வியாழன், 2 நவம்பர், 2017

88. யவ்வை வாழ்விக்கும்

88. யவ்வை வாழ்விக்கும்
வா சி யருளி யவ்வை வாழ்விக்கும்; மற்று அதுவே
ஆசில் உருவமுமாம் அங்கு.

பொருள் : முத்தி பஞ்சாக்கரத்தில், வகாரமாகிய திருவருள் சிகாரமாகிய சிவத்தைக் காட்டி யகாரமாகிய ஆன்மாவை வீட்டின்பத்தில் இருத்தும். மேலும், அந்தத் திருவருளே அம்முத்தி நிலையில் ஆன்மாவிற்குக் குற்றமற்ற உடம்பாயும் நிற்கும்.
சொற்பொருள் :
வா - (சிவாய என்னும் முத்தி பஞ்சாக்கரத்தில்) வகாரம் ஆகிய திருவருள்
சி அருளி - சிகாரம் ஆகிய சிவத்தை அடையும்படி செய்து
யவ்வை - யகாரம் ஆகிய ஆன்மாவை
வாழ்விக்கும் - பேரின்பப் பெருவாழ்வில் இருத்தும்
மற்று அதுவே - மேலும் அந்தத் திருவருளே
அங்கு - அம் முத்தி நிலையில்
ஆசு இல் - (ஆன்மாவிற்கு) குற்றம் அற்ற
உருவமும் ஆம் - உடம்பாயும் நிற்கும்.

விளக்கம் :
முந்திய செய்யுளில், சிவ முதலாக ஓதினால் பிறப்பு நீங்கும் என்று கூறப்பட்டது. சிவ முதலாக ஓதுவது எப்படிப் பிறப்பினை நீக்கும் என்ற வினாவுக்கு இச் செய்யுளில் விடை கூறப்பட்டுள்ளது.
அருள் ஆன்மாவை வாழ்வித்தல் :
பிறப்பிற்கு அஞ்சி வீடுபேற்றை விரும்பிய மாணாக்கன் சைவ ஆசாரியரை அடைந்து முதலில் சமயதீக்கை பெற்றுச் சரியையில் நிற்பான். பின்பு விசேட தீக்கை பெற்றுக் கிரியையிலும் பின் யோகத்திலும் நிற்பான். அந்நிலையிலும் பேரின்பம் விளையாமையால் ஞானாசிரியரை அடைந்து அவர்பால் அடைக்கலம் புகுவான்.
ஞானாசிரியர் நிருவாண தீக்கையால் அவனது சஞ்சித கன்மங்களைப் போக்கி இனி நீ திருவருளைத் துணையாகக் கொண்டு நின்மல சாக்கிரம் முதலியபடி நிலைகளில் நின்று ஒவ்வொன்றையும் கடந்து, நான்காம் ஐந்தாம் நிலைகளாகிய துரியம் துரியாதீதங்களை அடைந்தால் உனது சீவத்தன்மை நீங்கி, நீ சிவமாவாய் என்று உபதேசிப்பார். அவ்வுபதேசத்தைப் பெற்ற மாணாக்கன் அதில் உறைத்து நின்று, முத்தி பஞ்சக்கரத்தைக் கணித்துச் சிவமாம் தன்மையைத் தலைப்படுவன். முத்தி பஞ்சாக்கரத்தில் சிவன் முதலில் நிற்க அவன் கீழ் அருள் நிற்க, அருளின் கீழ் ஆன்மா நிற்கிறது. எனவே அருளே ஆன்மாவின் சீவத்தன்மையை நீக்கி அதனைச் சிவன்பால் சேர்த்துத் சிவமாந் தன்மைப் பெருவாழ்வில் வாழச் செய்யும். இதனையே, வா சி அருளி யவ்வை வாழ்விக்கும் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர்.
அருளுடம்பு :
உயிர் இன்ப துன்பங்களை நுகர்தற்கு இடமாய் இருப்பது உடம்பு. இது மாயையினால் ஆகாது. மாயையின் காரியமாகிய உலக போகத்தை உயிர் நுகர்வதற்கு மாயையின் மற்றொரு காரியமாகிய உடம்பு துணை செய்வது பொருத்தமே. இப் பெத்தநிலை நீங்கிச் சிவத்தை அணைந்த காலத்தில் உயிர் பேரின்ப நுகர்ச்சியைத் தலைப்படும். பேரின்பம் என்பது உலக இன்பத்திற்கு முற்றிலும் வேறானது. அவ்வாறாக, உலக நுகர்ச்சிக்கு உரிய மாயாகாரியமாகிய அதே உடம்பு பேரின்ப நுகர்ச்சிக்கும் உதவியாகும் என்பது எப்படிப் பொருந்தும்? எனவே மாயேயம் ஆகிய இந்த உடம்பு பேரின்ப நிலைக்கு உதவாது என்பது வெளிப்படை. ஓருண்மை இங்கே அறிதற்குரியது. மாயை அதன் காரியமாகிய மாயேயம், கன்மம் என்னும் மூன்றும், திரோதான சத்தியும் ஆகியவை ஆன்மா நின்ற நிலைக்கு ஏற்பவே நிற்கும். திரோதான சத்தி மருட் காலத்தில் மருளாயும், அருட்காலத்தில் அருளாயும் நிற்கும் என்பது நாமறிந்தது. ஆன்மா ஆணவத்தினின்றும் நீங்கிய பொழுது திரோதான சத்தி அருட்சத்தியாய் மாறி விடுதல் போல, மாயை முதலியனவும் அருளாய் மாறி விடும். ஆன்மா மலத்திற் பிணிப்புண்டு பசு எனப் பெயர் பெற்று நின்ற பொழுது, மாயை முதலியன பாசம் எனப் பெயர் பெற்று மலமாய் நிற்கும். ஆன்மா பசு என்னும் பெயர் நீங்கி அருளோடும் கூடி நின்ற பொழுது மாயை முதலியனவும் பாசம் என்னும் பெயர் நீங்கி அருளேயாய் நிற்கும். ஆன்மாவை ஆணவ இருள் பற்றியிருந்த காலத்தில் மாயை, கன்மம், மாயேயங்களையும் அவ்விருள் பற்றியிருக்கும். அதனால் மாயை முதலியவை இருளாய் நிற்கும். ஆன்மாவை ஆணவம் பற்றாது நீங்கிய முத்தி காலத்தில் மாயை முதலியவற்றையும் ஆணவம் பற்றாது. அதனால் மாயை முதலியவை ஒளியாய் நிற்கும் என அறிதல் வேண்டும். எனவே, ஆணவம் நீங்கிய முத்தி நிலையில் அம் முத்தரின் உடம்பு மலமாய் விளங்கிய தன்மை நீங்கித் திருவருள் விளக்கத்தினால் அருளுடம்பாய் நிற்கும் என்பது புலனாகும். அவ்வருளுடம்பே முத்தி நிலையில் இறையின்பத்தை நுகர்தற்குத் துணையாய் நிற்பது. இது கருதியே ஆசிரியர், மற்றதுவே (வா ஆகிய அருளே) ஆசில் உருவமுமாம் அங்கு என்றார். அங்கு என்பது முத்தி நிலையைக் குறிக்கும்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...