வியாழன், 2 நவம்பர், 2017

84. இருவகை நடனத்தாலும் விளைவன

84. இருவகை நடனத்தாலும் விளைவன
விரிய ம ந மேவி யவ்வை மீளவிடா; சித்தம்
பெரிய வினை தீரின் பெறும்.

பொருள் : ஆணவ மலமும், அது காரணமாகத் திரோதான சத்தி, மாயை, கன்மம் ஆகியனவும் உயிரை அழுத்தமாகப் பற்றியுள்ளன. அவை தம்மினின்றும் உயிரை மீண்டு போக விடுவதில்லை. உயிரினது பழவினை முழுதும் கெடுமாயின் உயிர் ஞானம் பெற்று அவற்றினின்றும் மீண்டு சிவத்தை அடையும்.
சொற்பொருள் :
ம, ந - முன்னர் ஆணவ மலமும் பின்னர் அது காரணமாக வந்து சேர்ந்த திரோதாயி, மாயை, கன்மம் என்பனவும்
விரிய மேவி - அழுத்தமாகப் பற்றி நின்று
யவ்வை - உயிரை
மீளவிடா - தம்மினின்றும் மீண்டு போக விடமாட்டா
தம் பெரிய வினை தீரின் - உயிரினது பழவினையாகிய சஞ்சிதம் முழுதும் கெடுமாயின்
சி பெறும் - உயிர் ஞானம் பெற்று அவற்றினின்றும் மீண்டு சிவத்தை அடையும்.

விளக்கம் :
மவும், நவும் மேவி யவ்வை மீளவிடா எனவும், சியைப் பெறும் எனவும் எழுத்துக்களாகக் கூறினாராயினும், அவை குறிக்கும் பொருள்களையே நாம் கொள்ளுதல் வேண்டும். இனி வரும் செய்யுட்களிலும் இவ்வாறே கூறிச் செல்வார் ஆசிரியர். யவ்வை ம ந விரிய மேவி மீளவிடா; தம் பெரிய வினை தீரின் சி (யைப்) பெறும் எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுதல் வேண்டும். சிவாய நம என்னும் திருவைந்தெழுத்தைப் பின்னிருந்து நோக்கி ம ந மேவி யவ்வை மீளவிடா எனக் கூறியிருப்பது நோக்குதற்குரியது.
யவ்வை மீள விடாமை :
ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் நாமறிந்தவை. அவற்றோடு மற்றும் இரு மலங்களைச் சேர்த்து மலங்கள் ஐந்து என்பதும் உண்டு. அஃது எவ்வாறு எனின், மாயை என்பது புலப்படாதது; அது காரண நிலையில் இருப்பது. அதிலிருந்து தோன்றிய காரியங்களே தனு, கரண, புவன போகங்கள் என்னும் நான்குமாகும். காரிய நிலையில் உள்ள இந்நான்கையும் மாயேயம் என வேறொரு பெயரால் குறிப்பர். மாயேயம் ஆகிய உடம்பும், இந்திரியங்களும், நிலமும் நிலத்திற் காணப்படும் பிற நுகர்ச்சிப் பொருள்களும் ஆகிய இவையெல்லாம் உயிரறிவை மயக்கி வருதல் கண் கூடாகத் தெரிந்த உண்மை. ஆகவே, இம் மாயேயங்களையும் ஒரு மலமாகக் கூறுகிற வழக்கு ஏற்பட்டது. இனி, ஐந்தாவதாகச் சொல்லப்படுகிற மலம் ஒன்று உண்டு. அஃது இறைவனது சத்தியேயாகும். அதனைத் திரோதம், திரோதானம், திரோதாயி, திரோதான சத்தி என்றெல்லாம் குறிப்பர். இஃது உண்மையில் மலம் அன்று. இதுவே மேற்கூறிய மலங்கள் தம் தொழிலைச் செய்யுமாறு அவற்றை ஏவி நடத்தி வருகிறது. இவ்வாறு மலங்களைச் செயற்படுத்தி, அம்மலங்கள் உயிரறிவை மறைத்து மயக்குதற்குச் சார்பாய் இருப்பது பற்றியே திரோதான சத்தியும் ஒரு மலமாகச் சொல்லப்படுகிறது. திரோதான சத்தி உண்மையில் அருளேயாயினும் அஃது உயிர்களை மலங்களின் வழியாகச் செலுத்திப் பிறவித் துன்பத்திற்படுதலின் அதுவும் மலம் எனப்படுவதாயிற்று. எனவே, ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதனம் ஆகிய ஐந்தும் மலங்களாதல் இனிது விளங்கும். இம்மலங்கள் ஐந்தினையும் ஆசிரியர் உமாபதிசிவம் தமது சிவப்பிரகாச நூலில் பின் வருமாறு ஒருங்கே தொகுத்துக் கூறியுள்ளார்.
மோகம் மிக <உயிர்கள் தொறும் உடனாய் நிற்கும்
மூல ஆணவம் ஒன்று; முயங்கி நின்று
பாகம் மிக உதவு திரோதாயி ஒன்று;
பகர்மாயை ஒன்று; படர்கன்மம் ஒன்று
தேகமுறு கரணமொடு புவன போகச்
செயலாரும் மாயேயத் திரட்சி ஒன்று
ஆகமலம் ஐந்தென்பர்; ஐந்தும் மாறாது
அருள்என்பது அரிதென்பர் அறிந்துளோரே.

இச் செய்யுளில், மலங்களுள் முதலாவதாகிய ஆணவத்தை முதலிற் குறிப்பிட்டார். அம்மலத்தைப் பாகப்படுத்தி உதவும் திரோதான சத்தியை இரண்டாவதாகக் குறிப்பிட்டார். பின்னர் திரோதான சத்தியின் வழிப்பட்டனவாகிய மாயை கன்மம் மாயேயங்களைக் குறிப்பிட்டார். இவ்வைந்தும் உயிரை விட்டு நீங்காத வரையில் இறைவனது அருளைப் பெறுதல் இயலாது என்றும் கூறினார். இக் கருத்தையே இந்தத் திருவருட் பயன் செய்யுளிலும் சுருக்கமாக அமைத்துள்ளார். மலங்கள் உயிரைத் தம்மினின்றும் போகவிடாமையை எடுத்துக் காட்டி, அம்மலங்கள் தீருமாயின் உயிர் சிவத்தையடையும் என்று கூறியுள்ளார். சிவப்பிரகாசச் செய்யுளில் ஐந்தும் மாறாது அருள் என்பது அரிது என எதிர் மறையாகச் சொன்னவர் இங்கு தீரின் சிவத்தைப் பெறும் என உடன்பாடாகக் கூறினார் என்பதே வேறுபாடு.
பெரிய வினை தீர்தல் :
இங்கு ஓர் ஐயம் எழலாம். எல்லாத் தீமைகளுக்கும் அடி நிலைக் காரணமாக இருப்பது ஆணவமலம். அது நீங்கினாலன்றோ உயிர் சிவத்தைப் பெறுதல் கூடும். அந்த ஆணவ மல நீக்கம் பற்றி ஏதும் கூறாமல் வினை தீருமாயின் சிவத்தை அடையலாம் என்று வினை நீக்கமே இச் செய்யுளில் கூறப்பட்டுள்ளது. இஃது எவ்வாறு பொருந்தும் என்பதே அவ்ஐயம். ஆணவத்திற்கும் வினைக்கும் உள்ள தொடர்பு நாம் அறிந்தது. ஆணவமலம் உயிரை உள்முகமாக நோக்க விடாமல் புறப்பொருள்களையே நோக்கும்படி செய்யும். அவ்வாறு நோக்கி அப்பொருள்களின் மீது விருப்பு வெறுப்புக் கொள்ளும்படி செய்யும். அவ்விருப்பு வெறுப்புக் காரணமாக உயிர் மனம் மொழி மெய்களால் நல்லதும் தீயதுமான செயல்களைச் செய்யும். அச்செயல்களே வினைகள் ஆகின்றன. எனவே ஆணவ மலத்தின் வழிப்பட்டதே வினை என்பது விளங்கும். ஆணவ மலம் உள்ளவரையில் வினையும் உயிரை விடாது பற்றியிருக்கும். ஆணவமலம் நீங்குதற்குரிய நிலையை அடையுமாயின், அஃதாவது மலபரிபாகம் ஏற்படும் காலத்தில், வினையும் நீங்குவதாகும். ஆன்மாவிடத்தில் மலபரிபாகம் முற்ற நிகழ்ந்து, சத்தி நிபாதமும் அதி தீவிரமாய் நிகழும் காலமே ஞானம் பெறுதற்குரிய காலமாகும். அந்நிலையில் ஞானாசிரியர் சஞ்சித கன்மத்தை முற்றிலுமாக எரித்தொழித்து ஆன்மாவை வினைக்கட்டினின்றும் விடுவிப்பார். முத்தி பஞ்சாக்கரத்தை உபதேசித்து, சிவாகமங்களின் ஞானபாதப் பொருளை உணர்த்தி முப்பொருள் இயல்பையும் நன்கு உணரச் செய்வார். இதுவே நிருவாணதீக்கையாகும்.
வினையானது அறிவை வேறுபடுத்தித் தன் வழியிற் செலுத்துவது ஆகலின், வினை உள்ளவரையில் அறிவு நன்கு விளங்காது. எனவே வினை ஞானத்திற்குத் தடையாகும். அது பற்றியே ஆசிரியர் சஞ்சித கன்மத்தை முற்றாக நீக்கிப் பின் ஞானத்தை உணர்த்துகிறார். இவ்வாறு ஞானத்திற்குத் தடையாய் இருந்த வினைக்கட்டு ஆணவ மல பரிபாகம் காரணமாக மெலிவடைந்து நிருவாண தீக்கையில் அடியோடு அழியும். அப்பொழுது பொருள்களின் இயல்பு உள்ளவாறு விளங்கும். அவ்வான்மா பொய்யைப் பொய்யென்று கண்டு கழித்து மெய்யாகிய சிவத்தை உணர்ந்து பற்றும். இக்கருத்துப் படவே பெரியவினை தீரின் சிவத்தைப் பெறும் என்றார் ஆசிரியர். பெரியவினை என்றது சஞ்சித வினையாகும். ஆணவ மலம் பரிபாகம் அடைந்த வழியே வினை நீங்குவதாகும். எனவே, வினை நீங்குதல் கூறவே, ஆணவமலம் நீங்குதலையும் கொள்ளுதல் வேண்டும். மேலும் வினை நீங்கவே, அதற்குச் சார்பாகிய மாயையும் உடன் நீங்குவதாகும். இதுபற்றியே இச் செய்யுளில் வினை தீர்தலையே சிறப்பாக எடுத்துக் கூறி, ஆணவம், மாயை ஆகியவற்றின் நீக்கத்தையும் பெறவைத்தார் ஆசிரியர் எனலாம். ம, ந வால் குறிக்கப்படும் ஊன நடனத்தால் உயிர் உலகியலில் அழுந்தி நிற்கும் என்பதும் பின் பக்குவம் வந்த காலத்தில் ஞான நடனத்தால் அது பயனடையும் என்பதும் கூறப்பட்டன.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...