வியாழன், 2 நவம்பர், 2017

93. சிவனையன்றி வேறொன்றை அறியார்

93. சிவனையன்றி வேறொன்றை அறியார்
எல்லாம் அறியும் அறிவுறினும் ஈங்கு இவர் ஒன்று
அல்லாது அறியார் அற.

பொருள் : எல்லாவற்றையும் அறியக்கூடிய சிவனது அறிவாகிய திருவருளைத் தாம் பெற்றாராயினும் அணைந்தோராகிய ஞானிகள் அவ்வறிவைக் கொண்டு சிவனைத் தவிர வேறு பொருள்களைச் சிறிதும் அறிய மாட்டார்.
சொற்பொருள் :
எல்லாம் அறியும் அறிவு - எல்லாவற்றையும் அறியக்கூடிய சிவனது அறிவாகிய திருவருளை
உறினும் - தாம் பெற்றாராயினும்
ஈங்கு - இம் முத்தி நிலையில்
இவர் - இவ் அணைந்தோர்
ஒன்று அல்லாது - ஒரு பொருளாகிய சிவத்தையன்றி
அற அறியார் - வேறொரு பொருளைச் சிறிதும் அறியார்.

விளக்கம் :
எல்லாம் அறியும் அறிவு :

எந்நிலையிலும் ஆன்மா ஒரு துணையைக் கொண்டே அறிவதாகும். கட்டு நிலையில் அதற்குத் துணையாய் இருப்பவை கருவிகள். ஐம்பொறி முதலிய கருவிகளின் வழியாகவே அது உலகத்தை அறிந்து வருகிறது. அக்கருவிகள் உலக அறிவைத் தருமேயன்றி மெய்யறிவைத் தரமாட்டா. உலக அறிவு என்பது மயக்க அறிவே. பொருள் அல்லவற்றைப் பொருளென்று அறிந்து பற்றுவதனால் அது மயக்க அறிவா யிற்று. இம்மயக்க அறிவு உள்ளவரையில் மெய்யறிவு தோன்றாது. எனவே மயக்க அறிவைத் தருகின்ற கருவிகளை விட்டு நீங்கும்போதே மெய்யறிவு உண்டாகும். சுத்த நிலையில் கருவிகள் நீங்கியபோது மெய்யறிவைப் பெறுவதற்குத் துணை செய்வது எது? அதுவே உயிர்க்குயிராய் என்றும் உடனாய் இருக்கும் சிவனது அறிவாகிய திருவருள். எல்லாம் அறியும் அறிவு என்று அதனைக் குறிக்கின்றார் ஆசிரியர் உமாபதி சிவம். கருவிகளை நீங்கிய நிலையில் திருவருளே கருவியாய் நின்று உயிருக்கு நேரே அறிவிக்கும். கட்டு நிலையில் உயிர் மலத்தில் மறைப்புண்டு சிறுமைப் பட்டிருந்தது. அந்நிலையில் சிறியவாகிய கருவிகள் அதற்குத் துணையாகச் சிற்றறிவைத் தந்தன. கருவிகளை நீங்கிய நிலையில் உயிர் தனக்கு இயல்பாய் உள்ள வியாபக நிலையைப் பெற்றுவிடும். இங்ஙனம் வியாபகமாகிய உயிருக்கு வியாபகமாய் உள்ள திருவருளே துணையாகி அதன் வியாபக அறிவை விளங்கச் செய்யும். சிறியவாகிய கருவிகளால் உயிர் அறிந்தது சிறுமையுடைய உலகத்தை. வியாபகமாகிய திருவருளால் உயிர் அறிவது வியாபகமாகிய சிவத்தையேயாம்.
ஆன்மாவின் இயல்பு :
எப்பொருளை அறிந்தாலும் அப்பொருளிடத்து அழுந்தி விடுவது ஆன்மாவின் இயல்பாகும். அழுந்தி விடுதல் என்றால், ஆன்மாவினது அறிவு அப்பொருளின் வயப்பட்டு விடுதல். அப்பொருளோடு ஒன்றிப் போதல் என்பது பொருளாகும். அங்ஙனம் ஆன்ம அறிவு ஒரு பொருளோடு ஒன்றிப் போகுமானால் அது அச்சமயத்தில் வேறொரு பொருளை அறியமாட்டததாய் நிற்கும். இதுபற்றியே ஆன்மா ஒரு நேரத்தில் ஒன்றையே அறியும் என்று சொல்லப்படுகிறது. ஆன்மாவின் இயல்பு இப்படிப்பட்டதாகையால், மலம் முழுவதும் நீங்கிச் சிவத்தை சார்ந்த பொழுது அதனறிவு சிவம் ஒன்றையே அறியும் அன்றி வேறொன்றையும் அறிய மாட்டாது. பளிங்கின் பக்கத்தில் மாணிக்கம் இருந்தால் அப்பளிங்கு மாணிக்கத்தின் ஒளியை முழுவதுமாகப் பெற்று நிற்கும். அந்நிலையில் அதன் அருகே வேறு பொருள்களை வைத்தாலும் அவற்றின் நிறங்களை அது கவராது விடும். அது போன்றதே ஆன்மா சிவத்தையன்றி வேறொன்றையும் அறியாத நிலை. எல்லாம் அறியும் அறிவாகிய திருவருளைப் பெற்றும் உயிர் சிவத்தைத் தவிர வேறு பொருளை அறியாது என்றால் அஃது ஒரு குறையாய் முடியாதோ என வினவலாம். திருவருள் கண்ணாகச் சிவத்தை இனிது உணர்ந்து நிற்றலால் ஆன்மாவிற்குச் சிறிதும் குறைவில்லாத இன்பமே உண்டாவதன்றித் துன்பம் சிறிதும் உண்டாகாமையால், பிறிதொரு பொருளை உணராமை பற்றி ஆன்மாவிற்கு ஒரு குறையும் இல்லையாம்.
பிறவற்றை அறிதல் பந்தம் :
சிவம் ஒன்றே ஆன்மா அறிதற்குரிய பொருள். சிவமல்லாத வேறு எப்பொருளை அறிந்தாலும் அஃது ஆன்மாவிற்குப் பந்தமாய் முடியும். அதுபற்றியே ஞானிகள் சிவத்தைத் தவிர வேறு பொருளை அறியார். அங்ஙனம் பிறவற்றை அறியாமை அறிய மாட்டாமையால் அன்று; அறிய விரும்பாமையினால் ஆம். பிறவற்றை அறிதல் பந்தமாய் விடும். அந்தப் பந்தம் முத்திப் பயனுக்கு இடையூறாய் விடும். ஆகவே, ஞானிகள் பிறவற்றை அறிதலைச் சிறிதும் விரும்பார்.
பொற்கொழு :
ஓர் உழவனுக்குக் கிடைத்தற்கரிய கொழு ஒன்று கிடைத்தது. கொழு என்பது நிலத்தை உழும் கலப்பையின் அடிமுனையில் பொருத்தப் பெற்றிருக்கும் கருவி. அது பொதுவாக இரும்பினால் செய்யப் பெற்றிருக்கும். இவனுக்குக் கிடைத்ததோ உலகினில் எங்கும் இல்லாத கொழு; பொன்னால் இயன்ற கொழு; அதனை எவ்வளவு மதித்துப் போற்ற வேண்டும்; ஆனால், அவன் அதன் மதிப்பை உணராமல் அற்பமான வரகினை விளைத்தற் பொருட்டு வன்னிலத்தை உழுதற்குப் பயன்படுத்தினானாம். அவனது பேதமையை என்னென்பது! பொற்கொழுக் கொண்டு வரகுக்கு உழுவது போன்றது திருவருளைப் பெற்ற பின்னும் அது கண்ணாக இறைவனையே உணர்ந்து அவனிடத்து அடங்கி நில்லாது, தற்போதத்தால் பிறவற்றை உணர்ந்து மீட்டும் உலக பந்தத்திற்கு ஆட்படுதல்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...