73. முதல்வனுக்கு இன்ப நுகர்ச்சியில்லை
இன்பதனை எய்துவார்க்கு ஈயும் அவற்கு உருவம்
இன்ப கனம் ஆதலினால் இல்.
பொருள் : தன்னை அடைந்தார்க்கு இன்பத்தை வழங்குகின்ற இறைவன் இன்பமயமான வடிவினன். அப்படிப்பட்ட அவன் அவ்வின்பத்தைத் தான் நுகர்தல் என்பது இல்லை.
சொற்பொருள் :
இன்புதனை - இன்பத்தை
எய்துவார்க்கு - தன்னை அடைந்தார்க்கு
ஈயும் - தருகின்ற
அவற்கு - இறைவனுக்கு
உருவம் இன்ப கனம் - இன்ப மயமான வடிவம்
ஆதலினால் - ஆதலால்
இல் - அப்படிப்பட்ட அவன் அவ்வின்பத்தைத்தான் நுகர்தல் என்பது இல்லை.
விளக்கம் :
இறைவனுக்கு நுகர்ச்சியில்லை :
முந்திய செய்யுளில், பெண்மகள் ஒருத்தி ஆடவன் ஒருவனை அணைந்து இன்புறுவதை உவமை காட்டி, உயிர் சிவத்தை அணைந்த பொழுதே அதற்கு இன்ப நிலை உண்டாகும் என்பது கூறப்பட்டது. அந்த உவமையின்படி தம்மிற் கூடிய ஒருவன் ஒருத்தி ஆகிய இருவருமே இன்பத்தைத் துய்க்கின்றனர். அதன்படி பார்த்தால், முத்தி நிலையில் சிவத்தை அணைந்த உயிர் இன்பத்தைத் துய்ப்பது போல உயிரை அணைந்த சிவமும் இன்பத்தை நுகர்தல் வேண்டும் என்று ஆகிறது. அப்படியானால், இறைவனுக்கும் இன்ப நுகர்ச்சி உண்டோ? என்ற ஐயம் எழுகிறது. அவ்வையத்தை இச் செய்யுளில் நீக்குகின்றார் ஆசிரியர். உயிருக்கு இன்பமேயன்றி இறைவனுக்கு இன்பமில்லை என்று தெளிவுபடுத்துகிறார்.
இரண்டு காரணங்கள் :
இறைவனுக்கு நுகர்ச்சியில்லை என்பதை இரண்டு காரணங்கள் காட்டி நிறுவலாம்.
1. முன்பு இல்லாதது பின்பு பெற்ற பொழுதே நுகர்ச்சி என்பது உண்டாகும். உயிரிடத்தில் இன்பம் இயற்கையாக இல்லை. இன்பத்தைத் தன்னிடம் கொண்டிராத உயிரே இறைவனைச் சார்ந்து அவனது இன்பத்தைப் புதிதாகப் பெற்று நுகரும். இறைவனிடத்தில் இன்பம் பெறும் இருத்தலால் அவனே இன்ப வடிவம் ஆதலால், அவன் இன்பத்தைப் புதிதாகப் பெற்று நுகர்தல் இல்லை.
2. அனுபவித்தல் என்பதற்கு அழுந்தி நிற்றல் என்பது பொருளாகும். அந்த அந்தப் பொருளில்தான் அதுவேயாய் அழுந்தி நிற்றல் ஆன்மாவின் இயல்பேயாகும். இறைவன் எதிலும் தோயாது நின்று அறிபவன். அவன் எதனையும் அழுந்தியறியான். ஆகவே, அவனுக்கு எதிலும் நுகர்ச்சியில்லை என்பது இனிது விளங்கும்.
திருவாசகச் சான்று :
இனி, மூன்றாவதாக இறைவனை அனுபவித்த பெரியோர் அருளிச் செய்த அனுபவ மொழிகளும் மேற்கூறிய கருத்தை வலியுறுத்தும். திருவாசகப் பாடற் கருத்து ஒன்றினை இங்கு எடுத்துக் காட்டலாம். எம் பெருமானே, அடியேன் அனுபவிக்கும் படியாக உன்னைத் தந்தாய். உன்னைத் தந்ததற்கு மாற்றாக என்னைக் கொண்டாய். நம் இருவருள் யார் அறிவுத் திறம் படைத்தவர்? உயர்ந்த பொருளைக் கொடுத்து இழிந்த பொருளைக் கொண்டவரா, இழிந்த பொருளைக் கொடுத்து உயர்ந்த பொருளைப் பெற்றவரா, இப்பண்டமாற்றில் யார் வல்லவர்? அடியேன் உன்னைப் பெற்றதனால் எல்லையில்லாத ஆனந்தம் அடைந்தேன். நீ என்பால் பெற்றது யாது? ஒன்றும் இல்லை. கோயில் திருப்பதிகத்தில் வருகின்ற ஒரு பாடற்பொருள் இது. உலகில் நெல்லைக் கொடுத்துப் பதரைக் கொள்வார் உண்டோ? அவ்வாறு கொண்ட பேதையர் செயல் போன்றது இறைவன் செயல் என்று பழிப்பது போலக் கூறி இறைவனது கைம்மாறு கருதாத பெருங்கருணைத் திறத்தினைப் போற்றுகிறார் மணிவாசகர். சிவத்தினிடமிருந்து சீவன் பெற்றது ஆனந்தம். சீவனிடமிருந்து சிவன் பெற்றது என்ன? என்று வினவி, இறைவனுக்கு இன்ப நுகர்ச்சி இல்லை என்ற கருத்தைப் பெற வைத்துள்ளமை காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக