67. பளிங்குத் தூண்
தனக்கு நிழல் இன்றா ஒளி கவரும் தம்பம்
எனக் கவர நில்லாது இருள்.
பொருள் : உச்சிவேளையில் பளிங்குத் தூண் பிற பொருள்களின் நிழல்கள் தன்னிடத்தில் படியாதபடி சூரியவொளி ஒன்றையே கவர்ந்து நிற்கும். அப்பளிங்குத் தூண்போல், உயிர் தன்னிடத்தில் பிற உணர்வுகள் சிறிதும் எழாதபடி திருவருள் ஒன்றையே முழுதுமாகப் பற்றி நிற்குமாயின் மலஇருள் அடியோடு நீங்குவதாகும்.
சொற்பொருள் :
தனக்கு நிழல் இன்றா - (பளிங்குத் தூண்) <உச்சிவேளையில் தன்னிடத்தில் பிற பொருள்களின் நிழல் பொருந்தாதபடி
ஒளி கவரும் தம்பம் என - சூரியனது ஒளி ஒன்றையே கவர்ந்து நிற்கும். அவ்வாறு கவர்ந்து நிற்கின்ற பளிங்குத் தூண்போல
கவர - உயிர்தன்னிடத்தில் பிற உலகவுணர்வுகள் பொருந்தாதபடி முதல்வனது திருவருள் ஒன்றையே பற்றி நிற்குமாயின்
இருள் - அஞ்ஞானத்தைச் செய்யும் ஆணவ மலமாகிய இருள்
நில்லாது - அடியோடு நீங்கும்.
விளக்கம் :
திருவருளை முழுதுமாகப் பற்றி நிற்றல் :
பளிங்குத் தூண் காலை வேளையில் சூரிய ஒளியைக் கிழக்குப் பக்கத்தில் கவர்ந்து நிற்கும். பிற பக்கத்தில் வேறு பொருள்களின் நிழலைத் தன்னிடம் கொண்டிருக்கும். மாலை வேளையிலும் இவ்வாறே அது சூரிய ஒளியை மேற்குப் பக்கத்தில் மட்டும் கவர்ந்து மற்றப் பக்கங்களில் வேறு பொருள்களின் நிழலைக் கொண்டிருக்கும். உச்சிவேளையில் தான் அத்தூண் சூரிய ஒளியை முழுதுமாகக் கவர்ந்து நிற்கும்; சூரிய ஒளியில் முழுமையாக மூழ்கி நிற்கும். அப்பொழுது வேறு பொருள்கள் அருகில் இருந்தாலும் அவற்றின் நிழல்களை அது கவர்வதில்லை. சூரிய வொளியில் மூழ்கி ஒளிமயமாய்த் திகழும் அப்படிகத் தூண் போல உயிர் தன்னை முழுதுமாகத் திருவருளில் கொடுத்துத் திருவருள் ஒன்றையே பற்றி நிற்குமாயின், பிற பொருள்களின் நிழல்கள் படிகத்தூணைப் பற்ற மாட்டாததுபோல, வேறு உணர்வுகள் அவ்வுயிரைப் பற்ற மாட்டா.
இதற்கு இலக்கியமாக வாழ்ந்த ஒருவரைக் குறிப்பிடலாம். அவர் திருக்கடவூர் என்ற ஊரினர். சிறந்த சிவபக்தர். பெருமானுக்குக் குங்குலியத் தூபம் இடும் பணியைச் செய்து வந்தவர். வறுமை அவரது வாழ்வில் புகுந்தது. உணவுக்கும் வழியில்லாத நிலை. வீட்டில் உள்ள எல்லாவற்றையும் விற்றாயிற்று. இனி விற்பதற்கு ஒன்றும் இல்லை. பிள்ளைகள் இரண்டு நாளாகப் பட்டினி கிடந்தனர். அதனைப் பொறாத அவரது மனைவியார், தம்முடைய தாலியைக் கழற்றிக் கொடுத்து, அதனை விற்று நெல் வாங்கி வருமாறு கூறினார். அடியவர் அதனைப் பெற்றுக் கொண்டு கடைவீதிக்குச் சென்றார். வழியில் ஒரு வணிகனைக் கண்டார். அவன் வைத்திருந்ததோ குங்குலியப் பொதி. அவருக்கு இதை விட வேறு என்ன வேண்டும்? மனைவி, மக்கள், பசி, பட்டினி முதலிய உலக உணர்வுகள் அவரைவிட்டு அகன்றன. திருவருள் உணர்வு அவரை விழுங்கி விட்டது. தன்னையே இழந்து நின்ற அவரிடம் சிவநினைவு ஒன்றே ஓங்கி நின்றது. தாலியைக் கொடுத்துக் குங்குலியத்தைப் பெற்றுக் கொண்டார். சிறிதும் நிற்கவில்லை. மகிழ்ச்சியோடு விரைந்து கோயிலுக்குச் சென்றார்; குங்குலியப் பணி செய்து அங்கேயே தங்கிவிட்டார். சிவசிந்தனையில் மூழ்கி வேறு உணர்வுகளுக்கு இடங்கொடாமல் நின்ற அவரது நிலை, சூரியவொளியை முழுதும் பெற்று நின்ற பளிங்குத் தூணின் நிலை போன்றது என்று சொல்லலாம்.
இருள் நில்லாது :
பெத்த நிலையில் உள்ள உயிர்களாகிய நாம் நமக்கு வேறானதாகிய உடம்போடு வேற்றுமையின்றிக் கூடி வாழ்கிறோம்! வேற்று விகார விடக்கு உடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் என்று சொல்லும் பக்குவம் நமக்கு இல்லை. அதனைப் பிரிய மனமில்லை. அதுவே நாம் என்று இருக்கிறோம்; அந்த அளவுக்கு அதனோடு ஒற்றுமைப் பட்டிருக்கிறோம். ஆனால், உயிருக்கு இனிய உறவுப் பொருளாக, என்றும் உடனாக இருப்பவனாகிய இறைவனோடு ஒன்றுபட்டு நிற்கத் தெரியவில்லை நமக்கு. அது ஏன்? அவனோடு ஒன்றுபட்டு நிற்க வொட்டாதபடி செய்வது ஆணவ மலமாகும். பெத்த நிலையில் அம்மலம் உயிரை வன்மையாய்ப் பற்றி நின்று அதன் அறிவை மயக்கி, நான் இறைவனுக்கு வேறாக உள்ள தனியொரு முதல் என்று கருதும்படியாகச் செய்கிறது. பின், ஞானாசிரியரை அடைந்து அருளுபதேசம் பெற்ற காலத்தில் ஆணவ மலம் நீங்குகிறது. நீங்கினாலும் அது வாசனையளவாய் நிற்கும். அந்த நிலையிலும் அது <உயிருக்குச் சிவானுபவம் விளையவொட்டாது தடுக்கும். அஃது எங்ஙனம் எனில், உயிர் பதியாகிய சிவத்தை அதன் அருளையே கண்ணாகப் பெற்று அறியுமிடத்து யான் பதியை எனது அறிவால் அறிகின்றேன் எனத் தன்னையும், தன் அறிவையும் உணரச் செய்வது மல வாசனையே யாகும். இங்ஙனம் ஆன்மா தன்னையும், தனது அறிவையும் வேறு வேறாகப் பகுத்து உணரின் சிவானுபவம் இல்லையாகும். இங்ஙனம் வேறு வேறாகப் பகுத்துக் காணுதலை விடுத்து ஆன்மா தன்னையும் தன்னறிவையும் மறந்து பதி ஒன்றையே உணர்ந்து அதில் அழுந்துவதே சிவானுபவ நிலையாகும். இச்சிவானுபவ நிலையை எய்த ஒட்டாதபடி செய்வது மலவாசனையே என்பது இதனால் விளங்கும். அவ்வாசனை திருவருளோடு உயிர் முற்றிலுமாக ஒன்றுபட்டு நிற்கும்போதே அடியோடு நீங்கும். இதனையே நில்லாது இருள் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர். மலவாசனையே உயிரைப் பற்றியுள்ள மாசு-ஆகும். அம்மாசு அடியோடு நீங்குமாறு திருவருளை முற்றப் பெறுதலே உயிர் விளக்கம் அடைதற்கு வழியாகும் என்பது இச் செய்யுளில் உணர்த்தப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக