இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயிற் குற்றம்
பண் :
பாடல் எண் : 1
தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.
பொழிப்புரை :
ஒரு திருக்கோயிலில் உள்ள அசையாத சிவக் குறியைப் பெயர்த்தெடுத்துக்
கொண்டுபோய் வேறொரு திருக்கோயிலில் நிறுவினால், அச்செயல் முற்றுப்பெறுவதற்கு
முன்பே அரசனது ஆட்சி நிலைகுலையும்; அச்செயலுக்கு உரியவன், தான் இறப்பதற்கு
முன்பு தொழுநோய் கொண்டு துன்புற்று இறப்பான். இவ்வாறு எங்கள் தலைவராகிய
நந்திபெருமான் எங்கட்கு உறுதிப்பட உரைத்தார்.
குறிப்புரை :
எனவே,
`அரசன் தனது நாட்டில் இச்செயல் எங்கும் நிகழாதவாறு காத்தல் வேண்டும்`
எனவும், `அரசன் அறியாதவாறு இச்செயலை முடித்துவிட ஒருவரும் எண்ணலாகாது`
எனவும் கூறியவாறாம். `இலிங்கம் இல்லாத கோயிலின் நலம் கருதி இலிங்கம் உள்ள
கோயிலைப் பாழாக்கிவிடுதல் கூடாது` என்பதும், ஒரு கோயிலில் உள்ள இலிங்கம்
எப்பொழுது யாரால் நிறுவப்பெற்றதோ அதனை அவர்களது கருத்திற்கு மாறாகப்
பெயர்த்துக்கொண்டுபோய் வேறிடத்தில் வைத்தல் கூடாது என்பதும் கருத்து.
`சிறந்து விளங்கும் கோயிலில் உள்ள இலிங்கத்தைக் கொண்டுபோய்ப் புதிய
கோயிலில் நிறுவினால் அக்கோயிலுக்குச் சிறப்பு உண்டாகும்; இதனால்
குற்றமில்லை` என்று எண்ணும் சிலரது அறியாமையைப் போக்குதற் பொருட்டு
இத்திருமந்திரத்தை அருளிச்செய்தார். இதனானே, ஒரு கோயிலில் முன்பு உள்ள
மூர்த்தியைத் தக்க காரணம் இல்லாமல் நீக்கி வேறொரு மூர்த்தியை நிறுவுதலும்
குற்றம் என்பது பெறப்பட்டது.
இதனால், திருக்கோயிலில் உள்ள மூர்த்திக்குச் செய்யும் குற்றம் விலக்கப்பட்டது.
இதனால், திருக்கோயிலில் உள்ள மூர்த்திக்குச் செய்யும் குற்றம் விலக்கப்பட்டது.
பண் :
பாடல் எண் : 2
கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.
வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.
பொழிப்புரை :
திருக்கோயிலில் மதிலைக்கட்டுவித்தவரே பின்பு பொருளாசை முதலிய காரணங்களால்
அதினின்றும் ஒரு கல்லை எடுப்பினும், சாதாக்கிய தத்துவத்தில் இருந்துகொண்டு
ஆகமங்களை அருளிச்செய்த சதாசிவ மூர்த்தியின் ஆணை அவரை அழிக்கும். அக்
குற்றம் நிகழாவாறு காவாமைபற்றி, அப்பொழுது முடிசூடி ஆள்கின்ற அந்நாட்டு
அரசரையும் அவ்வாணை இடருறச் செய்யும். அக் குற்றத்தைச் செய்தவர், `முனிவர்`
என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற அந்தணராயினும், அவ்வாணை அவரைக்
கொலையுண்டு மடியவே செய்யும்.
குறிப்புரை :
`கட்டுவித்தவர்க்கே இவ்வாறாம் எனின், பிறர் அது செய்யக் கருதுவராயின்
என்னாவார்` என்பது சொல்ல வேண்டா வாயிற்று. இதனானே, கோயில் மதில்
முதலியவற்றிற்கே யன்றி அதன் உள்ளிடம், திருக்குளம், நந்தவனம்
முதலியவற்றிற்கும் பழுதுண்டாக்க லாகாமை அறிந்துகொள்க. ``வாங்கிய``
என்பதன்பின், `அவரை` என்பது வருவிக்க.
இதனால், திருக்கோயில் முதலிய இறைவன் இடத்திற்குச் செய்யும் குற்றம் விலக்கப்பட்டது.
இதனால், திருக்கோயில் முதலிய இறைவன் இடத்திற்குச் செய்யும் குற்றம் விலக்கப்பட்டது.
பண் :
பாடல் எண் : 3
ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.
பொழிப்புரை :
சிவபெருமானது
திருக்கோயில்களில் அன்றாட வழிபாடு, சிறப்புநாள் விழாக்கள் முதலியவை
இல்லாதொழியினும், ஆகமங்களில் சொல்லப்பட்ட முறை தவறி நடப்பினும், நாட்டில்
தீர்க்கலாகாத நோய்கள் பரவி, மழையும் பொய்த்துப்போக, சிற்றரசரால்
வணங்கப்படுகின்ற பேரரசர்களும் பகைவரை வெல்லும் வலியிலராய்த் தம் நாட்டை
இழப்பர்.
குறிப்புரை :
ஆதலால்,
அரசர் தம் நாட்டில் திருக்கோயில்களில் நித்திய நைமித்திகங்கள் செவ்வனே
நடைபெறச் செய்தலைத் தம் தலையாய கடமையாகக் கொள்ளல் வேண்டும் என்பதாயிற்று.
``அவனி`` என்றது, அக்கோயிலில் உள்ள நாட்டைக் குறித்தது. ``பூசை`` என்றது
நைமித்திகத்தையும் அடக்கியேயாம். \"மழை குன்றும்\" என்பதும் பாடம்.
பண் :
பாடல் எண் : 4
முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே.
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே.
பொழிப்புரை :
சிவபெருமானது
திருக்கோயில்களில் மேற்கூறிய குறைகள் உளவாகுமாயின், அரசர்கள் வலிமை
யிழத்தலேயன்றிப் பிற தீமைகளையும் அடைவர். நாட்டில் விளைவும், பிற
வருவாய்களும் குறையும். மாளிகைகளில் கன்னம் இட்டுக் களவாடுதல், கொள்ளை
முதலிய பிற களவுகள் மிகுதியாகும். எங்கள் அருளாசிரியராகிய நந்திபெருமான்
எங்கட்கு இவ்வாறு எடுத்து அருளிச்செய்தார்.
குறிப்புரை :
முதலடி அனுவாதம். கன்னம் இடுதலை முன்னர்ப் பிரித்தமையின், ``களவு`` என்றது பிறவற்றையாயிற்று. `காசினிக்கு` என்பதும் பாடம்.
இவ் இரண்டு திருமந்திரங்களாலும் திருக்கோயில்களில் நித்திய நைமித்திகங்கட்குக் குறையுண்டாகச் செய்தல் விலக்கப் பட்டது.
இவ் இரண்டு திருமந்திரங்களாலும் திருக்கோயில்களில் நித்திய நைமித்திகங்கட்குக் குறையுண்டாகச் செய்தல் விலக்கப் பட்டது.
பண் :
பாடல் எண் : 5
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.
பொழிப்புரை :
பிறப்புப்
பற்றிப் பலராலும் சொல்லப்படுகின்ற `பார்ப்பான்` என்னும் பெயரைமட்டும்
பெற்றுச் சிவபிரானிடத்து அன்பும், சிவாகம அறிவும், ஒழுக்கமும் இல்லாத
அந்தணன் திருக் கோயிலில் சிவபெருமானைப் பிறர் பொருட்டு வழிபடுவானாயின்,
அக்கோயிலை உடைய நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும், வெளி நாட்டுப் போர்களும்
விளைதலோடு, அந்நாட்டில் கொடிய நோய் களும், வயல்கள் வன்னிலங்களாய்
விளைவில்லாது பஞ்சமும் உள வாகும் என்று எங்கள் திருமரபின் முதல்வராம்
சிறப்புப் பொருந்திய நந்திபெருமான் எங்கட்கு ஆகமங்களை ஆய்ந்துரைத்
தருளினார்.
குறிப்புரை :
``மறப்பினும்
ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்``(குறள், 134) எனவும், ``அந்தணர் நூல்``
(குறள், 543) எனவும் கூறியவாற்றால், வேதம், `அரசரும், வணிகரும்` என்னும்
ஏனையிருவர்க்கும் பொதுமையின் உரியதாயினும், அந்தணர்க்கே சிறந்ததாதல்
அறியப்படும். படவே, `வேதம் ஓதுதலைத் தொழிலாக உடையோரே அந்தணர்` என்பதும்
போதரும்.
திருவள்ளுவர், ``பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்`` (குறள்,
134) என்று ஓதுதலானும், பிறப்புப் பற்றிவரும் பெயரைப் பெறாமல், வேதாகமங்களை
ஓதும் தொழிலாகிய சிறப்பை மட்டும் பெற்ற அந்தணன் சிவபிரானைப் பிறர்
பொருட்டு அர்ச்சித்தலை இங்கு நாயனார் விலக்காமையானும் பிறப்பைவிடச் சிறப்பே
அர்ச்சனைக்கு யாண்டும் வேண்டப்படுதல் விளங்கும்.
பிறப்பாவது சில பல தலைமுறைகளில் உள்ளார், ஒழியாது ஒரு தொழிலே
கடைப்பிடித்தமை பற்றி அவர் அந்தணர் முதலிய பெயரைப் பெற்று நிற்க, அவர்தம்
வழித் தோன்றலாய்ப் பிறந்தோரும் அப்பிறப்புப் பற்றி அப்பெயரை உடையராதல்.
சிறப்பாவது அவரவர் அவ்வப்பொழுது தத்தமக்குரியதாகக் கொண்ட தொழில்.
சிறப்பு நிலையில் சிவபெருமானையே முதற் கடவுளாகக் கொண்டு திருநீறும்
உருத்திராக்கமும் ஆகிய சிவசின்னங்களை அணிந்து அப்பெருமானை வழிபடுவோர்
யாவரும் `சைவர்` எனப் படுவர். அவருள் சிவாகமத்தின்வழித் தீக்கை பெற்றோர்
`சிறப்புச் சைவர்` எனவும், அவ்வாறு தீக்கை பெறாதோர், `பொதுச் சைவர்` எனவும்
பெயர் பெறுவர். சிறப்புச் சைவருள் உபநயனமும் பெற்றுச் சிவாகமத்தைப்
பொதுவாகவும், வேதத்தைச் சிறப்பாகவும் ஓது தலையே தொழிலாகக் கொண்டு
சிவபெருமானை வேத மந்திரங் களால் வேத விதிப்படி வழிபடுவோர் `மகா சைவர்`
என்றும், வேதத்தைப் பொதுவாகவும், சிவாகமத்தைச் சிறப்பாகவும் ஓது தலையே
தொழிலாகக் கொண்டு, சிவபெருமானைச் சிவாகம மந்திரங் களால், சிவாகம விதிப்படி
வழிபடுவோர் `ஆதி சைவர்` எனவும் பெயர்பெறுவர். மகாசைவரும், ஆதிசைவரும்
உபநயனமும் பெற்று வேதாகமங்களை ஓதுதலையே தொழிலாக உடைமையால், `அந்தணர்`
எனவும் படுவர். ஆகவே, மகா சைவர் `மகாசைவ அந்தணர்` என்றும், ஆதி சைவர்
`ஆதிசைவ அந்தணர்` என்றும் சொல் லப்படுவர். இவருள் மகாசைவ அந்தணர் சிவாகமவழி
நில்லா மையால், அவருக்கு ஆசாரியாபிடேகமும், அதன்வழி வரும் ஆசிரியத்
தன்மையும் இல்லை. அதனால், அவர் சைவரல்லாத பிறர்க்கே ஆசிரியராதற்கு உரியர்.
ஆதி சைவ அந்தணர் சிவா கமத்தையே சிறப்பாக ஓதி அவற்றின்வழி நிற்றலால்,
அவருக்கே அபி டேகமும், அதன்வழி ஆசிரியத் தன்மையும் பெறும் உரிமை உண்டு. உபநயனம் இன்றி வேதத்தில் உரிமை கிட்டாததுபோலச் சிவ தீக்கையின்றிச்
சிவாகமத்தில் உரிமை கிட்டாது. அதனால்; சிவ தீக்கையின்றி உபநயனம் மட்டுமே
பெற்று வேதத்தை ஓதுதல், ஓதுவித்தல், வேதத்தின்வழி வேட்டல்,
வேட்பித்தல்களைச் செய்து, சிவபெருமானையே முதற்கடவுளாகக் கொள்ளுதலில்
வழுவாது நிற்போர், `வைதிக சைவர்` எனப் பெயர்பெறுவர். அதனால், இவர் `வைதிக
சைவ அந்தணர்` எனப்படுவர். இவர் பொதுச் சைவரே. இவர் சிவாகமங்களை இகழார்.
வேதத்தை ஓதுதல், ஓதுவித்தல், அவற்றின்வழி வேட்டல், வேட்பித்தல்களைச்
செய்யினும், சிவபெருமானை முதல்வனாகக் கொள்ளாமல் பிறவாறு கொள்வோருள்
சிவாகமங்களையும், அவற்றின் வழி நிகழும் தீக்கை முதலியவற்றையும் இகழ்வோர்
ஒருவாற்றானும் `சைவர்` எனப்படாமையேயன்றி, அவர் அந்தணராதலும் இல்லை என்னும்
கருத்தால், `துர்ப்பிராமணர்` எனச் சைவர்களாலும், சைவ நூல்களாலும்
இகழப்படுவர். செந்நெறியில் நில்லாது கொடுநெறியில் செல்லுதலால் இவரை,
`கொடுநெறி அந்தணர்` எனலாம்.
பிறப்பு மாத்திரத்தால் ஆதி சைவ அந்தணரும், மகாசைவ அந்தணருமாய்ப் பிறந்து,
அவற்றிற்குரிய நெறியில் நில்லாதோர் `அப்பிராமணர்` எனப்படுவர். இவரை
`ஒழுக்கமில் அந்தணர்` எனலாம். இன்னும் புறத்தே சிவவேடம் புனையினும், அகத்தே
சிவபிரானை முதற் கடவுளாகக் கொண்டு சிறப்பு வகையில் அன்பு செய்யாத
அந்தணரும் அப்பிராமணரேயாவர். இவர் யாவரும் `பார்ப்பார்` எனவே படுகின்றனர்.
அதனால், ஆதிசைவப் பார்ப்பார், மகாசைவப் பார்ப்பார், வைதிகசைவப் பார்ப்பார்,
கொடுநெறிப் பார்ப்பார், ஒழுக்கமில் பார்ப்பார் எனப் பெயரால், பார்ப்பார்
ஐவகையராகின்றனர். `இவருள், ஆதிசைவப் பார்ப்பாரே தலை யாயவர்` என்பது
மேற்கூறியவாற்றானே இனிது விளங்கிக் கிடத்தலால், அவரையே, `உண்மைப்
பார்ப்பார்` என வைத்து, ஏனை நால்வரையும் நாயனார் பேர்கொண்ட பார்ப்பாராக
ஓதினார் என்பது நன்கு பெறப்பட்டது.
``அர்ச்சிக்கில்`` என்பதில் அர்ச்சித்தல், `பிறர்பொருட்டு` என்பது,
பின்னர்க் கூறிய தீய விளைவுகளை நாட்டிற்கு ஓதிய குறிப் பால்
நன்கறியப்படும். பிறர்பொருட்டு வழிபடுதல், `பரார்த்த பூை\\\\u2970?`
எனப்படும். ஆன்மார்த்த பூசையை அவரவரும் தமக்கென எழுந்
தருளுவித்துக்கொள்ளும் விருப்பக் குறி (இட்டலிங்கம்) ஆகிய பெயர் வுடைக்
குறியில் (சல லிங்கத்தில்) செய்தல், எளிதின் இயல வேண்டிய தேயன்றித்
திருக்கோயிலில் உள்ள பெயராக் குறியில் (அசல லிங்கத்தில்) செய்தல்
விலக்கப்பட்டதன்று. திருக்கோயிலில் சென்று ஆன்மார்த்த பூசையைச் செய்தல்
அரிதாதலின், அது பண்டே அருகி விட்டது. ஆன்மார்த்த பூசையைச் சைவர்கள்
திருக்கோயிலில் சென்று செய்து வந்தமைக்குத் தி.12 திருத்தொண்டர்
புராணத்தில் உள்ள திரு நீலநக்க நாயனார், அரிவாட்ட நாயனார் இவர்களது
வரலாறுகளே போதிய சான்றாகும். இவ்விருவரும் செய்த பூசை ஆன்மார்த்த பூசையே
என்பது அவ்வரலாறுகளிலேயே தெற்றென விளங்கிக் கிடப்பது. திருக் கோயில்களில்
மூல இலிங்கமேயன்றி, அதனைச் சூழ வேறும் சில இலிங்கங்கள் காணப்படுதல்,
அங்குச் சென்று ஆன்மார்த்த பூசை செய்வோர் அவைகளையே மூல இலிங்கமாகக் கருதிக்
கொண்டு அவற்றில் அவ் வழிபாட்டினைச் செய்தற்பொருட்டேயாம். இனி, மூல
இலிங்கங்கள்தாமும் ஓரொரு காலத்தில் ஓரோவொருவர் ஓரோஒரு பயன்கருதி நிறுவித்
தம் பொருட்டாக வழிபட்டு அப்பயன்களைப் பெற்றுப் பின் நிலையாக வைத்துச்
சென்றனவே எனத் தல புராணங்கள் பலவும் இனிதெடுத்து விளம்புதலும்
கருதத்தக்கது.
`ஆன்மார்த்தம், பரார்த்தம்` என்னும் பகுப்புப் பூசையின் பயனைப் பெறுவாரை நோக்கியதன்றிப் பூசிக்கப்படும் மூர்த்தியை நோக்கியதன்றாதல் வெளிப்படை. அஃதாவது, பூசை செய்பவர், `அப் பூசையின் பயன் தமக்கு ஆகுக` என நினைத்துச் செய்தல் ஆன்மார்த்த பூசையும், `பிறர்க்கு ஆகுக` என நினைத்துச் செய்தல் பரார்த்த பூசையும் ஆகும். அதனால், திருக்கோயிலில் உள்ள மூர்த்தியையே தம் பொருட்டாகப் பூசிக்கின் அஃது ஆன்மார்த்த பூசையாதலும், தாம் எழுந்தருளுவித்துக் கொண்ட மூர்த்தியையை பிறர் பொருட்டாகப் பூசிக்கின் பரார்த்த பூசையாதலும் தாமே விளங்கும். எனினும், பெரும்பான்மை பற்றித் திருக்கோயிற் பூசை பாரார்த்தமாகவும், தம் பொருட்டாய மூர்த்தி பூசை ஆன்மார்த் தமாகவும் சொல்லப் படுகின்றன. `இவற்றுள் திருக்கோயிலில் உள்ள மூர்த்தியைப் பிறர் பொருட்டாகப் பூசிக்கும் உரிமை சிறப்புச் சைவ அந்தணருக்கே சிறப் பாக உரியது` எனவும், `அவருள்ளும் ஆதிசைவ அந்தணர்க்கே சிறப் பாக உரியது` எனவும் வைத்து, ஏனைய அந் தணர்க்கு அஃது இல்லை என்பதையே நாயனார் இத்திரு மந்திரத்தால் அருளிச் செய்தமை அறிக. `மக்களுட் சிறந்தார் அந்தணர்` என்பதே பற்றி, சிறப்புச் சைவ ரல்லாத ஏனை அந்தணரையும் திருக் கோயிலிற் பரார்த்த பூசைக்கு உரியராக்குதலையே நாயனார் இத்திரு மந்திரத்தால் விலக்கினாரன்றிச் சிறப்புச் சைவருள் ஒருவரையும் விலக்கினாரல்லர் என்பது நுண்ணுணர்வான் நோக்கி உணர்ந்து கொள்க.

மேற்கூறிய ஆதிசைவர், மகாசைவரேயன்றிப் பிற சைவரும் உளர். அவர் `அனு சைவர்,
அவாந்தர சைவர், பிரவர சைவர், அந்திய சைவர்` என இவர். சிவபெருமானைப்
பொதுநீக்கி வழிபடுவாருள் நாடாளும் தொழில் உடையவரும், வாணிகத் தொழில்
உடையவரும் அனு சைவர். உழவுத் தொழில் செய்வோர் அவாந்தர சைவர். பிறதொழில்
செய்வோர் பிரவர சைவர். இவரெல்லாரும் சுதந்திரர். யாதொரு தொழிலாயினும்
அதனைப் பிறருக்கு அடியவராய் இருந்து செய்பவர் அந்திய சைவர். எனினும்,
அமைச்சர், படைத்தலைவர் போன்றோர் அரசரோடொப்ப மதிக்கப்படுதலால் அனுசைவரே
யாவர். இங்குக் காட்டிய அறுவகைச் சைவரொடு சதாசிவக் கடவுளையும், `அனாதி
சைவர்` என வைத்துச் சைவர் எழுவராகச் சொல்லப்படுதலை, `சைவ சமயநெறி,
சிவதருமோத்தரம்` முதலிய நூல்களிற் கண்டுகொள்க.
ஆதிசைவரும், மகாசைவரும் சிறப்புச் சைவரேயன்றி, அவருள் பொதுச் சைவர் இல்லை. ஏனைய அனுசைவர் முதலிய நால்வரும் தீக்கை பெறாது இருப்பின் பொதுச் சைவரும், தீக்கை பெற்று இருப்பின் சிறப்புச் சைவரும் ஆவர். எவ்வாற்றானும் சிவனை வழிபடாதவரும், வழிபடினும் பொது நீக்கிச் சிறப்பாக வழிபடாதவரும் `சைவர்` எனப்படார்.

ஊன் உணவும், கட்குடியும் இல்லாதவரே சிவதீக்கை பெறுதற்கு உரியர். அவற்றை
உடையோர் சிவதீக்கையைப் பெறின் அவரும், அவருக்கு அதனைப் பெறுவித்தோரும்
நிரையம் புகுவர். அதனால், தீக்கைக்கு உரியரல்லாதார் பொதுச் சைவராயே இருந்து
சிவநூலை ஓதல், கேட்டல், சிவாலயத்திற்கும், சிவனடியார்க்கும் ஏற்புடைத்
தொண்டு செய்தல் என்னும் இவற்றையே மேற்கொண்டு வாழக்கடவர்.
இனிச் சிவதீக்கையும் அவரவர் ஆற்றலுக்கேற்ப, `சமயம், விசேடம், நிருவாணம்,
அபிடேகம்` என நால்வகைத்தாகும். அவற்றால் அவற்றைப் பெற்றோரும் `சமயிகள்,
புத்திரர், சாதகர், ஆசிரியர்` என நால்வகைப்படுவர்.
சமய தீக்கையாவது, சிவ மூல மந்திரமாகிய திருவைந் தெழுத்தை முறையறிந்து கணித்தற்கும், `சிவாகமம், திருமுறை, சாத்திரம்` என்னும் சைவப் பெருநூல்களை ஓதுதற்கும், சரியை முறை யால் சிவபெருமானைச் சிறக்க வழிபடுதற்கும் உரிமைதந்து, சிறப்புச் சைவராகச் செய்வது. இச்சமய தீக்கை பெற்றோரே `சமயிகள்` எனப்படுவர்.

விசேட தீக்கையாவது, மேற்கூறியவற்றோடு கிரியை முறையாலும், யோக முறையாலும்
சிவபெருமானை வழிபட்டு அவனுக்கு அணுக்கராயும், அவனோடு ஒப்பவும் இருக்கும்
உரிமையைத் தருவது. இதனைப் பெற்றோரே `புத்திரர்` எனப்படுவர்.
நிருவாண தீக்கையாவது, சரியை கிரியா யோகங்களின் பயனாக மலம் பரிபாகமாயிட,
இருவினையொப்பும், நாலாம் சத்தி நிபாதமும் வரப்பெற்று, அதனால் சிவனையே
அடையும் அவா உண்டாகப் பெற்றவர்க்கு அவனை அடையுமாற்றை அறிந்து அடைதற்
பொருட்டு முப்பொருளின் இயல்பை இனிதுணர்த்துவது. இங்ஙனம் உணர்த்தப் பெற்றவர்
சிவபெருமானை அடையும் நெறிக்கண்ணே நிற்றலின், `சாதகர்` எனப்படுவர்.
சமயம் முதலிய தீக்கை மூன்றும் `சாதிகாரை, நிரதிகாரை` எனத் தனித்தனி
இருவகைப்படும். அவற்றுள் சாதிகாரையாவது, நித்திய வழிபாட்டோடு,
`நைமித்திகம், காமியம்` என்னும் இரு வழி பாடுகளையும் இயற்றுதற்கு உரிமை
தருவது. நிரதிகாரையாவது, நித்திய வழிபாடு ஒழிந்த ஏனை இருவழிபாட்டிற்கும்
உரிமை தாராதது.
நித்திய வழிபாடாவது அன்றாடம் காலை, மாலை என்னும் இருபொழுதினும் நீராலும்,
நீற்றாலும், மந்திரங்களாலும் தம்மைத் தூய்மை செய்துகொண்டு, தருப்பணம்
செய்து, சிவபெருமானது திருவைந்தெழுத்தைக் கணித்தலும், வேத சிவாகம திருமுறை
சிவ புராணங்களை ஓதுதலும், கேட்டலும், சிவாலய தரிசனம் செய்தலும், அழல்
ஓம்பலும், சிவனடியார்களை வரவேற்று உணவு முதலியன அளித்தலுமாம்.
நைமித்திக வழிபாடாவது யாதானும் ஒரு சிறப்புப் பற்றிச் சில நாட்களில்
செய்வது. அது, அட்டமி, பூரணை, பிரதோடம், சதுர்த்தசி, மாதப் பிறப்பு, அயனப்
பிறப்பு, சூரிய சந்திர கிரகணங்கள் முதலிய காலங்களில் மேற்கூறியவற்றைச்
சிறப்பாகச் செய்யும் வழிபாடாகும். வேதமாதிய நூல்களைத் தக்கார்க்கு
ஓதுவித்தலும் நைமித்திகமேயாம்.
காமியமாவது தான் செய்த தீவினை நீங்குதல் கருதிச் செய்யப்படும் கழுவாயும்
(பிராயச்சித்தமும்) இம்மை மறுமைப் பயன்களில் ஒன்றையாயினும்,
பலவற்றையாயினும் வேண்டி அவ்வவற்றிற்கு ஏற்ற முறையில் செய்யும் வழிபாடுமாம்.
இவற்றுள் சாதிகார தீக்கை அதனைப் பெற்றபின்னர் நைமித் திகத்தையும்,
காமியத்தையும் தவறாது செய்யும் ஆற்றல் உடையார்க்கே செய்யப்படும். அவ்
வாற்றல் இல்லாதார்க்கெல்லாம் நிரதிகார தீக்கையே செய்யப்படும். நிரதிகார
தீக்கை பெற்றோர் ஓரோவொருகால் தம்பொருட்டாக நைமித்திகமும் காமியமும் செய்ய
விரும்புவராயின், சாதிகார சாதகர் ஆசாரியர் என்போரால் செய்வித்துக்
கொள்ளுதல் வேண்டும்.
சாதிகார சமய விசேட தீக்கைகளுக்குமேல், சாதிகார நிருவாண தீக்கை பெற்றோர்,
நைமித்திக காமியங்களைப் பிறர் பொருட்டாகச் செய்யும் உரிமையையே அபிடேகத்தாற்
பெறுவர். அவ்வுரிமையும் `அங்க உரிமை, அங்கி உரிமை` என இருவகைத்து. அங்க
உரிமையாவது, அங்கிக்கு இன்றியமையாத கழிப்பு (சாந்தி) மண்கோள்
(மிருத்துசங்கிரகணம்) முளை தெளித்தல் (அங்குரார்ப் பணம்) குட நீர்க்கோள்
(கலசாகருடணம்) முதலியவற்றைச் செய்யும் உரிமை. அங்கி உரிமையாவது
தீக்கைசெய்தல், திருக்கோயில்களில் சிறப்புக் காலங்களில் விழா எடுத்தல்,
குடவழிபாடு செய்தல் (கலச பூசை செய்தல்) வேள்வி (யாகம்) செய்தல்
முதலியவற்றில் பெறும் உரிமையாம். ஆன்மார்த்த மூர்த்தியைப் பிறருக்கு
எழுந்தருளு வித்தலும் `விசேட தீக்கை` எனத் தீக்கை செய்தலுள் அடங்குவதாம்.
இவற்றுள், அங்க உரிமைமட்டும் பெற்றோர் `சதகாசாரியர்` எனவும், அங்கி
உரிமையைப் பெற்றோர் `ஆசாரியர்` எனவும் சொல்லப்படுவர். சாதகாசாரியர்,
மணவினை, மாய்ந்தோர்வினை முதலியவற்றில் வேட்டல் முதலியவற்றைச்
செய்வித்தற்கும், சிவன் கோயிலில் நித்திய பூசைக்கும் பிறகோயில்களில்
நித்திய, நைமித்திக, காமியத்திற்கும் உரியராவர். அங்கி உரிமையைப் பெற்ற
ஆசாரியர் எல்லாவற்றிலும் உரிமையுடையராதலின், அவரது உரிமை `பேரதிகாரம்`
எனப்படும்.
ஆசிரியராதற்குச் சத்திநிபாதம், ஒழுக்கம் என்னும் இவை மட்டுமே போதா; சிறந்த
பல நூற்கல்வியும், நல்லுடலும், செய்முறைப் பயிற்சியும் வேண்டும். அவற்றுடன்
இரண்டு தலைமுறைக்குக் குறையாத முன்னோர், ஊனுங் கள்ளும் உண்டறி யாதவராயும்,
அவற்றை உண்பாரொடு உறவுகொள்ளாதவராயும் இருத்தல் வேண்டும். அதனால்,
அபிடேகத்திற்கு உரியவர் ஒருசிலரேயாவர். அவரும் முன்னர்ச் சாதகாசாரியராய்
இருந்து பின்னர் ஆசிரியராதலே பெரும் பான்மை. பெரும்பான்மை ஆதிசைவ
அந்தணருள்ளும் சிறு பான்மை ஏனைச் சைவருள்ளும் ஆசாரியராய் உள்ளவரே சிவன்
கோயிலில் பிறர்பொருட்டுச் செய்யும் பூசையைச் செய்தற்கு உரியர் எனின்,
வைதிகப்பார்ப்பார் முதலிய பிற பார்ப்பனர் எங்ஙனம் திருக்கோயிற் பூசைக்கு
உரியராவார். அதுபற்றியே நாயனார், `பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றனை
அர்ச்சிக்கில் ... ... பஞ்சமும் ஆமே` என்று விலக்கினார். அபிடேகம்
பெற்றாருள் சாதகாசாரியர் சிறுபான்மை பிற பிழைப்புத் தொழில் செய்யினும்,
ஆசாரியர் ஒருபோதும் அவற்றைச் செய்யார்.
அபிடேகம் பெறாது நிருவாண தீக்கை பெற்றோரை, `சாதகர்` என்னாது
`விசேடபுத்திரர்` என்றும், அபிடேகத்தால் அங்கவுரிமை பெற்றோரையே `சாதகர்`
என்றும் கூறுப. ஆதிசைவருள் ஆசாரிய ராயினாரை, `சிவாசாரியர்` என்றும், பிற
சைவருள் ஆசாரிய ராயினாரை `சைவாசாரியர்` என்றும் குறியிட்டு வழங்குவர்.
மாணாக்கர், (பிரமச்சாரிகள்) இல்வாழ்வார், (கிருகத்தர்) இல்லந்துறந்தார்,
(வானப்பிரத்தர்) முற்றத்துறந்தார் (சந்நியாசிகள்) என்னும் நால்வகை
நிலையினருள் மாணாக்கர், `இற்புகா மாணாக்கர்` (நைட்டிகப் பிரமச்சாரிகள்)
என்றும், `இற்புகு மாணாக்கர்` (பௌதிகப் பிரமச்சாரிகள்) என்றும்
இருவகைப்படுவர். மணம்புரிந்து கொள்ளாது வாழ்நாளளவும் மாணாக்கர் நிலையில்
நின்றே வீடு பெறுவோர் இற் புகா மாணாக்கராவர். அவ்வாறின்றி வாய்க்கும்
காலத்தில் மணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்த விரும்புவோர் இற்புகு மாணாக்
கராவர். `இல்வாழ்வார் ஆசாரியராதல் ஆதிசைவருள்ளேயன்றிப் பிற சைவருள் இல்லை`
என்றும், `பிறசைவர் ஆசிரியராதல் வேண்டின், அவர் இற்புகா
மாணாக்கராயிருத்தல் வேண்டும்` என்றும் சில ஆகமங் களில் விதி
காணப்படுகின்றது. எனினும் அதனை, `இவ் யுகத்திற்கு ஒவ்வா விதி` என விடுத்து,
எல்லாச் சைவருள்ளும் அபிடேகத்திற்கு மேற்குறித்த தகுதியெல்லாம் உடையவர்
உரியவர் என்னும் விதியே கொள்ளப்படுகின்றது. அதனால், சிவன்கோயிலில்
பிறர்பொருட்டுச் செய்யப்படும் நித்திய நைமித்திக காமிய வழிபாடு கட்குப் பிற
சைவா சாரியர்களும் மேற்குறித்த சாதக, ஆசாரிய முறையின்படி உரியவரே யாவர்.
ஆயினும், வழக்கில் ஆதிசைவ சாதக, ஆசாரியர்களே சிவன் கோயிலில் பரார்த்த
பூசைக்கு உரியவராய் விளங்குகின்றனர். அங்குப் பூக்கொய்து கொடுத்தல், மாலை
கட்டித் தருதல், திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், திருவிளக்கேற்றுதல்
முதலிய புறத்தொழிலில் மட்டுமன்றித் திருவமுது அமைத்தல், திரு மஞ்சன நீர்
நிரப்புதல், தூபம், தீபம் முதலிய பொருள்களை எடுத்துக் கொடுத்தல் முதலிய
அகத்தொழிலுக்கும் எல்லாச் சைவரும் உரிமை பெறத்தக்கவரே. எனினும்,
வழக்கத்தில் ஆதிசைவ அந்தணர்க்கேற்ப, மகாசைவ அந்தணரேயன்றி வைதிக அந்தணரும்
அத்தொழிலில் உரிமையுடை யாராய் உள்ளனர். `சிவ தீக்கை பெற்றவருள்ளும் சிலர்
தாம் திருக் கோயிலில் அகத் தொழின்மைக்கு உரியர்` என்பது சொல்லப் படுமாயின்,
தீக்கையே இல்லாதவரை அதற்கு உரியராக்குதல் எத்துணை முறைகேடான செயல் என்பதை
எடுத்துக்கூற வேண்டுவது இல்லை.
``செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு நற்கலை
தெரிந்த அவரோ(டு)
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்யஅமர்
கின்ற அரன்ஊர் ... ... ... ...வீழிநகரே`` -தி.3 ப.80 பா.4
தெரிந்த அவரோ(டு)
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்யஅமர்
கின்ற அரன்ஊர் ... ... ... ...வீழிநகரே`` -தி.3 ப.80 பா.4
தடங்கொண்டதோர் தாமரைப் பொன்முடி தன்மேல்
குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்
படங்கொண்டதோர் பாம்பரை யார்த்த பரமன்
இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ.-தி.1 ப.32 பா.2
குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்
படங்கொண்டதோர் பாம்பரை யார்த்த பரமன்
இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ.-தி.1 ப.32 பா.2
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாள்தோறும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையும் செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.-தி.1 ப.61 பா.1
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையும் செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.-தி.1 ப.61 பா.1
பாலினால் நறுநெய்யால் பழத்தினால் பயின்றாட்டி
நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
காலினால் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே.-தி.1 ப.61 பா.5
நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
காலினால் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே.-தி.1 ப.61 பா.5
என்றாற்போலும் அருட்டிருமொழிகளால் `வடமொழி, தென்மொழி` என்னும் மொழி
வேறுபாடும், `ஆதிசைவர், பிற சைவர்` என்னும் இன வேறுபாடும் இன்றி
இருமொழிகளாலும் அனைத்துச் சைவரும் திருக் கோயிலில் சிவபிரானைப்
பல்வகையாலும் நாள்தோறும் முறை வகுத்துக்கொண்டு வழிபாடு செய்தல்
வழக்கத்திலிருந்தமை நன் கறியப்படுதலால், அதற்கு மாறாக, ``ஆதிசைவர்
ஒருவர்தாம் வட மொழியானே திருக்கோயிலில் வழிபாடு செய்தற்கு உரியர்`` எனக்
கட்டளை வகுத்தல், விருத்திப் பொருட்டாகச் செய்யப்பட்டது என்றே
கொள்ளப்படும். இன்னோரன்ன கட்டளைகள் கங்கைகொண்ட சோழன் (முதல் இராசேந்திர
சோழன்) காலத்திற்குப் பிறகே தமிழ்நாட்டில் தோன்றினவாதல் வேண்டும். ஏனெனில்,
``அச்சோழ மன்னன் கங்கைக் கரையிலிருந்து ஆதிசைவர் பலரைக் கொணர்ந்து
தமிழ்நாட்டில் ஆங்காங்குக் குடியேற்றினான்`` என்பது சித்தாந்த சாராவளி
உரையிலேயே சொல்லப்பட்டுள்ளது.
இனி, ``முப்போதும் திருமேனி தீண்டுவார்`` (தி.7 ப.39 பா.10) என்ற சுந்தரர் வாக்கும், பிறப்பு வேறுபாடு மொழிவேறுபாடுகளைக் குறிக்கும் கடப்பாடுடையதன்று; என்னை? அஃது உடையதாயின், ``தில்லை வாழ்ந்தணர்`` எனவும், ``திருநீலகண்டத்துக் குயவனார்`` எனவும், ``திருநீலகண்டத்துப் பாணனார்`` எனவும் பிறப்பினை எடுத் தோதினாற்போல எடுத்தோதப்பட்டிருக்கும் என்க. இனி, முப்போதுந் திருமேனி தீண்டுவாரைப் பற்றிக் கூறு மிடத்தில் நம்பியாண்டார் நம்பிகள்தாமும், ``நீடாகமத்தின் அறிவால் வணங்கி அர்ச்சிப்பவர்`` (தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 74) என்று, `சிவபெருமானிடத்து அன்பு உண்டாதற்குச் சிவாகம ஞானம் இன்றியமையாதது` என்னும் அளவே குறித்ததன்றி இன வரையறையும் மொழி வரையறையும் கூறினாரில்லை. எனவே, சேக்கிழார் நாயனார், ``முப்போதும் அர்ச்சிப்பார் முதற் சைவராம் முனிவர்`` எனவும், `வருங் காலமானவற்றின் வழிவழியே திருத்தொண்டின் விரும்பிய அர்ச்சனைகள்சிவ வேதியர்க்கே உரியன; அப் பெருந்தகையார் குலப் பெருமை யாம்புகழும் பெற்றியதோ`` (தி.12 முப்போதும் திருமேனிதீண்டுவார் புராணம்) எனவும், `முப்போதும் திருமேனி தீண்டுவார் ஆதிசைவரே`` என்றும், ``அவர்தாம் வழி வழிவரும் பிறப்புரிமையர்`` என்றும் வரையறுத்துக் கூறியது அஃது அங்ஙனம் அவர்க்குச் சிறப்புரிமையாதல் குறித்தேயாம். அங்ஙனம் கொள்ளாக்கால், மேற்காட்டிய ஞானசம்பந்தரது திருவாக்கோடும், அனுபவத்தோடும் முரணும் என்க. எனவே, இது, முந்நூலணிதலும், வேதம் ஓதுதலும அந்தணர்க்கேயன்றி அரசர் வணிகர்கட்கும் உரித்தாயினும் வேதத்தை ``அந்தணர் நூல்`` (குறள், 543) என்றும், ``அதற்குரியார் அநத்ணரே`` (திருவள்ளுவமாலை, 23) என்றும், பிறவாறும் கூறுதல் போல்வதும், அந்தனரையே ``முந்நூல் மார்பர்`` எனவும் ``இருபிறப்பாளர்`` எனவும் ``மறையவர், வேதியர்`` எனவும் குறிப்பிடல் போல்வதும் ஆம் என்பது ஓர்ந்துணர்ந்து கொள்ளப்படும்.
``குலவிச்சை கல்லாமல் பாகம் படும்`` (பழமொழி நானூறு, 6) ஆகலின், யாதொரு செயலும் அது வழிவழியாக இடையறாது வருவதொரு குடியிற் பிறந்தார்க்குச் சிறப்புரிமை உடைத்தாதல் இயல்பே. அஃதே பற்றிப் பிற குடியிற் பிறந்தாரும் தமது சிறப்பினால் பெறும் உரிமை விளக்கப்பட்டதாம். அது கருதியே பிறப்புரிமை கருதிய தமிழ் நூல்களில் யாண்டும் சிறப்புரிமை விலக்கப்பட்டிலது என்பது அறியற்பாலது. பிறப்பினாலன்றிச் சிறப்பினால் உரிமை பெற்றவராக வடநூல் முனிவருள்ளும் பலர் கேட்கப்படுகின்றனர். தமிழாசிரியருள்ளும் திருநாவுக்கரசரை அப்பூதியடிகளும் மெய்கண்ட தேவரைச் சகலாகம பண்டிதரும் தம்மின் மிக்கராய்த் தமக்கு நெறியருளவல்ல ஆசிரியராகக் கொண்டமை வெளிப்படை. ``இவ்வாறாகவும் பிறப்புரிமை ஒன்றே கொள்ளப்படுவது சிறப்புரிமை கொள்ளப்படாது`` என முரணிக் கூறுதல் விருத்தி வேண்டுவாரது கூற்றேயாய் முடியும் என்க. இதனால் திருக்கோயிலில் நிகழும் பெருவழிபாடு பற்றிய குற்றம் விலக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக