தில்லை எனப்படும் சிதம்பரத்தில் வாழ்ந்தவர் உமாபதி சிவாச்சாரியார். தில்லைவாழ் அந்தணர்களில் ஒருவர். சிவஆகமங்களை நன்கு கற்றவர். மறைஞான சம்பந்தரால் ஞானம் பெற்றவர். அவருடைய மாணவராகத் திகழ்ந்தவர். மறைஞான சம்பந்தரால் சிவஞானபோதப் பொருளை உணர்ந்தவர். மறைஞான சம்பந்தரின் மாணவராகத் தம்மை உருவாக்கிக் கொண்டதால் தில்லைவாழ் அந்தணர்களால் ஒதுக்கப்பட்டவர். இருப்பினும் இறைவன் திருவருளால் இவருடைய பெருமைகளைப் பின்னால் உணர்ந்த தில்லைவாழ் அந்தணர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். தில்லையை அடுத்த கொற்றவன்குடி என்னும் ஊரில் தனியே திருமடம் வைத்து வாழ்ந்தவர். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த பெற்றான் சாம்பனுக்கு முத்தி அளித்தவர். சித்திரை மாதம் அத்த நட்சத்திரத்தில் இறைவனோடு கலந்தவர். இவர் எழுதிய நூல்கள் சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்பன ஆகும். இவற்றுள் சிவப்பிரகாசம் சிவஞானபோதத்தின் சார்பு நூலாகவும், மற்ற ஏழும் சைவ சித்தாந்தத் தத்துவங்களை விளக்கும் சிறு சிறு நூல்களாகவும் அமைந்துள்ளன.
சிவஞான போதத்தின் வழிநூலாகச் சிவஞான சித்தியார் அமைய, சிவப்பிரகாசம் சார்பு நூலாக விளங்குகிறது. 100 பாடல்களைக் கொண்டது. சிவஞானபோதத்தின் சார்பு நூலாக விளங்குவதால் 12 சூத்திர விளக்கப் பகுதிகள் அமைந்துள்ளன. செய்யுள்கள் அனைத்தும் ஆசிரிய விருத்தத்தால் அமைந்துள்ளன. முதல் 50 பாடல்கள் பொதுவியலாக அமைந்து முப்பொருள்களின் இலக்கணத்தைக் கூறுகின்றன. பின்னர் உள்ள 50 பாடல்கள் சிறப்பு இயலாக அமைந்து அவத்தைகள், வினை வகைகள், ஞானநிலை, பாச நீக்கம், அணைந்தோர் தன்மை ஆகியவைகளை விளக்குகின்றன. இந்நூலில் உயிர்கள் அடைகின்ற ஐந்து அவத்தைகள் விரிவாக விளக்கப் பெற்றுள்ளன. அவற்றிலும் கேவலம், சகலம், சுத்தம் எனக் கூறப்படும் மூன்று அவத்தைகள் மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. ஆன்ம நிலை, ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, ஆன்ம லாபம் என்ற ஆன்மாவின் படிநிலைகள் நூலாசிரியரால் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளன. சைவர்கள் கைக்கொள்ள வேண்டிய தீட்சை முறைகளும் விளக்கமாகக் கூறப்பெற்றுள்ளன. சைவ சித்தாந்தத் தத்துவக் கருத்துகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தரும் நூலாக இந்நூலைக் குறிப்பிடலாம்.
உமாபதி சிவாச்சாரியாரின் நூல்களில் இந்நூலும் ஒன்று. இந்நூல் திருக்குறளைப் போலக் குறள் வெண்பாக்களால் ஆகியது. 10 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துப் பத்துக் குறட்பாக்கள் அமைந்துள்ளன. ஆக மொத்தம் நூறு குறள் வெண்பாக்களைக் கொண்ட நூல் இது. முதல் அதிகாரத்தில் இறைவனின் பொது இயல்பினைப் பற்றிக் கூறும் பத்துப்பாடல்கள் அமைந்துள்ளன. இதற்குப் பதிமுதுநிலை என்று பெயர். இரண்டாவது அதிகாரம் உயிர்களின் பொதுத் தன்மையைக் கூறுவதாகும். இவ் அதிகாரத்திற்கு உயிரவைநிலை என்று பெயர். மூன்றாவது அதிகாரம் ஆணவமலத்தின் இயல்பைக் குறிப்பதாகும். எனவே இவ்வதிகாரம் இருண்மல நிலை என்று பெயரிடப் பெற்றுள்ளது. நான்காவது அதிகாரத்தில் இறைவனின் திருவருட் தன்மை கூறப் பெறுவதால் அவ்வதிகாரம் அருளதுநிலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஐந்தாவது அதிகாரம் ஞான வடிவாகிய குருவினது சிறப்பை விளக்குவதால் அருள்உறுநிலை என வழங்கப் பெறுகிறது. ஆறாவது அதிகாரம் அருள்உருவாகிய குருவினிடம் உண்மைப் பொருளைக் கேட்டு உணரும் முறைமையை உணர்த்துவதால் அறியும்நெறி என்று பெயரிடப் பெற்றுள்ளது. ஏழாம் அதிகாரம் உயிர்களின் ஆன்ம சுத்தியை விளக்கி உயிர் விளக்கம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. எட்டாம் அதிகாரம் உயிர்கள் ஆன்மசுத்தி அடைந்தபின் பெறுகின்ற பேரின்ப நிலையை விளக்குவதால் இன்புறுநிலை என்ற தலைப்பைப் பெற்றுள்ளது. ஒன்பதாம் அதிகாரம் ஐந்தெழுத்தின் பெருமைகளை எடுத்துரைப்பதால் ஐந்தெழுத்து அருள்நிலை என்ற தலைப்புக்கு உரியதாயிற்று. பத்தாவது அதிகாரம் ஞானம் பெற்று இறைவனின் அருள்நிலையை அடைந்த அணைந்தோர்களைப் பற்றிய சிறப்புக்களைக் கூறுவதால் அணைந்தோர் தன்மை என்ற தலைப்பைப் பெற்றுள்ளது. இவ்வாறு பத்து அதிகாரங்களுக்கு நூறு குறள் வெண்பாக்களைப் பெற்று சித்தாந்தத் திருக்குறளாக இந்நூல் விளங்குகிறது. எளிய நிலையில் சைவ சித்தாந்தக் கருத்துகளைத் தெரிந்து கொள்வதற்குரிய நூலாகவும் இந்நூல் விளங்குகிறது.
இந்நூல் உமாபதி சிவாச்சாரியாரின் 8 நூல்களில் ஒன்று. 13 வெண்பாக்களை உடையது. முதல் 12 வெண்பாக்களில் உமாபதி சிவாச்சாரியார் தமது ஆசிரியராகிய மறைஞான சம்பந்தரிடம் சித்தாந்தப் பொருள் பற்றிக் கேட்கும் வினாக்கள் அமைந்துள்ளன. 13ஆவது வெண்பா நூற் பயனைக் கூறுவதாக அமைந்துள்ளது. இந்நூலில் கேட்கப்படும் வினாக்கள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தில் எழுகின்ற நுட்பமான சந்தேகங்களைத் தெரிவிப்பனவாக உள்ளன. சந்தேகங்கள் வினாக்களாக உள்ளனவே தவிர விடையில்லை. வினாக்களை ஆழமாகச் சிந்தித்தால் விடை அறிந்து கொள்ள இயலும். ஆழமாகச் சிந்திப்பவர்களுக்கே சித்தாந்த சாத்திரங்களில் தெளிவு உண்டாகும் என்பதற்காகவே இந்நூல் படைக்கப்பட்டது போல் தோன்றுகிறது.
முதல் மூன்று பாடல்கள் பாசங்களில் ஒன்றாகிய ஆணவமலம் பற்றிய வினாக்களைப் பெற்றுள்ளன. ஆணவமலம் உயிர் தோன்றுகின்ற காலத்திலேயே தோன்றுவதால் ஆணவமலம் உள்ள உயிரோடு இறையும் நீங்காது பொருந்தியிருப்பது எவ்வாறு என்றும், ஆணவமலம் இருக்கும் பொழுது சிற்றறிவாக இருக்கும் அறிவு எப்பொழுது பேரானந்தத்தைப் பெறும் என்றும், ஆணவமலம் தருகின்ற மயக்கத்தைத் தவிர்ப்பதற்கு உரிய கருவிகள் யாவை என்றும் வினாக்கள் அமைந்துள்ளன. இத்தகைய வினாக்களை ஆழ்ந்து சிந்தித்தால் ஆணவ மலம் உயிரில் நிற்கும் பொழுதே இறைவன் பாச ஞானமாகவும், அருள் தருகின்ற வீட்டு நிலையில் திருவருளாகவும் தோன்றுவான் என்ற பதிலும், ஆணவமலம் கலந்திருக்கின்ற சிற்றறிவு ஞானாசிரியர் வந்து தோன்றுவதால் பேரானந்தத்தைப் பெறும் என்றும், மயக்கத்தைத் தெளிவிப்பதற்கு ஞானாசிரியன் திருவடியைக் காண்பதுவும், அவரின் உபதேச மொழியால் மயக்கம் தீர்வதும் ஆகும் என்ற விடைகள் வெண்பாவில் இல்லை என்றாலும் உய்த்துணர்ந்து பெற்றுக் கொள்ளலாம். அடுத்து வரும் பாடல்களில் சார்ந்ததன் வண்ணம் ஆகின்ற உயிரானது எத்தகைய அறிவுகளைப் பெறுகின்றது என்பது பற்றியும், 36 தத்துவங்களைப் பற்றியும், வினை நுகர்வுகள் பற்றியும், சீவான்மா, பேரான்மா பற்றியும், முத்திநிலை பற்றியும் வினாக்கள் அமைந்துள்ளன.
இறுதிப் பாடல் ஞானாசிரியன் திருவருளால் இப்பாடல்களின் பொருள்களை உணர்வார்க்கே உண்மைப் பொருள் விளங்கும் என்றும் மற்றவர்களுக்கு ஊமையர் கண்ட கனவு போலச் செம்பொருள் உணர முடியாது என்றும் குறிப்பிடுகிறது. இந்நூலில் உள்ள வெண்பாக்களுக்கு உரையாசிரியர்கள் அவரவர் ஆய்வுக்கு ஏற்ப விடைகளைத் தந்துள்ளனர். பொதுவாக இந்நூல் தத்துவ நுண்பொருளை உடையது எனக் கூறலாம்.
இந்நூல் சித்தாந்த அட்டகம் என்று குறிப்பிடப்படுகின்ற உமாபதி சிவாச்சாரியார் நூல்களில் ஒன்றாகும். இந்நூல் பஃறொடை வெண்பா யாப்பில் அமைந்துள்ளதாலும் உமாபதி சிவச்சாரியார் மறைஞான சம்பந்தரைப் போற்றுவதாலும் போற்றிப் பஃறொடை எனப் பெயர் பெற்றது. இந்நூலிலும் சைவ சித்தாந்தக் கருத்துகள் ஆசிரியரைப் போற்றும் முறையில் பல நிலைகளில் விளக்கப் பெற்றுள்ளன. குறிப்பாகச் சுட்டிக் காட்டினால் உயிராவது பிறப்புக்கு உட்பட்ட விதத்தை இந்நூல் மையமாகக் கொண்டு தத்துவத்தை விளக்குகிறது எனலாம்.
தாயின் கருவிலிருக்கும் காலத்தில் ஒவ்வொரு நிலையிலும் இறைவன் எப்படிக் காக்கின்றான் என்பது இந்நூலில் கூறப்பட்டிருக்கும் சிறப்புச் செய்தியாகும். மொத்தம் 95 பஃறொடைக் கண்ணிகளைப் பெற்றது இந்நூல். முதல் நான்கு கண்ணிகளில் இறைவணக்கம் அமைந்துள்ளது. அடுத்த இரு கண்ணிகள் இறைவனைப் போற்றியபின் இறைவனின் நாமமான ஐந்தெழுத்தைப் போற்றுகின்றன. அதன்பின் 13ஆவது கண்ணிவரை உயிரின் முதல்பிறப்பு பற்றிய நிலை குறிக்கப் பெற்றுள்ளது. பின் 18ஆவது கண்ணிவரை தாயின் கருவறையில் உயிர் இருக்கும் பொழுது பொதுவான காப்பு முறைமையும், அடுத்து 22ஆவது கண்ணிவரை குழந்தைப் பருவத்தில் காக்கும் முறைமையும் கூறப்பெற்றுள்ளன. அதன்பின் 38ஆவது கண்ணிவரை ஐந்து அவத்தைகளில் இறைவன் காக்கும் முறைமை பற்றியும் கூறப்பெற்றுள்ளது. 39 முதல் 53 ஆவது கண்ணிவரை உயிர்கள் செய்த வினைக்கு ஏற்பப் பயனை அனுபவிக்கும் முறை கூறப்பெறுகிறது. மூவகையான உயிர்களுக்குக் கிடைக்கும் முத்திநிலை 54 முதல் 71ஆவது கண்ணிவரை கூறப்பெறுகிறது. ஞானாசிரியர் தரும் தீட்சையின் பெருமைகளும், இறைவன் ஆன்மாக்களை ஆட்கொள்ளும் திறமும் பின்னர் வரும் கண்ணிகளில் விளக்கப் பெறுகின்றன. எனவே பொதுவாக இந்நூலில் ஞானாசிரியரின் புகழ் கூறப்பெறுவதோடு உயிர் பற்றிய சிந்தனைகளே அதிகம் இடம்பெற்றுள்ளன எனலாம்.
சித்தாந்த சாத்திர நூல்களிலேயே மிகவும் சிறிய நூல் இதுவாகும். இதனை உமாபதி சிவாச்சாரியார் பாடியருளியதற்குக் காரணமாகச் செவிவழிச் செய்தியும் ஒன்று உண்டு. தில்லைப்பதியில் நடராசப் பெருமானுக்கு உரிய விழாவில் ஒருமுறை முதல் நாளில் கொடிமரத்தில் கொடியேற்றப்படும் நிகழ்ச்சி நடந்தது. ஆனால் கொடியேறுவது தடைப்பட்டது. இதனால் தில்லைவாழ் அந்தணர்கள் மிகவும் வருந்தினார்கள். அப்பொழுது இறையருளால் அசரீரி ஒன்று கேட்டது. ‘இங்கு உமாபதி வந்தால் இக்கொடியேறும்’ என்பது அவ்வொலியாகும். அதாவது பிற மரபைச் சார்ந்த மறைஞான சம்பந்தரின் மாணவராகத் தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் வாழ்ந்ததால் அவரைத் தில்லைவாழ் அந்தணர்கள் ஒதுக்கி வைத்திருந்தனர். அவர்களால் புறக்கணிக்கப்பட்ட உமாபதி சிவம் தனியே கொற்றவன்குடியில் வாழ்ந்து வந்தார். அதனால் தில்லையில் நடராசருக்கு அவரால் பூசை செய்ய முடியாமல் போயிற்று. இந்த நிலையில்தான் அவருடைய பூசையை ஏற்றுக் கொள்ள இறைவன் கொடியேற்றத்தில் தடை ஏற்படுத்தித் தில்லைவாழ் அந்தணர்களை உணர வைத்தார். அசரீரியைக் கேட்டதும் தில்லைவாழ் அந்தணர்கள் உமாபதி சிவாச்சாரியாரிடம் சென்று தங்கள் குற்றத்தைப் பொறுக்க வேண்டினார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி உமாபதி சிவாச்சாரியாரும் தில்லைக்கு எழுந்தருளினார். திருக்கோவிலின் கொடிமரத்திற்கு முன்னர் இந்நூலிலுள்ள 5 பாடல்களைப் பாடினார். கொடி, கொடிமரத்தில் ஏறியது என்பது இந்நூல் பாடப்பெற்றதற்கு உரிய நிகழ்ச்சியாகும்.
இந்நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை பற்றி மாறுபாடு உள்ளது. ஒரு சில பதிப்புக்களில் நான்கு பாடல்களே உள்ளன. சில பதிப்புகளில் ஐந்து பாடல்கள் காணப்பெறுகின்றன. முதல் பாட்டுப் பாடியவுடன் கொடி ஏறியது. பின்னர் உள்ள பாட்டுக்கள் கொடியை நோக்கிப் பாடப்பெற்ற பாடல்களாக இருந்தாலும் சித்தாந்தக் கருத்துகளைக் குறிப்பாகத் தருவதால் சாத்திரத் தொகுப்பில் இந்நூல் சேர்க்கப்பட்டுள்ளது.
உயிரானது ஆணவமாகிய இருளுக்கும் சிவனாகிய ஒளிக்கும் இடங் கொடுத்து ஒன்று மேலிடுகிற போது ஒன்று கீழ்ப்படுகிறது. ஆணவமலம் மேலிட்டிருந்தால் திருவருளை உணர முடியாது. எனவே திருவருளோடு உயிர் கூடவேண்டும் என்பதற்காக இக்கொடி ஏற்றப்படுகிறது என்று முதல் பாடல் தத்துவக் கருத்தைக் கூறுகிறது.
இரண்டாவது பாடலில் உலகப் பொருள்கள் பற்றியும், அவற்றை உணரும்பொழுது மயக்கத்தை ஏற்படுத்துகின்ற ஆணவம் பற்றியும், ஆணவம் அடங்க, பொருள் மயக்கம் தீர இறைவன் அருளினான் என்பது பற்றியும் கூறப்படுகின்றன. சொல்லாலும் மனத்தாலும் எட்டுவதற்கு அரிய இறைவனை, அறிவுக்கு அறிவாகத் திகழும் அவனை அவனருளால்தான் உணர முடியும் என்பதனை மூன்றாவது பாடல் குறிப்பிடுகிறது.
நான்காவது பாடல் ஐந்தெழுத்தை உச்சரிக்கும் முறைமையினை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. ஐந்தெழுத்துகளில் உள்ள ஒவ்வோர் எழுத்தும் வெறும் எழுத்தாக மட்டும் இல்லாமல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கிறது என்பதனை இப்பாடல் வலியுறுத்துகிறது.
சில பதிப்புகளில் அமைந்துள்ள மிகைப் பாடலான ஐந்தாவது பாடல் இறைவன் உயிர்களுக்கு அருளும் திறத்தைக் குறிப்பிடுகிறது. இப்பாடலை இறைவனின் சிவப்பேற்றுத் தன்மை என்று உரையாசிரியர் குறிப்பர்.
உமாபதி சிவாச்சாரியார் அருளிய நூல்களில் இதுவும் ஒன்று. சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான முப்பொருளின் தத்துவங்கள் இந்நூலில் விளக்கப் பெறுகின்றன. இந்நூல் 125 கண்ணிகளைக் கொண்டது. உமாபதி சிவாச்சாரியார் தன்னுடைய ஞானாசிரியராம் மறைஞான சம்பந்தரைத் தலைவராகக் கொண்டு, தம்மைக் காதலியாகக் கொண்டு தலைவரிடம் சென்று அவருடைய காதலைப் பெற்று, அதற்கு அடையாளமாகக் காதலரிடம் உள்ள மாலையை வாங்கி வருமாறு தன் நெஞ்சைத் தூதாக விடுப்பது இந்நூலின் அமைப்பாகும். சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றான தூது இலக்கிய அமைப்பில் அமைந்த பெருமையை உடையது இந்நூல்.
முதல் 8 கண்ணிகளில் இறைவனுடைய இயல்புகள் கூறப்பெற்றுள்ளன. அதன்பின் 16ஆவது கண்ணிவரை உயிரின் இயல்பு கூறப் பெறுகிறது. அதன்பின் 22ஆவது கண்ணிவரை பாசங்களின் இயல்பு கூறப் பெறுகிறது. அடுத்து 29ஆவது கண்ணிவரை நெஞ்சுக்கு உரைக்கின்ற நீதிகள் இடம் பெற்றுள்ளன. இப்பகுதியில் “தெய்வப்புலவர் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல்” என்ற தொடர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதன்பிறகு இறைவனுக்குரிய தசாங்க உறுப்புகள் சிறப்பாகப் பேசப் பெறுகின்றன. அதாவது மலை, நதி, நாடு, ஊர், மாலை, குதிரை, யானை, கொடி, முரசு, ஆணை என்ற பத்து உறுப்புகளின் பெருமைகள் பேசப் பெறுகின்றன. அதன்பின் ஞானாசிரியரின் சிறப்புகளும், உயிரினிடத்தில் காணப் பெறுகின்ற மலங்களின் நீக்கமும் கூறப் பெறுகின்றன. அதன்பின் சிவபெருமானைக் காணச் செல்லும் இடங்கள் பற்றிக் குறிக்கப் பெறுகிறது. உலோகாயதன், மாயாவதி, புத்தன், சமணன் முதலிய தீயோர் இருக்கும் இடங்களில் செல்லாது, அவ்விடங்களை விட்டு ஒதுங்கி ஞானாசிரியர் வடிவில் வந்த சிவபெருமானைக் கண்டு தூது உரைத்து மாலையை வாங்கி வருமாறு தன் நெஞ்சிற்குக் கூறுவதாகச் செய்திகள் அமைந்துள்ளன. இந்நூல் இலக்கிய நயமும், தத்துவச் சிறப்பும், பிறமத மறுப்பும் அமைந்து உமாபதி சிவாச்சாரியாரின் சித்தாந்த அறிவை நன்கு புலப்படுத்துகிறது எனலாம்.
5.4.7 உண்மை நெறி விளக்கம்
இந்நூலை இயற்றிய ஆசிரியரைப் பற்றி இருவகைப்பட்ட கருத்துகள் கூறப்படுகின்றன. இதனை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியார் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஒரு சிலர் இந்நூலை அருளியவர் சீர்காழிச் சிற்றம்பல நாடிகளின் மாணவராகிய சீர்காழித் தத்துவநாதர் என்று கூறுகின்றனர். என்றாலும் மரபுவழி இந்நூலை இயற்றியவர் உமாபதி சிவாசாரியார்தான் என்று கொள்ளுவது வழக்கமாக உள்ளது. இந்நூலில் 6 விருத்தப் பாக்கள் உள்ளன. இந்த ஆறு விருத்தப் பாக்களால் 10 பொருள்கள் விளக்கப் பெறுகின்றன. அவை வருமாறு:
(1) | தத்துவ ரூபம் | : | நிலம் முதல் சிவம் ஈறாக உள்ள 36 தத்துவங்களின் நிலையை அறிவது. |
(2) | தத்துவ தரிசனம் | : | 36 தத்துவங்களும் அறிவற்றன என உணர்வது. |
(3) | தத்துவ சுத்தி | : | 36 தத்துவங்களுக்கும் மலோக உயிர் தன்னை அறிவது. |
(4) | ஆன்ம ரூபம் | : | ஆணவம் நீங்கப் பெற்ற நிலையில் இறையருளால் மெய்யுணர்வைத் தன் அறிவில் உணர்வது. |
(5) | ஆன்ம சுத்தி | : | உயிர் திருவருளில் அடங்கித் தான் வேறு இன்றி ஒன்றியிருப்பது. |
(6) | ஆன்ம தரிசனம் | : | உயிர் தன் செயலற்று நிற்பது. |
(7) | சிவ ரூபம் | : | எல்லா இடத்தும் நீக்கமின்றி நிற்கும் பரம்பொருள் முத்தொழிலை உயிர்கள் பொருட்டு அருளே வடிவாகக் கொண்டு செய்கிறது என்பதை அறிவது. |
(8) | சிவ தரிசனம் | : | யான், எனது என்னும் செருக்கு நீங்கும் படியாகத் திருவருளானது உயிரின்கண் பொருந்துதல் இறைவன் திருவடியாகும். பார்க்கும் இடம் எல்லாம் சிவமாகத் தோன்றுதல் இறைவன் முகமாகும். சொல்லுக்கு அப்பாற்பட்டு நின்ற பேரின்பமே இறைவன் திருமுடியாகும். இதை அறிந்து இடைவிடாது பரம்பொருளை நுகர்வதற்கு உலக உணர்வுகளை நீக்கிச் சிவஞானத்தைப் பெறுவது. |
(9) | சிவ யோகம் | : | உலகப் பொருள்கள் அனைத்தின் உண்மையை அறிந்து அவைகளைப் பற்றுகின்ற உயிரின் இயல்பையும் அறிந்து உயிருக்கு மலோக உள்ள சிவன் அருளையும் அறிந்து, இன்ப துன்ப நுகர்வுகளுக்குக் காரணம் அப்பரம்பொருளே என்பதும் அறிந்து அப்பரம்பொருளைப் பற்றி நின்று ஒன்றுவது. |
(10) | சிவ போகம் | : | சிவ பரம்பொருளோடு ஒன்றிய பெரியவர்கள் ஊழ்வினையின் காரணத்தால் எத்தகைய குற்றங்களைச் செய்தாலும் அவற்றால் அவர்கள் எவ்வகைத் துன்பத்தையும் அடைய மாட்டார்கள். காரணம் அப்பெரியவர்களாம் அணைந்தோர் தமக்கென ஒருசெயலை உடையவர்கள் அல்லர். இறையுணர்வின் வசமாகி நின்று வாழ்பவர்கள். இறைவனும் அவர்களோடு ஒன்றி அவர்களைத் தன்னோடு பிரிப்பின்றி நிற்குமாறும் செய்கின்றான். இத்தகைய அனுபவத்தைப் பெறுவதே சிவபோகமாகும். இவ்வாறு இந்நூலில் உள்ள 6 பாடல்களும் தசகாரியங்களான தத்துவ விளக்கத்தைத் தருகின்றன. |
சித்தாந்த அட்டகத்தில் நிறைவு நூலாக அமைந்திருப்பது இந்நூல் ஆகும். இந்நூல் அகச்சமயங்கள் பலவற்றின் கொள்கைகளைக் கூறி அவற்றைச் சித்தாந்தப் பார்வையால் மறுக்கிறது. இந்நூல் பாடப்பெற்றதற்கு ஒரு சிறு நிகழ்ச்சியும் கூறப்பெறுகிறது.
சிதம்பரத்தில் நடைபெற்ற ஆனித் திருவிழாவின் ஆறாவது நாள் வெவ்வேறு அகச் சமயங்களைப் பின்பற்றுகின்ற ஆசிரியர் சிலர் தேர்மண்டபத்தின் ஒருபுறம் இருந்தார்கள். மாயாவாதி சமயத்தைச் சார்ந்த ஒருவரும், சைவ சித்தாந்தக் கொள்கையை உடைய மற்றொருவரும் ஒருபுறம் இருந்தார்கள். இந்த நிலையில் முத்திநிலையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு வந்த ஒருவன் அவர்களை நோக்கி, ‘இறைவனின் திருவருள் தன்மை எத்தன்மையதாக இருக்கும்?’ என்று கேட்டான். அங்கிருந்த சமயத்தார் ஒருவருக்கொருவர் தங்கள் சமயக் கொள்கைகளைக் கூறி எதிர் சமயக் கொள்கைகளை மறுத்துக் கொண்டிருந்தார்கள். இறுதியாக அங்கிருந்த சைவ சித்தாந்த வாதியான உமாபதி சிவாச்சாரியார் அங்கிருந்த பிறசமயத்தார் அனைவரையும் மறுத்துத் தம் கருத்தை வலியுறுத்தினார். மேலும் சிவப்பிரகாசத்தைக் கற்று இறைவனின் திருவருளைப் பெறலாம் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற பிற சமயங்களின் கொள்கைகளும் மறுப்புகளும் சைவ சித்தாந்தத்தின் முடிவும் இந்நூலின் பொருளாக அமைந்துள்ளன.
இந்நூலில் மறுக்கப்பட்ட சமயங்கள் மாயாவாதம், ஐக்கியவாதம், பாடாண வாதம், பேத வாதம், சிவசம வாதம், சங்கிராந்த வாதம், ஈசுவர அவிகார வாதம், நிமித்த காரண பரிணாம வாதம், சுத்த சைவ வாதம் ஆகியவையாகும். மேலும், அவற்றின் கொள்கைகளும், அவை பொருந்தாமைக்குரிய செய்திகளும் அமைந்துள்ளன. இந்நூல் 13 அகவற்பாக்களையும், 1 வெண்பாவையும் கொண்டதாகும். சங்கற்பம் என்பதற்குக் கொள்கை என்பது பொருள். நிராகரணம் என்பதற்கு மறுத்துரைத்தல் என்பது பொருள். எனவே பிறசமயக் கொள்கைகளைக் கூறி அவற்றை மறுத்துரைப்பதால் இந்நூல் சங்கற்ப நிராகரணம் என்ற பெயர் பெற்றது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக