறு வேறு பொருளைக் குறித்தன. ``உற`` என்பததை ``விடா`` என்பதனோடும் கூட்டுக.
இதனால், `மெய்யுணர்வில் விருப்பமுடையவர்க்குச் சமநிலை யோகம் புணர்ச்சிக் காலத்து மிக இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது. இதனை ஆடவர், மகளிர் இருபாலார்க்கும் ஒப்ப வைத்துக் கூறினமை குறிக்கொண்டு நோக்கத்தக்கது.

பண் :

பாடல் எண் : 30

அமுதப் புனல்வரும் ஆற்றங் கரைமேல்
குமிழிக்கத் தற்சுடர் ஐந்தையுங் கூட்டிச்
சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு
நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே. 

பொழிப்புரை :

சந்திர மண்டலத்தில் ஊறுகின்ற அமுதம், தான் பாய்கின்ற யாறாகிய புருவ நடுவின் எல்லையைக் கடந்து வழிந்து கொண்டிருக்க, அப்புருவ நடுவினின்றும் மேன்மேல் சுடர்விட்டு விளங்குகின்ற ஒளிகள் ஐந்தையும் ஒன்று படுத்தி, அவற்றிற்கு ஏற்பு டையதான அந்தத் தண்டின் முனையில் அவைகளை ஓங்கி எரியச் செய்து, அவற்றைச் சுமக்க வல்லவர்கட்கு, நமனது வருகையும், கலை, நாள் முதலாகச் சொல்லப்படுகின்ற காலப்பகுதிகளும் இல்லையாகும்.

குறிப்புரை :

`குமிழி` என்னும் பெயர்ச்சொல்லடியாக, ``குமிழிக்க`` என்னும் செயவெனெச்சம் பிறந்தது. இவ்வெச்சம் நிகழ்காலத்தின்கண் வந்தது. `தன்` என்றது முன்னர்ப்போந்த யாற்றினை. தற்சுடர் ஐந்து, தற்சுடரை முதலாக உடைய ஐந்து. ``கூட்டி, ஒட்டி`` என்னும் எச்சங்கள், அடுக்கி, ``தரிக்க`` என்னும் ஒருவினை கொண்டன. `சமைந்த அத்தண்டு` என்க. சமைதல் - அமைதல். ``அத்தண்டு`` என்றது, சுழுமுனையை. அது மேற் பலவிடத்தும் பெறப்பட்ட மையின், இவ்வாறு சுட்டி யொழிந்தார். ``தண்டு`` என்பதன்பின், `மேல்` என்னும் பொருளதாகிய கண்ணுருபு விரிக்க. ஓட்டுதல், இங்கே ஒளியைப் பரவச் செய்தல். `விளக்கைத் தண்டின்மேல் வைத்து ஓங்கி எரியச் செய்தல்` என்னும் நயமும் இங்குத் தோற்றுவிக்கப்பட்டது. புருவ நடு முதலாக மேன்மேல் விளங்கும் ஒளிகள் ஐந்தாவன:- `விந்து, அருத்த சந்திரன், நிரோதினி, நாதம், நாதாந்தம்` என்பன. ``நமன் இல்லை; நற்கலை நாள் இல்லை`` என்றது, `இறப்பும், பிறப்பும் அற்ற வீட்டு நிலை உளதாம்` என்றவாறு.
இதனால், சந்திர யோகம், பிராசாத முறையில் முதிர்ந்து ஞானயோகமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத்திறந்
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங்
கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே. 

பொழிப்புரை :

உலகீர், அமுதம் நிறைந்துள்ள ஊற்றின் மடையைத் திறந்து, அவ்வமுதம் பெருகிவர, அதனை உண்ணுங்கள். அதனை உண்டதன் பயனாக இவ்வுலகிலே நெடுங்காலம் வாழ நினையாமல், ஞான சமாதியில் அமர்ந்து சிவனது இரண்டு திருவடிகளாகிய தாமரை மலரின்கீழ்ச் சென்று இருக்கவே நினையுங்கள். அங்ஙனம் இருத்தலாகிய அழியா இன்பத்தின் பொருட்டு முதற்கண் உங்கள் மூச்சுக் காற்றினை இருமூக்காகிய வழிகளை மாற்றிக் கண்வழியாகச் செலுத்துங்கள்.

குறிப்புரை :

`அமுதம் உறும் ஊறலைத் திறந்து உண்ணீர்` எனவும், `தெள்நீர்ச் சமாதி அமர்ந்து இணையடித் தாமரைக்கே செல எண்ணீர்` எனவும், எச்சங்களை முன்னே கூட்டி முடிக்க. ``நலம் மாறும்`` என்பது, `இப்பெற்றங்கள் அறங் கறக்கும்` என்பதுபோல நான்காவதன் தொகை. `சென்று மாறும்` என்பதை, `மாறிச் செல்லும்` என விகுதி பிரித்துக் கூட்டிக் கொள்க. `உம்முடைய கால்கள் குருட்டு வழியை விட்டுக் கண் தெரிந்த வழியில் செல்வனவாகும்` எனவும், `உம்முடைய சந்ததிகளும் நீவிர் சென்ற வழியிற் சென்று திருந்தும்` எனவும் வரும் நயங்களும் ஈற்றடியில் தோன்றுதல் காண்க.
இதனால், உலகர்க்கு உறுதியுரைக்கும் முகத்தால், சந்திர யோகத்தினது சிறப்பு வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

மாறும் மதியும்ஆ தித்தனும் மாறின்றித்
தாறு படாமல்தண் டோடே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே. 

பொழிப்புரை :

இடநாடி வழியாகவும், வலநாடி வழியாகவும் இயங்குகின்ற தம் இயல்பினின்றும் மாறுகின்ற சந்திர கலையும், சூரியகலையும் பின், யோகத்திற்குரிய முறையில் மாறுபடாமலும், குறைவுறாமலும் சுழுமுனை வழியே சென்று சந்திர மண்டலம் உள்ள தலையை அடையுமாயின், உடல், தனது நலத்திற்கு வேண்டுகின்ற வழிகளில் சிறிதும் சிதைவு உண்டாகாது. என்றும் அழிவில்லாத வீட்டின்பமும் இவ்வுலகில் மிகுவதாகும்.

குறிப்புரை :

தாறு - குலை. இது, சொல்லொற்றுமையால் குலைதலை (சிதைதலை) உணர்த்திற்று. இதனை, `புத்தி சேனன்` என்பவனை, ``திங்கள் விரவிய பெயரினான்`` (சீவகசிந்தாமணி - காந்தருவ தத்தையார் இலம்பகம் - 181) என்றது போலக் கொள்க.
``உபாயமும் ஊறுபடாது`` என முன்னே கூட்டுக. பாறு படுதல் - அழிவெய்துதல். ``பொங்குமே`` என்னும் ஏகாரம் தேற்றம்.
இதனால், யோக முறையும், அதன் பயனும் இறுதிக்கண் ஒரு திருமந்திரத்தால் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 33

விடாத மனம்பவ னத்தொடு மேவி
நடாவு சிவசங்க நாதங் கொளுவிக்
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே. 

பொழிப்புரை :

ஓடுதலை விடாத மனம் பிராணாயாமத்தால் ஒருவழிப்பட்டுச் சிவநாத ஒலியைக் கேட்பிக்கும். மதம் நீங்காத ஐம்பொறிகளாகிய யானைகளும் உரிய இடத்தில் கட்டுப்படும். அதனால், பருகப்படுகின்ற சந்திர மண்டலத்து அரிய அமிர்தமே பெத்த காலத்தில் விளையாத பேரின்பமாய் நிற்கும்.

குறிப்புரை :

`ஓடுதலை` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. ``சங்கம்`` என்பது பொதுப்பட நாதத்தை உணர்த்தி நிற்ப, ``சிவசங்க நாதம்`` என்பது இருபெயரொட்டாயிற்று. `கொளுவுதலால்` என்பது, ``கொளுவி`` எனத் திரிந்து நின்றது. ``வீடு`` என்றது சிலேடை. படாத னவாகிய இன்பம், பேரின்பம். இஃது ஒன்றேயாயினும் எல்லை யின்றிப் புதிது புதிதாய் விளைதல் பற்றிப் பன்மையாக ஓதப்பட்டது. `பருகு ஆரமுதமே படாதனவாகிய இன்பங்களாய் நிற்கும்` என்க.
இதனால், சந்திர யோகம் வாசி முறையில் முதிர்ந்து ஞான யோகமாய் விளங்குதல் கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...