98. வினை நீங்கும் முறைமை
ஏன்றவினை உடலோடு ஏகும்; இடையேறும் வினை
தோன்றில் அருளே சுடும்.
பொருள் : இப்பிறப்பில் நுகர்தற்கு என்று முகந்து கொண்டு வந்த பிராரத்த வினைகள் சீவன் முத்தர்க்கு இவ்வுடம்பு இருக்கும் வரையில் இருந்து, அவரால் பற்றின்றி நுகரப்பட்டு இவ்வுடம்பு நீங்குங் காலத்தில் முடிந்தொழியும். அவர் பிராரத்த வினையை நுகரும்போது புது வினையாகிய ஆகாமியம் தோன்றுமாயின் அதனைத் திருவருளே எரித்துவிடும்.
சொற்பொருள் :
ஏன்ற - (இப்பிறப்பில் நுகர்தற் குரியனவாக முகந்து கொண்டு வந்த)
வினை - பிராரத்த வினைகள்
உடலோடு ஏகும் - சீவன் முத்தர்க்கு இவ்வுடம்பு நீங்கும் காலத்து நுகரப்பட்டுக் கழியும்
இடை - அவர் அப் பிராரத்த வினையை நுகரும்போது இடையில்
ஏறும் வினை - புதிதாய் உண்டாகக் கூடிய ஆகாமிய வினை
தோன்றில் - தோன்றுமாயின் (அது வளர்ந்து சஞ்சிதமாய் முற்றாதவாறு)
அருளே சுடும் - திருவருளே அதனை விரைய அழிக்கும்.
விளக்கம் :
வினை தோன்றி வளரும் முறை :
இப்பிறப்பில் நாம் நல்லனவும், தீயனவும் ஆகிய செயல்களைச் செய்கின்றோம். அச்செயல்களைச் சில பயன்களை விரும்பிச் செய்கின்றோம். நன்மைகளை வருவித்தற்காகச் சில செயல்களை செய்கின்றோம். தீமைகளைப் போக்கிக் கொள்வதற்காகச் சில செயல்களைச் செய்கின்றோம். இப்படிச் செய்யும் செயல்கள் ஆகாமியம் எனப்படும். அவை உடனே அழிந்து விடுவதாக நாம் நினைக்கிறோம். அப்படியன்று. அவை நிகழும் பொழுது கண்ணுக்குப் புலப்படுகின்ற நிலையில் உள்ளன. பின், புலப்படாத நிலையை அடைந்து நிற்கின்றன. எனவே அவை அடியோடு இல்லாமல் அழிந்து போய் விடவில்லை. புலப்படுகின்ற தூல நிலையிலிருந்து நீங்கிப் புலப்படாத சூக்கும நிலையில் உள்ளன என்பதே உண்மையாகும். புலப்படாத அந்நிலையில் அவை சஞ்சிதம் எனப் பெயர் பெறுகின்றன. பலப்பல பிறப்புக்களில் செய்யப்பட்டுக் கிடக்கும் வினைகளின் தொகுப்பே சஞ்சிதம் ஆகும்.
சஞ்சிதம் முழுதும் ஒரே பிறப்பில் பயனாய் வருதல் இல்லை. அத்தொகுப்பிலிருந்து ஒரு சிறு பகுதியை முகந்து கொண்டு ஒரு பிறப்புத் தோன்றும். அவ்வாறு பழவினையினின்றும் முகந்து கொண்ட வினைகள் பிராரத்தம் என்ற பெயரைப் பெறும். அவை இன்பத் துன்பமாகிய பயனை விளைவிக்கும். இவ்வாறு வினைகள் ஆகாமியமாய்த் தோன்றி, சஞ்சிதமாய்க் கிடந்து, பிராரத்தமாய் வந்து பயன் கொடுக்கும்.
பிராரத்தம் இப்பிறப்பில் நன்மையாகவோ, தீமையாகவோ வந்து பொருந்தும் பொழுது, நாம் முன்பு செய்த செயலே இவ்வாறு பிராரத்தமாய் விளைகிறது என்று யாரும் எண்ணுவதில்லை. அதனை இறைவன் ஊட்டுகிறான் என்றும் எண்ணுவதில்லை. அந்த நேரத்தில் அதற்குக் காரணமாய் நிற்பவர் யாரோ அவர் மேல் விருப்போ வெறுப்போ கொள்ளுதல் மாந்தர் இயல்பு. அவ்விருப்பு வெறுப்புக்கள் சொல்லாய் வெளிப்படும். செயலாய் நிகழும். அவையே ஆகாமிய வினையாய்ப் பின் சஞ்சிதமாகும். இவ்வாறு வினைகள் ஏறிக் கொண்டே போகும். பிராரத்தத்தை விருப்பு வெறுப்போடு அனுபவிக்கின்ற நிலையில் ஆகாமியம் தோன்றும் என அறிந்தோம். இங்கே ஓர் ஐயம் எழலாம். ஞானிகளாகிய சீவன் முத்தர்க்கு உடம்பு <உள்ள வரையில் பிராரத்த வினை இருக்கும். அஃது இருக்கின்ற வரையில் அதனது தாக்கமும் இருக்கும். அங்ஙனம் பிராரத்த வினை தாக்கும்பொழுது அதனை அனுபவிக்கின்ற நிலையில் ஆகாமியம் தோன்றவே செய்யும். அவ்வாறாயின் ஞானிகள் வினைத் தொடர்பிலிருந்து எங்ஙனம் நீங்க முடியும் என்பதே அவ்ஐயம். அவர்கள் தமக்கு வரும் பிராரத்தத்தை எப்படி அனுபவிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால் இதற்கு விடை கிடைத்து விடும்.
பிராரத்த வினையின் தாக்கம் :
இங்கே ஒன்றைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். பிராரத்தம் நேரே உயிரைத் தாக்குவதில்லை. அஃது உடலில் நோய் முதலியவற்றைத் தோற்றுவித்து உடல் மூலமாகவே உயிரைத் தாக்கும். ஒருவர் ஒழுக்கமாக வாழ்க்கை நடத்துகிறார். ஒழுங்கான உணவுப் பழக்கம் வைத்திருக்கிறார். எந்தத் தீய பழக்கமும் அவரிடம் இல்லை. ஆயினும் அவருடலில் எப்படியோ நோய் வந்து பற்றுகிறது; அவரை வாட்டி வருத்துகிறது. முன்னை வினையாகிய பிராரத்தம் இப்பொழுது இவ்வாறு வந்து தாக்குகிறது என்று சொல்வதைத் தவிர வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? பட்டினத்தார் அவ்வாறுதான் நினைத்தார். அவர் அறிய எந்தத் தவறும் செய்யவில்லை. ஆயினும் அவர்மேல் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டது. அந்தத் துன்பத்தை அனுபவிப்பதற்குரிய எந்தச் செயலையும் இந்தப் பிறவியில் அவர் செய்ததாகத் தெரியவில்லை. ஆகவே முந்திய பிறவியிற் செய்த வினையே இதற்குக் காரணமாக இருக்கவேண்டும் என்று தெளிந்தார். இறைவனே, என் செயலென ஒன்றும் இல்லை. எல்லாம் உன் செயல் என்று உணர்ந்து கொண்டேன். இந்த உடம்பு எடுத்த பிற்பாடு நான் செய்த தீவினை ஒன்றும் இல்லையே. நான் முன் பிறவியிற் செய்த தீவினையே இப்படி வந்து மூண்டது போலும் என்று கூறினார்.
உயிர் ஊழாய்க் கழிதல் :
முன்னை வினையாகிய பிராரத்தம் இவ்வாறு உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொழுது உடம்பே நாம் என்று மயங்கியிருப்பவர்களே உடலு<க்கு வந்த துன்பத்தை உயிராகிய தமக்கு வந்ததாகக் கருதித் துவண்டு போவார்கள். பிராரத்தம் உடல் வழியாக இப்படி உயிரைத் தாக்குகிறது. இங்ஙனம், வினைகள் உயிரைத் தாக்கித் தம் பயனைக் கொடுத்து நீங்குதலை உயிர் ஊழாய்க் கழிதல் என்பார்கள்.
உடல் ஊழாய்க் கழிதல் :
சீவன் முத்தராகிய ஞானிகள் உடல் நாமல்ல எனத் தெளிந்து, உடலில் பற்றின்றி யிருப்பர். அதனால் பிராரத்தம் அவரது உடலை நலிகின்ற போது அவர் கவலையற்றிருப்பர். மேலும் அவர் பிராரத்தம் விளையும் போது நன்மையைக் கண்டு விரும்புதலும் இல்லை; துன்பத்தைக் கண்டு வெறுத்தலும் இல்லை. அப்படிப்பட்ட அவரைப் பிராரத்தம் எப்படித் தாக்கும்? இங்ஙனம் பிராரத்தம் உயிரைத் தாக்க மாட்டாது அவரது உடல் அளவில் பயனைக் கொடுத்து நீங்குதலை உடல் ஊழியாய்க் கழிதல் என்பார்கள்.
மூவகை வினையும் ஒழிதல் :
இவ்வாறு ஞானிகள் பிராரத்தவினை தோன்றினால் அதனை அவனது அருளாகவே கருதி அனுபவிப்பதல்லது இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் வாட்டமோ கொள்வதில்லை. இங்ஙனம் பற்றின்றி அனுபவிக்கவே, அஃது உடல் ஊழாய்க் கழியும். அஃது அவர்களது உணர்வைத் தாக்காது உடல் அளவாய் ஒழிதலால், ஆகாமியத்தை உண்டாக்காது. எப்போதாயினும் சோர்வு காரணமாக விருப்பு வெறுப்புத் தோன்றி அது காரணமாக ஆகாமியம் தலையெடுக்குமானால், அருளே அதனைச் சுட்டழித்து விடும். மூவகை வினையுள், சஞ்சிதமாகிய கிடைவினை முழுதும், முன்னே ஞானகுரு நிருவாண தீக்கை செய்து ஞானத்தை அளித்த காலத்தில் அவரது அருட் பார்வையால் எரிக்கப்பட்டு ஒழிந்தது. சஞ்சிதம் போக, பிராரத்தமும் ஆகாமியமும் உள்ளன. அவ்விரண்டின் நிலை என்ன என்பதை இச் செய்யுளில் கூறியுள்ளார் ஆசிரியர். ஏன்றவினை என்றது பிராரத்த வினையே. இடையேறு வினை என்றது ஆகாமியத்தை. பிராரத்தம் அனுபவத்தால் தீரும். அதனை விருப்பு வெறுப்பின்றி அனுபவிப்பதனால் ஆகாமியம் தோன்ற வழியில்லை. ஒருக்கால் தோன்றுமாயின் அருளே அதனைச் சுட்டழிக்கும் என்பது இச்செய்யுளில் கூறப்பட்டது. வினையினால் உண்டாவதே பிறப்பு. சீவன் முத்தர்க்கு மூவகை வினையும் மேற்கூறியவாறு தீர்தலின், அவர்கள் உடம்பு நீங்கிய பின் அடைவது வீடு பேறேயன்றிப் பிறவி யன்று என்பது இதனால் விளங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக