58. திருவருள் ஒளியைக் காணும் முறை
ஓராதே ஒன்றையும் உற்று உன்னாதே; நீ முந்திப்
பாராதே; பார்த்ததனைப் பார்.
பொருள் : மனம், மொழி, மெய்களின் தொழிற்பாடாகிய முயற்சிகளுள் யாதொன்றையும் உன்னுடையதாகக் கருதாதே. அம் முயற்சியால் விளையும் நலம் தீங்குகளை உன்னுடையனவாகக் கொண்டு அவற்றில் அழுந்தாதே. தற்போதம் நீங்கிய இடத்து வேறற விளங்கி நிற்பதாகிய திருவருளை உனது தற்போதத்தினால் காண முற்படாதே. உன்னறிவில் நிலைத்து நின்று உன்னைக் கண்டு வருவதாகிய அத்திருவருளை மனம் அசைவற நின்று காண்பாயாக.
சொற்பொருள் :
ஒன்றையும் ஓராதே - மனம், மொழி, மெய்களாற் செய்யும் செயல்களுள் எந்த ஒன்றையும் உன்னுடையதாகக் கருதாதே.
உற்று உன்னாதே - அச் செயல்களால் விளையும் நலன் தீங்குகளை உன்னுடையனவாகக் கொண்டு அவற்றில் அழுந்தாதே.
நீ முந்திப் பாராதே - திருவருளை உன்னுடைய தற்போதத்தால் காண முற்படாதே.
பார்த்ததனை - உன் அறிவில் நின்று உன்னைக் கண்டு வருவதாகிய அத்திருவருளை
பார் - மனம் அசைவற்று நின்று காண்பாயாக.
விளக்கம் :
எந்நிலையிலும் தனக்குத் துணையாய் நின்று உதவும் திருவருளை உயிர் மறந்து யான் என முனைத்து நிற்றலே சீவபோதம் அல்லது தற்போதம் எனப்படும். இந்த <உலகத்தில் நான் வாழ்கிறேன். இவை எல்லாம் எனக்கு உரிய பொருள்கள். நான் நினைத்தால் எந்த இன்பத்தையும் அனுபவிக்கலாம் என்று வரும் நான் நான் என்ற நினைப்பே சீவபோதம். சீவபோதம் இருக்கும்வரை திருவருள் வெளிப்படாது. ஓர் எடுத்துக்காட்டுக் கூறி இதனை விளக்கலாம். மேட்டினை அடுத்து ஒரு வயல் இருக்கிறது. அருகிலேயே ஆறும் ஓடுகிறது. ஓடி என்ன பயன்? மேடு இடையில் தடையாக இருப்பதனால் ஆற்று நீர் வயலில் பாய முடியவில்லை. வயலுக்கு நீர் வேண்டுமானால் ஆற்றோரத்தில் இருக்கிற மேட்டினை வெட்டிவிட வேண்டும். பிறகு ஆற்றுநீர் தானே வயலில் பாயும். வயல் போல இருப்பது உள்ளம். தடை செய்கின்ற மேடாக இருப்பது தற்போதம். அதனை நீக்கினால், தன் முனைப்போடு மற்றச் செயல்களைச் செய்யாமல் மனம் அடங்கி மவுனமாக இருந்தபடி இருந்தால் அருள் அங்கே வரும். யான் எனதென்றற்ற இடமே திருவடி என்பார்கள். யான் என்ற அகங்காரத்தையும், எனது என்ற மமகாரத்தையும் நீக்கினால் அங்கே திருவருள் வெளிப்படும் என்பது இதன் கருத்தாகும்.
ஒரு கவிஞர் பின்வருமாறு சொன்னார்.
நான் மறையைக் கற்றவனா ஞானி? - தன்னுள்
நான் மறையக் கற்றவனே ஞானி
என்று அழகாக விளக்கம் அளித்தார். நான் மறையாகிய வேதங்களைக் கற்றதனால் மட்டும் ஒருவன் ஞானியாகிவிட முடியாது. நான் என்று எழுகிற தற்போதம் மறையக் கற்றவனே உண்மையான ஞானியாவான் என்று நயம்படக் கூறினார். எனவே, தம் முனைப்புத் தோன்ற நில்லாமல், உரையும் உணர்வும் அற்று அசைவற்று நிற்பின், அருளொளியாகிய சிவஞானம் உன்னறிவில் தானே வெளிப்பட்டு உன்னை அடக்கிக் கொள்ளும் என்பது மாணவனுக்கு ஆசிரியர் கூறும் அறிவுரையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக