94. ஆமையும் ஞானியும்
புலன் அடக்கித் தம்முதற்கண் புக்குறுவர் போதார்
தலன் நடக்கும் ஆமை தக.
பொருள் : ஆமை நிலத்தின் மேல் இயங்கும் பொழுது தனக்குத் துன்பந் தருவதொன்று எதிரில் வருவதாக உணர்ந்தால் அப்பொழுதே தனது ஐந்து உறுப்புக்களையும் தனக்குக் காவலாய் உள்ள ஓட்டினுள்ளே அடக்கிக் கொண்டு அசைவற்றுக் கிடக்கும். அதுபோல, அணைந்தோராகிய ஞானிகள் உலக ஆசை தம்மைத் தாக்குவதாக உணர்ந்தால், உலகை நோக்கிச் செல்கின்ற மனத்தை அவ்வாறு செல்லாமல் அடக்கித் தமக்கு முதலாய் உள்ள சிவனது வியாபகத்துள்ளே ஒடுங்கி உலகை நினையாதிருப்பர்.
சொற்பொருள் :
தலன் - நிலத்தில்
நடக்கும் ஆமை - இயங்கும் போது தனக்குத் தீங்குவரின் தன் உறுப்புக்களைச் சுருக்கி ஓட்டினுள் அடக்கிக் கிடக்கும் ஆமை
தக - போல,
புலன் அடக்கி - அணைந்தோர் ஐம்புல உணர்வை அடக்கி
தம் முதற் கண் - தம் அறிவிற்கு முதலாய் உள்ள சிவத்தினது வியாபகத்தினுள்ளே
புக்கு உறுவர் - ஒடுங்கி நிற்பார்
போதார் - அந்நிலையினின்றும் நீங்கிப் புறம் வாரார்; அஃதாவது, உலகை நினையார்.
விளக்கம் :
அவா ஞானியர்க்கு ஆகா :
வீட்டு நிலையில் உள்ள ஞானிகள் எப்பொழுதும் பரமே பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார். அவர்களிடத்திலும் ஆசை எழுமோ? என்று கேட்கலாம். உலகில் வாழும் போதே சிவத்தை அடைந்து அதனோடு ஒன்றி நின்ற பின்னும் பண்டைய பழக்கத்தால் உயிர்ச் சார்பு, பொருட்சார்பு ஆகியவற்றின் மேல் ஆசை நிகழ்தல் கூடும். திருவள்ளுவர் மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தை வைத்ததோடு நில்லாமல், அதன்பின் அவா அறுத்தலை வைத்துக் கூறியுள்ளமை கருதத் தக்கது. அவா என்பது, உள்ளது போதும் என்று அமையாமல், இது வேண்டும், அது வேண்டும், இன்னும் வேண்டும், இதற்கு மேல் வேண்டும் என மேலும் மே<லு<ம் பெற விரும்பும் வேட்கையாகும். திருவள்ளுவர் அதனை ஆரா இயற்கை அவா என்பார். ஆராமையாவது நிரம்பாமை; எவ்வளவு பெற்றாலும் அதனால் மனநிறைவு ஏற்படாமை. பிறப்பு நிலையில் உள்ள நம்மவரிடத்தில் இத்தகைய அவா இருத்தல் இயல்பு. ஆனால், ஞானத்தால் வீடுற்ற ஞானிகளிடத்தில் உலக ஆசை எழுமாயின் அவ்அவா அவரை மீட்டும் பிறவியிற் செலுத்தி விடும்.
ஆசையால் விளைந்த நிலை :
ஆசைக்கு இடங்கொடுத்தால் அஃது எதிலே போய் முடியும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சியினால் அறியலாம். துறவி ஒருவர் தன்னந்தனியாக நடுக்காட்டில் சிறு குடிசை போட்டுக் கொண்டு வாழ்ந்தார். அவருக்கு ஒரு குறையும் இல்லை. ஒரு தேவையும் இல்லை. ஆனால், ஒரு சிறு தொல்லை அவ்வப்போது ஏற்பட்டது. அத்தொல்லை எலியினால் வந்தது. அது அடிக்கடி அவரது கோவணத்தைக் கடித்துக் கிழித்தது. எலியின் தொல்லையைப் போக்க என்ன வழி? பூனை இருந்தால் எலி வராது என்று எண்ணிப் பூனை வளர்த்தார். பூனைக்குப் பால் வேண்டுமே. அதற்காகக் கறவை மாடு ஒன்று வாங்கிக் கனிவோடு வளர்த்தார். அதற்கு வைக்கோல் வேண்டுமே. அதற்காக ஒரு நிலத்தை வாங்கித் தானே உழுதார். இத்தனை வேலைகளையும் தனியொருவராக இருந்து எப்படிப் பார்ப்பது? துணையொருவர் வேண்டும் என்று ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். குழந்தைகளைப் பெற்றார். ஆசைக்கு இடங்கொடுத்த இந்தத் துறவியின் நிலை இப்படியாயிற்று. ஆதலால் ஆசை எழுந்த அப்பொழுதே அதனைக் களைந்தெறிவர் ஞானியர்.
சிவஞானத்துள் ஒடுங்குதல் :
ஆசையைக் களைவது எப்படி? நிலையாதவற்றின் மேல் அவாக் கொண்டு ஓடி இடைவிடாது அவற்றைப் பற்றி நிற்பது மனமேயாகும். அதனை அவ்வாறு முடிவின்றி ஓடவிட்டால், உலக ஆசை முடிவின்றித் தோன்றிக் கொண்டேயிருக்கும். எனவே, மன ஓட்டத்தை அடக்க வேண்டும். மனத்தை அடக்குவதற்கு உரிய வழி ஒன்றே ஒன்றுதான். ஒரு பொழுதும் உயிரை விட்டு நீங்கிச் சேய்மையில் இல்லாமல் எப்பொழுதும் உடனாக இருக்கின்ற சிவனை இடைவிடாது உணர்ந்து நிற்பின், ஐம்புலன்களை நாடி ஓடுகின்ற மனம் மெல்ல மெல்ல அதனை விடுத்து அவனிடத்தே சென்று ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கிய நிலை வாய்க்குமானால் உலக வாசனை தாக்காதொழியும். ஞானிகள் இம்முறையில் மனத்தை அடக்கிச் சிவ ஞானத்துள்ளே ஒடுங்கி உலகை நினையாதிருப்பர். இக் கருத்தையே புலனடக்கித் தம் முதற்கண் புக்குறுவர் எனக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
தலன் நடக்கும் ஆமையை உவமை காட்டி ஞானியர் நிலையை விளக்குகிறார். ஆமை எப்படித் தனக்குத் தீங்கு வருவதை உணர்ந்தவுடன் தன் உறுப்புக்களை உள்ளே இழுத்துக் கொள்ளுமோ, அப்படியே ஞானிகளும் தம் உணர்வைத் தாக்குகின்ற விடய சுகங்களைக் கண்டதும் புலனடக்கித் திருவருளுக்குள்ளே ஒடுங்கியிருப்பர் என்கிறார்.
ஒரு குறிப்பு :
மனம் மொழி மெய்களின் செயல் அடங்கி, ஐம்பொறிகளின் நுகர்ச்சியும் ஒடுங்கினால் அதனை ஒடுக்கம் என்பர். நமது திருமடங்களில் ஒடுக்கம் என்ற ஓர் இடம் உண்டு. ஆசாரிய மூர்த்திகள் இருக்கும் இடம் அது. இந்திரியங்கள் யாவும் ஒடுங்கித் தவம் செய்கின்ற இடம் ஆதலின் அதற்கு ஒடுக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. அங்கே உடனிருந்து பணிவிடை புரியும் அணுக்கத் தொண்டருக்கு ஒடுக்கத் தம்பிரான் என்பது பெயர். புலன்கள் ஒடுங்கியிருக்கும் தம்பிரான் என்பது அதற்குப் பொருளாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக