ஞாயிறு, 21 ஜூன், 2020

இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்

இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்


பண் :

பாடல் எண் : 1

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே. 

பொழிப்புரை :

சிவன், ஆன்ம அறிவேயாயும், அவ்வறிவுக்கு அறிவாயும், அதனில் சிறிதும் பிரிவின்றியும் அதனோடு யாண்டும் உடனாயே நிற்பினும் அவ்வறிவு மல மறைப்பால் அவனது இருப்பை அறியமாட்டது.

குறிப்புரை :

`அம்மறைப்பு நீங்குதற் பொருட்டே திரோபவம் (மறைத்தல்) செய்யப்படுகின்றது` என்பது குறிப்பெச்சம். `மலமறைப் பால்` என்பது ஆற்றலால் வந்து இயைந்தது. ``உள்ளம்`` என்றது ஆன்ம அறிவை. ``ஓரடி`` என்றது இடச்சிறுமை குறித்தது. இதனானே, காலச் சிறுமையும் கொள்ளப்பட்டது. உண்மை அளவாகப் பொதுப்பட உணரப்படுவதனை ``உரு`` என்றார். மறைத்தலைச் செய்வதாகிய மலத்தின் வழி நின்று அதனைச் செய்வித்தலால், அம்மலத்தின் ஆற்றல் தேய்ந்தொழியும் என்க. மாயை கன்மங்களால் பிறவியில் ஆழ்த்துதலே, `மறைத்தல்` எனச் சிறப்பாகக் குறிக்கப்படும். இதுவும் ஆணவத்தைத் தேய்த்தற் பொருட்டேயாம். மறைத்தலைச் செய் வதையே, `இறைவன் பந்தத்தையும் தருபவன்` என்பர்.
இதனால் திரோபவத்திற்குக் காரணம் கூறப்பட்டது.
இத்திருமந்திரத்துள் நாயனார் ஆன்ம அறிவை `உள்ளம்` என்னும் சொல்லாற் குறித்தருளினார். இவ்வாறே மெய்கண்ட தேவரும் குறித்தார். இவைகளால், திருவள்ளுவர், ``ஓர்த்துள்ளம் உள்ள துணரின்`` என்றதில் `உள்ளம்` என்றதும் ஆன்மாவையே யாதல் விளங்கும்.

பண் :

பாடல் எண் : 2

இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொழுவி இசைந்துறு தோல்தசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே. 

பொழிப்புரை :

பின்னர் இன்பத்தைப் பெறுதற்குக் கருவியாம் பிறப்பை உயிர்கட்குக் கொடுத்த சிவன், அப்பிறப்பினுள் நிற்கும் பொழுது துன்பமயமான வினையால் விளையும் துயருள் அழுந்தவே வைத்துள்ளான். பிறவியால் வரும் மாசுடம்புகள் முன்னே சில காலம் துன்பத்தைத் தந்து, பின்பு ஓழிவனவாகும்.

குறிப்புரை :

இன்பப் பிறவி - இன்பத்திற்கு ஏதுவாம் பிறவி; இஃதுஇயைபின்மை நீக்கிய விசேடணம். உடம்பு துன்பமாகாது துன்பம் வெளிப்படுதற்கு வாயிலேயாக வினையே துன்பம் தருவது ஆகலின், ``துன்பஞ்செய் பாசம்`` என்றது வினையையேயாம். வினை இன்பமும் செய்வதாயினும், முன்னும் பின்னும் துன்பத்தோடே தொடர்புற்று நிற்றலின், துன்பம் செய்வதாகவே கூறினார். என்பு முதலியவற்றாலான உடம்பையே பெரும்பான்மையும், `உடம்பு` என வழங்குப ஆகலான். அவற்றையே எடுத்தோதினார். `கொழுவி இசைந்துறு தோல் தை\\\\u2970?` என்றது, அவ்வாறியன்ற உடம்பின்மேல் நின்றது. முன்பு - ஆணவமலம் நீங்குதற்கு முன்பு, ``முன்பில் கொளுவி`` என்பதில் கொளுவுதற்கு, `துன்பம்` என்னும் செயப்படு பொருள் வருவிக்க.
இதனால், திரோபவமும், அறுத்தும், சுட்டும் சிலநோயைத் தீர்க்கின்ற மருத்துவன் செய்கைபோல அருளே (மறக்கருணை) யாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாரே. 

பொழிப்புரை :

`உருத்திரன், மால், அயன்` என்னும் காரணக் கடவுளர்தாமும், மேல் உள்ள சீகண்ட உருத்திரரால் தமக்குத் தரப்பட்ட சிறந்த இயந்திரமாகிய உடம்புகள் கிடைக்கப் பெற்றுப் பொருந்தி நின்று உள்ளத்துள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய சிவன் தம்மாட்டு வைத்த மறைப்பினை அறிய மாட்டார்கள்.

குறிப்புரை :

``இன்பம்`` என்றது ஆகுபெயராய் மேற்குறித்த பிறவியை உணர்த்திற்று. ``மூவரும்`` என்ற உம்மை சிறப்பு; முற்றன்று. `யாக்கை வந்து உடன் கூடி` என முன்னே கூட்டுக. ``இறையவன்`` என்பது உருத்திரன் மேலதாய், முன்னர்க் குணி ருத்திரனையும், பின்னர்ச் சீகண்டவுருத்திரரையும் குறித்தது. ``மறையவன்`` இரண்டில் பின்னது, `கள்வன்` என்னும் பொருட்டு. `மறைப்பறியாரே` என ஓதுதல் சிறக்கும்.
இதனால், மும்மூர்த்திகளும் திரோபவத்துட் பட்டவராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கை செயலணை யாரே. 

பொழிப்புரை :

சிவபெருமானைப் பொருள்களைக் காண்கின்ற கண்ணினது ஒளியைக் காதலிப்பதுபோலக் காதலித்து, சுவையற்ற நாவினை உடைய மனத்தால் நினைந்து, நெடுங்காலமாக வருகின்ற பிறப்பு இறப்புக்களை விட்டொழிதற்கு ஏதுவான தவத்தில் தலைப்படுகின்றிலர் உலகர்.

குறிப்புரை :

`அது சிவபெருமானது மறைத்தல் தொழிலால், நிகழ்வதே` என்பது குறிப்பெச்சம். `சுவையை வெறுத்த உணர்வுடை நெஞ்சம்` என்பதனை ``ஊண்படு நாவுடை நெஞ்சம்`` என்று ஓதினார். முன்பு உண்ட அறுசுவையைப் பின்னும் நாடி நிற்பது மனமாகலின், அதனை எடுத்துக் கூறினார். ``நெஞ்சம் உணர்ந்து`` எனச் சினைவினை முதல்மேல் நின்றது. `பொய் + கை` எனப் பிரித்து நிலையைாமை உவர்த்துவிடுகின்ற எனப் பொருள் கூறுக. கை செயல் - கைத்து விடுதற்கு ஏதுவான செயல். `கண்ணொளியைப்போல` என விரிக்க.
இதனால், மறைத்தல் தொழிலால் இறைவன் உயிர்கள் தன்னை அறியாவாறு மறைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே. 

பொழிப்புரை :

ஆதிப் பிரானகிய சிவபெருமான், பரிபாகம் பெற்ற உயிர்கட்கும், பரிபாகத்தால் ஞானத்தை எய்தினோர்க்கும் தனது திருவருள் நன்கு புலப்படும் வகையில் விளக்கத்தைத் தருவான். ஏனையோர்க்குப் பகலவனும், நிலாவும் பகலிலும், இரவிலும் இருள் நீங்க எரிப்பினும் இருள் பொதிந்து நிற்கும் அறைபோல நின்று மறைத்தலையே செய்வன்.

குறிப்புரை :

`ஓளியுடையோர்` என்னும் பொருட்டாகிய `தேவர்` என்னும் பெயர், இங்கு இடுகுறியாகாது காரணமாய் நின்று, `ஞானிகள்` எனப் பொருள் தந்தது. இறைவன், பரிபாகிகட்கு அறிவா யும் ஞானிகட்கு இன்பமாயும் விளங்குவன். இவை இரண்டுமே, `அருளல்` எனப்படும் என்க. முன்னர், ``தெருளும் உலகிற்கும் தேவர்க்கும்`` என்றதனால், பின்னர், `ஏனையோர்க்கு` என்பது போந்தது. ``செய்யும்`` என்றது முற்று. சுருளும் சுடர் - எதிர்ப்பட்ட பொருள்கள் வெதும்பி மடிதற்கு ஏதுவாகிய ஒளி; ஞாயிறு. `நின்றும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தல். `நிற்ப` என்பது ``நின்று`` எனத் திரிந்துநின்றது. ``இருட்டறை``, இறந்த கால வினைத்தொகை. இருளுதலை, `இருட்டுதல்` எனவும் வழங்குப. ``ஆம்``என்றது, ``போல்வான்`` என உவமமாய் நின்றது.
இதனால், மறைத்தல் பரிபாகம் இல்லாதார்மேலதாயே நிகழ்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.

பொழிப்புரை :

தான் ஒருவனே, நிலமுதல் நாதம் ஈறாய கருவிகள், நால்வகை வாக்குக்கள், நான்காகவும் எட்டாகவும் பத்தாகவும் மற்றும் பலவாகவும் சொல்லப்படுகின்ற திசைகள், ஒன்றோடு ஒன்று ஒவ்வாது பல்வேறு வகையினவாய் நிற்கின்ற உடம்புகளும் பிறவுமாகிய உருவங்கள், நிலவுலகம் முதலிய உலகங்கள் இவை அனைத்துமாய் நின்று, மெய்யுணர்வைத் தடுக்கின்ற அப்பொருள்களை ஆக்கிய, எல்லா உயிர்களாலும் அறிந்து அடையத்தக்க இறைவனே அத் தடையை நிகழ்விக்கின்ற மறக்கருணையைச் செய்கின்றான்.

குறிப்புரை :

`அரைக்கின்ற, கரக்கின்ற` என்பவற்றின் ஈற்று அகரங்கள் தொகுத்தலாயின. அரைக்கின்ற அருள் - துன்புறுத்துகின்ற கருணை; மறக்கருணை; என்றது திரோபவத்தை. `அரிக்கின்றருள்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். ``தரும்`` என்றது முற்று. தனித்து நில்லாது தொக்குநின்று காரியத்தைத் தோற்றுவித்தலின், நிலம் முதலிய கருவிகளை, ``அங்கங்கள்`` என்றார். அங்கங்கள் முதலாக வேண்டும் இடங்களில் தொகுக்கப்பட்ட எண்ணும்மைகளை விரித்துக் கொள்க. ``தான்`` என்பதனை முதலில் வைத்து உரைக்க.
இதனால், சிவபெருமான் உலகத்தை ஆக்கி, அதனுட்கரந்து நின்று திரோபவிக்குமாறு கூறப்பட்டது. ``அருள்`` என்றதனால், மறைத்தலும் அருளேயாதல் குறித்தார்.

பண் :

பாடல் எண் : 7

ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டிறைஞ்சின்நும் வேட்சியுமாமே.

பொழிப்புரை :

மறைத்தலைச் செய்கின்ற அவனை அவன் என்னேடு உடனாய் நிற்கின்ற அருட்டொடர்பை உணர்ந்து பிறர் அறி யாதவாறு என் உள்ளத்திலே மறைத்து வைத்தேன். அதனால், இனி அவன் எனக்கு வெளிப்படையாகத் தோன்றி அருள்புரிதல் திண்ணம். நீவிரும் என்னைப்போலவே அவனது அருட்டொடர்பை உணர்ந்து, அவ்வுணர்வினால் எழுகின்ற இன்பத்தோடு கூடிய `பேரன்பு` என்னும் சிறப்புத் தன்மை வெளிப்பட, அவனை அகத்தும், புறத்தும் வழிபடுவீர்களாயின், `அவன் எமக்கு எப்பொழுது வெளிநிற்பான்` என்று ஏக்கமுற்றிருக்கின்ற உங்கள் வேட்கை நிரம்புவதாகும்.

குறிப்புரை :

மெய்யுணர்வினால் உணர்பவர் உள்ளத்தில் இறைவன் இனிது வெளிப்பட்டுநிற்கவும், பிறர் அவனை `யாண்டுளன்` எனத் தேடி எய்க்கின்றாராதலின், மெய்யுணர் வுடையார், இறைவனைத் தங்கள் உள்ளத்தில் ஒளித்து வைத்திருப் பதாகவும், வெளியே புறப்பட ஒட்டாது தளையிட்டு வைத்ததாகவும் கூறுதலைப் பின்வரும் திரு மொழிகளாலும் உணரலாம்.
ஆர்வல்லார் காண அரனவனை! அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தலைநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து. -தி.11 அம்மைத் திருவந்தாதி, 96
முன்னை ஞான முதல்தனி வித்தினைப்
பின்னை ஞானப் பிறங்கு சடையனை
என்னை ஞானத் திருளறுத் தாண்டவன்
றன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே. -தி.5 ப.91 பா.2
`அவ் வீசனை` எனச் சுட்டு வருவித்து உரைக்க, வேட்சி - வேட்கை. உம்மை இறந்தது தழுவிற்று.
இதனால், மறைத்தலைச் செய்பவனாகிய இறைவனை அருளலைச் செய்பவனாகப் பெறும் முறை கூறப்பட்டது.
(இம் மந்திரத்தின்பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற `நின்றது தானாய்` என்னும் மந்திரம், மேல் 400 ஆவது திருமந்திரமாக வந்தது.)

பண் :

பாடல் எண் : 8

ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கது வாமே. 

பொழிப்புரை :

கடலில் அகப்பட்டவன் அதன் கரையை அடைந்து இன்புறவேண்டி நீந்தும்பொழுது அக்கரை அருகில் வருவதை அறியாதிருத்தல் போலவும், கங்கைக்கரையில் நிற்பவன் அதனுள் மூழ்காமல் கரையிலே நிற்றல்போலவும் மேலான சித்தாகிய ஆன்மா, கீழான மலத்துள் நின்று மாசும் துன்பமும் உடையதாகின்றது.

குறிப்புரை :

இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, `உத்தம சித்தன் பாசத்துள் அழுக்கதுவாம்` எனக் கூட்டி முடிக்க. சித்தாகிய உயிரை, `சித்தன்` என ஆண்பாலாக ஓதியது வடமொழி முறை. ``வருங் கரை`` என்றது, கடற் கரையை என்பது ஆற்றலால் விளங்கிற்று. பேண், முதனிலைத் தொழிற்பெயர். இல் இரண்டும் ஒப்புப் பொருளில் வந்த உருபுகள். ``அழுக்கு`` என்றது, துன்பம், மாசு இரண்டிற்கும் ஒப்பக் கூறியது. துன்பம் நீங்காமைக்கும், மாசு நீங்காமைக்குமாக வேறு வேறான இரண்டு உவமைகள் கூறினார். `நாடி` என்றது பெயர்.
இதனால், பரிபாகம் இல்லாத உயிர் மறைத்தலுட் படுமாறு கூறப்பட்டது.
இதனால், மலபரிபாகம் இல்லாத உயிர்கள் மறைத்தல் தொழிலுட்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின்றானே. 

பொழிப்புரை :

மண் ஓன்றே கலங்கள் (பாத்திரங்கள்) பலவற்றிலும் பொருந்தி நிற்கின்றது. அதுபோலச் சிவபெருமான் ஒருவனே உயிர் கள் அனைத்தினுள்ளும் நிற்பான். ஆயினும், கண் பிற பொருளைக் காணுமாயினும், தன்னையும், தன்னொடு பொருந்தியுள்ள உயிரையும் காணாததுபோல, உயிர்கள் பிறவற்றை அறியுமாயினும், தம்மையும், தம்மோடு உடனாய் நிற்கின்ற சிவனையும் அறிதல் இல்லை.

குறிப்புரை :

முதற்காரண நிமித்த காரணமாய வேறுபாடு உண்டா யினும், ஒன்று பலவற்றுள் நிற்றல் மாத்திரைக்கு மண்ணை உவமை கூறினார். பொருளால் உவமத்துள் கண் உயிரைக் காணாமையும், உவமத்தால் பொருட்கண் தம்மைக் காணாமையும் கொள்ள வைத்தார். ``இவ்வண்ணம்`` என்றது;` உயிர் கண்ணினது காட்சிக்கு அகப்படாது நிற்றல் போல` என்றவாறு. உயிர் காணாமையை இறைவன் மேல் வைத்து ஓதினார், இங்குக் கூறுகின்றது அவன் தொழிலாதல்பற்றி. இத்திருமந்திரப் பொருளே பற்றி மெய்கண்டதேவர்,
காட்டிய கண்ணே தனைக்காணா; கண்ணுக்குக்
காட்டிய உள்ளத்தைக் கண்காணா - காட்டிய
உள்ளம் தனைக்காணா; உள்ளத்தின் கண்ணாய
கள்வன்றான் உள்ளத்தின் கண். .
- சிவஞானபோதம் - சூ 9, அதி 1.
என ஓதினமை காண்க.
இதனால், மறைத்தல் தொழில் நிகழுமாற்றிற்கு உவமை கூறப் பட்டது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...