62. கசப்பும் இனிப்பும்
தித்திக்கும் பால் தானும் கைக்கும் திருந்திடும் நாப்
பித்தத்தின் தான் தவிர்ந்த பின்.
பொருள் : பால் தித்திப்பாக இருப்பது அதன் இயற்கை. அந்த இயற்கைக்கு மாறாகப் பால் கசப்பது நாவில் சேர்ந்த பித்தம் என்னும் செயற்கையினால் ஆகும். பித்தமாகிய செயற்கை நீங்கியபோது பால் இயற்கையான தித்திப்பையே உடையதாகும். அதுபோல, உயிருக்கு என்றும் உறவுப் பொருளாக இருப்பது திருவருள். அவ்வியல்புக்கு மாறாகத் திருவருள் பகைப் பொருளாக உயிர்க்குத் தோன்றுதல் அவ்வுயிரைப் பற்றியுள்ள ஆணவ மலமாகிய செயற்கையினால் ஆகும். அச்செயற்கை நீங்கியபோது, திருவருள் இயற்கையான உறவுப் பொருளாகவே தோன்றும்.
சொற்பொருள் :
நா பித்தத்தின் - நாவில் பித்தநோய் உள்ள பொழுது
தித்திக்கும் பால் தானும் - தித்திக்கின்ற பாலும்
கைக்கும் - அதற்குப் கசப்பாகவே தோன்றும்
தான் தவிர்ந்த பின் - அந்நாக்கு பித்தமாகிய குற்றம் நீங்கிய பிறகு
திருந்திடும் - அப்பால் அதற்கு உள்ளவாறு தோன்றும்; அதாவது, இனிமை தருவதாய் விளங்கும்.
(இங்கு உவமை மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு ஆசிரியர்கூற வந்த கருத்தை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும்)
விளக்கம் :
உலகியலை விடாது பற்றி நிற்கின்ற மாந்தர், அனைத்துயிர்களையும் தாங்கி நின்று நடத்துகின்ற திருவருளினது இருப்பையும் இயல்பையும் சிறிதும் உணரார். இந் நிலைக்கு ஓர் உவமை சொல்லலாம். கடலுக்கு அருகிலே உள்ள கிணற்றில் ஓர் ஆமை வாழ்ந்து வந்தது. அதற்கு அந்தக் கிணறுதான் உலகம். அதைத்தவிர வேறு ஒன்றையும் அது அறியாது. ஒரு நாள் கடலிலிருந்து ஒரு பெரிய ஆமை கரைக்கு வந்து மெல்ல ஊர்ந்து இந்தக் கிணற்றை வந்தடைந்தது. கிணற்று நீரில் இறங்கியது. கிணற்றில் வாழ்ந்த ஆமைக்குக் கடலாமையைப் பார்க்கப் பார்க்க வியப்பு உண்டாயிற்று. நீ எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டது. நான் கடலிலிருந்து வருகிறேன் என்று கடலாமை கூறியது. கடலா? அது எப்படியிருக்கும்? இது கிணற்று ஆமையின் கேள்வி. அது நீர் நிறைந்த இடம். எங்கு பார்த்தாலும் தண்ணீர்தான் இருக்கும் என்று விளக்கியது கடலாமை. கிணற்று ஆமைக்கு அது விளங்கவில்லை. அந்தக் கடல் இந்தக் கிணறு அளவுக்கு இருக்குமா? என்று கேட்டது! கடலாமைக்குச் சிரிப்பு வந்தது. கடல் கிணற்றை விட ஆயிரம் ஆயிரம் மடங்கு பெரியது. அதனை அளவிடவே முடியாது என்று கூறியது. கிணற்று ஆமை அதை நம்பவில்லை. இந்தக் கிணற்றை விடப் பெரியதொன்று எப்படி இருக்க முடியும்? நீ சொல்வது அத்தனையும் பொய்! என்று மறுத்துச் சொன்னதாம். அந்தக் கிணற்று ஆமையின் நிலையில் இருக்கிறார்கள் மக்களில் சிலர். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இந்த உலகியல் ஒன்றுதான். இதனின் மேம்பட்ட ஒரு வாழ்க்கை உண்டு என்பதை அவர் அறியார்.
தொன்று தொட்டு இன்று வரை உடல்கள் நீர்க்குமிழி போலத் தோன்றியும் அழிந்தும் வருகின்றன. இப்பொழுது இருக்கின்ற உடல்கள் எதிர்காலத்தில் இருக்கப் போவதில்லை. நடைமுறை உண்மை இதுவாக இருந்தும் அவர்கள் தமது உடல் வாழ்க்கை என்றென்றும் நிலைத்திருக்கும் என்றே நினைக்கின்றனர்; உடலுக்கு வேண்டிய உணவும் உடையும் கிடைத்துவிட்டால் மகிழ்ந்து போகின்றனர். இதற்குமேல் வாழ்க்கையில் பெறுவதற்கு என்ன இருக்கிறது என்ற முடிவுக்கு வருகின்றனர். வாழ்க்கையில் அதைவிட மேலான குறிக்கோள் இருக்கிறது என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. அருளே பெரிய பொருள் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அருளே உயிரைத் தூய்மை செய்து பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும் என்று அறிந்தோர் சொன்னாலும் அதனை ஏற்காமல் எள்ளி நகையாடிப் போவர். இப்படி, அருளைப் பற்றிச் சிந்திக்காமல் அப்படி ஒன்று தமக்கு வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் வாழ்கிறவர்கள் இவர்கள். அவர்களிடத்தில் உள்ள ஆணவமலம் நீங்காத வரையில், அவர்களுக்குத் திருவருள் என்பது வேண்டாத பொருளாகவே, கசப்பான பொருளாகவே இருக்கும். நாக்கில் பித்த நோய் உள்ளவன் பால் கசக்கிறது என்று சொல்வான். அதற்குப் பால் காரணமன்று. அவனது நோயே காரணம். மலத்தின் வழிபட்டு, உலக இச்சை கொண்டவர்களுக்குத் திருவருள் இனியதாக இராது. அதற்குக் காரணம் அவர்களுக்குப் புலன் நுகர்ச்சியிலே நாட்டம் இருப்பதேயாகும்.
திருவருள் இனித்தல் :
ஓர்அறை நெடுங்காலமாகப் பூட்டியே கிடக்கிறது. அதற்குள் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஒருநாள் அதன் கதவுகள் திறக்கப் பெற்றன. கை விளக்கு ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்த விளக்கொளியில் அறையின் சுவர்கள் பளிச்சென்று தோன்றின. அங்கே அரிய ஓவியங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவ்வுண்மை விளக்கொளியாலேயே விளங்கியது. அதுபோல ஆணவமலம் சூழ்ந்த இருட்டறையாக நமது சிந்தை உள்ளது. ஞானம் ஆகிய ஒளி அங்கே வந்ததும் வாழ்க்கையைப் பற்றி முன்னே கொண்டிருந்த எண்ணம் அறவே மாறி விடுகிறது. உண்டு உடுத்து இன்புற்றிருப்பது வாழ்க்கையின் நோக்கமன்று. இறைவனைச் சார்ந்து இன்புற்றிருப்பதே வாழ்க்கையின் குறிக்கோள் என்பது தெளிவுபட விளங்குகிறது. மலம் நீங்கிய தூய ஆன்மாக்களுக்கு இவ்வுண்மை நன்கு விளங்கும். அவர்கள் தமக்கு எக்காலத்திலும் எவ்விடத்திலும் துணையாக நிற்பது இறைவனது திருவருளே என்று அதனைப் பற்றிக் கொள்கிறார்கள். அன்பினால் அகங்குழைந்து அழுகிறார்கள். அவர்களுக்கு அமுதம் போல இனிக்கிறது திருவருள். நாவில் பித்தம் நீங்கியபோது பால் தித்திப்பது போன்றது இந்த நிலை.
அன்போடு அழுவோர்க்கு
அமுதங்கள் காண்க
ஐயாறன் அடித்தலமே
என்றாற்போல வரும் திருமொழிகளால் இதனை உணரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக