ஞாயிறு, 21 ஜூன், 2020

மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை

மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை


பண் :

பாடல் எண் : 1

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலு மாமே. 

பொழிப்புரை :

தன்னை அடைவதற்கு அன்பு ஒன்றையே வழியாக அமைத்துள்ள முக்கட் கடவுளாகிய சிவபெருமானை, அவ் அன்பைத் தரும் வழியாகிய அறிவை உண்டாக்கி, அவ் அறிவு பொருந்த அவனை நோக்கினால், அன்பு பெருகி, அது வழியாக இன்ப வெள்ளம் பெருகும். அது பெருகியபின், அந்த அன்பையே பின்னும் துணையாகப் பற்றி, அந்த இன்ப வெள்ளம் வற்றிப் போகாதவாறு பாதுகாத்துக் கொள்ளுதலும் கூடும்.

குறிப்புரை :

``காதல் வழி`` நான்கனுள் இரண்டாவது, நான்காவதன் தொகை. முதலதும், ஈற்றதும் உருவகங்கள். மூன்றாம் அடியில் ``வழிசெய்து````வழிதரும்`` என்பன` ``வழியும் பெருகும்`` என்னும் பொருளன. ``கண்`` என்றது அறிவை. எனவே, `இது மந்திர யோகம்` என்பது விளங்கும். அறிந்தவிடத்தன்றி அன்பு நிகழாதாகலின், அன்பைத் தரும்வழி அறிவாதல் அறிந்துகொள்க. ``அறிவை உண்டாக்கி அறிவுற நோக்கி`` என்றது ``அறிவைச் செயற்படுத்தி, அதன் வழியே நோக்கி`` என்றவாறு.
இதனால், ``பிராசாத யோகம் வழி முறையில் வீடு தரும்`` என அதனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையும்
காக்கலு மாகுங் கலைபதி னாறையும்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவும்
காக்கலு மாகுங் கருத்துற நில்லே

பொழிப்புரை :

மாணாக்கனே!; நீ பிரணவ கலைகளில் அறிவு பொருந்த நில், அங்ஙனம் நிற்பாயாகில், பிராண வாயுவையும், அக்கலைகள் பதினாறனையும், அவற்றின் வழி இயங்குகின்ற மனம் முதலிய அந்தக்கரணங்களையும் மருள் நெறியிற் செல்லாது தடுத்து, அருள் நெறியில் நிறுத்துதல் கூடும்.

குறிப்புரை :

`பிரணவ கலைகள் சந்திரனது கலைபோல்வன` என உவமை முகத்தான் உணர்த்தற்கு சோடச கலாப் பிராசா தத்தைக் கூறினார். இதனை, மேலேயும் (பா.692) காண்க. வாயுவைக் காத்தலால் மனம் ஒருங்குதல் முன்னே (பா.606) கூறப்பட்டது. `கரணங்கள்` முதலிய மூன்றும் காரிய காரண முறையில் வைக்கப்பட்டன.
இதனால், பிராசாத யோகத்தின் முதற்பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
மலைவற வாகும் வழியது வாமே. 

பொழிப்புரை :

வலமும், இடமும் செல்லாமல், நடுநாடி வழிச் செல்கின்ற பிராண வாயு. அத்தகைய செலவிற் பிறழாது நிற்றலே அசை வில்லாது நிற்கும் பிராணாயாம நிலையாம். அந்நிலையால் அறிவும், பிரணவ கலைகளில் நிலைபெற்று நின்று, முதல்வனது திருவருள் அக்கலைகளில் பல்வேறு வகையாய்க் கலந்து நிற்கின்ற கலப்பினை அறியுமாயின், அவ்வாறு அறிந்து நிற்கின்ற அந்நிலையே, அவ்வறிவு பின் பலதலைப்படாது ஒரு தலைப்படும் வழியாம்.

குறிப்புரை :

`ஆதலின், அவ்வாற்றால் அக்கலப்பினை அறிக` என்பது குறிப்பெச்சம். தொழிற் பெயராய் நின்ற ``நின்றது`` இரண்டனுள் முன்னது எழுவாய்; பின்னது பயனிலை. ``நேர்தரு வாயு`` என்பதனை முதலிற்கொள்க. சிலை, கல்; மலையுமாம். ``சிலை`` என்றது அதன் தன்மையை; அஃதாவது, அசை வின்மை. ``தீபம்`` என்றது, அறிவை. உம்மை, இறந்தது தழுவிய எச்சம். ஒத்தல், பிறழாது நிற்றல். ``கலை`` எனப் பின்னர் வருதலின், வாளா, ``ஒத்து`` என்றார். `அலை வற` என்பதும் பாடம்.
இதனால், பிராசாத யோகம், உணர்வு அருள் வழிப்படுவதற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியில்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே. 

பொழிப்புரை :

எஞ்ஞான்றும் உடனாய் நீங்காது நிற்கின்ற சிவபெருமானைச் சாரமாட்டாது புறத்தே ஓடிய உணர்வு, அவ்வாறு ஓடாது மடங்கி அவனைச் சார்ந்து நிற்றற்குப் பொருந்திய பிராசாத யோக நெறிக்கண் அவன் இனிது விளங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

புடை ஒன்றி நிற்றல், அருகிலே நிற்றல், ஐம் பொறிகளைக் குறிப்பதாய `மடை` என்பது ஆகுபெயராய், அவற்றின் வழிச் செல்லும் உணர்வைக் குறித்தது. `பிரானை ஒன்றி நின்றிட` என இயையும் `அதற்கு வாய்த்த வழியாவது பிராசாத யோகமே` என்பது அதிகாரத்தால் விளங்கிற்று, ``விடை ஒன்றில் ஏறி`` என விதந்தது, `தடத்தமாய்க் காணப்படுவன்` என்றவாறு. ஏகாரங்கள் தேற்றம், இருத்தல், உண்மை குறியாது, அமர்தலைக் குறித்தலின், இறந்த காலம் ஆயிற்று. `வாய்த்த வழியும்` எனப் பாடம் ஓதியும், ``விடை`` என்றதனைப் பிற குறிப்பு மொழியாக்கியும் தமக்கு வேண்டியவாறே உரைத்துக்கொள்வர்.
இதனால், பிராசாத யோகத்தில் இறைவனது பொதுநிலை இனிது விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒலிக்கின்ற வாயு ஒளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடும் சாதக னாமே. 

பொழிப்புரை :

தாம் வாழும் நாளின் எல்லை இவ்வளவினது என்பதை அறியாதவர் அது நீட்டித்தற்பொருட்டு ஒரு வழிப்படுத்து கின்ற பிராணவாயு, அவ்வாறு கால நீட்டிப்பிற்கு மட்டும் ஏதுவா யொழியாது, மெய்யுணர்வைப் பெறுதற்கு ஏதுவாகுமாயின், அத்தகைய சாதனத்தைப் புரிந்த சாதகன், பின்னர்ப் பேரின்பத்தில் திளைத்து மகிழ்ந்திருப்பான்.

குறிப்புரை :

எனவே, `வாயுவை அங்ஙனம் நிற்குமாறு நிறுத்துக` என்பது குறிப்பெச்சமாயிற்று. இருத்தல், உண்மை குறித்து நின்றது. ``அறியார்`` என்னும் எழுவாய் ``ஒருக்கின்ற`` என்பதனோடு முடிந்தது. `ஒருக்குகின்ற` பெருக்குகின்ற` என்பன குறைந்து நின்றன. பெருமை - சிறப்பு. `ஒளிபெற நிற்கும் வழி பிராசாத யோகம்` என்பது கருத்து. ``நின்றிடும்`` என்பது முற்று; ``ஆம்`` என்னும் அசை நிலையை இதனுடன் கூட்டுக.
இதனால், எடுத்த பிறப்பில் ஞானத்தைப் பெற விழைபவர் வாழ்நாள் நீட்டிப்பின் பொருட்டுப் பிராணாயாமத்தினை ஒரு தலையாகச் செய்தல் வேண்டும் என அநுவாத முகத்தான் வலியுறுத்தப்பட்டது. படவே, அடுத்து வருகின்ற `காயசித்தி, கால சக்கரம்` என்னும் அதிகாரங்கட்கு வழிவகுத்தது மாயிற்று.
இதனால், பிராசாத நெறியல்லாத பிற நெறி யோகங்கள் சிறப்பிலவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே. 

பொழிப்புரை :

`ஒருக்கின்ற வாயு ஒளிபெற நிற்குமாறு நிறுத்துதல்` என மேற்கூறிய செயலே சாதகன் சாதிக்கத்தக்க முறையாதலை உணர்ந்து, பெருந்தவமாகிய அவ்வழி பாட்டினை ஒருவன் செய்யும் பொழுது, பிரணவ கலைகளின் உள்ளீடாய திருவருளிலே தனது உணர்வு செல்லுமாறு செலுத்துவானாயின், அச்செயலே, அவனது புலன் உணர்வாகிய இரும்பினை மெய்யுணர்வாகிய பொன்னாக மாற்றுகின்ற இரச குளிகையாய் அமைந்து பயனைத் தந்துவிடும்.

குறிப்புரை :

அகத்தொழில் மாத்திரையாற் செய்யும் வழிபாடே யோகமாகலானும், சரியை, கிரியை யாகிய ஏனைத் தவங்களின் மேம்பட்ட யோகத்துள்ளும் பிராசாத யோகம் மிகச் சிறந்ததாகலானும், அதனை ``மாதவமான வழிபாடு`` என்றார். ``செய்திடும்போது`` என்பது ஒருசொல், அகம் கலைகளின் உள்ளிடம். அஃது, ஆகு பெயராய், அவ்விடத்துள்ள திருவருளைக் குறித்தது. `அகத்தாக` என வரற்பாலதாய சாரியை வாராது விகற்பித்தது. பாய்ச்சுதலுக்குச் செயப்படு பொருள் ஆற்றலால் கொள்ளப்பட்டது. துணை வினையாய் வந்த கிடத்தல், துணிவுணர்த்தி நின்றது.

பண் :

பாடல் எண் : 7

கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே அப் பங்கய மாகத்
தொடர்ந்தது தானே அச் சோதியுள் நின்றே. 

பொழிப்புரை :

மேல், ``வேதகமாக விளைந்து கிடக்கும்`` எனப் பட்ட அச்சாதனைதான், மிகத் தருகின்ற பயன் மூன்றாகும். இனி, இயல்பாக இயங்கும் பிராண வாயுவின்வழி எப்பொழுதும் புறத்தே ஓடிய உணர்வுதானே, சாதனையால் சுழுமுனைவழிச் செலுத்தப்பட்ட வாயுவின்வழியே உள்நோக்கிப் படர்ந்து, பின்னும் உச்சிக் கண்ணதாகிய பெரிய தாமரை மலரிடத்து அவ்வாயுவின் வழியே படிமுறையாற் புக, அவ்விடத்து நன்கு விளங்கும் பேரொளியாகிய திருவருள், முன்பு கீழுள்ள ஆதாரங்களினின்று அவ்வுணர்விற்கு விடயமாய்த் தொடர்ந்து விளங்கிவருவதாம்.

குறிப்புரை :

பயன் மூன்றாவன புலன்களின்மேற் சென்ற அவா அறுதலும், திருவருள் தோற்றமும், திருவருட் பேறுமாம். இவை, மேல், (பா.700)`` ஒளிபெற`` என்றதனானே, `பொழுது புலர்தல், செவ்வொளி தோன்றல், ஞாயிற்றைக் காண்டல்` என்பவற்றில் வைத்து அறியக் கிடத்தலின், இவற்றைக் கிளந்தோதாது போயினார். திருவருட் பேறு, படிமுறையானன்றி முதற்கண்ணே முற்றக் கிடையாமையைப் பயன் வகையாலும் உணர்த்துதற்கு, `கிளர் பயன் மூன்று`` என்றார். ``கிளர் பயன்`` என்பது, `கிளர்த்தும் பயன்` என, பிறவினை வினைத்தொகை. `தான்` என்னும் அசை நிலை நான்கிடத்தும் பிரிநிலை ஏகாரத்தோடு வந்தது. `அச்சோதி தானே, உள்நின்று தொடர்ந்தது` என்க. `தொடர்ந்தது தானேயாம்` என்பதில், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. எனவே, ``தொடர்ந்தது`` என்றது எதிர்காலத்தில் இறந்த காலமாம். `அவ்விடத்து நிற்கும் சோதி` எனற் பாலதனை, ``அச் சோதி`` என்றார்.
இதனால், மேற்கூறிய சாதனை, வேதகமாக விளையும் முறை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகச் சிவாலய மாகுமே.

பொழிப்புரை :

உயிர் தனது முயற்சியால் அடையலா காமையின், தானாகவே அதற்குப் புலப்பட்டு நிற்கின்ற மெய்ப் பொருளாகிய தலைவி தன்னை நாம் அடைவதற்கு இவ்வுடம்பையே வழியாக அமைத்து நம்முள் இருக்கின்றாள். அவளையே பொருளாக நாம் கொள்ளின், இவ்வுடம்பு சிவானந்தமாகிய தேனைப் பருகி இன்புறுகின்ற இடமாய்விடும்.

குறிப்புரை :

``வானோர் உலகீன்ற அம்மை`` என்பது, `அவள்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. `அம்மையை` என்னும் இரண்டனுருபு தொகுக்கப்பட்டது. `பருகி` என்பது பாடமன்று. சிவம், இங்கு, `இன்பம்` என்னும் பொருளது. ``ஆகும்`` என்பதற்கு எழுவாய் வருவிக்க.
இதனால், பிராசாத யோகத்தாற் பெறும் திருவருட்பேறு, பின், சிவப் பேற்றிற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற ஆயுவைச் சேர்தலு மாமே.

பொழிப்புரை :

உடம்பு ஒளி பெற்று நெடுநாள் விளங்குதற் பொருட்டுப் பொருந்தியுள்ள பிராணவாயு, ஒவ்வொரு மூச்சிலும் சிறிது சிறிதாக அழிந்துகொண்டு வருதலை யாரும் அறிந்து கவலைப் படுதல் இல்லை, அதனை அறிந்து கவலைப்பட்டு, அவ்வாயுவை அழியாமற் காப்பார் உளராயின், அவர்க்கு, எடுத்த பிறப்பிலே சிவனை அடைதற்கு ஏதுவான நீண்ட ஆயுளைப் பெறுதல் கூடும்.

குறிப்புரை :

`செறிதல், சிவனருளால்` என்க. அழிதல், பன்னிரண்டு அங்குலமாகப் புறப்பட்டது, பின், நாலங்குலம் அழிய, எட்டங் குலமாகவே புகுதல். நந்தி, சிவன் அவன் திகழ்தலாவது, காட்சிப் படுதல், ``திகழ்கின்ற`` என்னும் பெயரெச்சம், ``ஆயு`` என்னும் ஏதுப் பெயர் கொண்டது. உம்மை, சிறப்பு, இடையிரண்டடிகள் மூன்றாம் எழுத்து எதுகை.
இதனால், `ஆசனம் முதலிய உறுப்புக்களால் யோக நெறி கைவரப் பெற்றுப் பின் பிராசாத நெறியைத் தலைப்பட்டு மெய் யுணர்வைப் பெறுதற்கு, வாழ்நாள் நீட்டித்தல் வேண்டும்` என்ப துணர்த்தி, `அதற்குப் பிராணாயாமம் இன்றியமையாதது` என வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியும்நாள்
சாதன மாகுங் குருவை வழிபட்டு
மாதன மாக மதித்துக்கொ ளீரே. 

பொழிப்புரை :

`சிவன், உடலைக் காக்கின்ற சத்தியினின்றும் பிரிகின்ற நாள் இது` என்பதைக் குறிகள் சிலவற்றால் ஐயமற உணரலாகும். `அக் குறிகள் இவை` என்பதை யோக குருவை வழிபட்டே பெற்று, அங்ஙனம் பெற்ற அறிவைப் பெரிய செல்வம் போல மதித்துப் போற்றிக்கொள்ளுங்கள்.

குறிப்புரை :

காக்கும் சத்தியை, ``ஆரணி`` என்பர். சிவன் காக்கும் சத்தியினின்றும் பிரிதலாவது. `நிலை பெறுக என நினைக்கும் நினைவைவிட்டொழிதல். அங்ஙனம் ஒழியின் உடல் ஒரு நொடியும் நிலைபெறாது அழியும். இதனையே,
``கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்,
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே``
-தி.5 ப.90 பா.4
என்று அருளிச்செய்தார் ஆளுடைய அரசர். எனவே, ``நாதனும், நாயகி தன்னிற் பிரியும் நாள்`` என்றது, `உடல் அழியும் நாள்` என்றவாறாம். ஞான குரு, சாத்திய குருவாகலின், யோக குருவை, ``சாதனகுரு`` என்றார். எனவே, கிரியா குருவும் அத்தன்மையரே யாதல் அறியப்படும். இனி, `நாதன், உடம்பினை உடையதாகிய உயிர்; நாயகி குண்டலினி சத்தி` எனவும் உரைப்பர்.
இதனால், பிராணாயாமத்தில் உளஞ்செல்லுதற் பொருட்டு, வாழ்நாளின் எல்லையை உணருமாறு கூறி, பின் வருகின்ற ஆயுள் பரீட்சைக்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீரா யிரமும் நிலமாயிரத் தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே. 

பொழிப்புரை :

பிராணாயாம வன்மையால் தலையில் உள்ள அமுதத்தைப் பெற்று மிகவும் நுகர வல்லீராயின், உமக்கு உடம்பாய் அமைந்த, நிலம், நீர் முதலிய தத்துவங்கள் பலவும் அவை யவை ஒடுங்கும் முறையில், வலிமை கெட்டு ஒடுங்குதற்குத் தனித்தனிப் பல்லாண்டுக் காலம் செல்லும்; அங்ஙனம் செல்லவே, உடம்பு கெட் டொழியாது, நெடுநாள் நிலைத்து நிற்கும்; இஃது எங்கள் அருளாசிரி யரான நந்தி தேவர்மேல் ஆணையாக நான் சொல்லும் உண்மை.

குறிப்புரை :

பிராணாயாமத்தின் அருமை உணர்த்தற்குப் பிராண வாயுவை நான்கு காலன்றிப் பன்னிரண்டுகால்கொண்டு அதிவேக மாய் ஓடும் குதிரையாக உருவகம் செய்து கூறினார். `பன்னிரண்டு கால்` என்றது. அது புறப்படும் அங்குல அளவை. முன் நிற்கற் பாலதாய நிலம், செய்யுள் நோக்கிப் பின் நின்றது. மூன்றாம் அடியின் இறுதியில் எஞ்சி நின்ற, `என இவ்வாறாக` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. மூன்றாம் அடிக்குப் பிறவாறு உரைப்பாரும் உளர்
இதனால், மேல் வலியுறுத்தப்பட்ட பிராணாயாமம் வாழ்நாள் நீட்டிப்பிற்கு ஏதுவாதல் இவ்வாற்றான் என்பது கூறி. அடுத்து வருகின்ற காய சித்திக்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசி யினில்மூன்றும் நாவில் இரண்டும்
தேசியும் தேசனுந் தம்மிற் பிரியுநாள்
மாசறு சோதி வகுத்துவைத் தானே. 

பொழிப்புரை :

மேற்கூறியவாறு சத்தி சிவங்கள் தம்மிற் பிரிந்து நீங்குகின்ற நாளின் எல்லையை, `சத்தம், உருவம் கந்தம், சுவை, பரிசம்` என்னும் புலன்களில் முறையே, `ஏழு, ஐந்து, மூன்று, இரண்டு, ஒன்று` என இவ்வாறாகப் பொது வகையில், இருளை அறுக்கும் ஒளியாகிய இறைவன் வகுத்து வைத்துள்ளான்.

குறிப்புரை :

எனவே, ``இறப்பு நேருங் காலத்து இப் புலன் உணர்வுகள் இங்குக் கூறிய கால முறையில் கெடுவனவாம்` என்பது இத் திருமந்திரத்தின்வழி அறியப்படுகின்றது. இவ்வாற்றால், ``முதலில் பரிச உணர்வும், முடிவில் ஓசை உணர்வும், அவற்றிற்கு இடையே இங்குக் கூறிய முறையில் ஏனைய புலனுணர்வுகளும் கெடும்`` என்பது பெற்றாம். புலன்களை மேல்நின்றிழியும் கால முறையில் கூறினார். அதனால், பரிச உணர்வு ஒரு நாளிற் கெடும் முறையில் கூறினார். அதனால், பரிச உணர்வு ஒரு நாளிற் கெடும் என்பது தானே விளங்குதலின், செய்யுள் நோக்கி அதனை உபலக்கணத்தால் கொள்ள வைத்தார். `விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண், மூக்கு`` (சிவஞான போதம், சூ.5) எனப் பிறவிடத்தும் இவ்வாறு எஞ்ச வைத்தல் காண்க. புலன்களின் கேடு கூறவே, அவற்றிற்கு முதலாய பூதங்களும் இவ்வாற்றால் சத்தி கெடப் பௌதிகமாகிய உடம்பு அழியும் வகை பெறப்படுவதாம். செய்யுள் நோக்கிப் பொறியும், புலனும் விரவ ஓதினார். தேசி - ஒளியாயுள்ளவள். தேசன், அவ்வொளியை உடையவன். இவ்விருவரையும் மேல், (பா.705) ``நாதனும், நாயகி`` என்றதற்கு உரைத்தவாறே அவர் உரைப்பர். இத்திருமந்திரத்திற்குப் பிறர் பிறவாறு உரைத்த உரை பொருந்துவதாகாமையை அறிந்து கொள்க.
இதனால், யோகத்தால் வாழ்நாள் நீட்டிக்குமாறு கூறிய இயைபு பற்றி, யோகம் இல்லாதார்க்கு உள்ள வாழ்நாள் எல்லை கூறப் பட்டது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...