முதல் அதிகாரம்
பதி முது நிலை
பதி என்பதற்குக் காப்பவன் என்பது பொருள். அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் காத்து ஆளும் தலைவன் என்ற கருத்தில் இறைவன் பதி எனப்படுகிறான். இறை, உயிர், தளை என்ற முப்பொருள்களில் பதியாகிய இறைவனே ஏனை எல்லாவற்றிலும் மேலானவன். ஆசிரியர் உமாபதி சிவம் தனது மற்றொரு நூலான சிவப்பிரகாசத்தில் இறையிலக் கணத்தைக் கூறப் புகும்போது பதி பரமே என்று சொல்லித் தொடங்குதலைக் காணலாம். பதியே பேராற்றல் வாய்ந்தவன்; தன்வயம் (சுதந்திரம்) என்னும் தன்மை உடையவன். உயிரும், தளையும் ஆகிய பிற பொருள்கள் தமக்கெனச் சுதந்திரம் இன்றிப் பதியின் விருப்பப்படியே செயற்பட்டுச் செல்வனவாகும். இறைவனுக்கு இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று, இறைவன் யாதொன்றையும் நோக்காது தன்னிலையில் தான் நிற்றலாகும். இந்நிலையில் அவன் வடிவு, பெயர் முதலியன ஒன்றும் இன்றி, எல்லையற்ற ஒரு பொருளாய் நிற்பான்; தொழில் செய்தல் இன்றிவாளா இருப்பான். இதுவே அவனது உண்மை நிலையாகும். இது சிவமாய் நிற்கும் நிலை எனப்படும்.
மற்றொன்று, உயிர்களின் மீது எழும் கருணை மேலீட்டால் இறைவன் ஐந்தொழில் செய்யும் நிலையாகும். உலகத்தைத் தொழிற்படுத்தும் இந்நிலையில் அவன் அளவற்ற வடிவும், பெயரும் உடையவனாய் நிற்பான். இது பதியாய் நிற்கும் நிலை எனப்படும். பதியாய் நிற்கும் நிலையில் அவனிடத்துக் காணப்படும் இயல்புகளை எடுத்துக் கூறுதலின் இவ்வதிகாரம் பதி முது நிலை எனப் பெயர் பெற்றது. இறைவனது இயல்பை முது நிலை எனக் குறிக்கின்றார் ஆசிரியர். மேலான இயல்பு என்று அதற்குப் பொருள் கூறலாம். இவ்வதிகாரத்தில் கூறப்பெறும் கருத்துக்களைப் பின்வருமாறு அமைத்துக் காட்டலாம். உலகம் அறிவற்ற சடப்பொருள். அது தானாக இயங்காது. உயிர்கள் அறியும் தன்மை உடையவை. ஆனால், தாமாக அறிய மாட்டா. உயிர்களை அறிவித்தற்கும், உலகத்தை இயக்குதற்கும் பேரறிவும் பேராற்றலும் உடைய ஒரு முதல்வன் உளன். அவன் உலகு உயிர்களோடு கலந்து பிரிப்பின்றி நிற்கின்றான். உயிர்களுக்குத் தோற்றமில்லை; அழிவில்லை. அவை என்றும் உள்ளவை. ஆயின் அவை தம்மிடமுள்ள குறைபாடு காரணமாக உடம்போடு கூடி உலகிடை வருகின்றன. பின் உடம்பினின்றும் நீங்கி நிலை பெயர்ந்து செல்கின்றன. இவ்வாறு மாறிமாறிப் பிறந்தும் இறந்தும் உழல்கின்றன. உயிர்களிடமுள்ள குறைபாட்டினை நீக்கி அவை தன்னையடைந்து இன்புறும்படியாகச் செய்கிறான் இறைவன். இங்ஙனம் செய்யும் அவனது வல்லமையே சத்தி எனப்படும். சத்தி என்பது அவனுக்குக் குணம். சூரியனை விட்டுப் பிரியாத ஒளி போலவும், நெருப்பை விட்டு நீங்காத சூடு போலவும் இறைவனது குணமாகிய சத்தி அவனோடு பிரிப்பின்றி நிற்கும். இறைவன் தானும் தன் சத்தியும் என இருதிறப்பட்டு நின்று உலகை நடத்துகிறான்.
அவன் எல்லாப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கி நிற்கின்ற பெரிய பொருள்; எல்லாவற்றுள்ளும் ஊடுருவிக் கலந்து நிற்கின்ற நுண்ணிய பொருளும் அவனே. அவன் உயிர்களின் அறிவிற்கு எட்டாதவன்; உயிர்களிடத்தில் பெருங் கருணையுடையவன். அவன் ஆக்குதல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்கிறான்; உயிர்களின் மாசினை நீக்கித் தூய்மை செய்து ஆட்கொள்ளும் பொருட்டே இத் தொழில்களை அவன் மேற்கொள்கிறான். அவனுக்கு ஓர் உருவமில்லை; பெயரில்லை; அசைவில்லை; இதுவே அவனது உண்மை நிலை. காலம் இடம் முதலிய எல்லைகளையெல்லாம் கடந்து விரிந்து நிற்கும் அவனது பெருநிலையை ஞானிகளே உணர்தல் கூடும். ஏனையோரும் தன்னை ஒருவாறு உணர்ந்து உய்யும் பொருட்டு அவன் வரம்புபட்ட பல வடிவங்களைத் தாங்கி நின்று அருள் புரிகிறான்.
உயிர்கள் இறைவனாகிய தலைவனை உடையவை. அதுபோல இறைவனுக்கும் ஒரு தலைவன் உண்டா என்று கேட்கலாம். இறைவனே யாவருக்கும் மேலானவன். ஆகவே அவனுக்கு மேலே ஒரு தலைவன் இல்லை. இறைவன் எப்பொருளிலும் கலந்து நின்றாலும் அவற்றின் சார்பினால் அவன் தன் தன்மை மாறுபடான். தேவரும் காணுதற்கு அரிய பரம் பொருள் அவன். ஆயினும் அடியவர்க்கு எளியவனாய் அவருள்ளத்தில் அகலாது நிற்பான். உலகப் பற்றை நீக்கித் தன்னையே சார்ந்து நிற்கும் உயிர்களுக்குப் பிறவித் துன்பத்தை நீக்கிச் சுகத்தைத் தருவான். பிறவிப் பிணிக்கு அவனே உற்ற மருந்து. அவனை நினைந்து வழிபடுதலே உயிர்கள் செய்யத் தக்கது. இனி இக் கருத்துக்களை விரிவாகக் காண்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக