வெள்ளி, 3 நவம்பர், 2017

70. உயிர் தனது வலிமையால் பெற முடியாது

70. உயிர் தனது வலிமையால் பெற முடியாது
தாமே தரும் அவரைத் தம்வலியினால் கருதல்
ஆமே? இவன் ஆர் அதற்கு?

பொருள் : முதல்வன் தானே தனது கருணையினால் உயிருக்கு ஞானத்தைத் தந்து தன்னை உணர்த்தி நிற்கிறான். அங்ஙனமாக, அம்முதல்வனை உயிர் தானே தன் முயற்சியினால் அடைந்ததாகக் கருதுவது பொருந்துமோ? முதல்வனை இவ்வுயிர் தனது வலிமையால் பெறுவதற்கு என்ன உரிமையுடையது.
சொற்பொருள் :
தாமே தரும் அவரை - தானே தனது கருணையினால் <உயிருக்கு ஞானத்தைத் தந்து தன்னை உணர்த்தி நிற்கும் முதல்வனை
தம் வலியினால் கருதல் ஆமே? - உயிர் தானே தன் வலிமையினால் உணர்ந்ததாகக் கருதுதல் பொருந்துமோ?
அதற்கு இவன் ஆர்? - அம் முதல்வனை உயிர்தனது முயற்சியால் பெறுவதற்கு என்ன உரிமையுடையது?

விளக்கம் :
உடம்பு என்னும் தேர் :
நிலையற்றதாகிய இந்த உடம்பை ஒரு தேர் என்று சொல்லலாம். இந்தத் தேரில் அமர்ந்து கொண்டு பயணம் செய்பவன் ஆன்மா. ஐந்து இந்திரியங்கள்தாம் இத்தேரை இழுத்துச் செல்லும் குதிரைகள். மனம் தான் அவற்றைச் செலுத்துகிற தேர்ப்பாகன். இந்திரியங்கள் பொதுவாகத் தீய வழிகளில் செல்பவை. அவற்றை அவை போகும் போக்கில் விடக் கூடாது. விட்டால் அவை தேரையும், தேரில் செல்லும் ஆன்மாவையும் படுகுழியில் தள்ளிவிடும். ஆகவே மனமாகிய தேர்ப்பாகன் நல்லுணர்வு என்ற கடிவாளத்தைக் கொண்டு இந்திரியங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவன் திசை தெரியாத பாகனாக இருந்தால் தேரைக் கண்ட இடத்திற்குச் செலுத்தி விடலாம். எனவே ஆன்மா தான் போய்ச் சேர வேண்டிய இடத்தைச் சென்றடைய வேண்டுமானால் இந்திரியங்களாகிய பரிகளும் சரியாக இருக்க வேண்டும்; மனமாகிய பாகனும் செம்மையாக ஓட்டத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக, இறைவனது திருவருள் துணை நிற்க வேண்டும்.
பற்றறுதி :
உலகப் பற்று என்பது தவறான பாதை. தவநெறி என்பதே ஆன்மா மேற்கொள்ள வேண்டிய சரியான பாதை. உலகப் பற்றில் செல்லாமல் இருப்பது என்பது எளிதான செயலா? இல்லை. கண்ட கண்ட பொருளையெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருக்கிறது. எத்தனை எத்தனை ஆசைகள்! இந்த ஆசைகளுக்குத்தான் ஓர் எல்லை உண்டா? உலக ஆசைகளை விடுவது எப்படி? வைராக்கியம் ஒன்றே அதற்கு வழியாகும். வைராக்கியத்தைத் தமிழில் பற்றறுதி என்பர். பற்றற்று இருத்தலாகிய வைராக்கியம் எப்படி ஏற்படும்? உலகப் பொருள்களிலுள்ள குற்றங்களைப் பார்க்கத் தெரிந்து கொண்டு விட்டால் வைராக்கியம் ஏற்படும். உலகப் பொருள்கள் நிலையற்றவை; இடையில் நீங்கக் கூடியவை; முதலில் இன்பமாகத் தோன்றிக் கடைசியில் துன்பத்தைத் தருபவை என்று தெரிந்துகொண்டால் வைராக்கியம் தானே ஏற்படும். உலகப் பற்றுப் போய்விடும்; இறைவன் மீது பற்று ஏற்பட்டு விடும். இந்த நிலை வருவதற்கும் இறைவனது அருளே காரணம். இதைத்தான் திருவருள் பதிதல் என்கிறோம்.
எதையும் மலர்ச்சியுடன் ஏற்றல் :
எந்தப் பொருளும், எந்தச் சூழ்நிலையும் தன்னிடத்தில் இன்பத்தையோ, துன்பத்தையோ கொண்டிருக்கவில்லை. ஒருவருக்குத் துன்பமாகத் தோன்றும் அதே பொருளும், அதே சூழ்நிலையும் இன்னொருவருக்கு இன்பமாகத் தோன்றுகிறது. நமக்கே ஒரு சமயத்தில் இன்பமாகத் தோன்றும் பொருள் மற்றொரு சமயத்தில் துன்பமாகத் தோன்றுகிறது. எனவே, இன்பமும் துன்பமும் பொருளிலோ, சூழ்நிலையிலோ இல்லை என்பது தெளிவு. அவரவர் அணுகும் முறையில்தான் இன்பமோ துன்பமோ உள்ளது. நோய் வந்தால் மருந்து கசப்பாக இருந்தாலும் இனிப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு உட்கொள்ளுகிறோம். அதுபோல, வேண்டியது வேண்டாதது என்று கருதாமல், எது வந்தாலும் அதை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்பத்தையும் துன்பத்தையும், இகழையும் புகழையும், வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதும் இந்த மனநிலை வருவதற்கு இறைவனது அருளே காரணம். இதைத்தான் இருவினை யொப்பு என்று சொல்லுகிறோம்.
ஞானக் கண்ணைத் தருதல் :
மேற்கூறிய பக்குவ நிலைகளை இறைவன் தான் உயிரின்கண் வருவிக்கின்றான். வருவித்து உயிருக்கு ஞானத்தைத் தருகின்றான். அந்த ஞானக் கண்ணால் உள்நோக்கித் தன்னை உணரும்படியாகச் செய்கின்றான். எனவே முதல்வனை உயிர் அவனது அருளால் உணர்ந்ததேயன்றித் தனது முயற்சியால் அன்று என்பது விளங்கும்.
உயிரின் முயற்சியால் ஆகாமை :
ஆனால், சைவரில் ஒரு சாரார் பின் வருமாறு கூறுவர். மரத்தின் நிழல் இருந்தபடியே இருக்கும். அது போய் வழிப் போக்கனை அழைத்துத் தன்னிடம் தங்க வைக்காது. வெயிலை விட்டு நீங்கி நிழலை அடைதல் வழிப் போக்கன் செயலேயன்றி, மரத்தின் செயல் அன்று. அதுபோல மலத்தின் நீங்கி இறைவன் திருவடியை அடைதல் உயிரின் செயலேயன்றி இறைவன் செயல் அன்று. மலத்தை நீக்குதல், உயிர்களைத் தனது திருவடியிற் சேர்த்தல் ஆகிய செயல்களை இறைவன் செய்தால் அவன் தனது நிலையில் வேறுபட்டவன் ஆகிவிடுவான். என்றும் ஒரு தன்மையன் என்ற இலக்கணத்திற்கு இஃது இழுக்காகிவிடும் என்று கூறுவர். உயிரே தனது முயற்சியினால் தானே இறைவனைச் சென்று அடையும் என்பார் கூற்றை இச்செய்யுளில் மறுத்துள்ளார் நம் ஆசிரியர். எல்லாம் இறைவன் செயலாய் இருக்க, உயிர் அவனைத் தனது முயற்சியால் உணர்ந்ததாகக் கருதுமாயின் அது மயக்க உணர்வாகும் என்பது இச்செய்யுளின் கருத்தாகும். காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே என்று திருமுறை கூறுவதும் அறியத்தக்கது. இறைவன் உயிர்களிடத்தில் பெருங்கருணை யுடையவன். இரும்பைக் காந்தம் ஈர்த்துத் தன்வசப்படுத்துகிறது. அச் செயலால் காந்தம் எந்த மாற்றமும் அடைவதில்லை. அதுபோல இறைவன் உயிர்களை ஈர்த்துத் தன் வசப்படுத்தி ஆட்கொள்கிறான். அச்செயலை அவன் தன் நினைப்பு மாத்திரத்தால் செய்தலின், அவன் தன் நிலையில் திரியான். அவன் என்றும் ஒரு தன்மையனே என்பது சைவ சித்தாந்த நிலையாகும்.
எட்டாம் அதிகாரம்
இன்புறு நிலை
கருவிகள் தாமாக நீங்கும் பொழுது உயிருக்குக் கேவலமாகிய அறியாமை உண்டாகும் எனவும், விழிப்பு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப் படங்கல் ஆகிய ஐந்தும் அவ்வாறு உண்டாகின்ற கேவல நிலைகள் எனவும் சென்ற அதிகாரத்தின் முன்னுரையில் குறிப்பிட்டு உள்ளது. விழிப்புநிலை வடமொழியில் சாக்கிரம் எனப்படும். கனவுநிலை சொப்பனம் எனப்படும். உறக்கநிலை சுழுத்தி எனப்படும். பேருறக்க நிலை துரியம் எனப்படும். உயிர்ப்பு அடங்கல் துரியா தீதம் எனப்படும். ஐவ் ஐந்து நிலைகளிலும் அறியாமை படிப்படியாக மிகுந்து வரும். இனி, கருவிகள் உள்ள பொழுதே அவற்றைத் தனக்கு வேறாகக் கண்டு நீங்கும்பொழுது உயிர் அறியாமையை அடைவதில்லை எனவும், திருவருளையே அடையும் எனவும் அங்கே கூறினோம். கருவிகளை இன்றி உயிர் அறியாமையைத் தலைப்படும் நிலை கேவலம் எனப் பெயர் பெற, கருவிகள் உள்ள பொழுதே அவற்றை நீங்கி உயிர் திருவருளைத் தலைப்படும் நிலை சுத்தம் எனப் பெயர் பெறும்.
சுத்தத்தில் ஐந்து நிலைகள் :
கேவலத்தில் உள்ளது போலத் திருவருளைத் தலைப்படும் சுத்தத்திலேயும் ஐந்து நிலைகள் உண்டு. அவையும் சாக்கிரம், சொப்பனம் முதலிய அதே பெயர்களைப் பெறும். கேவல நிலைகளிலிருந்து சுத்த நிலைகளாகிய இவற்றை வேறுபடுத்திக் காட்டுவதற்காகச் சுத்தம் என்ற அடைமொழியைச் சேர்த்து சுத்த சாக்கிரம், சுத்த சொப்பனம், சுத்த சுழுத்தி, சுத்த துரியம், சுத்த துரியாதீதம் என வழங்குவர். கேவல நிலைகளில் கருவிகள் நீங்க நீங்கப் படிப்படியே மல இருள் மிகுந்து வரும்; அறிவு நீங்கி வரும். இதற்கு மாறாகச் சுத்த நிலைகளில் கருவிகள் நீங்க நீங்கப் படிப்படியே திருவருள் ஞானமும், சிவானுபவமும் மிகுந்து வரும்; மல இருள் நீங்கி வரும். சுத்த நிலைகளில் மலம் நீங்கி வருவதைக் குறிக்கும் வகையில் நின்மலம் என்ற அடைமொழி சேர்த்து நின்மல சாக்கிரம், நின்மல சொப்பனம், நின்மல சுழுத்தி, நின்மல துரியம், நின்மல துரியாதீதம் எனவும் வழங்குவர்.
நின்மல சாக்கிரம் ஆகிய நிலையில் உயிர் திருவருள் ஞானத்தைப் பொதுவாகவும், நின்மல சொப்பனம், நின்மல சுழுத்தி ஆகிய நிலைகளில் ஐயமாகவும் உணர்ந்து நிற்கும். தனக்கென ஒரு செயலும் இல்லை எனவும், எல்லாம் திருவருட் செயல் எனவும் உணர்ந்தாலும் முன்னைப் பழக்கத்தினால் யான் செய்தேன் பிறர் செய்தார் என்று எண்ணும் தற்போதம் இங்கு எழவே செய்யும். இவ்வாறு எழும் தற்போதம் அறவே ஒழிந்து, தன் செயலற்றுத் திருவருளில் ஒன்றியிருக்கும் நிலையே நின்மல துரியம் ஆகும். இதுவே திருவருளைத் தெளிய உணர்ந்த நிலையாகும். என் செயலாவது யாதொன்றும் இல்லை; இனித் தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன் என வரும் பட்டினத்து அடிகள் திருவாக்கில் இத்தெளிவுணர்வைக் காணலாம். உயிர் விளக்கம் என்ற முந்திய அதிகாரத்தில் இந்த நிலையை விளக்கமாக அறிந்தோம். ஞானத்தின் படிநிலைகளாகக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கும் அமையும் என அறிந்துள்ளோம். கேட்டல் முதலிய நான்கும், இங்குக் கூறிய நின்மல சாக்கிரம் முதலிய ஐந்தும் வேற வேறல்ல; கேட்டல் முதலிய அவையே நின்மல சாக்கிரம் முதலிய இவைகளாய் நிகழும்.
கேட்டல் - நின்மல சாக்கிரம்
சிந்தித்தல் - நின்மல சொப்பனம் நின்மல சுழுத்தி
தெளிதல் - நின்மல துரியம்
நிட்டை கூடல் - நின்மல துரியாதீதம்

அருள்நிலையாகிய துரிய நிலை :
சிவம் கதிரவனும் அதன் கதிரும் போலத் தானும் தன் திருவருளும் என இரு திறப்பட்டு நிற்கும் என்பதே சித்தாந்தம். கதிரவன் தோன்றுவதற்கு முன்னே அதன் கதிர்கள் தோன்றிப் பரவுதலால் இருள் நீங்கும். அதுபோலச் சிவனை அடைதற்கு முன்னே திருவருளைப் பெறுதலால் ஆணவ இருள் நீங்கும். இவ்வாறு திருவருளை முதலில் அறிந்து அதனோடு ஒன்றுபடும் நிலையே அருள்நிலை என்றும், துரிய நிலை என்றும் சொல்லப்படுகிறது. சிவயோகம் என்ற பெயரையும் இது பெறும். திருவருள் சிவத்தின் வேறாகாது அதன் குணமே யாதலால், சிவயோகம் என்பதில் உள்ள சிவம் என்ற சொல் திருவருளைக் குறிக்கும். யோகம் என்பதற்கு ஒன்றுதல் என்பது பொருள். எனவே, திருவருளோடு ஒன்றுதல் சிவயோகம் எனப்பட்டது. திருவருளோடு ஒன்றுபடுதலால் மலம் ஆகிய மாசு நீங்கி உயிர் தூய்மை பெறுதலால், சிவயோகம் ஆன்ம சுத்தியாகும் என அறியலாம்.
அருள் நியையை எய்தினார் பாச நீக்கம் பெறுவர் என்பது இதனால் விளங்கும். பாச நீக்கம் என்பது துன்பம் அற்ற நிலையாகும். துன்ப நீக்கமே முடிந்த பயன் ஆகாது. அதற்கும் அப்பால் உள்ள இன்பப் பேற்றைப் பெறுதல் வேண்டும். அதுவே உயிர் அடைதற்குரிய முடிவான பயனாகும். அருள்நிலை என்பது கண்ணில்லாதவன் கண் பெற்றாற் போன்றது. கண்ணில்லாதவன் கண்ணைப் பெற்ற அளவிலே இன்பத்தை அடையமுடியாது. கண் பெற்றதன் பயனாகப் பொருள்களை யெல்லாம் கண்டு அவற்றுள் வேண்டாத பொருளை விட்டு நீங்கி, வேண்டும் பொருளை அடையும் பொழுதே இன்பம் உண்டாகும். அதுபோலத் திருவருளைப் பெற்ற அளவிலே இன்பம் உண்டாகாது. திருவருளைப் பெற்றதன் பயனாக முப்பொருள்களின் இயல்புகளை உள்ளவாறு அறிந்து, வேண்டாத உலகியலினின்றும் நீங்கி, வேண்டும் பொருளாகிய சிவத்தை அடையும் போதே பேரின்பம் உண்டாகும். அருள்நிலை திருவருட்பேறு ஆகும். சிவத்தை அடையும் நிலை சிவப்பேறு ஆகும். திருவருட்பேறு ஆன்ம சுத்தியாகும் எனமேலே கூறினோம். சிவப் பேறாகிய இதுவே ஆன்ம லாபமாகும். அஃதாவது ஆன்மா பேரின்பத்தைத் துய்க்கும் நிலையாகும்.
நிட்டை ஆகிய அதீத நிலை :
அருள்நிலை துரியநிலை எனப்படுதலால், அதற்கு அப்பால் உள்ள இந்தப் பேரின்ப நிலையாகிய சிவப்பேறு துரியாதீத நிலை எனப்படுகிறது. இதனை அதீதநிலை எனச் சுருக்கமாகக் கூறுவர். இந்த அதீத நிலையே நிட்டை நிலை எனப்படுவது. மேற்கூறியவற்றிலிருந்து துரியாதீதம், நிட்டை, சிவப்பேறு, சிவபோகம், இன்புறுநிலை, ஆன்ம லாபம் ஆகிய எல்லாம் ஒரு பொருள் குறித்த சொற்களேயாம் என அறியலாம். நிட்டை ஆகிய அதீத நிலையை மேலு<ம் சிறிது விளக்குவோம். உலகத்தோடு தொடர்புற்று நில்லாமல், உலகை மறந்து, அறிகின்ற தன்னையும் மறந்து, சிவம் ஒன்றையே அறிந்து அதில் அழுந்தி நிற்பதாகிய நிலையை உடம்பு உள்ள காலத்தில் அடைவதே நிட்டையாகும். இந்நிலையில் பகல் இரவு முதலிய காலவேறுபாடுகள் தோன்றுவதில்லை. பிற நினைவுகள் எழுவதில்லை. இந்நிலையில் நிற்பார்க்கு எல்லையில்லாததோர் இன்பம் தோன்றும். அவ்வின்பம் மேலும் மேலும் பெருகி அவரை விழுங்கி நிற்கும். இதுவே பரமசுகம் எனப்படும். முடிந்த இன்பம் என்பது அதன் பொருள். மலரிலுள்ள மதுவினைப் பருகிய வண்டு எப்படி அம்மலரிலேயே மயங்கிக் கிடக்குமோ அப்படியே இறைவனது வியாபகத்துள் அடங்கி அழுந்திப் பேரின்ப வாரியில் திளைத்து நிற்பர்.
தன்வசம் அழிந்த தலைவி :
இந்நிலையைத் தலைப்பட்டவர் எவ்வாறு இருப்பர் என்பதைக் காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் நிலையில் வைத்துக் காட்டுகிறார் நாவுக்கரசர்.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

நங்கையொருத்தி ஒருநாள் திருவாரூர்ப் பெருமானின் திருப்பெயரைக் கேட்டாள். அவனது பெயரைக் கேட்ட அளவிலேயே அவன் மீது அவளை யறியாமலே ஓர் ஈடுபாடு உண்டாயிற்று. அந்தப் பெயருக்கு உரியவன் எப்படி இருப்பான்? இதையறிய அவள் உள்ளம் விழைந்தது. தன் தோழியிடம் இதுபற்றி வினவினாள். அவன் கண்ணைக் கவரும் கட்டழகன். அவனது வடிவழகைச் சொற்களிலே வடித்துக் காட்ட முடியுமா? அடடா! என்ன அழகு! பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் என்று தோழி கூறினாள்.
முதலில் அவனது பெயரைத் தெரிந்து கொண்ட தலைவி இப்பொழுது அவனது வண்ணத்தைக் கேட்டறிந்தாள். பின்னும் அவளது உள்ளத்தில் வேட்கை கிளர்ந்தெழுந்தது. நித்தம் மணாளன், நிரம்ப அழகியன் என்றெல்லாம் சொல்கிறாயே; அந்தச் செம்பவள மேனியன் எங்கே இருக்கிறான் என்பது பற்றிச் சொல் என்று தோழியிடம் கேட்டாள். அவன் இருக்குமிடம் திருவாரூர் என்று சொன்னாள் தோழி. இவ்வாறு பெயர், வண்ணம், ஊர் இவற்றைக் கேட்டறிந்தவுடன் அத்தலைவன் மீது அவள் தீராக் காதல் கொண்டு விட்டாள். எப்பொழுதும் அவனைப் பற்றிய நினைவுதான்! காதலினால் அவள் பிச்சியாகவே ஆகிவிட்டாள். பெற்று வளர்த்த அம்மா அப்பா எல்லோரையும் தன் மனத்திலிருந்து அகற்றி விட்டாள்; உலகத்தார் வகுத்து வைத்த ஆசாரத்தையும் கடக்கத் துணிந்து விட்டாள். அஃதாவது, தலைவனைத்தேடி அவனிருப்பிடத்திற்குத் தனியே செல்லத் துணிவு கொண்டாள். உணவை மறந்தாள்; உறக்கத்தை மறந்தாள்; தன்னையே மறந்தாள்; தன்வசம் அழிந்து, தலைவன் வழிப்பட்டு விட்டாள். இனி, இக்கருத்தை அருளியலோடு பொருந்திக் காண்போம்.
சத்தி நிபாதத்து உத்தமர் :
தலையன்புடைய இத் தலைவியின் நிலையில் உள்ளவர் சத்தி நிபாதம் வாய்க்கப் பெற்ற உத்தமர். அவள் முதலில் தலைவனது பெயரைக் கேட்டாள் என்பது, ஞானாசிரியரிடம் உபதேசத்தைக் கேட்டு இறைவனது இயல்பைப் பொதுவாக உணர்ந்த நிலையைக் குறிப்பதாகும். இது கேட்டல் என்றபடி நிலையாகும். அந்நங்கை அடுத்துத் தலைவனது வண்ணத்தைக் கேட்டறிந்தாள் என்பது, பின்னர் இறைவனது இயல்பை ஆராய்ந்து உணர்ந்த நிலையைக் குறிப்பதாகும். இது சிந்தித்தல் என்றபடி நிலையாகும். உலகியலில் ஒரு பெண் ஓர் இளைஞனைச் சந்தித்துப் பழக நேரிடும்போது முதலில் பொதுவாக நட்பு ஏற்படுகிறது. அவ்வளவில் நில்லாமல் அப்பெண் அவ் இளைஞனைப் பற்றி அடிக்கடி நினைக்கிறாள் என்றால் அந்நட்புக் காதலாக மலர்கிறது என்பது பொருளாகும். அதற்கும்மேல், அவள் அவ் இளைஞனுடைய இருப்பிடம், அவனது சூழ்நலை முதலியவற்றை அறிந்து அங்கே செல்ல மிகுந்த ஆர்வம் காட்டுகிறாள் என்றால் அவள் காதலில் உறுதிகொண்டு விட்டாள் என்பது பொருள்.
அவ்வாறே தலைவி தலைவனது திருவாரூர் பற்றிக் கேட்டறிந்தாள் என்பது அவன் மீது கொண்ட காதலின் உறுதிப்பாட்டைப் புலப்படுத்தும். இது ஞானாசிரியரிடம் கேட்டு அதைப் பலகாலும் சிந்தித்துப் பின்னர் தெளிவுணர்வு பெற்ற நிலையைக் குறிப்பதாகும். இது தெளிதல் என்றபடி நிலையாகும். அந்நங்கை அவனுக்கே பிச்சியானாள் என்பது, தெளிவுணர்வின் பயனாக இறைவனிடத்தில் அழுந்தி நிற்பதாகிய நிலையைப் பெற்றதைக் குறிப்பதாகும். இது நிட்டை கூடுதல் என்றபடி நிலையாகும். அன்னையையும் தந்தையையும் நினைவிலிருந்து அகற்றினாள் அந்நங்கை என்பது ஞான நெறியில் என்ன பொருளைக் குறிக்கும் என்பதைக் காண்போம். ஞான நெறியில் அன்னையாக இருப்பது திரோதான சத்தி. அத்தனாக இருப்பவன் அச் சத்திக்குரிய தடத்த சிவன். திரோதான சத்தியே தாயாக நின்று பாசமாம் பற்றினை அறுத்து உயிரைப் படி முறையில் வளர்த்து வருகிறது. சத்தி நிபாதம் என்ற பரிபக்குவ நிலையில் திரோதான சத்தி நீங்கி விடுகிறது. தடத்த சிவன் என்ற நிலையும் அவ்வாறேயாம். இதுவே ஞானநெறியில் அன்னையையும் அத்தனையும் நீத்த நிலையாகும்.
அகலிடத்தார் ஆசாரம் என்பது திருமணப் பருவம் வந்த பெண் இல்லினை இகந்து செல்லாதிருத்தல் என்ற பழைய மரபாகும்; தலைவி அதனை அகன்றாள். அஃதாவது, இல்லிறந்து செல்லத் துணிந்தாள். ஞானநெறியில் அகலிடத்தார் ஆசாரம் என்பது, உலக மாந்தர் தன் முனைப்போடு கூடி வினைகளை ஈட்டியும் வினைப்பயனை நுகர்ந்தும் உழலுதல். நிட்டை கூடிய ஞானியர்க்குத் தன் முனைப்பும் இல்லை; வினைகளை ஈட்டுதலும் இல்லை; வினைப் பயனால் தாக்குறுதலும் இல்லை. ஆதலால் அவர் அகலிடத்தார் ஆசாரத்தை அகன்றவர் ஆவார். நங்கை தலைவன் ஒருவனையே நினைத்து தன்னை மறந்து நின்றாள். அவ்வாறே நிட்டை கூடியவரும் தம்மையும் உலகையும் மறந்து, இறைவன் ஒருவனையே அறிந்து நிற்பர். கன்னிப் பெண் என்ற பெயர் நிறை அழியாதிருக்கும் நிலையைக் குறிக்கும். இவள் தலைவனையே நினையும் நினைவினால் நிறையழிந்து நின்றாள் ஆதலால், தன் நாமம் கெட்டாள் எனப்பட்டாள். நிட்டை கூடியவரும் சீவத் தன்மை கெட்டு நிற்பர். ஆதலால் நாமம் கெடுதல் அவர்க்கும் பொருந்துவதேயாம். நங்கை தலைவன் தாளைத் தலைப்பட்டாள் என்பது, அவள் தனக்கென ஒன்று இன்றி அவன் வழிப்பட்டு விட்டாள் என்பதைக் குறிக்கும். ஞான நெறியில் தாளைத் தலைப்படுதல் என்பது நிட்டையில் நின்றார் எய்தும் இன்புறு நிலையை உணர்த்தும். இப்படியெல்லாம் ஒற்றுமை கண்டு மகிழும்படியாக உலகியலையும் அருளியலையும் இணைத்து நிட்டை நிலையை இனிது விளக்கியுள்ளார் நாவுக்கரசர்.
ஞானத்தின் நிறை நிலை :
ஞானத்தின் படிநிலைகளாகிய கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என்ற நான்கினுள் நிட்டையே ஞானத்தின் நிறைநிலை ஆகும். அதுபற்றி, அதனை ஞானத்தில் ஞானம் என்பர். ஏனைக்கேட்டல் முதலிய மூன்றனையும் முறையே ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம் என்பர். ஞானத்தின் நிறைநிலையாவது சிவத்தின் உண்மையியல்பைத் தலைப்படுதல். சிவத்தின் உண்மையியல்பாவது, இன்ப வடிவினதாயிருத்தல். கேட்டல், சிந்தித்தல் ஆகிய நிலைகளில் நிற்போர் இறைவனது பொதுவியல்பை அறிந்தவரே யன்றி உண்மையியல்பை அறிந்தவர் ஆகார். நிட்டை நிலையை எய்தினோரே அவனது உண்மையியல்பாகிய வரம்பிலா இன்பத்தைத் தலைப்பட்டு அதன் கண் அழுந்தி நிற்போர் ஆவர். ஞானத்தின் நிறைநிலையை அடைந்த அவரே ஞானியர் எனப்படுகின்றனர்.
ஞானியர் நாடுவது :
உலகத் தொடர்பை விடுத்து நிட்டை கூடி நிற்றலையே ஞானியர் நாடுவர். அவர்க்கு உடம்பும் மிகையாகும். அவர் உடம்பிற் கட்டுண்டிருத்தலைச் சிறிதும் பொறார். உடம்பைப் பெரிய சுமையாகக் கருதுவர். இந்நிலைக்கு ஓர் உவமை கூறலாம். ஊரின் புறத்தே ஓர் இடுகாடு. அதனை நோக்கி விரைந்து வருகிறான் ஓர் ஆடவன். அவன் கையில் ஒரு சவம்! அவன் கூலிக்காக அதைச் சுமந்து வருகிறான். இடுகாட்டில் அதைச் சேர்த்துவிட வேண்டும். அவ்வளவே அவன் வேலை. மற்று, அவனுக்கும் அச்சவத்துக்கும் வேறு எவ்வித ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. அப்பிணச் சுமையை எப்போது கீழே இறக்கலாம் என்ற விரைவே அவன் உள்ளத்தில் நிறைந்திருக்கிறது. அவனது உள்ள நிலை போன்றது ஞானிகளின் நிலை. பிணத்தைச் சுமந்து செல்பவனுக்கும் அப்பிணத்திற்கும் என்ன தொடர்போ அன்ன தொடர்பே தமக்கும் தம் உடம்பிற்கும் என்று கருதுவர் ஞானிகள். அதனால் தம் உடம்பை விரையக் கழித்தலையே அவர்கள் கருதியிருப்பர். மாணிக்கவாசகர், தினைத்துணையேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண் வலையே என்று கூறுவது உடல் வாழ்க்கையில் அவருக்கிருந்த வெறுப்பினைப் புலப்படுத்தும். வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன் என்று கூறுவது, நிட்டையிற் புகுந்து சிவானந்தப் பேற்றைப் பெறுதலில் அவருக்கிருந்த விரைவினைப் புலப்படுத்தும். ஞான நிட்டையாகிய இது மோன சமாதி எனவும்படும். பேசா அனுபூதி என்பதும் இதுவே. இது மனம் வாக்குகள் செயற்படும் நிலை அன்று. ஆதலால் இதில் விளையும் சிவானந்தம் அனுபவத்தால் அறியப்படுமேயன்றி, அயலவர் உரையால் அறிய வராது. மருவி இருவரும் புணர வந்த இன்பம் வாயினாற் பேசரிது; மணந்தவர் தாம் உணர்வர் என்றது இது பற்றியேயாம்.
ஞானமும் அன்பும் :
ஞானமாவது பொருள்களின் இயல்புகளை உள்ளவாறு அறிவது. அவ்வாறு அறியும் பொழுதே, துன்பந்தரும் பொருளை விட்டு நீங்கி இன்பம் தரும் பொருளைப் பற்ற முடியும். எனவே இன்பப் பொருளைப் பற்றுதற்கு ஏதுவாக இருப்பது ஞானம் என்பது விளங்கும். ஆயினும் அந்த ஞானமே இன்பத்தைத் தந்துவிடாது. ஞானத்தால் வ்வின்பப் பொருளைப் பற்றியவன் அதனை மேலும் மேலும் விரும்பும் போதே அவனது உணர்வு அப்பொருளிடத்தில் அழுந்தி இன்பத்தை அனுபவித்தல் கூடும். அந்த விருப்பமே அன்பு. அந்த அன்பு எந்த அளவிற்கு மிகுகின்றதோ அந்த அளவிற்கு இன்பமும் மிகுந்து செல்லும். இதனால், ஞானத்தால் வருவது அன்பு என்பதும், அந்த அன்பினால் விளைவது இன்பம் என்பதும் பெறப்படும். எனவே, நிட்டை நிலையில் உள்ள பெருமக்கள் சிவம் ஒன்றையே அறிந்து, அதன்பால் மேலும் மேலும் அன்பு மீதூரப் பெற்று, அதனிடத்தே அழுந்தி ஆராத இன்பத்தைத் துய்த்து நிற்பர் என்பது இனிது விளங்கும். இங்கே ஒன்றைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். ஞானமும் அன்பும் இணைபிரியாதவை. இவையிரண்டும் ஒன்றை ஒன்று விட்டு நிற்பன அல்ல. ஒன்றில் ஒன்று கலந்தேயிருக்கும். முற்றிய ஞானத்தின் பயனே பக்தி என்பதைத் தெளிவுறுத்தி,
ஞானம் ஈசன்பால் அன்பே
என்றனர் ஞானம் உண்டார் - (திருஞானசம்பந்தர் புராணம் செ.843)

என்று சேக்கிழார் பெருமான் அருளிச் செய்துள்ளமை காணலாம். இப்பிறப்பில் பத்தி நிலையில் உள்ளவரும் கூட முற்பிறப்பில் ஞான நிலையில் நின்ற தொடர்புடையவர்களே என்பது சிவநெறிக் கொள்கையாகும். சில சமயத்தார் ஞானம்வேறு, பக்தி வேறு எனக் கொண்டு, ஞானத்தையே உயர்த்திக் கூறுவர்; ஞானம் ஒன்றே முத்திக்கு வழி என்றும் வலியுறுத்துவர். ஞானத்தை மட்டும் வேண்டிப் பத்தியை வேண்டாத அவர்கள் கொள்கையைச் சித்தாந்த சைவம் ஏற்படுவதில்லை. ஞானத்தால் வீடு என்று நாமும் கூறுவோம். ஆனால், அதற்கு நாம் கூறுகிற பொருள் அவர்கள் கூறுவது போலன்று. ஞானம் அன்பாக வடிவெடுத்து இறைவனிடத்து அன்பு மீதூரப் பெற்று அவன் திருவடிக்கீழ் சென்று புகுதலே வீடு என்பது நமது கொள்கையாகும்.
தொகுத்துக் கூறுதல் :
மேற்கூறிய செய்திகளைக் கருத்திற் கொண்டு பயின்றால் இவ்வதிகாரத்தின் பொருள் முழுதும் இனிது விளங்கும். செய்யுள் அமைந்துள்ள வரிசை முறையில் அவற்றின் கருத்துக்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். தன்முனைப்போடு யான் செய்கின்றேன் என்று எண்ணிச் செய்வது, திருவருளைப் பின்னிட்டுத் தான் முற்பட்டு நிற்றலாகும். இவ்வாறு தன்னை முன்நிறுத்திச் செயற்படுவோர் முன்புகுவார் ஆவார். நாம் செயற்படுவது திருவருளால் என்பதை மறவாமல் நினைத்து, தமது செயலை இறைவனது பணியாகக் கருதிச் செயற்படுதல், தன்னைப் பின்னிட்டுத் திருவருளை முன்னிட்டு அதன் வழி நிற்றலாகும். இவ்வாறு நிற்போர் பின் புகுவார் ஆவார். முன் புகுந்தவராகிய அவரே பக்குவம் வந்த காலத்தில் திருவருளின் பின் புகுந்து பேரின்பத்தை எய்துவர். உயிர் அருளோடு கூடி ஒற்றுமைப்பட்டிருப்பது அருள்நிலை எனப்படும். அருள் இறைவனது ஒளியாதலின் அவ்வொளி உயிரைப் பற்றியுள்ள மல இருளை ஓட்டும். இவ்வாறு உயிர் அருளைச் சேர்ந்ததன் பயனாகப் பாசத்திலிருந்து விடுபடும். இதனால் துன்பம் நீங்கும். இதுவே முடிந்தநிலை அன்று. அறிவின் பயன் இன்பம் தரும் பொருளைச் சார்ந்து இன்புறுதலாகும். இன்பப் பொருளாய் இருப்பது சிவம். சிவம் பகலவன் போலவும், அதன் அருள் பகலவன் ஒளி போலவும் இருப்பவை. கண் போல இருப்பது உயிர். கண் பகலவனது ஒளியைப் பெறுவது போன்றது உயிர் அருளோடு பொருந்துவது. ஒளியைப் பொருந்திய கண் அதனால் பகலவனை நோக்கி அந்த வளப்பெருங்காட்சியில் அழுந்தி நிற்பது போன்றது உயிர் அருள் வழியாகச் சிவத்தை யறிந்து இன்புறுவது. இதனால், அருள்நிலையில் இன்பமில்லை என்பதும், சிவத்தோடு கூடுவதே இன்பநிலை என்பதும் விளங்கும். உயிரும் அருளும் சேர்வது இருவர் மடந்தையர் சேர்வது போன்றது என்றும். உயிரும் சிவமும் சேர்வது ஒருவனும் ஒருத்தியும் தம்மிற் கலந்து இன்புறுவது போன்றது என்றும் ஆசிரியர் கூறுகிறார். ஒருவனும் ஒருத்தியும் கூடும் கூட்டத்தில் அவ்விரு பாலாரும் இன்புறுகின்றனர். இவ் உவமையின்படி பார்த்தால் உயிர் இன்புறுவது போலச் சிவமும் இன்புறுதல் வேண்டும். சிவத்திற்கு இன்ப நுகர்ச்சி உண்டோ? என்ற ஐயத்தைப் போக்குகிறார் ஆசிரியர். இன்ப நுகர்ச்சி என்பது உயிருக்கே யன்றிச் சிவத்திற்கு இல்லை என்று தெளிவுபடுத்துகிறார்.
சொற்புணர்ச்சி ஒன்றைக் காட்டி, உயிரும் சிவமும் இயைந்து ஒன்றாய் நிற்றலை விளக்குகிறார். தாள், தலை என்னும் இரு சொற்கள் புணர்ந்து தாடலை என ஒரு சொல்லாய் நிற்றல் போல உயிரும் சிவமும் இயைந்து பிரிப்பின்றி நிற்கும். முத்தியில் இன்பத்தைக் கொடுப்பதாகிய சிவமும், அவ்வின்பத்தைத் துய்ப்பதாகிய உயிரும் ஆகிய இரு பொருளும் உள்ளனவாயினும் இரண்டு என்று சொல்ல வாராதபடி ஒற்றுமைப் பட்டிருக்கும். இந்நிலையே ஏகம் அல்லது ஒன்றாதல் எனப்படும். அபேத வாதம் கூறுவோர் உயிரும் இறைவனும் பொருளால் ஒன்றே என்பர். ஒரு பொருளே என்றால் ஒன்றுதல் என்பது எவ்வாறு நிகழும்? இரண்டு பொருள் இருந்தால்தான் ஒன்றுதல் நிகழமுடியும். மேலு<ம், அவர்கள் கூறுவது போல ஒன்றே எனில், பெறுவானும் இல்லை. இன்பப் பேறும் இல்லை என்பதாய் முடியும். ஆதலால் அபேதம் எனப்படும் ஒருமைக் கொள்கை பொருந்தாது.
இனி, பேதவாதம் கூறுவோர் உயிரும் இறைவனும் இருளும் ஒளியும் போல முற்றிலும் வேறுபட்ட இருவேறு பொருள்கள் என்பர். இருவேறு தன்மையுடைய பொருள்கள் எக் காலத்திலும் ஒன்றுதல் இயலாது. ஒன்றுதல் இல்லையாயின் அனுபவித்தலும் இல்லையாம். ஆதலால் பேதம் எனப்படும் இருமைக் கொள்கையும் பொருந்தாது. சித்தாந்த நெறிப்படி, உயிரும் சிவமும் உப்பும் நீரும் போலத் தம்மில் இயைந்து ஒன்றாதற்குரிய இருபொருள்கள், <உப்பு, நீரில் கலந்து வேறு காணப்படாது நிற்றல் போல உயிர் சிவத்தோடு கலந்து ஒன்றாய் நிற்கும். அங்கும் உயிர் உள்ளதாயினும், தான் என்ற உணர்வு தோன்றாமல் தன்னை மறந்து பேரின்பத்தில் மூழ்கியிருக்கும். ஆதலால் உயிர் வேறு காணப்படாமல் சிவம் என்ற ஒரு பொருளே உள்ளது போலத் தோன்றும். இதுவே முத்தியில் உயிரும் சிவமும் நிற்கும் முறையாகும். சிவத்தை அடைவிக்கும் ஞானம் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என நான்குபடி நிலைகளாய் நிகழும். கேட்டல், சிந்தித்தல் என்னும் படிநிலைகளில் நிற்போருக்கு யான் எனது என்னும் பற்று அறுதல் இல்லை. உலகப் பழக்கத்தை அவர்களால் முற்றிலு<ம் விட இயலாது. திருவருளை உறுதியாகப் பற்றி நிற்றலும் இயலாது. இவர்களைப் பற்றார் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். இந்நிலையைக் கடந்து, தெளிவுணர்வை உற்றுத் திருவருளோடு ஒன்றி நிற்பவர்களை உற்றார் என்று குறிப்பிடுகிறார். இதற்கு மேல் திருவருள் வழியாகச் சிவத்தைக் கண்டு அதனோடு கலந்து ஆனந்த வெள்ளத்துள் அழுந்தி நிற்கும் நிலையே நிட்டை எனப்படும். நிட்டையாகிய சிவப்பேற்றினை எய்திய அவர்களையே பெற்றார் என்று குறிப்பிடுகிறார்.
இவர்களுள், பற்றாராய் நிற்போர் <உலகியலை விடுத்துத் திருவருளை முற்றாக உணர்ந்து அருள் நிலையைத் தலைப்படுவதற்கு என்ன வழி என்பதை அடுத்துக் கூறுகின்றார். தன் செயல் அறுதலே அதற்கு வழியாகும். பேய் பிடிக்கப்பட்டவருக்குத் தன் உணர்வு என்பது இருக்காது. அதுபோன்ற நிலையை ஆன்மா அடைந்து தன் செயலற்று நின்றால் திருவருள் வெளிப்பட்டு அவரைத் தன் வயப்படுத்திக் கொள்ளும். இவ்வாறு அருள்நிலையைத் தலைப்பட்டோர் அப்பால் ஆனந்த நிலையாகிய அதீத நிலையை எய்துவார். அதுவே நிட்டை நிலையாகும். இன்ப வடிவாகிய சிவத்தில் அழுந்திநிற்கும் அவர்தம் உணர்வில் அம்மெய்ப்பொருள் ஒன்றுமே தோன்றும். பிறிதொன்றும் தோன்றாது. முன்பு தாம் மேற்கொண்டு செய்து வந்த யோகம், கிரியை, சரியை முதலிய சாதனங்கள், உறங்கியவன் கையிலுள்ள பொருள் எப்படித் தானே நழுவுமோ அப்படியே அவரறியாமலே அவரை விட்டு நீங்கும். அவற்றை இனி மேற்கொள்ள வேண்டியதில்லை என்று எண்ணி அவற்றை விடுவதில்லை. அவற்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவரிடத்தில் எழுவதில்லை.
இந்த இன்புறு நிலையைத் தலைப்பட்ட ஞானியர் சிவத்தை இறுகப்புல்லிப் புணர்ந்து தம்மை மறந்து தமது அறிவையும் மறந்து பேரின்ப வெள்ளத்துள் மூழ்கித் திளைப்பர். நுகர்பவன், நுகர்ச்சி அறிவு, நுகரப்படும் பொருள் ஆகிய மூன்றும் வேறு வேறாய் உள்ள தன்மை தோன்றாத, உரை உணர்வுக்கு எட்டாத இன்ப நிலை அது. யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே என்று சொல்வது இந்நிலையே ஆகும். இன்புறு நிலைக்கு அடிப்படை இறைவனிடத்துச் செய்யும் அன்பாகும். இறைவன் செய்து வரும் இடையறா உதவியை நினைந்து நினைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஊற்றெழும் கண்ணீர் அதனால் நனைந்து நனைந்து அவனிடத்து இடையறாப் பேரன்பு செய்தலே பேரின்பத்திற்கு வழி என்று சொல்லி முடிக்கின்றார் ஆசிரியர். இனி இவ்வதிகாரத்துள் புகுவோம்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...