வியாழன், 2 நவம்பர், 2017

97. உறுந்தொழிலும், வறுந்தொழிலும்

97. உறுந்தொழிலும், வறுந்தொழிலும்
உறுந்தொழிற்குத் தக்க பயன் உலகம்; தத்தம்
வறுந்தொழிற்கு வாய்மை பயன்.

பொருள் : உலகர் எச்செயலையும் பற்றோடு செய்வர். பற்றோடு கூடிய அச்செயலுக்குப் பயன் உலகமாகும். அணைந்தோர் அருள் வழியில் நின்று, எச்செயலையும் பற்றின்றிச் செய்வர். அவர் செயலு<க்குப் பயன்மெய்ப் பொருளாகிய சிவமேயாகும்.
சொற்பொருள் :
உறும் தொழிற்கு - உலகர் முனைப்போடு பொருந்திப் பற்றோடு செய்யும் தொழில்களுக்கு
தக்க பயன் - ஏற்ற பயன்
உலகம் - இன்ப துன்பமாகிய உலக நுகர்ச்சியாகும்.
தம் தம் வறும் தொழிற்கு - அணைந்தோர் அங்ஙனம் முனைந்து செய்யாது, திருவருள் செ<லுத்திய வழியிலே சென்று, பற்றில்லாமல் செய்யும் தொழில்களுக்கு
பயன் - ஏற்ற பயன்
வாய்மை - மெய்ப் பொருளாகிய சிவமேயாகும்.

விளக்கம் :
உறுந்தொழில், வறுந்தொழில் - பொருள் :
தொழிலை உறுந்தொழில் எனவும், வறுந்தொழில் எனவும் இரண்டாக வகுக்கின்றார் ஆசிரியர். உறுந்தொழில் என்பது பற்றோடு பொருந்திச் செய்யும் செயல். வறுந்தொழில் என்பது பற்று இல்லாது செய்யும் தொழில். வறுமை என்பது இன்மை எனப் பொருள்படும். பொதுவாகப் பொருளின்மையே வறுமை எனப்படும். இங்கே பற்றின்மையே வறுமை எனப்பட்டது. எனவே பற்றின்மையோடு செய்வது வறுந்தொழிலாயிற்று. உலகோர் செய்வதெல்லாம் உறுந்தொழில். ஞானிகள் செய்வதெல்லாம் வறுந்தொழில்.
வறுந்தொழிலுக்கு எடுத்துக்காட்டு :
வறுந்தொழில் என்பதனை விளக்கும் நிகழ்ச்சி ஒன்றைக் குறிப்பிடுவோம். வலைத்தொழில் புரியும் பரத குலத்தில் வந்தவர் அதிபத்தர் என்ற அடியார். அவர் மெய்யுணர்வு பெற்றுச் சிவபத்தியில் மேலோங்கி நின்றார். மீன் பிடித்தலின் ஊடாகவே அவர் சிவத் தொண்டுக்கும் வழிவகை கண்டு அதனை நாடோறும் செய்து வந்தார். ஒவ்வொரு நாளும் தம் ஏவலர்கள் கடலிற் போட்டு இழுக்கும் வலையில் அகப்படும் மீன்களில் முதன்மையானதொன்றை இது நட்டம் ஆடிய நம்பருக்கு என்று கூறி விடாத அன்புடன் அதனை மீளவும் கடலில் விட்டுவிடும் நியமம் பூண்டிருந்தார்.
திருவருட் செயலால் ஒரு கால கட்டத்தில் பல நாட்கள் தொடர்ந்து ஒரே ஒரு மீன் மட்டும் அவர் வலையிற் படுவதாயிற்று. அதனையும் சிவனுக்கென்றே கடலில் மீளவும் விட்டு வந்தார். இதனால் அவரது வருமானம் குறைந்தது. உணவுக்கும் வழியில்லாத நிலை வந்துற்றது. அவரும் அவரது சுற்றத்தாரும் பசியால் வாடினர். இங்ஙனம் தளர்ந்து வாடும் நிலை எய்திய போதும் அவர் தமது தொண்டு நிலையில் சிறிதும் தளரவில்லை. ஒருநாள் பொன் மீன் ஒன்று அவர் வலையில் அகப்படுவதாயிற்று. அவ்வற்புத மீன் அவரிடத்தில் எத்தகைய பற்றுதலையும் ஏற்படுத்தவில்லை. அதனைக் கொண்டு தமது வாழ்வை வளப்படுத்திக் கொள்ளலாம் என்ற ஆசை சிறிதும் எழவில்லை. இந்த அரிய மீன் சிவனுக்கே உரியது எனக் கொண்டு சென்று சேர்க சிவன் கழற்கே என்று கூறி அதனை அலை கடலில் விட்டார். இவ்விடத்தில் உலகத்தாரின் நிலையை எண்ணிப் பாருங்கள். பெரும்பாலான மக்கள் மதிப்பது பொருள் ஒன்றைத்தான். பொருள் இருந்தால் பல காலத்திற்குக் கவலையின்றி வாழலாம் என்ற எண்ணத்தினால் பொருளை மேலும் மேலும் சேர்க்கிறார்கள். நன்றாக வாழ்கிறவர்கள் என்று பொருள் படைத்தவர்களைச் சொல்கிறார்கள். பொருள் இல்லாதவர்களை வாழத் தெரியாதவர்கள் என்கிறார்கள். பொருள் இருந்தால் போதும். எல்லா வகையான போகங்களையும் பெறலாம். பதவியும் மதிப்பும் பாராட்டும் அவர்களைத் தேடிவரும். இக்காலத்தில் மட்டும்தான் இப்படி என்று எண்ண வேண்டாம். இந்நிலை எல்லாக் காலத்திலும் உண்டு. அகிலலோகமும் பொருள் முதற்றாம் என்று சேக்கிழாரும் சொல்லுகிறார்.
பற்றுகிற பற்றுக்கள் பலவற்றுள்ளும் தலைப்பற்றாகப் பொருட்பற்றையே பற்றும் இவ்வுலகில் அதனைத் தூக்கியெறிந்தவர் அதிபத்தர் என்பதை மேற்கூறிய வரலாறு புலப்படுத்தும். உலகமெலாம் விலை போகக் கூடிய பொன் மீன் கிடைக்கவும் சிறிதும் பற்றுதல் இல்லாமல் அதனைப் போகவிடுத்த அவர் செயல் வறுந்தொழில் என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாய் அமைகிறது. வறுந்தொழில் செய்ய மாட்டாது உறுந்தொழிலே செய்வது உலகர்நிலை. அவர்க்கு உலகமே பயனாகும். அஃதாவது அவர் உலகில் மீளமீளப் பிறந்து இன்ப துன்பங்களை மாறிமாறி நுகர்வர் என்பது கருத்து. அணைந்தோர் ஆகிய அடியவர்கள் புறத்தே உலகர் போலவே வாழ்ந்தவராயினும் பிற தொழில்களைச் செய்து ஒழுகினாராயினும், அவர்க்குச் சிவமே நுகர்ச்சிப் பொருளாகும் என்பது கூறப்பட்டது.
குறிப்பு : இச் செய்யுளில் வாய்மை என்றது மெய்ப் பொருளாகிய சிவத்தைக் குறிக்கும்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...