வெள்ளி, 3 நவம்பர், 2017

69. கருவிகளும் உயிரறிவும் அறியா

69. கருவிகளும் உயிரறிவும் அறியா
ஐம்புலனால் தாம் கண்டது என்றால் அது ஒழிய
ஐம்புலன் ஆர்? தாம் ஆர்? அதற்கு.

பொருள் : உயிர் ஐம்பொறி முதலிய கருவிகளைக் கொண்டு அறிந்து வந்ததெல்லாம் மெய்ப் பொருளாகிய சிவம் நீங்கலாக ஏனையவற்றையேயாம். அப்படியிருக்க, முத்திக் காலத்தில் அம்மெய்ப் பொருளை அறிவதற்கு அக்கருவிகள் துணையாதற்கு என்ன உரிமையுடையன? இனி, அக்கருவிகள் இன்றி ஒன்றையும் அறிய மாட்டாத உயிர்களும் தனியாய் நின்று அம்மெய்ப் பொருளை அறிதற்கு என்ன உரிமையுடையன?
சொற்பொருள் :
தாம் ஐம்புலனால் கண்டது - உயிர் ஐம்பொறி முதலிய கருவிகளைக் கொண்டு அறிந்து வந்தது
அது ஒழிய என்றால் - மெய்ப் பொருளாகிய சிவம் நீங்கலாக ஏனையவற்றையே யென்றால்
அதற்கு - அம் மெய்ப் பொருளை அறிதற்கு
ஐம்புலன் ஆர் - ஐம்பொறி முதலிய அக்கருவிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது?
தாம்ஆர் - இனி, அக்கருவிகளின் துணையின்றி ஒன்றையும் அறிய மாட்டாத உயிர்களும் தனித்து நின்று அம்மெய்ப் பொருளை அறிதற்கு என்ன உரிமையுடையன?

விளக்கம் :
கருவிகள் துணையாக மாட்டா :
கருவி கரணங்களால் சிவத்தையறிதல் இயலும் என்பது சைவரில் ஒரு சாரார் கொள்கை. அவர்கள் பின்வருமாறு கூறுவர். பெத்த காலத்தில் கருவிகள் சீவகரணம் எனப்பெயர் பெற்று இருளாய் நின்று உயிரை மயக்குதலின் அப்பொழுது அவை மெய்ப் பொருளைக் காணுதற்குத் துணை செய்யா என்பது பொருந்தும். ஆயின் முத்தி காலத்தில் அக்கருவிகள் அத்தன்மை நீங்கிச் சிவகரணம் எனப் பெயர் பெற்று ஒளியாய் நிற்றலின், அவை மெய்ப் பொருளை அறிதற்குத் துணை செய்யும் என்று கூறுவர். இக் கொள்கையை முதலில் எடுத்துக் கொண்டு மறுக்கிறார் ஆசிரியர். இன்று வரையிலும் இறைவனைக் காட்ட மாட்டாத இக்கருவி கரணங்கள் இனிமேல் அவனைக் கண்டு காட்டும் என்றல், பேதைமையாம் என்கிறார். முத்தி நிலையில் இக்கருவிகள் சிவனது கலப்பால் சிவத்தன்மையை உடையன வாயினும் அவை சுட்டுணர்வையன்றி வியாபக உணர்வைத் தரமாட்டா. சுட்டுணர்வினால் அறியப்படுபவை அழியக் கூடிய உலகப் பொருள்களேயாகும். இறைவன் சுட்டுணர்வுக்கு அப்பாற்பட்டவன். எனவே அவனை அறிதற்கு அக்கருவி கரணங்கள் என்ன உரிமையுடையன என்று கேட்கிறார்.
உயிரறிவு தனித்து நின்று அறிய மாட்டாது :
இனி, சிவசமவாத சைவர் என்பார் பின்வருமாறு கூறுவர். பெத்த காலத்தில் ஆன்ம அறிவு மலத்திற் கட்டுண்டு சிற்றறிவாய் நிற்பதனால் அப்பொழுது அது மெய்ப் பொருளாகிய சிவத்தைத் தனித்து நின்று அறிய மாட்டாது என்பது உண்மையே. ஆனால், முத்தி காலத்தில் ஆன்ம அறிவு மலம் முழுதும் நீங்கிப் பேரறிவாய் சிவனது அறிவுக்குச் சமமாய் நிற்கும். ஆதலால் அப்பொழுது அது மெய்ப்பொருளைத் தனித்து நின்று அறிய வல்லதாகும் எனக் கூறுவர். இவ்வாறு கூறுவது சிவநெறிக்குப் பெரிதும் புறம்பானதாகும். உயிரறிவு எக்காலத்திலும் சிவனது அறிவுக்குச் சமமாக முடியாது. உயிரினது சிறப்புத் தன்மை வேறு. சிவனது சிறப்புத் தன்மை வேறு. உயிரினது சிறப்புத் தன்மை, அறிவிக்க அறிவது. சிவனது சிறப்புத் தன்மை தானே அறிவது. பொருளினது சிறப்புத் தன்மை எக்காலத்திலும் மாறாது. எனவே, உயிரானது அறிவிக்க அறிவதாகிய தனது சிறப்புத் தன்மை மாறித் தானே அறிவதாகிய சிவனது சிறப்புத் தன்மையைப் பெறும் என்பது எக்காலத்திலும் நடவாது. உயிரினது அறிவு முன்பு சிற்றறிவாய் இருந்து பின் மலம் முழுவதும் நீங்கிய நிலையில் முழுமையாக விளங்கிப் பேரறிவு எனப் படுமாயினும், அப்பொழுதும் அது சிவனது முற்றறிவை நோக்கச் சிற்றறிவேயாம். அந்நிலையிலும் அது தானே அறியமாட்டாது. சிவனது அறிவு உடனின்று அறிவிக்கவே அறிவதாகும்.
நாழி என்ற முகத்தற் கருவியைக் கொண்டு கடல் நீரில் பல முறை ஆழமாக அமுக்கி முகந்தாலும் அந்த நாழி எங்கேயாவது நான்கு நாழி நீரை முகந்து கொள்ள முடியுமா? அது தன்னளவுக்கு உரிய நீரை மட்டுமே முகக்க இயலும். அதுபோல மலம் நீங்கிய முத்தி நிலையிலும் உயிரறிவு உயிரறிவாகவே இருக்கும். அது சிவனறிவுக்குச் சமமாக மாட்டாது. அப்பொழுதும் உயிர் சிவனது அறிவாகிய திருவருள் காட்டவே தன்னையும் சிவத்தையும் காண்பதாகும். ஆதலால் முத்தி நிலையில் ஆன்ம அறிவு சிவனறிவை ஒப்பதாகும் என்றும், மெய்ப் பொருளாகிய சிவத்தைத் தனித்து நின்று அறியும் என்றும் சிவசமவாதிகள் கூறுவது <உண்மைக்குப் புறம்பானதாகும். சிவனோடு ஒப்ப யாமும் எல்லாம் அறிந்து, எல்லா வல்லமையும் பெற்று வாழ்வோம் என்று அவர்கள் ஆசைப்பட்டு இப்படிக் கூறுகிறார்கள். மலைமேல் உள்ள தேனுக்கு ஆசைப்பட்டு முடவன் வாயூறி நின்றாற் போன்றது அவர்கள் நிலை! சிவசமவாத சைவரை நோக்கித் தாம் ஆர் அதற்கு என வினவுகிறார் ஆசிரியர் உமாபதிசிவம். சிவத்தை அருள் வழியாக அன்றித் தனியாய் நின்று அறிவதற்கு அவர்கள் என்ன உரிமையுடையவர்கள் என்பது இவ்வினாவில் அமைந்துள்ள குறிப்பு.
மூன்று ஞானங்கள் :
ஞானங்கள் மூன்றாகும். அவை பாச ஞானம், பசு ஞானம், பதி ஞானம் என்பன. பாச ஞானம் என்பது கருவிகளால் வரும் அறிவாகும். பாசம் என்பது மாயையைக் குறிக்கும். ஐம்பொறி முதலிய கருவிகள் பாசமாகிய மாயையின் காரியங்கள். அக் கருவிகளால் அறியப்படுகின்ற உலகமும் பாசமாகிய மாயையின் காரியமாகும். இதனால் கருவிகளும் உலகமும் ஆகிய எல்லாம் பாசமே என்பது விளங்கும். இது பற்றியே, பாசமாகிய கருவிகளைக் கொண்டு பாசமாகிய உலகத்தை அறிகின்ற அறிவு பாசஞானம் எனப்படுவதாயிற்று. இனி, அக்கருவிகளை வேறாகக் கண்டு நீங்கிய விடத்து உயிருக்கு விரிந்த அறிவு உண்டாகும். அந்நிலையில் உயிர் தன்னை சிவத்திற்குச் சமமாக மயங்கி உணரும். சிவனைப்போல எல்லாச் செயலும் செய்தல் கூடும் என உணரும். அப்பொழுதும் திருவருள்தான் செய்விக்கிறது என்பதை அது உணர்வதில்லை. இது பசுத்துவம் எனப்படுகிற ஆணவ மலத்தின் வாசனை நீங்காத நிலையாகும். இவ்வாறு பசுவாகிய தன்னையே பொருளாக மதிக்கின்ற இந்த ஞானம் பசு ஞானம் எனப்படுவதாயிற்று. மூன்றாவதாகிய பதி ஞானம் என்பது இறைவனது பேரறிவாகும். பதியினது ஞானம் பதி ஞானமாயிற்று. பதி சிவமேயாதலின் பதி ஞானம் சிவ ஞானம் என்றும் சொல்லப்படும். திருவருள் என்பதும் இதுவே. இவற்றுள் பாச ஞானமும், பசு ஞானமும் சிவனை அறிய மாட்டா. இதனையே இச் செய்யுளில் குறிப்பிட்டார் ஆசிரியர். ஐம்புலன் ஆர் அதற்கு? என்று கூறிக் கருவியறிவாகிய பாச ஞானம் இறைவனை அறியத் துணை செய்யாது என விலக்கினார். தாம் ஆர் அதற்கு? என்று கூறிப் பசு ஞானமும் தனித்து நின்று இறைவனை உணரமாட்டாது என விலக்கினார். இவ்வாறு இரண்டு ஞானங்களை விலக்கி, எஞ்சியுள்ள பதி ஞானமாகிய திருவருளைத் துணைக் கொண்டே பதியாகிய மெய்ப் பொருளை அறிய முடியும் என்ற கருத்தைப் பெற வைத்தார் ஆசிரியர். மூன்று பொருள்கள் உள்ள இடத்தில் இரண்டினை விலக்கி எஞ்சியுள்ள மூன்றாவது பொருளைத் துணிதல் பாரிசேடம் (ஒழிபு) என்னும் முறையாகும் என முன்னே கூறியுள்ளோம். (செ-33) அம் முறைமையை இச்செய்யுளிலும் நாம் காண்கிறோம்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...