96. உள்ளும் புறமும் சிவமே காணுதல்
உள்ளும் புறம்பும் ஒரு தன்மைக் காட்சியருக்கு
எள்ளும் திறம் ஏதும் இல்.
பொருள் : சிவஞானிகள் தம் அகத்தே சிவத்தைக் கண்டு நின்றாற்போலப் புறத்தேயும் எப்பொருளிலும் சிவத்தையே காண்பார்கள். இவ்வாறு அகம் புறம் என்னும் வேறுபாடின்றி ஒரே தன்மையாய்க் காணும் அவர்க்கு இகழ்தற்கு உரியதாக எப்பொருளும் இல்லை.
சொற்பொருள் :
உள்ளும் புறம்பும் - தம் அகத்தேயும், புறத்தே எப்பொருளிலேயும்
ஒரு தன்மைக் காட்சியருக்கு - சிவத்தையே காணும் ஒரு தன்மையாய உணர்வை உடைய சீவன் முத்தர்க்கு
எள்ளும் திறம் - இகழ்தற்கு உரியதான செயல்.
ஏதும் இல் - ஒன்றேனும் இல்லை. அஃதாவது, புறத்தே உள்ள பொருளிலும் அவர் சிவத்தையே காணுதலால் அப்புறப் பொருள் பற்றி வரக் கூடியதான காமம் வெகுளி மயக்கம் முதலிய குற்றங்கள் இல்லையாயின.
விளக்கம் :
தாயுமானவர் நிலை :
தாயுமானவர் வழிபாட்டிற்காகப் பூக்கொய்து வர நந்தவனம் சென்றார். அங்கே வெண்மையான நந்தியா வட்டை மலர்கள் மலர்ந்திருந்தன. அவற்றைப் பறிக்கக் கையைக் கொண்டு போனார். பார்க்கின்ற பொருள்களி லெல்லாம் இறைவனைக் காணுகிற பக்குவ நிலையை அடைந்து விட்டவர் தாயுமானவர். அதனால், பறிக்கப் போன மலர் ஊடும் அவன் இருப்பதைக் கண்டார். கண்டு, பரவச நிலையை அடைந்தார். அவனைக் கும்பிட எண்ணித் தமது இருகைகளையும் குவிக்கப் போனார். ஆனா<லும் அவ்வாறு செய்யவில்லையாம். ஏனெனில், அப் பனிமலர் இடையே இருந்த இறைவனை அவர்தம் அகமலரிலும் கண்டார். பனிமலரில் இருக்கும் இறைவனை வழிபடக் கைகுவிக்கும் போது அந்தக் கும்பிடு, குவித்த கைகளுக்குப் பின்னே அகமலரில் இருக்கும் இறைவனுக்குச் செய்யும் கும்பிடு ஆகாதே. உள்ளும் புறமும் உள்ள ஈசனை ஒரே நேரத்தில் கும்பிட்டால் அல்லவா அது முழுக்கும்பிடு ஆகும். அக மலரில் உள்ள ஈசனைக் கும்பிடாமல் புறமலரில் உள்ள ஈசனை மட்டும் கும்பிட்டால் அஃது அரைக்கும் பிடுதானே! இதனை எண்ணி நாணமுற்றார். பெருமானை எப்படி வழிபடுவது என்று திகைத்து நின்றார்.
பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி; அப்
பனிமலர் எடுக்க மனமும்
நண்ணேன்; அலாமல் இருகைதான் குவிக்க எனில்
நாணும் என் உளம் நிற்றி நீ;
நான் கும்பிடும் போது அரைக் கும்பிடு ஆதலால்,
நான் பூசை செய்தல் முறையோ?
எனத் தமக்கு ஏற்பட்ட அனுபவ நிலையைத் தாயுமானவர் பாடியுள்ளார். இதனால், பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரம்பொருள் ஆகிய சிவத்தை உள்ளும் புறமும் கண்டு இன்புற்றவர் அவர் என்பது விளங்கும்.
ஞான சம்பந்தர் நிலை :
ஞானசம்பந்தர் பூம்பாவையை எழுப்பிய அருள் வரலாறு நாமறிந்தது. என்பு நிறைந்த குடத்திலிருந்து அவள் எழுத வொண்ணாத எழிலோடு திருமகளைப் போல எழுந்து நின்றாள். அக்காட்சியினை ஞானசம்பந்தர் எப்படிக் கண்டிருப்பார்? சேக்கிழாரைத் தவிர வேறு யாரால் அதனைச் சொல்ல முடியும்? அவர் ஞான சம்பந்தரைப் பிரம தேவனோடு ஒப்பிட்டு, அவரது நிலை அவனால் எட்டமுடியாத ஞானப் பெருநிலை என்பதை எடுத்துக் காட்டுகிறார். பிரமதேவன் ஈடில்லா எழிலுடன் ஒரு பெண்ணைப் படைக்க எண்ணி அவ்வாறே திலோத்தமையைக் படைத்தான். அவள் அழகைப் பார்த்து அவனுக்கே ஆசை உண்டாகி விட்டது. அவனோ பல்லாயிரம் ஆண்டுகள் சென்ற படுகிழவன்; மேலும் வேதம் ஓதுபவன். அவனுக்கு வேதா என்ற பெயருண்டு. வேதம் ஓதியும் என்ன? தான் படைத்தவளைத் தனது மகளாகப் பார்க்கும் ஞானம் அவனுக்கு இல்லையே. அவன் காமத்தில் மூழ்கி அவளைத் தொடர, அவள் அஞ்சி ஓடி மறைந்தாள். அவளைத் தனது நான்கு முகங்களாலும் நான்கு திசையிலும் தேடினானாம்.
ஞானசம்பந்தப் பெருமான் சிவபெருமான் அருளால் பூம்பாவையைப் படைத்தார். அவருக்கு அப்போது வயது பதினாறு. உலகியலில் இந்த வயதுடைய எவருக்கும் இச்சை உண்டாவது இயல்பு. ஆனால், ஞானசம்பந்தர் அதனைக் கடந்த பெருமான். அவர் பதினாறு வயது நிரம்பியவராயினும் அந்தப் பதினாறு ஆண்டுகளும் வினைவயத்தால் உலக இச்சைக்கு ஆட்பட்டு அவமே கழிந்த ஆண்டுகள் அல்ல. அவை புண்ணியப் பதினாறு ஆண்டுகள். அதனால் அவருள்ளத்தில் பூம்பாவையின் உருவம் எந்த ஆசையையும் ஏற்படுத்தவில்லை. பிரமன் தன் படைப்பை எப்படிக் கண்டான் என்பதை முதலில் காட்டிய சேக்கிழார் அடுத்து ஞான சம்பந்தர் தான் படைத்த பூம்பாவையை எப்படிக் கண்டார் என்பதைச் சொல்லுகிறார்.
எண்ணில் ஆண்டு எய்தும் வேதா
படைத்து அவள் எழிலின் வண்ணம்
நண்ணு நான் முகத்தால் கண்டான்
அவளினும் நல்லாள் தன்பால்
புண்ணியப் பதினாறாண்டு பேர்பெறும்
புகலி வேந்தர்
கண்ணுதல் கருணை வெள்ளம்
ஆயிர முகத்தாற் கண்டார்.
அவர் பூம்பாவையிடம் மாயா காரியமாகிய உருவ அழகைக் காணவில்லை. எந்த வேட்கைக்கும் அவர் ஆட்படவில்லை. காமனை எரித்த கண்ணுதலுக்கு ஆட்பட்டவர் அல்லவா, அவர்? ஞானத்தின் முன் வேட்கை எங்ஙனம் தோன்றும்? அவர் பூம்பாவையின் வடிவத்தில் இறைவனது கருணை வெள்ளத்தையே கண்டாராம்.
பிரமன் தனது நான்கு முகங்களால் கண்டான். சம்பந்தரோ ஒரு முகம் உடையவர்தாம் என்றாலு<ம் ஆயிரம் முகம் கொண்டு கண்டாராம்! பிரமன் கண்டது எழிலின் வண்ணம். சம்பந்தர் கண்டதோ கருணை வெள்ளம்! பிரமதேவனின் இழிந்த நிலை எங்கே! ஆளுடைய பிள்ளையாரின் ஞானநிலை எங்கே! நமது அறிவு சிற்றறிவு ஆகும். வரம்புடைய இவ்வறிவினால் வரம்புடைய உலகப் பொருள்களையே அறிய இயலும். எங்கும் நீக்கமற நிறைந்த, வரம்பில்லாத சிவ பரம்பொருளை உணர்தற்குச் சிற்றறிவு உதவாது. வரம்பில்லாத ஞானத்தாலேயே வரம்பில்லாத அப்பெரும்பொருளை அறிய முடியும். ஞானசம்பந்தப் பெருமான் சிற்றறிவு ஒழிந்து, வரம்பில்லாத ஞானத்தை - பேருணர்வைப் பெற்றவர். அப்பேருணர்வால் அவர் பார்க்கின்ற பொருளிலெல்லாம் சிவ முதற் பொருளையே கண்டார். அது பற்றியே சேக்கிழார் ஆயிரம் முகத்தாற் கண்டார் என்று வியந்தும் நயந்தும் கூறினார். மெய்யுணர்ந்தார் உள்ளும் புறம்பும் ஒரு தன்மைக் காட்சியராய் விளங்குவர் என்பதை ஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் வாழ்வில் வைத்து அனுபவமாகக் காணலாம்.
எள்ளும் திறம் இல்லை :
மலம் நீங்காத நமக்கு நிலையற்ற பொய்ப் பொருளாகிய உலகப் பொருள்களே புலப்படும்; அப் பொருள்களின் ஊடே கலந்திருக்கும் மெய்ப் பொருளாகிய சிவம் தோன்றுவதில்லை. பொய்ப் பொருளைக் காணாது அதிற் கலந்திருக்கும் மெய்ப் பொருளாகிய இறைவனைக் காணுதல் வேண்டும். அதுதான் அறிவு என்று தெளிவுறுத்துகிறார் திருவள்ளுவர்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
அம்முறையில் சீவன் முத்தர் மாயா காரியமாகிய பொய்ப் பொருளைப் பற்றாது, அவற்றில் கலந்திருக்கும் சிவம் ஒன்றையே கண்டு நிற்பர். அவர்க்கு உலகமே சிவமயமாய்த் தோன்றும். ஆதலால் எப்பொருளிடத்தும் அவர்க்கு விருப்பேனும் வெறுப்பேனும் நிகழ்தல் இல்லை. அவர்கள் எவரையும் வெறுக்க மாட்டார்கள். பிறர் தமக்குத் தீங்கு செய்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். விரல் தவறுதலாகக் கண்ணைக் குத்தி விடுகிறது. அதற்காக விரலை நறுக்கி எறிகிறோமா? சில சமயம் பல் நாக்கைக் கடித்து விடுகிறது. அதற்காகப் பல்லைத் தட்டி எறிகிறோமா? நாம் அப்படிச் செய்வதில்லை. கண்ணும் விரலும், நாவும் பல்லும் ஒரே உடலைச் சேர்ந்தவை. அது போல ஞானிகளும் எல்லோரையும் தம்மவராக நினைப்பவர்; எல்லோர் மீதும் கருணை காட்டுவர். மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும் செல்வக் கடவுள் தொண்டர் அவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக