65. எடுத்துச் சுமப்பான்!
கிடைக்கத் தகுமே நற் கேண்மையார்க்கு அல்லால்
எடுத்துச் சுமப்பானை இன்று.
பொருள் : இறைவன், தம் செயலற்று நிற்கும் அன்பரை எவ்விடத்தும் தாங்கிக் காப்பான்; அவரைத் தன் மேல் வைத்துச் சுமந்து செல்லும் துணைவனாய் இருப்பான். இப்படிப்பட்ட துணை வனை ஏனையோர் பெறுதல் கூடுமோ?
சொற்பொருள் :
இன்று - இம்முத்திக் காலத்தில்
எடுத்துச் சுமப்பானை - தம் செயல் அற்று நிற்கும் அன்பரை எடுத்துத் தன்மேல் வைத்துச் சுமந்து செல்கின்ற இறைவனாகிய துணைவனை
கிடைக்க - பெறுவது
நற்கேண்மையார்க்கு அல்லால் - அவ் அன்பருக்கன்றி
தகுமே? - மற்றவர்க்குக் கூடுமோ?
விளக்கம் :
நற்கேண்மையார் :
திருவருளை மழையோடு ஒப்பிடலாம். மழை மேடு பள்ளம் என்று பாராமல் எவ்விடத்திலும் பெய்கிறது. ஆனால் மேட்டு நிலத்திலுள்ள பாறை அந்த மழை நீரைப் பற்றிப் பிடித்து வைத்துக் கொள்வதில்லை. மழை பெய்து ஓய்ந்த சிறிது நேரத்தில் அந்தப் பாறையைப் பார்த்தால் அதன்மீது ஒரு சொட்டு மழை நீர் இருக்காது. அதில் மழை பெய்ததற்கான அறிகுறியே தென்படாது. ஆனால், மேட்டுநிலத்திற்குக் கீழை தரையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்பதைக் காணலாம். சில நாட்கள் சென்றாலும் அப்பள்ளத்தில் மழை பெய்ததற்கான அடையாளமாக நீர் கட்டிக் கிடக்கும். மக்களில் பெரும்பாலோர் பாறையைப் போல் வன்நெஞ்சப் பேதையராய் வாழ்கிறார்கள். அவர்களிடத்தில் அருள் இருந்தும் அதனைப் பற்றிக் கொள்வதில்லை. பக்குவ ஆன்மாக்களாகிய சிலரே பள்ளத்தைப் போல அருள் வெள்ளத்தைத் தம்மிடம் தேக்கி வைத்துக் கொள்கிறார்கள். திருவருளை முற்றாகப் பெற்ற இவர்கள் எந்நிலைமையிலும் இறைவனையே உணர்ந்து நிற்பர். வாழினும், சாவினும், வருந்தினும் போய் வீழினும் உனது திருவடியை விடுவேன் அல்லேன் என்ற உறுதியோடு இருப்பர். இறைவனையன்றி வேறு துணையில்லாத இவர்களையே நற்கேண்மையார் என்று குறிப்பிடுகிறார் நம் ஆசிரியர் உமாபதிசிவம்.
எடுத்துச் சுமப்பான் :
நல்ல நட்பினராகிய இவர் தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவன் தன்னுடையனவாக ஏற்றுக் கொள்கிறான். இவ்வடியார்கள் மனம் மொழி மெய்களால் யாதொரு செயல் செய்யினும், இவர் செயலெல்லாம் என் செயல் என்றும், இவருக்குச் செய்தது எனக்குச் செய்ததாகும் என்றும் கொண்டு, வினைத் துன்பம் அவரைத் தாக்காதவாறு முன்னின்று காப்பான். தம் செயலற்று, எல்லாம் இறைவன் செயல் என உணரும் இவ்வன்பர்கள் பாதகத்தைச் செய்திடினும் அதனைப் பணியாக்கி விடுவான். அன்பர்களின் நிலையைக் குழந்தையின் நிலையோடு ஒப்பிட்டுச் சொல்வார்கள். குழந்தைக்குத் தனக்கெனச் செயலில்லை. அது நடப்பதில்லை. அதனைச் சுமந்து கொண்டு தாய் நடக்கிறாள். அது தானே உண்பதில்லை. தாய் ஊட்டுகிறாள். நோய் வந்தால் அந்தக் குழந்தையா மருத்துவரிடம் செல்கிறது? தாய் தானே தூக்கிக் கொண்டு ஓடுகிறாள். தாயின் காலைப் பற்றிக் கொண்டு வாழும் குழந்தைக்கு என்ன கவலை? அதற்கு வேண்டியவற்றை யெல்லாம் தாய் பார்த்துக் கொள்கிறாள். கண நேரமும் இறைவனை உள்ளத்தில் பிரியாமல் அவனைப் பற்றிக் கொண்டவர்களுக்கு இந்தக் குழந்தையின் நிலை வரும். தமக்கெனச் செயலற்ற நிலையை அவர்கள் அடைகிறார்கள். இறைவனது திருவடியைப் புகல் அடைந்துவிட்டால் அப்பால் அவர்களுக்கு ஒரு பொறுப்பும் இல்லை. இறைவனே அவர்களைத் தாங்கிக் கொள்வான். தன் கடன் அடியேனையும் தாங்குதல் என்ற அப்பர் பெருமானின் மொழியை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.
இறைவன் தன்னடியார் படும் பசித்துன்பம் முதலியவற்றைப் பொறாமல் ஓடிவந்து உதவி செய்த நிகழ்ச்சிகள் பல உண்டு. சுந்தரர் திருக்குருகாவூர் செல்லும்போது பசியினாலும் நீர் வேட்கையினாலும் மிகவும் வருந்தினார். அதனை உணர்ந்த இறைவன் அவர் வரும் வழியில் குளிர் பந்தல் அமைத்துத் தண்ணீரும் பொதி சோறும் கொண்டு மறையவர் வடிவில் காத்திருந்தார். அடியவர் திருக்கூட்டத்துடன் நம்பியாரூரர் அங்கு வந்து சேர்ந்தார். அவரிடம் மறையவர் நீர் இப்போது பசியால் வாடுகிறீர்; இதனை உண்ணும் என்று கூறியருளினார். அவர் அளித்த பொதி சோற்றை அடியாரும் உண்டு பசி தீர்ந்து சிறிது நேரம் கண்ணுறங்கி விடுகிறார். விழித்துப் பார்த்தபோது மறையவரும் இல்லை. தண்ணீர்ப் பந்தரும் இல்லை. இறைவன் தமக்குச் செய்த கருணையே இது என்றறிந்த சுந்தரர் ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் என்று பெருமானைப் போற்றினார். நற்கேண்மையராய் ஒழுகும் அடியார்களுக்கு இறைவன் எளிவந்து அருளுதலை, இவ்வாறு பொதிசோறு சுமந்து வந்து அளித்தமை, பஞ்சம் வருத்தாது படிக்காசு தந்தமை முதலிய பல நிகழ்ச்சிகளில் வைத்து உணரலாம். இங்ஙனம் தம் செயலற்று நிற்கும் அடியார்களை வலிய வந்து காத்தருளும் இறைவனது எளிவந்த தன்மை இனிது புலப்படும் வகையில் எடுத்துச் சுமப்பான் என்ற அருமையான, பொருள் ஆழமான தொடரை அமைத்த ஆசிரியரின் திறம் எண்ணி மகிழ்தற்குரியது.
ஒரு குறிப்பு :
சரியை, கிரியை, யோகம் என்னும் மூன்றும் தவம் எனப்படும். இத்தவ நிலையில் நின்று முதிர்ச்சி பெற்றவரை, கேடில் புகழ் தருஞ் சரியை கிரியா யோகக் கேண்மையர் (செ.49) என்று சிவப்பிரகாச நூலில் குறிப்பிட்டார் உமாபதிசிவம். இத்தவநிலையில் நின்றோர் சென்று அடைதற்குரியது ஞானநிலை. அதுவே மேலான நிலையாகும். ஞானநிலைக் கண் நின்றவரே திருவருளைச் சேர்ந்து பாசப்பற்றை அறுத்துக் கொண்டவர் ஆவர். இவரே அடியவர் என்றும், அருளாளர் என்றும் சொல்லப் பெறுகின்றனர். இவரை நற்கேண்மையார் என்று திருவருட்பயனில் குறிப்பிட்டார் உமாபதிசிவம். முன்னே காட்டியவாறு தவநெறியில் நின்றவரைக் கேண்மையர் என்று மட்டும் சுட்டிய ஆசிரியர், ஞான நெறியில் நின்றவரைக் குறிக்க வரும்போது நல் என்ற அடைமொழி சேர்த்து நற்கேண்மையார் எனச் சிறந்தெடுத்துக் கூறியுள்ளமை அறிதற்குரியது. நம் ஆசிரியர் அருளை நினைப்பிக்கும் இடங்களில் நல் என்ற அடை மொழியைச் சேர்க்கும் இயல்பினர் என்று சொல்லலாம். காட்டாக, சிவப்பிரகாசத்தில் பசு இலக்கணம் கூறும் செய்யுளில் (19) உயிரை நற்பசு வர்க்கம் என்கிறார். உயிர்கள் திருவருள் உதவியால் மலநீக்கம் பெற்றுச் சிவத்தை அடைதற்கு உரியன. ஆதலின் நல் என்ற அடைமொழி சேர்த்து அவ்வாறு குறிப்பிட்டார் என்று கருதலாம். அவ்வாறே, இங்கும் தம் செயலற்று அருள் வயப்பட்டிருக்கும் அடியவரின் நிலைக்கு ஏற்ப அவரை நற்கேண்மையார் எனக் குறிப்பிட்டார் எனக் கொள்வது பொருத்தமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக