முகவுரை
நறுந்தொகைஎன்னும் இந் நீதிநூல் அருந்தமிழ்ப் புலமை சான்றஅதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்டது. இவர்கொற்கை நகரத்திலிருந்து அரசு புரிந் தவரென்று, இந் நூற்பயன் கூறும் பாயிரத்தில் 'கொற்கையாளி' என வருதலால் அறியப்படுகின்றது. கொற்கை, பாண்டி மன்னர்கள் இருந்து அரசு புரியும் பதிகளிலொன்றாயிருந்த தென்பதைச்சிலப்பதிகாரத்திலே 'கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன்' எனக் கூறப்பட்டிருத்தலானும், பிறவிடத்தும் 'கொற்கைச் செழியர்' என வருதலானும், அறியலாகும். இப் பதி பாண்டி நாட்டில் முத்துக் குளிக்கும் துறைமுகங்களுள் ஒன்றாயும் இருந்தது. சிறுபாணாற்றுப் படையில் 'உப்பு வாணிகரின் சகட வொழுங்கோடு கொற்கைக்கு வந்த மந்திகள் அங்குள்ள முத்துக்களைக் கிளிஞ்சலின் வயிற்றிலடக்கி உப்பு வணிகச் சிறாருடன் கிலுகிலுப்பையாடும்' என்று கொற்கை வருணிக்கப்பட்டிருக்கிறது. அதில், பாண்டியன் 'தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்' எனக் கூறப்பட்டிருத்தலும் அறியற்பாலது. அதிவீரராம பாண்டியர் தென்காசியிலிருந்து அரசு புரிந்தனரெனவும் கூறுவர். இவர் காலம் கி.பி. 11, 12, ஆம் நூற்றாண்டு எனச் சிலரும், 15 ஆம் நூற்றாண்டு எனச் சிலரும் கூறாநிற்பர்.
இவர் தமிழில் நிரம்பிய புலமை வாய்ந்தவர். வட மொழிப் புலமையும் உடையவர். தமிழில் இவரியற்றிய நூல்கள் நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிகாண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள், நறுந்தொகை முதலியனவாம். இவர் தமையனார்வரதுங்கராமபாண்டிய ரென்பவர். அவரும் சிறந்த புலவராய்த் தமிழில் பிரமோத்தர காண்டம் முதலிய நூல்கள் இயற்றியிருக்கின்றனர். அவர் மனைவியாரும் சிறந்த புலமையுடையார் எனக் கூறுகின்றனர்.
இனி, இவரியற்றிய நூல்களுள்ளேநைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது. திருக்கருவையில் எழுந்தருளியிருக்கும் சிவபிரான்மீது இவர் பாடிய வெண்பா வந்தாதி, கலித்துறை யந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி என்பன பத்திச்சுவை ததும்பும் துதி நூல்களாம். நறுந்தொகை யென்பது இளைஞர் பலராலும் படிக்கப்படுகின்ற நீதிநூல்களுளொன்றாக வுளது. இந் நூற்குப் பெயர் இதுவே யென்பது 'நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்' எனப் பாயிரத்திற் கூறியிருத்தலாற் பெறப்படும். அச் சூத்திரம் 'வெற்றி வேற்கை' என்று தொடங்கியிருப்பது கொண்டு இதனை அப் பெயரானும் வழங்கி வருகின்றனர்.
நறுந்தொகை என்பது நல்லனவாகிய நீதிகளின் தொகை எனப் பொருள்படும். இதனால், பழைய நூல்களிலுள்ள நல்ல நீதிகள் பல இந்நூலுளே தொகுத்து வைக்கப்பட்டன என அறியலாகும். இதிலுள்ள நீதிகளெல்லாம் தொன்னூல்களிற் காணப்படுவனவே யெனினும், ஒரு சில புறநானூறு, நாலடியார் முதலியவற்றின் செய்யுள்களோடு சொல்லினும் பொருளினும் பெரிதும் ஒற்றுமையுற்று விளங்குகின்றன. அவை உரையில் அங்கங்கே காட்டப்பட்டுள்ளன. இந்நூல் முன் பலரால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. அப் பதிப்புக்கள் ஒன்று ஒன்றனோடு பெரிதும் வேறுபட்டுள்ளன. அவற்றிற் காணப்படும் பாடவேறுபாடுகள் எண்ணிறந்தன. வாக்கியங்களின் முறையும் பலவாறாகப் பிறழ்ச்சியடைந்துள்ளது. 'அதனால்' என்பது போலுஞ் சொற்கள் தனிச்சீராக வேண்டாத இடங்களிலெல்லாம் வைக்கப்பட்டுள்ளன. இப் பதிப்பில் இவை பலவற்றையும் கூடிய வரையில் திருத்தம் செய்து, இன்றியமையாத பாடவேறுபாடுகளையும் காட்டி, பதவுரை, பொழிப்புரைகளுடன் சிறப்புக்குறிப்புக்களும் திருந்த எழுதியிருப்பது காணலாகும். 'வாழிய நலனே வாழிய நலனே' என்னும் வாக்கியம் சில பதிப்புகளில் ஓரியைபுமின்றி நூலின் நடுவே வைக்கப்பட்டுள்ளது. ஒரு பதிப்பில் அஃது இறுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இப் பதிப்பிலும் அங்ஙனமே வாழ்த்தினை இறுதியில் அமைத்துளேம்.
ந.மு. வேங்கடசாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக