5. மூவகைத் திருமேனி கொள்பவன்
அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம்
உருவும் உடையான் உளன்.
பொருள் : இறைவன் ஞானியர்க்கு அறிவே வடிவாய் விளங்குகின்றான். ஏனையோர்க்கு அருவம், உருவம், அரு வுருவம் என்னும் மூன்று திருமேனிகளை உடையவனாய் இருக்கின்றான்.
சொற்பொருள் :
உடையான் - எல்லாப் பொருள்களையும் தனது உடைமையாகக் கொண்டவனாகிய இறைவன்
அறிஞர்க்கு - மெய்யுணர்வு பெற்ற ஞானியர்க்கு
அறிவாம் உருவும் - அறிவே வடிவான திருமேனியையும்
அருவும் உருவும் - (ஏனையோர்க்கு) அருவத் திருமேனியையும், உருவத் திருமேனியையும்
உளன் - உடையனாய் இருப்பான்.
விளக்கம் :
உண்மை நிலையும் பொது நிலையும் :
இறைவனுக்கு இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று உண்மை நிலை. மற்றொன்று பொதுநிலை. இறைவன் இயல்பிலே தனக்கென உருவம், பெயர், தொழில் ஒன்றும் இல்லாதவன். இதுவே அவனது உண்மை நிலை. இதனை வடமொழியில் சொரூபம் என்பர். இத்தன்மையனாகிய இறைவன் உயிர்களின் பொருட்டு உருவம் முதலியவற்றை மேற்கொள்வன். இஃது அவன் அடையும் பொது நிலையாகும். இதனைத் தடத்தம் என்பர். இறைவனது உண்மை நிலையை ஞானியரே அறிதல் கூடும். அவர்க்கு அவன் அறிவே வடிவாய் விளங்குவான். அதனை அறிந்த அப்பெரியோர் ஆராத இன்பத்தையே நுகர்ந்து நிற்பர். இறைவனது உண்மை நிலையை உணர மாட்டாதவரே ஏனையோர். அவர்களும் தன்னை மனம் மொழி மெய்களால் உணர்ந்து வழிபட்டு உய்தல் வேண்டி அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூவகைத் திருமேனிகளைக் கொள்வன்.
நானாவித உருவாய் நமை யாள்வான் (1 : 9 : 5)
என்று ஞானசம்பந்தர் அருளியுள்ளமை காணலாம். ஆசிரியர் உமாபதி சிவம் தமது மற்றொரு நூலான சிவப்பிரகாசத்தில் இறைவனது இயல்பைச் சொல்லும் போது நிலவும் அரு வுரு இன்றி (செ.13) என்றார். அவ்வாறு அங்கே சொன்னவர் இங்கே அருவும் உருவும் உளன் என்கிறார். சிவப்பிரகாசத்தில் சொன்னது இறைவனது உண்மை நிலையை நோக்கி எனவும், இங்கே சொன்னது அவனது பொது நிலையை நோக்கி எனவும் உணர்தல் வேண்டும். இனி, அருவம் முதலிய மூவகைத் திருமேனிகளின் தன்மையை விளக்குவோம்.
அருவம் :
இறைவன் உயிர்களிடத்து நுண்ணிய மொழி வடிவாய் நின்று அவற்றிற்கு உணர்தல் தன்மையை உண்டாக்குகிறான். இக்கருத்தமைந்த,
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா
என்னும் திருவாசகத் தொடர் ஆழ்ந்து உணர்தற்குரியது. இஃது இறைவனது அருவ நிலையாகும். அருவத் திருமேனி என்று சொல்லப்பெறும் இது கட்புலனாகாது கருத்தினாலேயே உணரப் படுவதாகும்.
உருவம் :
அருவத் திருமேனி போலன்றிக் கட்புலனாகக் கூடியது உருவத் திருமேனியாகும். இது முகம் கை கால் முதலிய உறுப்புக்களுடன் கூடிய வடிவமாகும். ஆயினும் இவ் வுருவம் பக்குவமில்லாத நம்மவர் கண்ணிற்குப் புலப்படாது; தவத்தோர் கண்ணிற்கே புலப்படுவதாகும். அடியார் பலர்க்கும் பல சமயங்களில் தோன்றி அருள்புரிந்த திருமேனிகள் எல்லாம் உருவத் திருமேனிகளே. உருவத் திருமேனியைப் போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என மூன்றாகச் சொல்வர். உலக இன்பத்தைத் தருதற் பொருட்டு மணக் கோலம் கொள்ளுதல், அம்மையும் அப்பனுமாய் இருத்தல் போன்றவை போக வடிவம் எனப்படும். ஞானத்தைத் தருதற் பொருட்டுத் தட்சிணாமூர்த்தியாய் எழுந்தருளியிருத்தல் போன்றவை யோக வடிவம் எனப்படும். தேவர்க்கும் ஏனை உலகத்தார்க்கும் உண்டாகும் துன்பத்தைப் போக்குதற்குப் போர்க் கோலம் கொள்ளுதல் (திரிபுரம் எரித்தல், காலனை உதைத்தல்) போன்றவை வேக வடிவம் எனப்படும். இறைவன் செய்யும் ஐந்தொழில்களை முந்திய செய்யுளில் அறிந்தோம். அவற்றுள் அருளல் தவிர மற்றைய நான்கு தொழில்களையும் செய்யும் நிலையில் உருவத் திருமேனி அவனால் கொள்ளப்படும்.
அருவுருவம் :
இனி, அருவம் உருவம் என்னும் இவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாக அருவுருவம் என்பது உண்டு. செய்யுளில் அருவும் உருவும் என இரண்டே கூறப்பட்டுள்ளன. ஆயினும் இடைக் கண்ணதாகிய அருவுருவம் என்பதையும் நாம் கொள்ளல் வேண்டும். அருவுருவம் என்பது முகம் முதலிய உறுப்புக்கள் இல்லாது பிழம்பு மாத்திரமாகக் காணப்படுகிறது. ஒளி வடிவமே இது. முகம் முதலிய உறுப்புக்கள் இல்லாமையால் அருவம் எனவும், கட்புலனுக்குத் தோன்றுவதால் உருவம் எனவும், சொல்லும்படியாக நிற்றலால் இது அருவுருவம் ஆயிற்று. தோன்றி மறைகின்ற ஒளிச்சுடர் போல அருவுருவத் திருமேனியும் ஓரொரு சமயமே தோன்றிப் பின் தோன்றாது நிற்கும். இதுவே ஐந்தொழில்களுள் அருளலைச் செய்வதாகும். அது பற்றியே திருக்கோயில்களில் மூலத் தானத்தில் மூல மூர்த்தியாய் வைத்து வழிபடப் பெறுகிறது. இது சிவலிங்கத் திருமேனி எனவும், சதாசிவ மூர்த்தி எனவும் பெயர் பெறும்.
அருள் திருமேனி :
இதுகாறும் கூறியவற்றால் இறைவன் கொள்ளும் மூவகைத் திருமேனிகளின் இயல்பு ஒருவாறு விளங்கும். முடிவாக ஒன்றைச் சொல்ல வேண்டும். நம்முடைய உடம்பெல்லாம் மாயையினால் ஆகிய சரீரம். இறைவன் கொள்ளும் திருமேனியோ மாயையினால் ஆனதன்று. அஃது அருளால் ஆனது. ஆகவே அருள்திருமேனி எனப்படும். அவ்வருள் திருமேனிகள் பிறரால் படைத்துத் தரப்படுவன அல்ல. அவன் தானே தனது இச்சையாற் கொள்வன என்பதை உளங்கொள்ளுதல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக