92. வேறொன்றையும் விரும்பாமை
ஐந்தொழிலும் காரணர்கள் ஆம் தொழிலும் போகம் நுகர்
வெந்தொழிலும் மேவார் மிக.
பொருள் : படைத்தல் முதலிய ஐந்தொழில்கள் சிவனுக்கு உரியவை. அவனைப் போலத் தாமும் ஐந்தொழில் செய்தல் வேண்டும் என்ற விருப்பம் சிவனை அணைந்தோர்க்குச் சிறிதும் ஏற்படுவதில்லை. காரணக் கடவுளர் என்போர் சிவனது ஆணையைப் பெற்றுப் படைத்தல் முதலிய தொழில்களுக்குத் தலைவராய் நின்று செய்வர். அவர்களின் நிலையைத் தாமும் பெறவேண்டும் என்ற விருப்பமும் சிவனை அணைந்தோர்க்குச் சிறிதும் உண்டாதல் இல்லை. உலக போகங்களை நுகர வேண்டும் என்ற விருப்பமும் அவர்களுக்குச் சிறிதும் நிகழ்வதில்லை.
சொற்பொருள் :
ஐந்தொழிலும் - சிவனைப் போலவே தாமும் ஐந்தொழில் செய்தலையும்
காரணர்கள் ஆம் தொழிலும் - சிவனது ஆணையைப் பெற்று அவற்றுள் ஒவ்வொரு தொழிற்கு முதல்வராய் நின்று செய்தலையும்
போகம் நுகர் வெந்தொழிலும் - முன்னை வினையின் பயனாக வருகின்ற உலக போகங்களை விருப்பு வெறுப்புடன் அனுபவிக்கின்ற கொடிய செயலைச் செய்தலையும்
மிக மேவார் - சிவனை அணைந்தோர் சிறிதும் விரும்பார்.
விளக்கம் :
சிவசமவாத சைவர் என்பவரை முன்னே நாம் அறிந்துள்ளோம். முத்தியில் ஆன்மா சிவனது எண் குணங்களையும் பெற்றுச் சிவனோடு ஒப்ப நின்று, அவனது ஐந்தொழில்களையும் செய்யும் என்பது அவர் கொள்கை. சித்தாந்த சைவம் இதனை ஏற்பதில்லை. உயிர் எக்காலத்திலும் சிவனுக்குச் சமமாக முடியாது. உயிரினது அறிவு நிலை வேறு. சிவத்தினது அறிவு நிலை வேறு. உயிர் வேறொரு துணை அறிவிக்கவே அறிவது; ஒரு நேரத்தில் ஒன்றையே அறிவது. இவ்வாறு அறிவிக்க அறிதலும், ஒவ்வொன்றாய் அறிதலும் உயிரின் சிறப்புத் தன்மையாகும். இதுபோலன்றித் தானே அறிதலும், எல்லாவற்றையும் ஒருங்கே அறிதலும் முதலியவை சிவத்தின் சிறப்புத் தன்மையாகும். ஒரு பொருளின் சிறப்புத் தன்மை என்றும் மாறாது. ஒரு பொருளுக்குரிய சிறப்புத் தன்மையை மற்றொரு பொருள் பெறுதல் என்பதும் எக்காலத்திலும் நடவாது. ஆகவே, முத்திநிலையில் உயிர் சிவத்தினது சிறப்புத் தன்மையைப் பெற்று ஐந்தொழில் செய்யும் எனல் பொருந்தாது. இச்சிறப்புத் தன்மைகளினால் சிவம் என்றும் தலைமைப் பொருளாய் நிற்கும்; உயிர் என்றும் அதற்கு அடிமையாய் நிற்கும் என்பது விளங்கும். சிவபெருமான் படைத்தல் முதலிய ஐந்தொழில்களுக்கும் உரியன்; உயிர் சிவானுபவத்தைப் பெற்று நுகர்வதற்கு மட்டும் உரிமையுடையது என்பதனை வலியுறுத்தி,
உம்பர் பிரான் உற்பத்தி ஆதிகளுக்கு உரியன்;
உயிர் தானும் சிவானுபவம் ஒன்றினுக்கும் உரித்தே
என்று சிவஞான சித்தி கூறியிருத்தல் காணலாம். எனவே, சிவனை அணைந்தோர் சிவானந்தத்தில் மூழ்கியிருத்தலைத் தவிர ஐந்தொழில் செய்தல் போன்றவற்றைச் சிறிதும் விரும்பார் என அறியலாம். காரணக் கடவுளர் என்போர், விஞ்ஞான கலருள் பக்குவம் பெற்றுச் சிவ ஞானம் பெற்றவர்கள்; சுத்த மாயையில் தோன்றிய உலகங்களில் புவனபதிகளாய் இருப்பவர்கள். அனந்த தேவர், மந்திர மகேசுரர், அணு சதாசிவர் என்போர் அத்தகைய தலைவர்கள். மலம் நீங்கப் பெற்றவராயினும் மல வாசனை நீங்காமையால் அதிகாரத்திலும், போகத்திலும் சிறிது இச்சை உடையவராய் இருப்பர். இவர்கள் சிவபெருமானது ஆணையைப் பெற்றுத் தத்தம் அதிகார எல்லைக்கு உட்பட்டு வாழும் ஆன்மாக்களிடத்தில் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்வர். இவர்களெல்லாம் தாங்கள் செய்த புண்ணிய மிகுதியால் இப்பதவிகளைப் பெற்றவர்கள். கடவுளர் என்ற பெயரைப் பெறினும் இவர்களும் உயிர்க் கூட்டத்தைச் சேர்ந்தவரே என்பதை மறத்தல் கூடாது. இவர்களிடத்து நின்று அவ்வச் செயலைச் செய்வது சிவபிரானது அதிகார சத்தியே ஆகும். ஆதலால் உண்மையில் எல்லாவற்றையும் செய்பவன் சிவனே என்பதும், எல்லாச் செயல்களும் சிவன் செயல்களே என்பதும் இங்கு உணர்தற்குரியன.
சிவஞானிகள் மற்று எதிலும் பற்று இல்லாதவர் ஆதலால் காரணக் கடவுளராய் விளங்கும் நிலையையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஒரு விருந்திற்குச் செல்கிறோம். இலையில் சிலேபி வைக்கிறார்கள். அதன் தித்திப்பில் நாக்குத் திளைக்கிறது. மேலும் ஒன்று கேட்டு வாங்கி உண்ணுகிறோம். அதற்குப் பிறகு சேமியா பாயசம் வருகிறது. அதுவும் இனிமையானதுதான். ஆனாலும், முதலில் மிக இனிமையான சிலேபியை உண்ட பிற்பாடு பாயசம் சுவையாக இருப்பதில்லை. அதனால் மீண்டும் பாயசம் கொண்டு வந்தால் அதனை வேண்டாம் என்கிறோம். அற்பமான உணவிலேயே ஒன்று மிக இனியதானால் மற்றொன்று சுவையிழந்து விடுவதைப் பார்க்கிறோம். அப்படியிருக்க, அளப்பரிய சிவபோகத்தைத் துய்த்த ஞானிகளுக்கு உலக போகம் கைத்துப் போவதில் என்ன வியப்பு! ஆகவே போகம் நுகர் வெந்தொழிலையும் அவர் சிறிதும் விரும்பார். உலக போகம் என்பது விருப்பு வெறுப்போடு நுகரப்படுவது. அவ்விருப்பு வெறுப்புக்கள் புதுவினையாகிய ஆகாமியத்தைத் தோற்றுவிக்கும். ஆகாமியம் அடுத்தபிறவிக்கு வித்தாகும். இவ்வாறு உலக போகத்தை நுகர நுகர, அதனால் வினையும், வினை காரணமாகப் பிறவியும் தோன்றுமாதலின் உலக போகத்தை அனுபவித்தலை வெந்தொழில் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர். எல்லையின்றிப் பெருகுகிற சிவானந்த வெள்ளத்தில் திளைத்த பெருமக்கள் வேறொன்றையும் விரும்பார் என்பது இதனால் விளங்கும்.
கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு (திருவாசகம்)
போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி இன்பமும் (திருவாசகம்)
வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம்
வேண்டேன் மண்ணும் விண்ணும் (திருவாசகம்)
கொன்றைத் தொங்க லான் அடியவர்க்குச்
சுவர்க்கங்கள் பொருளலவே (சம்பந்தர் தேவாரம்)
என்பன போன்ற திருமொழிகளை அடியொற்றியே ஆசிரியர் இச் செய்யுளை அமைத்துக் கொண்டார் எனலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக