ஞாயிறு, 21 ஜூன், 2020

மூன்றாம் தந்திரம் - 18. கேசரி யோகம்

மூன்றாம் தந்திரம் - 18. கேசரி யோகம்


பண் :

பாடல் எண் : 1

கட்டக் கழன்றுகீழ் நான்றுவீ ழாமலே
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டிப்பின் மேற்பையைத் தாட்கோத்து நட்ட மிருக்க நமனில்லை தானே.

பொழிப்புரை :

இம் மந்திரத்தின் பொருள், மேல் ஆதனம் கூறிய விடத்துச் சிங்காதனம் கூறிய மந்திரத்தின் பொருளே மேலும் சிறிது உறுதிப்படக் கூறுதலாய் இருத்தல் கண்டுகொள்க. `கேசரி` என்பது சிங்கத்தின் மறுபெயராதல் வெளிப்படை.

குறிப்புரை :

``கட்டக் ... ... ... ... கட்டி`` என்பது, `கட்டவும் நில்லாது கழன்று கீழே நான்று விழுந்து பதுமாசனம்போல் ஆகிவிடுகின்ற முழங் காலை அவ்வாறு ஆகாதபடி கைகளால் துடைகளோடு சேரக் கட்டி` என்றவாறு. அட்டம் - முழங்கால். இதனை, முழங்கால்மேல் வைக்கும் காலை ``அட்டங்கால்`` என வழங்கும் வழக்குப் பற்றியும் அறிய லாகும். முழங் கால்களைக் கைகளால் துடைகளோடு சேரக்கட்டுத லாவது, கைகளை முழங்காலின் கீழ்ப்புகுத்தி வெளிக்கொணர்ந்து சுற்றி யிழுத்துச் சேர்த்தல். அடுப்பு, மூலாதாரம். முக்கோண வடிவிற்றாய் நெருப்பை உடைத்தாதல் பற்றி இஃது இவ்வாறு கூறப்பட்டது. மூலாதாரத்தை அணையால் தடுத்தல், மேலே நில்லாமல் தரையிற் பொருந்தவைத்தல். ``அணை`` என்பது, இருக்கும் ஆசனத்திற்குச் சிலேடை. `அணையாற் கோலி` என மூன்றாவது விரிக்க. கோலுதல் - தடுத்தல். விட்டம், குறி. `அதனைப் பூட்டி` என்றது, கோவணம் கட்டுதலை விதித்தவாறு. பின்னர், ``மேற்பையைத் தாட் கோத்து`` என்பார் ஆகலின், அதுபற்றி, `வெற்றரையுடன் இருத்தல் வேண்டும் போலும்` என ஐயுறாமைப் பொருட்டு இதனை எடுத்தோதினார். பை, விதை. தாள் - பாதம். `பையைத் தாள்மேற் கோத்து` என மாறிக் கூட்டுக. இதனால், பாதங்கள் விதைக்குக் கீழ்ப்பொருந்துதல் கூறப் பட்டது. நட்டு இருத்தல் - உடலை அசையாது நிமிர்த்திருத்தல். ``நமன் இல்லை`` என்றது, `யோகம் வாய்ப்புடையதாகும்` என்றபடி. இவ் ஆதனத்தை இங்கு முதற்கண் வலியுறுத்திக் கூறவே, `கேசரி யோகம்` என்பது ஆதனத்தாற் பெற்ற பெயர் என்பது போந்தது. பிற ஆதனங்களிலிருந்து செய்யும் யோகங்களினும் இது மேலானது ஆதலால் இதனையே நாயனார் சிறந்தெடுத்து உணர்த்துகின்றார். இதன் மேன்மை வருகின்ற திருமந்திரங்களுட் காணப்படும். இதனால், கேசரி யோகத்தின் இருக்கை நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே. 

பொழிப்புரை :

ஆடையை அழுக்கு நீக்க விரும்புகின்ற வண்ணான் முதலில் தனக்குப் பயன்படுகின்ற வாய்க்காலை ஓட்டை போகாமற் கட்டிப் பின் ஆடை ஒலிக்கின்ற கல்லிற்கும் உயரமான அளவில் கரை கட்டி, மழை நீரால் பெருகி வருகின்ற ஆற்று நீரை அவ்வாய்க்காலின் வழியால் புகவிட்டுப் பள்ளத்தை நிரப்பினாலே அதில் ஆடையைத் தோய்த்து எடுத்து உயரத்தில் விரித்து உலர்த்திப் பார்க்கும்பொழுது அவ் ஆடை அழுக்கு நீங்கி விளங்கும். அம்முறை போல்வதுதான், யோகத்தால் உயிர் மல மாசு நீங்கி விளங்கும் முறையும்.

குறிப்புரை :

எனவே, `இவ்வுவமையோடு யோக நிலையைப் பொருத்தி உணர்ந்துகொள்க` என்றதாயிற்று. அங்ஙனம் உணருமாறு:-
வண்ணான், யோகி, ஆடை, யோகியது ஆன்ம அறிவு. ஆடை ஒலிக்கும் பலகை, (கல்) நெற்றி. ``நெற்றி`` என்பது விளங்குதற் பொருட்டே `சதுரப் பலகை` என்றார். ஆன்ம அறிவு மாசு நீங்குதல் ஆஞ்ஞைத் தியானத்தால் ஆகலின், ஆஞ்ஞை இடமாகிய நெற்றியை ஆடை ஒலிக்கும் கல்லோடு உவமித்தார். கண் ஆறு - வாய்க்கால். அஃது அண்ணாவை அடுத்து மேற்செல்லும் துளைக்கு உவமை. உச்சித் துளையை மோழை படாமற் கட்டுதலாவது, அதனை நாவின் நுனியால் அடைத்தல். தலையினின்றும் வரும் அமுதம் இத் துளை வழிக் கீழே ஒழுகிப் போகாமைப் பொருட்டு இது வேண்டப்பட்டது. விண் ஆறு - விண்ணால் பெருகியெழும் யாறு. விண் - மழை, ``விண்ணின்று பொய்ப்பின்`` (குறள், 13) என்பதிற்போல. இது மேற் குறித்த அமுதத்திற்கு உவமை. ``குளம்`` என்றது சிலேடை. இஃது உவமை யில், ``நீர் நிலை`` எனவும், பொருளில், `நெற்றி` எனவும் பொருள் தரும். அண்ணாந்து பார்த்தல், புருவ நடுவை நோக்குதல். ``உயிர் தூய்மை பெறுதல் இவ்வாற்றால் ஆகலின் இவ்வாற்றானே முயல்க`` என்பது குறிப்பெச்சம்.
``வண்ணான் கட்டிப் பாய்ச்சி நிரப்பினால்`` என இயையும். ``தான் ஒலிக்கும்`` என்க. ``கட்டி`` என்பதனை, ``கண்ணாறு மோழை படாமல்`` என்பதனோடும் கூட்டி, அத்தொடரை, `வண்ணான்` என்பதன்பின் வைத்துரைக்க. ஆறு - முறை. இஃது உவமையாகு பெயராய் அது போல்வதொரு முறையைக் குறித்தது. ``நிரப்பினால்`` என்பதில், அழுக்கு அறுதற்கு. கட்டுதல் முதலியவை இன்றி அமை யாதனவாதலை விளக்கி நிற்கும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று.
இதனால், கேசரி யோகத்தைப் புரியுமாறெல்லாம் தொகுத் துணர்த்தப்பட்டன. இவற்றால் ஆஞ்ஞை யோகம் ஒன்றே கேசரி யோகமாதல் அறியப்படும். சிங்காதனம் கூறியவழி ``அங்காந்து`` என்றதனை வலியுறுத்தியதே இதனுள் ``அண்ணாந்து பார்க்க`` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 3

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டா
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்
கிறக்கவும் வேண்டா இருக்கலு மாமே.

பொழிப்புரை :

இடநாடி. வலநாடி இரண்டையும் விடுத்து, நடு நாடியாகிய சுழுமுனை நாடியால் பிராணனைப் பயன்படுத்திக் கொள்ளும் யோகிகட்கு, உடல், நரை திரை மூப்புக்களால் தளர்தல் இல்லை. இதற்குமேல், உலக மயக்கத்தில் ஆழ்தலை ஒழித்துத் திருவருளை நினைந்திருக்க வல்லவர்க்கு அவர் தம் விருப்பத்திற்கு மாறாய் இறப்பு உண்டாகாது; அவர் விரும்புமளவும் இவ்வுலகில் வாழ்தல் கூடும்.

குறிப்புரை :

பவ யோகிகள் சித்திக் களிப்பாலும், சிவ யோகிகள் திரு வருட் களிப்பாலும் மத யானைபோலக் களித்திருப்பர் என்பதனைக் குறிப்பால் உணர்த்துவார், சுழுமுனை நாடியைத் தும்பிக்கையாக உருவகம் செய்தார். இதனானே, விநாயகர் யோக மூர்த்தி யாதலும் விளங்கும். சுழுமுனையை உருவகித்தற்கு ஏற்ப ஏனை இட நாடி வல நாடிகளை இடக் கை வலக் கைகளாகவும், பிராணனை உணவாகவும் உருவகித்தார். பவ யோகிகள், ``வெற்று யோகந்தானே காய சித்தியைப் பயக்கும்`` எனக் கூறுதலை மறுத்தற்குப் பின்னிரண்டு அடிகளைக் கூறினார். `திருவருள் உணர்வைப் பெறுவார் யோகியருள்ளும் அரியர்` என்றற்கு, ``உண்பார்க்கு`` என்றாற்போல `உணர்வார்க்கு` என்று ஒழியாது, ``உணர வல்லார்கட்கு`` என ஓதி யருளினார். மூன்றாம் அடிக்கு இங்கு உரைத்தவாறு உரையாதார்க்கு அவ்வடி வெற்றெனத் தொடுத்தலாய் முடியும் என்க. ``வேண்டா`` என்பன இரண்டும், `நீங்காது வருவன நீங்கும்` என்னும் பொருள் குறித்து நின்றன.
இதனால், கேசரி யோகத்துள் பிராணாயாமத்தது சிறப்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆய்ந்துரை செய்யில் அமுதம்நின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே. 

பொழிப்புரை :

யோக நூல்கள் ஆராய்ந்து கூறிய முறையை மேற் கொண்டு பிரத்தியாகாரம் முதலியவற்றைச் செய்தால், உடம்பினின்றே அமுதம் சுரக்கும். சுரக்கும் அவ்வமுதம் நாடிகளிற் பாய்கின்றபோது அதனை யோகி தனது அநுபவமாகப் பிறர்க்கும் சொல்லுவான். இனி, நரை திரை மூப்புப் பிணி சாக்காடுகளை யேயன்றிப் பிறவிக் கடலையும் யோகி கடக்கின்ற முறையைச் சொல்லுமிடத்து, மேற் சொல்லிய அமுதம் சந்திர மண்டலத்திலிருந்து பாய்ந்து உடலைக் காப்பாற்றுகின்ற அதுவேயாம்.

குறிப்புரை :

``ஆய்ந்துரை செய்யில்`` என்பதில் `உரை` என்பதும், மூன்றாம் அடியில் உள்ள ``நீந்து`` என்பதும் முதனிலைத் தொழிற் பெயர்கள். அவை முறையே செயப்படு பொருளையும், கருவியையும் உணர்த்தி நின்றன. `அது வருகின்ற காலத்து வாய்ந்துரை செய்யும்` எனச் சுட்டுப் பெயர் வருவித்து, முன்னே கூட்டி முடிக்க. `நீந்து உரை செய்யின் உரை செய்தது நிலாமண்டலமதாய்ப் பாய்ந்து பாலிக்குமாறு` எனக் கொண்டு கூட்டி உரைக்க. நிலாமண்டலத்தில் உள்ளதனை `நிலாமண்டலம்` என்றே பான்மைப்படுத்து ஓதினார். `நிலா மண்டலத்ததாய்` என்றே பாடம் ஓதுதலும் ஆம்.
இதனால், `யோகம் பிறவியைக் கடப்பிக்கும் சிறப்புடையது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி ஊனே. 

பொழிப்புரை :

பிராண வாயு சுழுமுனை வழியே மேல் ஏறும் பொழுது அது மீளக் கீழ்ப் பாயாதபடி நாவின் நுனியால் அண்ணாக் கினை அடுத்துள்ள துளையை அடைத்தால், (அவ்வாயு தலையிலும், நெற்றியிலும் உள்ள நாடிகள் வழியாகப் பரவுதலால்) சீவனும், சிவனும் இருக்கும் இடம் தலையில் உள்ள அவ் ஆயிர இதழ்த் தாமரை யாகவே முடியும். (அஃதாவது, பாச ஞானங்கழல, பசு ஞான பதி ஞானங்கள் விளங்குவனவாம்.) ஆகவே, அப்பொழுது மூவர் காரணக் கடவுளரையும், ஏனை முப்பத்து மூவர் தேவரையும் காணும் ஒளிக்கண் கிடைக்கும். மற்றும் நூறு கோடி யுகங்கள் சென்றாலும் உடம்பு அழியாது நிலைபெற்றிருக்கும்.

குறிப்புரை :

`சிவிறுதல்` என்பது, `விசிறுதல்` என இக்காலத்து எழுத்து நிலைமாறி வழங்கும். நாவின் நுனியால் உச்சித் துளையை அடைக்க, அதன்வழி மேற்சென்ற பிராணன் மீளாமையும், அதனாற் பெருகும் அமுதம் கீழ்ப் போகாமையும் உளவாதலால் விளைகின்ற பயன்கள் பல என்றவாறு.
இதனுள், ``நாவின் நுனியை நடுவில் சிவிறிடில்` எனவும், பின் வருகின்ற திருமந்திரங்களிலும் இவ்வாறு இப் பொருளே படக் கூறுவனவும், மேல் சிங்காதனம் கூறியவழி, ``அங்காந்து`` என்றதனுள்ளே உய்த்துணர்ந்து கொள்ளக் கிடந்தன. ஆகவே, இது கேசரி யோகத்தைக் குறிக்கும் குறிப்பாதல் பெறப்படும். ``அங்கே`` என்பதன்பின், `உளதாம்` என்பதும், `உறைவிடம்` என்பதன்பின் `அதுவேயாம்` என்பதும் எஞ்சி நின்றன. ஆக்கங்கள் புதியனவாய் அறியப்படுதலைக் குறிக்கும்.
காரணக் கடவுளர் மூவர் ஆவார், `அயன், அரி, அரன்` என்போர். முப்பத்து மூவர் ஆவார், `உருத்திரர், சூரியர், அசுவினி தேவர், வசுக்கள்` என நால்வகைப்பட்டு, முறையே பதினொருவர், பன்னிருவர், இருவர், எண்மர் என்னும் தொகை பெற்று நிற்பவர். இவரை, ``நால்வே றியற்கைப் பதினொரு மூவர்`` (திருமுருகாற்றுப்படை, 167) என்றார் நக்கீர தேவர். இவர் ஒவ்வொருவரும் தம்மைப் போலும் `கோடி` என்னும் எண்ணுடையோரைச் சுற்றமாகக் கொண்டு நிற்றலால், `தேவர் முப்பத்து முக்கோடியர்` என்பர். பொதுவே ``மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்`` என்றாராயினும், சிவயோகியர்க்கு அவரது வரம்புபட்ட நிலைகளும் உடன் அகப்பட்டுத் தோன்றும், என்பது கருத்து என்க. இவ் விளக்கங்கள் தத்துவ விளக்கம் ஆதல் அறிக.
இதனால், கேசரி யோகத்தால் பாச பசு பதிகளின் காட்சி கிடைத்தல் கூறப்பட்டது. பாசக் காட்சியைக் கடைக்கண் ஓதினார், பாசங்களது இழிபு பற்றி. இதனுள், நாவின் நுனியை நடுவே சிவிறுதல் சிறப்பாகக் குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வானூறல் பாயும் வகையறி வாரில்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
தேனூறல் உண்டு தெளியலு மாமே.

பொழிப்புரை :

குருதி பாய்ந்து ஓடுகின்ற தலையிலிருந்தே தேவ ருலகத்து அமுதம் பாய்கின்ற வகை அறிகின்றவர் உலகில் ஒருவரும் இல்லை. அதனை அறிதல் உடையவர்க்கு அந்தத் தேன்போலும் அமுதத்தை உண்டு, அதன் சிறப்பை உணர்தலும் கூடும்.

குறிப்புரை :

ஊனின்கண் சுரப்பதனை ``ஊன் ஊறல்`` என்றும், வானின்கண் குறையாது நிற்பதனை, ``வான் ஊறல்`` என்றும் கூறினார். வான் ஊறல் என்பது ஒரு சொல்லாய்ப் பின் உவமையாகு பெயராயிற்று. வரை - மலை; அஃது அதன் உச்சியைக் குறித்தது. `வரைபோலும் உச்சி` என்க. முதனிலைத் தொழிற் பெயரும் பெய ராதலின், அதனை இரண்டாவதன் பொருள்பட, ``அறிவாளர்க்கு`` என ஓதினார். `தேன்` என்பதும் உவமையாகுபெயர். இதன் சிறப்பு வருகின்ற திருமந்திரத்திற் பெறப்படும்.
இதனால், கேசரி யோகத்தால் அண்டத்து அமுதம் பிண்டத்துட் கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மேலைஅண் ணாவில் விரைந்திரு காலிடிற்
காலனும் இல்லை கதவும் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவான் பராநந்தி ஆணையே.

பொழிப்புரை :

அண்ணாக்கின் அருகில் உள்ள துளையில், `இடை கலை, பிங்கலை` என்னும் இரு நாடிகளின் வழியே இயங்கும் பிராணனைப் பொருத்தினால், யம பயம் இல்லை. மேலுலகத்து வாயிற் கதவும் திறக்கும். உளவாய் இருந்த நரை திரைகளும், உலகத்தார் கண்டு வியக்கும் வண்ணம் மாறிவிடும். அதன்பின் யோகி இளமைத் தோற்றத்தையும் உடையவனாவான். இஃது எங்கள் ஆசிரியர்மேல் ஆணையாகச் சொல்லுகின்ற உண்மை.

குறிப்புரை :

`நாக்கில் இரு கால்களை இடுதல் எவ்வாறு` என வியக்கும் முறையில் நயம்பட ஓதினார், இச்செயல் செயற்கரிதாதல் தோன்றுதற்கு. `இரு காலால் உதைத்தால் கதவு திறந்துகொள்ளும்` என்பதும் ஓர் நயம். `கதவு` மேல் `உலகத்தது` என்பது ஏற்புழிக் கோடலால் விளங்கும். மேல் உலகத்தை, அண்டம், பிண்டம் இரண்டிலும் கொள்க. கட்டிளமை யுடையாரையும் `பாலியர்` என்றல் வழக்கு. இனி, `குழவிப் பருவத்துத் தோற்றம் உடையவராவர்` என உரைப்பினும் குற்றமின்று. என்னை? தோற்ற மாத்திரமேயன்றி அறிவு முதலியன அப்பருவத்தன ஆகாமையின்.
இதனால், கேசரியோகத்தால் இம்மை மறுமைப் பயன்கள் கிடைத்தல் கூறப்பட்டது. இவற்றுள், இம்மைப் பயன் மேற்கூறிய அமுதத்தின் பயனாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 8

நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.

பொழிப்புரை :

கேசரி யோகத்தைச் சிவபெருமானையே முதல் வனாக உணரும் உணர்வில் நின்று செய்து, அதனானே, அவனைத் தலைப்படுகின்ற யோகி, உலகத்தார் யாவரையும் ஆட்கொள்கின்ற திருவருட் செல்வம் உடையவன் ஆவான். அங்ஙனமாகவும், அவ்யோகத்தை மேற்கொள்ளாது உலகியலில் பலவற்றை ஆக்க நினைத்துக்கொண்டிருப்போர், நல்வினை இல்லாதவரே யாவர்.

குறிப்புரை :

``முதலாக`` என்பது, `முதல்வனாக` எனப் பொருள் தந்து நின்றது. ஆளுதல் இங்கு, `அருள் வழியில்` என்பது வெளிப் படை. எனவே, யோகாசாரியனாதல் கூறியவாறாயிற்று. பந்தித்தல் - இருத்தற்குரிய. பகலோன், சூரியகலை. இது பொதுவாக வெளிச் செல்வது ஆதலின், ``பகலோன் வெளியாக`` என்றார். சிந்தித்தல், ``கருதுப கோடியும் அல்ல பல`` (குறள்) என்றாற்போல, நினைவு மாத் திரமாய்க் கழிவனவற்றை எண்ணுதல். இது பிராணன் வீணேகழிதலை உணராமையைக் குறித்து நின்றது. சூரியன் உதயமான பின்பும், `எப்பொழுது உதயமாகும்` எனக் கவலையுறுபவர் என்பது ஒரு நயம்.
இதனால், கேசரி யோகத்தால் யோகாசாரியனாதற் சிறப்புக் கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தீவினை ஆடத் திகைத்தங் கிருந்தவர்
நாவினை நாடின் நமனுக் கிடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை ஆடிய தீங்கரும் பாமே. 

பொழிப்புரை :

முன் செய்த தீவினை வந்து விளையாட, அவ் ஆடலைப் போக்க வழியறியாது நின்றவர், கேசரி யோகத்தைச் செய்யின், அவ் ஆடல் இல்லையாய்விடும். மேலும் அதனானே, அவர்க்குச் சிவனோடு கூடித் திளைத்தற்கு, இனிய கரும்புபோலும் திருவருளும் கிடைப்பதாகும்.

குறிப்புரை :

நா வினை - நாவால் உச்சித் துளையை அடைக்கும் செயல். பா வினை - பரவிய (மிக்க) வினை என்றது முன்னர், ``தீ வினை`` எனக் கூறியவற்றை. அவற்றோடு ஆடுதலாவது, அவற்றின் பயன்களில் அழுந்துதுதல். பயன், அவை அற்றொழிதல். இம் மூன்றாம் அடி, மேல், ``திகைத்து அங்கிருந்தவர்`` எனக் குறித்தவரைச் சுட்டும் அளவாய் நின்றது. இவ்வடியின் ஈற்றில் நான்காம் உருபு தொகுத்தலாயிற்று. தே - சிவம். இஃது இன் சாரியையோடு இரண்டாம் உருபு ஏற்று நின்றது. ``ஆடிய`` என்பது, ``செய்யிய`` என்னும் வினையெச்சம். ஆடுதல் - திளைத்தல்; அநுபவித்தல்.
இதனால், கேசரி யோகம் கீழ் நிலையில் உள்ளாரை எளிதில் மேல் ஏற்றுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தீங்கரும் பாகவே செய்தொழில் உள்ளவர்
ஆங்கரும் பாக அடையநா ஏறிட்டுக்
கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட
ஊன்கரும் பாகியே ஊனீர் வருமே. 

பொழிப்புரை :

மேற்சொல்லிய கரும்பைப் பயிரிட (திருவருளைப் பெற) விரும்புவோர் கேசரி யோகத்தால் குண்டலியை எழுப்பி நிராதாரத்திற் செலுத்துதல் வேண்டும். செலுத்தினால், அருவருக்கத் தக்க இவ்வுடம்பே ஆனந்தத்தைத் தரும் கரும்பாகி, நிராதாரத்தில் உள்ள திருவருள் வெள்ளம் பாய்ந்தோடி வரும்.

குறிப்புரை :

``தீங் கரும்பாக`` என்பதில், ஆதல், விளைதல். ஆக - ஆமாறு. ஆங்கு - அத்தொழிற்கண். ``நாவை அரும்பாக அடைய மேல் நிமிர்த்தி`` என உரைக்க. இதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது. கோங்கின் அரும்பு, உறக்கத்தால் சுருங்கிக் கிடக்கும் பாம்பின் முகத்திற்கு உருவகம். ``அரும்பினதாகிய`` என்பதை ``அரும்பாகிய`` என்றார். குண்டலியை ``கோண்`` என்னும் தமிழ்ச் சொல்லாற் கூறினார். ``ஆகி`` என்னும் வினையெச்சம் எண்ணின்கண் வந்தது. ``ஊன் நீர்`` என்பதில் ஊன் - உவ்விடம்; மேலிடம்; என்றது நிராதாரத்தை. எனவே, குண்டலி நிமிர்தல் இதுகாறுமாயிற்று. ``நிராதாரத்தில் உள்ள நீர்`` எனவே, அது திருவருள் வெள்ளமாயிற்று.
இதனால், கேசரி யோகத்தை நிராதாரமாகச் செய்தவழித் திருவருட் பேறு கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே. 

பொழிப்புரை :

மேற்கூறிய திருவருள் வெள்ளம் பெருகுதல் உண்டாகும் முறையிலே கேசரி யோகத்தைச் செய்து, அதனால், தேன்போல இனிய அந்த வெள்ளத்தைப் பருகி, திருவைந்தெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்து ஓதியிருக்க, காற்றும், நீரும் உலாவும் இடமாகிய இந்த உடம்பு ஆகாய கங்கையை உம்மிடம் வரச்செய்யும். அவ்வாறு அக்கங்கை வரும் வழியை அமைந்துணர்ந்து, முயலுங்கள்.

குறிப்புரை :

``ஊன் நீர்`` என்பதற்கு, மேல் உரைத்தவாறே உரைக்க. ``உள் நாவை ஏறிட்டு`` என்றது கேசரியோகத்தைக் குறித்தவாறு. இதனை, `நாவை உள் ஏறிட்டு` என மாற்றி யுரைக்க. ``உள்`` `அண்ணத் துளையினுள்` என்றவாறு. தேன் நீர், இல்பொருள் உருவகம். இஃது அணிநூலில் புறனடையாற் கொள்ளப்படும். ``என்று`` என்பதன்பின், `இருக்க` என ஒருசொல் வருவிக்க. ``வான் நீர்`` என்பது, முன்வந்த `கங்கை` என்றதனைச் சுட்டும் அளவாய் நின்றது. ``ஊன் நீர்`` என்றாற் போலப் பொதுப்பட `நீர்` என்றொழியாது, ``கங்கை`` என உயர்த்துக் கூறினமையின், அதனைச் சிவானந்த வெள்ளமாகக் கொள்க.
இதனால், நிராதார கேசரி யோகத்தால் சிவானந்த அனுபவம் உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலுமாமே. 

பொழிப்புரை :

நிராதார கேசரி யோகம் சிவானந்தத்தைத் தருமாற்றை அறிந்து அதன்கண் நின்றவர், அவ் யோகத்தானே பாசங்களை வென்று அறிவே வடிவாய் இருக்குமாறு சிவன் தனது திருவருளைப் பொழிவான். மேலும், அவரை அவன் தனது வியாபகத்துள் அடக்கிக் காப்பவனும் ஆவான்.

குறிப்புரை :

``வழிபாடு`` என்றது மேற்கூறிய நிராதார யோகத் தையே என்பது இயைபுபற்றி இனிது விளங்கும். மூன்றாம் அடியும் அதனை மீள அநுவதித்ததேயாம். `உள்ளே பாய்ந்து` என முன்னே கூட்டுக. உள் - பிரம ரந்திரம்; அறிதல், நிராதாரத்தில் உள்ள சமனை உன்மனை சத்திகளை. படி - வாயில். வாயிலில் கதவு இடுதல், நாவின் நுனியால் அண்ணத் துளையை அடைத்தல். `குவிந்து` என்பது எதுகை நோக்கி, ``கூய்ந்து`` எனத் திரிக்கப்பட்டது. குவிவது மனம். இறுதியில் உள்ள ``அறிந்து`` என்பதனை, `அறிய` எனத் திரிக்க. உள் உறைபவன் யோகியும், கோயில் ஆகின்றவன் சிவனும் என்க.
இதனால், நிராதார கேசரி யோகம் முதிருந்தோறும் விளையும் பயன்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே. 

பொழிப்புரை :

சிவனது வியாபகத்துள்ளே ஒடுங்கிப் புறம் போகாது நிற்கும் நிராதார கேசரி யோகிகள், எல்லா உயிரிடத்தும் தாயினும் மிக்க அருளுடையராய் இருப்பர். அறியாமையால் சிலர் அவர்க்கு ஊறு செய்யினும், அவரிடத்தும் அவர் அவ்வருள் நீங்குதல் இலர். ஆயினும், அவர்க்கு ஊறு செய்தவர் அத்தீவினையால் தம்மால் தாம் கேடுறுவர் ஆதலின், அது பற்றி அவர்க்கு அவ்யோகிகள் தீயினும் கொடியராகவும் சொல்லத்தக்கவர்.

குறிப்புரை :

``தீயினும் தீயர்`` என்றதனை,
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். -குறள், 77
என்றதுபோலக் கொள்க. `ஈசன் அடியார் இதயம் கலங்கிட` (பா.528) `தானே படைத்திட வல்லவ னாயிடும்` (பா.670) என்னும் திருமந்திரங் களையும் இங்கு நினைவு கூர்க. `தம்முளும்` என்னும் உம்மையைப் பிரித்து, ``தீயரும் ஆவர்`` எனக் கூட்டி யுரைக்க.
இதனால், கேசரி யோகம் முற்றி நின்றாரது பெருமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 14

தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன்
பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்
மாவினை யாளர் மதியிலுள் ளானே. 

பொழிப்புரை :

தன்னை வழிபடும் நல்லூழ் இல்லாதவர்க்கு அவர் தலைக்கு அப்பால் மறைந்தே நிற்கின்றவனும், தன்னை யாதானும் ஒரு குறியில் புறத்தே வைத்து வழிபடுகின்றவர்கட்கு அக்குறியேயாய் நின்று அருள் செய்கின்றவனும், தன்னை அகத்தே ஆதாரங்களில் வைத்துப் பாவிக்கின்றவர்கட்கு அப்பாவனையிலே விளங்கு கின்றவனும் ஆகிய சிவன், பெருஞ்செயலாகிய நிராதார யோகத்தைச் செய்கின்றவர்கட்கு அவர்களது உணர்வு வடிவாய் நிற்கின்றான்.

குறிப்புரை :

`சென்னியில்` என்றது, ``உச்சிக் கூப்பிய கையினர்`` (திருமுருகாற்றுப்படை, 185), `சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்` (தி.8 திருப்பள்ளியெழுச்சி, 4) என்பனபோல `துவாத சாந்தத்தில்` என்றவாறு. சிவன் யாவரையும் விடாதே தொடர்ந்து நிற்பவன் ஆகலின், அவ்வாறு அவன் நிற்கும் இடம் துவாதசாந்தமே. அவனை வழிபடுவார் புறத்தே பல குறிகளிலும், அகத்தே ஆதார நிரா தாரங்களிலும் அவனைத் தலைப்பட்டுப் பின் துவாதசாந்தத்திலும் தலைப்படுவர். வழிபடாதார் ஓரிடத்தும் அவனைச் சாராமையின், அவர்க்கு அவன் துவாதசாந்தத்தில் தோன்றாது நிற்கும் அவ்வளவிலே யிருப்பன். அதனால், ``தீவினையாளர்தம் சென்னியில் உள்ளவன்`` என்றார். பூ வினை - பூவைக்கொண்டு செய்யும் செயல்; வழிபாடு. பொற்பதி - அழகிய தலம்; அது தானியாகு பெயராய் அதன்கண் உள்ள குறியை உணர்த்திற்று. இங்குச் சரியையும் கிரியையுள் அடக்கப் பட்டது. பா வினை - பரவுகின்ற செயல். பரவுவது மனம் என்க. பாவகம் - பாவனை.
இதனால், நிராதார யோகம் முதிரப் பெற்றோர் உண்மை ஞானத்தைப் பெறுதற்குரியராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

மதியின் எழுங்கதிர் போற்பதி னாறாய்ப்
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே. 

பொழிப்புரை :

மாவினையாளர் மதியில் உள்ள சிவன், அதில், சந்திரனது கலைகள் போல்வனவாகிய பிராசாத கலைகள் பதினாறாய் நின்றும், புவன பதிகளின் இடமாகிய புவனங்கள் இருநூற்றிருபத்து நான் காய் நின்றும், இயங்கும் இல்லமாகிய உடம்பினுள் வினைகள் ஆகிய பகைவர் அவ்யோகியர் எதிர்சென்று போர்புரியாதவாறு தனது அருளாற்றலாகிய கணைகளைப் பொழிந்து கொண்டு இருக்கின்றான்.

குறிப்புரை :

பிராசாத கலைகள் பலவற்றுள் சிறப்புடையன சோடச கலைகளாதலின் அவற்றையே கூறுவார். அவை யோகியின் உணர் விற்கு உரியவாதல் இனிது விளங்குதற்கு ``மதியின் எழுங்கலை போல`` எனச் சிலேடித்துக் கூறினார். `பதிகள்` என்னாது `பதி` என்றது பன்மையொருமை மயக்கம், `ஏவல் இளையர் தாய் வயிறு கரிப்ப` என்பதிற்போல. ``நூறுநூற்`` றென்னும் சீரில் குற்றியலுகரம் அலகு பெறாது நின்றது. அத்துவாக்களுள் புவனங்களே பருப்பொருளாய் இனிது விளங்கலின், அவற்றைக் கூறவே, அவற்றொடு பிரிப்பின்றி நிற்கும் ஏனையவும் கொள்ளப்படும். ஆறு அத்துவாக்களுடன் நால் வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பின் எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதங்களாகிய சராசரங்கள் யாவும் நெறியில் பிண்டத்துள்ளே நிற்கும் முறையைப் பிராசாத நூல்கள் இனிது விளங்கக் கூறுதலை அந்நூல்களுட் காண்க; ஈண்டு விரிப்பிற் பெருகும். கதி - நடை. யோகிகளது உணர்வில் அத்துவாக்கள் பலவும் தானேயாய் நின்று அவர்களது, உலகியல் உணர்வைத் தடுக்கும் முகத்தால் சஞ்சித பிராரத்த கன்மங்களின் வலியைக் கெடுத்தலின், ``கணைகள் பரப்பி - எதிர் மலையாமல் இருந்தனன்`` என்றார். மலைதற்கு வினைமுதல் வருவித்துக் கொள்க.
இதனால், கேசரி யோகத்தை நிராதாரமாகச் செய்தலின் மேல், பிராசாதமாகச் செய்தல் பெரும்பயன் உடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

இருந்தனள் சத்தியும் அக்கலை சூழ
இருந்தனள் கன்னியும் அந்நடு வாக
இருந்தனள் மான்ஏர் முகநில வார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே. 

பொழிப்புரை :

மதியின் எழுங்கதிர்போல நிற்கும் பிராசாத கலைகள் பதினாறும் தன்னைச் சூழ்ந்து நிற்க, அவற்றின் நடுவே திரோதான சத்தி, தனது அழகிய முகமாகிய சந்திரன் நிறைந்த ஒளியுடன் விளங்க, அந்தப் பிராசாத கலைகளின் வழி அமுதத்தைப் பொழிந்துகொண்டு, அவற்றோடு தானும் இருக்கின்றாள்.

குறிப்புரை :

``அதனால், அன்ன சிறப்பினதாகிய அந்தப் பிராசாத யோகத்தையை முயலுங்கள்`` என்பது குறிப்பெச்சம். சத்தி, கன்னி, மான் என்பன ஒருத்தியையே குறித்தன. அந்நடு - அவற்றின் நடு. ``சூழ நடுவாக இருந்தனள்`` என்றது, ``ஆட்சி செய்திருக்கின்றாள்`` என்ற வாறு. திரோதான சத்தி தன் நிலைமாறி அருட் சத்தியாகும் நிலை மையைக் குறிக்க, ``முக நிலவு ஆர அமுதம் பொழிந்து இருந்தனள்`` என்றும், அஞ்ஞானம், ``மிருத்தியு`` எனப்படுதலால், அதனைப் போக்குகின்ற மெய்ஞ்ஞானத்தை ``அமுதம்`` என்றும் கூறினார்.
இதனால், மேற்கூறிய அவ்யோகம் அங்ஙனம் பெரும்பயன் உடைத்தாமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

பொழிந்தவி ரும்வெள்ளி பொன்மன் றடையில்
வழிந்துள் ளிருந்தது வான்முதல் அங்குக்
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்
கொழுந்தது வாகும் குணமது தானே.

பொழிப்புரை :

பிராசாத கலைகளின் வழிச் சத்தியால் பொழியப் பட்டு விளங்குகின்ற அந்த ஞானம், அகார கலை முதலிய கலைகளின் அளவில் சுவாதிட்டானம் முதலிய கீழ் இடங்களோடு நில்லாது, அருத்த சந்திர கலை முதலிய கலைகளின் வழி ஆஞ்ஞை முதலிய மேல் இடங்களை அடையுமாயின், அவ்விடத்தே அந்த ஞானத்திற்கு முத லாகிய சிவம் வியாபகப் பொருளாய் விளங்கித் தோன்றும். அதன்பின் அந்த அருத்த சந்திராதி கலைகளின் ஞானங்கள் மறைந்து முன் போலக்கீழே போய்விடாமல் காக்க வல்லவர்கட்கு அந்த ஞானம் முடி நிலை வளர்ச்சியை எய்தும். அதுவே, அந்தக் கலா யோகத்தின் பயனாம்.

குறிப்புரை :

`புறத்துப் பொன்மன்றுபோல, அகத்தே விளங்குவது ஆஞ்ஞை` என்றற்கு அதனை, ``பொன் மன்று`` எனக் கூறுகின்றவர், அதனோடு இயைந்து ஓர் நயத்தைத் தோற்றுவித்தற்கு, பிராசாத ஞானத்தை, வெள்ளியாக உருவகம் செய்து கூறினார். ``வெள்ளி`` எனப்பட்டது இந்த ஞானமே என்பது, ``பொழிந்தவிரும் வெள்ளி`` என மேற்கூறியதனையே அனுவதித்துக் காட்டியதனானே இனிது உணரப்படும். இதனையும், ``பொன் மண்`` என்பது பாடம் ஆகாமையையும் உணராது `வெள்ளி, பொன்` என்றவற்றைச் சுக்கில சோணிதங்களாகக் கொண்டு உரைப்பின், அஃது இவ்விடத்திற்கு யாதோர் இயைபுமின்றிப் போதல் அறிந்து கொள்க.
இதனால், பிராசாத யோகத்தின் முடிநிலையும், அதன் பயனும் கூறப்பட்டன. குணம் - பயன்.

பண் :

பாடல் எண் : 18

குணமது வாகிய கோமள வல்லி
மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே. 

பொழிப்புரை :

சத்தி, பிறர்க்குப் பிறவித் துன்பத்தைத் தருபவள் போலாது வீட்டின்பத்தைத் தருபவளாய் மாறுகின்ற அந்நிலை யிலேயே நிற்கும்படி யோகி மேற்கூறிய மேல் நிலையினின்றும் தாழாது நிற்பானாயின், அச்சத்தியால் நிதிபோலக் கிடைக்கின்ற உண்மை ஞானத்தின் வழியாகச் சிவனும் அவனிடத்தினின்றும் நீங்காதிருப்பான்.

குறிப்புரை :

குணம் - நன்மை. நன்மை யுடையவளை, `நன்மை` என்றார். மணம் - பொருந்துதல்; அந்நிலையிலே நிற்றல். ஆக - உண்டாகும்படி. `அங்கே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்த லாயிற்று. `யோகி` என்பது பொருட்டொடர்பால் வந்தது. இனம் - பொதுத்தன்மை; அஃது இயைபின்மேல் நின்றது. தான், சிவன்; இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், `பிராசாத யோகத்தின் முடிநிலையை எய்தினார் அந்நிலையிலே உறைத்து நிற்றல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

இருந்த பிராணனும் உள்ளே எழுமா
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே. 

பொழிப்புரை :

சுவாதிட்டானத்தில் இருந்த பிராண வாயு வெளிப் புறமாக அன்றி உட்புறமாக எழுமாறு திறக்கப்பட்ட சுழுமுனை நாடி வழியே சென்று, ஆஞ்ஞையும் திறக்க, அதற்குமேல் விரிந்து விளங்கு கின்ற ஆயிர இதழ்த் தாமரை மலரின்மேல் பின்னும் மேல் எழும் வகையில் பொருந்தச் செய்தால், ஞான மண்டலமாகிய நிராதாரமும், அதற்குமேல் உள்ள பரமண்டலமாகிய மீதானமும் இனிது விளங்கு வனவாம். அதுவன்றி, நெடுங்காலம் வாழ்தலும் கூடும்.

குறிப்புரை :

`எழுமாறு` என்பது செய்யுளிடத்துக் கடைக் குறைந்து நின்றது. பரிதல் - உடைதல்; திறத்தல். அண்டம் - ஆகாயம். ஆஞ்ஞை முதலாக உள்ளவை ஆகாயமண்டலம் என்க. `நெடுங்காலம்` என்பது சொல்லெச்சம்.
இதனால், `கேசரி யோகத்தை வாசி வகையிற் செய்யினும், பிராசாத வகையிற் செய்யினும் ஆதாரங்களைக் கடந்து, நிராதாரமாகச் செய்தல் நன்று` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

மண்டலத் துள்ளே மனஒட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே. 

பொழிப்புரை :

ஞானமண்டலமாகிய நிராதாரத்தில், மனம் ஒடுங்கும் நிலை உள்ளதை உணர்ந்து, தியானத்தை அவ்விடத்தே செய்து, அதனாலே மனம் கீழ்ப் போகாதவாறு தளைத்து, உடம்பில் எக்காலத்தும் இருள் இன்றி ஒளியே வீசப் பண்ணினால், சிவன், ஆடும் பெருமானாய் அசைந்து கொண்டிராமல், ஏக பாதனாய் அசையாது நிற்பான்.

குறிப்புரை :

மனம் நிராதாரத்திற்செல்லின் ஒடுக்கம் பெறுதலால், அங்குள்ள ஆற்றலை மனத்தை வளைக்கும் ஒட்டியாணமாகக் கூறினார். ஒட்டியாணம் - இடைப்பூண். பண்டம் - உடம்பு. மகரங் கெட்டபின் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `பகல் ஒளியே ஆக` என, ஏகாரத்தை மாற்றி யுரைக்க. கூத்து, இங்கு அதி சூக்கும ஊன நடனம். இது புலனுணர்வைத் தந்து மனத்தை அலைப்பதாகலின், `அதனை ஒழிவான்` என்றார். ``ஒழிந்தான்`` என்பது துணிவுபற்றி வந்த கால வழுவமைதி. `கூத்து ஒழிந்தான்` எனவே அசையாது நிற்றல் பெறப்பட்டது. அதனால், மனம் ஒடுங்குதல் கூறப்பட்டதாம். உடம்பில் எப்பொழுதும் ஒளியே விளங்குதல், கருவி கரணங்களும் ஞானமயமாய் நிற்றல். இதுவும் அனுவாத முகத்தால் இடையே கூறப்பட்டமை காண்க.
இதனால், நிராதார யோகத்தின் பயன் கூறும் முகத்தால், அதன் சிறப்பிற்குக் காரணம் கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...