வியாழன், 2 நவம்பர், 2017

72. அருள்நிலைக்கு அப்பால் உள்ளது
இருவர் மடந்தையருக்கு என்பயன்? இன்பு உண்டாம்
ஒருவன் ஒருத்தி உறின்.

பொருள் : பெண் பாலார் இருவர் சேர்வதிலே இன்பம் இல்லை. பெண் மகள் ஒருத்தியும் ஆடவன் ஒருவனும் கூடும் கூட்டத்திலேயே இன்பம் உண்டாகும். அதுபோல, உயிர் அருளோடு சேரும் நிலையில் இன்பமில்லை. உயிர் அருளுக்கு முதலாகிய, சிவத்தோடு கூடும் போதே பேரின்பம் விளையும்.
சொற்பொருள் :
இருவர் மடந்தையருக்கு என்பயன் - பெண்பாலார் இருவர் சேர்விலே பயன் உண்டோ?
ஒருவன் ஒருத்தி உறின் - ஆடவன் ஒருவனும் பெண் மகள் ஒருத்தியும் தம்மில் கூடின்
இன்பு உண்டாம் - அப்போதே இன்பம் உண்டாகும்.
திருவருளைப் பற்றிய அளவிலே உயிருக்குப் பேரின்பம் விளையாது; சிவத்தை அறிந்து அதில் அழுந்திய போதே ஆனந்த நிலை உண்டாகும் என்பது இக்குறட்பாவின் கருத்து.

விளக்கம் :
உயிர் சிவத்தை அணைந்து பெறும் பேரின்பத்தை எப்படி விளக்குவது? உலகர்க்குத் தெரிந்த சிற்றின்பத்தை வைத்துப் பேரின்பப் பொருளை விளக்கிக் காட்ட முற்பட்டனர் நமது சமயச் சான்றோர். சிற்றின்பப் பொருளைப் பல துறைகளாக வகுத்துத் தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலியோர் கூற்றாக அமைத்துப் பாடுவது பழைய அகப் பொருள் மரபாகும். அம் மரபையே இவர்களும் பின்பற்றினர். இறைவனைத் தலைவனாகவும், உயிரை அவன் மீது தீராக் காதல் கொண்ட தலைவியாகவும் வைத்துப் பாடல்கள் புனைந்தனர். ஞானசம்பந்தர் முதலிய அருளாசிரியர்கள் அகப் பொருளுக்குரிய தலைவி முதலியோர் கூற்றாகப் பல பதிகங்களைப் பாடியுள்ளதைக் காணலாம்.
அக இலக்கியத் தலைவி :
பழைய அக இலக்கியத்தில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. காதல் வயப்பட்ட தலைவன் ஒருவன் தலைவியைக் காணப் புறப்பட்டு வருகிறான். அது நள்ளிரவு. வழியில் ஒரு காட்டாறு. மதயானைகளையும் அடித்துக் கொண்டு செல்லும் வேகத்தோடு ஓடுகிறது. அதையும் பொருட்படுத்தாது குறுக்கே பாய்ந்து நீந்தி வருகிறான். தலைவி சொன்ன குறிப்பிட்ட இடத்தில் வந்து நிற்கிறான். வீட்டிலுள்ள தலைவி இந்நேரம் அவர் வந்திருப்பாரே என்று தவிக்கிறாள். முன்கோபம் கொள்ளும் தந்தை இருக்கிறார். அவருக்குத் தெரியாமல் வெளியேற வேண்டும். எனவே காற்சிலம்பை ஓசையெழாதபடி கட்டிக் கொண்டு ஏணிமேல் ஏறித் தோட்டத்தில் இறங்கி, மழை சோ வெனப் பெய்யும் அந்த நள்ளிரவில் காதலன் அகலத்தைத் தழுவுகிறாள்.
ஆன்மாவாகிய தலைவி :
இவளைப் போன்ற துணிவுள்ள தலைவியைத் திருநாவுக்கரசர் பதிகத்திற் காணலாம். திருவாரூர்ப் பெருமான் மீது காதல் வயப்பட்டுத் தன்வசம் அழிந்த தலைவி அவள். பக்குவப்பட்ட ஆன்மா தான் அந்தத் தலைவி. அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள். அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை என்று அவளது செயலைத் தோழி கூற்றாகக் குறிப்பிடுகிறார் நாவுக்கரசர். ஆன்மாவாகிய இந்தத் தலைவியின் செயல் அக இலக்கியத்தில் வரும் அந்தத் தலைவியின் செயலை நமக்கு நினைவூட்டுகிறது அல்லவா?
உவமையளவிலே கொள்ளுதல் :
உயிரைத் தலைவியாக வைத்துப் பாடும் மரபினை ஒட்டியே இங்கும் நம் ஆசிரியர் உமாபதிசிவம் உயிரைப் பெண்ணாகக் குறிப்பிடுகிறார். உயிர் அருளோடு கூடிய அளவில் இன்ப நிலை உண்டாகாது. உயிரும் சிவமும் கூடியபோதே இன்ப நிலை உண்டாகும் என்னும் பொருள்பட இன்புண்டாம் ஒருவன் ஒருத்தி உறின் எனக் கூறுகிறார். இங்கு இறைவன் ஆணாகவும் உயிர் பெண்ணாகவும் கூறப்பட்டுள்ள நிலையைக் காணலாம். இது கொண்டு, உயிர் இயற்கையிலே பெண்ணியல்பினது என்று கருதிவிடலாகாது. ஆண் பெண் என்னும் வேறுபாடு உடம்பிற்கேயன்றி உயிருக்கு இல்லை. எனவே, இச்செய்யுளில் ஒருவன் ஒருத்தி என்றதை உவமை என்ற அளவிலே மட்டும் கொள்ள வேண்டும்.
இருவர் மடந்தையர் :
உயிர் கட்டு நிலையில் உலகைச் சார்ந்து நிற்கிறது. முத்தி நிலையில் இறைவனைச் சார்ந்து நிற்கிறது. எவ்விடத்திலும் இறைவனது துணையின்றி அதற்கு நிலையில்லை; அறிவில்லை; செயலில்லை; வாழ்வில்லை. மணிவாசகர் இறைவனது திருவருட் சார்பு இல்லாமையால் தமக்கு ஏற்பட்ட நிலை பேறின்மையையும், வாட்டத்தையும் புலப்படுத்துவாராய், கொம்பர் இல்லாக் கொடிபோல் அலமந்தனன் என்று கூறுதல் காணலாம். இவ்வாறு எவ்விடத்தும் ஒரு துணையின்றித் தனித்து நிற்கும் இயல்பு இல்லாமை பற்றி உயிர் பெண்ணோடு உவமிக்கப்பட்டது. சிவம் முதலாக இருக்க, அருள் அதன் குணமாக இருப்பது. முதலாகிய பொருளை விட்டுக் குணம் தனித்து நில்லாது. ஆசிரியர் உமாபதி சிவம் தமது சிவப்பிரகாச நூலில்,
இறையவன்முதல்; அவன்றன்
இலங்கொளி சத்தியாமே

என்று கூறியிருத்தல் காணலாம். இவ்வாறு சிவத்தையன்றித் தனித்து நிற்றல் கூடாமை பற்றிக் குணமாகிய அருளும் பெண்ணோடு உவமிக்கப்பட்டது.
அருள்நிலையும் ஆனந்த நிலையும் :
உயிர் முதலில் திருவருளை உணர்ந்து அதனோடு கலந்து ஒற்றுமைப்படும். அவ்வாறு அருளோடு கூடிய அளவிலே உயிருக்கு இன்பநிலை உண்டாகாது. உயிரும் அருளும் பெண்டிர் நிலையில் உள்ளவையாதலின், பெண்டிர் இருவர் சேர்வதால் இன்பம் உண்டாகுமா? என்றார். அவ்வருள் தமக்கு முதலாக உள்ள சிவத்தைக் காட்ட, உயிர் சிவத்தை யறிந்து அதில் அழுந்தும் போதே பேரின்பம் விளையும். இதனையே, இன்புண்டாம் ஒருவன் ஒருத்தி உறின் என்றார். அருள்நிலையை எய்தினார் அவ்வளவில் நில்லாது நிட்டை கூடலாகிய ஆனந்த நிலையை அடைதல் வேண்டும் என்பது இச் செய்யுளின் கருத்தாகும்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...