ஞாயிறு, 21 ஜூன், 2020

மூன்றாம் தந்திரம் - 10. அட்டாங்க யோகப் பேறு

மூன்றாம் தந்திரம் - 10. அட்டாங்க யோகப் பேறு


பண் :

பாடல் எண் : 1

போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடும்
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.

பொழிப்புரை :

மலர்களை விரும்புதலால், அவை பொருந்தப் பெற்ற புரிந்த சடையினையுடைய சிவபெருமானது திருவடியை எத்துணைச் சிறிதளவு விரும்புவராயினும், அவர் சுவர்க்கத்தையே அடைவர்; நிரையம் புகார், இறைவியை ஒருபால் விரும்பிவைத்து நடனம் புரிகின்ற அப்பெருமான், தன்னை விரும்புபவன் எவனாயினும் அவனுக்கு `இவன் விரும்பியது யாது` என்று நினைந்து அதனை அருள்செய்பவன் ஆதலின்.

குறிப்புரை :

`ஆகவே, யோகத்தின் முதற்படியில் நின்றோர்க்கு அவன் இம்மையில் அவன் விரும்பிய பயனையும், மறுமையில் சுவர்க்கத்தையும் அருளுவன்` என்பதாம். ``யாது`` என்பது, `சிறிது` என்னும் பொருட்டாய், அல்லவை செய்தலை ஓம்புதலாகிய (புறம். 195) இயமத்தைக் குறித்தது. `உகந்தாரும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. பின்னிரண்டடிகளால் சிவபெருமான், `வேண்டுவார் வேண்டுவதை ஈயும்` (தி.6 ப.23 பா.1) கருணையாளனாதலைக் குறித்தவாறு மாதொரு பாகானாதலும், நடனம் ஆடுதலும் அக் கருணையைத் தெளிவிப்பனவாம். விடையூர்தியும் விரைந்து வந்து அருளுதலைக் குறிப்பதேயாம்.
`சுவர்க்கம்` என்பது பவ யோகியர்க்குத் தேவர் உலகமும், சிவயோகியர்க்கு உருத்திரர் உலகமுமாகக் கொள்க. பவயோகியர் சிவபெருமானைப் போற்றினும், பிற தேவரோடு ஒப்ப நினைந்து போற்றுபவரே என்க.
இதனால், இயமத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதம் சேரலு மாமே. 

பொழிப்புரை :

சிவபிரானது திருவடியைத் துணையாகப் பற்றி அன்பு செய்து, அவனது புகழைக் கற்றும், கேட்டும் ஒரு பெற்றியே ஒழுகுவார்கட்கு, பின்னர், முனிவர் குழாம் முழுவதும் சுவர்க்க லோகத்தே முன்வந்து எதிர்கொள்ள ஒளிமயமாகிய அவ்வுலகத்தை அடைதல் கூடும்.

குறிப்புரை :

``பரன்`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, `பதத்து` என்றார். பரன்புகழ் கற்றல், பிற நியம ஒழுக்கங்கட்கு உபலக்கணம் ``ஆங்கே`` இரண்டில் முன்னது, `ஒருபெற்றியே` என நியமத்தைக் குறித்தது. பின்னது செய்யுளில் சுட்டு முன் வந்தவாறு. `முற்றும்` என்னும் உம்மை தொகுத்தல். தெற்றுதல் - விளங்குதல். ``முனிவர்`` என்பது சிவயோகியர்க்கு உருத்திர கணங்களையும், ``சிவபதம்`` என்பது பவயோகியர்க்கு, `இன்ப உலகம்` என்னும் பொதுப் பொருட்டாய்த் தேவருலகத்தையும் உணர்த்தி நிற்கும். `சேர்தலும்` என்னும் உம்மை, சிறப்பு.
இதனால், நியமத்தின் பயன் கூறப்பட்டது. `உயர்ந்தோராய்ப் போற்றப்படுதல் இங்குக் குறிக்கப்பட்ட சிறப்பு` என்க.

பண் :

பாடல் எண் : 3

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.

பொழிப்புரை :

மக்கள், மெய் வருத்தத்தைப் பெற்றுத் தவம் செய்தபின் சிவபெருமானது அருளால் விண்ணவர்க்குத் தலைவராய், `வானுலகச் செல்வத்திற்கு உரிமையுடையவர் இவரே` என்று பலரும் புகழும்படி, மத்தளம், குழல் முதலிய வாச்சியங்கள் ஒலிக்க வீற்றிருந்து, தலைவராம் இன்பத்தை அடைவர்.

குறிப்புரை :

வருந்துதல், இங்கு, மெய் வருந்தல், எனவே, இஃது ஆசனத்தைக் குறித்தது. ``தவம்`` என்பது ஏற்புழிக் கோடலால் யோகமாயிற்று. `செய்தபின்` என்பது `செய்து` எனத் திரிந்து நின்றது. ``வானவர்`` என்பது பவயோகியர்க்குத் தேவர்களையும், சிவயோகியர்க்கு உருத்திரர்களையும் குறிக்கும். எனவே, தேவர்க்குத் தலைவராதல் திசைகாவலர் ஆதலையும், உருத்திரர்களுக்குத் தலைவராதல் உருத்திர புவனங்கட்கு அதிபதிகள் ஆதலையும் குறிப்பனவாம். `கோ, செல்வன், இவன்` என்பன, பன்மை யொருமை மயக்கங்கள். `அருளால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று.
இதனால், ஆசனத்தின் பயன்கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

செம்பொற் சிவகதி சென்றெய்தும் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே. 

பொழிப்புரை :

பிராண வாயுவைக் கும்பகம் செய்ததன் பயனாக மக்கள் செம்பொன் மயமான இன்ப உலகத்தில் சென்று சேரும் பொழுது, விண்ணவர் குழாம் வந்து எதிர்கொள்ள, விண்ணுலக மகளிர் தாம் தாம் `எமக்கு அரிதிற் கிடைத்த தலைவன் இவனே` என மைய லுற்றுச் சொல்லுமாறு கலவி இன்பம் மிகப்பெற்று இருத்தல் கூடும்.

குறிப்புரை :

``கும்பத்து`` என்பதனை முதலிற் கொண்டு உரைக்க. `கும்பகத்து` என்பது குறைந்து நின்றது. `சிவகதி, அமரர்` என்ப வற்றிற்கும் மேல் உரைத்தவாறே உரைக்க. பொன்தலைவன், உவமத் தொகை. உவமை, பயன்பற்றி வந்தது. ``இன்பக் கலவி`` எனப் பின்னர் வருதலால், சொல்வோர் மகளிராதல் பெறப்பட்டது. மையலுற்றுக் கூறுவோர் ஆடல் மகளிர். அவர் அவ்வாறு கூறினும் சிவயோகியர் இன்புறுவது உரிமை மகளிரோடேயாம். ஐம்புல இன்பங்கள் பலவற்றையும் நிரம்பத் துய்த்தலை விளக்கும் குறிப்பு மொழியாக இன்பக் கலவி எய்துதலை எடுத்தோதினார். உருத்திரலோக இன்பம் சிவனை மறப்பியாது என்க.
இதனால், பிராணாயாமத்தின் பயன் கூறப்பட்டது. மேலது பதவிக்களிப்பும், இது துய்த்தற்பேறுமாகிய வேறுபாடு நுனித்துணர்ந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 5

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.

பொழிப்புரை :

இம்பருள்ளாரை விடுத்து, உம்பருள்ளாரைப் பாவனையால் அடைந்தோர், அதன் பயனாக அவரை உண்மை யாகவே அடையுங் காலத்து, அவ்விடத்துள்ளார், `மக்களுள் இவ்வுயர் நிலையை அடைந்தோன் யாவன்` என்று வியப்புற்று வினாவ, (ஒரு சாரார் ஓர்ந்துணராது வடிவம் ஒன்றே பற்றி) `இவன் சிவபெருமான் தான்` என்று மயங்கிக் கூற, இவ்வாறு அமரர் பலரும் ஒருங்குவந்து எதிர்கொள்ளத் திருநீலகண்டப் பெருமானைக் கண்ட முறைமையே எங்கும் நிகழ்வதாகும்.

குறிப்புரை :

உம்பரைப் பாவனையால் அடைதலே பிரத்தியாகா ரமாம். சேர்தல் உண்மை வகையைக் குறித்தலால், அதற்கு வாயில் முன்னர்ச்செய்த பாவனையாதல் பெறப்பட்டது. சேர்தற்குச் செயப்படு பொருள் திசை என்ற குறிப்பாற் பெறப்பட்டது. திசை - இடம். மெய் - வடிவம். `கண்டனை மெய்யைக் கண்டவாறு` என, முதல், சினை இரண்டன்பாலும் ஐயுருபு வந்தது. `நிகழ்வது` என்பது சொல்லெச்சம். ``காருறு கண்டனை மெய்கண்டவாறே` என்றதனால், சீகண்ட உருத்திர வடிவம் பெறுதல் கூறப்பட்டது. இவர் பவயோகியராயின், ஈசான னாகிய திசைக்காவலனது சுற்றமாய் நிற்பர் என்க.
இதனால், பிரத்தியாகாரத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே. 

பொழிப்புரை :

மக்கள் நல்வழி ஒழுகுமாற்றை ஆராய்ந்து, அவரைத் தீவழியினின்றும் நீக்குகின்ற நிறைமொழி யுடையராகிய முனிவர், பின் விண்ணுலகில் எவ்விடத்துச் செல்லினும், அவ்விடம் மண்ணுலகில் மிக்க கொடையுடைய இல்லறத்தவர் வாழ்கின்ற இடம்போலவே எதிர்கொண்டு பேணும் இடமாம்.

குறிப்புரை :

சொல்வழியாளர் - சொல்லால் வழிப்படுத்தும் ஆற்றல் உடையவர். எனவே, `அவரது சொல், அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்பயனைத் தப்பாது தருவது, என்பது பெறப்பட்டது. இதனையே ``நிறைமொழி`` எனத் தொல்காப்பியரும், (தொல். செய்யுளியல், 171) திருவள்ளுவரும் (குறள், 28) ஒருபடித்தாகக் கூறினர். இங்ஙனம் கூறவே, `அறமுதற் பொருள்களை உலகிற்கு உள்ளவாறுணர்த்துவார் இவரே` என்பது போந்தது. இவர் இவ்வாறு நிறைமொழி யுடையராதல் தாரணை யோகத்தில் நிற்றலால்; அஃதாவது, மனத்தைப் பிறழவிடாது குறித்த பொருளிடத்தே நிறுத்தி நிற்றலாலாம். இவரே ஐம்புல ஆசையை முழுதும் வென்றவராவர்.
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு. -குறள், 354
என்னும் குறளின் உரையில் பரிமேலழகரும், ``ஐயுணர்வு எய்து தலாவது, மனம் மடங்கி ஒருதலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல்`` என்று உரைத்தார். எனவே, ``உரன் என்னுந் தோட்டியான் ஓரைந்துங் காத்தல்`` (குறள், 24) என்பதும் தாரணையே யாயிற்று. இந்நிலையைப் பெற்றோர் நிறைமொழியாளராதலை,
ஐந்தவித்தா னாற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. -குறள், 25
என்பதனாலும் அறிக. இவையெல்லாம் பிரத்தியாகார நிலைக்கு ஏலாமையும், தியான சமாதிகளில் சிறுபான்மையன்றிப் பெரும் பான்மை நிகழாமையும் அறிந்துகொள்க. இமையவரது பல்வழி என இயையும். `பாரில் இல்வழியாளர் வழியாகும்` என மாறிக் கூட்டுக. ஆக்கம் உவமை குறித்து நின்றது. இத்தொடர் தாம் எய்திநின்ற உலகத்தேயன்றி அதற்குக் கீழுள்ள உலகங்களினும் வியாபகம் உடையராதலை உணர்த்திற்று.
இதனால், தாரணையின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடந்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதம்முன்
தாங்கவல் லார்க்குந்தன் தன்இட மாமே. 

பொழிப்புரை :

சமாதி, பிரத்தியாகாரம், தாரணை, தியானம் இவற்றில் நிற்பாற்கு அவரவரது தியானப் பொருளின் இடமே அடையுமிடமாகும்.

குறிப்புரை :

எனவே, தியானத்திற்குப் பயன் தியானிக்கப்பட்ட கடவுளது உலகத்தில் இருந்து இன்பம் நுகர்தல் ஒன்றேயாயிற்று. செய்யுள் நோக்கிச் சமாதி முதற்கண் கூறப்பட்டது. `புவனத்தினின்றும் மனத்தை வாங்க வல்லார்` என உருபு விரித்துச் செயப்படுபொருள் வருவிக்க. இது பிரத்தியாகாரமாதல் அறிக. `நின்ற` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. `நின்ற இடத்தில் தேங்குதலே தாரணை` என்பதும், அமுதத்தை உண்டு தேக்குவார் தியான யோகிகள் என்பதும் வெளிப்படை. தான், தியானிக்கப்படும் கடவுள். `தன்தன்` என்பது அடுக்கு. தியானத்தின் பயனே கூறக்கருதினாராயினும், சிவயோகம், பிறயோகம் என யோகம் இருவகையாய் நிகழும் என்பதனை ஈண்டு உணர்த்துதற்குப் பிறவற்றின் பயனையும் உடன் கூறினார். பிரத்தி யாகாரத்திற்குக் கீழ்உள்ளவற்றில் சிறப்புப்பயன் இன்மை அறிக. இத்திருமந்திரத்திற்கு, `திருப்பாற் கடலில் தூங்க வல்லார்` என ஒரு சொல் வருவித்தும், `வாங்குதல்` என்பதற்குப் `படைத்தல்` எனவும் `தேங்குதல்` என்பதற்கு, தான் அழியாது நின்று பிறவற்றை அழித்தல், எனவும் பொருள் கூறியும் இடர்ப்பட்டுத் தாம் தாம் வேண்டியவாறே உரைத்தனர்.
இதனால், தியானத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.

பொழிப்புரை :

தாத்துவிகங்களாகிய தனு, கரணம் புவனம், போகம் என்னும் அனைத்துப் பந்தங்களையும் கடந்தபின், அவற்றிற்கு நிரம்பிய காரணமாகிய தத்துவங்கள் ஏழனது இயல்பும் தன் அறிவிடத்தே இனிது விளங்கித் தோன்றவும், இடையறாது கிளைத்து வருகின்ற வினையாகிய காரணம் கெட்டொழியவும் அடைவுபடப் பயின்ற யோகத்தால் மறுமையில் தனது கடவுளோடு ஒப்ப இருத்தல், சமாதியாலே பெறத்தக்கதாம்.

குறிப்புரை :

`உபாதி` எனினும், `செயற்கை` எனினும் ஒக்கும். அது தாத்துவிகத்தின் மேல் ஆதற்கு, ``காரியமான உபாதி`` என அடை கொடுத்து ஓதினார். `கடந்தபின்` என்பது `கடந்து` எனத் திரிந்து நின்றது. ``ஆரிய`` என்பது, `ஆர்` என்பது அடியாகப் பிறந்த பெய ரெச்சம். ஆர்தல் - நிரம்புதல்; காரியத்தின் தோற்றத்திற்கு ஏற்புடைத் தாதல். தாத்துவிகங்கட்குக் காரணம் தத்துவமாதல் வெளிப்படை. ஏழென்னும் தொகையானே, இவை வித்தியா தத்துவமாதல் விளங்கும். இவற்றோடே அசுத்தம் நீங்குதல் பற்றி, இவற்றின் மேல் உள்ளவற்றைக் கூறிற்றிலர். ``வாரிய`` என்பது, `வாரி` என்பது அடியாகத் தோன்றிய பெயரெச்சம். வாரி - வருவாய். இது முடிவின்றி வருதலை உணர்த்திற்று. முடிவின்றிக் கிளைத்து வரும் காரணப் பொருள் வினையேயாதல் அறிக. `தாரியல் தவம்` என மாற்றுக. தார் - ஒழுங்கு. ``தற்பரம்`` என்பதில் தன் என்பது ஈறு திரிபெய்தி முடிந்தது. ``சமாதி`` என்றது, அதன் பயனை. உபாதியைக் கடத்தல் முதலிய மூன்றும் யோகத்தின் குறிக்கோள் என்பதை முன்னர் உணர்த்தி, மறுமையில் தான் தியானித்த பொருளோடு ஒப்ப நிற்றல் யோகத்தின் முடிந்தபயன் என்பதனை இறுதியிற் கூறினார். சித்தாந்த நெறி உணராதார், `உபாதி` என்பதே பற்றி இத்திருமந்திரத்திற்குச் சொற்களை வேண்டியவாறே நலிந்துரைத்து, மாயாவாதப்பொருள் கூறுவர்.
இதனால், சமாதியின் பயன் கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...