71. பின் புகுவார் இன்புறுவார்
இன்புறுவார் துன்பார் இருளின் எழும் சுடரின்
பின்புகுவார் முன்புகுவார் பின்.
பொருள் : பக்குவம் வருவதற்கு முன்னே, துன்பம் தரும் இருளில் வழி காட்டி வருகின்ற திருவருள் ஒளிக்கு முன்னால் சென்றவர், பக்குவம் வந்த காலத்தில் அதன் பின்னால் செல்வர்; அவ்வாறு பின் சென்று பேரின்பமாகிய பயனை அடைவர்.
சொற்பொருள் :
துன்புஆர் இருளின் - (பக்குவம் வராத காலத்தில்) துன்பம் நிறைந்த இருளில்
எழும் சுடரின் - தோன்றி வழிகாட்டி வரும் திருவருள் ஒளிக்கு
முன் புகுவார் - முன்னால் சென்றவர்
பின் - பக்குவம் வந்த காலத்து
பின்புகுவார் - அவ்வொளிக்குப் பின்னால் செல்வர்.
இன்புறுவார் - அவ்வாறு பின் சென்று பேரின்பத்தை அடைவர்.
விளக்கம் :
முன்புகுவார் :
உடம்பிற்குப் பல வகையான குற்றங்குறைகள் உண்டு. முதலாவதாக, அது பிறக்கும் பொழுதும் துன்பத்தைத் தருகிறது. இறக்கும் பொழுது அதைவிடப் பெரிய துன்பத்தைத் தருகிறது.
இரண்டாவதாக, மூப்பு என்னும் நிலை அதற்கு ஏற்படுகிறது. மூப்பு நிலை எவ்வளவு துன்பமானது! உடலெங்கும் சுருக்கங்கள் விழுகின்றன. நடக்க முடியாமல் நடை தள்ளாடுகிறது. கண்பார்வை மங்கிப் போகிறது. பற்கள் கழன்று போகின்றன. காது சரியாகக் கேட்பதில்லை. வாயில் எப்பொழுதும் இருமல். அவனை யார் மதிப்பார்கள்? மனைவியும் அவன் சொன்னபடி கேட்பதில்லை. மகனைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. மகன் அவனிடம் எதிரி போல நடந்து கொள்கிறான். மூன்றாவதாக, நெஞ்சுவலி, பல்வலி, மூட்டுவலி, கால்வலி, மேல்வலி, நீரிழிவு என்று தொல்லை கொடுக்கின்றன. இளமைக் காலத்தில் விருந்தினர் போல எப்போதாவது வந்து சென்ற நோய் மூப்பு வந்ததும், குடும்பத்தில் ஒருவர் போலக் கூடவே தங்கி விடுகிறது!
உலகினர் இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. சிந்தித்தால் உடல்மீது இவ்வளவு பற்று ஏற்படுமா? இவ்வாறு கூறுவது கொண்டு, உடம்பைப் பேணாது புறக்கணிக்க வேண்டும் என்று கருதி விடலாகாது. சிவ நூல்கள் உடம்பை நன்கு போற்று என்றுதான் கூறுகின்றன. நலமாக வைத்துக்கொள் என்றுதான் கூறுகின்றன. ஏனெனில், ஞானம் பெறுவதற்கு உடம்புதான் சாதனம். உடம்பை உயிர் நலத்திற்குக் கருவியாகப் பயன்படுத்த வேண்டுமேயன்றி, உடம்பைப் பேணுதல் ஒன்றையே முடிந்த பயன் என்று நினைத்து விடக்கூடாது. ஆக்கைக்கே இரை தேடி அலையலாகாது. உடல் மீது அளவு கடந்த பற்று வைத்தல் கூடாது. உலகர் உடற்பற்றும் பொருட் பற்றும் உடையராய் இருப்பதிலே வியப்பொன்றும் இல்லை. ஆனால், ஞான நெறியிற் செல்லும் சிலரும் அவ்வாறு இருப்பது தான் வியப்பு. ஞானாசிரியனிடத்தில் உடல், பொருளோடு ஒப்பத் தம்மையும் அவனுடையனவாக ஒப்புவித்துத் தானம் செய்த பிற்பாடு, தானம் செய்தவழியிலே நிற்றலே முறையாகும். தானம் செய்த வழியிலே நிற்றலாவது, தாம் சிவனுக்கு அடிமை என்பதை உணர்ந்து, அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யாமல் நிற்றலேயாகும். அவ்வாறு நில்லாமல், உடல் பற்றும், பொருட்பற்றும் உடையவராய்த் தன் முனைப்போடு நிற்றல் எவ்வகையில் உய்வைத் தரும்?
இது பற்றித் திருமூலர் பின்வருமாறு கூறுகிறார். காட்டில் உள்ள கோடிக்கணக்கான சந்தன மரங்களின் கட்டைகளைத் தேய்த்து எடுத்த சந்தனத்தையும், வானைத் தொடும்படி குவித்த மலர்களையும் பயன்படுத்திச் சிவனை வழிபட்டாலும் என்ன பயன்? உடம்பைத் தமக்கு வேறாக உணர்ந்து, அதன்மீது வைத்த பற்றை விடுத்துச் சிவனையே பற்றாக உணர்ந்தாலன்றி அவனது திருவடியைப் பெற இயலாது என்கிறார். ஒரு நோய் குணமாவதற்கு மருத்துவர் சில மருந்துகளைக் கொடுப்பார். அதனோடு சில பத்தியங்களையும் விதிப்பார். இதை உண்ணக் கூடாது. அதைத் தொடக்கூடாது என்றெல்லாம் சொல்வார். அவர் சொன்னபடி மருந்தையும் உட்கொள்ள வேண்டும். பத்தியத்தையும் பின்பற்ற வேண்டும். பத்தியத்தை விடுத்து மருந்தை மட்டும் உட்கொண்டு பயனில்லை. பத்தியத்தை மேற்கொள்ளாமல் மருந்தினை மட்டும் உட்கொள்வார் போல, பற்று நீங்கியிருத்தல், விருப்பு வெறுப்பின்றி இருத்தல் முதலியவற்றை மேற் கொள்ளாமல் சிவ பூசை செய்கின்றனர்; சிவ பூசை செய்யும் போதே மனைவி மக்கள் மீது சீறிப்பாய்கின்றனர். அதை ஏன் செய்தாய்? இதை ஏன் செய்யவில்லை? என்று கடிந்து கொள்கின்றனர். இவ்வாறு திருவருளில் அடங்கி நில்லாமல் தன் முனைப்போடு திருவருளுக்கு முன்னே செல்லும் இவரையே இருளின் எழும் சுடரின் முன் புகுவார் என்று குறிப்பிட்டார் ஆசிரியர்.
பின் புகுவார் :
உடைமைகளும் உறவுகளும் ஆகிய எல்லாம் கடலில் மிதக்கும் கட்டைகள் போன்றவை என்பார்கள். இந்தக் கட்டைகள் ஒரு சமயம் சேர்ந்து இருக்கும். பிறகு காற்றோ, அலையோ அடிக்கும் பொழுது அவை பிரிந்து வெவ்வேறு திசைகளில் சென்று விடும். செல்வம், மனைவி, மக்கள், உறவினர் எல்லோரும் கடலில் ஒன்று சேர்க்கப்பட்ட கட்டைகள் போன்றவர். எப்பொழுது போக வேண்டுமோ அப்பொழுது போக வேண்டியவர்கள். இந்த உண்மையைத் தெளிந்தால் பற்றை விடுவது எளிது. தாமரை இலை தண்ணீரிலேயே பிறந்து தண்ணீரிலேயே வளர்கிறது. ஆயினும் அது தண்ணீரைத் தன் மீது தங்க விடுவதில்லை. தண்ணீர் மீது அதற்குப் பற்றுதல் இல்லை. அந்தத் தாமரையிலையைப் போல வாழ வேண்டும்; பற்று இல்லாமல் வாழ வேண்டும். நான் செய்கிறேன் என்று நினைக்காமல், எல்லாவற்றையும் இறைவன் செயலாக உணர்ந்து அவன் வழியில் நிற்க வேண்டும்.
பக்குவம் வராத பொழுது திருவருளுக்கு முன்னால் சென்ற அவரே பக்குவம் வந்த காலத்தில் உண்மையைத் தெளிந்து, எல்லாப் பற்றினையும் விடுத்துத் திருவருளுக்குப் பின்னே செல்வர். ஆதலால் இருளின் எழும் சுடரின் பின் புகுவார் என்று குறிப்பிட்டார் ஆசிரியர். முந்திய அதிகாரத்தில் உள்ள உற்கை தரும் பொற்கை என்னும் செய்யுளின் தொடர்ச்சியாகவே இச்செய்யுள் அமைந்துள்ளது. அச்செய்யுள் அருள்நிலை இப்படிப்பட்டது என்பதை உணர்த்தியது. இச்செய்யுள் அருள்நிலையால் விளையும் பயனை உணர்த்துகிறது. அஃதாவது, அருள் நிலையினால் இன்புறு நிலை உண்டாகும் என்று கூறுகிறது.
குறிப்பு :
பொருள் நிலைக்கு ஏற்பச் செய்யுளில் உள்ள சொற்களைப் பின் வருமாறு அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். துன்பார் இருளின் எழும் சுடரின் முன் புகுவார் பின் பின்புகுவார் (ஆனபொழுது) இன்புறுவார் என அமைத்துக் கொண்டால் பொருள் இனிது விளங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக