வெள்ளி, 3 நவம்பர், 2017

56. இடையே நிற்கும் திருவருள்

56. இடையே நிற்கும் திருவருள்
கண் தொல்லை காணும் நெறி கண் உயிர் நாப்பண் நிலை
உண்டு இல்லை அல்லது ஒளி.

பொருள் : கண் தொன்று தொட்டுப் பொருளைக் கண்டு வரும் முறைமை, கண்ணிற்கும் உயிருக்கும் இடையே ஒளி நிற்பதனால் உண்டாகின்றது. அவ்வாறு ஒளி நில்லாவிடில் கண் பொருளைக் காணுதல் என்பது நிகழாது.
சொற்பொருள் :
கண் - கண்
தொல்லை - தொன்று தொட்டு
காணும் நெறி - பொருள்களைக் கண்டு வரும் முறைமை
கண் உயிர் நாப்பண் - கண்ணுக்கும் உயிருக்கும் இடையே
ஒளி நிலை - ஒளி நிற்றலால்
உண்டு - உளதாகிறது
அல்லது - ஒளி அவ்வாறு நிற்கவில்லையாயின்
இல்லை - கண் காணுதல் இல்லை.

விளக்கம் :
கண் காணும் நெறி :
கண் ஒரு பொருளைக் காணுமிடத்து அது தானே தனித்து நின்று காண்பதில்லை. உயிர் உடனாக இருந்து செலுத்தவே அது காணவல்லதாகும். இனி, கண் செயற்படுவதற்கு உயிர் உடனிருந்து செலுத்துதலாகிய அந்த உதவி மட்டுமே போதுமோ எனில், போதாது. போதும் எனில் இருளில் நிற்கும் பொழுதும் கண் பொருளைக் காணுதல் வேண்டும். அப்பொழுதும் உயிர் உடனிருந்து செலுத்தவே செய்கிறது. ஆயினும் கண் காணமுடியவில்லையே. இதனால் உயிர் உடனிருந்து செலுத்துவதாகிய உதவி மட்டும் கண்ணுக்குப் போதாது என்பது புலனாகும். வேறொரு பொருளின் உதவி கண்ணுக்குத் தேவைப்படுகிறது. அஃதாவது பகலில் சூரிய வொளியும் இரவில் விளக்கொளியும் வேண்டியிருக்கிறது. சூரிய வொளியோ, விளக்கொளியோ கண்ணொளியோடு கலந்து காட்டும் பொழுதே கண் பொருளைக் காண வல்லதாகின்றது. இவ்வாறு, கண்ணிற்கும் உயிருக்கும் இடையே ஒளி நின்று உதவுகிறது. கண் காணும் நெறி இதுவாகும். இப்பொருளுக்கு ஏற்ப, செய்யுளின் இறுதியில் உள்ள ஒளி என்ற சொல்லை எடுத்து முதலடியின் இறுதியில் உள்ள நிலை என்பதற்கு முன்னே கூட்டி, கண் காணும் நெறி கண் உயிர் நாப்பண் ஒளி நிலையால் உண்டு; அல்லது இல்லை என அமைத்துக் கொள்ள வேண்டும். இச் செய்யுளில் கூறப்பட்டுள்ளது உவமை மட்டுமே. இதனைக் கொண்டு ஆசிரியர் உணர்த்த விரும்பும் கருத்தை இனிக் காண்போம்.
உயிர் அறியும் நெறி :
கண் போல இருப்பது உயிர். கண் தானே காண மாட்டாது போல உயிரும் தானே அறிய மாட்டாது. உயிருக்கு அறிவு விளங்குதற் பொருட்டுக் கருவி கரணங்களைக் கூட்டுவித்தது திருவருள். கருவி கரணங்களை உயிருக்குச் சேர்த்ததோடு திருவருளின் செயல் முடிந்து விட்டது என்றோ, கருவிகளைப் பெற்ற உயிர் அவற்றைத் தன் விருப்பப்படியே இயக்கி விரும்பியவாறு அறியும் என்றோ கருதி விடலாகாது. கருவிகள் நம் விருப்பப்படி இயங்குவதில்லை என்பதையும் அவை நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும் அன்றாட அனுபவத்திற் காணலாம். சிலர் குணத்தில் நிறைமதியாய் இருப்பார்கள். அவர் மனத்தில் எப்பொழுதும் சாந்தமே குடி கொண்டிருக்கும். அமைதியும் அடக்கமுமே அவரிடம் நிலை கொண்டிருக்கும். அப்படிப்பட்டவரும் கூட ஓரொரு சமயத்தில் தமது பொறுமையையும் அமைதியையும் இழந்து கோபத்தின் வசப்பட்டு விடுவார்கள். இவருக்கா இவ்வளவு சினம்! என்று பிறர் வியந்து போகும் படியாகச் சினத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள். இஃது எதைக் காட்டுகிறது? மனமாகிய கருவி அவர்கள் வசத்தில் இல்லை என்பதைத்தானே காட்டுகிறது. சொல்வன்மை படைத்தவர் பலர் இருக்கிறார்கள். எந்த இடத்தில், எந்தச் சமயத்தில், எந்தச் சொல்லை ஆள வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்குக் கைவந்த கலை. அவர்களை வசன நிர்வாகர் என்று குறிப்பிடுவார் தாயுமானவர். அப்படிப்பட்டவரும் கூட ஓரொரு சமயத்தில் சொல்லக் கூடாத சொல்லை வாய் தவறிச் சொல்லி இடர்ப்பாட்டிற்கு உள்ளாகிறார்கள். இஃது எதைக் காட்டுகிறது? வாக்கு ஆகிய கருவி அவர் வசத்தில் இல்லை என்பதைத் தானே காட்டுகிறது.
ஒருவர் சென்னையிலிருந்து புறப்பட்டார். அவர் செல்ல வேண்டிய ஊர் மதுரையைக் கடந்து உள்ளது. மதுரையை நெருங்கும் பொழுது ஆலயத்தின் நெடிதுயர்ந்த கோபுரங்கள் கண்ணிற்கும் கருத்திற்கும் விருந்தளிக்கும். அக் கோபுரங்களைக் கண்ணாரத் தரிசிக்க வேண்டும் என்று அவர் எண்ணிக் கொண்டே வந்தார். வண்டி மதுரையை நெருங்கியபோது அவர் தம்மையறியாமல் உறங்கி விட்டார். உடற்சோர்வும், மெல்லென வீசிய இளம் காற்றும் அவரை மெய் மறந்து தூங்க வைத்து விட்டன. திடீரென அவருக்கு விழிப்பு உண்டாயிற்று. வெளியே எட்டிப் பார்த்தார். வண்டி மதுரையைத் தாண்டி விட்டது என்பதை உணர்ந்தார். பாழாய்ப் போன தூக்கம் வந்து கெடுத்து விட்டது என்று நொந்து கொண்டார். இந்நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது? <உடம்பு ஆகிய கருவி அவர் வசத்தில் இல்லை என்பதைத்தானே காட்டுகிறது. இதனால், கருவிகள் இயங்குவது உயிரின் விருப்பப்படி அன்று என்பது தெளிவாகும். திருவருளே கருவிகளைக் கூட்டுவிப்பதோடு அவ்வவ்வுயிரின் வினைக்கேற்ப அக்கருவிகளைச் செலுத்தியும் வருகிறது. எப்படி கண்ணிற்கும் உயிருக்கும் இடையே ஒளி நிற்கிறதோ அப்படியே கருவிகளுக்கும் உயிருக்கும் இடையே திருவருள் ஒளி நின்று செலுத்துகிறது. திருவருள் அவ்வாறு நில்லாவிடில் உயிர் அறிதல் இல்லையாம். இங்குப் பெத்த நிலை மட்டுமே கூறப்பட்டுள்ளது. பெத்த நிலையில் மட்டுதான் இப்படி என்று எண்ணி விடவேண்டா. முத்தி நிலையிலும் திருவருளின் துணையின்றி உயிர் அமையாது என உணர்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...