ஞாயிறு, 21 ஜூன், 2020

மூன்றாம் தந்திரம - 11. அட்டமா சித்தி

மூன்றாம் தந்திரம - 11. அட்டமா சித்தி


பண் :

பாடல் எண் : 1

பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையும் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே. 

பொழிப்புரை :

யாவரும் அட்டமா சித்திகளைப் பெற்று, அவற்றை எட்டுத் திக்கிலும் சென்று விளங்கக் காட்டிப் பெருமை பெற்றது, சிவபெருமானைப் பல்லாற்றானும் வழிபட்டேயாம்.

குறிப்புரை :

பணிதல், நிலத்தில் வீழ்ந்து வணங்குதல், தொழுதல், கும்பிடுதல், அணிதல், ஒப்பனை செய்து மகிழ்தல், தணிதல், அடங் குதல். துணிதல் - நம்புதல். ``எண்திசை சென்று அட்டமா சித்தி தாபித் தவாறு, பரமனை நாடித் துணிந்து எண்திசையிலும் சென்று பணிந்து, தொழுது, அணிந்து, தணிந்து`` எனக் கூட்டுக. `சிவபெருமானை எவ்வகையிலேனும் நினையாமல் சித்தி பெறுதல் கூடாது` என்பதாம்.
இதனால், அட்டமா சித்திப் பேற்றிற்கு ஆவது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே. 

பொழிப்புரை :

``யான் பெறும் பரிசாவது சிவபெருமானது திரு வடிப் பேறு ஒன்றே`` எனக் குற்றமற உணர்ந்து அவனை யான் அகத்தே தியானித்தேன். ஆகவே, எனக்குப் பெறற்கரிதாய பேறு யாதும் இல்லை; (எல்லாப்பேறும் எளியனவே) அதனால், பிறர் அரியனவாக உணர்கின்ற அட்டமாசித்திகளை அவன் எனக்கு நிரம்பக் கொடுத்துப் பெரும்பயனாகிய பிறவி நீக்கத்தையும் அளித்தருளினான்.

குறிப்புரை :

அறிவானவர்; உருத்திர சிவகணத்தார். பண்பன் - அவருக்கு நல்லன். தூவெளி - சிறந்த ஒளி. இஃது ஆஞ்ஞையில் தியானிக்கப்படுவது.
இதனால், சிவயோகியர்க்கு அட்டமாசித்தி தாமே கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

குரவன் அருளிற் குறிவழி மூலன்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.

பொழிப்புரை :

யோக குருவின் அருளால் அவன் குறித்த முறைப் படியே மூலாதாரத்தை நோக்கி ஓடப் பார்க்கும் வாயு, அவ்வாறு ஓடாது சத்தித் தானமாகிய இலாடத்திற் சென்று சேரும் அரிய நேரத்தைப் பார்த்து, அவ்வாறு சேரும் வாயுவே துணையாகச் சாம்பவி யோகம் கேசரி யோகங்களைச் செய்வார்க்குப் பெரிய சிவகதி போலக் கிடைப்பது, எட்டாம் சித்தியாகிய வசித்துவமாம்.

குறிப்புரை :

``குறிவழிசேர`` என இயையும். மூலத்தின் வழிச் செல்லுங்காற்றை, ``மூலன்`` என்றும், ``நாதம், விந்து`` என்பவற்றில் விந்து, சத்தி பேதமாகக் கூறப்படுதலின், விந்துத் தானத்தை ``பரை`` என்றும் கூறினார். மணம் - கூடுதல்; சேர்தல். ``சங்கடம்`` என்பது விரித்தலாயிற்று. சங்கடம் - சிறிதிடம். மந்திரத்தை உபாஞ்சுவாகக் கணித்தல் சாம்பவி யோகம். இதில் கண்கள் சிறிது திறந்திருக்கும். மந்திரத்தை மானதமாகக் கணித்தல் கேசரி யோகம். இதில் கண்கள் மூடியிருக்கும். இவையே இவை பற்றிக் கூறும் வாக்கியங்கட்குக் கருத்தாதல் அறிந்துகொள்க. சாம்பவி - அம்பாளோடு (சத்தியோடு) கூடியது. ``சாம்பவி தீக்கை, சாம்பவி முத்திரை`` என்னும் இடங்களிலும் சாம்பவி, இப்பொருட்டாதல் அறிக. சத்தி, உலகிற்கும், சிவத்திற்கும் இடைநிற்கும் நிலை. ``எட்டாவது சித்தி இவ் யோகங்களாற் கிடைக்கும்`` எனவே, இவை ஒழிந்த ஏனை யோகங்களால் சில சித்திகளே கிடைக்கும் என்பது பெறப்பட்டது.
இதனால், சித்திகளை முற்றப் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

காயாதி பூதங் கலைகால மாயையில்
ஆயா தகல அறிவொன் றனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.

பொழிப்புரை :

ஆகாயம் முதலிய பூதங்களையும், கலை காலம் முதலிய உள்ளந்தக் கரணங்களையும் பற்றி நின்று ஒரு பொருளைச் சுட்டி யறியாமல் வியாபகமாக அறியும் அறிவால், ஒன்றாய், அனாதியே தனக்கு அறிவைத் தருதலை ஒழியாத பதிப்பொருளின் உண்மையை அடைய விரும்பினால், என்றும் அழியாத பரவெளியிற் சேரலாம்.

குறிப்புரை :

என்றது, `சித்திகளை விரும்பாது மெய்ஞ்ஞானத்தை விரும்பி யோகம் செய்தலே சிறந்தது` என்றவாறு. சிவத்தை விரும்புதல் வியாபக அறிவாதலும், பிறவற்றை விரும்புதல் ஏகதேச அறிவாதலும் உணர்க. ``அகலம்`` என்னும் பண்புப்பெயர் ஈறுகெட்டு, ``அறிவு`` என்பதனோடு புணர்ந்தது. அகலம் - விரிவு. ``அறிவு உண்மையைக் கூடினால்`` என்க. உண்மை - தன்னியல்பு. பர காயம் -மேலான வெளி. ``பராகாயம்`` எனவும் பாடம் ஓதுவர்.
இதனால், சித்தி காம யோகத்தினும், முத்தி காம யோகமே சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது. எனவே, ``பரகாயப் பிரவேசம்`` என்பது சித்தி காமத்திற்கு, ``பிறிதோர் உடம்பிற் புகுதல்`` எனவும், முத்திகாமத்திற்கு, ``சிதாகாசத்திற் புகுதல்`` எனவும் பொருள் தந்து நிற்றல் குறிக்கப்பட்டவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 5

இருபதி னாயிரத் தேழ்நூறு பேதம்
மருவிய கன்மமாம் மாபந்த யோகந்
தருமிவை காய உழைப்பாகும் தானே
அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே. 

பொழிப்புரை :

கன்மத்தையே பொருந்தச் செய்கின்ற சித்தி காம யோகம், இருபதினாயிரத்து எழுநூறாய் விளங்கும். சித்திகளையே தருகின்ற இவை அனைத்தும் உடல் உழைப்பாவனவன்றி, உணர்வுப் பெருக்கமாதல் இல்லை. இவை இத்துணையாக விரிவன வாயினும், சித்திகளின் தொகை நோக்கி எட்டாய் அடங்கும்.

குறிப்புரை :

எனவே, அவ்வெட்டும் அவ்வச் சித்தியோகம் எனப்படும் என்க. சித்தி யோகம் இத்துணைத் தாய் விரியுமாறு பின்னர், ``முந்திய முந்நூற்றறுபது`` எனவரும் திருமந்திரத்தால் அறியப்படும். அதனானே ``எண்ணூறு`` என்பது பாடம் ஆகாமையும் விளங்கும். ``ஆரும்`` என்பது குறுகி நின்றது. ஆர்தல், நிரம்புதல். ``சித்திக்கு`` என்றது, ``சித்திக்குத் தக`` என்றவாறு.
இதனால், சித்தி யோகத்தின் அல்லற்பாடும், அதன் இழிபும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
உதய மதுநா லொழியஓ ரெட்டுப்
பதியும்ஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே. 

பொழிப்புரை :

பன்னிரு கலையுடைய சில அதிசய நிலவுகள் முற்றும் மறைந்து பின் தோன்றும்பொழுது அக்கலைகளில் நான்கு ஒழிந்தேபோக, எட்டே நிலைபெறுகின்றன. அவ்வொழிவு நீங்கி அனைத்துக் கலைகளும் நிலைபெறும் செயலைப் பன்னிரண் டாண்டுகள் அயராது செய்தால், அவ்வாண்டெல்லைக்குள் சித்திகள் கைகூடும்.

குறிப்புரை :

பிராண வாயுவின் அளவான பன்னிரண்டங்குலத்தைக் கலையாக உருவகித்தற்கு, அவ்வாயுவைத் திங்களாக உருவகம் செய்தார். இவ்விரண்டு உருவகங்களும், தேய்தல், வளர்தலுக்கு ஏற்புடையவாயின. `உதயமதில்` எனவும், திதமான ஈராறில் எனவும் உருபு விரிக்க. ``பற்று`` என்பது, `செலவு` என்றவாறு. திதம் - நிலைபேறு. `அவ்வீராறில்` எனச் சுட்டு வருவிக்க. கன்ம யோகங்கள் யாவும் காய உழைப்பேயாதலின், `பிராணாயாமத்தால் காயம் செம்மையுற்றிருந்தாலன்றி, அவற்றின் பயனாகிய சித்திகள் எய்தா` என்க. `பிராண வாயு இயங்குங்கால் பன்னிரண்டங்குலமாக வெளிச் சென்று எட்டங்குலமாக உட்புகும்` என்பதும், அவ்வாறின்றி உட்புகும் பொழுதும் பன்னிரண்டங்குலமாகச் செய்யின் உடல் தளர்ச்சியுறாது என்பதும் முன்னே கூறப்பட்டன.
இதனால், சித்திகள் எய்துதற்கு யோக கால அளவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நாடும் பிணியாகும் நம்சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடொன்றி னால்வாயா சித்திகள்பே தத்தின்
நீடுந் தூரங்கேட்டல் நீள்முடி வீராறே. 

பொழிப்புரை :

சுற்றத் தொடர்பு யோகத்திற்குத் தடையாகும். யோகமின்றி, நூலறிவு, உலகியலறிவு, இயற்கை நுண்ணறிவு முதலியவற்றுள் ஒன்றினாலும் சித்திகள் கிடைக்கமாட்டா. அவை வேறு வேறாகக் கிடைத்தற்குச் செல்லும் தீர்ந்த யோக கால எல்லையாக நூல்களில் கேட்கப்படுவது, மேற்குறித்த பன்னிரண்டாண்டுகளாம்.

குறிப்புரை :

ஆகவே, `சித்திகளைப் பெறவேண்டுவார் சுற்றத் தொடர்பு, நூலாராய்ச்சி முதலியவற்றிற் காலம் கழியாது, பன்னிரண் டாண்டு யோகத்தில் நிற்க` என்பதாம். கேட்டல், கேட்கப்படும் கால அளவு; ஆகுபெயர்.
இதனால், மேலது நன்கு வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாம்
தாழா நடைபல யோசனை சார்ந்திடும்
சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதிற் றான்பர காயமே.

பொழிப்புரை :

யோகத்தைக் குறைவின்றிப் பயின்றால், ஏழாவ தாண்டில், பிறர் உடன் தொடர இயலாதவாறு காற்றைப் போலக் கடிதிற் செல்லும் நடை உளதாகும். அந்நடையது வேகம் எத்துணைக் காவதம் நடந்தாலும் குறையாது. எட்டாவது ஆண்டில், நரை திரை இருப்பினும் மறைந்து இளமைத் தோற்றம் காணப்படும். ஒன்பதாவது ஆண்டில் உடம்பு தேவ சரீரம்போல ஒளிவிடும்.

குறிப்புரை :

``தோன்றா`` என்பது, `மறையும்` என்னும் பொருட்டு. திரை, தோல் சுருங்கி மடிந்து தொங்குதல். ``தான்`` என்றது, தன் உடம்பைக் குறித்த ஆகுபெயர். `பரம்` என்பது `தெய்வம்` என்னும் அளவாய் நின்றது.
இதனால், குறைவிலா யோகத்தின் அடையாளங்கள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
ஏரொன்றும் பன்னொன்றில் ஈறாகும் எண்சித்தி
சீரொன்று மேலேழு கீழேழ் புவிச்சென்றவ்
வோரொன்றில் வியாபியாய் நிற்றல்ஈ ராறே. 

பொழிப்புரை :

யோகத்தில் பத்தாவதாண்டில் முன்பு இளைத்த உடம்பு பருத்துக் காணப்படும். பதினொன்றாவது ஆண்டில் நெருப்புப்போன்ற உருவினை உடைய உருத்திரனைப் போன்ற செம்மேனியும், எல்லாவற்றையும் வெல்லும் ஆற்றலும் உளவாகும். மேல், `எட்டாவது சித்தி` எனக்குறித்த அது, மேல் ஏழ் உலகம், கீழ் ஏழ் உலகம் இவைகளிற் சென்று அங்குள்ளாரையும் தன்வசப்படுத்தி நிற்றலாம். அது பன்னிரண்டாவது ஆண்டில் எய்தும்.

குறிப்புரை :

பூரித்தலுக்கு `உடம்பு` என்னும் வினைமுதல் வரு வித்துக்கொள்க. ``பூரித்து`` என்னும் எச்சம் எண்ணின் கண் வந்தது. `தீயான` என்பது குறுகிநின்றது. `திருத்தார் நன்றென்றேன் தியேன்`` (யாப்பருங்கலக் காரிகை, 24, உதாரணம்) என்றாற்போல. `ஈராறில் எண் சித்தியாம்` என மாற்றிக்கொள்க. சீர் - தட்டு நிலை. ``வியாபி`` என்றது, தான் பணியப்படுதலை. மேல் (பா.627) ``எட்டாஞ் சித்தி`` எனப்பொதுப்படக் கூறியதனை, இதன் பிற்பகுதியால் விளங்கக் கூறினார். `ஓரொன்றிலும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `அஃது ஈராறில் ஆம்` என முடிக்க.
இதனால், எஞ்சிய அடையாளங்களுடன், முடிந்தது முடித்துக் காட்டப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகலும்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே. 

பொழிப்புரை :

எட்டுச் சித்திகளாவன, யோகி ஒருவனே தான் வேண்டியவாறு எட்டுத் தன்மையனாக நிற்றல். அவை அணுவி னுள்ளும் அணுவாய் நுழைதல், அண்டத்தினும் பெரியோனாய் அவற்றைக் கடந்து நிற்றல், காற்றினும் நொய்ம்மையனாய் வானத்தில் உலாவுதல், எத்துணை ஆடவர் கூடி எடுப்பினும் எடுக்கமாட்டாத வராம்படி மலை போலத் திண்மை யுடையனாயிருத்தல், நினைத்த இடத்தில் நினைத்த மாத்திரத்தில் செல்லுதல், நினைத்ததை அடைதல், எல்லோராலும் ஏற்றுப் போற்றப்படுதல், யாவரையும் தன்வழிப் படுத்தி நிற்றல் என்பனவாம்.

குறிப்புரை :

இவை முறையே, `அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்` என்னும் காரணப்பெயர் உடையன என்க.
இம்முறைக்கு ஏற்ப இத்திருமந்திரத்தில் ``பரகாயம் சேர் தன்மை`` என்பதை ``மானாக் கனமும்`` என்பதற்கு முன்னும், `வியா பியும்` என்பதை ``ஆனாத உண்மையும்`` என்பதற்கு முன்னும் கூட்டி உரைக்க. ``சகத்து`` என்றது நில அண்டத்தை. நோன்மை - வலிமை; ஆற்றல். அஃதாவது எல்லாப் பொருளையும் உள்ளடக்கி நிற்றல். இங்கு அஃது அதுபோன்ற ஆற்றலைக் குறித்தது. மானா - ஒரு பொருளும் ஒப்பாகமாட்டாத. பரகாயத்து ஏகல் - பிற உயிரின் உடம்பிற் புகுதல். இஃது எவ்விடத்தும் எளிதிற் செல்லுமாற்றிற்குச் சிறந்து நின்ற உபலக்கணம். ஆவது - பொருட் பேற்றால் உயர்தல். பர காயம் - மேலான ஆகாயம்; என்றது பூதாகாசத்தையேயாம். `தன்மையும்` என்பதனை, `நொய்ம்மையும்` என ஓதுதல் சிறக்கும். ஆனாத உண்மை - பிறர் தன்னை விட்டு நீங்காத நிலை. ``வியாபி`` என்றதை மேலை மந்திரத்திற்போலவே கொள்க. இச்சித்திகளை ஞானியர் விரும்புதல் இல்லை; எனினும் அவர்களிடத்து இவை தாமே அடையும். அடையினும், இவற்றை அவர் பயன்படுத்துதல் இல்லை. இனி, ஞானசம்பந்தர் முதலியோரிடத்து நிகழ்ந்த அற்புதங்கள் இறைவனே நிகழ்த்தினவல்லது, இச்சித்திகளின்பால அல்ல என்பது உணர்க.
வீரவாகு தேவரிடத்தும், அநுமனிடத்தும் அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, சித்திகள் விளங்கினமை அவரவர் வரலாற்றுட் கேட்கப்படுகின்றன. `மவுற்கல்லியர்` என்னும் முனிவர், வேண்டிய வடிவங்கொண்டார் என்பதும் `பிராத்தி`. வசிட்டர் முதலியோர் தாம் இருந்த இடத்தில் காமதேனு முதலியவற்றை வருவித்துப் பயன் கொண்டனர் என்பதும் `பிராகாமியம்` என்னும் சித்தியாம். முனிவர் பலரும் பலராலும் புறக்கணியாது பணியப்பட்டமை `ஈசத்துவம்` என்னும் சித்தியாம். நெருப்புச் சுடாதவாறு நின்று அதன்மேல் இருத்தல், நீர் ஆழ்த்தாதவாறு நின்று அதன்மேல் நடத்தல், கொடிய விலங்குகளையும் ஏவல் கேட்டு நடக்கச்செய்தல், மழையைப் பெய்வித்தல், நிறுத்தல் முதலியன `வசித்துவம்` என்னும் சித்தியாம். மற்றும் இவற்றின் இயல்புகளை ஓர்ந்துணர்ந்துகொள்க.
`கரி` என்பது யானை; அது திண்மையைக் குறித்து நின்றது. ஆயினும், அதற்கு, `சாட்சி` எனப்பொருள்கொண்டு, `விடயங்களை நுகர்ந்தும் அவற்றில் தொடக்குண்ணாமை கரிமா` என்கின்றார், சிவஞான போதப் பாடியம் உடையார். அஃது ஒருசார் நூல்களில் - அல்லது ஆகமங்களில் காணப்படும் சிறுபான்மை வழக்காதலன்றிப் பெரும் பான்மை வழக்காகத் தெரியவில்லை. மேலும், அணிமாவிற்கு மறுதலைப்பட மகிமா இருத்தல் போல, இலகிமாவிற்கு மறுதலைப் பட்ட தொன்று இருத்தலும் வேண்டப்படுவதே. அன்றியும், விடயத்தில் தொடக்குண்ணாதிருத்தல் முத்திப் பகுதியாவதன்றிச் சித்திப் பகுதியும் ஆகுமோ என்பது ஆராயத்தக்கது. இனிச் சித்திகளை ``உடம்பால் பெறுவனவும், மனம் முதலியவற்றாற் பெறுவனவும்`` என இருவகையவாகப் பகுத்துணர்த்துகின்ற அவர், ``இருவகையவும் தனித்தனி நந்நான்காய் உள்ளன`` என்னாது, ``உடம்பாற் பெறுவன அணிமா, மகிமா, இலகிமா`` என்னும் மூன்றே என்கின்றார். இவற்றுடன் கரிமாவையும் உடம்பாற் பெறுவனவாகக் கொள்ளின் சாலப் பொருந்தும். `கனமும்` என்பதை, ``ககனமும்`` என ஓதுவாரும் உளர்; அஃது யாப்பிற்கு ஒவ்வாமை அறிக.
இதனால், ``எட்டுச் சித்திகளாவன இவை`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மற்றோர் குறையில்லை
ஆங்கே எழுந்தோன் அவற்றுள் எழுந்துமிக்
கோங்கி வரமுத்தி முந்திய வாறே. 

பொழிப்புரை :

யோகி, அணிமாவால் தான் நினைத்த உயிருட் புகுந்தவிடத்தும் மகிமாவால் அவற்றைக் கடந்து நிற்கும் தன்மை குறைபடுதல் இல்லை. எவ்வாறெனில், மகிமா நிலையில் நின்ற அவனே அணிமாவால் அவ்வுயிர்களுள் செறிந்துவர, அவற்றைக் கடந்து நிற்கும் நிலை திரிபின்றி நிற்கும் ஆகலான்.

குறிப்புரை :

``தான் அணுவாய்ப் பல உயிர்களால் ஏற்கப்பட்ட காலத்தும் தாங்கிய தன்மை ஒர் குறையில்லையாய் நிற்கும்`` என்க. ``தன்மையும்`` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். எழுதல் - கடத்தல். ``எழுந்தோம்`` என்பது பாடமாயின், யோகியின் தன்மையைத் தம்மேல் வைத்து ஓதியதாக உரைக்க. அவற்றுள் - முற்கூறிய பல்லுயிர்களுள், ``ஆகலான்`` என்பது சொல்லெச்சம்.
இதனால், அணிமாவின் இயல்பறியாது ஐயுறும் மாணாக்கர்க்கு அவ்வையம் அகற்றப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வாய்வலம்
உந்தியுள் நின்று வுதித்தெழு மாறே. 

பொழிப்புரை :

``ஓர் ஆண்டு முந்நூற்றறுபது கூறுகளைக் கொண்டது`` எனத் தொன்றுதொட்டுக் கொள்ளப்பட்டு வருகின்ற அக் காலக் கூறு - அஃதாவது, ``ஒருநாள் என்பது, நாழிகைகளின் தொகுதியால் அமைந்தது. அந்த நாழிகைகளை ஐந்து கூறாகப் பகுத்து அப்பகுதி ஐந்தையும் ஐம்பூதங்கட்கும் உரிய பகுதிகளாகப் பாவனை செய்துகொள். பின்பு நிலம் முதலிய பூதங்களின் ஆற்றல் சுவாதிட்டானம் முதலாகத் தோன்றி நிலைபெறுவனவாகக் கொண்டு யோகம் செய்.

குறிப்புரை :

``நாள்`` என்னாது, ``காலம்`` என்றார். ``யாவும் காலத்தின் வழிப்பட்டு நடப்பன`` என்றற்கு. ``ஓர் ஆண்டிற்கு இத்துணை நாள்`` என்பதில் வேறுபாடுகள் பல உள. அவற்றுள் இங்குக் குறிக்கப்படுவது, ``முந்நூற்றறுபது நாள்களைக் கொண்டது`` என்பார், அதனை எடுத்தோதினார். இது கதிர்யாண்டு (சௌரமான வருடம்) இதற்கு முந்நூற்றறுபத்தைந்து நாள் சொல்லப்படுமாயினும், ஐந்து நாள்களை நாயனார் கொண்டிலர். இவ் யாண்டு ஒன்றே மக்கட்கு ஒரு வயது. இதன்படி மக்கள் வாழ்நாள் காலம் நூறு வயது. இனிக் கிரக தசா வருடங்கள். ``முந்நூறு நாள்கள் கொண்டது ஒரு வருடம்`` என்னும் கணக்கில் அமைந்தவை. அதன்படி, ``மக்கள் தாய் வயிற்றில் ஓர் ஆண்டுக் காலம் இருக்கின்றனர்`` என்பதும், ``பிறந்தபின் நூற்றிருப தாண்டு வாழ்வர்`` என்பதும், ``அந்நூற்றிருபதாண்டுகளும் ஒன்பது கோள்களுக்கு ஏற்ற பெற்றியால் அமைந்து நிற்கும்`` என்பதும் சோதிட நூற்கொள்கைகள். எனினும், இஞ்ஞான்று கிரகதசா வருடங்களும், முதற்கண் கூறிய கதிர்யாண்டின்படியே கொள்ளப்படுகின்றன.
``அறுபது நாழிகை கொண்டது ஒரு நாள்`` என்பதில் பரத கண்டத்தில் வேறுபாடின்மையால், அதனை விதந்தோதாது வாளா, ``வந்தது, நாழிகை`` என்றார். ``நாழிகையால்`` என உருபு விரித்து, ``நாழிகையால் வந்தது`` என மாறிக் கூட்டுக. ``அவற்றை வான் முதலாயிடச் சிந்தைசெய்`` என ஒருசொல் வருவித்துக் கொள்க. ``வலம் மண்முதல் உந்தியுள் நின்று உதித்தெழுமாறு தேர்ந்தறிவாய்`` எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க. ``தேர்ந்தறிவார் வலர்`` என்பது பாடமாயின், இதனை, யோகியரது இயல்பாக்கி உரைக்க. ``உந்தி`` என்றது இங்கு அதற்குக் கீழ் உள்ள சுவாதிட்டானத்தை.
இதனாற் சொல்லியது, ``ஒரு நாளில் உள்ள நாழிகையை ஐந்து கூறிட்டு அக்கூறுகளை ஐந்து பூதங்கட்கு உரியவாக்கி, சுவாதிட்டானம் முதலிய ஆதார யோகங்களை அப்பூதங்கட்கு உரிய அந் நாழிகைகளில் செய்தல் வேண்டும்`` என்பதாம். ``ஒருநாளின் தொடக்கம் வைகறைப் போது`` எனக் கொள்ளப்படுதலால், பகலவன் தோற்றத்திற்கு முன் ஆறு நாழிகையை நிலம் என்னும் பூதத்தின் காலமாகக் கொண்டு முதலதாகிய சுவாதிட்டான யோகத்தைத் தொடங்கல் வேண்டும். பின் அவ் ஆறு நாழிகை நீர், நெருப்பு, காற்று, வானம் என்பவற்றுக்கு உரியனவாகக் கொண்டு மணிபூரகம் முதலாக ஆஞ்ஞை வரையில் செல்லுதல் வேண்டும். செல்லின், பகல் பதி னெட்டு நாழிகை முதல் இருபத்து நான்கு நாழிகை வரையில் ஆஞ்ஞையில் நிற்கவேண்டி வரும். யோக நிலையில் இதனோடே பகற் காலம் முடிவுறும். பின்னும் இவ்வாறே சுவாதிட்டானம் முதலாகத் தொடங்கி, இரவு பதினெட்டு முதல் இருபத்து நான்கு நாழிகை வரையில் உள்ள பகுதியில் ஆஞ்ஞை யோகத்தில் இருத்தல் வேண்டும். இவையெல்லாம் உய்த்துணர்ந்து உரையிற் கொள்ளப்படும். ``வான் முதலாயிட`` என்பதற்குச் ``சூரியோதயம் தொடங்கி`` எனவும், ``மண் முதல்`` என்பதற்கு ``அத்தமனம் தொடங்கி`` எனவும் தாம் வேண்டுமாறே அச்சொற்களை வருவித்துக்கொண்டு தமக்குத் தோன்றியவாறேயும் உரைப்பர். அஃது, `உந்தியுள் நின்று உதித்தல்` என்றதனோடு ஒவ்வாமை அறிக.
`இவ்வாறு இடைவிடாது யோகத்தில் இருப்பின், உண்டல், உறங்கல் முதலியவற்றிற்குக் காலம் எப்பொழுது` என ஐயுறல் வேண்டா; என்னை? இது, `ஆதார யோகத்திற் குரிய காலமுறை இவ்வாறு கொள்ளத்தக்கது` எனக் கூறியதன்றி, `அவற்றை இடையறாது செய்தல் வேண்டும்` எனக் கூறியதன்று ஆகலான். யோகமாகிய அறிதுயிலில் இருப்போர் அதனை விடுத்து உலகியலில் விழித்தல் எளிதாதலின் அஃது எந்த நேரத்திலும் இயல்வதேயாம். சிலர் சில நாள்காறும் ஊண் உறக்கம் இன்றி இடைவிடாது செய்ய வல்லராயும் இருப்பர். ஆகவே `இஃது அவரவரது ஆற்றலுக்கு ஏற்பக் கொள்ளப் படுவதே` என்க. எனினும், பொருள் ஈட்டலில் கருத்துடையவர் பொழுதை வீண்போக்குதலும், பொருட் பேற்றிற்கு மாறானவற்றைச் செய்தலும் இல்லாமை போல. யோகத்தில் கருத்துடையோரும் பொழுதை வீண்போக்குதலும், யோகத்திற்கு மாறானவற்றைச் செய்தலும் இலர் என்க.
இங்ஙனமாகவே, மேல் (பா.632) ``ஏழானதிற் சண்டவாயுவின் வேகியாம்`` என்பது முதலாகக் கூறிய ஆண்டுக் கணக்குகள் இங்குக் குறித்த முறையில் ஆதாரயோகம் நிகழும் நாழிகை யளவால் அமைவ தன்றி, ஏனையோர்க்குப் போலப் பகலவனது தோற்ற மறைவு மாத்திரையானே அமைவதன்று என்பது பெறப்படும். அந்த நாழிகைத் தொகையே, மேல், (பா.629) ``இருபதினாயிரத்தேழ்நூறு பேதம்`` எனக் குறிக்கப்பட்டது. ஒருநாளைக்கு அறுபது நாழிகையாக, முந்நூற்றறுபது நாள்களுக்குக் கணக்கிட வருவது. (360 x 60 = 21600) இருபத் தோராயிரத்து அறுநூறு நாழிகை. இதில் பதினைந்துநாள் குறையினும் ஓராண்டாகவே பயன்தரும் என்றற்கே, தொள்ளாயிர நாழிகை தள்ளி, (21600 - 900 = 20700) ``இருபதினாயிரத்து ஏழ் நூறு பேதம்`` எனக் கூறினார். எனவே, சுவாதிட்டானம் முதலிய ஐந்தில் ஒவ்வோர் ஆதார யோகமும் நாலாயிரத்து நூற்று நாற்பது (4,140) நாழிகையிற் குறையாது சம அளவில் நிகழின், அதுவே யோகத்தின் ஓராண்டு எனவும், `அவ் வகையில் பன்னிரண்டாண்டுகள் சென்ற பின்பே சித்திகள் எய்தப் பெறும்` எனவும் கொள்க. `இவ்வாறு சொல்லிய யோக காலத்தை, யோகிகள், மந்திரம் கணிப்பவர் தாம் கருதிய உருவளவை இடை விட்டாயினும், இடைவிடாதாயினும் கணித்து முடித்தல் போல முடிப்பர்` எனவும், அவ்வாறு முடிக்குங்கால் இங்குக் கூறியமுறை வழுவாது செய்து முடிப்பர் எனவும், `யோகப்பயிற்சி உடையவர் தாம் விரும்பும் ஆதார யோகத்தை விரும்பியவாறே செய்ய வல்லராய் இருப்பர்` எனவும் உணர்க. மூலாதாரயோகம், குண்டலியை எழுப்பு தல் மாத்திரையாய் அமைதலின், அது சுவாதிட்டான யோகத்தில் அடங்கிற்று. ``நின்று வுதித்து`` எனக் குற்றியலுகரம் கெடாது நின்று, உடம்படு மெய் பெற்றது.
இதனால், `பன்னிரண்டாண்டு யோகம் செய்க` என மேற்கூறிய ஆண்டின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தின் திருநடத் தோரே. 

பொழிப்புரை :

(அட்டமா சித்திகளை அடைய விரும்பி அவற்றைப் பெறும் பவயோகம் செய்பவர் அதனிடையே மலபரி பாகம் காரணமாக) மனம் வேறுபட்டு, சிவனை அடையும் வேட்கை யராய் முத்திப்பேற்றிற்குரிய வழியை உணர்ந்து ஐம்புல ஆசையற்றுச் சிவஞான ஒழுக்கத்தில் நிற்கும் சிவயோகியராதலும் உண்டு. அவ் வாற்றால் தத்துவங்களின் நீங்கவேண்டி மேற்கூறிய ஐம்பூதங்களின் கட்டினின்றும் நீங்கினோர், உள்ளம் இறைவனது ஆனந்த நடனத்தில் ஒடுங்கப் பெறுவர்.

குறிப்புரை :

சிவமயமாதல் சிவனை அடைதலாகிய ஒன்றிலே குறியாய் இருத்தல். `முத்தி` `முத்தம்` எனத் திரிந்து நின்றது. முத்தி, என்றது, அதனை அடையும் நெறியாகிய ஞான ஒழுக்கத்தை. ``உற்ற`` என்ற அநுவாதம், உறுதல் உண்மைபற்றிக் கூறியது. ``முத்தர்`` என்றது யோகியரை. சுத்தமாவது, தத்துவங்களினின்று நீங்குதல். ``ஐந்து`` என்றது, மேல், ``வான்முதல்`` எனவும், ``மண்முதல்`` எனவும் கூறிய பூதங்களை. அவற்றின் தொடக்காவது, ஆதாரங்களையும், மேற் கூறியவாறு அப் பூதங்கட்கு உரியனவாக்கி அவற்றின்வழி நிற்றல். சித்திகளை வெறுத்தோர்க்கு அம்முறை வேண்டாமையின், அவரை, ``அத்தொடக்கு அற்றவர்`` என்றார். ``பரத்தின் திருநடம்``, ஆறாவதன் தொகை.
இதனால், ``சித்தியோகமாகிய பவயோகம் சிவயோகமாய் வேறுபடுதலும் உண்டு`` என்பது கூறப்பட்டது. கூறவே, ``இப்பயன் கருதியே ஞான நூல்களும் யோகத்தை விதிக்கின்றன`` என்பது அறியப்படும்.
இங்கு நின்றும் மேற்குறித்த சிவயோகம் பற்றியே கூறுகின்றார்.

பண் :

பாடல் எண் : 14

ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே. 

பொழிப்புரை :

சிறப்பால் தம்முள் ஒத்தனவாகிய, தனஞ்சயன் ஒழிந்த ஏனை வாயுக்கள் ஒன்பதும் வேறு வேறு நின்று செயற்படுவன. சிறப்பால் அவ்வொன்பதிலும் மேம்பட்டது `தனஞ்சயன்` என்னும் வாயு. அஃது ஏனை ஒன்பது வாயுக்களினும் ஒப்பக் கலந்து, அவற் றிற்கு வன்மையைத் தந்து நிற்கும். அஃது அவ்வாறு நிற்பதனாலே உயிரும், உடம்பும் இணங்கியிருக்கின்றன.

குறிப்புரை :

முதலடியில் ஈற்றில் நின்ற ``ஒத்தன`` என்பது, ஒன்றை யொன்று அவாவி நில்லாது தனித்து நிற்றலைக் குறித்தது. ``மிக்க`` என்றது அநுவாதம். ``ஏனை வாயுக்கள் ஒழிய இஃது ஒன்றும், ஏனையவற்றில் கலந்து நிற்றல் எவ்வாறு`` என்னும் ஐயத்தை நீக்குதற்கு அதனது இயல்பை விதந்தார். வாயுக்களில் பிராணனே சிறந்ததன்றித் தனஞ்சயன் சிறத்தல் எவ்வாறு எனின், பிராணனுக்கும் இயக்கத்தைத் தருவது தனஞ்சயன் ஆதலின் அது சிறந்தது என்க. மூர்ச்சையில் பிராணன் இயங்காது நின்றவிடத்தும் மீள அதனை இயங்கச் செய்வது இத்தனஞ்சயனேயாம். இது பற்றியே, ``இஃது இறப்புக்காலத்தில் பிராணனை உள்ளிட்ட ஒன்பது வாயுக்களும் நீங்கிய பின்பு தலைக்குள் இருந்து தலை ஓட்டை உடைத்துக்கொண்டு செல்லும்`` என்கின்றனர்.
பவயோகத்தை விடுத்துச் சிவயோகத்தில் நிற்பார் அதனை முற்றச் செய்தற்பொருட்டு வாழ்நாளை நீடித்துக் கொள்ளுதற்கு வழி கூறத்தொடங்கி, முதற்கண் இம்மந்திரத்தால் உடல் நிலைத்திருத்தற்குக் காரணம் இது என்பது இதனாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 15

இருக்குந் தனஞ்சயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற் றிருபத்து நான்கின்
இருக்கு முடலி லிருந்தில தாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே. 

பொழிப்புரை :

வாயுக்களுள் ஒன்றாய் இருக்கின்ற தனஞ்சயன், மேற்கூறியவாறு ஏனை ஒன்பது வாயுக்களிலும் கலந்திருக்கும். ``தனஞ்சயன்`` என்ற வாயு இல்லை என்றால், உடம்பே நிலைபெறாது பதங்கெட்டு அழியும்.

குறிப்புரை :

``இருக்கும்`` நான்கில் இரண்டாவது முற்று, ஏனை யவை எச்சம். ``இருநூற்றிருபத்து நான்காய் இருக்கும் உடல்`` என்றது, ``பிண்டம், அண்டம் அவை சமமாதல்`` (கோயிற் புராணம், பதஞ்சலி சருக்கம், 70) பற்றி, உடம்பில் இருநூற் றிருபத்து நான்கு புவனங்களும் உளவாக வைத்து நோக்கப்படுதல் பற்றியாம். ``இத்துணைச் சிறப்புடைய உடம்பு``, `தனஞ்சயன்` என்ற ஒரு காற்று இல்லையாயின் அழிந்துவிடும் என்றவாறு. ``வீங்கி வெடித்தது`` என்பது, `பதங்கெட்டு அழிந்தது` என்றபடி.
இதனால், மேற்கூறிய காரணம் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனும் முடமுமாம்
வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே. 

பொழிப்புரை :

பலவகை நோய்களும், உறுப்புக் குறைகளும் தனஞ்சய வாயு, அளவில் செம்மையுற்று இராமையால் உளவாவன.

குறிப்புரை :

``தனஞ்சயன் செம்மையுற்றிராமையால்`` என்பது அதிகாரத்தால் கொள்ளக்கிடந்தது. இத்தீங்குகள் பிறப்பிலும், வாழ்வு இடையிலும் வருதல், இவ்வாயு, கருவிலும், இடையிலும் குறைபடுதலாலேயாம் என்க. கழலை - கட்டி. சிரங்கு - சொறிப் புண். `பலவதாய்` என்பதில் ``அது`` என்பது ``அத்தன்மை`` எனப் பொருள் தந்தது. வீங்குதல் நான்கில் முதல் ஒழிந்த மூன்றும், மிகுதற் பொருளன. ``ஆம்`` என்பதை இறுதியில் வைத்து, ``கண்ணில் மருவி வீங்கும் வியாதிகளும் ஆம்`` என மாற்றியும், உம்மை விரித்தும் உரைக்க.
இதனால், உடற்குறைக்குக் காரணம் கூறுமுகத்தால், மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

கண்ணில் வியாதி உரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே. 

பொழிப்புரை :

(மேல், ``வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே`` என்றதனால், ``கண் அமைவதற்குத் தனஞ்சயனே காரணம் போலும்`` என மயங்கற்க.) கண்ணில் உளவாகும் நோய்கட்கு மட்டுமே தனஞ் சயனது செம்மையின்மை காரணமாகும். கண்ணில் பொருந்தியுள்ள நரம்புகளின் செயற்பாட்டிற்கும், அச் செயற்பாட்டினால் அமையும் கண்ணொளிக்கும் தனஞ்சயன் காரணமன்று; அவற்றிற்குக் ``கூர்மன்`` என்னும் வாயுவே காரணம்.

குறிப்புரை :

``கண்ணில்`` என்பன பலவும் சொற்பொருட் பின்வரு நிலை யணி. ``வியாதி, ஆணிகள், காசம்`` என்பன அவற்றின் காரணங்களை உணர்த்திய ஆகுபெயர்கள், அவற்றுள் ``ஆணிகள்`` என்பது முதற்கண் அவற்றின் செயற்பாட்டை உணர்த்தி இருமடி யாகு பெயராய் நின்றது. `தனஞ்சயன் உரோகம்` என மாற்றுக. `நோய்` எனப் பொருள்படும் `உரோகம்` என்னும் வடசொல் இங்கு, செப்பம் இன்மையைக் குறித்தது. பின்னிப் பிணைந்து ஒட்டி நிற்றல் பற்றி நரம்புகளை ``ஆணிகள்`` என்றார். `பிரகாசம்` என்னும் வடசொல், முதற்குறைந்து, `காசம்` என நின்றது. `தனஞ்சயன்` என்பதும், `கூர்மன்` என்பதும் சொல்லால் ஆண்பாலோடு ஒத்து நிற்றலின், `அவனல்லன்` என்றும், `கலந்திலன்` என்றும் கூறினார். ``கண்ணின் அமைப்பிற்குக் காரணம் `கூர்மன்` என்னும் வாயுவே`` என்பதனைப் பின்னிரண்டடிகளில் எதிர்மறை முகத்தாற் கூறினார்.
இதனால், மேலது பற்றி நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே. 

பொழிப்புரை :

கடவுளருள் சிறந்தோராகிய உருத்திரன், மால், அயன் என்னும் மூவருங்கூட யோகத்தில் பத்து நாடிகளிற் கேட்கப் படுவனவாக மேலே சொல்லிய பத்து ஓசைகளாகிய முழக்கத்தைக் (பா.593) கேட்டலை விடுத்து, கண்ணிலும், இருதயத்திலும் நிலைபெற்று நின்று உடம்பில் துடிப்புள்ளளவும் `துஞ்சும்போதும் சுடர்விடு சோதி` (தி.5 ப.93 பா.8) யாகிய சிவனை அங்கே தியானம் செய்கின்றனர்.

குறிப்புரை :

`மூவரும், நயனம் இருதயம் நின்று, நாடியின் ஓசை ஓ அற, சோதியை அங்கு உணர்ந்திருந்தார்` எனக் கூட்டுக. `துடிப்பு` என்பதன் முதனிலைப் பெயராகிய `துடி` என்பது நீட்டல் பெற்றது. ``பிரமனும்`` என்ற உம்மைச் சிறப்பு. ``ஓ`` என்பது ஒலிக்குறிப்பு இடைச்சொல். `ஓவுற` எனப்பாடம் ஓதி, ஓவுதல் - ஒழிதல் என உரைத்தலுமாம். ``மூவரும் உணர்ந்திருந்தார்`` என்றதனால், ``சிவனை அடைய விரும்புவோர் அவ்வாறு நிற்க`` என்பது குறிப்பெச்ச மாயிற்று. ``நாடி ஓசைகளைக் கேட்டுக் களித்திருத்தல் சித்தி யோகி கட்கே பொருந்துவது`` என்றவாறு. சோதியை நயனத்திற் காண்டல், புறநோக்கு உளதாயவழிச் செய்யும் பாவனை. இருதயத்திற் காண்டல், தாரணை தியான சமாதிகளால் சிவனது ஒளி உருவை இருதயத்தில் காணுதல். அங்ஙனம் காணவே, பவ யோகம் ஒழியச் சிவயோகம் உண்டாகும் என்பதாம். இதனுள் இரண்டடி எதுகை வந்தது.
இதனால், சிவ யோகத்தைத் தலைப்படுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒருங்கவல் லார்களுக்
கொன்பது வாசல் உலைநல மாமே. 

பொழிப்புரை :

ஒன்பது வாயில்களை உடைய ஒரு வீடாகிய உடம்பில், ஒன்பது நாடிகளும் சுழுமுனை நாடியில் ஒவ்வோரிடத்தில் ஒருங்கு கூடுவனவாம். அவ்விடங்களை அறிந்து அந்த நாடிகளைத் தம்வசப்படுத்த வல்லவர்க்கு ஒன்பது துருத்திகளை உடைய ஓர் உலைபோல்வதாகிய உடம்பு ஞானத்தைத் தருவதாய் அமையும்.

குறிப்புரை :

நாடிகள் ஒன்பதும் தொகும் இடங்களே. நடுநாடி யாகிய சுழுமுனையில் உள்ள ஆறு ஆதாரங்கள். நாடிகள் பலவும் இணைதல் பற்றி இவற்றை ``கிரந்தி`` (முடிச்சு) எனவும் யோக நூல்கள் கூறும். நாடிகளைத் தம் வசப்படுத்துதலாவது, அவ்வவ்வாதாரத்திற் செய்யும் தியானம் முதலியவற்றிற்கு அவை இடையூறு செய்யாதவாறு அடக்குதல். இறுதியில் ``வாசல்`` என்றது காற்றைப் புகுத்துவதாகிய துருத்தியை. ``உலையில் உள்ள நெருப்பால் இரும்பு ஒரு துருத்திக் காற்றினால் வேகின்றது; உடம்பில் உள்ள வெப்பத்தால் உயிர் ஒன்பது துருத்திக் காற்றால் துன்புறுகின்றது`` என்றபடி. ``சிவயோகத்தைத் தலைப்பட்டால், இவ்வுடம்பே உயிர்க்கு இன்பம் தருவதாய் அமையும்`` என்பது கூறியவாறு.
இதனால், சிவயோகிகட்கு உடம்பு திருவருள் நெறிக்குத் துணையாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே. 

பொழிப்புரை :

மூலாதாரத்தில் உள்ள அக்கினியை எழுப்பிச் சுழு முனை நாடி வழியே தலையளவும் செல்லச் செலுத்துதல், பிங்கலை இடைகலை வழியாகப் பிராணனை முறையே வெளியே ஓடவிட்டும், உள்ளே செல்ல இழுத்தும் பயிலுதல், ஏழுலகங்களையும் சுமந்து நிற்றல் ஆகிய முறைகளை நாம் சொன்னது, சிவனது அருள்வழியில் நிற்க விரும்புபவரை நோக்கியேயாம்.

குறிப்புரை :

``ஆயினும், அவை மருள்வழியாகிய சித்தியை விரும்பி நிற்பவர்க்கும் பயன்படுகின்றன`` என்பது குறிப்பெச்சம். ``கீழங்கி`` என்பது, பின்முன்னாக மாறிநின்றது, ``கீழ் நீர்ச்செவ் வரும்பு`` (திருமுருகாற்றுப்படை, 29) என்பதுபோல. வாங்கி - மேல் ஏற்றி. ஓடவிடுதல், தாங்குதல்; இவற்றை இரவி மதி வழிகட்கு நிரனிறை வகையால் பொருத்துக. தாங்குதல் - தடுத்தல்; அஃது உள்ளிழுத்தலைக் குறித்தது. ``எங்கே யிருக்கினும் பூரி இடத்திலே`` (பா.558) என்றதனான் இம்முறை கூறப்பட்டமை காண்க. ``இரவி மதி வழி ஓடிட`` என்றதனால், `மதி இரவிவழி ஓடிட` என்பது பெறப்பட்டதாக வைத்து, இதனை ``விபரீத கரணி`` என்னும் எதிரியக்கலாக உரைப்பாரும் உளர். ``உலகங்கள் ஏழு`` என்றது, ஆறு ஆதாரங்களுடன், உச்சியை. இவற்றைச் சுமத்தலாவது, இவற்றின் இயல்புகளை உணர்ந்து அவைகளில் நிற்கப்பழகுதல். இவை ஏழும் ஒவ்வொரு கடவுளின் உலகமாக மதிக்கப்படுதல் அறிக. இந்த ஆதார நிராதார யோகங்களின் அருமைப் பாட்டினை இவ்வாறு விளக்கி, ``இத்துணை அருமுயற்சிக்குப் பயன் அட்டமா சித்திகளே என்பது நூல்களின் கருத்தன்று`` என அறிவுறுத்தருளினார். ``அருவழியோர்க்கே, அறிவுடையோர்க்கே`` என்பவை பாடமாயினும், கருத்து இதுவே என்க. தரித்திட - தரிக்கும்படி. ``ஆங்கது`` என்பது ஒருசொல் நீர்மைத்து.
இதனால், ``யோகமாகிய அரு முயற்சியால், திருவருளாகிய பெரும்பயன் பெற விரும்புதலே அறிவுடைமை`` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 21

தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே.

பொழிப்புரை :

இடைகலை பிங்கலை நாடிகட்கு நடுவே துலை நாப்போல நிற்கும் சுழுமுனை நாடியையே நல்வழியாகக் கொண்டு இயங்கத் தெரிந்தால், வலையில் அகப்பட்ட பெண் மானை வந்து அடையும் ஆண்மான்போல, அந் நாடியின் முடிவில் விளங்கும் சத்தியைத் தேடிச் சிவனும் வந்து பொருந்துவான். இந்நடு நாடி வழி, விலைக்கு விற்க வைத்திருந்த வித்துத் தனக்கே பயன்படுதல் போல்வதொரு தன்மையுடையது.

குறிப்புரை :

மூன்றாம் அடியைத் தாப்பிசையாக முன்னும், பின்னும் இயைத்துப் பொருள் கொள்க. `தலைப்படும் ஆறு` எனற்பாலதனை, துணிவு பற்றி, `தலைப்பட்ட ஆறு` என்றார். பாசத்துப் பிணை, அன்புக்குரிய பெண்மான், முன்னர், `பிணை` என்றதனால், பின்னர், ``மான்`` என்றது, ``கலை`` என்பது விளங்கிற்று. ``பிணை மான்`` என்னும் தொகைச் சொல்லை ``பிணையை அணையும் மான்`` என விரித்துக்கொள்க. `தூவழி செய்தால், பிணைமான்போல், அண்ணல் தையலை நாடித் தலைப்பட்டவாறு` எனவும், ``தூவழி செய்தால் அது விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்தாம்`` எனவும் இரு தொடராக இயைத்துரைக்க. சத்திவழியே சிவத்தைச் சார வேண்டுதலின், அதனை அண்ணல் தையலை நாடி வருவதாக ஓதினார்.
`விலைக்கு உண்ண` என்பது, ``பிறர், விலைக்குக் கொண்டு உண்ண`` என்றதாம். வைத்தது - வைக்கப்பட்ட நெல், ``ஓர்வித்தாம்`` என்றது வித்தாய்த் தனக்கே பயன்படுவதொரு தன்மையையுடையது என்னும் கருத்தினது. ``நெல்லை ஒருவன் அடுத்த ஆண்டிற்கு விதையாக வைத்துப் பெரும்பயன் கொள்ள நினையாமல் விலைக்கு விற்றுச் சிறிது பயன் கொள்ள இருக்கையில் அறிவு திருந்தினானாயின், அந்நெல்லே விதையாய் அவனுக்குப் பெரும் பயன்தருதல்போல, யோகமுயற்சியை ஒருவன் ஞானத்திற்கு வாயிலாகக் கொண்டு அதனை அடையக் கருதிச் செய்யாமல் சித்திகளைப் பெற விரும்பிச் செய்கையில் இடையே பக்குவம் அடைவானாயின், அவ்யோகமே அவனுக்கு ஞானத்திற்கு வாயிலாக அமையும்`` என்பது, ஈற்றடியிற் கூறப்பட்ட உவமையின் பொருள். `தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளையும்` (மதுரைக் காஞ்சி, 11) அத்துணைப் பயன், விலைக்கு விற்றலால் எய்துதல் கூடாமை அறிக.
இதனால், `சித்தியோகந்தானே முத்தியோகமாய்ப் பயன்படும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

ஓடிச் சென்றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கேயுந் தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே. 

பொழிப்புரை :

பல இடங்களிலும் ஓடிச்சென்று அங்கெல்லாம் ஒவ்வொரு பொருளைக் கண்டவர், அக்காட்சியின் பயனாகப் பத்து நாடிகளிலும் வேறுபட்ட பத்து ஓசைகள் எழக் கேட்டு இன்புறுவர். நீவிர் அதனைச் செய்யாது, தேனை உண்ண விரும்பி அஃது இருக்கும் மலை உச்சியைத் தேடி அடைந்து அங்கே பொருந்தியுள்ள தேனை உண்டு களித்திருத்தலே யன்றி, உம்மை அழிக்கப் பாசறையில் தங்கிக் காலம் பார்த்திருக்கும் பகைவரைச் சிறைப்பிடித்தலையும் செய்யுங்கள்.

குறிப்புரை :

``ஓடிச்சென்று`` என்றதனால், `பல இடங்கள்` என்பதும், ``தேடிச்சென்று`` என்றதனால், `குறித்த பொருள் உள்ள இடம்` என்பதும் பெறப்பட்டன. ``தேன்`` என்றது, திருவருளை. விந்துவை, `அமிர்தம்` என்றலே வழக்கன்றி, `தேன்` என்றல் வழக்கன்று. `தேன்` என்றதற்கு ஏற்ப, `மலையுச்சி` என்பது கொள்ளப்பட்டது. மலையுச்சியாவது நாதாந்தம். அதனை இங்கே, தச நாதங்கள் அடங்கிய இடமாகக் கொள்க. பாடி - பாசறை; என்றது உடம்பை. பகைவர், காம வெகுளி மயக்கங்கள். சித்தியை விரும்புவோர் இவற்றை வெல்லமாட்டார் என்க. கட்டும், `கட்டுமின்` என்பதன் மரூஉ.
இதனால், `சிவயோகமே காம வெகுளி மயக்கங்களை அறுத்துப் பேரின்ப நுகர்ச்சிக்கு வழிசெய்யும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப்
பொட்டிட்டு நின்றது பூரண மானதே. 

பொழிப்புரை :

ஓர் இல்லத்தில் உள்ள பல கட்டுக்களை ஒத்த ஆதாரத் தாமரை மலர்களில் அதன் தண்டினைப் பற்றி அங்கங்கு நின்று சிறிது சிறிது தேனைத் தெளித்த ஒன்பது மகளிர், அவ்விடங்களை விட்டுத் தேனை நிரம்ப முகர்ந்து வார்க்கின்ற அவ் இல்லத் தலைவியோடு சேர்ந்து விட்டார்கள். அவ்விடங்களில் நின்ற அவர்கள் அவற்றை விட்டு நீங்கித் திலகம் இட்டு நின்றதே தலைவியுடன் ஒன்றாய் நின்ற நிறைவு நிலையாயிற்று.

குறிப்புரை :

``கட்டு இட்ட`` என்பதில் `இட்ட` உவம உருபு. ஒன்பது கன்னியர் என இயையும். கன்னியரை, `கட்டுக்களில் நின்றவர்` என்றதனால், மாது, `அவ்வில்லம் முழுவதற்கும் தலைவி` என்பது பெறப்பட்டது. மட்டு - தேன்; இஃது சிறிதளவாகத் துளிக்கின்ற தேனுக்கே காரணப் பெயர். பின்னர் இது மிக்க தேனைக் குறித்தல் மரூஉ வழக்கே. இல்லத்தின் ஒவ்வொரு பகுதியில் இருப்பவர் தேனைச் சிறிது சிறிது வார்ப்பவர் என்பதனால், இல்லத் தலைவி தேனை நிரம்ப முகந்து வார்த்தல் அறியப்படும். `தளங்களி னூடு தட்டிட்டு நின்று பூரணமானது` என்க.
தட்டிடுதல் - தடைப்படுதல். முன்னர், ``தாமரை நாளத்தில்`` என்றதனால், `போனது, அதன்வழியாகவே` என்பதுபோந்தது. ஒன்பது கன்னியர், `வாமை, சேட்டை, இரௌத்திரி, காளி, கலவி கரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சருவபூததமனி, மனோன்மனி` என்னும் நவசத்திகள். இவர்களில் வாமை மூலாதாரத்திலும், சேட்டை சுவாதிட்டானத்திலும், இரௌத்திரியும் காளியும் மணிபூரகத்திலும், கலவிகரணி முதலிய நால்வரும் அனாகதத்திலும், மனோன்மனி விசுத்தியிலும் நிற்பர். ஆஞ்ஞையில் ஆதிசத்தி இருப்பள் என்க. `வாமை முதலிய ஒன்பதின்மரும் ஏகதேச சத்திகள்` எனவும், `ஆதி சத்தியே பூரணசத்தி` எனவும், `பவயோகியர்க்கு அனைத்துச் சித்தியும் தருகின்ற ஆதி சத்தியே, சிவயோகியர்க்கு அருட்சத்தியாய்ச் சிவானந் தத்தைத் தருவள்` எனவும், உணர்க. வாமை முதலிய சத்திகள் சித்தி களுள் ஓரோஒன்றையும், சிவானந்தத்தின் ஏகதேசத்தையும் தருவர். ஆகவே, சிவயோகியர் அவர்களை ஆஞ்ஞையில் அருட்சத்திபால் சேர்த்துச் சிவானந்தத்தை வேண்டிநிற்பர் என்பது உணர்த்தியவாறு. பொட்டிட்டு நிற்றல், ஆஞ்ஞையை அடைந்து நிற்றல்.
இதனால், சிவயோகமே நிறைவுடைய யோகமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

பூரண சத்தி எழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாக்கினர்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகிக் கலந்து விரிந்ததே. 

பொழிப்புரை :

பூரண சத்தியாகிய ஆதிசத்தி, `இச்சை, ஞானம், கிரியை` என மூன்றாகி, குண்டலியில், `அகாரம், உகாரம், மகாரம், அபரவிந்து, அபரநாதம், பரவிந்து, பரநாதம்` என்னும் ஏழு கலை களிலும் பொருந்தி இருபத்தொரு கூறாதலால், அவ் விருபத்தொரு கூறும் பிரமன் முதலிய ஐவரது தொழிற்கும் காரணமாய் அவரொடு பொருந்தி நிற்குமாறு ஏகதேச சத்திகள் அக் காரணப்பகுதிகளை (ஐ இருபத்தொன்று) நூற்றைந்தாக்கிக் கொண்டனர். (எனவே, அவை பிரம இச்சா அகாரம், பிரமஞான அகாரம், பிரமகிரியா அகாரம் என்றற்றொடக்கத்தனவாகப் பெயர்பெற்று நிற்பனவாம்.) இனி அந்த நூற்றைந்தையும் மூலாதாரம் முதலிய ஆறாதாரங்களோடும், ஆஞ்ஞைக்கு மேல் உள்ள நிராதாரத்தோடும் கூட்டி மூலாதாரப் பிரம இச்சா அகாரம், மூலாதாரப் பிரமஞான அகாரம், மூலாதாரப் பிரம கிரியா அகாரம் என்றற் றொடக்கத்தனவாக உறழ்ந்து கூற, ஏழடுக்கிய நூற்றைந்தாம் (ஏழு நூற்றைந்து - 7 x 105 = 735 ஆம்) ஆதலின், அங்ஙனமும் ஆக்கினர்.

குறிப்புரை :

அறை - பங்கு; கூறு. குண்டலி சத்தியைப் பிரமன் முதலியவரோடும் ஏழ் நிலத்தோடும் வைத்து இங்ஙனம் பலவாகப் பகுத்துக் கூறுதல், `உயிர்களின் உணர்வு அந்நிலங்களில் அதிதேவர் வழிவாக்கு வடிவாய் அளவற்றனவாகத் தோன்றும்` என்றற்கும், `அவை அனைத்தையும் ஒடுக்கித் திருவருளில் நிறுத்திப் பயன்பெற வேண்டும்` என்றற்குமாம். உணர்வுகள் அளவின்றித் தோன்றுதலையே,
ஒருபொழுதும் வாழ்வதறியார்; கருதுப
கோடியு மல்ல பல. குறள் - 337
எனக் கூறினார் திருவள்ளுவர். `எழு நூற்றஞ்சாக்கினர்; அவ் ஆக்கப் பாடு கலந்து விரிந்தது` என்க.
இதனால், `பலவகை உணர்வுகளையும், சிவயோக நெறியால் திருவருள் உணர்வில் ஒடுங்கச் செய்தல் வேண்டும்` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 25

விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்
பரந்து குவிந்தது பார்முதற் பூதம்
இரைந்தெழு வாயு விடத்தில் ஒடுங்கே. 

பொழிப்புரை :

பல ஏகதேச சத்திகளாய் விரிந்தும் ஒன்றேயான பூரண சத்தியாய்க் குவிந்தும் சிவத்தினின்றும் புலப்பட்டுச் செயல் ஆற்றுகின்ற இவ் ஆதி சத்தி, சிவத்தில் ஒன்றாய் அடங்கியிருக்கும் நிலையினின்றும் வெளிப்பட்டுச் செயலாற்றினால் மண் முதலிய பூதங்கள் தூலமாய் வெளிப்பட்டு விரிந்தும், அவள் சிவத்தில் அடங்கி ஒன்றாய் இருப்பின், அவை (பூதங்கள்) சூக்குமமாய் ஒடுங்கியும் இருக்கும். (ஆகவே, எல்லாம் ஆதிசத்தியால் ஆவனவாகலின்) பூரக இரேசகங்களில் பாம்பு சீறினாற் போன்ற ஓசையை உடையதாய், கும்பகத்தில் சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி எழுகின்ற பிராணவாயுவால் அவளிடத்தில் சென்று ஒடுங்குவாயாக.

குறிப்புரை :

`எழுந்து கரந்து இருக்கின், பரந்துகுவிந்தது` என நிரனிறையாகக் கொள்க. எழுதற்கு முன்னுள்ள நிலையை ``கரந்து உள் - உள் கரந்து`` என்றார். ``குவிந்தது`` என்பது பன்மை ஒருமை மயக்கம். `வாயுவால்` என உருபு விரித்து, `அவளிடத்தினில்` என வருவித்துரைக்க.
இதனால், திருவருளது ஆற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

இடையொடு பிங்கலை என்னும் இரண்டும்
அடைபடு வாயுவும் ஆறியே நிற்கும்
தடையவை ஆறெழுந் தண்சுட ருள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.

பொழிப்புரை :

யோகத்தில் இடநாடி, வலநாடி இரண்டும் அடை பட, நடுநாடி வழியே செல்லும் பிராணவாயு தன் முரண் அவிந்து உனக்குத் துணையாகியே நிற்கும். அதனைப் பற்றிக்கொண்டு சென்று, ஆறு ஆதாரங்களின்மேல் எழுகின்ற சந்திரனுள்ளே பொருந்தி வளர்கின்ற மின்னற்கொடி போன்ற பூரண சத்தியில் நீ ஒடுங்கிவிடு.

குறிப்புரை :

`பின்பு உனக்குத் துன்பமில்லை` என்பது குறிப்பெச்சம். ``அடைபடும்`` என்பது, அடைபட வேறுவழியால் செல்கின்ற எனத் தன்காரியம் தோன்ற நின்றது. ``வாயுவும்`` என்னும் உம்மை, `மனம் திருந்தியகாலத்து` என இறந்தது தழுவிய எச்ச உம்மை. ஆறுதல் - இகல் நீங்குதல். இகலாவது தன்வழிப்படாமை. ``ஆறு`` என்பதன்பின், `மேல்` என்னும் பொருட்டாய கண்ணுருபு விரிக்க. `மேல்` என்பது ஆறாவதனையும், அதன்மேல் உள்ள உச்சியையும் இவ் இரண்டிடங்களும் `சந்திர மண்டலம்` எனப்படும் என்க. `மிடை` என்னும் முதனிலை `மிடைந்து` என வினையெச்சப் பொருள் தந்தது.
இதனால், வாயுவை வயப்படுத்தியதனால் பெறத்தக்க பயன் திருவருட்பேறே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கின்
மடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி அடங்கிடும் மன்னுயி ருள்ளே
நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே.

பொழிப்புரை :

சந்திரமண்டலத்தில் ஒடுக்கி, மனம் ஒருங்கித் திருவருளையே உணர்ந்திருந்தால், பிராணவாயுவும் மெத்தென இயங்குதலும் ஒழிந்து, அடங்கியிருக்கும். இவ்வாறு மனமும், வாயுவும் அடங்குதலால், அவற்றின் வழிப் புறஉணர்வும், தன் உணர்வும் அற்றிருக்கும் உயிரின் உள்ளத்தையே ஐந்தொழிற் கூத்து இயற்றும் இறைவனும் தனக்குரிய இடமாக விரும்புகின்றான்.

குறிப்புரை :

``அதனுள்`` என்றது, `அதன்வழி` என்றவாறு. `உள்ளம்` என்பது, குறைந்து நின்றது. `உள்ளையே` என உருபு விரிக்க. `கூத்தனை நாடுகின்றேனே` என்பதும் பாடம்.
இதனால், `சிவயோகத்தால் சந்திர மண்டலத்தில் நிற்பவர் கட்குச் சிவனை அடைதல் வாய்க்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

நாடியின் உள்ளெழு நாதத் தொனியுடன்
தேடியுடன் சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடில் ஒருகை மணிவிளக் கானதே.

அணுமாதி சித்திக ளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே.

பொழிப்புரை :

பத்து நாடிகளின் உள்ளே எழுகின்ற பத்து ஓசை களாகிய மங்கல முழக்கத்துடன் திருவருளாகிய நிதிக் குவியலைத் தேடிச் சென்று அடைந்து, அதனைக் கவர நினைக்கும் காமம் முதலிய குற்றங்களாகிய பகைவரைச் சிறைப்படுத்தி, அரண்மனையின் மேல் நிலமாகிய நிலாமுற்றத்தில் நந்தா மணிவிளக்கு (அணையாத இரத்தின தீபம்) ஆகிய சிவஞானத்தை ஏற்றிவைத்து இருத்தலே அதுவாம். (மேல், `ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கிருக்க` எனக் கூறிய சிவயோக சமாதியாம்.)

குறிப்புரை :

``திரு`` முதலாக வந்தவை இப்பொருளையுடைய சிறப்புருவகங்கள். ``தொனி`` என்றது மங்கல முழக்கத்தைக் குறித்தது. மங்கலமாவது பகைவரை அழித்து அவரது கோட்டையைக் கைப் பற்றிய வெற்றி விழா. இது தமிழ் நூல்களில் ``மண்ணு மங்கலம்`` எனக் கூறப்படும். இங்குப் பாசங்களை வென்று திருவருட் கோட்டையைப் பிடித்த வெற்றி குறிப்பிடப்பட்டது. மாடு இல் - செல்வ மனை; அரண் மனை. ஒரு கை - ஓரிடம்; மேல் மாடம். இஃது இங்கே சந்திர மண் டலத்தைக் குறித்தலின், ``நிலாமுற்றம்`` என்றற்கு ஏற்புடைமை அறிக.
``மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியர்என் றுந்தீபற
தவத்தில் தலைவர்என் றுந்தீபற``
என்றார் திருவுந்தியாரினும் (பா.12)
இதனால், சிவயோகத்தது பெருமை கூறப்பட்டது.
(இதன்பின் உள்ள ``அணுமாதி சித்திகள்`` என்னும் பாடல் ``தானே அணுவும்`` என்ற திருமந்திரத்தின் பொருளையே மீள அரை குறையாகக் கூறலின், நாயனாரது திருமொழியன்றாம்.)

பண் :

பாடல் எண் : 29

எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்
மொட்டாம் நடுநாடி மூலத் தனல்பானு
விட்டால் மதியுண்ண வும்வரு மேலதே.

பொழிப்புரை :

வசப்படாத பிராணனை அட்டாங்க யோகத்தால் வசப்படுத்தினால் அட்டமாசித்தி உண்டாகும். இனி மூலாதாரத்தில் உள்ள அக்கினி, மொட்டுப்போல் மூடியுள்ள நடுநாடியைத் திறந்து கொண்டு சூரிய மண்டலத்தையும் கடந்து சென்று அப்பால் நின்ற சந்திர மண்டலத்தில் உள்ள அமுதை உண்ணுதலும் யோகத்தாலே உண்டாவ தாகும்.

குறிப்புரை :

``சித்தி கிடைத்திடும்`` என இயையும். ``கிட்டச் செய்தால்`` என ஒரு சொல் வருவிக்க. ``மதி உண்ணவும் வரும்`` என்றதனால், ``அவ்விடத்துத் திருவருளில் நிற்றலும் கூடுவதாம்`` என்பது பெறப்பட்டது. எனவே, ``அவ்வாறு நிற்கவே முயல்க`` என்ற தாயிற்று. ``மேலதாகிய மதி`` எனக் கூட்டுக. மதி, ஆகுபெயர்.
இதனால், ஆஞ்ஞைக்குக் கீழ், சித்தி பெறும் அளவில் நிற்றல் சிறப்பில்லாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை
சத்தி அருள்தரத் தானுள வாகுமே.

பொழிப்புரை :

அட்டாங்க யோகத்தால் அட்டமாசித்திகளே யன்றித் தத்துவ ஞானங்கள் பலவும் விளங்குவனவாம். ``சித்திகள்`` என்பவற்றைத் தமக்கே பெயராக உடைய அட்டமாசித்திகளும், திருவருளேயாய் நிற்கின்ற அந்தச் சித்திகள், மும்மாயைகளினும் நின்று செயல் செய்யும் ஆதிசத்தி அருள் புரிதலால் உளவாகும்.

குறிப்புரை :

திரிபுரம் - மூன்று நகர். ``சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை`` என்னும் மூன்று மாயையே இவ்வாறு உருவகிக்கப் படும். இம்மூன்றினும் நின்று செயலாற்றுதல் பற்றி ஆதிசத்தி, ``திரிபுரை`` எனப்படுகின்றாள். ``திரிபுர சுந்தரி`` எனக் கூறுதலும் உண்டு.
இதனால், ``அபர சித்திகள்`` எனத் தக்க மருட் சித்திகளாகிய அட்டமா சித்திகளினும் மேற்பட்டு, `பர சித்திகள்` எனத் தக்க அருட் சித்திகளும் உள்ளன`` என்பது கூறி, அவற்றிற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்
இட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி
எட்டு வரப்பும் இடந்தானின் றெட்டுமே.

பொழிப்புரை :

பர சித்தியாகிய இந்த அருட் சித்தி எட்டனையும் அடைந்து, இவற்றால் சிவப்பேறும் கைகூடப் பெற்றவரே பர லோகத்தை அடைவராதலால் அவரே ``சித்தர்`` (சித்திகளைப் பெற்றவர்) என்று சொல்லத் தக்கவர். அவர்கள் தங்கள் விருப்பம் எல்லாவற்றையும் சிவனது திருவருள் வியாபகத்துள் ஒடுக்கி அத்திரு வருளையே கண்டுகொண்டிருத்தலே உண்மை யோகக் காட்சியாம். மாயையைக் கடந்த இந்த அருட்சித்தியன்றி மாயைக்குட்பட்ட மருட்சித்திகள் அம்மாயைகளில் நின்று சிவத்தை அணுகுதல் கூடுமோ!

குறிப்புரை :

`அதனால், இந்தச் சித்தியையும் காட்சியையுமே பெற முயல்க` என்பது குறிப்பெச்சம். இங்குக் கூறியவை யெல்லாம் விசேட தீக்கை பெற்று யோக நெறியால் திருவருளையும் சிவத்தையும் மனத்தால் பாவித்து நிற்கின்ற யோகத்தில் ஞானமே யன்றி, நிருவாண தீக்கை பெற்றுக் கேட்டல் சிந்தித்தல் முதலியவற்றால் திருவருளையும், சிவத்தையும் அறிவால் உணர்ந்து நிற்கின்ற ஞானச் செய்திகள் அல்ல என்க. `பரலோகம்` என்றது, உருத்திர லோகத்தை.
இதனால், பரசித்தியது உயர்வு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

மந்தரம் ஏறு மதிபானு வைமாற்றிக்
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்று நற்கா மியலோகஞ் சார்வாகும்
அந்த வுலகம் அணிமாதி யாமே.

பொழிப்புரை :

``மேரு`` எனப் பெயர் பெற்ற சுழுமுனை நாடியைச் சூழ்ந்து இயங்குகின்ற, `சந்திர கலை, சூரிய கலை` என்னும் பெயரை உடைய இடைநாடி பிங்கலை நாடிகளின்வழி இயங்கும் பிராண வாயுவை அடக்கிச் சுழுமுனை நாடியின் உள்ளே செல்லுமாறு மாற்றி யமைத்தபின், மூலாதாரம் முதலிய பள்ளங்களில் தறிபோல நில்லாது, அங்ஙனம் நிற்கும் குற்றத்தின் நீங்க வல்லவர்க்குப் பின் ஞானத்திற்கு ஏதுவாகிய விருப்பத்தைத் தரும் பரலோக இன்பம் இப்பொழுதே உண்டாகிப் பின்பு அவ்வுலகத்தைச் சார்தல் உண்டாகும். அத்தகை யோர்க்கு அந்த உலக இன்பங்களே அணிமாதி அட்டசித்திகளாம்.

குறிப்புரை :

மேருவை, `மந்தரம்` என்றார். `குழியில் நிற்கும்` என ஒருசொல் வருவிக்க. மூலாதாரம் முதல் விசுத்தி ஈறாக நின்று சித்தி களை அடைதலின் இழிபுணர்த்துகின்றாராகலின், அவ்வா தாரங்களை, ``குழி`` என்றார். தர, என்பது, ``தந்து`` எனத் திரிந்து நின்றது. `நிட்காமி யமாவது, உலகியலை விரும்பாது மெய்ந்நெறியை விரும்புதலே` என்றற்கு, அதனை, ``நற்காமியம்`` என்றார். `அக் கசடறு நற்காமிய லோகத்தை இன்றே தரப் பின் அதனைச் சார்வு ஆகும்` எனக் கூட்டுக.
இதனால், `சிவயோகிகட்குத் தவயோகப் பேறே அட்டமா சித்திகளாய் நிற்கும்` என, பரசித்தியாவது இது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

முடிந்திட்டு வைத்து முயங்கில்ஓ ராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனும்
தணிந்தஅப் பஞ்சினுந் தான்நொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.

பொழிப்புரை :

கீழ் ஆதாரங்களில் இறங்காமல், ஆஞ்ஞையிலே தன்னைச் சத்தியுடன் ஓர் ஆண்டின் முடியிட்டு வைத்து, அவளுடன் நீக்கமின்றியிருந்தால், அச்சத்தி இவனுக்கு அணுவிலும் அணுவாகின்ற `அணிமா` என்னும் சித்தியாய் நிற்கும். அந்தச் சித்தியால் இவனும் அந்நிலையினனாவான். இந்த அருட்சித்தியைப் பெற்றவனை, மருட்சித்திகளால் வெல்ல இயலாது.

குறிப்புரை :

இவ் யாண்டு மேற்கூறிய யோக ஆண்டே என்க. ``அணிந்த`` என்பது, `அணுவாய் நின்ற` என்னும் பொருளது `அணி மாவாகை` என்பது குறைந்து நின்றது. அருள் நிலையில் அணுவாத லாவது, எல்லாப் பொருளிலும் நுண்ணிதாய் நிற்கின்ற திருவருளை. தானும் அங்ஙனம் நுண்ணியனாய் நின்று பாவித்தல். முன்னர், ``தான்`` என்றது, திருவருளை. தணிந்த - சிறிதாய. நொய்ம்மை, இங்கு சிறுமை மேல் நின்றது. நொய்யது - சிறிய பொருள்; ``நொய்யனாகி`` என ஓதில் சிறக்கும். ``இருந்திடும்`` என்னும் முற்று, ஆண்பாலில் வந்தது.
கொண்ட தொருபொருளைக் கோடிபடக் கூறுசெயின், கொண்டவனும் அப்பரிசே கூறுபடும்;-கொண்ட
இருபொருளு மன்றியே இன்னதிது என்னா(து)
ஒருபொருளே யாயிருக்கும் உற்று.
-திருக்களிற்றுப்படியார், 24
என வருதல் காணத்தக்கது. இதன் முதலடியும் ஈற்றடியும் உயிரெதுகை.
இதனால், பரசித்திகள் எட்டனுள், அணிமாவாவது, சிவ சத்தி எப்பொருளிலும் நிறைந்திருத்தலை உணர்தல் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன்
கின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாய்கின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே.

பொழிப்புரை :

தான் காண்கின்ற எப்பொருளிலும், அணிமா வாகின்ற அந்த ஒப்பற்ற சத்தியுடனே சென்று, அச்சத்தியே தனக்கு நிலைக்களமாக, தனக்குக் கழிகின்ற காலம் முழுதும் அச்சத்திவழியே நிற்பானாயின், தற்போதங் கெடுதல் ஐந்தாண்டில் கூடும். அதுவே, பர லகிமாவாகும்.

குறிப்புரை :

``புகலது`` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. ``தன்`` என்றது சத்தியை. மாய்தலுக்கு வினைமுதல் வருவிக்கப் பட்டது. `அதுவே மா லகுவாகும்` என வேறு தொடராக்கி உரைக்க. தற்போதம் அறுதலால் உயிர் பொறை நீங்கி நிற்குமாகலின், இது, `இலகிமா` எனப்பட்டது. இது முதல் பல மந்திரங்கள் அந்தாதியாய் வருகின்றன.
இதனால், `பரசித்திகளுள் பர லகிமாவாவது தற்போதம் கெடுதல்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

மாலகு வாகிய மாய்வினைக் கண்டபின்
சாலொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்
பாலொளி யாகிப் பரந்தெங்கும் நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.

பொழிப்புரை :

பர லகிமாவாகிய தற்போதம் கெடுதல் உளதாயின் ஏகதேச உணர்வாய்ப் பொருள்களைப் பற்றுதல் விடுதல்களைச் செய்து நின்ற உயிர், நிறைந்த பேரொளியாம் திருவருளேயாய் நிற்கும்; அதன் பயனாகப் பரம்பொருளாகிய சிவத்தை அறியும்.

குறிப்புரை :

`மாயனை, தானொளி` என்பன பாடமல்ல. மூன்றாம் அடியை முதலடியின் பின்வைத்து உரைக்க. ``நின்றது`` என்பது வினையாலணையும் பெயர்.
இதனால், மேலதன் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடும் ஓராண்டின்
மைப்பொரு ளாகும் மகிமாவ தாகுமே.

பொழிப்புரை :

இலகிமா சித்திக்குப்பின் மெய்ப்பொருளாகிய சிவத்தைச் சத்தி உணர்த்தி நிற்பாள். அவ்வுணர்வினால் அதனை அடைதல் ஓராண்டில் கைப்பொருளாகக் கிடைக்கும். அதுவே, ஒன்றும் தோன்றாத சூனிய நிலையாகிய பர மகிமா வாகும்.

குறிப்புரை :

``சொல்லிய`` என்றனால், சொல்லுதல் அனுவாத முகத்தாற் பெறப்பட்டது. சொல்லுதல் - உணர்த்துதல். தத்பொருள் - அந்தப்பொருள்; என்பது பரம்பொருள். இதுவே மெய்யாதல் பற்றி மீள, ``தத்துவம்`` என்றார். சத்திவழிச் சிவம் வெளிப்படுங்கால் முதற் கண் அஃது இன்னதென அறிய வாராமையானும், பிறிதொரு பொருளும் அங்குப் புலனாகாமை யானும் வெறும் சூனியமாய்த் தோன்றுமாதலின் அதனை, ``மைப்பொருள்`` என்றார். மைப் பொருள் - விளங்காத பொருள். இது வியாபக நிலையின் தலைப் பாடாகலின், `மகிமா` எனப்பட்டது.
இதனால், `அருட்சித்தியாகிய பர மகிமா இது` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 37

ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வெளியுற நின்றன
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.

பொழிப்புரை :

எல்லாவற்றிற்கும் அடிநிலை ஒளியாகிய சிவத்தைக் கண்டபின், காலக் கழிவும் அங்ஙனம் கண்டவனது உணர்வில் தோன்றாது. இனி, எல்லாப் பொருள்கட்கும் மேலான தாகிய காலம், தன்னியல்பில் பொருள்களைத் தன்வழிப்படுத்து நடத்தி நிற்குமாயி னும், அவனது காலங்கள் அவனைக் கட்டுப்படுத்தாது அவன் வழியவேயாம்.

குறிப்புரை :

`போவதும் இல்லை` என்றது, அப்போக்கு உணர்வில் தட்டாமைபற்றி. மேல் நிற்றல், எல்லாப் பொருட்கும் மேலே நிற்றல். வெளி உறுதல், வேறிடத்தில் செயலாற்றுதல். ``தான் நின்ற`` என்றது, `தனக்கு நிலைக்களமான` என்றபடி. தன்வழியாதல், தனது மாற்றத்தை விளைக்கமாட்டாது நிற்றல். `எல்லாவற்றினும் பெரிதாகிய காலத்தையும் அருள்வழி நின்று கடத்தலால், இது மகிமாவாயிற்று` என்பது விளக்கியவாறு. இதில் இரண்டடி யெதுகை வந்தது.
இதனால், மேலதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்
தன்வழி யாகத் தழைத்திடும் வையகம்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்
தன்வழித் தன்னரு ளாகிநின் றானே.

பொழிப்புரை :

தற்போதம் இழந்து சிவத்தை உணர்ந்து நின்றால், ஞானம் மேன்மேல் பெருகும். அங்ஙனம் பெருகப் பெற்றவனால், உலகமும் நலம் பெறும். அங்ஙனம் நலம்பெற்ற உலகம் அவன் வழிப்படுமாயினும், அவன் அவற்றை ஆள நினையாது, சிவனது அருள்வழி நின்று அதுவேயாய் நிற்பன்.

குறிப்புரை :

``நின்றான்`` என்பது காலவழுவமைதி.
இதனால், சிவத்தை உணர்ந்தவன் உலகியலால் தாக்கப் படாமை கூறுமுகத்தால், `மகிமா` என்பதற்குப் பிறிதொரு காரணமும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை யெல்லாங்
கொண்டவை ஓராண்டுக் கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்திய தாகுமே.

பொழிப்புரை :

தோன்றி நின்று தொழிற்படுவனவாகிய தத்துவங்கள் அனைத்திற்கும் தலைவியாகிய ஆதி சத்தியுடன் ஒற்றித்து நின்று கண்ட அத் தத்துவங்களை எல்லாம் யோகி தனக்குக் கீழ்ப்பட்ட வையாக உணர்ந்து ஓராண்டுக்காலம் அவற்றின் தொழிற்பாடுகளைத் தன்னின் வேறாகக் கண்டுகொண்டிருப்பானாயின், அத்தத்துவங் களால் உளவாகும் வாதனை ஒழிந்து அவ்வொழிவே அருட்சித்திப் பிராத்தியாகும்.

குறிப்புரை :

`நின்றன தத்துவம், கண்டன பூதப்படை` என்பன இருபெயரொட்டு. `தத்துவத்துக்கு நாயகி` என நான்காவது விரிக்க. தத்துவங்களை அவளுடன் நின்று காணுமாறு இலகிமாவில் சொல்லப்பட்டது. கண்டன - காணப்பட்டன. ``பூதம்`` என்பது, ஏனைத் தத்துவங்கட்கு உபலக்கணம். `எல்லாவற்றையும் கொண்டு` எனவும், `அவற்றொடு கூட இருந்திடில்` எனவும் உருபுகள் விரிக்க. கொள்ளுதல், அவைகளை வியாப்பியமாக உணர்தல். கூட இருத்தல், ஒட்டின்றிக் கண்டிருத்தல். தத்துவங்கள் தன்னின் வேறாய்த் தனக்குக் கீழ்ப்பட்ட வழி, அவை அனைத்தும் தான் நினைத்தவாறே செயற் படுதல் பற்றி இது பிராத்தி எனப்பட்டது.
இதனால், பர சித்திப் பிராத்தியின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின்ற பூவிற் பரப்பவை காணலாம்
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே.

பொழிப்புரை :

பிராத்தியில் குண்டலி சத்தியையும் தன் வழிப்படக் கண்ட பின்பு, சுத்த மாயையில் உள்ள சுத்த காலமும் அக்குண்டலிக் குள்ளே அடங்கிவிடும். அதனால், சுத்த தத்துவ நிகழ்ச்சிக்கு ஏதுவாக நிகழ் கின்ற சுத்த காலங்களும் நிகழா. ஆதலால், இந்நிலையில் பாகுபட்ட அனைத்துலகங்களில் உள்ள பொருள்களையும் தன் அறிவினுள்ளே காணுதல் கூடும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை இறுதியில் வைத்து உரைக்க. `பகுகின்ற` என்பது, `பாகின்ற` என மரூஉவாயிற்று. `பூ` என்றது `நிலம்` என்னும் பொருட்டாய்ப் புவனங்களை உணர்த்தி நின்றது. பூவிற் பரப்பவை - பல உலகங்களிலும் நிறைந்து கிடக்கின்ற பொருள்கள். இது வினையாலணையும் பெயர். `மேனின்ற காலம்` என மேல் (பா.661) அசுத்த காலம் குறிக்கப்பட்டமையின். இங்கு, ``மேவுகின்ற காலம்`` என்றது, அதற்கு `மேலே பொருந்தியுள்ள காலம்` எனப் பொருள்பட்டு, சுத்த காலத்தைக் குறித்தல் அறிக. `அசுத்த மாயையில்` உள்ள தத்துவங்கள் அனைத்தும் சுத்த மாயையிலும் உள்ளன என்பது மேலேயும் (பா.407) காட்டப்பட்டது. சிவயோகத்தால் குண்டலி சத்தியை இனிது கண்டவரைச் சுத்த மாயை பந்தியாது என்றவாறு.
இதனால், `சுத்த மாயா காரியங்களின் கட்டு நீங்கப் பெறுதலே பரசித்தி கரிமா` என்பது கூறப்பட்டது. இதனானே, மேல் `கண்டன பூதப் படையவை` என்றது, அசுத்த தத்துவங்களையே யாதல் அறிக. அவற்றை, ``பூதப்படை`` என்றதும் அதுபற்றி

பண் :

பாடல் எண் : 41

போவதொன் றில்லை வருவது தானில்லை
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரகத் தின்னொளி
ஆவது மில்லை அறிந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

குண்டலி சத்தியை நன்கு காண வல்லவர்க்குப் பல்வேறு வகைப்பட்ட புவனங்களில் சித்திவழிப் போக்கு வரவு புரிதலும், எடுத்த உடம்பு இடையே வீழ்தலும், நுகர்ச்சிப் பொருள் களால் இன்புறுத்தலும், (மயக்கமுறுதலும்) துன்புறுதலும், யோகத்தில் நாடிகளில் பல இனிய ஓசைகளைக் கேட்டலும், மற்றும் ஆதாரக் காட்சிகளில் நிற்றலும், இவைபோல்வனவும் ஆகிய உலகியல்கள் சிறிதும் இல்லையாம்.

குறிப்புரை :

``இல்லை`` என்றது, `அவற்றால் உணர்வு திரிதல் இல்லை` என்றதாம். எனவே, `இந்நிலை கரிமாவாதல் பொருந்தும்` என்பது காட்டியவாறு. தழைத்தல், இன்புறுதல். தாமதம் - மயங்கல். இவை கூறவே துன்புறுதலும் பெறப்பட்டது. தமரம் - ஒலி; இது கடைக் குறைந்து நின்றது. `அகத்து இன்` என்பது தமரம் என்பதனோடும் இயைந்தது மூன்றாம் அடி மூன்றாம் எழுத்தெதுகை.

பண் :

பாடல் எண் : 42

அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையவை யெல்லாம்
குவிந்தவை ஓராண்டுக் கூட இருக்கில்
விரிந்த பரகாயம் மேவலு மாமே.

பொழிப்புரை :

அணிமா முதலாகப் பல நிலைகளிலும் தன்னால் அறியப்பட்ட சிவசத்தி, பின் யோகியின் உள்ளத்தில் நீங்காதிருப்பின், தத்துவங்களின் குறும்புகள் முற்றிலும் நீங்கினவாம். அங்ஙனம் அவை நீங்கிய நிலையில் அந்தச் சத்தியுடன் அமைதியுற்று இருப்பின், ஓராண்டுக் காலத்தில் நாதத்திற்கு மேல் அளவின்றிக் கிடக்கின்ற அருள்வெளி வியாபகத்தை அவன் அடைதல் கூடுவதாம்.

குறிப்புரை :

முன்னிரண்டடிகளில் கரிமா நிலையை அனுவதித்த வாறு. `இந்நிலையில் அமைதிதோன்றும்` என்றற்கு, ``குவிந்தவை`` என்றார். அவை - அவைபற்றிய உணர்வுகள். `அவை குவிந்து` என மாற்றுக. `குவிய` என்பது ``குவிந்து`` எனத் திரிந்து நின்றது. பர காயம் - எல்லாப் பொருட்கும் மேலே உள்ள ஆகாயம். ``மேவலும்`` என்ற உம்மை, சிறப்பு. விரிந்த பர காயம் மேவலின் மிக்க பயனில்லை யாதலின். இது ``கரிமா`` எனப்படும். மூன்றாம் அடி உயிரெதுகையும், மூன்றாமெழுத்தெதுகையும் பெற்றது. அடிமுரண் ஆதலும் அறிக.
இதனால், பர சித்தியாகிய கரிமாவின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 43

ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
மூல விளக்கொளி முன்னேயு டையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடெளி தாம்நின்றே. 

பொழிப்புரை :

எல்லா ஒளிகட்கும் மூல ஒளியாகிய திருவருளை அனாதியே தம்மிடத்து உடைய அனைவரும் அது தமக்கு நலம் செய்யும் ஒளியாயிருத்தலை அறிந்திலர். அதனைச் சிவயோகப் பயிற்சியால் காட்டுத் தீப்போன்ற பேரொளியாகக் கண்டு மகிழ்பவர் கட்குப் பரஞ்சோதியாகிய சிவ பரம்பொருளில் ஒன்றுபடுகின்ற முத்தி எளிய பொருளாய் நிலைபெற்று நிற்கும்.

குறிப்புரை :

``எல்லா விருப்பத்தினும் வீடு பெறும் விருப்பே உயர் வுடையதாகலின், அது கிடைக்கப் பெறுதலே பிராகாமியமாம்`` என்ற வாறு. ``எளிதாய் நிற்கும்`` என விகுதி பிரித்துக் கூட்டி உரைக்க. இதன் கண் இடையிட்டு எதுகை வந்தது. ``கால விளக்கொளி`` என்பதும் பாட மாதலின், அதனையே கொண்டு, முதலடியை `ஆல விளக்கொளி` என ஓதினும் ஆம். ஆலம், ``அகலம்`` என்பதன் மரூஉமாம். காலம் - பக்குவம் எய்திய காலம்.
இதனால், பரசித்திப் பிராகாமியம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாம்
கொண்டவை ஓராண்டுக் கூடி யிருந்திடிற்
பண்டை அவ் வீசன் பரத்துவ மாகுமே. 

பொழிப்புரை :

முன்னைச் சித்திகளில் பல்லாற்றானும் நீங்கிப் போன தத்துவங்களையெல்லாம் ஆஞ்ஞையில் யோகிக்குத் துணை யாய் நிற்கின்ற சிவசத்தி வழியவாகக் கொண்டு அவற்றோடு ஓராண்டுக் காலம் கூடியிருப்பானாயின், அவனுக்கு, எப்பொருட்கும் முன்னோனாகிய சிவனது இறைமைத் தன்மைகள் எல்லாம் கிடைப்பனவாகும்.

குறிப்புரை :

எனவே, ``இதுவே பர சித்தியுள் ஈசத்துவமாம்`` என்ற தாயிற்று. ஐந்தொழில் நிலையில் மேற்பட்டது சதாசிவ நிலையாதலின், அதனையே எடுத்துக் கூறினார். ``பூதம்`` என்றது இங்குத் தத்துவம் முப்பத்தாறனையும். ``எல்லாவற்றையும், அவற்றொடு`` என உருபுகள் விரிக்க. ``நாயகி, தன்னுடன் (யோகி) கண்டன எல்லா வற்றையும் கொண்டு அவற்றொடு கூடியிருந்திடில்`` என்க. தத்து வங்கள் எல்லாவற்றையும் சத்தியே கைக்கொண்டு அவற்றொடு கூடியிருத்தலாவது, ``இவன் செய்தியெலாம் என்செய்தி என்றும், செய்தது எனக்கு இவனுக்குச் செய்தது என்றும்`` (சிவஞானசித்தி. சூ. 10) யோகியின் செயல் அனைத்தையும் தன் செயலாக ஏற்று அனைத்துச் செயல்களையும் அவனுக்கு நலமாக அமையும் வகையிலே புரிதலாம். ``ஓராண்டுக் கூடி இருந்திடில்`` என்றது, ``யோகி தன் செயல்கள் அனைத்தையும் சத்தியின் செயலாக ஒப்புவித்து நிற்றல் வேண்டும்`` என்பதனைச் சத்திமேல் வைத்து ஓதியவாறு. `பண்டைய தத்துவம்` என இயையும். அவை சிவனது பரத்துவம், தன் வயத்தனாதல் முதலியவையாம். இவைகளைப் பெறுதல் ஈசத்துவமாதல் வெளிப்படை. ``தத்துவ மாகுமே`` என்பது பாடம் அன்று.
இதனால், பரசித்தியுள் ஈசத்துவத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்
ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவ னாமே. 

பொழிப்புரை :

ஆஞ்ஞையாகிய சந்திர மண்டலத்தை அடைந்த யோகி அங்கு நின்றும் மீளாது நிற்குமிடத்து முதற்கண் அம் மண்டலத்தின் ஒளியைப் பெற்றுப் பின்னர் அதன் குளிர்ச்சியைப் பெறு வான். அதன்பின் அம்மண்டலத்தின் பகுதிகளை ஒவ்வொன்றாக அடைவானாயின், இறுதியில் அச்சந்திர மண்டலமே தானாய் விடுவான்.

குறிப்புரை :

எனவே, ``இங்கு, சிவம்`` என்பது ஆஞ்ஞை யோகத்தில் விளங்குகின்ற தியானப் பொருள் என்பதும், ``சத்தி`` என்பது, அப்பொருளின் அருள் என்பதும் போந்தன. போதரவே, தன்வயத்தனாதல் முதலியனவும் அவ்வளவில் ஏற்புடைய குணங் களாதல் பெறப்படும். ஆகின்ற - உண்டாகின்ற; கிடைக்கின்ற. ``ஒளி யாயவன்`` எனவே, ஒளியாதலும் அனுவாத முகத்தாற் பெறப்பட்டது. கலை - கூறு. அவையாவன, ஆஞ்ஞைக்குமேல் உள்ள இடங்கள். அவை, `நெற்றி, தலையின் முற்பக்கம், பிற்பக்கம், வலப்பக்கம், இடப் பக்கம், பிரமரந்திரம்`` எனப் பலவாறு யோக நூல்கள் கூறும். இவ் அனைத்திடங்களிலும் தொடர்பு கொண்டு நிற்கும் ஆற்றலை, ``ஆயிர இதழ்த் தாமரை`` என உருவகித்தும் கூறும்.
இதனால், ஓராண்டில் மேலது கைவருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 46

தானே படைத்திட வல்லவ னாயிடும்
தானே அளித்திட வல்லவ னாயிடும்
தானேசங் காரத் தலைவனு மாயிடும்
தானே சிவனெனுந் தன்மைய னாமே. 

பொழிப்புரை :

ஈசத்துவத்தைப் பெற்ற யோகி இறைவன் செய்யும் செயலெல்லாம் தானே செய்ய வல்லவனாவான். இதனால், `சிவன் இவனே` என உலகத்தாரால் எண்ணப்படும் தன்மை உடையவனாய் இருப்பன்.

குறிப்புரை :

`படைத்திடும், அளித்திடும்` என்னாது, ``வல்லவ னாயிடும்`` என்றதனால், ``அத்தன்மையனாதலன்றி, அச்செயல் களைச் செய்ய அவன் முற்படான்` என்பது கூறப்பட்டதாம். பவ யோகியின் ஈசத்துவம் இதனின் மிகச் சிறியதாயினும் அதுகொண்டு அவன் பலவும் செய்ய முற்பட்டு, அச்செயல்களால் வினையைத் தேடிக்கொள்வான்; ``சிவயோகி பிறப்பிற்கு அஞ்சுதலின், இது கொண்டு யாதும் செய்ய முற்படான்`` என்க.
எல்லாம் அறியும் அறிவுறினும் ஈங்கிவர் ஒன்(று)
அல்லா தறியார் அற. -திருவருட்பயன், 93
என்றது இங்கே நினைக்கத்தக்கது. இவ்வாறாகவே உலகத்தார் இவனை, ``சிவனே`` என்றும், ``சிவனது கூற்றின் அவதாரம்`` என்றும் கூறுவனவெல்லாம் மயக்க உரையேயன்றி, உண்மை யுரையாகா என்றற்கு, ``தானே சிவன்`` என்று ஒழியாது, ``தானே சிவன் எனும் தன்மைய னாமே`` என்றார். ``எவ்வாற்றானும் பிறப்பது உயிரே யன்றி, இறையாகாது`` என்பது கருத்து.
இதனால், ஈசத்துவத்தின் பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 47

தன்மைய தாகத் தழைத்த கலையினுள்
பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே. 

பொழிப்புரை :

ஈசத்துவத்தை அடைந்தோன், பலவாகப் பரந்து விரிந்து கிடக்கின்ற தத்துவங்களை, சத்தியின் தன்மையால் அமைந்த நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளுள் அடங்கி நிற்பனவாக உணர்ந்து ஓராண்டு நிற்பானாயின், சூக்குமப் பொருளாகிய மெய்ப்பொருளைக் காண்பான்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. ``பூதம்`` என்றது தத்துவத்திற்கு உபலக்கணமாய் பின் ஏனை நான்கு அத்துவாக்களுக்கும் உபலக்கணமாயிற்று. தத்துவங்களுள் மிகவும் தூலமாய்ப் பலராலும் அறிந்துரைக்கப் படுவன பூதங்களாதல் பற்றி அவற்றையே பலவிடத்தும் எடுத்தோதினார். உலகம் முழுதும் பஞ்ச பூதங்களுள் அடங்குவனவாகக்கொண்டு, அவற்றை அதிதேவர்கள் வழி வயப்படுத்தல் பொதுநெறியாகிய வேதநெறி; உலகம் அனைத்தும் சிவ சத்திக்கு நேரே தொடர்புடைய பஞ்ச கலைகளில் அடங்கி நிற்பனவாக வைத்து அவற்றின் அதிதேவர்வழி அனைத்துப் பொருள்களையும் வயப்படுத்துதல் உண்மை நெறியாகிய சைவநெறி. சிவசக்தியின் பெருமை உணரப்படுதல் சைவ நெறியில் உள்ள சிறப்பு. அதனால், ``தன்மையதாகத் தழைத்த கலை`` என்றார். பூதங்களை வயப்படுத்துதலால் மருட்சித்திகளன்றி, அருட்சித்திகள் சித்தியா. அதனால் அருட்சித்தி வேண்டுவோர் சைவ நெறியிலே நிற்றல் வேண்டும். அங்ஙனம் நின்று அருட்சித்தி பெற்றோர் சிவனை அடை தற்குத் தடையில்லையாகலின், `பூதத்தைக் கலையினுள் மறித்திடில் மெய்ப்பொருள் காணும்` என்றார். இதனானே, நிலம் முதலிய பூதங்கட்குச் சொல்லப்படும் முறைமைகள் எல்லாம், நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகட்கும் ஏற்புடையனவாதல் அறியப்படும். மென்மை இங்கு நுண்மையைக் குறித்தது.
இதனால், பரசித்தியுள் ஈசத்துவத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவம்
கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாம்
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.

பொழிப்புரை :

ஈசத்துவத்தால் மெய்ப்பொருட் காட்சி கிடைத்த பின், அதனால் விளையும் பயன் யாது எனின், சித்திகள் எல்லா வற்றுள்ளும் சிறந்த `வசித்துவம்` என்னும் சித்தி பெறுதலேயாம். வசித்துவ சித்தியைப் பெற்றோன், இறைவனுடையவாய்ப் பொருந்தி யுள்ள எல்லா உயிர்கட்கும் தானே மெய்ப்பொருள் போலும் தன்மையை உடையவனாவான்.

குறிப்புரை :

என்றது, `எல்லா உயிர்களும் அவனையே இறைவனாகக் கருதி அச்சமும் அன்பும் உடையவாய் அவன்வழி நிற்கும்` என்பதாம். கைப்பொருளாகக் கலந்த உயிர்களாவன ஈசத் துவத்தால் தனக்குக்கீழ்ப்பட்டு நின்ற உயிர்கள். பின்னிரண்டடிகள் வசித்துவமாவது இதுவென்பதை விளக்கின. முதல் அடியில் குற்றிய லுகரம் கெடாது நின்று உடம்படு மெய் பெற்றது. இம்மந்திரம் வல்லின எதுகை பெற்றமை காண்க.
இதனால், வசித்துவ சித்தியின் இயல்பும், அச்சித்தி கைவருமாறும் கூறப்பட்டன. மருட்சித்தி, மருளுடைய உயிரை யன்றி, அருளுடைய உயிரை வசம் செய்யாது. அருட்சித்தி, அனைத்து உயிரையும் வசம் செய்யும். இதுவே அவை தம்முள் வேற்றுமை என்க.

பண் :

பாடல் எண் : 49

தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
புன்மைய தாகிப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே. 

பொழிப்புரை :

மேற்கூறியவாறு பல்லுயிர்கட்கும் மெய்ப் பொருள் தன்மையனாய்ப் பெருமை பெற்று நிற்கின்ற அருளொளிக் கதிர வனாகிய சிவயோகி மெய்ப்பொருளைக் கண்டவனாதலின், ஐம்புல ஆசைகள் அருவருக்கத்தக்க பொருள்களாய்த் தலைகாட்டா தொழிய, ஞானஉருவான திருவருளையே நோக்கி நிற்பான்.

குறிப்புரை :

``கண்டிடின்`` என்னும், `செயின்` என்னும் எச்சம் காலம் உணர்த்தாது. காரண மாத்திரையில் நின்று, `அதனால் அதன் காரியம் நிகழ்தல் உறுதி` என்பதை விளக்கி நின்றது; ஒருவன் தான் மெலியனாயிருந்தும் தனது நிலையை அறியாது வலியவன் மேற் சென்றபொழுது, அதனைக் கண்டோர் `அவன்மேற் சென்றானாயின், இவன் விரையக் கெடுவான்` என்பதிற் போல. ``புன்மையது`` என்பது, பன்மை ஒருமை மயக்கம். நன்மை - ஞானம்; ``கொடி`` என்பது உருவகமாய் அஃறிணையாயினமையின், அதன்கண் இரண்டன் உருபு தொக்கது. `பகலவன் கண்டிடின் காணும்` என்க.
இதனால், அருட் சித்தியாகிய வசித்துவம் பெற்றோர், அதனால் உலகப் பயன் கொள்ள நினையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி ஆகம் அறிந்திடில் ஓராண்டுப்
பொற்கொடி யாய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே. 

பொழிப்புரை :

ஞான உருவான திருவருளோடு கூடி, அதனது இன்பத்தை யோகி ஒருவன் அறிவானாயின், அதன் பின் ஓராண்டுக் காலத்தில் பொன்மயமான கொடிகளும், தருக்களும் நிறைந்த விண்ணுலகங்களில் சென்று மீள வல்லவனாவான். ஆயினும், அவன், மேருவை அடைந்து பொன்னிறத்தைப் பெற விரும்புகின்ற காக்கையினது ஆசைபோன்ற அவ்வாசையை உடையனாவனோ!

குறிப்புரை :

அஃதாவது, `அச்சித்தியின் வழி விண்ணவர் உலகங்களிற் சென்று மீளுதலால் தானும் விண்ணவன் எனச் சொல்லப் படும் பெருமையை அடைய விரும்புவனோ! விரும்பான்` என்பதாம். ஆகம் - உரு; இயல்பு. ``வரும்`` என்றது, `வரத்தக்க ஆற்றல் பெறும்` என்றபடி. கல் - மலை; அஃது இங்கு, மேருவைக் குறித்தது. இதனை அடுத்துள்ள `கொடி` காகம். காகம் மேருவை அணுகியவிடத்து அதன் ஒளியால் தானும் பொன்னிறம் உடையதுபோலத் தோன்றுதலன்றி, உண்மையில் தன் நிறம் மாறப் பெறுதல் இல்லை. அதுபோல, மனித உடம்பு விடப்படுங்காறும் யோகி உண்மையில் தேவனாதல் இல்லை, ஆகவே, இவ்வுடம்பில் நின்றே, `தேவன்` எனப்பெறும் பொய்யான புகழைச் சிவயோகி விரும்பான் என்பதாம். ஏகாரவினா எதிர்மறைப் பொருள் உணர்த்திற்று. இனி ஏகாரத்தை ஈற்றசையாக்கின், ``கற்கொடி ஆகிய`` என்பதற்குக் `கல்லின்மேல் முளையாத கொடிபோலத் தனது உள்ளத்தில் தோன்றாத ஆசையையுடையவனாவன்` என உரைக்க. `தோன்றாத ஆசையை உடையவன்` என்பது, `ஆசை தோன்றாமை உடையவன்` என்னும் கருத்தினதாம்.
இதனால், `அட்டமா சித்திகளும் கைவந்தவர்கட்குப் பிற உலகங்களிலும் செல்லும் ஆற்றல் கூடும்` என்பதும், `அது கூடினும், சிவயோகி, அவ்வாறெல்லாம் உழலும் தன்மையன் அல்லன்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 51

காமரு தத்துவ மானது கண்டபின்
பூமரு கந்தம் புவனம தாயிடும்
மாமரு வுன்னிடை மெய்த்திய மானனாம்
நாமரு வும்ஒளி நாயக மானதே. 

பொழிப்புரை :

ஈசத்துவ சித்தியிற்றானே, விரும்பத் தக்க மெய்ப் பொருட்காட்சி கிடைத்து விடுதலால், அதன்பின் எல்லா உலகமும், பூவினுள் அடங்கித் தோன்றும் மணம்போல உன்னிடத்தே அடங்கித் தோன்றும். அதனால் அவ்வுலகங்கட்கெல்லாம் வியாபகமாம் தன்மையைப் பொருந்திய உன்னிடத்தில், அவற்றிற்கெல்லாம் நீயே உண்மைத் தலைவனாய்நிற்க, புகழ்பொருந்திய அருள் ஒளியே தலைமைபெற்று நிற்கும்.

குறிப்புரை :

`உலகங்கட்கும், சிவயோகிக்கும் இடையே உள்ள இழி வுயர்வுகள் மிகப் பெரியவாகலானும், அவனது இச்சா ஞானக் கிரியைகட்குத் திருவருளே முதலாய் நிற்றலானும் அவன் வசித்துவ சித்தியால் உலகப் பயனை நாடான்` என்றவாறாம். தத்துவம் - மெய்ப் பொருள். `புவனம் பூ மரு கந்தம் ஆயிடும்` என்க. இதனுள் ஆக்கம், உவமை குறித்து நின்றது. மா - பெருமை; ``அத்தகைய மா மருவு உன்னிடை`` எனச் சுட்டு வருவித்துக்கொள்க. மெய்த்தல் - உண்மையாகி நிற்றல். `மெய்த்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத் தலாயிற்று. ``இயமானன்`` என்பது இழிவழக்கில், ``எசமானன்`` என வழங்கும். `வேட்போன்` என்பது இச்சொல்லின் பொருளாயினும், இது ``தலைவன்`` என்னும் பொருளில் வழங்கும். நா - புகழ்; ஆகு பெயர். ``நாம் மருவும்`` எனப் பிரித்து, நாயனார் சிவயோகியைத் தம்மோடு உளப்படுத்துக் கூறியதாகவும் உரைக்கலாம்.
இதனால், மேலதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 52

நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டுபின்
பேயக மாகிய பேரொளி காணுமே. 

பொழிப்புரை :

சிவயோகியானவன் எல்லாவற்றுக்கும் தலைமை யான நல்ல திருவருள் ஒளியைக் கண்டபின் அதனையே தனக்கு உறைவிடமாகக் கொண்டு அதனிடத்தே இருத்தலல்லது, அவரவரது புண்ணியங்கட்கு ஏற்ப அவரவருக்கு உரியவாய் உள்ள உலகங்களிலே சென்று, அவற்றைக் கண்டு, பின், அவைகளில், காவல் மிகுதியால் அச்சத்தைத் தரும் தலைமை இடத்தில் வீற்றிருக்கின்ற அவற்றின் தலைமைக் கடவுளரைக் காண்கின்ற அச்செயலை விரும்புவானோ! விரும்பான்.

குறிப்புரை :

``அகமான புவனங்கள் போய்க் கண்டு`` என்க. இதில், ``அகம்`` என்றது, ``உரிமையாய இடம்`` என்றவாறு. பே, ``அச்சம்`` எனப் பொருள்தரும் உரிச்சொல்.(தொல். சொல். 365) உரிச்சொல்லாதலின் யகர உடம்படுமெய் பெற்றது. அகத்துள்ளாரை ``அகம்`` என்றும், ஒளியுடையாரை ``ஒளி`` என்றும் பான்மை வழக்காற் கூறினார். ``பேரொளி`` என்பதில் பெருமை, தலைமை.
இதனால், `திருவருளை அடைந்த சிவயோகி, ஏனைப் பவயோகிகள் போலப் பல புவன இன்பங்களையும், புவனபதிகளது அருளையும் நாடுதல் இல்லை` என்பது கூறப்பட்டது. `கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு` (தி.8 திருச்சதகம், 2) என்றற் றொடக்கத்து அருட்டிரு மொழிகள் இங்கு நினைவுகூரத் தக்கன.

பண் :

பாடல் எண் : 53

பேரொளி யாகிப் பெரியஅவ் வெட்டையும்
பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே. 

பொழிப்புரை :

பவயோகியர்க்குப் பெரும் பேறாய்த் தோன்றி விரிந்து விளங்குகின்ற, மேற்சொல்லிய உலகங்கள் எட்டனையும் தான் இருக்கும் நிலவுலகத்தோடு ஒத்தனவாகவே உணர்ந்து, அவற்றின் மேல் மனம் செல்லாது அடங்கிய சிவயோகி, இந்நிலவுலகம் முழு தினும் பொருந்தியுள்ள ஒன்றான ஒளியாகிய பிராண வாயுவின்வழிக் காணத்தக்க குண்டலி ஒளியைப் படிமுறையில் பெருகக் காண்பான்.

குறிப்புரை :

`ஆகி` என்னும் எச்சம், `பெரிய` என்னும் பெயரெச்சக் குறிப்பைக் கொண்டது. மேல், `புவனங்கள்` என வாளா கூறியதனை, `எட்டு` என வரையறுத்துணர்தல் வேண்டும் என்பார், `அவ் எட்டையும்` எனச் சுட்டிக் கூறினார். அட்டமா சித்தி வகையில் உலகங்கள் எட்டாமாறு மேலே (பா.616) காட்டப்பட்டது.
``பாரொளியாக`` என்பதில், ``ஒளி`` என்பது `புலம்` என்னும் பொருட்டாய் நின்றது, இதனுள்ளும் ஆக்கம், உவமைப் பொருட்டு. பதைப்பு மனோவேகம்; அஃதாவது ஆசை. நிலவுலகத்தில் உயிர்களை நிலவச்செய்து அதற்கு விளக்கத்தைத் தருவது பிராணவாயுவாகலின், அதனை, ``தரணி முழுதுமாம் ஓரொளி`` என்றார். ``கால்ஒளி`` என்பதனை, ``காலால் அறியப்படும் ஒளி`` என விரிக்க. யோகத்தின் பயன், பிராணாயாமத்தால் குண்டலி ஒளியை அகத்துக் காணு தலாதலின், அங்ஙனம் காணப்படும் ஒளியை, ``காலொளி`` என்றார். `தாரொளியாக` என்பதனை, ``காரொளி`` என்பதன்பின் கூட்டுக. தார் - ஒழுங்கு; என்றது படிமுறையை. யோகியர்க்குக் குண்டலி ஒளி, `மின்னல், விண்மீன், விளக்கு, பகலவன், திங்கள்` என்னும் இவற்றின் ஒளிபோலப் படிமுறையாற் பெருகித் தோன்றும் என்பது மேலே (612) கூறப்பட்டது. இக்காட்சியை இங்குவந்து கூறியது, `பரசித்தி` எனத்தக்க வகையில் அருள் நிலை அனைத்தும் கைகூடிய பின்பே யோகத்தில் மனம் ஒருங்கி அதனை முற்றுப்பெறச் செய்யும் என்பது உணர்த்துதற்கு. இது, புதியதோர் அரண்மனையிற் புகுந்தவன் முதற்கண் அதனை முழுதும் சென்று கண்ட பின்னரே உரிய இடத்தில் அமர்ந்து இன்புறுதல் போல்வதாம்.
இதனால், பரசித்தி முழுதும் கைவரப் பெற்றபின்பே சிவயோகம் முற்ற முடிவதாதல் கூறப்பட்டது.
`உலகத்தை உணரும் பவயோகத்தினும், திரு வருளை உணரும் சிவயோகமே சிறந்தது` என்பதை உணர்த்துதற்கு அத்திருவருளே யோகத்திற்கு முதலாய் நிற்குமாற்றை இவ் வதிகாரத்துள் இங்கு நின்றும் பதினெட்டுத் திருமந்திரங்களால் உணர்த்துகின்றார்.

பண் :

பாடல் எண் : 54

காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது வக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்ஞூற் றொருபத்து மூன்றையும்
காலது வேமண்டிக் கண்டஇவ் வாறே. 

பொழிப்புரை :

பிராணவாயுவும், உயிரும் தம்முள் இயைந்த வாற்றைக் கூறுமிடத்து, பிராணவாயு, உடம்பில் உள்ள நாடிகள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற சிவசத்தியுடன் முன்னர்ப் பொருந்திப் பின்னர், அஃது `ஐஞ்ஞூறு` என்றும், `பத்து` என்றும், `மூன்று` என்றும் சிறந்தெடுத்துக் கூறப்படுகின்ற நாடிகளில் நிறைந்து நிற்கும் வகையினாலேயாம்.

குறிப்புரை :

``கொடி`` என்றது, உடம்பிற் பொருந்தியுள்ள நாடியை. அந்நாடிகள் இவை என்பது நூல்களின்வழி நன்கறியப்பட்டது ஆதலின், ``அக்கொடி`` எனப் பண்டறி சுட்டாற் கூறினார். கொடி நாயகி - கொடிகளில் நிறைந்து நிற்கும் தலைவி. ``நாயகி தன்னுடன்`` என்பதன்பின், `ஆய்` என்பது எஞ்சிநின்றது. உடம்பில் உள்ள நாடிகள் `எழுபத்தீராயிரம்` என்பதுயோகநூல் துணிவு. அவற்றுள், ஐந்நூறு சிறந்தன. அவற்றுள்ளும் சிறந்தன பத்து. அவைமுன்னே (பா.562) சொல்லப்பட்டன. அவற்றுள்ளும் சிறப்புடையன மூன்று; அவை, `இடை, பிங்கலை, சுழுமுனை` என்பன. `ஐந்நூற் றொருபத்து மூன்று` என்றது உம்மைத் தொகையேயன்றி, அத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையன்று. மண்டுதல் - செறிந்து நிற்றல். கண்ட - காணப்பட்ட. இவ்வாறே - இவ்வாற்றினாலேயாம். இத்திரு மந்திரத்துள் சத்தியின் செயல்களை வாயுவின்மேல் வைத்துச் சொற் பொருட் பின்வருநிலையாக அருளிச்செய்தார். இதனுள் குற்றிய லுகரம் பலவிடத்தும் கெடாது நின்று, உடம்படு மெய் பெற்றது.
இதனால், `யோகத்திற்கு முதலாகிய பிராண வாயுவை யோகிக்குக் கூட்டுவித்துப் பின் காத்து நிற்பது திருவருளே` என்பது கூறப்பட்டது. எனவே, உடலில் உள்ள ஆற்றல்கள் பலவும் இயற்கையாய் அமைந்தன எனக் கருதும் பவயோகிகளது கருத்தை விலக்கி, உண்மை யுணர்த்தியவாறாயிற்று.

பண் :

பாடல் எண் : 55

ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிரம் முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகும் அருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே.

பொழிப்புரை :

யாறு போல உண்டாகின்ற விந்துவாகிய அமுதத்தை உடைய ஆஞ்ஞையில் அந்த யாறு பாய்கின்ற வாய்க்கால்கள் ``ஆயிரமும், முந்நூறும், ஐந்தும்`` என்று கூறத்தக்க அளவில் உள்ளன. அந்த அரிய வழியிலே அந்த அமிர்த யாறு பெருகிப் பாயச் செய்து உடம்பை வளர்ப்பன இடை நாடி பிங்கலை நாடி என்னும் இருநாடிகளில் நிற்கும் இரு சத்திகளே யாகும்.

குறிப்புரை :

ஆகும் - உண்டாகின்ற. ``ஆறு`` என்பது, ``யாறு, வழி`` என்னும் பொருள்களில் மாறி மாறி வந்தன. ஓடு, எண்ணிடைச்சொல். அஞ்சாவன, இடை, பிங்கலை, சுழுமுனைகளோடு, கண்ணில் நிற்கும் காந்தாரியும், உடம்பெங்கும் நிற்கும் அத்தியும் என்க. பின்னர் ``ஆயிரமாகும்`` என்றது, முன்னர்க் கூறிய முந்நூறு அஞ்சு என்பவற்றிற்கும் உபலக்கணமாய் நின்றது.
இதனால், ``சிவ சத்தி, இடை நாடி பிங்கலை நாடிகளில் நின்று பிராணனை இயக்குமாற்றால் உடல் உறுதிக்கு இன்றியமையாத விந்துவை உண்டாக்கிப் பெருக்குவது`` என்பது உணர்த்து முகத்தால், `யோகத்தில் பருகத் தக்க அமுதத்தை முன்பே தோற்றி வளர்ப்பது திருவருளே` என்பது கூறப்பட்டது. இதனுள்ளும், ``பிராண வாயு இடைகலை பிங்கலை வழியாக இயங்கி உடலை நிலைப்பித்தல் இயற்கை`` எனக் கருதுவாரது கருத்து விலக்கப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 56

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதொ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்தது அஞ்சே. 

பொழிப்புரை :

இடைகலை பிங்கலைகளின்மேல் சுழுமுனைத் தலையில் நிற்கும் சத்தி, இடையும், பிங்கலையுமாகிய இரண்டன் வழியாகப் பிராணனை இயக்கிச் செயல் புரிகின்ற முறையைச் சொல்லுமிடத்து, இரண்டாகிய அந்தப் பிராணன் ஆயிர நாடிகளோடும், ஐம்பத்தோர் அக்கரங்களோடும் கூடியுள்ள ஆறு ஆதாரங்களில் பொருந்தி, ஐந்து காலத்தைக் கொண்டிருக்கும் வகையிலேயாம்.

குறிப்புரை :

``ஆயிரம்`` என்றது, `பல` என்றவாறு. ஐம்பத்தோர் அக்கரங்களும், ஐந்து காலமும் முன்னே (பா.573, 627) கூறப்பட்டன. அவற்றை இங்கு மீளக் கூறியதன் கருத்து, `யோக நிலையில் வேண்டப் படும் அவற்றை எல்லாம் அவ்வாறாக அமைத்து நின்றது திருவருளே` என்பது உணர்த்துதலாம். `திரண்டது, எடுத்தது` என்னுந் தொழிற் பெயர்கள் `எழுவகை` என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றன. `காலம் அஞ்சு எடுத்தது` என்க.
இதனால், `ஆறு ஆதாரங்களை ஆக்கிக் காத்து நிற்பது திருவருளே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 57

அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே. 

பொழிப்புரை :

சதாசிவ மூர்த்தியின் சத்தி, பத்துக் கைகளில் பத்து ஆயுதங்களை ஏந்தி இருப்பவளாகக் கிரியாவான்கள் கருதுவர். ஆயினும், யோகத்தில் அவளை இரண்டாயிரம் கைகளில் இரண்டா யிரம் ஆயுதங்களை ஏந்தி நிற்பவளாகக் கூறலாம். அவள் மேற்கூறிய ஐந்து காலங்களிலும் தங்கி நின்று அருளுதல், உயிர் ஒன்றையேயாம்.

குறிப்புரை :

சதாசிவமூர்த்தி, வேறுபட்ட ஐந்து நிறங்களை உடைய ஐந்து முகங்களையும், அவற்றிற்கு ஏற்ப அமைந்த பத்துக் கைகளில் பத்து ஆயுதங்களையும் உடையராயிருத்தல் பற்றி அவரது சத்தியையும் அத்தன்மையளாகவே கூறினார். எனவே, `அஞ்சுடன் அஞ்சு முகம்` என்றதில் முதலில் உள்ள ஐந்து, ஐந்து நிறங்களைக் குறிப்பதாம். மூன்றாம் அடியில் `அஞ்சுடன் அஞ்சு` என்பதனையே ``அஞ்சு`` எனச் சுருங்க ஓதினார். ``இரண்டது ஆயிரம்`` என்றது மேலைத் திருமந்திரத்தில் இரு பிராணனும் ஆயிர நாடிவழிச் செல்லுதலைக் குறித்ததாம். `அஞ்சு காலத்தும் ஒன்றையே எடுத்து உள்ளும்` என்க. உள்ளுதல் - நினைத்தல்; அருளுதல். `காலம்` என்னும் பொதுமைபற்றி, `அஞ்சது` என ஒருமையாற் கூறினார். எனவே, `அஞ்சாகிய அக்காலம்` என்பது பொருளாயிற்று. `காலத்தும்` என்பதில் அத்தும், உம்மையும் தொகுத்தல் பெற்றன. ``ஒன்று`` என்பதில், இரண்டன் உருபு இறுதிக்கண் தொக்கது.
இதனால், நாடிகள் பலவற்றையும் இயக்கி உயிரைத்தாங்கி நிற்பது திருவருளே என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 58

ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே. 

பொழிப்புரை :

தன்னோடு ஒப்பது ஒன்று இல்லாது, தானே தனிப்பொருளாய் நிற்கும் சத்தி, பொதுவில் இரு நாடிகள் இயக்கி நின்ற பிராணனை யோக நிலையில் நடுநாடியாகிய ஒன்றன்வழியே செலுத்தி மேல் ஏறுகின்ற தன்மையைச் சொல்லுமிடத்து, அவ்வொரு வெற்றிச் செயலே அளவற்ற வெற்றிச் செயலாய் அமையும்படி ஒரு காலத்துள்ளே உயிரை உயர்த்தி, அருளுதலைச் செய்வாள். ஆதலின், அவளையே நினை.

குறிப்புரை :

`காலினை ஒன்றதன் வழியாகக் கொண்டு ஊர்வகை சொல்லிடின்` என்க. `ஒன்றது வாகிய வென்றி` என உரைக்க. கொள், முதனிலைத் தொழிற்பெயர். `ஆயிரம் ஆயிரம் ஆக` என்னும் ஆக்கச் சொல் தொகுத்தலாயிற்று. இவ்வொரு வெற்றியே பல வெற்றியோடு ஒத்தலாவது, அபர சித்தி, பரசித்தி இரண்டாலும் அனைவரிலும் மேம்படல், ``ஒன்றது காலம்`` என்றது, `எடுத்த பிறப்பிலே` என்றவாறு. முன்னுதல் - நினைத்தல்.
இதனால், `யோகம் கைகூடச் செய்வதும் திருவருளே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 59

முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடில்
முன்னுறும் ஐம்பதொ டொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே. 

பொழிப்புரை :

உயிரோடு உடல் தொடர்பு பட்டபொழுதே தான் எழுந்து இயங்குகின்ற இடைகலை பிங்கலைகளின் தலைவியாகிய சத்தியைப் பற்றி நின்று இயங்குகின்ற பிராணவாயு, பின் முடிவுபெறும் வகையைச் சொல்லுமிடத்து, ஐம்பத்தோர் அக்கரங்களில், பிருதிவி காலம் முதலிய ஐவகைக் காலத்திலும் இயங்கி முடியும் வகையேயாம்.

குறிப்புரை :

`அக்கரங்கள் ஐம்பத்தொன்று` என்றது, குண்டலியின் வழி உணர்வு பலவகையாய் நிகழ்தலைக் கூறியவாறு. எனவே, பிராணவாயு உடல் நிற்குங்காறும் உயிருக்கு உணர்வுகள் பலவும் எழுதற்குக் காரணமாய் இயங்கியிருந்து முடிந்து விடும் என்றதாயிற்று.
இதனால், `வாழ்நாளளவும் உணர்வுகள் பலவும் நிகழுமாறு பிராணவாயுவை இயக்கி உயிரினது பக்குவத்தை முதிர்வித்து வருவது திருவருளே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 60

ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பத்தொன் றொன்பது
மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே. 

பொழிப்புரை :

ஆய்ந்துணர்தற்கு அரியவாகிய மேற்சொல்லிய சிவசத்தி, தன்னுடனாய் இயங்கிவருகின்ற பிராண வாயுவை வரையறை செய்யும் வகையைக் கூறுமிடத்து, இயல்பாக இயக்குகின்ற மூச்சு (சுவாசக்) கணக்கிலிருந்து, ஆராயவருகின்ற ஐந்நூற்று நாற்பது மூச்சு அழிந்தொழிய எஞ்சியவை வலிமையுற்று உள்நிற்றலாம்.

குறிப்புரை :

இயல்பான மூச்சுக்கணக்கு, ஒரு விநாடிக்கு ஆறாக, ஒருநாளைக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு (6 x 60 x 60 என்பது நன்கறியப்பட்டது ஆகலின், அதனை எடுத்துக்கூறாது) வாளா, `வாயு அளப்பது` என்றார். அளப்பது - கணக்கிடுதல். ``மாய்தல்`` என்பது ஆற்றலை இழந்து பயனின்றிக் கழிதலாம். `மூச்சுக்கணக்கில் இயங்கி உடலை நிலைப்பிக்கின்ற பிராணவாயு, ஒவ்வொரு மூச்சிலும் நாற் பதில் ஒருகூறு தனது ஆற்றல் கெடுகின்றது` என்பதை இருபத்தோரா யிரத்து அறுநூற்றில் ஐந்நூற்று நாற்பது மாய்கின்றன, என்றார். எனவே, `மக்களது வாழ்நாள் அளவு நூறாண்டு` என்னும் பொதுக் கட்டளை, தொண்ணூற்றேழரையாண்டாகவே முடியும் என்பது கூறினாராயிற்று. இதனைக் கூறியது, `யோகிகளுக்குத் திருவருள் இம் மாய்வினை நீக்குதலே யன்றிப் பிராணாயாமத்தால், பிராணனின் புறக்கழிவு மூன்றில் ஒருபங்கை (பன்னிரண்டில் நான்கினை)க் கழியாது காத்தும், கும்பகத்தால், ஒரு நாளைக்கு `இருபத்தோரா யிரத்து அறுநூறு` என்னும் மூச்சுக் கணக்கினைக் குறைத்தும் வாழ் நாளை நீட்டிக்கச் செய்கின்றது என்பதும், யோகியரல்லாத பிறருள் நெறிப்பட்ட வாழ்க்கை இல்லாதார்க்குத் தீக்காரணங்கள் பலவற்றால் பிராணன் பல வகையிலும் வலிகுன்ற மேற்குறித்த, `தொண்ணூற் றேழரை` என்னும் அளவினும் குறையப் பண்ணும் என்பதும் உணர்த்துதற்காம்.
``ஆய்வரும்`` மூன்றில் முதலது, `ஆய்தற்கு அரிய` என்றும், பின்னது `ஆய்தல் வருகின்ற` என்றும், இடையது `பொருந்தி வருகின்ற` என்றும் பொருள் தந்தன. மாய் வருவாயு - மாய, எஞ்சுகின்ற வாயு. வளப்பு - வளமை. `வளப்பாக` என ஆக்கம் வருவிக்க. `முப்பதொடொன்பது` என்பது பாடம் அன்று.
இதனால், பிராண வாயுவின் இயக்க வேறுபாடு வாயிலாகத் திருவருள் மக்கள் உலகை நடத்தும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 61

இருநிதி யாகிய எந்தை யிடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுந்தே. 

பொழிப்புரை :

உயிர்களின் வாழ்நாளுக்கு முதலாய் உள்ள பிராண வாயு உயிர்கட்கு இருநிதி (சங்க நிதி, பதும நிதி) போல உதவுகின்ற இறைவனது திருவருளிடத்து இயங்கும் நிலை உண்டாயின், அஃது, `இருபத்தோராயிரத்து அறுநூறு` என்னும் கணக்கினை விட்டு, `இருநூற்று முப்பத்து எட்டு` என்னும் நிலையை அடையும்.

குறிப்புரை :

இஃது இயற்கைக் கணக்கில் சிறிதுகூடத் தொண்ணூற்றில் ஒருபங்காதல் அறிக. மூச்சுக் கணக்கு இங்ஙனம், இயற்கையினின்றும் தொண்ணூற்றில் ஒருபங்காய்க் குறையவே, வாழ்நாள், சிறிது குறைய ஒன்பதினாயிரம் யாண்டாதல் பெறப்படும். மூச்சுக் கணக்கினை இதற்குமேல் குறைத்துக் கூறாமையால், இவ்யாண்டு மேல் எல்லையாதல் அறியப்படும். பிராணன் திருவருளிடத்து இயங்குதலாவது, ஆஞ்ஞை யோகத்திலே நிற்றல். `எழுத்தே` என்பது பாடம் ஆகாமையை, வருகின்ற மந்திரத்தின் தொடக்கச் சொல்பற்றியும் அறிக.
இதனால், பிறர்க்கு வாழ்நாளை வரையறுக்கின்ற திருவருள் சிவயோகியர்க்கு அதனை மிகுவிக்குமாறு கூறப்பட்டது. `பவ யோகியர்க்கு இந்நிலை கூடாது` என்க.

பண் :

பாடல் எண் : 62

எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற் றிருபத்தொன் பானது நாலாய்
எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.

பொழிப்புரை :

யோகக் காட்சியில் தோன்றுகின்ற ஒளியிடத்தில் அறியப்படும் சத்தியினது இடமாகிய ஆஞ்ஞையில் (சுழுமுனை வழியே) பிராணவாயு அடைவதனால் உளவாகும் நிலையைச் சொல் லுமிடத்து, மூலாதாரத்தில் உள்ள அக்கினி மேல் எழுந்து, எழுநூற் றிருபத்தொன்பது நாடிகள் இடையில் உள்ள நான்கு ஆதாரங்களிலும் தொடர்புபட்டு நிற்க, அவற்றின் வழி உடம்பெங்கும் பரவி நிற்கும்.

குறிப்புரை :

`இவ்வக்கினிப் பரப்பால் இங்கெல்லாம் குண்டலி சத்தி விளங்கி நிற்கும்` என்பது கருத்து.
இதனால், யோகியர்க்கு விளங்குகின்ற குண்டலி விளக்கத்திற்குத் திருவருளே முதல் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 63

ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்
ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட
எட்டது கால்கொண் டிடவகை யொத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே. 

பொழிப்புரை :

ஆறு ஆதாரங்கட்குமேல் ஏழாவதான உச்சி யளவும் பிராணவாயுவை ஏற்றியும் இறக்கியும் பயின்றால், ஆறு ஆதாரங்களிலும் தாரையாய்ப் பாயும்படி திருவருள் அமுதத்தை விளைத்து நிற்கும். இனி எட்டாந்தானமாகச் சொல்லப்படுகின்ற தலைக்குமேல் பன்னிரண்டங்குலம் பிராண வாயுவை நீக்கி நிற்றலால் ஆதார வேற்றுமைகள் நீங்கியபின், சுழுமுனையோடு மற்றை ஒன்பது நாடிகளிலும் பிராண வாயு ஒருதன்மைத்தாய் நிற்பதாம்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. `கால்` மூன்றனுள் முதலது, வாய்க்கால். ஏனைய இரண்டும், காற்று. `ஏழு, எட்டு` என்பவை அவ்வெண்ணு முறைக்கண் நின்ற இடத்தைக் குறித்தன. அமுதத்தை `இரதம்` (ரசம்) என்றார். விளைத்தற்கு வினை முதலாக மேற்சொன்ன நாயகியைக் கொள்க. இரட்டுதல் - மாறி மாறி வரச்செய்தல். யோகிகள் பிராண வாயுவைச் சுழுமுனை வழியில் மேல் ஏற்றவும், கீழ் இறக்கவும் வல்லராயிருப்பர். அவ்வன்மையைப் பிர மரந்திரம் வரையிலும் பெற்றவர்க்குச் சந்திர மண்டலத்திலுள்ள அமுதம் தாரையாய்க் கீழுள்ள ஆதாரங்களிலும் பாய்வதாம். துவா தசாங்குலத்தில் உணர்வு சென்றவர்க்கு வாயுப்பயிற்சி நீங்குவதால், அதனை, அந்த எட்டாந்தானம் வாங்கிக் கொண்டதாக ஓதினார். `அஃது அங்ஙனம் கொள்ள வைப்பவளும் நாயகியே` என்பது குறிப்பு. கொண்டு - கொள்ளுதலால். இடவகை - ஆதார நிலைகள். அவை ஒத்தலாவது, அவற்றில் வெவ்வேறு வகையாய் நிகழும் பிராணா யாமம் முதலிய உறுப்புக்கள் அங்ஙனம் நிகழாது துவாதசாங்குலத் தியானம் ஒன்றேயாக நிகழ்தல். `இந்நிலையில் பிராண வாயு, தானே தச நாடிகளிலும் நிறைந்து நிற்கும்` என்பார் ``ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே`` என்றார். சுழுமுனைப் பயிற்சியே சொல்லப்பட்டு வருதலின், அதனுடன் ஏனை நாடிகளிலும் ஒருபடித்தாய் நிற்கும் என்றவாறு. துவாதசாங்குலம் `நிராதாரம்` எனவும், அதனைக் கடந்த தாகிய துவாதசாந்தம், `மீதானம்` எனவும்படும். இத்திரு மந்திரத்தின் அடிகள் எண்ணலங்காரமாய், அடி முரண் பெற்று நின்றது.
இதனால், `ஆதார யோகம், நிராதார யோகம், மீதான யோகம் அனைத்தும் கைவரப் பெறுதல் திருவருளாலே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 64

சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்
துந்திச் சமாதி யுடையொளி யோகியே. 

பொழிப்புரை :

`சந்திரகலை` எனப்படுகின்ற இடநாடிக் காற்றும், `சூரியகலை` எனப்படுகின்ற வலநாடிக் காற்றும் சிவனது திருமுடியில் உள்ள சந்திரகலை எனப்படுகின்ற பரஞானமாகிய திருவருளும் ஒன்றாய் நிற்கின்ற தன்மையை, அனைத்து நாடிகளும் கூடுகின்ற இடமாகிய ஆஞ்ஞையிலே விளங்கக் கண்டு அத்திருவருளேயாகி நிற்பான், உலகியலை அறவே ஒதுக்கித் தள்ளிச் சிவசமாதி ஒன்றையே உடைய சிவ ஞான யோகியே.

குறிப்புரை :

``தாணு`` என்றது, நீண்ட திருமேனியைக் குறித்தது. ``தாணுவின்`` என்றே போயினாராயினும், `தாணுவின்` தலையில் என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. சிவபெருமான் சந்திர கலையைத் திருமுடியில் அணிந்திருத்தல் ஞானத்தை உணர்த்தும் அடையாளமாம். திருவருளாகிய சிவனது சத்தி ஞானமாதல் வெளிப்படை. சிவபெருமான் தனது நெற்றிக்கு நேராகப் பிறையை அணிந்திருத்தல், இலாடத் தானத்தில் நின்று அறிவைத் தரும் குறிப்பினையும் உடையது. இடைநாடி வலநாடி வழிச்செல்லும் காற்றுச் சுழுமுனை வழிச் சென்று ஆஞ்ஞையை அடையத் திருவரு ளாகிய ஒளி விளங்குதலின், ஆஞ்ஞையை, சந்திரன் முதலிய மூன்றும் கூடும் இடம் என்றார். ஒளி யோகி - ஞான யோகி; என்றது சிவ யோகியை.
இதனால், ஆஞ்ஞையில் திருவருளைக் கண்டு தான் அதுவேயாய் நிற்றல் சிவயோகிக்கே கூடும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 65

அணங்கற்ற மாதல் அருஞ்சனம் நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுதல்
சிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல்
நுணங்கற் றிருத்தல்கால் வேகத்து நுந்தலே.

பொழிப்புரை :

மனைவியைத் துறத்தல், மக்கள் முதலிய பிற சுற்றத்தையும் துறத்தல், சிவனை வழிபடுகின்ற நூல் அறிவு மிகுதல், வாய்வாளாதிருக்கும் சிவயோகிகள் அடைந்துள்ள பர சித்திகளை அவரிடம் கேட்டல், உலகியலின் தாக்குதலால் உள்ளம் திரிவுபடா திருத்தல், பிராணாயாமத்தை எளிதாகச் செய்தல்.

குறிப்புரை :

இதனுடன், வருகின்ற திருமந்திரத்தையும் கூட்டி வினை முடிவு செய்க. அணங்கு - பெண்டு. அற்றம் - அறுதி. அருஞ் சனம் - சுற்றம். நீவல் - நீக்குதல். சிணுங்குதல் - முணுமுணுத்தல்.

பண் :

பாடல் எண் : 66

மரணஞ் சரைவிடல் வண்பர காயம்
இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்
அரனன் திருவுரு வாதல்மூ வேழாங்
கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே. 

பொழிப்புரை :

மூப்பு இறப்புக்கள் இன்மை, அருள் வெளியிற் கலந்திருத்தல், தன் முன்னோர்களைத் தனது நற்செய்கையால் நற்கதி பெறச் செய்தல், சிவனது திருவுருவைத் தான் பெறுதல் என்னும் பத்து இயல்புகளையும், கைப்பொருள் போன்ற கேள்வியால் யோகநூற் பொருளை நன்குணர்ந்தோன் பெறுவான்.

குறிப்புரை :

செய்யுள்நோக்கிச் சரை (மூப்பு) பின் நின்றது. `இரணியம்` என்பது `இரணம்` என மருவிற்று. இரணிய பூமி - பொன்னுலகம். முற்றத் துறந்தவற்கல்லது இல்வாழ்க்கைக் கடன் முற்றும் நீங்காமையின், சிவயோகியும் தென்புலத்தார் கடன் செயற்பாலன் என்பது கூறினார். `இல்வாழ்வாரினும் சிவயோகிக்கு இஃது எண்ணிய வாறே எளிதின் முற்றுப்பெறும்` என்பது கருத்து. சிவயோகத்தின் இடைநிலைப் பயன்களில் மேலானது சாரூப பதவி பெறுதலாதலின், அதனை இறுதிக்கண் கூறினார். நன் திருவுரு - நல்ல திருவுருவம். மூவேழ் - மூன்றுடன் கூடிய ஏழ்; பத்து. ``ஆம்`` என்றது, `பொருந் துவான்; அடைவான்` என்றவாறு. ``மூவேழனையும் ஆம்`` என இரண்டாவது விரித்துக்கொள்க. ``கரம்`` என்னும் வடசொல், இறுதிப் போலியாகிய தமிழ் முடிபு ஏற்றது. ``கேள்வியால்`` என மூன்றாவது விரிக்க. கணக்கு - நூல். ``அறிந்தோன்`` என்றது, அறிந்து அந்நெறி நின்ற, மேற்கூறிய ஒளி யோகியை. `அறிந்தோன் ஆம்` என மேலே கூட்டி முடிக்க.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும், சிவயோகி பெறும் இடைநிலைப் பயன்களைக் கூறுமுகத்தால், அவனுக்குத் திருவருள் செய்யும் முதல் நலங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 67

ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகரறி வாரே.

பொழிப்புரை :

ஆர்வத்தால் சிவனைக் காணுதற்பொருட்டுக் கடல் சூழ்ந்த உலகம் முழுதும் கால்கள் நோவ நடந்து சுற்றி வரினும் பயன் இல்லை. அது நிற்க, சிவனுக்கு மிக இனியவராகிய சிவயோகியரே அவன் இருக்குமிடத்தை அறிந்து காண்பர்.

குறிப்புரை :

`காண, நடந்து வலம் வந்தும் பயனில்லை` என மாறிக் கூட்டுக. இது, சரியை கிரியைகளில் நின்று அன்பு முதிரப் பெற்றோரை நோக்கிக் கூறியதன்றிப் பிறரை நோக்கிக் கூறியதன்று என்பதை இடம் நோக்கி யுணர்க. ``நாதன் இருந்த நகர், ஆதார நிராதார மீதானங்களே`` என்பது குறிப்பு. ``இவற்றை அறிந்து அடைதல் சிவ யோகிக்கல்லது கூடாது`` என்பதாம்.
இதனால், திருவருட் காட்சிக்குச் சிவயோகம் இன்றி யமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 68

மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே. 

பொழிப்புரை :

மகேசுரனுக்குக் கீழ் அயன், மால், உருத்திரன் என்னும் மூவரும் மூலாதாரம் முதலிய மூன்று ஆதாரங்களிலும் முறையே நிற்க, மகேசுரனுக்குமேல், `விசுத்தி, ஆஞ்ஞை, நா அடி, உச்சி, தலைக்குமேல் பன்னிரண்டங்குலம்` என்னும் இடங்களில் சதாசிவன், விந்து, நாதம், பரவிந்து, பரநாதம் என்போர் முறையே நின்று பயன் தருமாறு உயிர்களுக்கு அளித்த சத்தி, `பரை` எனப்படும் சிவனது திருவருளே.

குறிப்புரை :

இதனுள் ஒன்பது இடங்கள் குறிக்கப்பட்டமை புலனாகும். ``முன்`` எனவே, ``பின்`` என்பதும், அவ்விரண்டனாலும் `இடை` என்பதும் பெறப்பட்டன. `முன், பின்` என்பன `கீழ், மேல்` என்னும் பொருளவாய் நின்றன. கீழே உருத்திரன் ஈறாகவும், மேலே சதாசிவர் முதலாகவும் கூறினமையின் இடையே அனாகதத்தில் மகேசுரர் இருத்தல் பெறப்பட்டது. எனவே, நாயனாரது துணிபு இம்முறையே யாதல் பெறப்படும். பிற முறைகளில் சிறிது மேலே (பா. 575 உரை) காட்டப்பட்டது. அம்முறை பற்றி, நிற்பார், இங்கு, ``மூல முதல்`` என்பதற்கு, `கணபதி` எனவும், ``மூலாதாரத்திற்கு மேல்`` எனவும் பொருள் உரைப்பர். `பரவிந்து` முதலியவை செய்யுளுக்கு ஏற்ப வைக்கப்பட்டன. திருவருளை, இறைவன் பாதம் என்றல் மரபு.
இதனால், மேல், ``நாதன் இருந்த நகர்`` எனப்பட்டன இவை என்பது கூறி, இவ்வாறெல்லாம், திருவருள், யோகிகட்கு நலம் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 69

ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தம்ஈ தானந்த யோகமே. 

பொழிப்புரை :

மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களையும் அவற்றில் உள்ள கடவுளரைத் தியான சமாதிகளால் வழிபட்டுப் பயன்பெறுமாற்றால் கடந்து, அவற்றிற்கு மேல் நிராதாரமாகிய உச்சிமுதற் பன்னிரண்டங்குலத்தை அடைந்து பரவிந்து பரநாதங் களின் அருள்பெற்று இவ்வாற்றால், மேதை முதலிய பிரணவகலை பதினாறும் கடக்கப்பட்டனவாய்விட, அதற்கு மேல், சொல்லவும், நினைக்கவும் வாராத மீதானமாகிய துவாதசாந்தத்தில் (பன்னிரண்டு அங்குலத்திற்கு அப்பால்) பரமசிவனை அடைந்து நிற்றலே ஆனந்த யோகமாகும்.

குறிப்புரை :

``ஆனந்தயோகம் நிகழ் புதல்வா`` (உண்மை விளக்கம்) என்பது நினைக்கத்தக்கது. ``சிவயோகத்துள்ளும் மூலாதாரம் முதலிய ஐந்து ஆதாரங்களில் நிற்றல் தவயோகமும், ஆஞ்ஞை முதலியவைகளில் நிற்றல் அருள் யோகமும், துவா தசாந்தத்தை அடைதல் ஆனந்த யோகமும் ஆம்` என்றவாறு. ``மேதாதி ஈரெண் கலை செல்ல`` என்றது வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்று வாய் செய்தவாறு. எனவே, ``அக் கலைகளாவன இவை`` என்பது அவ் வதிகாரத்திலே அறியற்பாலதாம்.

பண் :

பாடல் எண் : 70

மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்
துதிசெய் பவர்அவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே. 

பொழிப்புரை :

சந்திர கலையாகிய இட நாடிக் காற்றும், சூரிய கலையாகிய வல நாடிக் காற்றும் ஒடுங்கிச் சுழுமுனையில் வந்து பொருந்தச் செய்து, வாசி யோகத்தில் நின்று, ஆதாரங்களில் உள்ள கடவுளரைப் போற்றுகின்ற பொது யோகிகள் மேலுலகத்தில் அவ்வக் கடவுளராய் நின்று இன்பம் நுகர்வர். சிவனை உணர்தலாகிய முறைமையில் வழுவாது நின்று, அருள் யோகம் ஆனந்த யோகங் களைச் செய்கின்ற உண்மை யோகிகட்கே, நிலையான வீடுபேற்றைக் காட்டும் பரமசிவன் முன்னிற்பான்.

குறிப்புரை :

`சந்திர சூரியரோடு கூடி நிற்பவர் வானவரே` என்னும் நயம் தோன்ற முதல் இரண்டடிகளை அவ்வாறு ஓதினார். கூடி - கூடிய பின். துதி செய்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்க. ``அவர்`` என் பதன்பின், `கொண்ட` என ஒருசொல் வருவிக்க. `வானவர்கள்` என் பதன் பின் `ஆவர்` என்பது எஞ்சிநின்றது. தொன்மை, முன்னே துதிக் கப்பட்டமையைக் குறித்தது. ``நின்றான்`` என்பதில் நிற்றல், வெளிப் பட்டு நிற்றல் என்னும் பொருளது. பதி - நிலைத்து வாழும் ஊர்.

பண் :

பாடல் எண் : 71

கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தாமாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டறி வார்க்கு நமனில்லை தானே. 

பொழிப்புரை :

பிராண வாயுவைத் தம்வழியில் இயக்குமளவே வல்லராய்ப் பவயோகம் கைவந்தவர் மருட் சித்திகளையே பெறுவர். ஆஞ்ஞையில் அருள் இன்பத்தைத் தருகின்ற அருள் யோகத்தைத் தலைப்பட்டு, பின் சுழுமுனைத் தலையை அடைந்த பிராண வாயுவால் அவ்விடத்தில் வடு உண்டாகத் தாக்கிப் பின்பு, அவ்வாயுவை மண்டை ஓட்டில் தீப்பொறி உண்டாகுமாறு மோதி, உணர்வை அசையாது நிறுத்திச் சிவனை அறியும் ஆனந்த யோகத்தில் நின்று சிவயோகம் கைவந்தவர்க்கு இறப்பு உண்டாகாது. (எடுத்த பிறப்பிலே வீடு உண்டாகும் என்பதாம்)

குறிப்புரை :

கட்டுதற்கும் நடுதற்கும் செயப்படுபொருள் வருவித்துக் கொள்க. மணம் செய்தல் - கூடுதல். இது, `தாமரையுள்ளே மணம் போல நிற்றல்` என்னும் நயம் தோற்றி நின்றது. `கரந்தெங்கும் தாமாவர்` என்பது பிராத்தியைக் குறித்துப் பிற சித்திகட்கு உபலக் கணமாய் நின்றது. புருவநடுவில் தோன்றும் வடு, பொட்டுப்போலத் தோன்றுதல் பற்றி ``பொட்டெழ`` என்றார். யோகத்தால் இவ்வடுத் தோன்றுதல் பலநாள் பயிற்சியால் ஆதலின், தாமரையுள்ளே மணஞ் செய்தற்குப் பின்னர்க் கூறினார். பொறியெழத் தாக்குதல், வன்மையை மிகுத்துக் கூறியவாறு. தண்டு - சுழுமுனை. அஃது ஆகுபெயரால் அதன்வழிச் செல்லும் பிராண வாயுவைக் குறித்தது. `இறப்பில்லை` என்னும் பொருளதாகிய ``நமனில்லை`` என்பது, இறந்தவர் பின் பிறப்பராதலின், பிறவியற்ற நிலையை அடைதலை உணர்த்தி நின்றது. ``கட்ட வல்லார்கள் கரந்தெங்குந் தாமாவர்`` எனவும், ``நட்டறிவார்க்கு நமனில்லை`` எனவும் கூறியன, பவ யோக சிவ யோகங்களது இழிபு உயர்வுகளை உறழ்ந்து காட்டியவாறு.
இவ் இருமந்திரங்களாலும், இருவகை யோகங்களின் இழிபு உயர்வுகளை ஒருங்கு வைத்துக் காட்டிச் சிவயோகம் வலியுறுத்தி முடிக்கப்பட்டது.
`பரகாயப் பிரவேசம்` என்பதை நாயனார் இங்ஙனம், `மேலான ஆற்றல் பெற்ற உடம்பு` எனவும், ``அருளுடம்பு`` எனவும் இரு பொருள்பட இரட்டுற மொழிதலாக வைத்து, ``சித்திகள் எட்டன்றி`` என்னும் திருமந்திரம் முதல் இது காறும் சிவயோகமாகிய பரயோகத்தையும், பரசித்தியாகிய அதன் பயனையுமே உணர்த்தினமை அறிக.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...