காப்புச் செய்யுள்
நஞ்குஞ்சரக் கன்று நண்ணின் கலை ஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்.
பொருள் : அருள் வடிவான யானைக் கன்றாகிய விநாயகப் பெருமானைப் புகலாக அடைந்தால், மெய்ந்நூலறிவு வருந்திக் கற்க வேண்டிய பொருள் ஆகாது. அஃது எளிதில் வரும்.
சொற்பொருள் :
நல் - அருள் வடிவான
குஞ்சரக்கன்று - யானைக் கன்று ஆகிய விநாயக மூர்த்தியை
நண்ணின் - புகலிடமாக அடைந்தால்
கலைஞானம் - மெய்ந்நூல் அறிவு
கற்கும் - வருந்திக் கற்றுப் பெறும்
சரக்கு - பொருள்
அன்று - ஆகாது. (அஃது எளிதில் வரும்)
காண் - மனமே, இதனை நீ உணர்வாயாக.
விளக்கம் : குஞ்சரக்கன்று
குஞ்சரம் என்பதற்கு யானை என்பது பொருள். யானை முகத்தினை உடைய பிள்ளையாரை யானைக் கன்று என்று குறிப்பிட்டார் ஆசிரியர். இளமை மாறி முதுமையடைதலும், நலிவுறுதலும் நம்மவர் நிலை. ஆயின் பெருமானுக்கு அந்நிலை இல்லை. அவர் என்றும் ஒரு தன்மையராய் இருப்பவர்; என்றும் இளமையானவர். அது பற்றியே அவர் கன்று எனப்பட்டார். உலகத்தில் உள்ள யானைக் கன்று களினின்றும் வேறுபடுத்திக் காட்டுதற்கு அருள் வடிவம் கொண்ட யானைக் கன்று என்றார் ஆசிரியர். நல்குஞ்சரம் என்பதில் உள்ள நன்மை, இந்த இடத்தில், அருள்வடிவம் எனப் பொருள் தந்து நின்றது.
நண்ணுதல்:
நண்ணுதல் என்பதற்குச் சேர்தல் என்பது பொருள். நற்குஞ்சரக் கன்றைச் சேர்தலாவது, அப் பெருமானை இடைவிடாது நினைத்தலே யாம். நம் எண்ணத்தில் இப்பொழுது உலகியல் பொருள்களே இடம் பெற்றுள்ளன. வீடு, நிலம், மனைவி, மக்கள், பதவி, செல்வம் முதலியவை பற்றிய எண்ணங்களே நம் நெஞ்சில் நிரம்பியுள்ளன. இஃது எதைக் காட்டுகிறது? நிலையற்ற உலகியல் பொருள்களுக்கு நாம் எவ்வளவு முதன்மை கொடுத்து வருகிறோம் என்பதையே இது காட்டுகிறது. இந்நிலை மாறி உலகியல் மீது வைத்துள்ள பற்று படிப்படியே ஒழிய வேண்டும். இறைவன் ஒருவனே நம் வாழ்வுக்கு முதலாக இருப்பவன்; அவனே எல்லாவுயிர்களுக்கும் புகலாக உள்ளவன். அவனையே நாம் பற்றாகப் பற்ற வேண்டும்; அவனையே இடைவிடாது எண்ண வேண்டும். மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல இனமலர் கையிற் கொண்டு அப்பெருமானை வழிபடல் வேண்டும். இவ்வாறு மனம் மொழி மெய்களால் அவனை வழிபடுதலையே நண்ணுதல் என இங்குக் குறிப்பிட்டார் ஆசிரியர்.
கலைஞானம் (மெய்ந்நூலறிவு): நூல்கள் இரு வகைப்படும். அவை உலக நூல்கள், மெய்ந்நூல்கள் என்பன. உலகியல் பற்றி எழுந்தவை உலக நூல்கள். வீட்டு நெறியை உணர்த்துவன மெய்ந்நூல்கள். உ<லக நூல்களை யாரும் கற்கலாம். பல துறைகளைச் சார்ந்த உலக நூல்களை அவ்வத் துறையில் வல்ல ஆசிரியரை அடுத்துக் கேட்டு விளங்கிக் கொள்ளலாம். ஆனால், மெய்ந்நூல்கள் அத்தகையன அல்ல. அவற்றைக் கற்பதற்குப் பக்குவம் வேண்டும். பக்குவமில்லார் அவற்றைக் கற்க விழையார்; கற்க முன்வரார். ஒருவேளை முன்வந்த போதிலும் அவற்றின் பொருளை உள்ளவாறு விளங்கிக் கொள்ளார். ஏனெனில் ஆசை, வெகுளி முதலிய மாசுகள் மனத்தில் இருக்கின்ற வரையில் அம் மனத்தில் ஞானநூற் பொருள்கள் சென்று பதியா. முன்கூறியபடி மனம் மொழி மெய்களினால் இறைவனை உண்மையாக வழிபட்டு வருவோர்க்கு மனமாசுகள் அகலும்; உள்ளத்தூய்மை உண்டாகும். அவரே பக்குவம் உடையவர். அவரே மெய்ந்நூலறிவைப் பெறுதற்கு உரியவர்.
கற்கும் சரக்கு அன்று: பொருளியல்பை உள்ளவாறு உணர்தலே ஞானமாகும். அஃதாவது, தனக்குப் புகலாகிய இறைவனது இயல்பையும், அவன் வழியில் நிற்றற்குரிய தனது இயல்பையும், அவ்வாறு நிற்கவொட்டாது தன்னைத் தடுத்து நிற்கும் தளையினது நிலையையும் உள்ளவாறு உணர்தலே ஞானமாகும். இந்த ஞானத்தைத் தரும் மெய்ந் நூல்களை ஒருவர் தாமே முயன்று கற்று ஞானத்தைப் பெறுதல் என்பது இயலாது. ஏனைய ஆசிரியன்மார்களை அடைந்து வருந்திக் கற்று ஞானத்தைப் பெறலாம் என்பதும் இயலாது. ஏனெனில் நம்மினும் சிறிது அதிகம் கற்ற அவ்வாசிரியர்கள் உலகநூற் பொருளை உணர்த்த வல்லவரேயன்றி ஞானநூற் பொருளை உணர்த்தும் தகுதியுடைய வரல்லர். அவ்வாறாயின் ஞானத்தைப் பெறுதல்தான் எவ்வாறு? என்ற வினாஎழும். மூத்த பிள்ளையாரது திருவடிகளை இடையறாது பற்றி நின்று வழிபட்டுவரின், அவர் உள்நின்று உணர்த்த மெய்ந்நூலறிவு எளிதில் வந்தடையும் என்பதே அதற்கான விடையாகும். வழிபாட்டின் மூலம் பக்குவம் எய்திய உயிருக்கு இறைவன் தானே ஞானத்தை உணர்த்துவன் என்பது கருத்து.
காண் :
செய்யுளின் இறுதியில் காண் என்ற முன்னிலைச் சொல் உள்ளது. அறிவாயாக என்பது அதற்குப் பொருள். அவ்வாறாயின், ஆசிரியர் யாரை முன்னிலைப் படுத்தி இக்கருத்தைக் கூறுகிறார்? ஆசிரியர் தம் நெஞ்சை முன்னிலைப்படுத்தி, நெஞ்சமே! நாமும் அப்பெருமானை நண்ணி அவனருளால் இந்நூலை எளிதில் முற்றுவிப்போம் என்று கூறியதாகக் கொள்ளலாம். அல்லது, மாணவனை முன்னிலைப்படுத்தி மாணவனே! நீ அப் பெருமானை உள்ளம் உருகி வழிபட்டு இந்நூலைக் கேட்பாயாயின் அவனருளால் மெய்யறிவாகிய ஞானம் உனக்கு எளிதிற் கைகூடும் என்று கூறியதாகவும் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக