ஞாயிறு, 21 ஜூன், 2020

மூன்றாம் தந்திரம் - 19. பரியங்க யோகம்

மூன்றாம் தந்திரம் - 19. பரியங்க யோகம்


பண் :

பாடல் எண் : 1

பூசு வனஎல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய
காசக் குழலி கலவி யொடுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே. 

பொழிப்புரை :

யோகி போகத்தை விளைவிக்கின்ற ஒப்பனையுடன் வருகின்ற தன் மனைவியோடு கூடினானாயினும், அவனது மனம் பிரமந்திரத்திலே நிற்கும் ஆதலின், அவனுக்கு அதனால் போகம் மிகாது; (யோகமே மிகும்.)

குறிப்புரை :

`புலர்த்திய, சாத்திய` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, `காசக்குழலி` என்னும் ஒரு பெயர் கொண்டன. காசம் - மயிர்ச்சாந்து. `கலந்தும்` என உம்மையை மாற்றியுரைக்க. ஊசித் துளை, பிரம ரந்திரம். தூங்குதல், மேலிடல்.
இதனால், பரியங்க யோகம் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

போகத்தை உன்னவே போகாது வாயுவும்
மோகத்து வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலை யாளும்நற் சூதனுந்
தாதிற் குழைந்து தலைக்கண்ட வாறே. 

பொழிப்புரை :

போகத்தில் மனம் சென்றவழிப் பிராணன் சுழு முனை வழியில் செல்லமாட்டாது. காமத்தை விளைக்கின்ற வெண்பாலும் செம்பாலில் வீழ்ந்தொழியும், ஆகவே, துணைவியும், துணைவனும் ஆகிய இருவரும் தங்கள் செம்பால் வெண்பால்களால் மன வலி இழந்து தாழ்தலைப் பின்னர் உணர்ந்து வருந்துவதுதான் போகத்தால் அவர்கள் எய்தும் பயன்.

குறிப்புரை :

`அதனால், போகத்தை மேற்கொள்ளா திருத்தலும், மேற்கொள்ளினும் அதில் அழுந்தாதிருத்தலுமே அறிவுடைமை` என்பது குறிப்பெச்சம். இதனை உணர்த்துதற் பொருட்டே போகத்தின் இயல்பையெல்லாம் விரித்தார் ஆதலின், அது மிகை யாகாமை அறிக. போகத்தில் ஈடுபடினும் அதன் கண் அழுந்தா திருக்கும் நிலை முன்னை மந்திரத்திற் கூறப்பட்டது. சூது - சூதாடு கருவி, சூதன் - அக் கருவியைப் பயன்படுத்துகின்றவன். தலைக்காண்டல் என்பது ஒரு சொல். இதன்கண் ஈரடி எதுகை வந்தது.
இதனால், இல்லறத்துள் நிற்கும் யோகிக்குப் பரியங்கயோகம் இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வான்நீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே.

பொழிப்புரை :

ஒருவர் மற்றொருவர் வரைக்கண் நிற்பவராகிய கணவனும், மனைவியும் அவருள் ஒருவராயினும், இரு வருமாயினும் விரும்புவதாகிய போகத்தின்கண், வல, இட நாசிகளின்வழி ஏறியும், இறங்கியும் சுழன்று வீணாகின்ற சரவோட்டமாகிய தேரினில் ஏறி, அதனையே ஏழாந்தானமாகிய வானத்தில் அமுதமாகிய வெள்ளத்தில் ஓட்டினால், போகமாகிய, பகையை வெல்கின்ற யோகமாகிய படை தனது சதுரங்கம் (நான்கு உறுப்பு - யானை, தேர், குதிரை, காலாள்) ஆகிய பிரத்தியாகாரம் முதலியவை ஒருபோதும் தளர்ச்சியடையா திருக்கும்.

குறிப்புரை :

``இருபால்`` எனவும், ``வெளிநிற்கும்`` எனவும் கூறியதனால் அவை பிராணாயாமத்தைக் குறியாது சரவோட் டத்தையே குறித்தல் தெளிவு. பிராணாயாமத்தால் ஏழாந் தானத்தில் செல்வோர் வானவூர்தியின்வழி வானத்திற் செல்பவர். `அவ்வாறன்றிச் சரவோட்டத்தில் நின்றே அதனை அடைதல், தேரில் நின்றே வானத்திற் செல்லுதல் போல்வது` என அதன் அருமை கூறியவாறு. `தேர் வானத் திற் செல்லுதலேயன்றி, அவ்விடத்து நீரிலும் செல்ல` என மேலும் ஓர் வியப்புத் தோன்றக் கூறினார். `தண்டு, அங்கம்` என்பன சிலேடை யாய், `சுழுமுனை, படை` எனவும், `படையின் உறுப்பு, யோகத்தின் உறுப்பு` எனவும் இவ்விரண்டு பொருள் பயந்தன. `சுழுமுனை` என்றது அதன்வழிச் செய்யும் யோகத்தினை. போகமும், யோகமும் தம்முள் மாறாவன ஆகலின், அவற்றை முறையே பகையாவும், படையாகவும் உருவகம் செய்தார். ``தண்டு`` என்றது குறிப்புருவகம்.
இதனால், பரியங்க யோகத்தின் அருமைப்பாடும் அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

அங்கப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம்
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தன்னைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே. 

பொழிப்புரை :

கணவனும், மனைவியும் மெய்யுறுகின்ற செய் கையும் யோகத்தால் விளைகின்ற மெய்யுணர்வை மழுங்கச் செய்வதே யாம். அச்செய்கையில் வெண்பால் வெளிப்படுகின்ற இன்ப நிலைக் கண் யோகி அது வெளிப்பட்டுக் கெடாதவாறு காத்துக் கொண்ட அச்செயலில் நின்று தன்னைத் தன் மனைவிக்கு இன்பந்தருபவனாகக் கொடுத்தால், தனது யோகம் கெடாமையே யன்றி, யோகிகட்குத் தலைவனாயும் விளங்குவான்,

குறிப்புரை :

யோகியின் உணர்வைத் தாக்குவனவாகிய பசி, பிணி முதலியவற்றுள் இணை விழைச்சும் ஒன்று என்பார். `அங்கப் புணர்ச் சியும்` என உம்மை கொடுத்து ஓதினார். `மங்கு` என்னும் முதனிலைத் தொழிற்பெயர், மங்குதற்கு ஏதுவாவதன் மேல் நின்றது. `புணர்ச்சியுள்` எனப்பாடம் ஓதி, `தத்துவம் மங்குதலையுடைய தாம்` என உரைத் தலும் ஆம். `அதில்` என்பது `அத்தில்` என விரித்தலாயிற்று. `தம்மை` என்பது பாடம் அன்று. மேலெல்லாம் உணர்வு மாத்திரத்தால் யோகமாமாறு கூறி, இதனுள் உடலாலும் யோகமாமாறு கூறினார். இதனை, வேறோர் இயைபு பற்றி, `விந்துசயம்` எனப் பின்னர் விரிப்பார், (தி.10 ஏழாந் தந்திரம்) விந்து சயம் பெறுதலாவது, விந்து கீழே வீழ்ந்து கெடாது, சுழுமுனைவழி மேலேசென்று ஒளியாகப் பெறுதல்.
இதனால், விந்து சய பரியங்கயோகம் சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது. இதனானே, பரியங்க யோகத்து `விந்து சயம்` என்பது ஒன்று உண்டு என்பதும் பெறப்பட்டது,

பண் :

பாடல் எண் : 5

தலைவனு மாயிடுந் தன்வழி ஞானம்
தலைவனு மாயிடுந் தன்வழி போகம்
தலைவனு மாயிடுந் தன்வழி உள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே. 

பொழிப்புரை :

பரியங்க யோகத்தால் உணர்வும், விந்துவும், அந்தக் கரணமும், ஐம்பொறியும் தன்வழிப்பட்டு நிற்க, யோகி அவை அனைத்தையும் தன் விருப்பப்படி ஆளும் தலைவன் ஆவான்.

குறிப்புரை :

``ஆயிடும்`` நான்கும் முற்றுக்கள். உம்மைகள், ஞானம் முதலியவற்றிற்குத் தலைவனாதலைத் தழுவும் எச்ச உம்மை<கள், அடி தோறும் ஈற்றில் ஆ உருபு தொகுத்தலாயிற்று ``தன்வழி`` நான்கும், `குறும்பிற் கொற்றன், பறம்பிற் பாரி` - என்பனபோல நின்றன. இரண்டாம் அடியில் ``போகம்`` என்பது வடசொல்லாதலின், நிலை மொழியோடு ஒற்று மிகாது புணர்ந்தது. போகம், காரியவாகுபெயர். உள் நிற்பனவற்றை ``உள்`` என்றார். `உள்ளம்` என்பது குறைந்தது எனினுமாம். `தீயதின் நீங்கி நல்லதின் நிற்றல் உணர்வு` எனவும், `முக்குண வடிவாய் நிற்பன அந்தக்கரணம்`` எனவும், `` ஐம்புல வடிவாய் நின்பன ஐம்பொறிகள்`` எனவும், உணர்க. ``உள்ளே`` என்னும் ஏகாரமும், ``வாடா வள்ளியங் காடிறந் தோரே`` (குறுந்தொகை, 216) என்பதிற் போலச் செய்யுள் இடைக்கண் வந்த அசைநிலை.
இதனால், பரியங்க யோகி போகத்தால் தனது நிலையி னின்றும் தாழாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகைப் பரியங்க யோகமே. 

பொழிப்புரை :

யோகி தன் மனைவியுடன் ஐந்து நாழிகை கலவியில் ஈடுபட்ட பின், மனைவி அவன் பக்கலில் அமைதியாய் உறங்குதல் ஒன்றே பரியங்க யோகத்தின் பயன். அதனால், ``நெஞ்சு நிறைந்தது வாய்கொளாது`` என்னும் இன்பமுறை, ஐந்து நாழிகையை எல்லை யாக உடைய பரியங்கயோகத்தின் கண்ணே மிகப் பொருந்துவதாம்.

குறிப்புரை :

``அஞ்சு கடிகைமேல்`` எனவும், ``பஞ்ச கடிகை`` எனவும் போந்தவற்றால் பரியங்க யோகத்திற்குக் கொள்ளத்தக்க காலம் வரையறுக்கப்பட்டது. `அத் துணைவி துணைவன் பால் துஞ்சுவது ஒன்று` என மாற்றியுரைக்க. ``ஒன்று`` என்பது, ஒன்றாம் பயனைக் குறித்தது. `ஒன்றே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப் பட்டது. அதனை விரிக்கவே, `ஒன்றே பயனாம்` என்பது பொருளாம். `இஃது ஒன்றே பயன்` என்றதனால், `துறவு பூண மாட்டாது இல்லறத்தில் நிற்கும் யோகிக்கு இப்பரியங்க யோகம் ஆண் கடன் இறுத்தற் பொருட்டு உடன்படப்பட்டது` என்பது போந்தது. இனி, அவ் ஆண் கடன் இறுத்தலும், விலக்கிய காலத்துக் கூடாமை அறிந்து கொள்க. `விலக்கப்பட்ட காலங்கள் இவை` என்பதை,
``மிகத் தெளிந்தார் ஓதி விதிநிசித்தம் எல்லாம்
பகற்பொழுது பாரார் பகம்``
-சைவ சமயநெறி, பொது இலக்கணம் 224
``அட்டமி சட்டி பதினான்கைம் மூன்றினும்
தொட்டிடேல் இல்லவள்வேய்த் தோள்``
-சைவ சமயநெறி, பொது இலக்கணம் 235
``சென்மமொரு மூன்றும் திருவா திரைஓணம்
என்னுமிவை தம்மினுந்தீண் டேல்``
-சைவ சமயநெறி, பொது இலக்கணம் 226
என்பன முதலியவற்றான் அறிக. சென்மம் மூன்றாவன:- சென்மம், அனுசென்மம், திரிசென்மம். இவை தான் பிறந்த நட்சத்திரமும், அதனைச் சேர்ந்து எண்ண ஒன்று பத்தாவதும், அவ்வாறே அதற்குப் பத்தாவதுமான நட்சத்திரங்களுமாகும்.
``பிரமசரியம், கிருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம்`` என உலக நூலாகிய வைதிக நூல்கள் பொதுவாகக் கூறும் நால் வகை நிலைகளையே மெய்ந்நூல்களாகிய சைவ நூல்கள், `சரியை கிரியை, யோகம், ஞானம்` என ஓராற்றால் சிறப்பாகக் கூறும். அதனால், யோகி இல்லறத்தவனாயும், ஞானி துறவறத்தவனாயும் நிற்றலே பெரும் பான்மையாதலின், யோகியைப் பற்றிக் கூறும் இப்பகுதியுள் இப் பரியங்க யோகம் கூறப்படுகின்றது. அகத்தியர், கௌதமர் முதலியோர் போல ஞானியராயும் இல்லறத்தில் நிற்றல் சிறுபான்மை, அவர்க்கும் இப்பரியங்கயோகம் உரித்து என்க. ``யோகம்`` என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. நெஞ்சு நிறைந்தது. வாய்கொளாமையாவது, உள்ளத்தில் நிறைந்த இன்பம் வாயால் சொல்ல வாராமை
இதனால், பரியங்க யோகத்திற்கு நாழிகை வரையறை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் யோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவர்க்கொண் ணாதே. 

பொழிப்புரை :

பரியங்க யோகத்தில் ஐந்து நாழிகையளவு நிலை யின் திரியாது நிற்பதாகிய இவ் அரிய செயலைப் பொருந்தினவர்க் கல்லது வேறொருவனுக்கும் இணை விழைச்சு கொள்ளத் தகாததே.

குறிப்புரை :

பின் வந்த ``யோகம்`` ``செயல்`` என்னும் அளவாய் நின்றது. சரி வளை, இருபெய ரொட்டு. ``உருவி`` என்பதனை, `உருவ` எனத் திரிக்க. ``வேறு ஒருவற்கும்`` என ஒரு சொல் வருவித்தும், உம்மை விரித்தும் உரைக்கப்பட்டது. `ஒருவன், யோகியருள் ஒருவன்`` என்பது அதிகாரத்தால் விளங்கிற்று. ஒண்ணாததாதல், தவநெறி ஒழியப் பவநெறியாதல் பற்றி.
இதனால், இல்லறத் தவருள் யோகியர் பரியங்க யோகத்தைக் கொள்ளாதவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆரென்னில்
விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மென்றெண்ணி இருந்தார் இருந்ததே. 

பொழிப்புரை :

செய்தற்கரிய இப்பரியங்க யோகத்தைப் பொருந் தினவர் எத்தகைய பெருமையுடையவர் என்றால் ``நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றவ `` னாயும் (தி.6 ப.50 பா.3) ``மங்கை யோடிருந்தே யோகு செய்பவ `` னாயும் (தி.9 ப.13 பா.11) உள்ள சிவபெருமானே எனத் தக்க பெருமை யுடையவர். ஏனெனில், தாம் பெற்ற அரிய அமுதத்தை அதனை நுகர்தற்குரிய ஐந்து நாழிகை யளவிலும் ``உளத்தால் நுகரேம்`` என உறுதிபூண்டு, முன்பு இருந்த ஏழாந் தானத்திலே இருப்பர் ஆதலால்.

குறிப்புரை :

பண்ணுதல் - தேடிக்கொள்ளுதல், இங்குத் துணைவியை மணந்துகொள்ளுதல். ``ஆரமுது`` என்றது வாயூறலை. என்னை? இன்பத்தை விரும்புவார்க்கு அது பாலொடு தேன் கலந்தாற் போல (குறள், 1121) இனிதாகலின். `கடிகையினும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. ``இருந்தது`` என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. அதன்பின், ``ஆதலால்`` என்னும் சொல் லெச்சம் வருவிக்க. பின்னிரண்டு அடிகளால் பரியங்க யோகத் திருத்தலின் அருமை கூறியவாறு.
இதனால், பரியங்க யோகத்தில் நிற்பாரது பெருமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும்
வாய்ந்த குழலிக்கும் மன்னற்கும் ஆனந்தம்
ஆய்ந்த குழலியோ டைந்தும் மலர்ந்திடச்
சோர்ந்தனன் சித்தமும் சோர்வில்லை வெள்ளிக்கே. 

பொழிப்புரை :

பெண்மகளுக்கும், ஆண்மகனுக்கும் வேட்கை மிக்கிருக்கின்ற அகவையளவு முறையே இருபது ஆண்டும், முப்பது ஆண்டுமாம். முப்பது ஆண்டிற்குமேல் ஆண்மகன் ஐம்புலன்களையும் ஒருங்கு நுகரும் வேட்கை மிகுவனாயின், விந்து சயம் பெற்று நிற்கற்பாலன்.

குறிப்புரை :

`இதுவும் யோகியைக் குறித்ததே` என்பதை மறவற்க. ``சோர்ந்தனன்`` என்பதன் பின், ``ஆயினும்`` என்பது எஞ்சி நின்றது. ``சித்தமும்`` என்ற உம்மை, சிறப்பு. ``சோர்வில்லையாகுக`` என ஆணையாக ஓதற்பாலதனை, ``இல்லை`` என இயல்பாக வைத்து ஓதினார்.
``பன்னீராட்டைப் பிராயமும், பதினாறாட்டைப் பிராயமும் முறையே பெண்டிர்க்குப் பெண்மையும், ஆடவர்க்கு ஆண்மையும் உளதாம் காலம்`` (இறையனார் அகப்பொருள் உரை. தொல்காப்பிய உரைகள்) என்பர் ஆதலின், ``அதுமுதல் எட்டாண்டுக் காலமே பெண்டிர்க்கு வேட்கை மிக்கிருக்கும் காலம்`` என்று கூறியவர், ``ஆடவர்க்குப் பதினான்கு ஆண்டுக் காலம் வேட்கை மிக்கிருக்கும்`` என்று கூறியதனால், ஆடவர் வழிமுறைக் கிழத்தியரோடும் வேட்கை மிக்கிருத்தல் பெறப்பட்டது.
இதனால், பரியங்க யோகி விந்து சயம் பெற முயலுதற்குக் காலம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

வெள்ளி யுருகிப்பின் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
அள்ளிஉண் ணாவில் அடக்கிவைத் தாரே. 

பொழிப்புரை :

பரியங்க யோகம் செய்பவர்க்கு வெண்பால் உருகிச் செம்பாலில் வீழாதபடி, அவரது உள்ளத்துள்ளே ஒளிந்து நிற்கும் சிவபெருமான், எல்லாவற்றிற்கும் சாட்சியாய் நிற்கும் தனது திருவருளைக் கொண்டு தடுப்பான். அதுவன்றி, அந்த யோகியர் தமது மூலாக்கினி மூண்டெரியச் சுழுமுனை வழியே சென்று அள்ளி உண்ணும்படி அமுதத்தை அவர் நாவடியில், பொருந்த வைத்தும் உள்ளான்.

குறிப்புரை :

`குழல்` என்பது `வெளிப்பொருளில் நெருப்பூதும் குழலைக் குறிக்கும். ``உண்ண`` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல் பெற்றது. உண்ணுதற்கும், அடக்குதற்கும் செயப்படுபொருள் மேலெல் லாம் விளங்கிக் கிடந்தது. உண்ண அமுதத்தை வைத்தமை கூறியது, பின் யோகம் முதிர்ந்து பயன் தருமாறு தோன்றுதற்பொருட்டு.
இதனால், ``விந்து சயமும் திருவருளாற் பெறற்பாலது`` என்பதும், அச் சயம் யோகம் முற்றுதற்குத் துணையாதலும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 11

வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன்
சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே. 

பொழிப்புரை :

இன்பம் தூய்த்தற்குச் சிவனால் அமைக்கப்பட்ட துணைவன், துணைவி என்னும் இருவரும் அவ்வின்பத்தில் திளைப் பினும், உள்ளம் திரியாது நின்றே செய்கின்ற கலவித் தொழிலால் யோகி, பத்துத் திக்கினர்க்கும், பதினெண்கணத்தவர்க்கும் ஞான சூரியனாய் நிற்கும் திறப்பாடுடையவனாவான்.

குறிப்புரை :

``ஆனந்தம்`` என்றது, அதற்கு ஏதுவாய செயலை, ``ஆனந்தத்தால்`` என உருபு விரித்து, ``வெங்கதிரோன் ஆவன்`` என முடிக்க. ``வித்தகனாய் நிற்கும் வெங்கதிரோனே`` என்றாராயினும், ``வெங்கதிரோனாம் வித்தகனாம்`` என்றலே கருத்து. நிற்றற்கு, ``யோகி`` என்னும் எழுவாய் வருவிக்க.
இதனால், பரியங்க யோகி கலவிக் காலத்திலும் உணர்வு திரியாது நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

வெங்கதி ருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தம்
தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனம்
திங்களிற் செவ்வாய் புதைத்திருந் தாரே. 

பொழிப்புரை :

அறிதுயிலுக்கும், அறியாத் துயிலுக்கும் இடையே நிற்கின்ற துணைவியைத் துணைவன் புல்லுமிடத்து இருவரும் அவ்வின்பம் முற்றுங்காறும் திங்கள் போன்ற முகத்தில் உள்ள சிவந்த வாயைப் பொத்தியேயிருந்தாராயினும், துணைவனுக்கு வேறோர் இன்பமும் அவ்விடத்து உளது.

குறிப்புரை :

சூரியன் ஒளிப்பொருளாகலின் ஞானத்திற்கும், சனி`மைம்மீன்` (புறம். 117) ஆகலின், அஃது அஞ்ஞானத்திற்கும் உவமை யாயின. அறிதுயில், யோகம். அறியாத் துயில், உறக்கம், புணர்ச்சி இவ் விரண்டிற்கும் இடைநிகழ்வதேயாகலின், அதற்கு உரியவளாகிய துணைவியை, அவ்விடத்து நிற்பவளாகக் கூறினார். ``ஓர் ஆனந்தம்`` என்றது, `வேறோர் ஆனந்தம்` என்னும் குறிப்பினது. அவ்வானந்தம் சிவானந்தமாதல் வெளிப்படை. `தங்களில் புதைத்திருந்தார்` என இயையும். `பொன், (வியாழன்) வெள்ளி, சனி, வெங்கதிர், திங்கள், செவ்வாய்` என்பன சில சொல் நயங்கள். `பொன், வெள்ளி` என்ப வற்றின் உட்பொருள் மேல் (818) உரைக்கப்பட்டன. ``புதைத்தல்`` என்பது இரட்டுற மொழிதலாய், செய்தல், செய்யப்படுதல் என்னும் இரு பொருளையும் தந்தது. ``திங்களிற் செவ்வாய் புதைத்திருந்தாரே`` என்பது, ``வளி இடை போழப்படாதவாறு முயங்கினாரே`` (குறள், 1108) எனப் பொருள் தந்தது. ஏகாரம், தேற்றம். இதன்பின், ``ஆயினும்`` என்னும் சொல்லெச்சம் விரித்து, மூன்றாம் அடி முதலாகத் தொடங்கிப் பொருள் உரைக்க.
இதனால், பரியங்க யோகி சிற்றின்பத்திலும் பேரின்பத்தினை இழவாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
கருத்தழ காலே கலந்தங் கிருக்கில்
வருத்தமு மில்லையாம் மங்கை பங்கற்கும்
துருத்தியுள் வெள்ளியுஞ் சோரா தெழுமே. 

பொழிப்புரை :

இன்பத்தில் வேட்கை கொண்ட மனம் கலவியால் நிறைவு பெற்றபின், மேலும் அவ்வேட்கையை உற்றுக் குறைபடாத வாறு திருத்துகின்ற `சிவன் சத்தி` என்னும் இருவரிடத்தும் தனது மனம் பொலிவோடு பொருந்தி அவ்விடத்தே நிற்கப்பெற்றால் துணைவியை யுடைய யோகிக்கும் அவளையுடைமையால் உலகியல் துன்பமும் உண்டாகாது. விந்துவும், கீழ் விழுவதாகாது, மேல் எழுவது (ஊர்த்துவ ரேதசு) ஆகும்.

குறிப்புரை :

``திருத்தி`` என்பது, ``நிறைவு`` என்னும் பொருட்டாய வடமொழிப் பெயர்ச்சொல். புதன் - புத்தி; மனம். ``யோகி, தன்மனத்தை நல்வழிப்படுத்துவர் சிவனும், சத்தியுமே என உணரின், அவன் மனம் அவரிடத்தே பதிந்து நிற்கும்`` என்றற்கு, ``மனத்தைத் திருத்தல் செய்வார்க்கு`` என உடம்பொடு புணர்த்து ஓதினார்.
``திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை
இடங்கொள் கயிலாயா`` -தி.7 ப. 47 பா. 8
``நெஞ்சினைத் தூய்மை செய்து
நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ
வானவர் தலைவ னேநீ`` -தி.4 ப. 23 பா.9
என்பவற்றால் இறைவன் தன் அடியவர் மனத்தைத் திருத்துபவனாதல் அறிக. ``செய்வார்க்கு`` என ஒருமையாக ஓதாது, ``செய்வார்க்கு`` எனச் சத்தியை வேறாக வைத்து ஓதினார், இங்குக் கூறப்படுவன திரோதான சத்தியின் செயலாதல் பற்றி இனி, ஒருமையாகவே பாடம் ஓதுதலும் ஆம். ``செய்வார்க்கு`` என்றது உருபு மயக்கம். இவ்வா றெல்லாம் இன்றி, ``செய்வார்`` என்பதனை யோகியர்க்கு ஆக்கி, ``அங்கு`` என்பதனைப் பண்டறி சுட்டாக வைத்து, ``இருக்கில்`` என்பதற்கு, `இருக்கும் நிலை வாய்க்கப் பெற்றால்` என உரைத்தலும் ஆம். இப்பொருட்கு, `மங்கை பங்கர்க்கும்` என்பது பாடமாதல் வேண்டும். பிறவாறு கூறாது, யோகியை `மங்கை பங்கன்` என்றார், `ஊர்த்துவ ரேதசுடையானாய்ச் சிவனோடு ஒப்பன்` என்றற்கு. ``பங்கன்`` என்பதில் உள்ள பங்கு, வாழ்க்கைக் கண்ணது. இவ்வா றாயினும், `முற்றத் துறந்த யோகி சிறப்புடையன்` என்றற்கு, `மங்கை பங்கற்கும்` என இழிவு சிறப்பும்மை கொடுத்தார். ஏனை இரண்டு உம்மைகளும் எச்சங்கள். துருத்தி - உடம்பு.
இதனால், பரியங்க யோகி உலகியலால் தாக்குண்ணாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றால்
மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே. 

பொழிப்புரை :

இம் மந்திரம் ஒட்டணி. ஆகவே, இதன் பொருள் வருமாறு:-
மூலாக்கினியைத் தலையளவும் கொண்டு செலுத்தினால், அங்குள்ள அறிவாற்றல் சிவனை அறிந்து அவனிடத்துத் தோயும் அன்பாக மாறுவது உண்மை. இவ்வாற்றால் ஏழாந்தானத்திற் சென்று சத்தியை உணர்ந்தவர்கள். பின் உலகியலில் கிடந்து தடுமாறுதல் இல்லை. அதற்குமேல் நிராதாரத்திற் சென்றவர்கள் சுவாதிட்டானத்தில் நிகழும் காமத்தில் வீழ்தல் இல்லை.

குறிப்புரை :

`மெழுகு எய்திடும்` என இயையும். உருகும் பரிசு - உருகுதலாகிய தன்மை. உழுதல் காலாலும் கையாலும் வழியைத் தடவுதல். வெளி - வான். இது வானில் இயங்கும் முறையைக் குறித்தது. `இம்முறையை உணர்ந்தோர் நிலத்தில் வீழ்ந்து நடந்து இளைத்தல் இல்லை` என்க. இம்மந்திரத்துள் அடியோடு அடிக் கூட்டத்து நிரையொன் றாசிரியத்தளை சிறுபான்மை மயங்கிற்று.
இதனால், ``வருத்தமும் இல்லை``, ``வெள்ளியும் சோராது எழும்`` என மேற் கூறப்பட்டவை உவம வாயிலாகத் தெளிவிக்கப் பட்டன.

பண் :

பாடல் எண் : 15

வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறிவின் உளிமுறி யாமே
தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
வெளியை அறிந்தனன் மேலறி யேனே. 

பொழிப்புரை :

யான் என் ஆசிரியர் நந்தி பெருமானது அருளால் வான மண்டலமாகிய நிராதாரத்தையும், அதில் விளங்குகின்ற அருளொளியையும், அவ்வொளியால் தெளியப்படுகின்ற மெய்ப் பொருளையும் உணர்ந்து, அவ்வுணர்வு கெடாதிருக்க விந்து சயம் பெறும் முறையையும் உணர்ந்தேன். யோகத்தில் இதற்குமேல் அறியத் தக்கது ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

குறிப்புரை :

``அறிந்து`` என்பதனை, ``ஒளியை`` என்பதற்கும் கூட்டுக. ``அறிவின் உளி`` என்பதில் இன் வேண்டா வழிச் சாரியை. ``உளி`` என்றது, ``கருவி`` என்றவாறு. இஃது உருவக அணி. ``உளி - கூர்மை`` எனின், ``அறிவின் உளி`` என்பது ஆறாவதன் தொகையாம். ``அறியின்`` என்பது பாடம் அன்று, ``அறிவின் உளி முறியாமே`` என்ற தனை, நான்காமடியின் முன்னே கூட்டி உரைக்க. நான்காம் அடியில், ``வெளி`` என்பது, ``வெள்ளி`` என்பதன் இடைக்குறை அஃது அதனை வசப்படுத்தும் முறையைக் குறித்தது. விந்து சயம் துறவிகளும் கொள் ளத் தக்கதாகலின், நாயனார் அஃது உடையராய் இருந்தார் என்க.
இதனால், விந்து சயம் அநுபவ நிகழ்ச்சியால் கூறும் முகத்தால், பரியங்க யோகி அஃது உடையனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

மேலாந் தலத்தில் விரிந்தவர் ஆரென்னில்
மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலாம் நிலத்தின் நடுவான அப்பொருள்
மேலா வுரைத்தனர் மின்னிடை யாளுக்கே.

பொழிப்புரை :

``இல்லறத்தவருள் நிராதார யோகத்தில் நின்று அதனால் வியாபக உணர்வைப் பெற்றிருந்தோர் எவரேனும் உளரோ`` எனின், அயன், மால், நந்தி கணங்கள், ஆகிய யாவரும் அத்தகை யோரே. இவரெல்லாம் துரிய மூர்த்தியாகிய சிவனை உணர்ந்து, அவனையே பரம்பொருளாகத் தம் துணைவியருக்கு உணர்த்தினர்.

குறிப்புரை :

எனவே, ``அத் துணைவியரும் தம் துணைவர் செயலை உவந்திருந்தினர்`` என்பது போந்தது. ``இல்லறத்தவருள்` என்பது அதிகாரத்தால் வந்தது. ``ஆர்`` என்பதன்பின், ``உளர்`` என்பது எஞ்சி நின்றது. `நந்திகள்` என்னாது, ``நந்தி`` என்றது பன்மை ஒருமை மயக்கம். `மாலும் திசைமுகனும் மாநந்தியாயவரும் ஆவர்`` என்க. துரியம், இங்கு, யோக துரியம். சாக்கிரம் முதலிய நான்கும் யோகத்தில் முறையே இருதயம், கண்டம், உச்சி நிராதாரம் என்பவை இடமாக நிகழும். ``மின்னிடையாளுக்கு`` என்றதும் பன்மை ஒருமை மயக்கம். `மின்னிடையாருக்கு`` என்றே பாடம் ஓதுதலும் ஆம்.
இதனால், உயர்நிலை வானவர் பரியங்க யோகத்தால் அந்நிலை இழவாது நிற்றல் கூறும் முகத்தால், அவ்யோகப் பயன் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

மின்னிடை யாளும்மின் னாளனுங் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லாரேல்
மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே. 

பொழிப்புரை :

துணைவனும், துணைவியும் தாம் கூடுகின்ற காலத்துத் தங்கள் உள்ளத்தை ஆஞ்ஞை முதலிய மேலிடங்களில் பொருந்த வைத்து, அங்கு விளங்குகின்ற சிவனுடன் தங்களை ஒன்று படுத்த வல்லவராயின், இவ்வுலகத்திலும் பல்லூழி காலம் வாழ்தல் கூடும்.

குறிப்புரை :

``மின்னாளன்`` என்பதில் மின் - பெண்டு. பொன் இடை வட்டம், பொன்னை உள்ளிட்ட இடம்; பொன்னம் பலத்தை, ``பொன்`` என்றார், அதனை உள்ளிட்ட இடம். ஆஞ்ஞை முதலாக மேலே உள்ளவை. புகப் பெய்தலுக்கு, ``உள்ளம்`` என்னும் செயப்படு பொருள் வருவிக்க. ``தன்னொடு`` என்பதில் தான், சிவன். ``தன்னை`` என்பது `மின்னிடையாள், மின்னாளன்`` என்பவற்றோடு தனித்தனி சென்று இயையும். விண்ணிடைப் பல்லூழி வாழ்தல் இயல்பாகவே பெறப்பட்டுக் கிடத்தலின் மண்ணிடைப் பல்லூழி வாழ்தலும்`` என் னும் உம்மை இறந்தது தழுவிற்று. இதன்கண் இனவெதுகை வந்தது.
இம்மந்திரத்தினை நாயனார், துணைவி, துணைவன் இருவர்க்கும் ஒப்பக் கூறியதனால், பரியங்க யோகம் பெண்டிர்க்கும் உரித்தாதல் பெறப்பட்டது. இதனால், சிவநெறி, மெய்ந்நெறியை இருபாலார்க்கும் ஒப்ப உரித்தாகக் கூறுதல் அறியப்படும். காரைக்கால் அம்மையார் தாம் கணவனோடு வாழ்ந்த காலத்தில் தம் உடம்பை அவனுக்காகவே தசைப் பொதியாகச் சுமந்து நின்றமை தி.12 திருத் தொண்டர் புராணத்தால் அறியப்படுதலின், அக்காலத்து அவர் பரியங்க யோகம் உடையராய் இருந்தமை உய்த்துணர்ந்து கொள்ளப் படும்.
இதனால், பரியங்க யோகம் காயசித்தியையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

வாங்க இறுதலை வாங்கலில் வாங்கியே
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளர் தாம்
ஓங்கிய தம்மை உதம்பண்ணி னாரே. 

பொழிப்புரை :

துணைவி வாங்கிக் கொள்ளத் துணைவனிட மிருந்து நீங்குவதாகிய விந்துவை அங்ஙனம் நீங்காமல் உள்வாங்கிக் கொள்ளும் முறையில் வாங்கி, பின் அஃது உடம்பினுள் ஆற்றலாய் மிகுமாறு உறுதிப்படுத்திக் கொள்ளும் வழியை அறிகின்றவர் ஒருவரும் இல்லை. (`அரியர்` - என்றபடி.) இனி, அவ்வழியை அறிந்தவர் யோகத்தில் மிக்கு விளங்கும் தம்மைப் போகத்திற்கும் தகுதியுடையவராகச் செய்து கொண்டவராவர்.

குறிப்புரை :

முதற்கண் நின்ற வாங்குதலுக்கு, `துணைவி` என்னும் எழுவாய் வருவிக்க. இறுதல் - அழிதல்; அஃது இங்கு, நீங்குதலைக் குறித்தது. ``வாங்கல்`` என்பது அதற்குரிய முறையை உணர்த்திற்று. முதற் சீரினையும் ``வாங்கல்`` என்றே பாடம் ஓதின், ``வாங்கலால் `` என உருபு விரிக்க. ``வலித்தல் - திட்பம் செய்தல். ``யுக்தம்`` என்னும் ஆரியச் சொல்லின் திரிபாகிய ``உத்தம்`` என்பது இடைக் குறைந்து நின்றது. இது வருகின்ற திருமந்திரத்திற்கும் ஆம். ``போகத்திற்கு`` என்பது அதிகாரத்தால் வந்தது. உத்தராவாரை. ``உத்தம்`` என்றது. ஆகுபெயர். ``போகத்திற்குத் தகுதி`` என்றது, அதனால், ஆற்றலும், மனப் பண்பும் கெடாமையை. மேலேயும், (பா.815) அரிய இவ்யோகம் அடைந்தவர்க்கல்லது ... ... ... ஒருவற்கு ஓண்ணாதே`` எனக் கூறினார். இம்மந்திரம் பலவிடத்துப் பாடம் திரிந்துள்ளது.
இதனால், பரியங்க யோகத்துள் விந்து சயத்துடன் நிற்றலின் அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டால்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்கடிந் தாளே. 

பொழிப்புரை :

போகத்தை நுகர்தற்குத் தகுதியான வழியை அறிந்து அவ்வெள்ளத்தில் மூழ்கினால், அவ்வழி உம்மால் நன்கு பயிலப்பட்டு அந்நிலையிற்றானே நரை வாராதொழியும். எக் காலத்தும் உமது நன்மையையே நினைத்திருப்பவளாகிய சத்தியும், உமது பக்குவ காலத்தை அறிந்து உங்கள் உணர்வில் உலகியலைப் போக்கி யருள்வாள்.

குறிப்புரை :

``உதம்`` (உத்தம் என்றது, அதற்குரிய வழியை. கதம் - அடையப்பட்டது. அது, முதற்கண் கூறிய வழியேயாம். அறிந்து - அறியப்பட்டு. இது, காரணப் பொருட்டாய்ப் பின் வரும் கபாலம் கறுத்தற்கு ஏதுவாதலை உணர்த்திற்று. கபாலம், ஆகுபெயர். பார் - உலகம், என்றது உலகியலை. இறுதிக்கண் இங்ஙனம் பொதுப் படக் கூறவே, உலகியலுள் தலையாயதான காம இன்பம் பற்றிப் ``பரியங்க யோகம்`` எனக் கூறப்பட்டதாயினும், அந்நிலை யோகியர்க்குப் பிற உலகியலிலும் உளதாதல் குறிக்கப்பட்டதாம்.
இதனால், பரியங்க யோகியர்க்கு நல்வாழ்வும், வீடு பேறும் கேடுறாமை கூறப்பட்டது. ``இவை அனைத்திற்கும் திருவருளே காரணம்`` என அறிவுறுத்தப்பட்டவாற்றைக் கடைப்பிடிக்க.

பண் :

பாடல் எண் : 20

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே. 

பொழிப்புரை :

இது பிசிச் செய்யுள் ஆதலின், இதனை விடுத்துக் காணுமாறு:- பங்கயம் - தாமரைக் கொடி. ``இது, மண்ணும், தண்ணீரும் இல்லாமலே முளைத்து வளர்ந்தது`` என்றதனால், சுழுமுனைத் தண்டைக் குறித்தது. ``அக்கொடிக்குச் சல்லிவேர், ஆணிவேர் முதலியன இல்லாமலே பூப் பூத்தது`` என்றதனால், அஃது அத்தண்டு ஆதார பங்கயங்களை உடைத்தாதலைக் குறித்தது. தார் - இழை போன்றவை. ``ஊர்`` என்றது ஊரின்கண் வாழ்வாரை. ``அவர் (ஏற்றுவார்) ஒருவரும் இல்லாமலே காணப்படுகின்ற விளக்கு ஒன்று உண்டு`` என்றதனால், அஃது, அவ்வாதார நிராதாரங்களில் ஏற்ற பெற்றியால் விளங்கும் அருளுருவத்தைக் குறித்தது. பூ - நிலம்; உலகம் ``காட்சிக்கு வாராது, ஆசிரியர் தம் அருள் மொழிக் கேள்வி யால் அறியப்படுகின்ற உலகம்`` என்றதனால், அஃது அண்டத்தைப் போலவே பிண்டத்திற்குக் கொள்ளப்படும் உலகங்களைக் குறித்தது. கீழ்மேல் இல்லை என்றதனால் அவை பாவனைப் பொருளாதல் குறிக்கப்பட்டது. ``பூவிற்கு` என்னும் நான்கன் உருபு தொகுத்தல் ஆயிற்று.

குறிப்புரை :

``யோக நெறியில் உள்ள பொருள்கள் இத்துணை வியப்புடையன`` என்றவாறு. இதனை இவ்விடத்திற் கூறினார். ``மான் தோல், புலித்தோல, தருப்பை முதலிய ஆசனங்களின் மேல் இருத்தலும் காடு, மலை, முழை முதலிய இடங்களில் தனித்திருத்தலும் போல்வன இல்லாமல், கட்டிலிற் பஞ்சணையின் மேல் துணைவியுடன் கிடந்தும் முனிவராய் நிற்கும் வியத்தகு நிலையும் யோகத்தால் கூடும் என்பது தோன்றுதற்கு.
இதனால், ``பரியங்க யோகம் வியப்புடையதொன்று`` என்பது கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...