வியாழன், 2 நவம்பர், 2017

80. அன்பும் இன்பும்

80. அன்பும் இன்பும்
இன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று <உண்டாம்
அன்பு நிலையே அது.
பொருள் : இன்பங்கள் எல்லாவற்றிலும் இனிமையுடையது எனச் சிறப்பிக்கப்படும் முத்தியின்பத்தை இப்பிறப்பிலேயே பெறலாம். அதற்கு முன்னே ஆன்மா ஒன்றைப் பெறவேண்டும். அந்த ஒன்று எது எனில், இறைவனிடத்தில் இடையறாது அன்பு செய்து நிற்கும் நிலையேயாகும். இந்த அன்பு நிலை இன்று உண்டானால், பேரின்பமும் இப்பொழுதே உண்டாகும்.
சொற்பொருள் :
அது - மூன்றாய தன்மை தோன்றாத அப்பேரின்பம்
அன்பு நிலையே - இறைவனிடத்து இடையறாது அன்பு செய்து நிற்கும் நிலையில் உண்டாவதே.
இன்பில் இனிது என்றல் - இவ்வின்பம் இதுவரையில் நுகர்ந்து வந்த இன்பங்கள் எல்லாவற்றினும் மிக இனியதாய் உள்ளது என்று உணரும் அன்பு
இன்று உண்டேல் - ஆன்மாவிற்கு இப்பிறப்பில் உண்டாகுமாயின்
இன்று உண்டாம் - பேரின்பமும் இப்பொழுதே உண்டாகும்.
விளக்கம் :
இன்பம் :
இன்பம் என்றால் என்ன? இன்பந்தரும் பொருளினது தன்மையை உணர்தலே இன்பமாகும். உலகப் பொருளின் தன்மை முற்றும் உணரப்படுவது ஆகலின், அப்பொருளால் வரும் இன்பம் முடிவுடையதாய், வரையறைப்படுவதாய் இருக்கும். ஆனால், இறைவனது தன்மை அங்ஙனம் முழுதுமாக அறிய வாராதது. அதனால் இறைவனது தன்மையை உயிர்கள் உணர உணர இன்பம் புதிது புதிதாய் விளைந்து கொண்டேயிருக்கிறது. அவனது தன்மை அளக்க ஒண்ணாதது. ஆதலால் அவ்வின்பமும் வரையறைப்படாததாய் உள்ளது. ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே என்பது திருவாசகத் தொடர். அளவிடப் படாத தன்மையை உடையவன் ஆதலால் அனுபவிக்க அனுபவிக்கத் தெவிட்டாத இன்பமாய் இருக்கின்றான் என்பது அதன் பொருளாகும்.
உலக இன்பமும் இறையின்பமும் :
உலக போகம் வரம்புடைய இன்பமேயாக, சிவபோகம் எல்லையற்றதாய், மேலும் மேலும் வளர்வதாய், புதுமையுடையதாய் இருத்தல் பற்றியே கனியினும் கட்டிபட்ட கரும்பினும் பனி மலர்க் குழல் பாவை நல்லாரினும் தனி முடிகவித்து ஆளும் அரசினும் இனியன் என்றார் திருநாவுக்கரசர். இன்னும், உலக இன்பம் கருவி கரணங்கள் வாயிலாக நுகரப் படுவது. சிவானந்தம் கருவி கரணங்களின் நீங்கி நின்று அனுபவிப்பது. உலக இன்பமெல்லாம் தன்னின் வேறாகிய பொருளிடத்தினின்றும் தன் பால் வந்து பொருந்தும் செயற்கை இன்பமாகும். சிவானந்தம் அவ்வாறின்றித் தன்னுள்ளே ஒழிவற நிறைந்த பொருளிடத்தில் தான் வியாபகமாய் நின்று அனுபவிக்கும் இயற்கையின்பமாகும். இந்த அழகான வடிவைக் கண்டு இன்புற்றேன். இந்த இனிய ஓசையைக் கேட்டு இன்புற்றேன். இத் தீஞ்சுவையை அறிந்து இன்புற்றேன் என இவ்வாறு உலக இன்பம் நம்மால் உணர்ந்து சொல்லப்படுகிறது. ஆனால், சிவானந்தம் உரையுணர்வு இறந்து நின்று அனுபவிக்கப்படுதலின் அஃது உரைக்க வாராதது. இறையின்பமாகிய பேரின்பம் இத்தகையது ஆதலின் அதனைச் சுவைத்த பிறகு உலக இன்பம் அனைத்தும் சுவையற்றனவாகி விடும்.
அரும்பும் தனிப் பரமானந்தம்
தித்தித் தறிந்த அன்றே
கரும்பும் துவர்த்துச் செந்தேனும்
புளித்து அறக் கைத்ததுவே
என்றார் அருணகிரிநாதர். இவ்வாறு இறையின்பம் எல்லா இன்பங்களிலும் இனிமை உடையது என்று சிறப்பித்துச் சொல்லப்படுதலின் அதனை இன்பில் இனிது என்று குறிப்பிட்டார் ஆசிரியர் உமாபதிசிவம்.
அன்பு நிலையே இன்ப நிலையைத் தரும் :
இந்த இன்பம் அன்பினில் விளைவதாகும். இறைவனது அடியார்கள் பெரியோனாகிய அவன் தமக்கு எளிவந்து அருள்செய்த திறத்தினை நினைந்து உருகி அவனிடத்தில் அன்பு பெருகி நிற்பர். தாய் வயிற்றில் நான் உருத் தெரியாமல் கருவாய் இருந்த காலத்திலேயே உட்புகுந்து என்னை வளர்த்தான். பின் நான் உடலெடுத்துப் பிறந்து உலகியலில் உழன்ற காலத்தும் துணையாய் நின்று கருணையோடு என்னை வளர்த்தான். தாயைப் பார்க்கிலும் மிகப் பரிவுடையவன் ஆயினான். உள்ளமேயன்றி உடலும் அன்பினால் உருகப் பண்ணினான்; உள்ளொளியாகிய தன்னை இனிது உணரச் செய்தான்; அழிவில்லாத ஆனந்தமாகிய தேனைப் பொழிந்தான். இவ்வாறு பெத்தத்தில் இறைவன் உயிர்க்குயிராய் நின்று உலக போகத்தினை நுகர்வித்து வளர்த்த உதவியையும் இப்போதும் அவ்வாறு நின்று சிவபோகத் தினை நுகர்வித்து வாழ்விக்கும் உதவியையும் நினைந்து மணிவாசகப் பெருமான் மனமுருகிக் கூறுவார். இங்ஙனம் இறைவன் செய்யும் உதவியை மறவாது உணர்தலால் அவனிடத்தே அன்பு மீதூரும். அவன் மீது அன்பு மேலிட மேலிட அவனது இன்பம் மேலும் மேலும் விளைந்து கொண்டேயிருக்கும். இறைவனிடத்துச் செய்யும் அன்பு அவனிடத்தே அழுந்தி இன்புற்றிருக்கும் நிலையைத் தரும் என்பது இச்செய்யுளில் கூறப்பட்டது.
ஒன்பதாம் அதிகாரம்
ஐந்தெழுத்தருள் நிலை
இவ்வதிகாரத்தில், திருவைந்தெழுத்தினைக் குறித்து உபதேச முறையில் உணர்தற்குரிய உண்மைகள் பல நுட்பமாக உணர்த்தப் பெற்றுள்ளன. முதல் நூலாகிய சிவஞான போதத்தில் ஒன்பதாம் நூற்பாவில் திருவைந்தெழுதைக் கணித்தல் விதிக்கப்பட்டுள்ளது. அதனை நினைந்தே நம் ஆசிரியர் உமாபதி சிவமும் ஐந்தெழுத்தருள் நிலையாகிய இதனை ஒன்பதாம் அதிகாரமாக அமைத்துக் கொண்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அருள் நிலையாகிய உயிர் விளக்கத்தை அடைந்தோர் அதன் பின் நிட்டை கூடலாகிய இன்புறு நிலையை எய்த மாட்டாத போது அதனை எய்துதற்குத் துணையாயிருப்பது ஐந்தெழுந்து மந்திரமாகும். அது கருதியே இன்புறு நிலையை அடுத்து ஐந்தெழுத்தினை வைத்து உணர்த்துகிறார் ஆசிரியர். ஐந்தெழுத்து அருள்நிலை என்பதன் பொருள் என்ன? ஐந்தெழுத்து தன்னை உணர்வார்க்கு அருளும் முறைமை எனப் பொருள் கூறலாம். ஐந்தெழுத்து அருளுதலாவது, திருவருளைப் பற்றச் செய்து முத்திக்கு வழி காட்டுதல். பக்குவம் எய்திய உணர்வினால் திருவைந்தெழுத்தின் பொருளை உணர உணரத் திருவருள் வியாபகத்தில் ஒடுங்கியிருக்கும் நிட்டை கூடுவதாகும்.
ஐந்தெழுத்தின் புணை :
திருவைந்தெழுத்து உயிர்களைப் பிறவிக் கடலினின்றும் கரையேற்றுகின்ற புணையாகும். ஒருவன் நடுக்கடலில் தனியே விழுந்து தவிக்கிறான். கை சளைக்க நீந்தியும் கரை காணவில்லை. பேரலைகள் மாறி மாறி எழுந்து அவனை அலைக்கழிக்கின்றன. கடுங்காற்று வேறு சுழன்றடிக்கிறது. அச் சூறாவளியில் அகப்பட்டு அவன் நிலை தடுமாறுகிறான். அங்கே ஆளையே விழுங்கக் கூடிய சுறாமீன் பசியோடு திரிகின்றன. அவற்றின் வாய்ப்படும் நிலையில் இருக்கிறான். பிழைக்கும் வழியே தெரியவில்லை. அந்த இக்கட்டான வேளையில் எங்கிருந்தோ ஒரு படகு வந்து சேர்கிறது. அவனுக்கு எப்படியிருக்கும். அந்த நிலையிலே தான் இருந்ததாக மணிவாசகர் கூறுகிறார். பிறவிதான் கடல். துன்பங்களே அலைகள். மகளிர் மயக்கமே சுழன்றடிக்கும் சூறாவளி. காமமே சுறாமீன். இவற்றிடையே அகப்பட்ட தன்னைக் கரையேற்றும் புணையாகத் திருவைந்தெழுத்து அமைந்தது என்றும், அதனைத் துணையாகப் பற்றிக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். உயிர்கள் பிறவிக் கடலில் வீழ்ந்துள்ளன. அவை ஆணவ மலமாகிய வலிய கல்லோடு சேர்த்துக் கட்டப்பட்டு அக்கடலில் தள்ளப்பட்டுள்ளன. அவற்றைக் கல்லோடு பிணித்துக் கட்டிய கயிறு எது? இருவினைகளே அக் கயிறு. இந்நிலையில் அவ்வுயிர்கள் ஆழ்வதன்றி, நீந்திக் கரை சேர்வது எங்கே? இப்படிப்பட்ட உயிர்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கவல்ல தோணியாக இருப்பது திருவைந்தெழுத்து என்கிறார் பெரியபுராண ஆசிரியர். இரு வினைப் பாசம் மும்மலக் கல் ஆர்த்திட, வருபவக்கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய் அஞ்செழுத்து என்பது அவரது வாக்கு.
எழுத்தை அழுத்தும் எழுத்து :
ஐந்தெழுத்தை எழுத்தை அழுத்தும் எழுத்து என்று குறிப்பிடுகிறார் திருமூலர். முதலில் உள்ள எழுத்து என்பது ஊழ் வினையைக் குறிக்கும். உலக வழக்கில் அதனைத் தலையெழுத்து என்பர். ஐந்தெழுத்து அயன் எழுதிய தலையெழுத்தையே அடக்கி விடுமாம். அஃதாவது, ஊழ்வினை உயிரை வருத்தாது வந்து போம்படி செய்யுமாம். நம் ஆசிரியர் உமாபதி சிவமும், ஊழ்வினை திருவைந்தெழுத்தை ஓதுவாரை நலியா என்று சிவப்பிரகாச நூலில் கூறியுள்ளமை காணலாம். அஞ்செழுத்து அருளினாலே வந்தவாறு உரை செய்வாரை வாதியா பேதியாவே (செ.90) என்பது அவர்கூற்று. தேவார அருளாசிரியன்மார் அஞ்செழுத்தின் சிறப்பினைப் பலவாறாகக் கூறியுள்ளனர். ஐந்தெழுத்தில் ஒவ்வொரெழுத்தும் ஒரு நுண்பொருளைக் குறித்து நிற்கும். அப்பொருள்களாவன.
சி - சிவன்
வா - சிவனது அருட்சத்தி
ய - உயிர்
ந - திரோதான சத்தி (மாயை, கன்மங்கள் இதனுள் அடங்கும்)
ம - ஆணவ மலம்
சிவ என்பது பதியையும், ய என்பது பசுவையும், நம என்பது பாசத்தையும் குறிக்கும். நடுவில் உள்ள பசு இரு பக்கமும் சென்று பாசத்தோடும், பதியோடும் சாரும் தன்மையுடையது. இனி, வேறொரு வகையிலு<ம் கூறலாம்.
ந - உயிர் மாயையில் அழுந்தி நிற்கும் சகலநிலை,
ம - உயிர் ஆணவ மலமாகிய அறியாமையில் அழுந்தி நிற்கும் கேவல நிலை.
வா - உயிர் திருவருளில் அழுந்தி நிற்கும் துரிய அருள் நிலை.
சி - உயிர்சிவத்தில் அழுந்தி நிற்கும் துரியா தீத ஆனந்த நிலை.
எனவே, உயிர் பாசத்தைச் சார்ந்து சகல கேவலங்களையும், பதியைச் சார்ந்து அருள்நிலை, ஆனந்த நிலைகளையும் அடைவது என்பது விளங்கும்.
ஐந்தெழுத்தின் வகைகள் :
ஐந்தெழுத்து வடமொழியில் பஞ்சாக்கரம் எனப்படும். அது தூலம், சூக்குமம், அதிசூக்குமம், காரணம், மகாகாரணம் என ஐந்து வகையாகக் கூறப்படும்.
1. தூல பஞ்சாக்கரம் - நமசிவாய
2. சூக்கும பஞ்சாக்கரம் - சிவாய நம
3. அதிசூக்கும பஞ்சாக்கரம் - சிவாய
4. காரண பஞ்சாக்கரம் - சிவ
5. மகா காரண பஞ்சாக்கரம் - சி
தூலம் :
நம என்பதை முதலாக உடையது தூல பஞ்சாக்கரம். ந என்பது திரோதானம், மாயை கன்மங்களையும், ம என்பது ஆணவ மலத்தையும் குறித்தலால், நம என்பவை பாச எழுத்துக்கள் எனப்படும். பாசத்தை முதலாக உடைய தூல பஞ்சாக்கரம் யாருக்கு உரியது? பாசப்பற்றை விட விரும்பாதவருக்கு அஃது உரியது, எனவே, உலகியலில் நின்று உலக இன்பத்தை நாடி நிற்போர் அஞ்செழுத்து மந்திரத்தைத் தூலமாக வைத்துக் கணித்தற்கு உரியர் என்பது விளங்கும். தூல பஞ்சாக்கரம் சமய தீக்கையில் உபதேசிக்கப்படும். அதனைப் பெற்றோர் உலகியலில் நின்று சரியையினை மேற்கொள்வர்.
சூக்குமம் :
தூல பஞ்சாக்கரத்தில் முன்னே நின்ற நகார மகாரங்களாகிய பாசங்கள் சூக்கும பஞ்சாக்கரத்தில் யகாரமாகிய உயிருக்குப் பின்னே செல்ல, உயிர் வகாரமாகிய திருவருளைத் தனக்கு முற்படக் கொண்டு அதன் வழிப்பட்டு நிற்கிறது. எனவே, உயிர் பாசங்களின் நீங்கித் திருவருள் வழியாகச் சிவத்தை அடைதல் வேண்டும் என்னும் பொருளைச் சூக்கும பஞ்சாக்கரம் குறித்து நிற்றல் காணலாம். சூக்கும பஞ்சாக்கரம் விசேட தீக்கையில் உபதேசிக்கப்படும். விசேட தீக்கை பெறுவோர் உலகியலில் ஓரளவேனும் பற்று நீங்கியவராய் இருத்தல் வேண்டும். இவர்கள் முன்னர்க் கிரியையிலும், பின்னர் யோகத்திலும் நிற்பர். இதுவரை கூறியவற்றால், பற்றுக்களை விட விரும்பாதவர் அஞ்செழுத்தைத் தூலமாக வைத்தும், பற்றுக்களை விட விரும்பினோர் அதனைச் சூக்குமமாக வைத்தும் ஓதுதற்கு உரியர் என்பது விளங்கும்.
மேல் சொல்லப்பட்ட தூலமும் சூக்குமமும் ஆகிய ஐந்தெழுத்துக்களில் திரோதான சத்தியைக் குறிக்கும் நகாரமும், ஆணவத்தைக் குறிக்கும் மகாரமும் ஆகிய பாச எழுத்துக்கள் முறையே முன்னேயும் பின்னேயும் நிற்பதை அறிந்தோம். பாச எழுத்துக்களை விடாது ஓதுவதால் பாசப்பற்று அறாத நிலையே உளதாகும். பாசம் அறாத போது பதி ஞானமாகிய திருவருள் எங்ஙனம் விளங்கித் தோன்றும்? பஞ்சாக்கரத்தைத் தூலமாகக் கணித்தலை விடுத்து, சிவாயநம எனச் சூக்குமமாகக் கொண்டு கணித்தாலும் யகாரம் வகாரத்திற்கும் நகாரத்திற்கும் இடைப்பட்டே நிற்றலால் பாசம் நீங்காது என்று சொல்லப்படும்.
அதிசூக்குமம் :
சூக்கும பஞ்சாக்கரத்தைக் கணித்து வரவர, உள்ளம் உலகியலின் நீங்கிச் சிவன்பாற் செல்லும்; ஞானத்தில் வேட்கை உண்டாகும். அத்தகையவர் ஞானாசிரியரை அடைந்து அவரது உபதேசத்தைப் பெறுவர். ஞானகுரு அவர்க்கு நிருவாண தீக்கை எனப்படும் ஞான தீக்கையினைச் செய்து பாச எழுத்துக்களை நீக்கி ஐந்தெழுத்தை மூன்றெழுத்தாக வைத்து உபதேசிப்பார். இம் மூன்றெழுத்து மந்திரமே அதிசூக்கும பஞ்சாக்கரம் எனப்படும். முத்தி பஞ்சாக்கரம் என்பதும் இதுவே. ஞானாசிரியர் உபதேசித்தபடி சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களை (சிவாய சிவாய என) திரும்பத் திரும்பக் கணிக்கும்போது யகாரம் வகாரத்திற்கும் சிகாரத்திற்கும் இடைப்பட்டதாகிவிடும். அந்நிலையில், அருளுக்கும் சிவத்திற்கும் நடுப்பட்டதாகிய ஆன்மாவைப் பாசங்கள் எவ்வாறு பற்றும்? இவ்வாறு மூன்றெழுத்தை மட்டுமே மந்திரமாகக் கொண்டு உணர்ந்து உணர்ந்து நிற்கப் பாசம் நீங்கும்; பதிஞானம் இனிது விளங்கித் தோன்றும். இங்ஙனம் விளங்கிய பதி ஞானத்தால் உயிர் பதியைக் கண்டு இன்புறும். இங்ஙனம் முத்திக்கு வழியாக இருத்தலின் இம்மூன்றெழுத்து மந்திரம் முத்திபஞ் சாக்கரம் எனப்படுவதாயிற்று.
காரணம் :
இவ் அதி சூக்கும பஞ்சாக்கரத்தினும் சூக்குமமாய் நிற்பது காரண பஞ்சாக்கரம் எனப்படும். முற்கூறிய மூன்றெழுத்துக்களுள் ஈற்றில் உள்ள ஆன்ம எழுத்தாகிய யகாரத்தையும் நீக்கி, எஞ்சிய இரண்டெழுத்துக்களை (சிவ) மட்டுமே மந்திரமாகக் கொள்வது காரண பஞ்சாக்கரமாம். சிவசிவ என்பது இரண்டெழுத்து மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லும் முறையாகும். பாச எழுத்துக்களை நீக்கிய அதி சூக்கும பஞ்சாக்கரத்தை ஓதி உணர்ந்து, பாசம் நீங்கி ஆன்ம சுத்தி பெற்ற நிலையில் அவ்வான்மா தன்னறிவைத் திருவருளுக்குள் அடங்கக் கொடுத்துத் தன்னை இழந்து நிற்கும். தன்னை இழந்து நிற்பதாகிய இந்நிலை சிவயோகம் என்னும் அருள் நிலையாகும். ஆன்மா தன்னை உணர்தல் இன்றிச் சிவனை மட்டுமே உணர்ந்து நிற்கும் நிலையாகும். ஆகவே இங்கு ஆன்ம எழுத்தாகிய யகாரம் நீக்கப்படுகிறது.
மகா காரணம் :
இக் காரண பஞ்சாக்கரத்தினும் சூக்குமமானது மகா காரண பஞ்சாக்கரமாகும். ஆன்மா சிவத்தை அணைந்து ஆனந்தத்தில் மூழ்கும் நிட்டை நிலையில் ஆன்மா அருளையும் நினையாது ஆனந்தமாகவே நிற்றலால், அவ்விடத்து அருள் எழுத்தாகிய வகாரமும் நீங்கச் சிகாரம் ஒன்றுமே நிற்கும். சி என்னும் இந்த ஓரெழுத்து மந்திரம் மகாகாரண பஞ்சாக்கரம் எனப்படும். இவ்வாறு ஐந்தெழுத்தாய் இருந்த மந்திரம் பின்பு மூன்றெழுத்தாய், பின்பு இரண்டெழுத்தாய், இறுதியில் ஓரெழுத்தே ஆகிவிடுகிறது.
பட்டினத்து அடிகள் பாடல் :
நிட்டை நிலையை விளக்க வந்த பட்டினத்து அடிகள் அதி சூக்குமம், காரணம், மகா காரணம் ஆகிய பஞ்சாக்கரங்களைக் குறிப்பாக அமைத்து உணர்த்தியிருத்தலைக் காணலாம். அச் செய்யுள் வருமாறு :
மாய நட்டோரையும் மாயா மலமெனும்
மாதரையும்
வீய விட்டோட்டி வெளியே புறப்பட்டு
மெய்யருளாம்
தாயுடன் சென்று பின் தாதையைக் கூடிப் பின்
தாயை மறந்து
ஏயும் அதே நிட்டையென்றான் எழிற்கச்சி
ஏகம்பனே.
நண்பரையும், மனைவியையும் விட்டு விலகி வெளியே புறப்படுதலை முன்னே குறிப்பிடுகிறார். நட்டோர் என்பவர் நண்பர். இங்கே ஆன்மாவுக்கு நண்பராக இருப்பவை திரோதான சத்தியும் அதனால் கூட்டுவிக்கப்படுகின்ற மாயை, கன்மங்களும் ஆகும். ஐந்தெழுத்தில் இவை நகாரத்தால் குறிக்கப்படுகின்றன. மாதர் என்ற சொல் இங்கு மனைவியைக் குறிக்கும். ஆன்மாவுக்கு மனைவியாகச் சொல்லப்படுவது ஆணவ மலம். ஆணவத்தை மனைவியாகக் கூறும் வழக்கினைத் திருவருட் பயனிலும் அறிந்துள்ளோம். (செ.25) பட்டினத்தார் அதனை மாயா மலம் எனும் மாதர் என்கிறார். ஆணவம் என்றுமே அழியாமல் நிற்கின்ற மலம். ஆதலின் அதனை மாயாத மலம் எனக் குறிக்கின்றார். ஐந்தெழுத்தில் இம்மலம் மகாரத்தால் குறிக்கப்படுகின்றது.
திரோதான சத்தி முதலிய நண்பரையும், ஆணவ மலமாகிய மனைவியையும் நீக்குதலை வீய விட்டு ஓட்டுதல் என்கிறார். இது ஐந்தெழுத்தில் நகார மகாரங்களை நீக்குதலைக் குறிக்கும். நண்பரையும் மனைவியையும் விட்டுப் பிரிந்து தாயை வந்து அடைய வேண்டும் என்கிறார். தாயாக இருப்பது திருவருள். ஐந்தெழுத்தில் திருவருள் வகாரத்தால் குறிக்கப்படுகிறது. அதனோடு கூடுதலாவது, முன்பு போல நகார மகாரங்களோடு கூடாது வகாரத்தோடு இணைந்து நிற்றல். இது சிவாய என்னும் அதிசூக்கும பஞ்சாக்கரமாகும். தாயுடன் செல்லுதலாவது, யகாரத்தையும் நீக்கி இரண்டெழுத்தாகக் கணித்தல். இது காரண பஞ்சாக்கரமாகும். தாதையைக் கூடிப் பின் தாயை மறந்து விடுதலாவது, வகாரத்தையும் நீக்கிச் சிகாரத்தோடு மட்டும் இருந்து விடுதல். இது மகா காரண பஞ்சாக்கரமாகும். இங்ஙனம், தாயாகிய அருட்சத்தி வழியாகத் தந்தையாகிய சிவனைப் பெற்றுப் பேரின்பத்தில் திளைக்கும் நிட்டை நிலையை நயம்பட விளக்கிக் காட்டுகிறது இச் செய்யுள். இனி, தூலமும் சூக்குமமும் ஆகிய பஞ்சாக்கரங்களை ஓதுதல் சகல நிலையே என்பதும், அதிசூக்குமம் முதலாக உள்ளனவே சுத்த நிலைக்கு உரியன என்பதும் அறியத்தகும். இதனால், அதிசூக்குமம் முதலிய பஞ்சாக்கரங்கள் உலகப் பற்றற்று, ஞான வேட்கை கொண்டு, ஞானாசிரியரை அடைந்து அவரது உபதேசத்தைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடுவார்க்கே உரியன என்பதும், ஏனையோர்க்குத் தூலமும் சூக்குமமும் ஆகிய பஞ்சாக்கரங்களே உரியன என்பதும் விளங்கும்.
மேலும், அவரவர் நிற்கும் அனுபவநிலைக்கு ஏற்பவே அவரவர் ஓதும் முறையும் அமையும் என்பதும் தெளிவாகும். தூலம் சூக்குமம் ஆகிய இருவகை பஞ்சாக்கரங்களும் ஓம் என்னும் பிரணவத்தோடு கூட்டியும் கூட்டாமலும் ஆசிரியர் உபதேசித்த முறையில் ஓதப்படும். அதிசூக்குமம் முதலிய மூவகை பஞ்சாக்கரங்களும் பிரணவம் இன்றியே ஓதப்படும் என்பது அறிதற்குரியது. இந்த ஐந்து வகையான பஞ்சாக்கரங்களும் நிலையால் வேறு பட்டன அன்றிப் பொருளால் வேறுபட்டன அல்ல என்பது உளங் கொள்ளுதற்குரியது. ஆன்மா நிற்கும் முறையையும், அதற்கேற்பத் திருவைந்தெழுத்தை ஓதும் முறையையும், அதனால் விளையும் பயனையும் பின்வருமாறு வகைப்படுத்தி அமைத்துக் காட்டலாம்.
தீக்கைப்பேறு நிற்கும் நெறி ஓதும் முறை பயன்
சமயம் சரியை தூலம் உலக இன்பம்
விசேடம் கிரியை யோகம் சூக்குமம் உள்ளம் உலகியலின் நீங்கிச் சிவன்பாற் செல்<லுதல்
நிருவாணம் ஞானம்-கேட்டல்-சிந்தித்தல் அதிசூக்குமம் பாச ஞானம் நீங்குதல்
தெளிதல் காரணம் பசு ஞானம் நீங்கித் திருவருளைப் பெறுதல்
நிட்டை மகாகாரணம் சிவானந்தத்தில் மூழ்குதல்
அதிகாரப் பொருள்நிலை :
இனி, இவ்வதிகாரத்தின் பொருள் நிலையைப் பின்வருமாறு தொகுத்து அமைத்துக் கொள்ளலாம். ஐந்தெழுத்து எல்லா நூற்பொருளையும் தன்னிடத்தே அடங்கக் கொண்டிருப்பது. வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய நூல்களெல்லாம் ஐந்தெழுத்தின் பொருளை விளக்குவனவேயாம். ஐந்தெழுத்துக் குறிக்கும் பொருளாவன இறை, அதன் சத்தி, தளையாகிய ஆணவம், எழில் மிக்க மாயை, உயிர் என்பன. சிவாயநம என்னும் ஐந்தெழுத்தில் சிவா என்னும் எழுத்துக்கள் முத்தி நிலையில் இறைவன் செய்யும் ஞான நடனத்தைக் குறிப்பன. நம என்னும் எழுத்துக்கள் பெத்த நிலையில் நிகழும் ஊன நடனத்தைக் குறிப்பன. அந்நடனங்களால் பயன் அடைகின்ற ய வாகிய உயிர் அவ்விரண்டிற்கும் நடுவே உள்ளது. ம வால் குறிக்கப்படும் ஆணவ மலமும், ந வால் குறிக்கப்படும் திரோதான சத்தியும், அதனால் செயற்படுகின்ற மாயை கன்மங்களும் ஆகியவை ய வாகிய உயிரை அழுத்தமாகப் பற்றி நின்று தம்மினின்றும் மீண்டு போக விடமாட்டா. இஃது ஊன நடனத்தால் விளைவது. உயிரினது மிக்க வினையும், வினைக்குக் காரணமாகிய ஆணவமலமும் நீங்குமாயின் ய வாகிய உயிர் சி ஆகிய சிவத்தை அடையும். இது ஞான நடனத்தால் விளைவது. திருவைந்தெழுத்தில் நகார மகாரங்களாகிய பாச எழுத்துக்கள் முன் நிற்க, யகாரமாகிய உயிர் அவற்றின் பின் நிற்குமாயின் பிறப்பு நிலை நீங்காது. அது நீங்க வேண்டுமாயின் திருவைந்தெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்தே ஓத வேண்டும்.
நகாரம் முதலாக ஓதுவார்க்கு உலக இன்பமே கிட்டும். அவ்வாறு ஓதி உலகப் பயனை அடைந்து வருபவர் சிகாரம் முதலாக ஓத முயலார். ந,ம வையே முற்படக் கொண்டு ஓதி வருவதற்குக் காரணமாகிய உலகப்பற்று இரங்குதற்கு உரியது. திருவைந்தெழுத்தில் சி,வ என்னும் எழுத்துக்களே முன் நிற்கும் முறையில் ஓதுவதே பிறவி நீங்குவதற்கு வழியாகும். சிவ முதலாக ஓதினால், வகாரம் ஆகிய அருள் சிகாரம் ஆகிய சிவத்தை அடைவித்து யகாரம் ஆகிய ஆன்மாவைச் சிவமாம் தன்மைப் பெருவாழ்வில் வாழச்செய்யும். இனி, திருவைந்தெழுத்தைச் சிகாரம் முதலாக ஓதினால் யகாரம் நகார வகாரங்களுக்கு இடையே நிற்கிறது. அஃதாவது, உயிர் திரோதானத்திற்கும் அருளுக்கும் இடையில் நிற்பதாகிறது. இவ்வாறு நிற்பதும் முத்தி முறைமை அன்று. அருளுக்கும் சிவத்திற்கும் இடையில் நிற்பதே முத்தி முறைமையாகும். எனவே ய வாகிய உயிர் வா சி இடை நிற்க ஓதுவதே முத்தி பஞ்சாக்கரம் ஆகும். சிவாய என்னும் மூன்றெழுத்து மந்திரத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிக்கும் போது ய வானது வா, சி ஆகிய இவற்றின் இடையே நிற்பதைக் காணலாம். இம் முத்தி பஞ்சாக்கரம் உபதேச முறையில் பெற்று ஓதுதற்கு உரியது. ஆகமங்கள் திருவைந்தெழுத்தினை ஒரு வகையாகக் கூறாமல் பல வகையாகக் கூறுகின்றனவே. அதற்கு என்ன காரணம்? என்று கேட்கலாம். ஆன்மாக்களது பக்குவ நிலையில் உள்ள படி முறையே அதற்குக் காரணம் எனலாம். அவைபடி முறையானே பாசத்தினின்றும் நீங்கும் இயல்புடையன. எனவே அப்படி முறையானே ஐந்தெழுத்தினைப் பெற்று அதனை ஓதிப் பயன்பெறுதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...