9. சார்ந்தவர்க்கு இன்பம் தருபவன்
நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர் சங்கரன்.
பொருள் : இறைவன் தன்னை அடைந்தவர்க்கு இன்பத்தைத் தருபவன்; தன்னை அடையாதவர்க்கு இன்பத்தைத் தராதவன். இவ்வாறு ஒரு சாரார்க்கு மட்டும் நன்மை செய்வதனால் அவன் ஓர வஞ்சனை உடையவன் போ<லும் என்று எண்ணவேண்டா. அவன் என்றும் ஒருபால் கோடாதவன்; நடுவு நிலைமையன். எல்லாவுயிர்களுக்கும் தனது பேரின்பத்தை வழங்க வேண்டும் என்பதே அவனது திருக்குறிப்பாகும். அதுபற்றியே அவனுக்குச் சங்கரன் என்ற பெயர் வழங்குகிறது. சங்கரன் என்பதற்கு, எல்லா வுயிர்களுக்கும் இன்பத்தைச் செய்பவன் என்பது பொருள். சம்-இன்பம்; கரன்-செய்பவன்.
சொற்பொருள் :
நண்ணார்க்கு - தன்னைச் சாராதவர்க்கு
நலம் இலன் - இன்பம் செய்யான்.
நண்ணினர்க்கு - தன்னைச் சார்ந்தவர்க்கு
நல்லன் - இன்பத்தைச் செய்வான் (இவ்வாறு ஒரு சாரார்க்கு மட்டும் நன்மை செய்பவன் நடுவு நிலைமையன் ஆவனோ? எனின், அவ்வாறு எண்ண வேண்டா.)
சலம் இலன் - அவன் ஓர வஞ்சனை இல்லாதவன்.
பேர் சங்கரன் - எல்லாவுயிர்களுக்கும் தனது பேரின்பத்தை வழங்குபவன் என்ற பொருளில் உண்மை நூல்கள் அவனைச் சங்கரன் என்று குறிப்பிடுகின்றன.
விளக்கம் :
அவரவர் படுகின்ற துன்பங்களுக்குக் காரணம் அவரவர் செய்து கொண்ட வினைகளே யாகும். ஆயின் அதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. அடுத்தடுத்துத் துன்பம் வருகிறபோது அவர்கள் ஆண்டவனைப் பழிக்கிறார்கள். இறைவன் நான் படும் துன்பத்தைக் கண்டும் வாளா இருக்கிறானே. அவனுக்கு இரக்கமில்லையா? என்கிறார்கள். இவர்களே நல்வினைப் பயனால் தமக்கு இன்பம் வரும்போது அவற்றை நல்லன என்று இயைந்து அனுபவிக்கிறார்கள். அப்போது அவர்கள் இறைவனை நினைப்பதில்லை; இறைவனுக்கு நன்றி சொல்வதில்லை. ஆனால் தீவினைப் பயனால் துன்பம் வரும் போது மட்டும் அவர்கள் இறைவனை நினைக்கிறார்கள். துன்பத்தை நீக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது என்ன முறைமை? நல்வினையும் தீவினையும் ஆகிய இரண்டும் அவர்கள் முன் செய்து கொண்டவை தாமே. அவற்றுள் ஒன்றை மட்டும் விரும்பி ஏற்பதும், மற்றொன்றுக்கு வருந்துவதும் பேதைமையன்றோ?
மருத்துவ நூல்கள் உடல்நலம் பேணும் வழிகளைக் கூறுகின்றன. இன்ன காரணங்களால் இன்ன நோய்கள் வரலாம்; அக்காரணங்களைத் தவிர்த்தால் அந்நோய்கள் இன்றி இனிது வாழலாம் என்று அறிவுறுத்துகின்றன. ஆனால், பலர் அம் மருத்துவக் குறிப்புகளைப் பின்பற்றுவதில்லை. அவற்றுக்கு மாறான வழியில் நடக்கிறார்கள். அதனால் நோய்களை வரவழைத்துக் கொள்கிறார்கள். இளமை மிடுக்கில் அந்த நோய்கள் மடங்கியிருக்கும். அப்பொழுது அந்நோய்கள் பெரிதாகத் தோன்றுவதில்லை. உடம்பில் வலிமை குறைகிற முதுமையில் அந்நோய்கள் பல்கிப் பெருகி வந்து தாக்கி வருத்தும். அப்பொழுது அவர்கள் வேறு யாரையேனும் நொந்து கொள்ள முடியுமா? நோய்க்கு யார் காரணம்? அவர்கள் தானே காரணம். மருத்துவ நூல்கள் சொன்ன நல்வழியில் நில்லாது மாறி நடந்ததனால் தமக்குத் தாமே நோயைத் தேடிக் கொண்டார்கள். அஃது அவர்களுடைய குற்றம்தானே.
அதுபோல மெய்ந் நூல்கள் வினையிலிருந்து விடுபடும் வழிகளைக் கூறுகின்றன. யான் எனது என்னும் பற்றுக்களே வினைக்குக் காரணம். அப்பற்றுக்களை நீக்கினால் வினைகள் இல்லையாகும் என்று கூறுகின்றன. அப்பற்றுக்களை எப்படி நீக்கிக் கொள்வது? இறைவனிடத்து வைக்கும் பற்றினாலேயே அப்பற்றுக்களை நீக்க முடியும் என்று மெய்ந்நூல்கள் கூறுகின்றன. இறையன்பு உடையவர்க்கு அது வளர வளர, யான் எனது என்னும் பற்று மெல்ல மெல்ல நீங்கும். அவர்கள் அப்பற்றுக்களை முற்றிலும் விடுத்து எல்லாம் அவன் செயல் என இறைவன் வழியில்நிற்பர். அவர்களே பற்றின்றி இருப்பதனால் இறைவனைப் போல அவர்களும் வினையின் நீங்கியவரேயாவர். இறைவனை மனம் மொழி மெய் என்னும் மூன்றினாலும் பற்றினால் தீவினை பற்றாது ஒழியும் என்பதை,
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே
என்றாற் போல வரும் தேவாரத் திருமொழிகள் வலியுறுத்துகின்றன. இவ்வாறு உண்மை நூல்கள் வினை நீங்கும் வழியை உரைக்கின்றன. ஆயினும் மக்கள் அவ்வழியில் நடப்பதில்லை. உலகப் பற்றாகிய சேற்றில் அழுந்திக் கிடக்கின்றனர். பற்றுக்களை விடாதபோது வினைகள் வந்து வருத்தத் தான் செய்யும். அவ்வருத்தம் அவர்கள் தேடிக்கொண்டதுதானே. அதற்கு இறைவனை நோவது ஏன்? குளிர் காலத்தையும் வாடையும் பனியும் உடலை வாட்டுகிறது. அருகிலேயே குளிர் காய்வதற்கேற்ற தீ கொழுந்து விட்டு எரிகிறது. அத்தீயை அணுகி அமர்ந்தால் பனியும் நடுக்கமும் பறந்தோடுமே. இன்பக் களிப்பை எய்தலாமே. அவ்வாறு செய்யாமல் தீயை விட்டு விலகி நின்றால் வாடையும் பனியும் வருத்தத்தானே செய்யும். அவ்வருத்தத்திற்கு எது காரணம்? தீ காரணமா? தான் அத்தீயை விட்டு விலகி நின்றது காரணமா? தீயின் மேல் யாரும் குற்றம் சொல்லார். அது தன்னை யார் அணுகினாலும் அவரது குளிர் நடுக்கத்தைப் போக்கி அவர்க்கு நலம் செய்வது. அதனை அணுகி நில்லாமல் விலகி நின்றதன் செயலேதான் படும் துன்பத்திற்குக் காரணமாகிறது.
வாடையும் பனியும் போல் உள்ளவை உலகப் பற்றுக்கள். குளிர் காயும் நெருப்புப் போல் இருப்பவன் இறைவன். பற்றுக்களாகிய பனியிலும் குளிரிலும் அகப்பட்டுத் துன்புறுகின்றன உயிர்கள். அவை படும் துன்பத்திற்கு இறைவன் மேல் குற்றம் சொல்லாமா? குளிர் காயும் நெருப்பைப் போலத் தன்னை யார் அணுகினாலும் அவரது பிறவித் துன்பத்தைப் போக்கிப் பேரின்பத்தைத் தர அவன் காத்திருக்கிறான். அவனை அணுகி நில்லாமல் உயிர்கள் விலகி நிற்பதே அவைபடும் துன்பத்திற்குக் காரணம் ஆகும்.
இறைவன் உலகப் பற்றை நீக்கித் தன்னையே புகலாக அடைந்த அன்பர்களை ஏற்று கொண்டு அவர்க்கு வரும் வினைத் துன்பத்தைப் போக்கிப் பேரின்பத்தை வழங்குவான். பற்றுநீங்காத ஏனையோரை வினை வழியே செலுத்திப் பிறவித் துன்பத்திற் படுமாறு செய்வான். அவரை வினை வழியே செலுத்துவதும் அவரைப் பக்குவப்படுத்தி ஆட்கொள்ளும் பொருட்டேயாகும். இக் கருத்துப் படவே நண்ணினர்க்கு நல்லன் நண்ணார்க்கு நலமிலன் என்றார் ஆசிரியர். இவ்வாறு தன்னைச் சார்ந்தார், சாராதார் ஆகிய இருவரிடத்தும் இறைவன் செய்யும் செயல்கள் வெவ்வேறாய் அமைந்தாலும் அவை யாவும் கருணைச் செயல்கள் என்றே கூறப்பெறும். அன்பரிடத்துச் செய்வது அறக்கருணை எனப்படும். அல்லாதாரிடத்துச் செய்வது மறக்கருணை எனப்படும். அவன் எல்லாவுயிர்களிடத்திலும் உடனாக இருந்து அவ்வவ்வுயிர்களின் நிலைகளுக்கு ஏற்ப அவற்றை நடத்துகிறான். அவனது செயல் யாவும் அருட்செயலே. இதனை உணர்ந்தால், அவன் சலம் (வஞ்சனை) இலன் என்பதும், நடுவு நிலைமையன் என்பதும், சங்கரன் என்ற பெயர் அவனுக்கு சாலப் பொருந்தும் என்பதும் நன்கு விளங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக