79. மூன்றாய தன்மை தோன்றாமை
மூன்றாயதன்மை அவர் தம்மின் மிகமுயங்கித்
தோன்றாத இன்பம் அது; என் சொல்?
பொருள் : சிவனும் உயிரும் ஆகிய அவ்விருவரும் தம்முள் மிகவும் கலந்து ஒன்றாய் நின்ற அந்நிலையில் உயிர் பேரின்பத்தை நுகரும். அவ்வின்ப அனுபவத்தில் அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்ற மூன்றும் இருந்தாலும் அம்மூன்றும் வெவ்வேறாகத் தோன்றுவது இல்லை. மூன்று பொருள் என்ற வேறுபாடு தோன்றாத ஒருமை நிலை அது. உயிர் தன்னை மறந்து, தனது அறிவை மறந்து சிவம் ஒன்றையே அறிந்து அதில் அழுந்தியிருக்கும். அவ்வின்ப அனுபவம் இன்னவாறு இருந்தது என்று எவ்வாறு சொல்ல இயலும்?
சொற்பொருள் :
அவர் - சிவனும், சீவனும் ஆகிய அவ்விருவரும்
தம்மின் மிக முயங்கி - தம்முள் மிகவும் கலந்து (ஒன்றாய் நின்ற அந்நிலையில்)
மூன்றாய தன்மை - நுகர்பவன், அவனது அறிவு, நுகரப்படும் பொருள் ஆகிய மூன்றும் இருந்தாலும் அம் மூன்றும் வேறு வேறாய் உள்ள தன்மை
தோன்றாத இன்பம் - தோன்றாத பேரின்ப அனுபவமே
அது - முந்திய செய்யுளில் உறுபயன் எனப்பட்ட அப் பயனாகும்.
சொல் என்? - அவ்வின்ப அனுபவம் இப்படி இருந்தது என்று எவ்வாறு சொல்ல இயலும்?
விளக்கம் :
மூன்றாய தன்மை :
எந்த ஓர் அனுபவத்திலும் அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்ற மூன்று பொருள்கள் இருக்கும். அறிபவன் ஞாதிரு அல்லது ஞாதா எனப்படுவான். அறிவு ஞானம் எனப்படும். அறியப்படும் பொருள் ஞேயம் எனப்படும். ஞாதிரு, ஞானம், ஞேயம் ஆகிய இம்மூன்றையும் திரிபுடி என்பர். நான் இந்த மலரின் மணத்தை அறிகிறேன் என்னும் போது, நான் அறிபவன் ஆகிய ஞாதா ஆகிறேன். அதற்குக் கருவியாகிய எனது அறிவு ஞானம் ஆகிறது. மலர் மணம் அறியப்படும் பொருள் ஆகிய ஞேயம் ஆகிறது. எனவே இக்காட்சியில் இம்மூன்று பொருள்களும் உள்ளன என்பது விளங்கும். இவ்வாறு அறிகின்ற தான், தனது அறிவு, அறியப்படும் பொருள் ஆகிய மூன்றையும் அறிந்து நிற்றலைத் திரிபுரி ஞானம் என்பர். இத்திரிபுடி ஞானம் உள்ள பொழுது, அஃதாவது, அறிகின்ற தன்னையும், தனது அறிவையும், அறியப்படும் பொருளையும் வேறு வேறாகப் பகுத்துக் காணும் நிலை உள்ள பொழுது - இன்ப அனுபவத்தை முழுமையாகப் பெற இயலாது. ஒரு நிகழ்ச்சி வாயிலாக இதனை விளக்குவோம்.
நான் ஒரு தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சிறு பிள்ளைகள் பலரும் என்னுடன் அமர்ந்து அதைப் பார்க்கிறார்கள். எனது அறிவு படத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. இந்தக் காட்சியை வேறு விதமாக எடுத்திருந்தால் நன்றாயிருக்குமே, இவருக்கு நடிப்பே வரவில்லையே, இவரை எப்படித் தேர்ந்து எடுத்தார்கள்? இயக்குநர் இந்தக் காட்சியில் தூங்கி விட்டாரா, என்ன? என்று இப்படியெல்லாம் என் சிந்தனை ஓடுகிறது. நானும் என் அறிவும் படத்திற்கு வேறாக இருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது. படக் காட்சியோடு ஒன்றும் போதே அதனால் வரும் முழு இன்பத்தைப் பெற முடியும். நானும் அறிவும் வேறாக நிற்பதனால் காட்சியின்பத்தை நான் முழுமையாகப் பெறவில்லை என்பது தெளிவு. ஆனால், அந்தச் சிறு பிள்ளைகளைப் பாருங்கள். அவர்களுக்குப் படத்தைப் பற்றிய ஆராய்ச்சி உணர்வு இல்லை. அவர்களது அறிவு படத்திற்கு அப்பால் வேறு எங்கும் செல்லவில்லை. அவர்கள் படத்தோடு ஒன்றிப் போய் விடுகிறார்கள்; மகிழ்ச்சியினால் துள்ளுகிறார்கள்; கை கொட்டுகிறார்கள்; ஆகா என்கிறார்கள்; ஐயோ என்கிறார்கள். அவர்கள் அக்காட்சியோடு ஒன்றுபட்டு விடுவதனால் அதனால் வரும் இன்பத்தை முழுமையாகப் பெறுகிறார்கள் என்பது தெளிவு.
நான் பார்க்கும் முறையில், அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என்ற மூன்றும் பகுத்து உணரும்படியாக வெவ்வேறாய் நிற்கின்றன. அஃதாவது ஞாதிரு, ஞானம், ஞேயம் என்ற வேறுபாடு தோன்றுவதால் திரிபுடி ஞானம் அங்கே உள்ளது. திரிபுடி ஞானம் இருக்குமானால் இன்ப அனுபவம் முழுமை பெறவில்லை என்பது பொருள். அந்தப் பிள்ளைகள் தம்மை மறந்து, பிறவற்றையெல்லாம் மறந்து, காணப்படுகிற அக்காட்சி ஒன்றையே அறிந்து நிற்கிறார்கள். இங்கே அறிபவரும், அறியப்படும் பொருளும் அறிவும் ஆகிய மூன்றும் வேறு பிரித்து அறிய வாராமல் உள்ளன. அஃதாவது அம்மூன்றும் வேறாகத் தோன்றாமையால் திரிபுடி ஞானம் இல்லை எனலாம். திரிபுடி ஞானம் நீங்கிய நிலையே முழுமையான அனுபவநிலை.
மூன்றாய தன்மை தோன்றாத இன்பம் :
இதுவரை உலகியல் அனுபவத்தை வைத்து விளக்கினோம். முத்தி நிலையில் ஆன்மா எய்தும் சிவானுபவத்திற்கும் இது பொருந்தும். ஆன்மா நான் சிவத்தை அறிந்து அனுபவிக்கிறேன் என்று உணருமானால், தான், தன், அறிவு, அறியப்படும் பதி ஆகிய முப்பொருளையும் அந்நிலையில் உணர்கிறது என்று ஆகும். இது திரிபுடி ஞானம் உள்ள நிலையாகும். ஆன்மா சிவம் ஒன்றை மட்டுமே அறிந்து அதில் அழுந்தும் போதே பேரின்பம் விளையும். சிவத்தையன்றிப் பிற பொருள்களையும் அறியுமானால் ஆன்மாவிற்குப் பேரானந்தம் எப்படி உண்டாகும்? ஆன்மா ஒன்றை அறியுங் காலத்தில் மற்றொன்றை அறிய மாட்டாது ஆகலின், முத்தி நிலையில் தன்னையும் தனது அறிவையும் அறியுமானால், சிவத்தை அறியாது மறக்கும்; அவ்வாறு மறக்குமானால் அதற்குச் சிவானந்தம் இல்லையாகும். அதனால், ஆன்மா தன்னையும் தனது அறிவையும் அறியாது, சிவம் ஒன்றையே அறிந்து நிற்றல் வேண்டும். இதுபற்றியே, திரிபுடி ஞானம் நீங்கிய நிலையே, அஃதாவது ஆன்மா தன்னையும், தனது அறிவையும் அறிதலை விடுத்துச் சிவம் ஒன்றை மட்டும் அறிந்து அதில் அழுந்தி விடுவதே பரமசுகம் ஆகிய பேரின்ப நிலை என்று சித்தாந்த சைவம் கூறும். இதனையே மூன்றாய தன்மை தோன்றாத இன்பம் எனக் குறித்தார் ஆசிரியர் உமாபதிசிவம்.
சொல்லொணாத இன்பம் :
மேற்கூறியவாறு ஆன்மா தன்னை மறந்து, தனது ஞானத்தை மறந்து சிவம் ஒன்றையே அறிந்து அதில் அழுந்தி நிற்கும் நிலையை உடம்பு உள்ள காலத்தில் அடைவதே நிட்டை என்று சொல்லப்படுகிறது. தனித்திருந்து நிட்டை கூடிச் சிவத்தில் அழுந்தி நிற்பதாகிய இச்சிவானுபவ நிலையைக் குறித்துக் கூறும்போது சொல் என்? என்கிறார் ஆசிரியர். சொல் என் என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறுவர். அவ்விடத்துச் சொல் எழுவதற்கு வழி ஏது? என்பது ஒரு பொருள். அஃதாவது பேச்சற்று மோனமாக உள்ள அநுபூதி நிலை அது என்பதாம். இனி, சொல் என் என்பதற்கு மற்றொரு பொருள் அவ்வின்ப அனுபவத்தைச் சொல்லால் வெளியிட்டுரைப்பது எவ்வாறு இயலும் என்பது. அஃதாவது இன்னவாறு இருந்ததென்று சொல்ல இயலாத ஆனந்த நிலை அது என்பதாம். இவ்விரு பொருள்களுள் இவ்விடத்திற்குச் சிறந்தது எது? என்பதை நோக்குவோம். இவ்வாறு சிவத்தில் அழுந்தி நிற்போர் எவ்வாறு இருப்பர் என்பதை இறுதி அதிகாரத்தில் விளக்கியுள்ளார் ஆசிரியர். அவ்வதிகாரத்தின் முதற் செய்யுளில், அவர்கள் பேரின்பத்தில் திளைத்திருத்தலையன்றி வேறொன்றை யறியார் எனவும் அவர்க்குச் சொல் ஏதும் உண்டாகுமோ? எனவும் கூறுகிறார். எனவே சொல் எழாமல், பேச்சற்று, இன்பத்துள் ஆழ்ந்திருப்பர் என்பது அங்கே கூறப்பட்டது. அங்கே கூறிய அதே பொருளை இன்புறு நிலையாகிய இங்கேயும் கூறினார் என்று நாம் கொள்ள வேண்டுவதில்லை.
சொல் என் என இங்கே கூறியதற்கும், மற்று ஏதுண்டு சொல் என அங்கே கூறுவதற்கும் ஒரே பொருளைக் கொள்ளாமல், இன்ப அனுபவத்தைச் சொல்வது எவ்வாறு இயலும் என இங்கேயும், இன்பத்துள் ஆழ்ந்திருப்பதால் சொல் எவ்வாறு எழும்? என அங்கேயும் பொருள் உரைப்பது பொருத்தமாகும். எனவே, மேற்காட்டிய இரு வகைப் பொருள்களுள் முன்னதை விடுத்து, இரண்டாவதாகக் கூறிய பொருளே இவ்விடத்திற்குச் சிறந்தது என்று முடிவு செய்யலாம். ஆன்மாவை விழுங்கிப் பெருகும் வெள்ளமாகிய பரம சுகத்தை வாயினாற் சொல்லிக் காட்ட இயலாது. அது ஐந்து இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட இன்பம். இந்திரியங்களின் நுகர்ச்சியைக் கூட வாயினாற் சொல்ல முடியாது என்பார்கள். அப்படியிருக்க, இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட அதனை எப்படி வாயால் சொல்ல முடியும்? ஒரு தாய் உலக வாழ்வில் தெரிந்து கொள்ள வேண்டிய அனுபவப் பாடங்களை யெல்லாம் தன் மகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறாள். ஆனால், பக்குவம் வராத அந்தப் பெண்ணுக்குச் சிற்றின்பமாகிய அனுபவத்தை எப்படிச் சொல்லுவது? அது சொன்னால் விளங்காதது. அதுபோல, இறைவனாற் பெறுகின்ற இன்ப அனுபவம் பக்குவம் இல்லாதவர்களுக்குத் தெரியாத ஒன்று. அதனைச் சொல்லிக் காட்ட முடியாது; சொன்னாலும் தெரிந்து கொள்ள முடியாது. எங்ஙன் இருந்ததென்று எவ்வண்ணம் சொல்லுகேன் என்றார் இறைவனை ஆரத்துய்த்த ஓர் அடியவர். வாதவூரடிகள் சொல்ல வொண்ணா அளப்பரிய பேரின்பம் தமது உள்ளத்திலும் உடலிலும் ஒரு சேர நிறைந்து ததும்பி நின்ற அதிசய நிலையைக் குறித்து, சொல்லுவது அறியேன் வாழி முறையோ என்றார். இவற்றையெல்லாம் உட் கொண்டே சொல் என் என்றார் ஆசிரியர் உமாபதிசிவம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக