வெள்ளி, 3 நவம்பர், 2017

61. அதுவாய் நிற்றல்

61. அதுவாய் நிற்றல்
தூநிழல் ஆர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இதுபோல்
தான் அதுவாய் நிற்கும் தரம்.

பொருள் : வெயிலில் அலைந்து வருந்தியவன் குளிர்ந்த நிழலை உடைய இடத்தைக் கண்டால் பிறர் சொல்லாதிருக்கவும் தானே அவ்விடத்தை அடைந்து நிழலில் அடங்கி நின்று இன்புறுவான். அதுபோல, அறியும் நெறியால் திருவருளை உணர்ந்த உயிர் தான் வேறாய் நில்லாமல் அத்திருவருளோடு ஒன்றுபட்டு அதனுள் அடங்கி அதுவேயாய் நிற்கும்.
சொற்பொருள் :
தூநிழல் ஆர்தற்கு - (வெயிலில் மிகவும் துன்புற்று வருபவன்) நிழலை உடைய தூய இடத்தைக் கண்டால் அவ்விடத்தைப் பொருந்துதற்கு
ஆரும் சொல்லார் - யாரும் சொல்ல வேண்டாமலே
தொகும் - தானே அவ்விடத்தைச் சென்று சேர்ந்து இன்புறுவான்
இதுபோல் - இதனைப் போன்றது
தான் - (அறியும் நெறியைப் பெற்ற) உயிர்
அதுவாய் - மெய்ப் பொருளை உணர்ந்து அதனோடு ஒன்றி அதுவேயாய்
நிற்கும் தரம் - அதனுள் அடங்கி நிற்கும் தன்மை.

விளக்கம் :
சுவரும் அருளும் :
இந்நாளில் எங்கேயும் சுவர் என்பதே தெரியாது! இது விளம்பர காலம். ஆதலால் எந்தச் சுவரையும் விட்டு வைக்கமாட்டார்கள். சுவரொட்டி மேல் சுவரொட்டியாக ஒட்டிச் சுவரே தெரியாதபடி செய்து விடுவார்கள். வழிச்செல்வோரில் சிலர் அந்தச் சுவரொட்டிகளைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள்; சிலர் அருவருப்பு அடைவார்கள். விருப்பு வெறுப்புத் தானே பற்று என்பது. பார்ப்பவர்கள் பற்றோடு பார்க்கிறார்கள் என்பது இதனால் விளங்கும். அவ்வாறு பார்க்கின்ற அவர்கள் ஒன்றைப் பார்க்கத் தவறி விடுகிறார்கள். அவர்கள் பார்க்கத் தவறியது, அந்தக் கவர்ச்சி விளம்பரங்களை ஒட்டுவதற்கு ஆதாரமாய் உள்ள அந்தச் சுவராகும். வழிச் செல்வோரில் யாராவது அந்தச் சுவரை நினைக்கிறார்களா? இன்றைக்கு ஒட்டிய சுவரொட்டி நாளைக்கு இருப்பதில்லை. அது கிழிக்கப்பட்டிருக்கும்; அல்லது அதன் மேல் வேறொன்று ஒட்டப்பட்டிருக்கும். இவ்வாறு நிலையில்லாமற் போகின்ற சுவரொட்டிகளின் கவர்ச்சியில் ஈடுபட்டுப் பற்றோடு பார்ப்பவர்களே பலர். அவ்விளம்பரங்களுக்குப் பின்னால் ஆதாரமாய், நிலையாய் நிற்பதாகின்ற சுவரின் தன்மையை யாரும் நோக்குவதில்லை. இந்த உலகிற் காணப்படும் பொருள்கள் யாவும் அந்த விளம்பரச் சுவரொட்டிகளைப் போன்றவை. நாம் உலகப் பொருள்களைத் தனித்தனியே நோக்கி அவற்றின் மீது பற்றுக் கொண்டு நிற்கிறோம். சுவரொட்டிகள் எப்படி நிலையில்லாமற் போகின்றனவோ அப்படியே அவையும் நிலையற்ற தன்மை உடையனவாகும். ஆனால், அதனை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. இந்த நிலையற்ற உலகிற்கு ஆதாரமாய் இருப்பது எது? சுவர் போல உலகிற்குத் தாரகமாய் நிற்பது திருவருளாகும். விளம்பரக் கவர்ச்சியில் ஈடுபட்டுச் சுவரை மறப்பவரைப் போல நாமும் உலகியற் பொருள்களில் பற்றுச் செய்து, திருவருளைப் பற்றாமல் விடுகிறோம். அடிப்படையாக உள்ள சுவரை நோக்குவார்க்கு அதில் ஒட்டப்பட்டுள்ள படக் காட்சிகள் சலனத்தைச் செய்யா; விளம்பரங்கள் அவரது கருத்திற் பதியா; அவரிடம் பறறினைச் செய்ய மாட்டா. அவர்க்குச் சுவரின் தன்மையே புலப்படும். அதுபோல அறிவை மயக்குகிற உலகப் பொருள்களில் பற்று வைக்காமல் அவற்றைத் தள்ளி நோக்குவார்க்கு அவற்றிற்கு ஆதாரமாய் உள்ள திருவருள் இனிது புலப்படும். அறியும் நெறியில் நின்று இவ்வாறு பாசப்பற்றை நீக்கித் திருவருளை உணர்ந்தவர் பின் அதனோடு ஒன்றி நிற்கும் முறையினை இச்செய்யுள் உணர்த்துகிறது.
பிறவி வெப்பமும் திருவருள் நிழலும் :
திருவருளை இறைவன் திருவடி நிழல் என்று சிறப்பிப்பர். உயிர் திருவருளைச் சேர்ந்து பிறவியாகிய வெப்பம் நீங்கித் தண்மையாகிய இன்பம் பெற்று மகிழ்தலால் அது திருவடி நிழல் எனப்படுகிறது. பிறவி எடுத்தவரெல்லாம் பிறவித் துன்பத்தை உணர்ந்தவர் அல்லர். வெயிலில் நடப்போர் எல்லாம் வெயில் தரும் துன்பத்தை உணராதிருப்பது போன்றது இது. பிள்ளையைப் பள்ளியில் எப்பாடு பட்டாவது சேர்க்க வேண்டும். இவரைப் போய்ப் பார்த்தால் அது நடக்கும் என்று அவரைப் பிடிப்பதற்காக வேகின்ற வெயிலில் வேகமாய் நடப்போர் உண்டு. வழியில் நிழலைக் கண்டாலும் நின்று இளைப்பாற மாட்டார். அதற்குள் அவர் போய்விட்டால் என்ன செய்வது? நட்ட நடுப்பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் திரையரங்கின் வாசலில் மணிக்கணிக்காய்த் தவம் கிடப்போர் உண்டு. அவர் எல்லாம் வெயிலின் வெம்மையை உணராதவர் ஆவார். இனி, ஒரு பற்றும் இல்லாத ஏழை இரவலன் ஒருவனும் அந்த வெயிலில் வருகிறான். அவனுக்கு வீடில்லை. வாசலில்லை. யார் பரிந்துரையையும் நாடிச் செல்ல வேண்டியதில்லை. படக் காட்சியைப் பார்த்தே தீர வேண்டும் என்ற வெறியும் இல்லை. வேறு வருத்தமும் இல்லை. அவனை இப்பொழுது வருத்துவதெல்லாம் இந்த வெயில்தான். இதிலிருந்து விடுபடுவது எப்படி? சுற்றுமுற்றும் பார்க்கிறான். அதோ! ஒரு மரநிழல். ஓடிச்சென்று அதனை அடைகிறான்; வெயிலின் கொடுமையிலிருந்து விடுபடுகிறான். உடலும் உள்ளமும் குளிர்கிறான்; இன்புறுகிறான். இவ்வாறு நிழலையடைந்து இன்புறும் இவனைப் போன்றவர் பிறவி வெப்பத்தை உணர்ந்து அறியும் நெறியில் நின்று திருவருள் நிழலை அடைந்து நிற்பர்.
இயற்கையே செயற்கை போலத் தோன்றுதல் :
வழிச் செல்வோனுக்கு வேறாக இருக்கிறது மர நிழல். அவன் சென்று அதனை அடைகிறான். அதுபோலத் திருவருளும் உயிருக்கு வேறாக இருக்கிறது என்று கருதி விடக் கூடாது; திருவருள் உயிரோடு என்றும் பிரிப்பின்றி ஒன்றாகவே உள்ளது. மல மறைப்பினால் உயிர் இவ்வுண்மையைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறது. ஆணவ மலம் உயிருக்கு நான் என்ற தன் முனைப்பைக் கொடுத்து நான் ஒரு தனி முதல் என்று கருதும்படியாகச் செய்கிறது. அதனால் உயிர் தான் இறைவனுக்கு வேறாக இருப்பதாக உணர்கிறது. இது பொய்யுணர்வாகும். பின், ஞானம் பெற்று மலம் நீங்கித் திருவருளை உணரும் காலத்தில் அத்திருவருட்காட்சி அதற்குப் புதியதாகத் தோன்றுகிறது. இந்நிலையை ஓர் உவமையினால் விளக்கலாம். பிறவிக் குருடன் ஒருவனுக்குக் கண்பார்வை கிடைத்தால் அவனுக்குச் சூரியவொளி புதியதாகத் தோன்றும். ஆனால், அவ்வொளி புதிதாக வந்ததன்று. இதுகாறும் அவன் சூரியவொளியில் தான் நின்றான். அவனுடைய கண்ணிலும் சூரியவொளி பொருந்தி நின்றது. படலம் கண்ணை மறைந்திருந்தபடியால் சூரியவொளி புலப்படாமல் இருந்தது. இப்பொழுது படலம் நீங்கிக் கண்பார்வை வந்தவுடன் சூரியவொளி அவனுக்குப் புதியதாகத் தோன்றுகிறது. அது போலப் பக்குவப்பட்ட உயிர் மலம் நீங்கித் திருவருட் காட்சி புலப்பட்டவுடன், அதனோடு தான் புதிதாக ஒன்றுபடுவதுபோல உணர்கிறது. சுருங்கக் கூறினால், இயற்கையே அதற்குச் செயற்கை போலத் தோன்றுகிறது எனலாம். மலமறைப்பும் அதன் நீக்கமுமே உ<யிர் இவ்வாறு உணர்வதற்குக் காரணமாகும்.
திருவருளோடு ஒன்றாய் நிற்றல் :
தெளிவுணர்வால் திருவருளை இறுகப் பற்றிய உயிர், அதனோடு ஒன்றுபட்டு நிற்கும் நிலையினைத் தான் அதுவாய் நிற்கும் தரம் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர். உயிர் அதுவாய் நிற்றல் எவ்வாறு என்பதை நோக்குவோம். உயிர் தன்னை வேறாய் அறிகிற நிலை போக வேண்டும். நான் என்ற தற்போதம் நீங்கவேண்டும். நான் என ஒரு முதல் இல்லை என்று திருவருள் நிறைவில் அடங்கி நிற்க வேண்டும். பெத்த காலத்தில் இறைவன் உயிரிடத்தில் அடங்கித்தான் சிறிதும் புலப்படாமல், உயிர் ஒன்றே உள்ளது என்று சொல்லும்படியாக நின்றது போல இம் முத்திகாலத்தில் உயிர் தான் முனைந்து தோன்றாமல் அருளிடத்தில் அடங்கி நிற்றல் வேண்டும். எனவே, திருவருளைத் தெளிய உணர்ந்த உயிர் தன்னறிவு வேறாய் நில்லாமல் சிவனது அறிவாகிய அத்திருவருளிற் பொருந்தி நான் என்ற உணர்வை இழந்து அதனோடு ஒன்றி நிற்றலே அதுவாய் நிற்றல் என ஒருவாறு அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...