76. உற்றார், பெற்றார், பற்றார்
உற்றாரும் பெற்றாரும் ஓவார்; உரை ஒழியப்
பற்றாரும் அற்றார் பவம்.
பொருள் : தாம் வேறு நில்லாது திருவருளிற் பொருந்தி அதனோடு ஒன்றாய் நின்றவரும், அதன்மேல் சிவப் பேற்றினை எய்தி நிட்டையில் நின்றவரும் மெய்ப் பொருளை ஒருபோதும் நீங்க மாட்டார். அவர்க்கு இனிப் பிறவி இல்லை. இந்த உற்றாரும், பெற்றாரும் போல மெய்ப் பொருள் ஒன்றையே பற்றமாட்டாமல் கேட்டல், சிந்தித்தல் என்ற படிநிலைகளில் நிற்ப வரும் மேற்படிகளை எய்திப் பிறவி அறும் நிலையைப் பெறுவார்கள்.
சொற்பொருள் :
உற்றாரும் - தெளிதல் என்ற நிலையிற் சென்று, திருவருளிற் பொருந்தி அதனோடு ஒன்றாய் நின்றவரும்
பெற்றாரும் - அதன்மேல் உள்ள நிட்டை கூடுதலாகிய முடிந்த நிலையை எய்திப் பேரின்பத்தில் அழுந்தினவரும்
ஓவார் - மெய்ப் பொருளை விட்டு ஒரு போதும் நீங்க மாட்டார். அவர்கள் மீளப் பிறத்தல் இல்லை.
உரைஒழியப் பற்றாரும் - இனி, தெளிதல், நிட்டை ஆகிய நிலைகளிற் சென்று மெய்ப் பொருள் ஒன்றையே பற்றமாட்டாதவராய், கேட்டல், சிந்தித்தல் ஆகிய படி நிலைகளில் நிற்பவரும்
பவம் அற்றார் - மேற்படிகளை எய்திப் பிறவி அறும் நிலைமையைப் பெறுவார்கள்.
விளக்கம் :
உற்றார் :
முந்திய அதிகாரத்தில் நாம் பார்த்தபடி எல்லாப் பற்றினையும் அறவே விடுத்து, யான் எனது என்னும் நினைப்புச் சிறிதும் இன்றி, எச் செயலையும், தன் செயலாக உணராது திருவருட் செயலாக உணர்ந்து, அத்திருவருளிடத்தில் அடங்கி நிற்கப் பெறும் நிலையே சுத்த துரியம் என்னும் அருள் நிலையாகும். இங்கு ஒரு கேள்வியை எழுப்பலாம். இந்நிலையில் நிற்கும் ஞானிகளும் யான் செய்தேன், யான் செய்வேன் என்றெல்லாம் சொல்கிறார்களே. எனவே அவர்களுக்கும் நான் என்ற முனைப்பு இருக்கத்தானே செய்கிறது. இதற்குச் சான்றாகப் பின்வரும் நிகழ்ச்சி ஒன்றைக் காட்டலாம். பாண்டிமாதேவியாரும் அமைச்சர் குலச் சிறையாரும், ஞான சம்பந்தப் பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் தமது உயிரையும் மன்னவன் உயிரையும் உய்விக்கும்படி வேண்டுகிறார்கள். அவர்களை நோக்கிப் பிள்ளையார், நீங்கள் சிறிதும் அஞ்ச வேண்டா. மெய்யுணர்வில்லா அமணர்களை யாவரும் காண வாதில்வென்று பாண்டியனைத் திருநீறு அணியும்படி செய்வேன் என்கிறார். யான் இதனைச் செய்து முடிப்பேன் என்று தன் முனைப்போடு நாம் சொல்வோம் அல்லவா? அதுபோலத் தானே ஞானசம்பந்தரும் சொல்கிறார். நமக்கும் அவருக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? என்று கேட்கலாம்.
சாதி குலம் பிறப்பு என்னும் தடஞ்சுழியில் தடுமாறி நிற்கும் நம்மவர் நிலை எங்கே! ஞானத்தின் திருவுருவாய்ப் பொலியும் சம்பந்தப் பெருமானின் நிலை எங்கே! அவரது நிலையை உணராமல் கேட்கின்ற கேள்வி இது. ஞானிகளது புறத்தோற்றம் உலகத்தாரது தோற்றத்தோடு ஒத்துத் தோன்றினாலும் உண்மையில் அவ்வாறு இல்லை என்பதை உணர்தல் வேண்டும். உலகத்தார்போல அவர்களும் யான் செய்தேன், யான் செய்வேன் எனச் சொல்வழக்குப் பற்றிக் கூறுவாராயினும் அவர் உணர்வு, எல்லாம் சிவன் செய்தது என்றே உணர்ந்திருக்கும். ஞானசம்பந்தர் தாம் சொல்லியவாறே சமணரை வாதில் வென்று பாண்டியனுக்குத் திருநீறு அளித்தருளினார். சிவ பெருமானது திருநெறி எங்கும் திகழச் செய்தார். இச்செயலையெல்லாம் அவர்தாம் செய்ததாக நினையாது இறைவனது செயலாகவே உணர்ந்து நின்றார். உன்னையன்றி வேறொரு உணர்வும் இல்லேன். உயிர்கள் <உய்யும் வண்ணம் நீ திருக்கூத்து இயற்றுவதை இடையறாது நினைப்பதே நியமமாகும் என்று அவர் அருளிச் செய்த அருள் மொழிகள் ஆழ்ந்து உணர்தற்குரியவை.
கொன்றையம் முடியினாய் கூடல்ஆழ வாயிலாய்
நின்றயங்கி ஆடலே நினைப்பதே நியமமே
என இறைவனது திருக்கூத்தினைக் குறிப்பிட்டு எல்லாச் செயலும் அவன் செய்தனவேயாம் என்பதைப் புலப்படுத்தி, அதனை என்றும் மறந்தறியாத தமது நிலையை அவர் இங்கே உணர்த்தியுள்ளமை காணலாம். இவ்வாறு எச் செயல் செய்யவரினும் அதனைத் திருவருட் செயலாகத் தெளிந்து திருவருளோடு ஒன்றி நிற்கும் நிலையாகிய இது சிவயோகம் எனப்படும் துரிய அருள் நிலையாகும். இந்நிலையில் நிற்பவரையே உற்றார் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர். உற்றார் என்பதற்குத் திருவருளைத் தலைப்பட்டு ஒன்றினோர் என்பது பொருளாகும்.
பெற்றார் :
இதற்கு மேல், திருவருளுக்கு முதலாகிய சிவத்தை அணைந்து பேரின்பத்தில் தோய்ந்து நிற்கும் நிலையாகிய நிட்டையினை எய்தியவரைப் பெற்றார் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர். முடிவாய் உள்ள சிவபோகமாகிய துரியாதீத ஆனந்த அனுபவத்தைப் பெற்றவர் ஆதலின் இப்பெயர் அவருக்குப் பொருந்தியதாயிற்று.
சிவத்தை அணைந்து இன்புறுதல் பரமுத்தியாதலின் அதனை உடம்பு நீங்கிய பிறகு அல்லவா பெற இயலும். உடம்பு உள்ள பொழுதே அதனைப் பெற இயலுமோ? என்று ஐயுறலாம். அவ்வாறு ஐயுற வேண்டுவதில்லை. உடம்பு உள்ள பொழுதும் இறைவன் உடன் இருக்கவே செய்கிறான். எப்பொழுதும் உடனாக இருக்கின்ற அவனை உடம்பு உள்ள பொழுதே அடையலாம். அணைந்து இன்புறலாம். ஆயின் அதற்கு அவனை என்றும் மறவாமை வேண்டும். பத்தியினால் அவனை இடையறாது ஏத்துதல் வேண்டும். மறவாமையும், பத்தியினால் ஏத்துதலும் ஆகியவற்றை இடையறாது செய்து வருபவர் இவ்வுடம்பு உள்ள பொழுதே சிவத்தை அணைந்து இன்புறுவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. சிவத்தை அணைந்து அவனை நீங்காதே நிற்பது நிருவிகற்ப நிட்டை என்று சொல்லப்படும். நிட்டை என்று சொன்னாலே அது நிருவிகற்ப நிட்டையையே குறிப்பதாகும். இனி, நிட்டை கூடியவர் அந்நிலையினின்றும் நீங்கி உலக நினைவுற்று உலகத்தாரோடு பொருந்தி நிற்பது சவிகற்ப நிட்டை எனப்படும். இவ்வாறு சிவபோகமாகிய நிட்டையினின்றும் மீள்வோர் சிவயோகமாகிய அருள்நிலையில் நிற்றலன்றி அதற்குக் கீழே வாரார். நால்வர் பெருமக்களும் மற்றுள்ள நாயன்மார்களும் சவிகற்ப நிட்டையில் இருந்தவர்களே யாவர். அஃதாவது, உலக வாழ்வில் உள்ள பொழுதே திருவருளில் அழுந்தி நின்றவராவர்.
பற்றார் :
கேட்டல், சிந்தித்தல் நிலைகளில் நின்று திருவருளைத் தலைப்பட மாட்டாதவர் பற்றார் எனப்பட்டார். இவரது நிலையினை அறியும் நெறி, உயிர் விளக்கம் என்ற அதிகாரங்களின் முன்னுரையில் ஓரளவு அறிந்துள்ளோம். கேட்டல் சிந்தித்தல் நிலைகளில் யான் எனது என்னும் பற்றுக்கள் அறுதல் இல்லை. அவை முற்றாக நீங்குவது தெளிதல் என்ற நிலையிலேதான். ஆகவே, தெளிதல் நிலைக்குச் சென்று திருவருளை உறுதியாகப் பற்ற முடியாமலும், யான் எனது என்னும் பற்றினை விட முடியாமலும் நிற்பவராகிய இவர்கள் ஏனைய உலக மாந்தர் போலப் பிறப்பிற்கு ஆளாவர் போலும் என்ற எண்ணம் நமக்கு எழலாம் அல்லவா? அதனை நீக்குகிறார் ஆசிரியர். உலக வாழ்வில் உழலும் நமக்கும் சிற்சில சமயம் ஞான வேட்கை எழுதல் உண்டு! சிறந்த சித்தாந்தச் சொற் பொழிவைக் கேட்கும்போது இவ்வளவு அருமையான கருத்துக்கள் சித்தாந்த நூல்களில் உள்ளனவா? இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் காலத்தை வீணாக்கி விட்டோமே. இனிமேலாவது சிவஞான போதத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி எழும்....
ஆனால், அந்த ஆர்வம் வீடு வரையில் தான். வீட்டிற்குள் புகுந்து விட்டால் குடும்ப எண்ணங்கள் மனத்திற்குள் குடிபுகுந்து விடும். ஞான வேட்கை வந்த சுவடு தெரியாமல் போய்விடும். இதற்கு ஓர் உவமை சொல்லலாம். இரவில் உறக்கத்தின் போது இடையிடையே சிறிது விழிப்பு உண்டாகும். சில நொடிகள் தான் அந்த விழிப்பு இருக்கும். பிறகு மறுபடியும் கண்மூடி உறக்கத்தில் ஆழ்ந்து விடுவோம். அந்தச் சிறிது நேர விழிப்பைப் போலத்தான் நமக்கு ஏற்படுகிற ஞானவேட்கையும் நிலைத்தல் இன்றி விரைவில் நீங்குகிறது. ஆனால், ஞான நெறியை மேற்கொண்டு, கேட்டல் சிந்தித்தல் என்ற நிலைகளில் நிற்பவர்களின் ஞானவேட்கை நிலையுடைய உண்மையான ஞானவேட்கையாகும். ஆதலால் சத்தி நிபாதம் வாய்க்கப் பெற்ற அவர்கள் இப்பொழுது பற்றார் என்ற நிலையில் நின்றாலும் ஞானவேட்கையில் தீவிரம் கொண்டு தெளிதல் முதலிய மேல்நிலைகளைப் படிப்படியே அடைந்து பிறவி அறும் நிலையைப் பெறுவார்கள் என்பது உறுதி. அது பற்றியே பற்றாரும் அற்றார் பவம் என்றார் நம் ஆசிரியர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக