68. பின் நிற்றல்
உற்கை தரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின்
நிற்கை அருளார் நிலை.
பொருள் : இருளில் நடப்போர் தீப்பந்தத்தை ஏந்தி வருகிறவன் முன்னே செல்லத் தாம் அவன் பின்னே செல்வர். அதுபோலப் பாசப் பற்றாகிய இருளை விலக்கி ஞானநெறியிற் செல்லும் உயிர்களுக்கு உதவியாக இறைவன் தனது திருவருள் ஒளியை வழங்கி வருகின்றான். உயிர் அவனுக்குப் பின் நிற்றலே திருவருளை முற்றப் பெறும் முறையாகும்.
சொற்பொருள் :
உற்கை தரும் - (இருளில் நடப்போர்) தீப் பந்தத்தை ஏந்திவரும்
பொற்கை உடையவர் போல் - அழகிய கையை உடையவன் முன்னே வழிகாட்டிச் செல்ல, அவனுக்குப் பின்னே நடப்பது போல,
உண்மைப் பின் நிற்கை - பாச இருளை விலக்கி ஞானநெறியில் செல்லும் உயிர்கள் தமக்கு உதவியாகத் திருவருள் ஒளியை வழங்கி வருகின்ற மெய்ப் பொருளாகிய முதல்வனுக்குப் பின்னே நிற்பதே
அருள் ஆர் நிலை - அவனது திருவருளை நிரம்பப் பெறும் முறையாகும்.
விளக்கம் :
உற்கை என்பது எரிகொள்ளியைக் குறிக்கும். உண்மை என்பது மெய்ப் பொருளாகிய இறைவனை உணர்த்திற்று. உண்மைப் பின் நிற்றலாவது, எச் செயலைச் செய்யினும் தன் முனைப்பால் யான் செய்கின்றேன் எனக் கருதிச் செய்யாது அவன் செய்விக்கின்றான் செய்கின்றேன்; ஆதலால் அச் செயலால் வரும் நன்மை தீமை, இன்பம் துன்பம், புகழ் இகழ் ஆகியவற்றுள் எதுவும் என்னுடையதன்று; எல்லாம் அவனுடையதே என இவ்வாறு உணர்ந்து நிற்றல் ஆகும். மக்களிடத்திலே ஒரு பழக்கம் உள்ளது. பேசும்போது இடையிடையே நம் கையில் என்ன இருக்கிறது? எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்று அடிக்கடி சொல்வார்கள். ஒருவர் வீடு கட்டி முடிக்கிறார்; புதுமனை புகுவிழா நடைபெறுகிறது. வந்திருந்த நண்பர் ஒருவர் வீட்டை நன்றாகக் கட்டியிருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறார். அதற்கு அவர், நானா கட்டி முடித்தேன்? ஆண்டவன் அருளால் தான் இது முடிந்தது என்று சொல்லுகிறார். இப்படி, நான் செய்யவில்லை, எல்லாம் ஆண்டவன் செய்கிறான். எனது செயல் என்று ஒன்றும் இல்லை. எல்லாம் ஆண்டவனுடையவை என்று சொல்வது எளிது. அதனை வாழ்வில் அனுபவமாகக் கடைப்பிடிப்பது என்பது மிகவும் அரியது. இந்த அரிய நிலை வருவதற்குக் தான் என்னும் தன்மையை இழந்து நிற்க வேண்டும். தனது அறிவு இச்சை செயல்களைச் சிவனது அறிவு இச்சை செயல்களுக்குள் அடங்கக் கொடுத்து நிற்கவேண்டும். இவ்வாறு நின்ற ஒருவர் மானக்கஞ்சாறர். அவரது ஒரே புதல்விக்கு அன்று திருமணம். வீட்டிலும் ஊரிலும் ஒரே விழாக் கோலம். மாப்பிள்ளை வீட்டார் ஊரை நெருங்கி விட்டனர். மணமகள் திருமணப் பொலிவோடு திகழ்ந்தார். அந்த நேரத்தில் ஒரு முனிவர் வீட்டிற் புகுந்தார். மானக் கஞ்சாறர் மகிழ்வோடு வரவேற்றார். வந்தவர் என்ன நிகழ்ச்சி இங்கே? என்று கேட்டார். திருமணம் நடைபெற உள்ளது என்பதை அறிந்து ஆசி வழங்கினார்.
மானக் கஞ்சாறர் தம் அருமை மகளை அழைத்து வந்து அவரது பாதங்களில் பணிவித்தார். நீண்டு தழைத்திருந்த அப்பெண்ணின் கூந்தலைப் பார்த்த முனிவர், இது நாம் மார்பில் அணியும் வடத்திற்கு ஆகும் என்று கூறினார். கஞ்சாறர் கணமும் தயங்கவில்லை. மகள் நிலையை எண்ணி மதி கலங்கவில்லை. திருமணம் என்னாவது? என்றெண்ணித் திகைக்கவில்லை. சிவனுடையது என்னறிவது எனவும், சிவனவனது என் செயலது எனவும் நின்ற அவரிடத்தில் உலகியல் உணர்வுகள் எப்படித் தோன்றும்? அப்பொழுதே உடைவாளை உருவி மகளாரின் மலர்க் கூந்தலை அடியோடு அரிந்து கொடுத்தார். இவ்வாறு தனது அறிவு இச்சை செயல் மூன்றும் சிவனது அறிவிச்சை செயல்களாகவே இருக்க வைத்துப் பயின்ற இவ்வடியார்களின் நிலையை உலகியலோடு மட்டும் பழகிய நம்மால் எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்? முதல்வனுக்குப் பின் நிற்றலாகிய இதனை அருளார் நிலை என்று இங்குக் குறிப்பிட்டார் ஆசிரியர். சிவப்பிரகாச நூலில் இந்நிலையைத் தான் பணியை நீத்தல் என்று சுட்டுவார். தன் செயலை முழுதுமாக நீத்து நிற்கும் நிலை என்பது அதற்குப் பொருளாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக