வியாழன், 2 நவம்பர், 2017

95. சிவனைப் போல எங்குமாய் நிற்றல்

95. சிவனைப் போல எங்குமாய் நிற்றல்
அவனை அகன்று எங்கு இன்றாம்; ஆங்கு அவனா எங்கும்
இவனை ஒழிந்து உண்டாதல் இல்.

பொருள் : எந்த இடமும் சிவனை நீங்கியில்லை. அவ்வாறே, சிவமாம் தன்மை பெற்றுச் சிவனாகவே உள்ள இந்தச் சீவன் முத்தனை நீங்கி எவ்விடமும் இல்லையாம்.
சொற்பொருள் :
அவனை - சிவனை
அகன்று - நீங்கி
எங்கு - எவ்விடமும்
இன்றாம் - இல்லை
ஆங்கு - அவ்வாறே
அவனா இவனை - சிவமாந்தன்மை பெற்றுச் சிவனாக உள்ள இந்தச் சீவன் முத்தனை
ஒழிந்து - நீங்கி
எங்கும் - எவ்விடமும்
உண்டாதல் இல் - உளதாதல் இல்லை.

விளக்கம் :
சிவனை அணைந்தோர் உடம்பில் நின்றாராயினும் உடம்பு அளவில் நில்லார்; சிவனைப் போலவே அவரும் வியாபகம் உடையவராய், எங்குமாய் நிற்பர் என்பது கருத்து. அவனை அகன்று எங்கும் இன்றாம்; ஆங்கு (அது போல) அவனா இவனை ஒழிந்து எங்கும் உண்டாதல் இல் எனச் சொற்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
வியாபகப் பொருள் :
ஆன்மாவின் அளவு பற்றி இங்கே தெரிந்து கொள்ளுதல் வேண்டும். அஃது உடம்பினுள்ளே இருக்கின்ற சிறிய பொருள் என்றே பொதுவாக நினைக்கின்றனர். அந்த நினைப்புத் தவறு. உடம்பு என்ற இடத்திற்குள் மட்டும் இருக்குமானால் ஆன்மா இடம் என்ற எல்லைக்கு உட்பட்டதாகி விடுகிறது. இட எல்லைக்கு உட்பட்ட பொருள் எதுவாயினும் அதற்குத் தோற்றமுண்டு; அழிவுண்டு. நாம் பார்க்கின்ற சிறியனவும் பெரியனவும் ஆகிய பொருள்யாவும் இட எல்லைக்கு உட்பட்டவை. ஆகவே அவை தோன்றி அழிவனவேயாகும். இந்த உலகத்திற்கும் இது பொருந்தும். இதுவும் இடஎல்லைக்கு உட்பட்டதுதானே. அம்முறையில் ஆன்மாவும் உடம்பாகிய இடத்திற்கு உட்பட்டது என்றால் அதற்கும் அழிவு உண்டு என்று ஆகும். ஆன்மா அழியும் என்று கொண்டால், மறு பிறப்பு உண்டு என்பதும், வினை அதனைத் தொடர்ந்து சென்று பற்றும் என்பதும் ஏலாதன வாகிவிடும். ஆகவே ஆன்மாவுக்கு அழிவில்லை என்றே கொள்ள வேண்டும். அவ்வாறு கொண்டால் ஆன்மா இட எல்லைக்கு உட்படாது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே ஆன்மா எல்லையற்ற பொருள் என்பது விளங்கும். எல்லையற்ற பொருள் எங்கும் நிறைந்த பொருளாகவும் இருக்கும். அதனை வியாபகப் பொருள் என்பர். எனவே, ஆன்மா வியாபகப் பொருள் என்பது பெறப்படும்.
அடங்கிய வியாபகம் :
கடவுட் பொருளும் எல்லையற்றது. ஆன்மாவும் எல்லையற்றது என்றால் இரண்டிற்கும் வேறுபாடு இல்லையோ என்று கேட்கலாம். இரண்டும் வியாபகப் பொருளே என்றாலும் கடவுட் பொருள் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடக்கி நிற்கின்ற பெரு வியாபகம் உடையது. ஆன்மா அதற்குள் அடங்கி நிற்கின்ற வியாபகம் உடையது. அடங்கி நிற்பதை வியாப்பியம் என்று குறிப்பிடுவர். எனவே ஆன்மா வியாபகப் பொருளாயிருப்பினும் கடவுளுடைய வியாபகத்தை நோக்க அது வியாப்பியமே என அறிதல் வேண்டும்.
மல மறைப்பு :
இப்படிப்பட்ட பெரும் பொருளாகிய ஆன்மாவை ஆணவ மலம் முற்றாக மறைத்து நிற்கிறது. இதனால் ஆணவ மலமும் ஆன்மாவைப் போல வியாபகப் பொருளே என்பது விளங்கும். வியாபகப் பொருள்தானே மற்றொரு வியாபகப் பொருளை மறைக்க முடியும். முதல் நிலையாகிய கேவல நிலையில் ஆன்மா இவ்வாறு மலத்தினால் மூடப்பட்டுத் தான் ஒரு பொருள் உண்டு என்பதையும் அறியாமல் கிடக்கிறது. இந்நிலை குளத்தில் பாசி படர்ந்து நீர்ப் பரப்புச் சிறிதும் தோன்றாதவாறு அதனை மூடியிருப்பது போன்றதாகும். நீர்ப் பரப்புப் போன்றது ஆன்ம வியாபகம். அதனை மறைத்துள்ள பாசி போன்றது ஆணவமலம்.
உடம்பு அளவில் விளங்கி நிற்றல் :
இந்த நிலையில் உள்ள ஆன்மாவுக்கு உடம்பு முதலியவற்றைத் தருகிறான் இறைவன். இது சகல நிலை. இறைவனால் தரப்பெற்ற உடம்பும், கருவிகளும் ஆணவ மலத்தின் மறைப்பைச் சிறிது நீக்கி ஆன்மாவின் அறிவைச் சிறிது விளக்குகின்றன. இப்பொழுது ஆன்மாவின் இருப்புச் சற்றே புலப்படுகிறது. பாசி மூடிய குளத்தில் ஒரு கல்லை எறிந்தால் கல்பட்ட இடத்தில் பாசி சிறிது விலக, நீரின் இருப்புச் சிறிது புலப்படுவதைப் போன்றது இது. ஆன்மாவுக்கு உடம்பு கிடைத்திருப்பது நீர்ப்பரப்பின் மீது கல்லெறிபடுவதைப் போன்றது. கல்லெறி பாசி முழுவதையும் நீக்கி விடவில்லை. சிறிது இடத்தில் மட்டுமே அதனை நீக்குகிறது. அதுபோல ஆன்மா <உடம்போடு பொருந்திய இந்த இடத்தில் மட்டும் மலமறைப்பு நீங்கி அறிவு புலனாகிறது. ஆன்மா வியாபகமானது. எங்கும் நிறைந்திருப்பது என்று பார்த்தோம். உடம்புக்கு அப்பாலும் ஆன்மா இருப்பினும் அங்கெல்லாம் மலம் மறைத்துக் கொண்டிருப்பதால் அதன் இருப்பு மற்ற இடங்களில் புலனாவதில்லை. இதனால், உடம்பு அளவிலேதான் ஆன்மா விளங்கி நிற்கும் என அறியலாம். உடம்பு அளவில் மட்டும் அறிவு நிகழ்வதால் ஆன்மா தன்னை உடம்பு அளவில் உள்ள சிறிய பொருளாக நினைக்கிறது. ஆனால், உண்மையில் அது வியாபகப் பொருளாகும். ஆன்மா என்ற சொல்லுக்கே வியாபகம் என்பது தான் பொருள்.
வியாபகத் தன்மையே இயற்கை நிலை :
குளத்தினுடைய விரிந்த நீர்ப்பரப்பு பாசியால் மூடப் பெற்றுக் கல் விழுந்த இடத்தில் சிறிய அளவில் விளங்கித் தோன்றுவது செயற்கை நிலையாகும். பாசி முழுதும் விலகி நீர்ப்பரப்பு முழுதும் உள்ளவாறு விளங்கித் தோன்றுவதே இயற்கை நிலையாகும். அதுபோல ஆன்மா ஆணவ மலத்தில் மறைப்புண்டு தனது வியாபகத்தை இழந்து உடம்பு அளவில் மட்டும் விளங்கி நிற்பது அதற்குச் செயற்கை நிலையாகும். மலம் முழுதும் நீங்கப் பெற்று ஆன்மா தனக்குரிய வியாபகத் தன்மையைப் பெற்று நிற்பதே அதற்கு இயற்கையாகும். முத்தி நிலையில் ஆன்மா மலத்தின் நீங்கிச் சிவத்தைத் தலைப்படும் காலத்தில் தனக்கு இயற்கையாய் உள்ள வியாபக நிலையை எய்தும். சிவத்தைப் போலவே அதுவும் எங்குமாய் நிற்கும்.
சீவன் முத்தியில் வியாபக உணர்வு :
உடம்போடு உள்ள சீவன் முத்திநிலையில், அம்முத்தரின் சீவ கரணங்கள் சிவகரணங்களாய் மாறி அவர்க்கு வியாபக உணர்வையே தந்து நிற்கும். அவ்வியாபக உணர்வினால் அவர் எல்லாவற்றிலும் சிவ முதற்பொருளையே கண்டு நிற்பர். எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி என வரும் அப்பர் சுவாமிகளின் வாக்கு இவ்வாறு கண்டு கூறியதாகும்.
பரமுத்தியில் எங்குமாய் நிற்றல் :
இனி, உடம்பு நீங்கிய பரமுத்தி நிலையில் அம்முத்தர் தமது வியாபகத்தை நேரே பெற்றுக் காலமும் இடமும் ஆகிய வரையறையின்றி, எங்குமாய், சிவனது வியாபகத்தில் கலந்து எப்பொழுதும் சிவானந்தத்தை இடையறாது நுகர்ந்து கொண்டிருப்பர். இந்நிலையை,
கண்ணுதல் தன் நிறைவதனில் கலந்து, காயம்
கழிந்தக்கால் எங்குமாய்க் கருது அரன்போல் நிற்பன்

எனச் சிவஞானசித்தி கூறும்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...