ஞாயிறு, 21 ஜூன், 2020

மூன்றாம் தந்திரம் - 9. சமாதி

மூன்றாம் தந்திரம் - 9. சமாதி


பண் :

பாடல் எண் : 1

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.

பொழிப்புரை :

``சமாதி`` என்னும் முடிவுநிலை, இயமம் முதலிய ஏனை உறுப்புக்களில் வழுவாது நிற்றலாலே வாய்ப்பதாம். இச்சமாதி யேயன்றி அட்டமாசித்திகளும், இயமம் முதலிய அவ்வுறுப்புக்களால் விளையும். இத்துணைச் சிறப்புடைய இயமம் முதலியவற்றை முற்றிச் சமாதியில் நிலைபெற்றவர்க்கேயன்றோ யோகம் முற்றுப்பெறுவது!

குறிப்புரை :

``யமாதி`` என்பது ஆரியப்புணர்மொழி. ``இன்`` மூன்றும், ஏதுப் பொருளில் வந்த ஐந்தாம் உருபு. ``தான்`` என்பது பிரி நிலை ஏகாரப் பொருளது; இதனை, ``தங்கினோர்க்கு`` என்பதனுடன் கூட்டுக. செல்லல் - வாய்த்தல். இரண்டாம் அடியில், ``சமாதியோடு`` எனவும், மூன்றாம் அடியில், `சமாதிக்கண்` எனவும் ஏற்கும் உருபு விரித்துக் கொள்க. நான்காம் அடியை, ``யமாதியும், சமாதியும் தலைப்படும்`` என மாற்றி உம்மை விரித்து `யோகம்` என்பது அதன் கருத்தாக உரைக்க. ``சித்தி`` என்பதன்பின், ``உளவாம்`` என்னும் பயனிலை எஞ்சிநின்றது.
இதனால், சமாதியே யோகத்தின் முடிவு நிலை என்பதும், அஃது அதற்கு முன்னே செயற்பாலனவற்றால் அடையத் தக்கது என்பதும், அட்டமாசித்திகள் இயமம் முதலியவற்றின் இடைநிலைப் பயன் என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருட்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே. 

பொழிப்புரை :

கருவிற்கு வித்தாய வெண்பாலும் (சுக்கிலமும்) குண்டலி சத்தியும் ஆஞ்ஞைத் தானத்தில் சோர்வின்றி நிற்குமாயின், அவ்விடத்தில் ஆன்மா சமாதியைத் தலைப்படும். அத்தலைப்பாட்டில் ஏகதேச உணர்வு நீங்கிய வியாபக உணர்வு தோன்ற, அதன்கண் அடைதற்கரிய பொருளாகிய அழகிய சிவம் விளங்கும்.

குறிப்புரை :

வெண்பால் (சுக்கிலம்) சோராமை, ஆன்மா புறப் பொருளையும், தன்னையும் மறந்து தியானப் பொருளோடு ஒன்றுதலாம். குண்டலியாவது ``வாக்கு`` என்பதை மேலே குறித்தாம். அதுவும் மேற்குறித்த இரு பொருளையும் பற்றாது நிற்றலை, ``ஆஞ்ஞையில் நிற்றல்`` என்றார். இதனை நாவுக்கரசர் அரம்பையர் ஆடல் பாடலைக் கண்டு அகம் இளையாதிருந்த ஞானநிலையோடு ஒப்பிட்டு உணர்க. இவ்விரண்டும் உயிர், சமாதிநிலை கூடினமைக்கு அறிகுறி என்றவாறாயிற்று. ஆகவே, தியான நிலையில் இவ்விரண்டும் இந்நிலையினின்றும் சோர்தல் உண்டு என்பது பெறப்பட்டது. ``விந்து, நாதம்`` என்பவற்றிற்கு இங்குப் பிறவாறு உரைத்தல் ஏலாமை அறிக. சுழுமுனையாகிய நடுநாடியின் உச்சியாகிய புருவ நடுவை, ``மேரு`` என்றல் வழக்கு என்பது மேலேயும் கூறப்பட்டது. பின்னிரண்டடிகள் சமாதியில் சிவ நிலை அனுபவமாய் விளங்குதல் கூறப்பட்டது. தியான நிலையில் பாவனை மாத்திரமே உளதாம் என்க.
இதனால், சமாதி நிலையில் விளைவன கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே. 

பொழிப்புரை :

புறப் பொருளிடத்தும், ஆன்மாவிடத்தும் நிற்கின்ற மனம் எப்பொழுது உண்டோ, அப்பொழுதெல்லாம் பிராண வாயுவின் இயக்கமும் உளதாகும்; அத்தன்மையான மனம் இல்லாத பொழுது, பிராணவாயுவின் இயக்கமும் இல்லையாம். மேற்கூறிய இரண்டையும் விடுத்து தேயப்பொருளில் (தியானிக்கப்படும் பொருளில்) நிலை பெற்ற மனத்தால் அல்லல் அற்று இன்புற்றிருப் பவர்க்கு, அத்தேயப் பொருளிடத்தே அவரது மனம் ஒடுங்கி நிற்கும்.

குறிப்புரை :

``மன் மனம்`` நான்கில் முதலன மூன்றும் வினைத் தொகை. மன்னும் இடங்கள் ஏற்ற பெற்றியாற் கொள்ளப்பட்டன. இறுதியது, `தலைமைப் பொருளது மனம்` என ஆறாவதன் தொகை. `மனம் மனத்தில் ஒடுங்கும்` என்னும் நயம் தோன்ற ``மன் மனத்துள்ளே மனோலயம் ஆம்`` என்றாரேனும், `மன்னுள்ளே` என்பதே கருத்தாம். மூன்றாம் அடியில், `மனத்தால்` என மூன்றாவது விரிக்க. `மனோலயம் உளதாம்` என்பதே சொற்பொருளாயினும், கருத்து நோக்கி மேற்கூறியவாறு உரைக்கப்பட்டது.
இதனால், `சமாதி நிலையில் உயிர்ப்புத் தானே அடங்கி நிற்கும்` என அந்நிலையில் உளதாகின்ற மற்றொன்று கூறப்பட்டது. இதற்குக் கீழ்ப்பட்ட நிலைகளில் உயிர்ப்பை யோகியர் தமது முயற்சியால் அடக்குவர். இவற்றை, தியான யோக துரியமும், சமாதி யோக துரியாதீதமுமாதல் பற்றி அறிந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 4

விண்டலர் கூபமும் விந்தத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தானே. 

பொழிப்புரை :

சமாதி நிலை எய்தினவரைப் பிறர், மனத்தைப் புற விடயங்களில் ஓடவிட்டிருப்பவராகக் கருதிக் கொண்டிருப்பார்கள். ஆயினும், அவர்களோ தமது மனத்தைத் தேயப் பொருளில் ஒடுக்கி விட்டிருப்பர்.

குறிப்புரை :

`குதிரையேற்றம் வல்லான் ஒருவனது குதிரை யேற்றத்தைக் காணவேண்டிச் செண்டு வெளியில் (குதிரையேறிக் காட்டும் இடம்; இதனை `வையாளி வீதி` எனவும் கூறுவர்) கூடியிருந் தோர் பலரும், `அவன் தனது குதிரையை, மலை, பாழ்ங்கிணறு முதலி யவை நிறைந்த காடுகளில் ஓட்டிக்காட்டி வருவான்` என்று நினைத் திருந்தார்கள். அவனோ அவ்வாறு ஒன்றும் செய்யாமல், அச்செண்டு வெளியில் உள்ள ஒரு பெரிய மலையின் பக்கத்தில் கொண்டுபோய் அக்குதிரையை எங்கும் போகவொட்டாமலே கட்டிவிட்டான் என்பது இத்திருமந்திரத்தின் சொற்பொருள். அஃது உள்ளுறை உவமமாய் நின்று, மேல் உரைத்த பொருளைத் தோற்று வித்தது என்க.
விண்டு - மலை. `விண்டுவும்` என உம்மை விரிக்க. அலர் கூபம் - வாய் விரிந்த கிணறு; பாழ்ங்கிணறு. `விண்டலர் கூபம்` என ஒன்றாக்கி உரைப்பினுமாம். இப்பொருட்கு, விண்டு அலர்தல், ஒரு பொருட் பன்மொழி. விந்தத்து அடவி - விந்த மலையைச் சூழ்ந்துள்ள காடு. `இதுவே மிக்க இன்னல் உடையது` என்றல் நம் நாட்டு வழக்கு.
``சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்
விந்தாடவி என்று விடப்பெறுவேன்`` -கந்தர் அநுபூதி, 33
என்றார் அருணகிரியாரும். `உயிர் பூத உடலைவிட்டுக் கூற்றுவன் உலகிற்குச் செல்லும்பொழுது இடையில் இத்தன்மைத்தான ஒரு காட்டினைக் கடக்கும்` எனப் புராணம் கூறும். கண்டு உணர்வாக - கண்டறிந்து வருவானாக. கருதி யிருத்தற்கும், குசை செறுத்தற்கும் எழுவாய்கள் வருவித்துக்கொள்க. குசை - கடிவாளம். செறுத்தல் - கட்டுதல். `குசையொடு செறுத்தான்` என்க. `கிரியத்திடை` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. இனி `கிரி உண்டு; அதனிடை` என உரைத்தலுமாம். குதிரை, மனம், குசை, பிராண வாயு, கிரி, தியானிக்கப்படும் பொருள்.
இதனால், சமாதி நிலை புறத்தாரால் அறிதற்கு அருமை கூறப் பட்டது.
இதன்பின், `மூலநாடி` எனக் காணப்படும் செய்யுள் நாயனார் திருமொழியன்று.

பண் :

பாடல் எண் : 5

மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.

பொழிப்புரை :

நாடு சுற்றும் ஒருவன் அங்ஙனம் சுற்றி வரும் நாடுகள் ஐந்து; அவற்றில் உள்ள மலைகள் பன்னிரண்டு; அங்கு வாழும் குடிகள் நாற்பத்தெட்டு வகையினர். அவைகளை எல்லாம் முழுதும் காணவேண்டும் என்று விரும்பிய அவனது மனம் இடையே ஒரு பெரு வெள்ளத்தைக் கண்டு அதில் அழுந்திவிட, அவன் அதனையே குடித்தும், அதனுள்ளே மூழ்கியும் இன்புற்றிருக்கின்றான்.

குறிப்புரை :

மண்டலம் ஐந்து, பஞ்சபூதங்களின் எல்லைகள், வரைகள் பன்னிரண்டு, பிரணவ கலைகள். குடிகள் நாற்பத்தெட்டு, அக்கரங்கள் (ஐம்பதில் க்ஷகாரம், ளகாரம் என்னும் இரண்டும் ஒழித்து ஏனையவை. அடிநிலை எழுத்தாகிய அகரமும் இங்குக் குறிக்கப்பட வில்லை, அது சிவமாதல் பற்றி) இவை மூலாதாரம் முதல் விசுத்தி வரையில் உள்ள ஐந்து ஆதாரங்களிலும் மேலே காட்டப்பட்டவாறு நிற்றலின் ``குடிகள்`` என்றார். `இவற்றைக் கண்டிட விரும்பும் கருத்து` என்க. அஃதாவது, இவற்றையே நோக்கி நிற்கும் எண்ணம். ``நிலா விடும்`` என்ற செய்யுமென்முற்று ஆண்பாலில் வந்தது. இதற்கு, `சமாதி எய்தினோன்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. ``ஓடும்`` என்னும் அடைமொழியால் `பதம்` வெள்ள நீரைக் குறித்தது. வெள்ளம், சிவானந்தம்.
இதனால், சமாதிநிலை எய்தினோர் பிறவற்றை எய்த விரும்பாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற அந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே. 

பொழிப்புரை :

கிணற்றில் உள்ள பூட்டைச் சுழல்போல, உடலில் முன்னும் பின்னுமாய் இயங்குதல் தன்மைபெற்று நிற்கும் பிராண வாயுவை, பிற பொருள்களைத் தேடித் திரியாது நிலைத்து நிற்கின்ற ஆஞ்ஞையில் சேர்ந்து அசையாதபடிநிறுத்தி, அதனாலே மனத்தையும் வெளிப்போகாதவாறு தடுத்துத் தியானப் பொருளில் நிலைத்து நிற்பவர்க்கு இன்பம் அங்குத் தானே கிடைக்கும்.

குறிப்புரை :

பொறி - இயங்குந் தன்மை. நாட்டம் - நாடுதல்; தொழிற்பெயர்; இது மனத்தின் தொழில். இதனை மீட்டல், மனத்தைத் தடுத்து நிறுத்துதலாம். நயனம் - கண். கண் போன்று உயிர்க்குயிராய் உள்ள பொருள். `மாம்பழம் தோட்டத்துத் தூங்கலும் ஆம்` என மாற்றிக் கொள்க. ஈற்றடி, ஒட்டணி.
இதனால், சமாதிநிலை தளர்வுறுதல் உளதாயின், பிராணாயாம தாரணை தியானங்களால் அத் தளர்ச்சியை நீக்கி அதன் கண் உறைத்து நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே. 

பொழிப்புரை :

அகத்தே ஆஞ்ஞையாகிய மலையின் உச்சியை அடைந்து அங்குள்ள அமுதத்தைத் தேவர்களும் உண்ண மாட்டாராய்ப் புறத்தே பெரிய மலையைப் பெயர்த்துக் கொணர்ந்து திருப்பாற் கடலைக் கடைந்து, அதினின்றும் தோன்றிய அமுதத்தையே உண்டார்கள். (ஆயினும், அதனால் அவர் இறவாதிருக்கின்றார் களில்லை; ஆகவே) இறவாமைக்குப் பொருளாக அறியும் வழி ஒன்றே உண்டு; அஃது ஐம்புல வேட்கையை முடிவின்றிக் கொள்ளும் மனம் முற்றும் ஒடுங்கிய நிலையேயாம்.

குறிப்புரை :

`ஆதலின், அதனையே பெற்றுப் பேணிக்காக்க` என்பது குறிப்பெச்சம். முதல் தொடரை இரண்டாம் அடியின் பின் வைத்து நான்காம் அடிக்கு முன்னே கூட்டி உரைக்க. உரு - பொருள்; மெய்ம்மை. `உருவாக` என ஆக்கம் வருவிக்க. `ஒன்றே` என்னும் தேற்றேகாரமும், `வானொடும்` என்னும் சிறப்பும்மையும் தொகுத் தலாயின. கருமை - பெருமை. ஏறுதற்கு அருமைபற்றி ``அருவரை`` என்றார். `மாட்டாராய் உண்டார்` என எச்சமாக்கி மேலே கூட்டி முடிக்க. `இது மாட்டாமையால் அதனை உண்டார்` என்றதனால், உண்டதனால் கருதிய பயன் விளையாமை பெறப்பட்டது. `திரு` என்பது, `முயற்சி திருவினையாக்கும்` (குறள், 616) என்பதிற்போல நின்றது.
இதனால் சமாதிநிலையது அருமையும், பெருமையும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 8

நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி அருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே. 

பொழிப்புரை :

சிவனது பெருமையை உணர்ந்தோர் அவன்பால் அன்பு செய்து, அவ்வன்பினாலே பிற ஆசைகளை ஒழித்து, அவனையே நோக்கி ஆஞ்ஞையை அடைந்து அவனை வணங்கி, அவனோடு ஒன்றாய்க் கலந்தார்கள்.

குறிப்புரை :

எனவே, `சிவனை அடைய விரும்புவோர் செய்யத் தக்கன அவையே` என்பதாம். `சிவனது பெருமையை உணர்ந்த வழியே அவனிடத்து அன்பு செல்லும்` என்றதற்கு அவனது பெருமைகளை உடம்பொடு புணர்த்துக் கூறினார். நம்பன் - விரும்பத் தக்கவன். நான்மறையை ஓதியது, அனைவரும் தன்னை அடையு மாற்றை அறிதற்கு. `பொன்னில் நின்று ஒளிர்கின்ற மாற்றுப்போல, உயிரில் நின்று ஒளிர்பவன்` என்பது இரண்டாம் அடியின் பொருள். ஆக்குதல் - பெருக்குதல். அருத்தி - ஆசை. ``கொம்பு`` என்றது, சுழுமுனையை. ``ஏறி`` என்றதனால், அதன் உச்சியை அடைதல் பெறப்பட்டது. கூட்டம் - கூடுதல், புணர்தல்; இரண்டறக் கலத்தல்.
இதனால், சமாதி கூடுதற்கு இயமம் முதலியவற்றில் நிற்கு மிடத்தும் அன்புடையராதலும், உலகப் பற்றை விடுதலும் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மூலத்து மேலது முற்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிக்குநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே. 

பொழிப்புரை :

மூலாதாரத்திற்குமேல் முதற்கண் காணப்படுகின்ற நாற்கோண வடிவுள்ள இடத்தில் (சுவாதிட்டானத்தில்) நிற்பதாகிய பிராணவாயு அவ்விடத்தில் உள்நுழைகின்ற புழையின் (சுழுமுனை நாடிக்கு) மேலிடத்தில், வானத்தில் உள்ள பிறைபோன்ற புருவநடுவில் நிற்கின்ற பொருளின் வடிவங்கள் பலவாய்த் தோன்றும்.

குறிப்புரை :

இது தியான நிலையாம். `மேலதாகிய சதுரம்` எனவும், `சதுரத்ததாகிய கால்` எனவும் கொள்க. பிராணவாயு கும்பகத்தில் சுவாதிட்டானத்தில் நின்று, பின் சுழுமுனை வழிமேற்செல்லும் என்க. அத்திசை - அவ்விடம். `முச்சதுரத்தது` என்பது பாடம் அன்று. ஆஞ்ஞைத் தியானத்தில் மின்னல், விண்மீன், விளக்கு, பேரொளி முதலிய வடிவில் தியானப் பொருள் பலபடத்தோன்றும். `அவற்றுள் பேரொளித் தோற்றத்தில் ஒன்றுதல் சமாதி` என்றற்கு இதனை முன்னர்க் கூறினார்.
இதனால், சமாதியைத் தலைப்படுங்கால் இடைநிகழ் காட்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பனை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே. 

பொழிப்புரை :

மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் செய்யும் பாவனைகளை விடுத்து, அவ்வாதார யோகங்களால் மூண்டெழுந்த கனலைமட்டும் துணையாகப் பற்றி ஆஞ்ஞையிற் சென்று, அங்குச் சிவனது பேரொளித் தோற்றம் ஒன்றையே எதிர்நோக்கி அதனுள் ஒடுங்கும் அவா மிக்கிருந்து, அவ்வொளி தோன்றிய காலத்து அதனையே தனக்கு வியாபகமாகக் கொண்டு அதன்கண் புகுந்து ஒடுங்கி நிற்றலே சமாதியாகும்.

குறிப்புரை :

``சிற்பி`` என்பதனை, `சிற்பன்` என்றார். `எல்லாம்` என்றது, முன்னை ஆதார மூர்த்திகளையும், ஆஞ்ஞையில் தியானத்தில் தோன்றும் பல வகை வடிவங்களையுமாம். ``சிருட்டித்த சிற்பன்`` என மாறுக. எனவே, ``யோகத்தின் தலையாய பொருள் பேரொளி ஒன்றே`` என்பது போந்தது. மதி - அறிவு. அஃது இங்கு ஆர்வத்தை உணர்த்திற்று. ``பரம்`` என்றது, ``வியாபகம்`` என்னும் பொருட்டு. ஆக - ஆகிவிட. தகும் - தக்கிருக்கும். தண்மை, இதுகாறும் உழன்ற உழப்பாகிய வெப்பம் நீங்கிய குளிர்ச்சி. ``தண் சமாதி தக்கிருக்கும்`` என்க.
இதனால், சிவ சமாதியைத் தலைப்படும் முறையும், அச்சமாதியது இயல்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளும்
குலைப்பட் டிருந்திடும் கோபம் அகலும்
துலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே. 

பொழிப்புரை :

துலை நாப்போல உள்ள ஆஞ்ஞையில் அசை வற்றிருக்க வல்லவர்க்கு, மெய்ப்பொருளைத் தலைப்பட்டிருக்குமாறு, அது, தானே கிடைக்கும். ஆணவமாகிய வலையில் தானே சென்று நின்று, அந்நிலை காரணமாகச் சினங்கொண்டவள்போல இருந்த அருட் சத்தியும் சினந்தணிந்து, பிறவிக் கடலுக்குக் கரையாகி நிற்பாள்.

குறிப்புரை :

தத்துவம் - மெய்ப்பொருள். அருட் சத்தியே பாசத்தின் வழி நின்று அதனை நடத்துங்கால் ``திரோதான சத்தி`` எனப்படுதலும், அது, ``சின மருவு திரோதாயி`` (சிவப்பிரகாசம், 48) எனக் கூறப்படுதலும் காண்க. குலை - கரை. குலைப்பட்டு - கரையின் தன்மை எய்தி. ``கோபம் அகலும்`` என்பதை, குலைப்பட்டிருத்தற்கு முன்னே கூட்டிப் பொருள் கொள்க. திரோதான சத்தி, சினந்தணிந்து அருட் சத்தியாய் ஆன்மாவிற் பதிதலே சத்தி நிபாதம் என்பது அறிக. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல்.
இதனால், சிவயோகத்தின் முடிவு நிலையாகிய சிவ சமாதியால் சத்திநிபாதம் முதிர்தல் கூறப்பட்டது. அது கூறவே, ``தத்துவம் கூடும்`` என்றது, ஞானத்தைப் பெறும் பக்குவம் எய்தலைக் குறித்ததாயிற்று.

பண் :

பாடல் எண் : 12

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே. 

பொழிப்புரை :

சிவசமாதி கைவரப் பெற்ற நிலையில் சீவனும், சிவம் சத்திகளாய் நிற்கும். அதனால், அத்தகைய யோகீசுரனைப் பிரம விட்டுணுக்களும் வணங்குவர்.

குறிப்புரை :

``ஆதி`` மூன்றும் முறையே சத்தி, முதல், முதல்வன் என்னும் பொருளன. உம்மை நான்கனுள் முன்னவை இரண்டும் எண்ணுப் பொருளிலும், இறுதியது உயர்வு சிறப்புப் பொருளிலும் வந்தன. ஏனையது இழிவு சிறப்பு. உள்நிற்றல் சமாதியில் நிற்றல். ``உள்நின்ற சீவனும்`` என்பதை முதலிற் கொள்க. `சிவமாம்` என்று ஒழியாது, ``சத்தியுமாம்`` என்றது, ``சிவன் செய்யும் செயலெல்லாம் இவ்யோகி செய்யவல்லன்`` என்பது உணர்த்துதற்கு.
``தாமடங்க இந்தத் தலமடங்கும்``
என்ற திருக்களிற்றுப்படி மேலேயும் (பா. 528) காட்டப்பட்டது. இறுதியில் உள்ள ``ஆதி`` என்பதற்கு ``அவ் ஆதி`` எனச் சுட்டு வருவிக்க.
இதனால், சமாதி எய்தினோரது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகம்
சமாதிகள் வேண்டா இறையுட னேகில்
சமாதிதா னில்லை தானவ னாகில்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே. 

பொழிப்புரை :

சமாதி யோகத்தைத் தலைப்பட்டவர்க்கு ``யோகம்`` எனப்படுவன பலவும் வாய்ப்புடையனவாய்ப் பயன் தரும். இனி, இறைவன் அருள்வழியே எச்செயலையும் செய்வார்க்கு இச் சமாதி யோகம் வேண்டுவதில்லை. சீவன் சிவமாய் நிற்கும் நிலையில் சமாதி என்னும் யோக நிலை இல்லை. (நிட்டை என்னும் ஞான நிலையே உளதாம்) சமாதி யோகத்தால் ஞானம் வருதலேயன்றி அறுபத்து நான்கு சித்திகளும் கிடைக்கும்.

குறிப்புரை :

``பல யோகம்`` என்றது, மனம் ஒன்றி நின்று செய்யப் படுதல் பற்றி, `மந்திரயோகம், கன்மயோகம், பத்தியோகம்` என வழங் கப்படுவனவற்றை. இடைநின்ற இரண்டடிகளாலும் ஞானம், யோகத் தின் வேறாய் மேம்பட்டு நிற்றல் குறித்தவாறு. இறையுடன் ஏகல், அவன் அருள்வழியே செயற்படல். தான் அவனாதல், ஆன்மா இறை வனது எண்குணங்களையும் பெற்று நிற்றல். இவை இரண்டும் யோகத் தில் எய்தாமை அறிக. ஈற்றடியால் யோகத்தின் இடைநிலைப் பயன் கூறப்பட்டது. `எட்டுச் சித்திகளும் கீழ் உலகம் ஒன்றோடு மேல் உலகம் ஏழினும் அவ்வவ்விடத்திற்கு ஏற்பப் பெறப்படுமாற்றால் அறுபத்து நான்காம்`. இது சிவஞானமாபாடியத்துட் (சூ.2 அதி.2) கண்டது.
இதனால், யோகத்தின் எல்லை கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...