செவ்வாய், 31 அக்டோபர், 2017

திருவருட்பயன் உளவியல் எண்ணக்கருக்கள் – ஓர் ஒப்பீட்டு ஆய்வு



திருவருட்பயனில் கூறப்பட்டுள்ள உளவியல் எண்ணக்கருக்கள் – ஓர் ஒப்பீட்டு ஆய்வு


R. Sugirtha – Working paper – 05
ஆய்வுச் சுருக்கம்
இந்திய தத்துவ நூல்களுள் சைவசித்தாந்தக் கருத்துக்களை விளக்குவதற்கு அடிப்படையாக பதின்னான்கு மெய்கண்டசாஸ்திர நூல்கள் உள்ளன. இவற்றுள் உமாபதிசிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட திருவருட்பயன் எனும் நூல் முக்கியமானதாகும்.
‘மனித நடத்தை (Behavior) மற்றும் அறிகைச் செயற்பாடுகள் ( Cognitive Process)  பற்றி விஞ்ஞான ரீதியில் ஆராயும் ஓர் அறிகைப் புலமே உளவியலாகும்.’ உளவியலானது மனித நடத்தையை விளக்குவதற்கு அனேக எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. திருவருட்பயனில் கூறப்படுகின்ற கருத்துக்களுள் பெரும்பாலானவை உளவியல் கருத்துக்களுடன் ஒத்துப்போகின்ற தன்மையை காணமுடிகின்றது.
திருவருட்பயனில் கூறப்படுகின்ற உளவியல் கருத்துக்களை திருவருட்பயன் மூல நூல் திருவருட்பயனிற்கு உரையாசிரியர்களால் எழுதப்பட்ட உரைகள் மற்றும் திருவருட்பயன் தொடர்பாக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், உளவியல் நூல்கள், உளவியல் ஆய்வுக்கட்டுரைகள் என்பவற்றை இரண்டாம் நிலைத் தரவுகளாகக் கொண்டு; ஒப்பீட்டு ஆய்வின் அடிப்படையில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. முடிவாக திருவருட்பயனில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கும் மேலைத்தேய உளவியல் கருத்துக்களுக்கும் இடையில் ஒற்றுமைகள் அதிகம் காணப்பட்டதை அறியமுடிகிறது.
திறவுச்சொற்கள் – திருவருட்பயன், உளவியல், நடத்தை, கனவு, புலனுணர்வும் புலக்காட்சியும், உணர்வு, உளவளத்துணை, புலனடக்கம், முத்தி.
அறிமுகம்
சித்தாந்த அட்டக நூல்களுள் ஒன்றாக உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட திருவருட்பயனும் சிறப்பிக்கப்படுகின்றது. திருவருட்பயன் என்பது திருவருளின் பயனை விளக்கும் நூல் என விரியும். கி.பி 1307 ஆம் ஆண்டளவில் எழுந்ததாக கருதப்படும் இந்நூல் ஈரடி வெண்பாக்களால் அமைந்தது. விநாயகர் காப்பு முதல் 101 பாடல்களைக் கொண்டது. பத்து அதிகாரங்களையும், ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து குறட்பாக்களையும் கொண்டு சைவசித் தாந்தக் கருத்துக்களை விளக்குகின்றது. முதல் ஐந்து அதிகாரங்களும் திருவருளைப் பற்றியும் பின் ஐந்து அதிகாரங்களும் திருவருளின் பயனைப் பற்றியும் விளக்குகின்றன. திருவருட்பயன் எடுத்தியம்புகின்ற சைவசித்தாந்தக் கருத்துக்களுள் பெரும்பாலானவை உளவியல் கருத்துக்களுடன் ஒத்துப்போகின்றமை குறிப்பிடத்தக்கது.
‘மனிதனின் புறச்செயல்களை முறையாக உற்றுநோக்கி முறையாக ஆராய்ந்து அதன் மூலம் அவை எவ்வாறு அகத்தே நிகழும் சிந்தனையோட்டங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன என்றும், சுற்றுச் சூழலில் ஏற்படும் நிகழ்வுகளால் எவ்வாறு அவனது நடத்தை பாதிக்கப்படுகின்றது எனவும் விளக்குவதே உளவியல் ஆகும்.’ என நவீன உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். உளவியலின் படிமுறை ரீதியான வளர்ச்சியை நோக்கின் உளவியலென்பது மெய்யியலின் உட்பிரிவுகளுள் ஒன்றாகவும், ஆன்மீக ரீதியான சிந்தனைகளை எடுத்தியம்புகின்ற இயல்பினை கொண்ட துறையாகவுமே காணப்பட்டுள்ளது.
உளவியல் என்பதன் ஆங்கிலப்பதமான Psychology என்பது Psyche + Logos எனும் கிரேக்கச் சொற்களினடியாக தோற்றம் பெற்றதாகும். Psyche என்றால் ஆவி, ஆன்மா, மூச்சு, உயிர் எனவும் Logos என்றால் இயல், அறிவு, கற்கை எனவும் பொருள்படும். ஆரம்பகால உளவியலானது ஆன்மா பற்றி ஆராயும் ஓர் ஆன்மவியலாக கருதப்பட்டது. இந்திய தத்துவ நூல்களில் விளக்கப்படும் கருத்துக்களை ஒத்தனவாகவே ஆரம்பகால உளவியல் கருத்துக்கள் காணப்பட்டன. 15ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இக் கருத்து மேலோங்க கனவுகளும், நெறிபிறழ்வு நடத்தைகளும், தன்னுடல் செயலற்றுகிடந்த நிலையிலும் வெ வ்வேறு இடங்களுக்குச் சென்று வருவதாக ஏற்பட்ட அனுபவங்களும் தன்னுள் உறைகின்ற ஆன்மாவின் செயலென எண்ணியமையே காரணம் எனலாம்.
இருப்பினும் ஆன்மாவின் இருப்பிடம் யாது என விளக்கப்பட இயலாத காரணத்தால் இக்கருத்து தொடர்ந்து வந்த காலங்களில் நிராகரிக்கப்பட்டது. அவ்வகையில் உளவியலை இந்திய உளவியல், மேலைத்தேய உளவியல் என இரண்டாக நோக்குவர். மேலைத்தேய உளவியல் கருத்துக்கள் பரிசோதனைகளினடியாக விளக்கப்படக் கூடிய அதே வேளை இந்திய உளவியல் கருத்துக்கள் இந்துசமய தத்துவ நூல்களை அடிப்படையாக கொண்டே விளக்கப்படுகின்றன. இவை மிகவும் உயர்ந்த அனுபவங்களைக் கொண்டு ஆக்கப்பட்டதுடன் வழிகாட்டல்கள், விழுமியங்களை எடுத்தியம்புவனவாயும் மக்கள் வாழ்வாங்கு வாழ வழிப்படுத்துவனவாயும் விளங்குகின்றன.
இத்தகைய பண்பியல்களை கொண்ட இந்திய தத்துவக் கருத்துக்களை விளக்கும் நூல்களுள் ஒன்றான திருவருட்பயனில் விளக்கப்படுகின்ற உளவியல் கருத்துக்கள் எங்ஙனம் மேலைத்தேய உளவியல் கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றன என்பதனை ஆராயும் முகமாக மேற்கொள்ளப்பட்டதே இவ் ஆய்வாகும்.
ஆய்வின் நோக்கம் 
திருவருட்பயனில் கூறப்படுகின்ற பதி, பசு, பாசம் தொடர்பான கருத்துக்கள் உளவியல் கருத்துக்களுடன் ஒத்துப்போகுமாற்றை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
ஆய்வு முறையியல்
திருவருட்பயனில் கூறப்படுகின்ற கருத்துக்களை திருவருட்பயன் மூல நூல் உரைநூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் என்பவற்றை அடிப்படையாக கொண்டும், உளவியல் கருத்துக்களை விளக்க உளவியல் நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் என்பவற்றையும் அடிப்படையாக கொண்டு சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஒப்பீட்டாய்வின் அடிப்படையில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வு முடிவு பெறப்பட்டது.
கருதுகோள்கள்
  • திருவருட்பயனில் கூறப்படுகின்ற உணர்வு தொடர்பான கருத்துக்கள் உளவியலில் குறிப்பிடப்படும் நனவு நிலை (Conscious) எண்ணக்கருவுடன் ஒத்துப்போகின்றது.
  • திருவருட்பயனில் குறிப்பிடப்படுகின்ற கனவு பற்றிய கருத்துக்களை உளவியலிலே கனவும், கனவுப் பகுப்பாய்வும் (Dream and dream analysis) என்பதனூடாக ஒப்பிட்டு நோக்க இயலும்.
  • திருவருட்பயனில் குறிப்பிடப்படுகின்ற ஐம்பொறிகள் பற்றிய கருத்துக்களை உளவியற் புலத்திலே புலணுணர்வும் புலக்காட்சியும் (Sensation And Perception) எனும் எண்ணக்கருவுடன் ஒப்பிட்டு நோக்கலாம்.
  • திருவருட்பயனில் குறிப்பிடப்படுகின்ற மும்மலங்களால் பீடிக்கப்பட்ட ஆன்மா பற்றிய கருத்துக்கள் உளவியல் புலத்திலே பிறழ்வுநிலை எனும் எண்ணக்கருவுடன் ஒத்துப்போகின்றது.
  • திருவருட்பயனில் கூறப்படுகின்ற குருவானவர் அறிவிக்க ஆன்மாக்கள் அறியும் இயல்புடையன எனும் கருத்தானது உளவியலில் வழிகாட்டலும் உளவளத்துணையும். (Guidance and Counseling) எனும் எண்ணக்கருவுடன் ஒத்துப்போகின்றது.
  • திருவருட்பயனில் கூறப்படுகின்ற வீடுபேறு தொடர்பான கருத்துக்கள் உளவியலில மாஸ்லோ குறிப்பிடும் தன்னிலையுணர்தல் (self actualization) எனும்எண்ணக்கருவுடன் ஒத்துப்போகின்றன.
பகுப்பாய்வு
உணர்வும் நனவு நிலையும் (Conscious)
இவ்வுலகம் ஓர் ஒழுங்கு நிலையில் நின்று செயற்படுதலிற்கு நிமித்த காரணமாக உடனின்று இயக்கி நிற்கும் பேராற்றல் வாய்ந்த முழுமுதற் பொருளொன்று அவசியம் .எனவும் அம் முழுமுதற் பொருளே உணர்வாகும் எனவும் கடவுளின் இயல்பு தொடர்பாக விளக்கும் பின்வரும் பாடல் குறிப்பிடுகின்றது.
‘அகர உயிர் போல் அறிவாகி எங்கும் 
நிகரல் இறை நிற்கும் நிறைந்து.’
இவ் உணர்வு என்பதனை உளவியல் எண்ணக்கருக்களில் நனவுநிலை (Conscious) என்பர். மனித செயற்பாடுகள் அனைத்திற்கும் அடிப்படையாக நனவுநிலை (Conscious) என்பது அமைவதாகவும், நனவு நிலையில் வெளிப்படுத்த முடியாத இச்சைகள் ஒடுக்கப்பட்டு நனவிலி நிலையில் அடக்கப்படும் போது அவை கனவுகள் முதலிய குறியீடுகளினடியாகவும், பிறழ்வாகவும் வெளிப்படுத்தப்படும் என Freud மற்றும் Adler ஆகிய உளவியல் அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.
ஆன்மாக்கள் தாமாக அறியும் ஆற்றலற்றவை ஆனால் இறைவன் உயிர்க்குயிராய் நின்றுணர்த்த ஆன்மாக்கள் உணரும் ஆற்றல் மிக்கவை என்பதனை
‘ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே ஊன் ஒடு உயிர்
தான் உணர்வோ ஒன்றாற் தரம்.’
எனும் குறள் விளக்குகின்றது. உளவியல் விஞ்ஞானத்தின் படி நனவிலி (unconscious) நிலையில் காணப்படும் ஒடுக்கப்பட்ட இச்சைகள் அனுபவமிக்க ஒருவரின் உதவியுடன் நனவுநிலைக்கு (conscious) கொண்டுவரப்படுவதன் மூலமே உணரப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
கனவும், கனவுப்பகுப்பாய்வும் (Dream and dream analysis)
ஆன்மாக்கள் நனவிலே காணும் பொருட்கள் அவற்றின் மனதிலே பதிந்திருப்பன. அந்தப் பொருட்களை கனவிலே காணும் தன்மை ஆன்மாவினுடைய இன்பதுன்ப நுகர்ச்சிக்கேற்ப மாறுபடும். அவ்வகையில் நனவிற் கண்டவற்றை கனவில் மாறுபடக் கொள்ளும் இயல்பினையுடையமையால் எதனையும் உள்ளவாறு அறிந்து செயற்படமாட்டாத ஆன்மா பிரம்மமன்று. என பின்வரும் குறள் குறிப்பிடுகின்றது.
‘கண்டவற்றை நாளும் கனவில் கலங்கியிடும் 
திண்டிறலுக்கு என்னே செயல்.’
உளவியல் ரீதியாக நோக்கின் Freud மற்றும் Yung ஆகியோரது கனவுப்பகுப்பாய்வின் கனவுகளிற்குபலன் காணல் அம்சங்கள் இதனைத் தெளிவாக விளக்குகின்றன.
யுங் தனது நான்காவது பிறந்ததினத்திற்கு முன் கண்ட கனவும் அவரது கனவுப் பகுப்பாய்வில் பலன் கூறப்பட்ட விதத்தினையும் பின்வருமாறு தனது பகுப்பாய்வு உளவியலில் குறிப்பிடுகின்றார். யுங் புற்தரையொன்றில் நிற்கும் போது அங்கு நீண்ட இருளான சதுரமான துளையை கண்டார். அத்துளையினூடே படிக்கட்டு செல்கின்றது. இருட்டிய அப்படிக்கட்டினுள்ளே கரும்பச்சை நிறத்திலான திரைச்சீலை போட்ட அறையின் வளைவு ஒன்று காணப்படுகின்றது. அந்த திரைச்சீலையினைத் தாண்டி உள்ளே சென்றால் ஒரு மங்கலான அறையில் சிவப்புக் கம்பளமானது விரிக்கப்பட்டுள்ளது. அக் கம்பளம் முடிவடையும் இடத்தில் ஒரு பீடம் உள்ளது. அந்தப் பீடத்திற்கு மேலே நீளமானதொரு பொருள் காணப்படுகின்றது. அதனைப் பார்க்க யுங் இற்கு ஓர் முண்டமான மரமாகத் தெரிகின்றது. அவ் வடிவத்தின் மேற்பகுதியில் முகம், முடி எதுவுமில்லாத உருண்டையான தலை போன்ற அமைப்பு காணப்படுகின்றது. அக் கண்களில் ஒரு கண் மேலே பார்த்தவாறு காணப்படுகின்றது. அதனைப் பார்த்த பின்னர் தன் தாயிடம் அது பற்றி வினவ அவரின் தாயார் இவன் தான் மனிதனை உண்பவன் எனக் கூறுகின்றார். அத்துடன் அவர் பயந்து விழித்துவிட்டார். இதன் பலனை 30 வருடங்களின் பின்னர் அவர் மேற்கொண்ட பகுப்பாய்வினடியாக பின்வருமாறு குறிப்பிட்டார்.
முண்டமான மரம் – இலிங்கம் / ஆண்குறி 
நீள்சதுர துவாரம் – மரணம் 
பச்சைத் திரைச்சீலை – நிலம், பசுமை 
சிவப்புக் கம்பளம் – குருதி 
மரம் – அருட்டப்பட்ட ஆண்குறி
என விளக்கினார்.
அவ்வாறே ப்ரெய்ட் இன் கனவுப் பகுப்பாய்வின் படி கனவில் பாம்புகள் வருகிறது எனில் குறித்த நபர் நனவு நிலையில் (Conscious) பாலியல் இச்சையால் உந்தப்பட்டுள்ளார் எனவும் பாம்பு என்பதனை ஆண்குறிக்கு ஒப்பிட்டும் பொருள் கூறினார். இத்தகைய ஆசைகள் சமூக நியதி, விழுமியங்கள் காரணமாக உடனடியாக வெளிப்படுத்த இயலாத காரணத்தால் ஒடுக்கப்பட்டு நனவிலி நிலையில் சேமிக்கப்படுகின்றன. இவை நனவில் கண்டவற்றை ஆன்மாக்கள் கனவில் மாறிப் பொருள் கொள்கின்றன எனும் திருவருட்பயன் எண்ணக்கருவுடன் ஒத்துப் போகின்றமையைக் காண முடிகிறது.
புலணுணர்வும் புலக்காட்சியும் (Sensation And Perception)
ஆன்மாக்கள். ஐம்பொறிகளாகிய கருவிகளின் துணையின்றி ஒன்றையும் உணரமுடியாத அறிவுக் குறைபாடுடையன என்பதனை
‘பொறியின்றி ஒன்றும் புணராத புந்திக்கு 
அறிவு என்ற பேர் நன்று அற.’
எனும் குறள் குறிப்பிடுகின்றது. உளவியல் ரீதியாக நோக்கின் ஐம்புலன்களினைக் கருவியாகக் கொண்டு உணரப்படுவனவும், (Sensation) காட்சி (perception) பெறப்படுவனவுமே மனித நடத்தையைத் தோற்றுவிக்கிறது. இது பழைய அனுபவங்களின செல்வாக்கிற்கு உட்பட்டதாயும் அமையலாம். என முழுநிலைக்காட்சி வாதக் கோட்பாடு (Gestalt Theory) விளக்குகின்றது.
ஆன்மாவின் துணை கொண்டு அறியும் தன்மையவாகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும் தாம் ஆன்மாவினாற் காரியப்படுதலை அறியாதவாறு போல உயிர்க்குயிராகிய முதல்வன் துணைகொண்டு அறிய வல்லன என திருவருட்பயன் விளக்குகிறது. இதனை
‘அணுகு துணை அறியா ஆற்றோனில் ஐந்தும் 
உணர்வை உணரா உயிர்.’
எனும் குறளினடியாக திருவருட்பயனில் விளக்கப்பட்டுள்ளது. உளவியலைப் பொறுத்த மட்டில் ஐம்புலன்களின் வாயிலாகப் பெறப்படும் புலணுணர்வு (sensation) மற்றும் புலக்காட்சி (perception) என்பனவே மனித நடத்தையைத் (behavior) தோற்றுவிக்கின்றன எனும் விளக்கத்தினடியாக புரிந்து கொள்ள இயலும்.
ஆன்மாக்கள் தமக்கு ஆதாரமாயுள்ள அருளை அறியாதிருப்பதற்கு அவை ஐம்பொறிகளோடு கூடி வஞ்சிக்கப்பட்டிருத்தலே காரணம் என்கிறது. திருவருட்பயன். இதனை
‘வெள்ளத்துள் நா வற்றி எங்கும் விடிந்து இருளாம் 
கள்ளத் தலைவர் கடன்’
எனும் குறள் விளக்குகின்றது. உளவியல் ரீதியாக சுயம் (self) எனும் எண்ணக்கருவுடன் தொடர்புபடுத்தி நோக்கின் சுயம் என்பது மனித நடத்தைக்கும் (behavior) இலக்குகளை அடைந்து கொள்வதற்கும் முக்கியமானதொன்றாகும். ஒருவன் சுயத்தை அறியாமைக்கு காரணம் அவனது தவறான சமூகப் புலக்காட்சியும் மேலாண்மைக்காக முயற்சிக்காத தன்மையுமே ஆகும். ஆரோக்கியமான நபரொருவரிடம் துளிர்விடும் தாழ்வு மனப்பான்மை அவனது சுயத்தை பாதிப்பதுடன் ஆளுமைப் பிறழ்வுகளையும் ஏற்படுத்திவிடும். உளவளத்துணை (conselling) செயற்பாடுகளைப் பொறுத்த மட்டில் சுயம் தொடர்பாக நேர்நிலையான எண்ணக்கரு இல்லாத, தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவருக்கு சுயத்தை அடையாளப்படுத்தியதன் பின்னரேயே உளவளத்துணை (conselling) செயற்பாடுகளை மேற்கொள்வது நன்று. சுயம் என்பது ஐம்புலன்களினூடாக பெறப்பட்ட அனுபவங்கள், புலணுணர்வுகள், புலக்காட்சிகள், என்பவற்றினடியாக பெறப்படும் ஒன்றாகும். ப்ரெய்ட் இன் சுயம் தொடர்பான எண்ணக்கருவை ஏற்ற யுங் சுயம் ஆளுமையைப் (personality) பிரதிபலிக்கும் ஒன்று எனவும் நனவு நிலையுடன் தொடர்புடைய ஒன்று எனவும் கூறுவதோடு இதுவே உறவுச்சிக்கல் ஏற்பட காரணமாகவும் அமைகின்றது என்கின்றார். அவ்வாறே ஓருவன் சுயம் பற்றிய தவறான எண்ணக்கருவைப் பெறுதலிற்கு தவறான புலக்காட்சி மற்றும் கசப்பான வாழ்க்கை அனுபவங்கள் என்பன காரணமாக அமைகின்றன.
சஞ்சல மனத்தாற்படும் விரைவினையடக்காது ஐம்பொறிவாயிலாக நுகர்தற்குரிய இழிந்த சிற்றின்பங்களை அவாவி அலைதலாகிய புலனறிவின்மையே உயிர்கள் திருவருளை அறியாதிருக்க காரணமாகும், என திருவருட்பயன் விளக்குகின்றது. இது உளவியல் ரீதியாக ‘புலக்காட்சித் தவறல்’ என்பதுடன் ஒப்பிட்டுநோக்க கூடியது. மனிதர்கள் ஒவ்வொருவரும் தத்தமது அனுபவங்களுக்கு ஏற்ப புலக்காட்சி பெறுவதனாலும் கற்பனை செய்வதாலும், புலனடக்கம் இன்மையாலும் தவறான மனப்பாங்கு (attitude) மற்றும் காரணம் கற்பித்தல் (attribution) செயன்முறைகளை மேற்கொள்கின்றனர். இதனால் மனித நடத்தை மாறுவதுடன் ஏனையோரது நடத்தை மாற்றியமைக்கப்படுகிறது. இவை இல்பொருட்காட்சி, திரிபுக்காட்சி மற்றும் மாயப்புலணுணர்வு(ர்யடடரஉiயெவழைn) மூலம் ஏற்பட வல்லன. என்பதனூடாக விளக்கலாம்.
ஆணவ மலமும் பிறழ்வு நடத்தையும் (Abnormal Behavior)
ஆன்மாக்களின் அறிவினை மறைத்து நிற்றலானவை ஆணவ மலத்தின் இயல்பு என்கிறது திருவருட்பயன். இதனை
இருளானது அன்றி இலது எவையும் ஏகப் 
பொருளாகி நிற்கும் பொருள்.’
எனும் குறள் விளக்குகின்றது. இதனை உளவியலில் கருத்துக்களுடன் நோக்கின் மனித நடத்தைகளின் இயல்பு மாற்றமடைகின்ற தன்மையினைப் பிறழ்வு (abnormal) நடத்தை என்பர். இந் நிலையில் மக்களின் சாதாரண இயல்பு மாற்றமடைந்து விடும். இதனைப் பொருத்தமான சிகிச்சைகளினடியாக குறைக்க இயலும். என்பதுடன் ஒப்பிட்டு நோக்கலாம். உளவியலில் பிறழ்வு நிலை உளவியல் (abnormal psychology) எனத் தனிப்புலம் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
‘இருள் இன்றேல் துன்பு என் உயிர் இல்பேல் போக்கும் 
பொருள் உண்டேல் ஒன்றாகிப் போம்.’
அதாவது உயிர்கள்படும் எல்லாத் துன்பங்கட்கும் காரணமாய் உயிர்களைப் பற்றியுள்ள குற்றம் ஆணவமலம் என்பது உணர்த்துகிறது. இவ்வாறே உளவியலில் மனித நடத்தைப் பிறழ்வுகள் (abnormal)  சார்ந்து எழும் பிரச்சினைகட்கு உடலியற் கோளாறுகள், பரம்பரை, கசப்பான வாழ்க்கை அனுபவங்கள், நிறைவேறாத ஆசைகள் என்பன காரணமாக அமைகின்றன. என குறிப்பிடப்படுகிறது.
வழிகாட்டலும் உளவளத்துணையும் (Guidance and Counseling) 
ஆன்மாக்கள் அறிவித்தால் மட்டுமே அறியும் ஆற்றலுடையன. கண்ணானது காணும் தன்மை கொண்டிராவிடின் முகத்தில் கண்ணிருப்பதில் பயனில்லை. மாறாக காண இயலாத நிலையினை ஆன்மா உணரவல்லது. ஆகவே ஆன்மா அறிவுப்பொருள் ஆகும். என்கிறது திருவருட்பயன். இதனை
‘ஒளியும் இருளும் உலகும் அவர் கண்
தெளிவு இல் எனின் என் செய’
எனும் குறள் விளக்குகின்றது. இதனை உளவியலில் உளவளத்துணைச் செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களுடன் ஒப்பிட்டு நோக்கலாம். உளவளத்துணை (counseling) செயற்பாடுகளின் போது துணைநாடியிடத்து காணப்படும் தெளிவின்மையை துணைநாடியை (client)  உணர்ந்து கொள்ளச் செய்து தகுந்த முறையில் நெறிப்படுத்துவதன் மூலம் குணப்படுத்தலாம் எனக் குறிப்பிடப்படுகின்றது. தனது செயற்பாடுகளை அறியும் ஆற்றல் ஆன்மாவிடம் எவ்வாறு காணப்படுகின்றதோ அது போல தனது பிரச்சினை யாதென அறிய தகுதிவாய்ந்த ஒருவர் வழிகாட்டும் போது துணைநாடியால் பிரச்சினையை விளங்கிக் கொள்ள முடியும். என உளவளத்துணைக் கோட்பாடுகள் தெளிவுபடுத்துகின்றன.
அகத்துறுநோய் என்பது சரீரத்தினுள்ளே பற்றிய உடலியல் நோயாகும். பெண்டாட்டி, பிள்ளை, மாதா, பிதா யாராயிருந்தாலும் ஒருவனது உடலியல் நோயால் ஏற்படும் வலிகளை அவனே உணரமுடியும். இவ்வாறு ஆன்மாவிடத்தில் காணப்படுகின்ற அறியாமையை உயிர்க்குயிராய் உள்ள பரமசிவனே ஆசாரிய மூர்த்தமாய் எழுந்தருளி நீக்குகிறது என திருவருட்பயனின் பின்வரும் குறள் தெளிவுபடுத்துகின்றது.
‘அகத்துறு நோய்க்கு உள்ளினர் அன்றி அதனைச் 
சகத்தவரும் காண்பரோ தான்.’
உளவியலடிப்படையில் கார்ள் றோஜர்ஸ் இன் ஆள்மையக் கோட்பாட்டின்படி உளவளத்துணையாளன் (counselor) ஒருவன் இத்தகைய செயற்பாடுகளையே ஆற்ற வேண்டும் என்கின்றார். ஒத்துணர்தல் (empathy) செயன்முறை மூலம் துணைநாடியினது (client) பிரச்சினையை அவனே உணர்ந்து கொள்ளுமாறு வழிப்படுத்தி அதன் பின்னரேயே ஆற்றுப்படுத்தல் செயன்முறையை மேற்கொள்ள வேண்டும். குருவானவர் ஆன்மாவிற்கு ஆற்றும் செயற்பாட்டையே உளவளத்துணையாளன் நடத்தைசார் பிறழ்வுகளை நீக்க துணைநாடிக்கு மேற்கொள்கின்றான் எனலாம்.
புலனடக்கமும் முத்தியும்
ஞானேந்திரியங்களால் அறியப்படும் பொருள் புலன் எனப்படும். புலனடக்குதல் என்பது ஐம்பொறிகளின் வாயிலாக விடயங்களை அறியாதிருத்தல் எனலாம். ஆணவச் சார்புள்ள மனிதர் ஐம்பொறிகளினாற் பொருள்களை மயங்கி அறிவர். மலம் நீங்கிய சீவன் முத்தர் மயக்க அறிவைத் தரும் பொறிகளால் விடயங்களை அறியாமல் ஞானக் கண்ணினால் மெய்ப்பொருளைக் காண்பர். ஆதலால் அவர்கள் ஐம்பொறிகளையும் மனதையும் அடக்குவர். என்பதனை,
‘புலன் அடக்கி தம் முதல் கண் புக்கு உறுவார் போதார் 
தலன் நடக்கும் ஆமை தக’
திருவருட்பயன் குறளடி விளக்குகின்றது. உளவியலைப் பொறுத்தமட்டில் புலனடக்கம் என்பது அவசியமானது ஒன்றாகும். இதன் அவசியம் தளர்வுப் பயிற்சிகள், யோகாசன பயிற்சிகள் மூலம் விளக்கப்படுகின்றது. மன அமைதி பெறவும், உடலியற் செயற்பாடுகளைச் சீராகப் பேணவும் ஆக்கத்திறன், கற்பனைத்திறன், முதலியவற்றின் வளர்ச்சியைத் தூண்டவும், கிரகித்தல் திறனை அதிகரிக்கவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும் புலனடக்கம் என்பது அவசியமாகின்றது.
தனக்கு ஆதாரமாயுள்ள திருவருளை சிந்தையில் இடைவிடாது நினைத்துப் பழகுதலே உயிர்கள் வீடுபேறு அடைவதற்கு சாதனமாம் என்பதனை,
‘இற்றை வரை இயைந்தும் ஏதும் பழக்கம் இல்லா 
வெற்று உயிர்க்கு வீடு மிகை’
எனும் குறள் விளக்குகின்றது. உளவியலைப் பொறுத்தமட்டில் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளுள் சாந்தவழிமுறைகளில் (relaxation) சாந்தியாசனம், மந்திர உச்சாடனம், தியானம், (meditation)  பிரணாயாமம் (breathing exercises) போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தன்னிலையுணர்தலும் வீடுபேறும்.
இறைவன்பால் மெய்யன்புடையோர் இப்பிறப்பிலேயே வீடுபேற்றின்பத்தை அடைந்து இன்புறுவர் என்பதனை
‘உள்ளும் புறம்பும் ஒரு தன்மைக் காட்சியருக்கு 
எள்ளும் திறம் ஏதும் இல.’
எனும் குறள் எடுத்தியம்புகின்றது. உளவியல் ரீதியாக நோக்கின் இலக்கின் மீது நம்பிக்கை உடையவனாலேயே தன்னிலையுணர்தலை (self actualization) அடைய முடியும். இது ஒவ்வொரு கட்டத்திலும் தேவைகள் முழுமையாக நிறைவேறும் போதே அடையப்பட முடியும். இதன் இறுதிப் படிநிலை தன்னிலை உணர்தலாகும். அனைவராலும் இந்நிலையை இலகுவாக அடைந்துவிட முடியாது என மாஸ்லோ குறிப்பிட்ட கருத்துடன் ஒப்பிட்டு நோக்கலாம்.
சிவ பரம்பொருளை உள்ளும் புறமும் ஒரு தன்மையாக காணுதலே சிவஞானிகளது செயல் என்பதனை
‘மும்மை தரும் வினைகள் மூளாவாம் மூதறிவார்க்கு
அம்மையும் இம்மையே யாம்.’
எனும் குறள் விளக்குகின்றது. உளவியலுடன் ஒப்பிட்டு நோக்கின் மாஸ்லோவின் தேவைப்படிநிலைக் கொள்கையின் பிரகாரம் தன்னிலையுணர்ந்தவர்கள் நன்மை, தீமை சுக, துக்கம் அனைத்தையும் ஒன்றாகவே கருதுவர். இந்நிலையைப் பற்றுக்களைத் துறந்த நிலையிலேயே ஒருவரால் அடைந்துகொள்ள இயலும். அனைவராலும் அடைந்துவிட இயலாது. தன்னிலை உணர்ந்தவர்களுள் அன்னை தெரேசா, விவேகானந்தர் ஆகியோரை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
அவ்வாறே சிவஞானச் செல்வர்களாகிய பெரியோர்கள் இப்பிறவியிலேயே வினையொழிந்து வீடுபேற்றின்பத்தை நுகர்வர் எனும் கருத்தை உத்த விளக்கம் உளவியலைப் பொருத்தமட்டில் மாஸ்லோவின் தேவைப்படிநிலைக் கோட்பாட்டின் பிரகாரம் விளக்கப்படுகின்றது. வாழ்வின் இலக்கான தன்னிலையுணர்தலை (self actualization) அடைபவர்களிலேயே முழுமையான ஆளுமை (personality) காணப்படும் எனக் குறிப்பிடுகின்றார்.
முடிவுரை
மேற்குறித்த கருத்துக்களினடியாக திருவருட்பயனில் கூறப்பட்ட கருத்துக்களுள் பெரும்பாலானவை உளவியல் கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றமையைக் காண முடிகின்றது. அவ்வகையில் நனவு நிலை (Conscious) கனவுநிலை (Dream) புலணுணர்வும் புலக்காட்சியும் (Sensation And  Perception), பிறழ்வு நடத்தை (Abnormal Behavior), வழிகாட்டலும் உளவளத்துணையும். (Guidance and Counseling), புலனடக்கம், தன்னிலையுணர்தல் (self actualization) ஆகிய கருத்துக்கள் உளவியல் கருத்துக்களுடன் ஒத்துப்போகின்றமையை இனங்காண முடிகின்றது. இந்திய தத்துவ நூல்களில் ஒன்றாக விளங்குவதாலும், அனுபவ அடிப்படையில் அருளப்பட்ட நூலாக இருப்பதாலும் திருவருட்பயனில் இத்தகைய உளவியல் கருத்துக்களின் செல்வாக்கை காணமுடிகின்றது.
உசாத்துணைகள்
சிவபாதசுந்தரம். சு, திருவருட்பயன், யாழ்ப்பாண சைவபரிபாலன சபை வெளியீடு, பத்தாம் பதிப்பு 1962.
ஸ்ரீநிவாஸாசாரியன்.தே.ஆ, திருவுருட்பயன் நூலின் தெரிவுக்கட்டுரை, திருவாவடுதுறை ஆதீனம், 1957.
வெள்ளைவாரணார்.க, திருவருட்பயன் நிரம்ப அழகிய தேசிகர் உரை, பாண்டியன் அச்சகம் சிதம்பரம், 1965.
வச்ரவேல் முதலியார்.க, திருவருட்பயன், இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக் கழகம் பேராதனை,1967.
கஜவிந்தன்.க, உளவியல், குமரன் பதிப்பகம், 2013.
ரிட்லி ஜயசிங்க, நௌபர்.யூ.எல்.எம் (தமிழாக்கம்), உளவியல்சார் உளவளத்துணை அணுகுமுறை, குமரன் புத்தக இல்லம், கொழும்பு – சென்னை, 2010.
ஸ்ரலின்.இ, ஆளுமைக் கொள்கைகள், ஜீவநதி வெளியீடு, 2015.
ஸ்ரலின்.இ, ஆளுமை மலர உள ஆற்றுப்படுத்தல், ஜே.எஸ்.பிரிண்டேர்ஸ பண்டத்தரிப்பு, 2016.
ஸ்ரீகாந்தன்., திருவருட்பயனில் சைவசித்தாந்தம், நாகலிங்கம் நூலாலயம், ‘நகுலகிரி’ மயிலிட்டி தெற்கு, தெல்லிப்பளை. 2008.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...