திருவருட் பயன்
சிறப்புப் பாயிரம்
திருமகள் பிறந்த விரிதிரைப் பாற்கடல்
சூறையங் கடுங்கால் சுழற்றுபு எடுப்ப,
அலைவது அறஎழுந்து அண்டம் மீப் படர்ந்து
நிலைபெற நின்ற நெடுந்திரள் அன்ன
இன்னல் தீர்இன்ப நன்னலம் சுரத்தலின்
விளங்கெழில் தருமம் திரண்டு வீற்றிருந்த
வண்ணமும் போலும் அண்ணல் தன் கயிலை
காவலிற் புரக்கும் கண்ணுதற் கடவுள்
நந்திதாள் சுமந்து வந்த வழித் தோன்றல்
பெண்ணையாறு உடுத்த வெண்ணை நின்று உருத்த
தொண்டர்கள் இதய முண்டகம் மலர்த்தும்
விஞ்சை வாள் இரவி மெய்கண்ட தேவன்
மறையகத்து அடக்கிய ஒரு தனிக் குடிலையின்
அருள்நூல் நிறைந்த பொருள் முழுதுணர்த்தும்
ஆடிபோலக் கூடிய காட்சியின்
புகல் சிவஞான போத நூல் தொகுத்த
அகல் பொருள் தேர்தற்கு அருமையும், ஆங்கவன்
சம்பிரதாயத்து அந்தமில் வான்பொருள்
உலவாப் பெருங்களி உள்ளம் படைத்த
பண்பின் மேதகைய சண்பையர் கோமான்
தற்பலன் தேராப் பற்பல சமயிகள்
மலைத்தலைக் கொண்மூ மாருதம் அறைந்தெனத்
தலைத்தலை இரியத் தான்இனிது உரைத்த
புகழ் சிவ ஞான போத உள்ளுறையாம்
திகழ் சிவஞான சித்தியின் விரிவும்,
என்போல் மருண்ட புன்புல மாக்கள்
தீரா இடும்பையும் திருவுளங் கொண்டுதன்
ஆராக் காதலின் ஆக்கியோனாகப்
பாஇடம் கொண்ட தன் நாஇடம் கொண்டு
பவப் பிரகாசப் படரிருள் விழுங்கும்
சிவப் பிரகாசத் திருப்பெயர் மேவித்
தரைமகள் மருங்கில் பரிவுடன் வளைத்த
நரலையின் தொகைக்கு நான் மடங்கு உடைய
சைவநூற் சலதி நொய்தினிற் கடத்தும்
மரக்கலம் அதற்கு மாலுமிஒப்ப
எழில் ஈரைந்தும் வழுவறப் புணர்த்துத்
தெள்ளு சீர்ப் புலமை வள்ளுவன் தனக்கோர்
நற்றுணை உடைத்தெனக் கற்றவர் களிப்ப
அருட்பயன் என்னா அதற்கொரு நாமம்
தெருட்படப் புனைந்து செந்தமிழ் யாப்பில்
குறளடி வெள்ளை ஒரு நூறு இயம்பினன்;
மற்றவன் புலியூர் வளநகர்க் கீழ்பால்
கொற்றவன் குடியிற் குடிகொண்டு உறைந்த
பூசுரன், உறைந்த புதுமதி வேணியும்
காசுறும் கண்டமும் கரந்த
தேசிகன் உமாபதி சிவன் என்பவனே.
பொருள் : வெண்ணிறம் கொண்டு திகழும் கயிலை மலைக்கு இரண்டு உவமைகள் சொல்லலாம். சூறாவளி பாற்கடலைச் சுழற்றியெடுத்து மேலே வீச, அண்டத்தின் மேல் எல்லையில் அப்பாற்கடல் திரண்டு சென்று நின்றால் எப்படியிருக்கும்? அப்படி இருக்கிறதாம் அக்கயிலை மலை. மேலும், சிவபுண்ணியமெல்லாம் ஒருங்கே திரண்டு நின்றாற் போலவும் இருக்கிறதாம். சிவபிரானுக்குரிய அம்மலையில் காவற்பணி பூண்டவர் திருநந்திதேவர். அவரது உபதேச பரம்பரையில் வந்தவர் மெய்கண்ட தேவர். அவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்தவர். தம்மைக் கண்டஅடியவரின் உள்ளக் கமலங்களை மலரச் செய்யும் அருட்கதிரவன் அவர். அவ்வருளாசிரியர் செய்த சிவஞான போதம் வேதம் முழுதையும் தன்னகத்தே அடக்கி நிற்கும் பிரணவத்தைப் போன்றது; ஆகமப் பொருள் முழுதையும் அடக்கிக் காட்டும் ஆடி போன்றது. அந்நூலைக் கற்றுத் தேர்வது என்பது மிகவும் அருமையாகும். அம்மெய்கண்ட தேவரது வழியில் வந்த முடிந்த முடிபாகிய பொருளைப் பெற்று, அதனால் உள்ளே பெருகியெழும் பேரின்பமாகிய பயனையும் பெற்ற அருட்பண்பினர் சண்பையர்கோன் எனப் பெறும் அருணந்தி தேவர். அவர் சிவஞான போத நூலின் உள்ளுறையை வெளிப்படுத்த வேண்டிச் சிவஞான சித்தி என்னும் விரிந்த நூலை அருளிச் செய்தார். மலையுச்சியில் திரண்டு நின்ற மேகக் கூட்டங்களைப் பெருங்காற்றுச் சிதற அடிப்பது போலப் பற்பல சமயத்தார் கூறும் பொருந்தாக் கொள்கைகளை அந்நூலில் மறுத்துள்ளார். சிவஞான போதத்தின் சுருக்கமும், சிவஞான சித்தியின் விரிவும் என்போலும் குறையறிவு உடையார் அந்நூல்களை அணுக வொட்டாதபடி செய்கின்றன. சுருக்கமும் கற்போர்க்கு இடர்ப்பாட்டைத் தருகிறது. பெருக்கமும் ஒருவகையில் நூலைக் கற்பதற்குத் தடையாய் அமைகிறது.
இவ்வாறு கற்போர்க்கு உண்டாகும் இன்னலைக் கருத்திற் கொண்ட ஒரு பெரியார், அவர்கள் மேற்கொண்ட அன்பினால் சுருங்கியும் போகாமல், விரிந்தும் செல்லாமல் ஒரு நூலை ஆக்கியருளினார். பிறவியாகிய நோயைத் தோற்றுவிக்கும் பெரிய மலமாகிய இருளை முற்றிலும் நீக்கவல்ல சிவப் பிரகாசம் (சிவஒளி) என்னும் பெயரைத் தன் நூலுக்குக் கொடுத்தார். நிலத்தைச் சூழ்ந்துள்ள கடல் ஏழு எனப்படும். அவ்வெண்ணிக்கையைப் போல நான்கு மடங்கு எண்ணிக்கை உடையது சிவாகமம் ஆகிய கடல். சிவாகமங்களாகிய அக்கடலைக் கடத்தற்கு உதவும் மரக்கலமாகத் திகழ்வது சிவப்பிரகாசம் ஆகிய அந்நூலாகும். மரக்கலம் என்றால் அதனை வழி நடத்துகின்ற மாலுமி ஒருவன் வேண்டுமே. சிவப்பிரகாசமாகிய மரக்கலம் அதற்கு மாலுமி ஒப்பாக மற்றொரு நூலைச் செய்தருளி அதற்குத் திருவருட் பயன் என்னும் பெயரைச் சூட்டினார். பத்து வகையான அழகுகள் இதனுள் பொருந்தியுள்ளன. மெய்ந் நெறியை உணர்த்தும் திருக்குறள் இது என்று சொல்லும்படியாகக் குறள் வெண்பா நூறு கொண்டதாக இந்நூலை ஆக்கினார். தெய்வப் புலமைத் திருவள்ளுவர்க்கு ஒரு நல்ல துணை கிடைத்தது என்று கற்றவர் மெச்சுவாராயினர். இந்நூலை இயற்றிய அப் பெரியார் தில்லை வாழ் அந்தனர்; தில்லையின் கிழக்கேயுள்ள கொற்றவன்குடி என்னும் ஊரில் தங்கியிருந்தவர். சிவபெருமான் நிலவு அணிந்த சடையையும், கரிய கண்டத்தையும் மறைத்து ஞானாசிரியராகிய இவராக வந்தருளினார் என்னும் படியாக விளங்கி, உமாபதி சிவம் என்னும் திருப்பெயரை உடையவராயினர்.
விளக்கம் : திருவருட்பயனுக்கு முன்னுரையாக அமைந்த இப்பாயிரச் செய்யுளைப் பாடியவர் நிரம்ப அழகிய தேசிகர் என்னும் பழைய உரையாசிரியர். அவர் திருவருட் பயனுக்குத் தெளிந்த உரை வகுத்தவர். அவ்வுரையின் தொடக்கத்தில் இப்பாயிரச் செய்யுளைப் பாடிச் சேர்த்துள்ளார். சிவபிரானுக்கு உரிய கயிலை மலையை முதலில் வருணிக்கிறார். நெடுந்திரள் அன்ன கயிலை எனவும், தருமம் திரண்டு வீற்றிருந்த வண்ணமும் போலும் கயிலை எனவும் தனித்தனியே கூட்டிக் கொள்ளுதல் வேண்டும். கயிலையைக் காக்கும் திருநந்திதேவர் சிவபிரானுக்குரிய திருவுருவைத் தாமும் பெற்றவர். அவரை அபர சம்பு என்பர். அதுபற்றியே கண்ணுதற் கடவுள் நந்தி என இங்குக் குறிக்கப் பெற்றார். அவரது திருவடியை உள்ளத்திலும் சென்னியிலும் கொண்டு போற்றும் திருக்கயிலாய பரம்பரையில் உபதேசம் பெற்றவர் ஆதலின் மெய்கண்ட தேவர் நந்தி தாள் சுமந்து வந்த வழித் தோன்றல் எனச் சிறப்பிக்கப் பெற்றார். அவர் ஞான ஒளி வீசும் கதிரவனாய்த் தோன்றினராதலின் விஞ்சைவாள் இரவி எனப்பட்டார். விஞ்சை-வித்தை, அறிவு; இங்கு மெய்யறிவாகிய ஞானத்தைக் குறித்தது. வாள்-ஒளி. ஓம் என்னும் பிரணவத்தை ஒரு தனிக் குடிலை என்றார். ஊமை மறையாகிய அது வேதங்களைத் தன்னகத்து அடக்கி நிற்பது போல, அளவாற் சிறிய சிவஞான போதம் அறிவுநூற் பொருள் முழுவதையும் தன்னுள்ளே அடங்கக் கொண்டு நிற்கிறது என்பது கருத்து.
சிவஞானபோதம் என்னும் முதல் நூலு<ம், சிவஞான சித்தியார் என்னும் வழி நூலு<ம் இருக்கும் போது சிவப்பிரகாசம் என்னும் நூலை ஏன் செய்ய வேண்டும்? என்னும் வினாவை எழுப்பிக் கொண்டு அதற்கு விடை கூறுகிறார். செறிவும் திட்ப நுட்பமும் வாய்ந்த சிவஞான போத நூலின் சுருக்கம் அதனை அறியப் புகுவோர்க்கு இடர்ப்பாட்டினைத் தருவதாய் உள்ளது. அவ்வாறே, பற்பல சமயப் பொருள் நிலைகளைச் சாடி மறுத்துத் திருவருளால் தெளிவதற்குரிய சித்தாந்த உண்மைகளைத் தருக்க முறையில் நிலைநாட்டுவதாகிய சிவஞான சித்தியாரின் விரிவும் அதனைக் கற்கப் புகுவோர்க்கு மலைப்பினை உண்டு பண்ணுவதாய் உள்ளது. எனவே போதம் போல் சுருங்காமலும், சித்தி போல் விரியாமலும், அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாய் யாவரும் அச்சமின்றி அணுகுவதற்கு ஏற்றதாய் அமைந்த ஒரு நூலைச் செய்து தருதல் வேண்டும் என்னும் கருணையினால் செய்ததே சிவப்பிரகாசம் என்னும் நூலாகும். பவப் பிரகாசப் படரிருள் விழுங்கும் சிவப்பிரகாசம் எனக் குறிப்பிடுகின்றார். பிரகாசம் என்பது இருமுறை வந்துள்ளது. ஆயின் வெவ்வேறு பொருளில் வந்துள்ளது. முதலில் உள்ள காசம் நோய் எனப் பொருள்படும். பிரகாசம் என்றால் மிகுந்த நோய் என்பது பொருள். அடுத்துள்ள காசம் ஒளி எனப் பொருள்படும். பிரகாசம் என்பதற்கு மிகுந்த ஒளி என்பது பொருள். எனவே பிறவியாகிய நோயைத் தோற்றுவிக்கின்ற பரந்த ஆணவ இருள் முழுவதையும் ஓட்டுகின்ற சிவஞானமாகிய ஒளி என்பது அத்தொடரின் பொருளாய் அமைகின்றது. நிலத்தை வளைத்துச் சூழ்ந்திருக்கும் கடலை, நிலமகள் தன் இடையில் உடுத்தியிருக்கும் ஆடை என வருணிக்கிறார். நரலை என்பது கடல்.
இந்நிலத்தைச் சூழ்ந்த கடல் ஏழாகும். இத் தொகைக்கு நாலு<மடங்கு ஆகிய, அஃதாவது இருபத்தெட்டு என்னும் எண்ணிக்கையுள்ள, கடல்கள் வேறு உள்ளன. அவை சிவாகமங்கள் என்னும் கடல்களாகும். அவற்றைக் கடத்தற்கு உதவும் மரக்கலம் ஒன்று உண்டு. அதுவே சிவப்பிரகாசம் ஆகிய நூலாகும். அதனை சைவநூற் சலதி நொய்தினிற் கடத்தும் மரக்கலம் என்கிறார். இந்நூல் ஒன்றைக் கற்றுத் தேர்ந்தால், சிவாகமங்களின் பொருள் அனைத்தையும் தேர்ந்து தெளிந்ததாய் முடியும் என்பது கருத்து. சிவப்பிரகாச நூலுக்கு உதவியாகத் திருவருட் பயனைச் செய்தருளினார் உமாபதி சிவம். திருவருட் பயனை முதலில் தெரிந்து கொண்டு அது காட்டும் வழியிலேயே சிவப்பிரகாசத்தைப் பயின்றால் சித்தாந்தப் பொருளை முட்டின்றி இனிது விளங்கிக் கொள்ள முடியும். எனவே, சிவப்பிரகாசம் சிவாகமக் கடலைக் கடத்தும் மரக்கலம் என்றால், திருவருட்பயனை அதனை நடத்தும் மாலுமி என்னலாம். இவ்வாறு கூறி, அவ்விரு நூல்களைப் பற்றிய சரியான மதிப்பீட்டினை அளித்துள்ளார் பாயிர ஆசிரியர்.
திருவருட்பயன் இரண்டே அடிகளை உடையகுறள் வெண்பாவால் ஆனது. சித்தாந்தப் பொருள்களைப் பத்து அதிகாரங்களாக வகுத்துக் கொண்டு, ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பத்துக் குறள்களை அமைத்து, உவமை, ஒட்டு முதலிய அணி நலம் சிறக்க, ஆற்றாமை இரக்கம் சினம் முதலிய உணர்ச்சிகள் ஆங்காங்கே வெளிப்பட, ஆசிரியர் நூலைக் கொண்டு செல்லும் போக்கு திருவள்ளுவரின் போக்கினை அடியொற்றியதாக உள்ளது. மேலும், திருவள்ளுவர் வீட்டியல் பற்றிக் குறிப்பாகவே சொல்லிச் சென்றார். அதனைத் தெளிவாக எடுத்தோதி அவரது உள்ளக் கிடக்கை இதுஎனப் புலப்படுத்தியவர் உமாபதி சிவம். இதனால் தெள்ளுசீர்ப் புலமை வள்ளுவன் தனக்கோர் நற்றுணை உடைத்து எனக் கற்றவர் களிப்புறுகின்றனராம். ஞானாசிரியர் சிவமே என்பது சைவ நூற் கொள்கை. அம்முறையில், சிவ பெருமானே உமாபதி சிவனாராக இருந்து திருவருட்பயனை உலகிக்கு வழங்கினார் எனக் கூறி முடிக்கின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக