7. அடியவர் உள்ளத்தில் விளங்கி நிற்பவன்
ஆனாஅறிவாய் அகலான் அடியவர்க்கு
வானாடர் காணாத மன்.
பொருள் : தேவர்களாலும் அறியப்படாத தலைவனாகிய சிவபெருமான் தன்னையே நினைந்துருகும் அடியவரின் அறிவில் நீங்காத பேரறிவாய் நிறைந்து, அவரை விட்டு அகலாது இருப்பான்.
சொற்பொருள் :
வான்நாடர் காணாத - தேவர்களால் அறியப்படாத
மன் - தலைவனாகிய இறைவன்
அடியவர்க்கு - தனக்குத் தொண்டு பூண்டு நிற்கும் அடியவரிடத்தில்
ஆனா அறிவாய் - (அவர்கள் அறிவினின்றும்) நீங்காத அறிவாய்
அகலான் - அவருடனே இருப்பான்.
விளக்கம் :
வானாடர் :
இறைவன் வானோர்க்கு அரியனாய் விளங்கும் அருமையினையும், தன்னடியார்களுக்கு எளிவந்தருளும் அழகினையும் ஞானசம்பந்தர் முதலிய அருளாசிரியர்கள் விரித்துக் கூறியுள்ளனர். ஞானசம்பந்தர் ஒவ்வொரு பதிகத்திலும் அயனும் மாலும் ஆகிய தேவர்கள் இறைவனது முடியும் அடியும் காண முயன்ற செய்தியைத் தவறாது குறிப்பிடுகிறார். அவ்விருவரும் இறைவனைத் தொழுது நலம்பெற முயலாமல் தாமே தலைவர் என்ற தன் முனைப்புடன் இறைவனைத் தேடப் புகுந்து காணமாட்டாது அயர்ந்து விழுந்தனர். பின் தெளிவு பெற்றுத் திருவைந்தெழுத்தினை ஓதி இறையருள் பெற்று உய்ந்தனர். இந்நிகழ்ச்சி ஞானசம்பந்தர் அருளிய பதிகந்தோறும் ஒன்பதாம் திருப்பாடலில் அமைந்திருத்தலைக் காணலாம். தேவர்கள் செய்யும் வழிபாடு எப்படிப்பட்டது என்பதைக் காட்டுகிறார் மணிவாசகர். அவர்கள் தம் வாழ்க்கையின்பம் மிகுதற் பொருட்டே இறைவனை வாழ்த்துவார்களாம். எல்லாவுயிர்களும் தம்மைப் பணிய, அதனால் தாம் உயர்வு அடைய வேண்டும். இப்பயன் கருதியே அவர்கள் இறைவனைப் பணிவார்களாம். போகத்தில் மயங்கி மேன்மேலும் அவ்வின்பத்தையே விழையும் அவர்கள் செய்யும் வழிபாடு எப்படி அன்பு கலந்த வழிபாடாக இருக்க முடியும்? பற்று நீங்காத அவர்களை விட்டு இறைவன் அகன்று நிற்பான்.
அடியவர் :
எல்லாப் பற்றுக்களையும் விட்டொழித்து இறைவனது அடி ஒன்றையே பற்றாகப் பற்றி நிற்பவர்கள் அடியவர்கள். இறைவனே தமது வாழ்வுக்கு முதல் என்று மதிப்பவர்கள்; உலகியலை மதியாதவர்கள். உலகியலை மதியாத அவர்களைப் பார்த்து உலகவர் சிரிப்பர். அனுபவமிக்க வேண்டிய உலக போகத்தை வெறுத்து இப்படி இறைப் பித்துப் பிடித்துத் திரிகின்றனரே என்று எண்ணிச் சிரிப்பர். அடியவரோ உலகவரைப் பார்த்துச் சிரிப்பர். நிலைபேறு உடைய திருவருளின்பம் எங்கும் நிறைந்து நிற்கவும் அதனை உணராது, அழிந்து போகும் சிற்றின்பத்தை நாடித் திரிகின்றனரே என்று எண்ணிச் சிரிப்பர். அடியவர்கள் அனைத்தையும் திருவருட் செயலாக உணர்வர். எச் செயலு<ம் என்னதன்று, நின் செயலே எனவும், உனக்கு எப்படிக் கருத்தோ அப்படியே செய்தருள்வாய் எனவும் அருள் வழியில் நிற்பர். நண்ப! என்னுயிர் நாத! என் அன்பே! என்று அன்பால் அழுதரற்றி அறிவழிந்து நிற்பர். இப்படி அன்பால் அகங்குழைந்து தன் வசமிழந்து நிற்கும் அடியவரை இறைவன் தன்னுள் அடங்கியிருக்கச் செய்வான். அவரை விட்டு என்றும் அகலாதிருப்பான்.
விளங்கி நிற்றலும் மறைந்து நிற்றலும் :
இறைவன் எல்லாவிடத்திலும் நீங்காது இருப்பவன் ஆயிற்றே, அவன் எப்படிச் சிலரை விட்டு அகன்று நிற்க முடியும்? என்று கேட்கலாம். அகன்று நிற்பான் என்பதற்கு இடம் பெயர்ந்து நீங்குவான் என்பது கருத்தன்று. அவ்விடத்தில் இருந்தும் புலப்படாமல் இருப்பான் என்பதே கருத்தாகும். அவ்வாறே, இறைவன் சேய்மையில் இருக்கிறான் என்பதற்குக் கருத்து அவன் புலப்படாமல் மறைந்திருக்கிறான் என்பதேயாகும். இறைவன் அருகில் இருக்கிறான் என்பதற்குக் கருத்து அவன் வெளிப்பட்டு நிற்கிறான் என்பதேயாகும். சேயாய் நணியானே என்பது திருவாசகம். இறைவன் அடியவரிடத்தில் தயிரில் நெய் போல விளங்கி நிற்பான். பாசப் பற்றுடைய வானவர் முதலியோரிடத்தில் அவ்வாறு விளங்குதல் இன்றிப் பாலில் நெய் போல மறைந்து நிற்பான். இக் கருத்தைத் திருமுறை யாசிரியர்கள் யாண்டும் எடுத்தோதியுள்ளனர். அவற்றின் பிழிவாகவே இச் செய்யுளைச் செய்துள்ளார் ஆசிரியர் உமாபதி சிவம் என்று கூறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக