வியாழன், 2 நவம்பர், 2017

78. உறங்குபவன் கைப் பொருள்

78. உறங்குபவன் கைப் பொருள்
ஒண்பொருட்கண் உற்றார்க்கு உறுபயனே அல்லாத
கண்படுப்போர் கைப்பொருள்போல் காண்.

பொருள் : மெய்ப் பொருளாகிய சிவத்தில் அழுந்தினவர்களுக்கு அதனால் வரும் பேரின்பம் ஒன்று தவிர ஏனையவெல்லாம், உறங்கிப் போனவனது கையிலுள்ள பொருள் தானே நழுவுவது போலத் தாமே நீங்கிவிடும்.
சொற்பொருள் :
ஒண் பொருட்கண் - அறிவே வடிவான மெய்ப் பொருளாகிய சிவத்தில்
உற்றார்க்கு - அழுந்தினவர்களுக்கு
உறுபயனே அல்லாத - அதனால் வரும் பேரின்ப நுகர்ச்சியாகிய பயன் ஒன்று தவிர, ஏனைய உலக ஒழுக்கங்களும் சரியை முதலிய தவவொழுக்கங்களும் ஆகிய எல்லாம்
கண்படுப்போர் - உறங்குவோர்
கைப்பொருள் போல் - கையிலுள்ள பொருள் அவரறியாதவாறு நழுவி விழுவது போல அவரை விட்டுத் தாமே நீங்குவனவாம்.
காண் - இதனை அறிவாயாக.

விளக்கம் :
ஒண்பொருட்கண் உற்றார் :
ஞானத்தில் ஞானமாம் அசைவிலா நிட்டை நிலையை எய்தினோர் அன்பினால் தம்மைச் சிவத்தில் ஆழ்த்தி வைத்திருப்பர். மதுவுண்ட வண்டு அந்த மது மயக்கத்திலே தன்னையும் அறியாது கிடத்தல் போலச் சிவானந்தத்தை நுகர்ந்து அந்த நுகர்ச்சியில் தம்மையும் மறந்திருப்பார்கள்.
ஊன் கெட்டு உயிர்கெட்டு உணர்வு கெட்டு
என் உள்ளமும் போய்
நான் கெட்டவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ?

என்னும் திருவாசகம் இவ்வனுபவத்தை உணர்த்தி நிற்கிறது. தோற்றத்தில் அவர் உலகர் போலக் காணப்படினும் உண்மையில் அவரது நிலை முற்றிலும் வேறானது என்பது இதனால் விளங்கும். சிவபெருமானுக்குப் பித்தன் என்ற பெயருண்டு. அஃது அவனது பேரருள் உடைமை பற்றி வழங்கும் பெயராகும். இறைவன் என்னை மதி மயங்கி ஆண்டு கொண்டான் என்று மணிவாசகர் குறிப்பிடுகிறார். நாயேன் தனையாண்ட பேதாய் என்கிறார். பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் என்று பழிக்கிறார். மதிமயங்கி, பேதை, பிததன் என்பனவெல்லாம் பழிப்புரை போலத் தோன்றினாலும் கருத்து வகையால் அவையெல்லாம் புகழுரைகளாய் அமைதல் காணலாம். ஆட் கொள்ளுதற்குரிய தகுதி ஒன்றேனும் இல்லாதிருக்கவும், இறைவன் தன் பேரருள் ஒன்றே காரணமாக என்னையும் ஆட்கொண்டருளினான் என அவனது கருணையின் மிகுதியை இவ்வாறு புலப்படுத்துகிறார் மணிவாசகர்.
அந்தப் பெரும் பித்தனுக்கு ஆட்பட்ட ஞானிகள் எப்படியிருப்பார்கள்? அவர்களும் பித்தராகத்தானே இருப்பார்கள்! பித்தர் செயல் ஒரு நெறிப்பட்டதாக இருக்காது. அவர் வேண்டிய தொன்றனைச் செய்யாதொழிவர். வேண்டாத ஒன்றைச் செய்வர். ஞானிகள் செயலிலும் இவ்வாறே ஒரு நெறி முறை அமையாது. கவலையற்றிருப்பதால் அவர்களது செயல் சில வேளைகளில் இளஞ்சிறுவர்களது செயல் போலவும், பித்துக் கொண்டவர் செயல் போலவும் நிகழும். நிட்டையில் நின்றோர் பாலருடன் உன் மத்தர் பிசாசர் குணம் மருவி, உலகியல் உணர்வு கெட்டிருப்பர். ஆதலால், தற்போதம் இழந்த நிலையில் அவரிடத்து நிகழும் செயல் எவ்வாறும் இருக்கும்.
ஞாலமதில் ஞானநிட்டை உடையோருக்கு 
நன்மையிலை; தீமையிலை; நாடுவதொன்றில்லை;
சீலமில்லை; தவமில்லை; விரதமொடு ஆச்சிரமச்
செயலில்லை; தியானமில்லை

என்று அவரைப் பற்றிக் கூறுவர்.
உறங்கினவன் கைப்பொருள் :
உலகியல் ஒழுக்கங்களும், யோகம் கிரியை சரியை முதலிய தவ ஒழுக்கங்களும், உறங்கினவன் கையிலுள்ள பொருள் தானே நழுவி விழுவது போல அவரிடமிருந்து தாமாக நழுவி விடும்.
உறங்காத வரையில் ஒருவன் தன் கையிலுள்ள பொருளை விடாது பற்றியிருப்பான். உறக்கம் வந்து அவனை ஆட்கொண்டு விட்டால் அவன் தன்னை மறந்து விடுகிறான். வெளியுலகை மறந்து விடுகிறான். அதனால் அவனது நினைப்பு இன்றியே அவனது கைப்பொருள் மெல்ல நழுவுகிறது. அதுபோல நிட்டை எய்திப் பேரின்பத்தில் அழுந்தியவர் உலகவுணர்வு தோன்றப் பெறாமல், நான் என்ற உணர்வு கெட்டு நிற்பதனால் ஞானம் பெற்று விட்ட நமக்கு இந்த நியமங்களெல்லாம் இனிச் செய்ய வேண்டுவதில்லை என்று தன் முனைப்போடு அவற்றை விட்டு விடுவதும் இல்லை. செய்து வர வேண்டும் என நியமித்துச் செய்வதும் இல்லை. அவர்களையறியாமல் அவைதாமே நீங்கும் என்பது கருத்து. இன்புறு நிலையில் உயிர்க்கு அவ்வின்ப நுகர்ச்சி ஒன்றே உண்டு என்பது இச் செய்யுளில் கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...