74. இன்பக் கூடலுக்கு உவமை
தாடலை போல் கூடியவை தாம் நிகழா வேற்றின்பக்
கூடலை நீ ஏகம் எனக் கொள்.
பொருள் : தாள், தலை என்னும் இரு சொற்கள் புணர்ந்து, இரண்டாகக் காணப்படுதல் இன்றித் தாடலை என ஒரு சொல்லாய் நிற்கின்றன. இச் சொற்புணர்ச்சி போல உயிரும் சிவமும் ஆகிய இரண்டும் தம்முட் கலந்து வேறாய் நில்லாத பேரின்பப் புணர்ச்சியையே ஒன்றாதல் ஆகிய முத்திநிலை என்று நீ கொள்வாயாக. மாணவனை முன்னிலைப்படுத்தி ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்.
சொற்பொருள் :
தாடலை போல் - தாள், தலை என்னும் இருசொற்கள் தம்முட் கூடித் தாடலையென ஒரு சொல்லே போல் ஒன்றாய் நிற்கின்றன. அதுபோல்
கூடியவை - தம்முட் கூடிய உயிரும் சிவமும் ஆகிய இருபொருளும்
தாம் நிகழா வேற்று இன்பக் கூடலை - வேறுநில்லாத பேரின்பப் புணர்ச்சியையே
நீ - மாணவனே, நீ
ஏகம் எனக் கொள் - ஒன்றாதல் ஆகிய முத்திநிலை என்று உணர்வாயாக.
விளக்கம் :
தாடலை போல் கூடல் :
உயிர் சிவத்தோடு கூடி நிற்கும் முறைமைக்கு உவமையாகச் சொற்புணர்ச்சி ஒன்றினை எடுத்துக் காட்டுகிறார் நம் ஆசிரியர்.
தாடலை என்பதில் தாள், தலை என்னும் இருசொற்கள் இணைந்துள்ளன. ஆயின் அவை வேறாகக் காணவாராமல் ஒரு சொல் போலவே நிற்கின்றன. தாடலை என்பதை ஒரு சொல் என்றும் கொள்ள முடியாது. இரு சொல் என்றும் கூற ஒண்ணாது. அதுபோல உயிர் சிவத்தோடு சேரும்போது ஒரு பொருளேயாகி விடாமலும், இரண்டு பொருளாய் நில்லாமலும் இயைந்திருக்கும். முத்தியில் இன்பத்தைத் துய்க்கின்ற உயிரும், அதற்கு அவ்வின்பத்தைக் கொடுக்கின்ற சிவமும் ஆகிய இரு பொருளும் உள்ளன. ஆயினும் அவை அங்ஙனம் பிரித்தறிய வாராமல் ஒன்றாய் உள்ளன என்பதாம். இக்கருத்தை அடுத்த செய்யுளிலும் எடுத்துக் கொண்டு மேலும் விளக்குவார் ஆசிரியர். இறைவனோடு இரண்டற்றுக் கூடி நின்று நுகரும் இன்பத்தை விரும்பிய வாதவூரடிகள் புல்லிப் புணர்வது என்று கொல்லோ? (புணர்ச்சிப்பத்து) என்று அருளியமை இங்கு நினையத் தக்கது. அருணகிரி நாதரும் இந்நிலையை விரும்பி,
இறவியொடு பிறவியற நீயும் நானுமாய்
ஏகபோகமாய் இறுகும் வகை பரமசுகம் அதனையருள்
என வேண்டி நிற்பார்.
தாள், தலை ஆகியவை நினைப்பிக்கும் பொருள் :
இனி, இது போன்ற புணர்மொழிகள் வேறு பல இருக்கவும், தாடலை என்ற இதனை ஆசிரியர் எடுத்துக் காட்டியதிலே ஒரு குறிப்பு உண்டு. தாள் என்பது இறைவனது திருவடியைக் குறிக்கும். தலை என்பது உயிரைக் குறிக்கும். உயிர்களாகிய நம்மிடம் நான் என்ற அகங்காரம் உள்ளது. எனது என்ற மமகாரம் உள்ளது. இந்த இரண்டும் இருப்பதைக் காட்டும் அடையாளமே நமது நிமிர்ந்த தலை. நம்மிடமுள்ள இந்தச் செருக்கு அடியோடு எப்போது போகின்றதோ அப்போது இறைவனது திருவருளுக்கு உரியவர் ஆவோம். இச் செருக்கினைப் போக்க வல்லது வழிபாடு. பெருமானே, எல்லாம் என் செயலால் நடக்கிறது என்று எண்ணி இறுமாந்திருந்தேன். எனக்கென்று என்ன செயல் இருக்கிறது? நீதான் உள் நின்று இயக்குகிறாய். நீதான் செய்விக்கிறாய். எனவே எல்லாம் உன் செயலேயாகும் என அடியற்ற மரம் போலத் தரையில் வீழ்ந்து இறைவனது திருவடியில் தலை வைத்து வணங்கினால் எல்லாச் செருக்கும் போய் விடும். தலையைப் பெற்ற பயன் இறைவன் தாளில் விழுந்து வணங்குவதுதான். இவ்வாறு வணங்குவதையே திருவடியைச் சூடுதல் என்றும், திருவடியைப் புனைந்து கொள்ளுதல் என்றும் குறிப்பிடுவர்.
இனி, ஞான நெறியில் நிற்கும் மாணாக்கர் தமது உடல், பொருள், ஆவி மூன்றனையும் சிவனது உடைமையாக உணர்ந்து அவற்றை அருட்குரு வினிடத்தில் நீர் வார்த்து ஒப்புவிப்பர். அருட்குரவர் அவை முழுவதையும் தம்முடையனவாக ஏற்றுக் கொண்டு, அம்மாணாக்கரது பழவினை முழுவதையும் பற்றற ஒழித்து, அதன்பின் தமது திருவடிகளை அவரது தலைமேற் சூட்டிப் பிறவித் தொடக்கு அறும்படியாக ஞானத்தைத் தந்தருள்வர். எனவே, தாளின்கீழ் தலையை வைத்தல் என்பது ஆன்மாவின் செயலாய், ஆன்மா தன் முனைப்பு அடங்கி அருள்வழி நிற்றலைக் குறிப்பதாகும். தலையின்மேல் தாளினை வைத்தல் என்பது ஆசான் மூர்த்தியாகிய இறைவன் செயலாய் பாசப் பற்றறுத்து அருள் வழங்குவதைக் குறிப்பதாகும். இவற்றையெல்லாம் நினைப்பிக்கும் வகையிலே தாள், தலை என்னும் சொற்களை எடுத்துக் கொண்டார் நம் ஆசிரியர் என்று கருதலாம். வேறு ஏதேனும் ஒரு புணர் மொழியை எடுத்துக் கொண்டிருந்தால் இப்பொருள்கள் எல்லாம் நம் சிந்தனைக்கு வருமா என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக