இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்
பண் :
பாடல் எண் : 1
எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை
கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே.
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை
கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே.
பொழிப்புரை :
`காற்று,
நீர், நெருப்பு, நிலம், வானம்` என்னும் ஐம்பெரும் பூதங்களும்
ஒருங்கியைத்துப் பின்னிய `உயிருக்கு இடம்` எனச் சொல்லப்படுகின்ற இந்த
உடம்பாகிய பைக்குள் உயிர்களை முன்பு அடைத்துக் கட்டிவைத்துப் பின்பு
அவிழ்த்து வெளிவிடுகின் றான் சிவபெருமான்.
குறிப்புரை :
``வட்டத்
திரை``, கடல்; பின்மொழி ஆகுபெயர். இது நீரைக் குறித்தது. ``ஒட்டி``
என்பதன்பின் `ஆக்கிய` என ஒருசொல் வருவிக்க. `கட்டியவன் கட்டியவாறே
விட்டொழிதல் இல்லை; அவிழ்க்கின்றான்` என அருளலாகிய அறக்கருணையது சிறப்பை
உணர்த்தினார்.
இதனால், பந்தமாகிய மறைத்தலையேயன்றி, வீடாகிய அருளலைச் செய்பவனும் சிவபெருமானே என்பது கூறப்பட்டது.
``கட்டிய நீயே அவிழ்க்கின் அல்ல
தெட்டனை யாயினும் யான் அவிழ்க் கறியேன்``
-திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது - 9
என்று அருளியதும் இதனை.

பாடல் எண் : 2
உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சு மவனே சமைக்கவல் லானே.
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சு மவனே சமைக்கவல் லானே.
பொழிப்புரை :
தம்
தலைக்குப் பன்னிரண்டங்குலத்திற்கு மேலாய் ஓங்கி, அறிவு வடிவாய் ஒலிக்கின்ற
சிவபெருமானது திருவடிச் சிலம்பொலியையே விரும்பிக் கேட்டு அதனால், இன்பம்
அடை பவர்கட்கு இறப்பு இல்லை. உலகமாகிய தேர்க்கு உறுப்புக்களாகிய நிலம்
முதலிய பூதங்களும், முச்சுடர்களும் ஆகிய பொருள்களையும் படைத்து, அவற்றால்
அத்தேரினைப் பண்ணி இயங்க விடுகின்ற தச்சராகிய வினைஞர்களைப் படைப்பவனும்
அவனேயாகலின்.
குறிப்புரை :
`பிறப்பு
இறப்புக்களைத் தந்து நிற்பவனாகிய தலைவனை அடைதலையன்றி, அவ்வல்லல்
தீர்வதற்கு வழி வேறில்லை` என்றவாறு. இறப்பாவது, இப்பிறப்பிற்கு ஏதுவாக
முகந்துகொண்ட வினை முடிவெய்த, மறு பிறப்பிற்கு ஏதுவாம் வினை வந்து
நிற்றலின் இவ்வுடல் நீங்குதலாம். இந்த நீக்கத்தையே யமன் செய்வன். இறைவனது
திருவருள் பெற்றார்க்கு அவர் பல பிறப்புக்களிலும் ஈட்டக் குவிந்து
கிடக்கும் சஞ்சித வினை அவனது அருள்நோக்கத்தானே சுட்டெரிக்கப்படுதலின்,
அவர்க்கு மறுபிறப்பிற்கு ஏதுவாய் வரும் வினை இல்லையாம். ஆகவே, அவர்க்கு
இவ்வுடம்பு நீங்கியபின் கிடைப்பது முத்தியேயாகும். இந்நீக்கத்தினை இவர்க்கு
`நீலருத்திரர் செய்வார்` எனச் சிவாகமங்களும், `சிவகணத்தினர் செய்வர்` எனப்
புராணங்களும் கூறும். ஆகவே, `இவர்கட்கு நமன் இல்லை` என்றார். எனவே, `சாவா
நிலை` எனப்படுவது இதுவே என்பது இனிது விளங்கும். இஃது அறியாதார், `உடல்
நீக்கம் யாவும் சாவே` என மயங்கி, `இறைவன் திருவருள் பெற்றாரும்
சாவாதிருந்திலர்` என்று இகழ்தலும், `உடல் நீங்காது நிலைக்கப்பெறுதலே
திருவருள் நிலை` எனக்கொண்டு அதனைப்பெறப் பெரிதும் விழைதலும், உழத்தலும்
செய்வர். அவையெல்லாம் அருளாசிரியரது அருள்மொழிகளின் பொருளை உள்ளவாறு உணரும்
ஆற்றல் இல்லாமையால் விளைவனவே என உணர்க. அருளாசிரியராயினார் ஒருவரும் உடலை
நிலைக்கப்பண்ண எண்ணாமை அறிக. திருவருள் பெறாதார் எடுத்த உடலினின்று
நீங்குதல், ஒருவர் குடியிருந்த வீட்டிற்கு உடையவர் அவரை அதினின்றும்
போக்கப்போவது போல்வதும், திருவருள் பெற்றார் எடுத்த உடலின் நீங்குதல் பிறர்
வீட்டில் குடியிருந்தவர் தமக்கென வீடு அமைந்தமையால் குடியிருந்த வீட்டை
விடுத்துப்போதல் போல்வது மாம். ஆகவே, இருதிறத்தாரும் தாம் இருந்த வீட்டை
விடுத்துச் செல்லுதல் காணப்படுமாயினும் அச்செலவு இரண்டினிடை உள்ள வேறுபாடு
பெரிதாதல்போல, சாகின்றவரும், வீடுபெறுகின்றவரும் எடுத்த உடலின்
நீங்குவாராயினும், அவ்விருவரது நீக்கத்திடை உள்ள வேறுபாடு பெரிது என்க.
வித்து, `விச்சு` என மருவிற்று, ``விச்சதின்றியே விளைவு செய்குவாய்`` (தி.8 திருச்சதகம், 96) ``விச்சின் றிநாறுசெய்வானும்`` (தி.4 ப.4 பா.2) என்பவற்றிற் போல. `உலகப் பகுதிகள் எட்டு` என்னும் வகைபற்றி ஓதுகின்றாராதலானும், மேலைத் திருமந்திரத் தொடர்பானும், உலகிற்கு வித்துப் பூதங்களாகவே உரைக்கப்பட்டது. தச்சனை, ``தச்சு`` என்றது, `அரசு, அமைச்சு` என்பனபோல ஒற்றுமை வழக்கு. இது குறிப்புருவகமாக லின், `வித்து, உலகு` என்பவற்றிற்கு உரிய உருவகங்களும் விரித்து உரைக்கப்பட்டன.
இதனால், பிற தொழில்களைப் பிறர்பால் வைத்துச் செய் யினும், அருளல் தொழிலை அவனன்றிச் செய்வார் இல்லை என்பது கூறப்பட்டது.
`பட்டிப் பசுவைக் கால்சேரக் கட்டியவனே அதற்கு அப் பட்டித்தன்மை நீங்கியபின்னர் அவிழ்த்தல்போல, இறைவனும் ஆணவம் உடைய உயிர்களைக் கன்மம் மாயைகளுட் படுத்து, ஆணவம் நீங்கியபின்னர் அவற்றினின்றும் விடுப்பன்` என்றற்கு, ``கட்டி அவிழ்ப்பன்`` என்று முதற்கண் அருளிச்செய்தவர், அவிழ்க் கின்ற அவ்வருளின் சிறப்புத் தோன்றுதற் பொருட்டு அவன் கட்டுங் காலத்துக் கட்டியவாற்றை எல்லாம் விரிக்கின்றார். இதுமேல் போந்த விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் தச்சும் அவனே சமைத்தலின் விரிவாதல் உணர்க.

பாடல் எண் : 3
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
அசைவில் உலகம் அதுஇது வாமே.
குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
அசைவில் உலகம் அதுஇது வாமே.
பொழிப்புரை :
மட்கலத்தை
வனைகின்ற குயவன் மண்ணைக் கொண்டு ஒருவகைக் கலத்தையே வனையாது, குடம் சால்
கரகம் முதலாகப் பல்வேறு வகைப்பட வனைவன். அதுபோலவே, எங்கள் சிவபெருமானது
இச்சையால் தளர்வில்லாத உலகம் பல்வேறு வகைப்படத் தோன்றும்.
குறிப்புரை :
``அது
இது ஆம்`` என்றது, `பல்வேறு வகையினவாம்` என்றவாறு. `அங்ஙனம் பல்வேறாகத்
தோற்றுவிக்க விரும்புதல், உயிர்களது கன்மத்துக்கு ஏற்பவாம்` என்பது, குயவன்
பல்வேறாக வனைதல், கொள்வார் விருப்பம் நோக்கியதாலாகிய உவமத்தால் பெற்றாம்.
உவமைக்கேற்ப, `வேண்டி உலகத்தை அது இதுவாக வனைவான்` என்று இறைவன் மேல்
வைத்து ஓதாது. ``உலகம் அது இது ஆம்`` என உலகின்மேல் வைத்து ஓதினார், குயவன்
கருவியால் செய்தல்போலச் செய்யாது இறைவன் நினைவு மாத்திரையானே செய்ய அவனது
முன்பில் உலகம் தொழிற்படும் என்றற்கு.
இதனால், கட்டிய வகை ஒன்றன்றிப் பல என்பது பொது வகையால் கூறப்பட்டது. இதனானே, அவிழ்க்கும் காலத்து அவை அனைத்தையும் முற்ற நீக்குதல் பெறப்பட்டது.
இதனால், கட்டிய வகை ஒன்றன்றிப் பல என்பது பொது வகையால் கூறப்பட்டது. இதனானே, அவிழ்க்கும் காலத்து அவை அனைத்தையும் முற்ற நீக்குதல் பெறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 4
விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉல காக்கும்
கொடையுடை யான்குணம் எண்குண மாகும்
சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.
படையுடை யான்பரி சேஉல காக்கும்
கொடையுடை யான்குணம் எண்குண மாகும்
சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.
பொழிப்புரை :
நன்மையே
(மங்கலமே) வடிவாய் உள்ள சிவ பெருமான் உலகியிலின் வேறுபட்டவன்; அஃது அவன்
இடபத்தையே ஊர்தியாகவும், பூதங்களையே உறுதிச் சுற்றமாகவும் கொண்டிருத்த லால்
விளங்கும். அதனால், உயிர்களின் வினைகட்குத் தக்க பரிசாக உலகத்தைப்
படைத்துக் கொடுக்கும் கொடையாளனும், கொடுத்து அவ்வுயிர்களின் அறிவிற்கறிவாய்
நின்று வினைப் பயனைத் துய்ப்பித்து அவை செவ்வி முதிர்ந்த காலத்தில்
வீடுபெறச் செய்கின்றவனும் அவனே.
குறிப்புரை :
``குணமே
குணமாகும் சடையுடையான்`` என்பதனை முதற்கண் வைத்து, `விகிர்தன்` என்றதனை
அதன் பின்னர்க்கூட்டி, அதன்பின்னும், `படையுடையான்` என்பதன் பின்னும்
``ஆதலின்`` என்னும் சொல்லெச்சங்கள் வருவிக்க. ``குணம்`` இரண்டனுள் முன்னது
`நன்மை` என்னும் பொருட்டு. ``குணம் நாடிக் குற்றமும் நாடி`` (குறள், 504)
``குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டி`` (தி.8 திருவம்மானை, 20)
``குன்றே யனைய குற்றங்கள் குணமாம் என்றே நீகொண்டால் - என்றான் கெட்டது``
(தி.8 குழைத்த பத்து, 3) ``குற்றம் செய்யினும் குணம்எனக் கருதும் கொள்கை
கண்டு`` (தி.7 ப.55 பா.4) என்பவற்றிற் போல. `குணம் எண்குணமாம்` எனவும்
பாடம் ஓதுப.
இதனால், சிவபெருமானே கட்டவும், அவிழ்க்கவும் வல்லனாதல் தெளிவிக்கப்பட்டது.
``கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந்து ஏறியவாறு எனக்கறிய இயம்பேடீ``
-தி.8 திருச்சாழல், 15
என்றருளியவாற்றால், இடப ஊர்தி உலகியலுக்கு ஒவ்வாமை பெறப் படும்.

பாடல் எண் : 5
உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.
பொழிப்புரை :
சிவபெருமான்
`சுத்தம், மிச்சிரம், அசுத்தம்` என்பனவாக உலகங்களை முத்திறத்துப் பல்வேறு
வகைப்படப் படைத்ததும், `நல்லூழி, தீயூழி, பொதுவூழி` என்பனவாகக் காலங்களை
முத்திறத்துப் பல்வேறு வகைப்படப் படைத்ததும், `நிலம், நீர், தீ, வளி, வான்`
எனப் பூதங்களை ஐந்தாகப் படைத்ததும், உடம்பு களை, தேவஉடம்பு, மக்கள்உடம்பு
முதலாக ஏழு வகையாகப் பலவேறு வகைப்படப் படைத்ததும் எல்லாம் உயிர்கள் உய்ய
வேண்டும் என்று விரும்பியேதான்.
குறிப்புரை :
எனவே, சிவன் குயவன் போலத் தன் நலம் கருதிப் பல படப் படையாது, உயிர்களின் நலம் கருதியே அவ்வாறு படைக் கின்றான் என்றதாம்.
இதனால், படைப்பினை இறைவன் பலபடப் படைத்தற்கண் நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.
இதனால், படைப்பினை இறைவன் பலபடப் படைத்தற்கண் நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.
பண் :
பாடல் எண் : 6
படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.
பொழிப்புரை :
சிவபெருமான்
மேற்கூறியவாறு பலவற்றையும் படைத்து, அவற்றுள் சித்துப்பொருளை
அடிமைகளாகவும், சடப் பொருளை உடைமைகளாகவும் கொண்டு, தான் தலைவனாய் நின்று,
அவையனைத்தையும் ஆள்கின்றான்.
குறிப்புரை :
`ஆகவே, அடிமைகளாகிய உயிர்கட்கு, வேண்டுங் காலத்து வேண்டுவனவற்றைத் தருதல்
அவனுக்குக் கடன்` என்பது குறிப்பெச்சம். ``பல சீவர்`` என்றது, தேவர் ஒழிந்த
பிற உயிர்களை. தேவர், `அமரர்` (இறவாதவர்) எனப்படுதல்பற்றி அவர் பிறவாத வரோ
என ஐயம் நிகழுமாதலின், அது நிகழாமைப் பொருட்டு அவரை வேறு கூறினார்.
இதனால் உயிர்கட்குப் பந்தமும், வீடும் தருதல் அவனுக்குக் கடனாதல் கூறப்பட்டது.
இதனால் உயிர்கட்குப் பந்தமும், வீடும் தருதல் அவனுக்குக் கடனாதல் கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 7
ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.
ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.
பொழிப்புரை :
மேற்கூறிய பலவற்றையும் படைத்த சிவபெருமான், படைத்ததனோடு ஒழியாது, அவற்றைக் காத்தும் நிற்கின்றான்.
குறிப்புரை :
`அதனால், அருளலும் அவனது கடன்` என்பது குறிப்பெச்சம். முதல் மூன்று அடிகள் அனுவாதம்.
இதனால், ஏதுக் காட்டி மேலது வலியுறுத்தப்பட்டது.
இதனால், ஏதுக் காட்டி மேலது வலியுறுத்தப்பட்டது.
பண் :
பாடல் எண் : 8
உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோதமாமே.
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோதமாமே.
பொழிப்புரை :
ஆன்ம
அறிவினுள் நிற்கின்ற அறிவாயும், ஆன்ம அறிவின்வழி உடலை இயக்குதலின்
உடலாயும், தேவர்களும் விரும்பி அடையும் இன்பப் பொருளாயும்,
`மண்ணுலகத்தேவர்` (பூசுரர்) என்று சொல்லப்படுகின்ற அந்தணர்கள் வேதம் முதலிய
வற்றால் புகழ்கின்ற அருட்கோலத்தை உடையவனாயும் உள்ள சிவபெருமானே, கண்ணில்
உள்ள கருமணி, உடல் செல்லுதற்குரிய நன்னெறியைக் காட்டுதல்போல, உயிர்
செல்லுதற்குரிய ஞான நெறியைக் காட்டுகின்ற பேராசிரியனாய் வருவன்.
குறிப்புரை :
`அவ்வாறு
வந்து ஞானத்தை அருளுதலே அநுக்கிரகம் எனப்படுவது` என்பது குறிப்பெச்சம்.
`போதகன்` என்பது குறைந்து நின்றது. இனி, `ஆம்` என்பதனைச் சொல்லெச்சமாகக்
குறைத்து `மாபோதகனே` என்றும் பாடம் ஓதுப.
இதனால், அநுக்கிரகமாவது, இது என்பது கூறப்பட்டது.
இதனால், அநுக்கிரகமாவது, இது என்பது கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 9
ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.
பொழிப்புரை :
ஒருவராலும்
அறியப்படாத சிதாகாசத் திருமேனி யனாகிய சிவபெருமான், மண் முதலிய பூதக்
கூட்டுறவாலாகிய மானுட உடம்பிலே நிற்கின்ற உயிரின்கண், நீரிற் கலந்த பால்போல
வேறற நின்று, செவ்விபெற்ற உயிர்கட்கு அருள் புரிகின்ற செம்மையை
அறியாமையால் மறந்தொழியாது, அறிவால் அறிந்துநின்று, அதனால் விளைகின்ற
இன்பத்தையும் நான் பெற்றேன்.
குறிப்புரை :
`ஆரும்
அறியா அகண்டத் திருவுரு` எனப்பாடம் ஓதுதலும் ஆம். கடம், சிறப்புருவகம்.
இதனால், ``நீர்`` என்றது உயிராதல் பெறப்பட்டது. இவ்வுயிர், மலம் நீங்கிய
சுத்தான்ம சைதன்னியம் என்க. `இதனையே இறைவன் தானாக ஆவேசித்து நின்று
பக்குவிகளுக்கு ஞானத்தை உணர்த்துவன்` என்பது,
``இனி இவ்வான்மாக்கட்குத் தமது முதல்தானே குருவுமாய் உணர்த்தும் என்றது, அவன் அந்நியமின்றிச் சைதன்னிய சொரூபியாய் நிற்றலான்`` (சிவஞானபோத வார்த்திகம் - சூ. 8).
என்றதனானும், அதன் உரையானும் உணர்க. நேர்மை - செம்மை. திரோபவம் அவனுக்கு இயற்கையன்றாக அநுக்கிரகமே இயற்கையாதல்பற்றி ``நேர்மை`` என்றார். இனி `நேர்மை - நுட்பம்` எனினுமாம். இவ்வாறு சிவனே குருவாய் நிற்றலை அறிதலும், அறிந்தபின்னும் பயிற்சி வயத்தால் மறத்தலை ஒழிதலும் அரியவாதல் பற்றி ``சோராமல் காணும்`` என்றார். காணும் சுகம் - காண்பதனால் விளையும் இன்பம். அது அநுபவத்தாலன்றிக் காட்டப்படாமையின், `அறிந்தேன்` என்றார். இத்திருமந்திரப் பொருளையே மெய்கண்ட நூல்கள் பரக்க எடுத்து விரித்தல் அறிக.
இதனால், அநுக்கிரகத்தின்கண் படுவனவெல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக