10. பிறவிக்கு மருந்து ஆவான்
உன்னும் உளது ஐயம் இலது உணர்வாய் ஓவாது
மன்னு பவம் தீர்க்கும் மருந்து.
பொருள் : இடைவிடாது தொடர்ந்து பற்றி வருகின்ற பிறவியாகிய நோயைத் தீர்க்கும் மருந்து ஒன்று உள்ளது. அஃது உங்களிடமே உள்ளது. <உங்கள் அறிவினுள்ளே உள்ளது. அம் மருந்துதான் இறைவன். அவன் உளனா, இலனா என்று ஐயுற வேண்டுவதில்லை. அவனைப் புறத்தே தேடாமல், உமது அகத்தே நோக்கி உணர முற்படுங்கள்.
சொற்பொருள் :
ஓவாது - ஒழியாமல்
மன்னுபவம் - நிலைபெற்று நிற்கின்ற பிறவியாகிய நோயை
தீர்க்கும் மருந்து - தீர்க்கின்ற மருந்து ஒன்று
உணர்வாய் - உங்களது அறிவிற்கு அறிவாய்
உளது - உங்களுடன் இருக்கின்றது.
ஐயம் இலது - அதன் இருப்பில் நீங்கள் ஐயம் கொள்ள வேண்டா
உன்னும் - அதனை உள்முகமாக நோக்கி உணரமுற்படுங்கள்.
விளக்கம் :
பிறவியாகிய நோய் : செய்யுளில் பவம் என்ற சொல் பிறவியைக் குறிக்கும். ஆசிரியர் பிறவியை நோய் என்று வெளிப்படையாகக் கூறவில்லை. ஆயினும் இறைவனை மருந்து என்று வெளிப்படக் கூறியிருப்பதனால் பிறவியை நோயாகக் கூறுவதே ஆசிரியருக்குக் கருத்து என்பது புலனாகும். உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, <உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது.
துன்பத்தையே விளைவித்தல் :
நோய் துன்பத்தையே விளைவிப்பது. ஆனால் பிறவி இடையிடையே இன்பத்தையும் விளைவிக்கிறதே. அப்படியிருக்க, அதனை நோய் என்று சொல்வது எப்படிப் பொருந்தும் என்று கேட்கலாம். பிறவியில் இடையிடையே இன்பம் உளது போலத் தோன்றினாலும் உண்மையில் விளைவது பெருந்துன்பமே யாகும். இவ்வுண்மையை ஓர் அரிய உவமையால் விளக்கியருளினார் திருநாவுக்கரசர். ஆமையைக் கொன்று உண்பவர் நெருப்பு மூட்டி அடுப்பில் உலைநீரை ஏற்றி அதில் ஆமையை இடுகின்றனர். நீர் சிறிது சிறிதாகச் சூடேறுகிறது. அந்த ஆமை தனக்கு வரப்போகும் அழிவை அறியாது தனக்கு நல்ல நீர் கிடைத்தது என்று எண்ணிக் களித்து அதில் மூழ்கித் திளைக்கிறதாம்! அந்த இன்பம் அதற்குத் துன்பமாய் முடியப் போகிறதே. உலகில் ஐம்புல நுகர்ச்சியால் வரும் இன்பம் இத்தகையதே யாகும். எனவே உலகில் சிறிது இன்பம் உளதாயினும் அது துன்பமாகவே முடிதல் கண்கூடு. இதனால் பிறவி துன்பத்தையே விளைவிக்கும் என்பதும், அது பற்றியே அது நோய் எனப்பட்டது என்பதும் தெளிவாகும்.
நன்மருந்து :
பிறவி நோய் என்பது அறிவிலார்க்குச் சிறிதும் புலனாகாது. ஆனால் அறிவுடையார்க்கு அது நன்கு விளங்கித் தோன்றும். ஆதலால் அவர் அந்நோயைத் தீர்க்கும் மருந்தை நாடி நிற்பர். பிறவி நோய்க்கு நன்மருந்தாக இருப்பவன் இறைவன். மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீரா நோய் தீர்த்தருள வல்லான் என்றருளினார் திருநாவுக்கரசர். உலகத்து மருந்துகள் வேறு வேறு இடங்களிற் கிடைப்பன. ஆகவே அவற்றைப் பெறுதற்கு அலைதல் வேண்டும். சில சமயங்களில் அவை கிடைக்காமலும் போகலாம். ஆனால், இறைவனாகிய மருந்து அத்தகையதன்று. அது நோயுடையார்க்கு வேறாய் இல்லாது அவரோடு ஒன்றாய் இருப்பது என்பார் உணர்வாய் உளது என்றார். மேலும் உலகத்து மருந்துகள் உட<லுக்கு <<உரியவை. ஆதலால் அவை உண்ணுதற்கு உரியவாகின்றன. இறைவனாகிய மருந்தோ உயிருக்கு உரியது. ஆதலால் அஃது எண்ணுதற்கு உரியதாகின்றது. அதுபற்றியே உன்னும் (நினையுங்கள்) என்று அறிவுறுத்தினார் ஆசிரியர்.
ஐயம் இலது :
இறைவன் நம் அறிவில் உள்ளவனாயினும் அறிவிலே உள்ள மயக்கம் காரணமாக நாம் அவனை உணராமல் இருக்கிறோம். அவனது இருப்பைக் குறித்தே ஐயப்படுகிறோம். திருமூலர் பின்வருமாறு சொல்லுகிறார். சிவபெருமான் எல்லாம் வல்லவன்; கடல் நீரைக் கரையின்றியே அடங்கி நிற்கும்படி செய்தவன். இவ்வுலகை இயக்கி வரும் அவனை இல்லை எனக் கூறிப் பிணங்குதல் வேண்டா. அவன் ஏனைய கடவுளர்க்கெல்லாம் முதல்வனாய் நின்று எப்பொழுதும் உயிர்கட்கு நலம் புரிந்து வருகின்றான் என்கிறார்.
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின்றானே
என்பது திருமூலர் திருமொழி. இம்முறையிலேயே ஆசிரியர் உமாபதி சிவமும் கூறுகிறார். இறைவனது இருப்பில் நீங்கள் ஐயங் கொள்ள வேண்டா. அவன் பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தாக விளங்குகிறான். உங்கள் அறிவிலுள்ள மயக்கத்தை விடுத்து அவனை உணர முயலுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.
இரண்டாம் அதிகாரம்
உயிரவை நிலை
உயிரவை என்பது ஞானசம்பந்தர் பாசுரத்தில் இடம் பெற்ற சொல். தேவர் முதலாகச் சொல்லப்பட்ட உயிர்களின் தொகுதியைத் திவ மலி தரு சுரர் முதலியர் திகழ் தரு முயிரவை (1:21:1) என அவர் குறித்தருள்கின்றார். அச் சொல்லையே உமாபதி சிவம் மேற்கொண்டு உயிரவை நிலை என இவ்வதிகாரத்திற்குத் தலைப்பினைத் தந்தார் என்று கருதலாம். ஒரே இறைவன் என்பது போன்று ஒரே உயிர் என்று சைவ சித்தாந்தம் கூறுவதில்லை. ஒவ்வோர் உடம்பிலும் நின்று இன்ப துன்ப அனுபவங்களை அடையும் உயிர் வேறு வேறே யாகும். ஆதலால் உயிர் ஒன்றல்ல, பல என அறியலாம். உயிர்கள் பல என்பதற்கு, அவை எண்ணற்றவை என்பதே பொருளாகும். உயிர்களின் தொகையைக் கருதும்போது, பிறப்பெடுத்து உழல்கின்ற உயிர்களை மட்டுமல்லாது முன்பே முத்தி பெற்று விட்ட உயிர்களையும் கருத்திற் கொள்ள வேண்டும். முத்தி பெற்றுவிட்டாலும் அவ்வுயிர்கள் இல்லாமற் போய்விடவில்லை. அவை முத்தியின்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றன. எல்லா வுயிர்களும் என்றும் உள்ளவையே. சிவப்பிரகாசத்தில் உயிரிலக்கணத்தைக் கூற வந்த இவ்வாசிரியர் எண்ணரிதாய் என்று கூறியதோடு அமையாமல், அடுத்து நித்தமாய் என்றும் கூறியிருப்பதைக் காணலாம்.
எல்லா வுயிர்களையும் சேர்த்து எண்ணி அவற்றின் தொகையைக் கணக்கெடுத்துக் கூற முடியாது. உலகில் வந்து சென்ற நாட்களும் இனிமேல் வரப்போகும் நாட்களும் ஆகியவற்றின் தொகைபோல உயிர்களின் தொகையும் எண்ணிலடங்கா. எல்லாவுயிர்களும் ஆணவம் என்னும் மலம் (மாசு) உடையவை. அம் மலம் உயிர்களிடத்தில் வன்மை, இடைமை, மென்மை என்ற வகையில் பொருந்தியிருக்கும். இது பற்றி உயிர்கள் மூவகைப்படுவனவாகும். ஆணவம் வன்மையாய்ப் பற்றிய உயிர்களே மாயை (பிரகிருதி)யின் தொடர்பைப் பெறும். மாயை உடம்பாகவும் உலகமாகவும் பரிணமித்து அவ்வுயிர்களைப் பெரிதும் மயக்கும். அவ்வுயிர்கள் தமக்குத் துணையாக உள்ள இறைவனை அறியாது உலக வாழ்வில் மயங்கி நிற்கும். அவ்வுயிர்களே நாம். உயிர்களுக்கென்று எச்சுதந்திரமும் இல்லை. இறைவனது ஆணை செலுத்திய வழியே அவை செல்வனவாகும். அவைகள் தம் வயம் உடையன வல்ல என்பதற்குச் சான்று தேடி அலைய வேண்டா. அன்றாடம் காணும் கனவே அதற்குச் சான்று. ஏழை ஒருவன் கனவில் தன்னைப் பெருஞ் செல்வனாகக் கண்டு மகிழ்கிறான். செல்வன் ஒருவன் கனவில் தான் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் நிற்பதாகக் கண்டு பதறிப் போய் கண் விழிக்கிறான். இப்படிக் கனவில் அறிவு மயங்கி நிற்கிற உயிர்களுக்குத் தன்வயம் என்பது ஏது?
கனவு நிலையிலேதான் இப்படி என்றில்லை. நனவு நிலையிலேயும் உயிருக்குத் தன்வயம் இல்லை. விழிப்பு நிலையில் ஐம்பொறிகளின் வயப்பட்டு நிற்கின்றது. ஐம்பொறிகள் அறிவிக்கவே அறிகின்றது. அவற்றின் வழியிலே செல்லுகிற உயிரறிவு எப்படிச் சுதந்திர அறிவாகும்? சுதந்திர அறிவுடையது தானே சித்து என்ற பெயர் பெறுதற்குரியது. அத்தகைய அறிவில்லாத உயிரைப் போய் சித்து என்று அழைப்பது நல்ல வேடிக்கை! தன்வயமில்லாத உயிர் எந்தப் பொருளைச் சேர்ந்தாலும் அந்தப் பொருளின் தன்மையைப் பெறும். இஃது உயிர்க்குரிய முதன்மையான இயல்பாகும். இங்ஙனம் சார்ந்தவற்றின் தன்மையை அடைகிற பொருள்கள் உலகில் பல உண்டு. கண், படிகம், ஆகாயம் முதலியவை இப்படிப்பட்டவை. அவை இருளில் இருளாயும், ஒளி வந்த காலத்தில் ஒளி பெற்றும் விளங்குவதைக் காணலாம். அது போல உயிரும் இருளாகிய ஆணவத்தைச் சார்ந்து அறியாமையே வடிவாய் நிற்கும். ஒளியாகிய திருவருளைச் சாருங் காலத்தில் அதன் அறிவு முழுதும் விளங்கி நிற்கும்.
உயிருக்குச் சதசத்து என்ற பெயர் உண்டு. சத்து என்பது என்றும் மாறுதல் அடையாத பொருள். அசத்து என்பது தோன்றுதல், அழிதல் முதலிய மாறுதல்களுக்கு உட்படுவது. இறைவன் ஒருவனே சத்துப் பொருள். உலகம் அசத்துப் பொருள். உயிர் இவ்விரண்டையும் சார்ந்து நிற்கும் பொருள். கூகையின் கண்ணிற்குப் பகலிலும் சூரிய வொளி புலப்படாது. அதுபோல, அநாதியில் உயிர்கள் இறைவனது ஞானமாகிய திருவருள் ஒளியில் இருந்தும் அத்திருவருளை உணர மாட்டாமல் ஆணவமாகிய இருளில் அழுந்தி நின்றன. அன்று தொட்டு இன்று வரையில் அகலாத ஆணவ இருளே உயிர்கள் படுந்துன்பங்களுக் கெல்லாம் மூல காரணம். திருவருள் ஒளியைப் பெற்று மல இருளிலிருந்து நீங்கும் போதுதான் உயிர்கள் பிறவித் துன்பம் நீங்கிப் பேரின்பத்தை அடையும். இனி, இக் கருத்துக்களை விளக்கமாகக் காண்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக