66. அருள்நிதி
வஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதி கவரத்
துஞ்சினனோ? போயினனோ? சொல்.
பொருள் : ஒருவன் வைத்துள்ள நிதியை மற்றொருவன் கள்ளமாய்க் கவர்ந்து கொள்வதற்கு, வைத்திருப்பவன் உறங்கி விட்டானோ? அல்லது அவ்விடத்தை விட்டுப் போய்விட்டானோ? சொல்வாயாக.
சொற்பொருள் :
ஒருவன் வைத்த - ஒருவன் சேமித்து வைத்துள்ள
நிதி - பொருட் செல்வத்தை
வஞ்சமுடன் கவர - வேறொருவர் கள்ளமாய்க் கவர்ந்து கொள்வதற்கு
துஞ்சினனோ - பொருளை வைத்திருப்பவன் உறங்கி விட்டானோ?
போயினனோ - அல்லது அவ்விடத்தை விட்டு அகன்று போய்விட்டானோ?
சொல் - சொல்வாயாக.
இக்குறட்பாவில் உள்ளதும் உவமையே. இதனைக் கொண்டு ஆசிரியர் கூற வந்த பொருளை வருவித்துக் கொள்ள வேண்டும்.
விளக்கம் :
செல்வரும் திருடனும் :
இவ்விடத்திற்குப் பொருத்தமான நிகழ்ச்சி ஒன்றைக் குறிப்பிடுவோம். இரண்டு பேர் இரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தப் பெட்டியில் அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. அவர்களில் ஒருவர் பணக்காரர். அவர் ஒரு துணிப் பையில் நிறையப் பணம் வைத்திருந்தார். இன்னொருவன் திருடன். அவரிடம் பணம் இருப்பது தெரிந்து, அதைத் திருடுவதற்காக அவன் அந்தப் பெட்டியில் ஏறியிருந்தான். அவன் திருடன் என்பது அந்தப் பணக்காரருக்குத் தெரியும்! தெரிந்தும் அவனது கண் எதிரிலேயே பையைத் திறந்து பணத்தை எண்ணிப் பார்த்தார். உறங்க வேண்டிய நேரம் வந்தது. முதலில் திருடன் குளியலறைக்குச் சென்று தன் உடைகளை மாற்றிக் கொண்டு வந்தான். படுக்கையில் படுத்துத் தூங்குவது போல நடித்தான். பணக்காரர் குளியலறைக்குச் சென்றார். திரும்பி வரச் சற்று நேரம் ஆயிற்று. அவர் அப்பால் போனதும் அதற்காகக் காத்திருந்த திருடன் அவரது பெட்டிகளைத் திறந்து பார்த்தான். பணப்பையைக் காணவில்லை. அவரது துணிமணிகளையெல்லாம் உதறிப் பார்த்தான். அது கிடைக்கவில்லை. அந்த மனிதர் அதைக் கையில் கொண்டு போகவில்லை. அதனால் இங்குதான் வைத்திருக்கவேண்டும். நாம் இவ்வளவு தேடியும் அது கிடைக்கவில்லையே என்று திருடன் அதிசயித்தான். குளியலறையிலிருந்து திரும்பி வந்த பணக்காரர் படுக்கையில் படுத்தார். அடுத்த நொடியே அவரிடமிருந்து குறட்டையொலி எழுந்தது. இப்பொழுது அந்தத் திருடன் மீண்டும் தேடித் துருவிப் பார்த்தான். அவனுக்கு வேண்டியது கிடைக்கவில்லை.
திருடன் இரவு முழுதும் தூங்கவே இல்லை. பொழுது விடிந்தது. பணக்காரர் கண் விழித்துக் கொண்டார். திருடன் அவரைப் பார்த்து, ஐயா, நான் திருடன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனக்கு ஒன்று தெரிய வேண்டும். உங்கள் பணப்பையை எங்கே வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டான். உடனே பணக்காரர் சிரித்துக் கொண்டே திருடனின் தலையணைக்கு அடியிலிருந்து பணப்பையை எடுத்து இங்கேதான் வைத்திருந்தேன் என்றார். இந்தக் கதையில் திருடன் பணத்தைக் கைப்பற்றக் காத்திருந்தான். அதற்கு வாய்ப்பாக அந்தப் பணக்காரரும் பணத்தை அங்கே வைத்துவிட்டு வெளியே போய் வந்தார். அடுத்ததாக, நன்றாகத் தூங்கியும் போனார். ஆனாலும், அவருடைய சாதுரியமான ஏற்பாட்டினால் பணத்தை அவன் திருட முடியாமற் போயிற்று. பொதுவாக, இச் செய்யுளில் கூறியுள்ளபடியே களவு நடை பெறுவது கண்கூடு. உடைமைக்கு உரியோர் உறங்கிய நேரம் பார்த்து உள்ளே புகுந்து திருடிச் செல்வார்கள். அல்லது அவர் வெளியே போயிருக்கும் சமயத்தில் வீட்டிற் புகுந்து நகை பணம் முதலியவற்றைக் கவர்ந்து செல்வார்கள்.
அருள் நிதியை அடையும் வழி :
இறைவன் பெரு நிதியம் உடையவன். ஏரி நிறைந்தனைய செல்வன் என்பார் அப்பர் சுவாமிகள். அந்த நிதிதான் அருள் என்பது. அவ்வருள் நிதியை அவன் தராமல் உயிர்கள் தாமே பெறுதல் இயலாது. அதனைக் கள்ளத்தால் கவர்ந்து கொள்வதற்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று அவன் சோர்ந்திருக்கும் சமயம் பார்த்துக் கவர்தல். இறைவன் சிறு பொழுதாயினும் சோர்ந்திருந்தால் அல்லவா இது கை கூடும்? அவனுக்குச் சோர்வென்பது ஏது? வான் கெட்டு, மாருதம் மாய்ந்து, அழல் நீர், மண் கெடினும் தனக்கு ஒரு கேடு இல்லாதவன் அவன். சலிப்பு அறியாத் தன்மையன் அவன். ஆதலால் இம்முதல் வழி பயன்படாது. இனி இரண்டாவது வழி, அவன் தனது நிதியத்தை வைத்து விட்டு வேறிடம் போன சமயம் பார்த்து அதனைக் கவர்தல். இறைவன் தனது திருவருளை விட்டுச் சிறு பொழுதாயினும் பிரிந்திருந்தால் அல்லவா இது கைகூடும்! அவன் எஞ்ஞான்றும் திருவருளுக்கு வேறாய் நிற்பவன் அல்லன். ஆதலால் இவ்வழியும் கூடி வாராது. இவ்வாறு அவ்விரண்டு வழிகளையும் விலக்கி, உயிர்கள் முதல்வனது திருவருளை அவன் வழங்கவே பெறும் என்ற கருத்தைப் பெற வைக்கிறார் ஆசிரியர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக