வெள்ளி, 3 நவம்பர், 2017

64. அருள் இருளையொக்கும்!

64. அருள் இருளையொக்கும்!
ஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை
தெளிவு தெளியாச் செயல்.

பொருள் : ஒளியும், இருளும் ஒரு வகையில் ஒத்த தன்மை உடையனவாம். அஃதாவது, சூரியனுடைய பேரொளியை நோக்கும் போதும் கண் தெரியாது. இருளிலும் கண் தெரியாது. ஒளியில் அழுந்தியபோதும், இருளில் அழுந்தியபோதும் கண் பிற பொருள்களைக் காண மாட்டாததாகிறது. இஃது ஒப்புமை. இனி இரண்டிடத்திலும் கண் செயலற்று விடினும் இரண்டும் ஒன்றாவதில்லை. இரண்டிற்கும் என்ன வேறுபாடு எனில், ஒன்று ஒளியால் நிகழ்கின்ற தெளிந்த நிலை. மற்றொன்று இருளால் விளைகின்ற தெளியா நிலை.
சொற்பொருள் :
ஒளியும் இருளும் ஒருமைத்து - ஒளியும் இருளும் ஒரு வகையில் ஒப்புமை உடையன. (அதாவது, பேரொளியில் அழுந்தும்போதும் கண்பிற பொருள்களைக் காண மாட்டாது. அது போலவே, பேரிருளில் அழுந்தியபோதும் அக்கண்ணுக்குப் பொருள் ஏதும் புலப்படுவதில்லை. 
பன்மை - இனி, அழுந்தி நிற்றலாகிய இவ்விரண்டிற்கும் வேறுபாடு என்ன எனில்
தெளிவு தெளியாச் செயல் - ஒளியில் அழுந்தும் நிலை தெளிவு நிலை. இருளில் அழுந்தும் நிலை தெளியாநிலை.
இதுவும் உவமையே. இதனைக் கொண்டு ஆசிரியர் உணர்த்த வந்த கருத்தை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும்.

விளக்கம் :
உலகத்திற் காணப்படும் ஒளி, இருள் என்பவற்றின் தன்மைகளை உவமை காட்டித் திருவருள் ஒளி, ஆணவ இருள் என்பவற்றின் தன்மைகளைப் பெற வைக்கிறார் ஆசிரியர். அருளோடு கூடி நிற்றல் ஒரு வகையில் இருளோடு கூடி நிற்றல் போலும் என்கிறார். ஆன்மா ஆணவ இருளில் கிடக்கும் நிலை கேவலம் என்பதும், திருவருள் ஒளியில் நிற்கும் நிலை சுத்தம் என்பதும் நாமறிந்தது. கேவலத்தில் ஆன்மா தான் என்பது சிறிதும் தோன்றாமல் ஆணவ இருளோடு ஒன்றுபட்டு அதுவாய் நிற்கும். உறக்கம் என்பது ஒரு வகையில் கேவல நிலைதான். உறக்கத்தில் நாம் இப்படித் தானே நம்மை நாம் அறியாமல் அழுந்திக் கிடக்கிறோம். இந்த உறக்க நிலையை வைத்து அந்தக் கேவல நிலையை ஒருவாறு விளங்கிக் கொள்ளலாம். இனி, கேவலத்தின் நீங்கிச் சுத்த நிலையை அடைந்த ஆன்மா அங்கும்தான் என்ற உணர்வு சிறிதும் இல்லாமல் அருளோடு ஒன்றுபட்டு அதுவாய் நிற்கும்.
மேலும், இருள் மேம்பட்ட கேவலத்திலும் உலகம் புலப்படாது. அதுபோல, அருள் மேம்பட்ட சுத்தத்திலும் உலகம் வேறாய்ப் புலப்படாது. இவ்வாறு இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையைக் குறிப்பிடலாம். இருள் நிலையில் உலகம் புலப்படாது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. அருள் நிலையில் ஞானியர்க்கு உலகம் காட்சிப் படாது என்பதை எப்படி விளங்கிக் கொள்வது? அவர்களும் நம்மைப் போல உண்டு உடுத்து இவ்வுலகில் வாழ்கிறார்களே. அவர்களுக்கு எப்படி உலகம் காட்சிப் படாது போகும்? என்று கேட்கலாம். ஞானிகளுக்கு உலகம் காட்சிப் படாது என்பதன் கருத்து, உலகப் பொருள்கள் தனி முதலாய் அவர்களுக்குக் காட்சிப் படுவதில்லை என்பதாகும். அப்பொருள்களிடத்திலே அவர்கள் சிவத்தையே எப்பொழுதும் கண்டு கொண்டிருப்பர். ஆதலால் அப்பொருள்கள் வேறாய் நின்று தம்மியல்பைக் காட்டி அவர்களை மயக்குவதில்லை. இது பற்றியே அவர்களுக்கு உலகம் காட்சிப்படாது என்று சொல்லப்படுகிறது. இவ்வுண்மையை அருளாளர் வாழ்வில் அனுபவ முறையிற் காணலாம். மயிலையில் ஞான சம்பந்தர் இறந்து போன பூம்பாவையை எழுப்பினார். மட்டிட்ட எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி நிறைவு செய்த அளவில், என்பும் சாம்பலும் நிறைந்த குடத்தினின்றும் தாமரை மலரிலிருந்து எழுவாளைப் போன்று பூம்பாவையார் பன்னிரண்டாண்டு அளவு வளர்ச்சியுடன் எழுந்தார். ஞானத்தின் திருவுருவாகிய சம்பந்தர் இக்காட்சியை நம்மைப் போலக் காணவில்லை. பதினாறு ஆண்டே எய்திய அப்பிள்ளையார் பூம்பாவையாரிடம் மாயா காரியமாகிய உருவ அழகைக் காணவில்லை. அது அவருக்குப் புலப்படவில்லை. சிவபெருமானது கருணை வெள்ளத்தையே அவர் கண்டார்.
திருவையாற்றில் நாவுக்கரசர் அனைத்துப் பொருள்களிலும் சிவ முதற்பொருளையே கண்ட காட்சியையும் எண்ணலாம். இப்படி அசத்தாகிய உலகைக் காணாது பார்க்கின்ற பொருளையெல்லாம் சிவமாகக் காண்பர் அருளாளர். இதுவரை கூறியவற்றால், இருள் நிலையும் அருள் நிலையும் ஒரு வகையில் ஒற்றுமையுடையன என்பது விளங்கும். அவ்வொற்றைமையாவது அவ்விரண்டிடத்தும், ஆன்மா ஒன்றுபட்டு அதுவாய் நிற்றல்; <உலகம் காட்சிப் படாதிருத்தல். இவ்வொற்றுமையைக் கருதியே ஒளியும் இருளும் ஒருமைத்து என்றார் ஆசிரியர். இவ்வாறு ஒருமை காட்டியதோடு நில்லாமல் அவற்றிடையே உள்ள வேறுபாட்டினையும் சொல்லி முடிக்கின்றார். அருள்நிலை ஒருவாறு இருள் நிலையை ஒத்ததாயினும், அருள்நிலையில் ஆன்மா பேருணர்வாகிய திருவருளோடு கூடிப் பேருணர்வாய்ப் பொலியும் ஆதலின் அதுவே தெளிவு நிலை. மற்றையது தெளியா நிலை என்று தெளிவிக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...