55. பளிங்கிற்குப் பகலவன் போல உயிர்கட்குத் திருவருள்
தன்னிறமும் பன்னிறமும் தான் ஆம் கல் தன்மை தரும்
பொன்னிறம் போல் மன்னிறம் இப் பூ.
பொருள் : பளிங்குக் கல் தனக்குப் பக்கத்தில் உள்ள பல பொருள்களின் நிறங்களையும் கவர்ந்து அப் பன்னிறங்களையே தன் நிறமாகக் காட்டி நிற்கும். இனி, சூரியன் உச்சியில் வரும்போது, பக்கத்தில் பல பொருள்கள் இருப்பினும் பளிங்குக் கல் அவற்றின் நிறங்களைக் கவராமல் தன் ஒளியை மட்டுமே தோற்றி நிற்கின்ற நிலையும் உண்டு. இங்ஙனம், பிற பொருள்களின் நிறத்தைக் காட்டி நிற்றலும், தனது நிறத்தை மட்டும் காட்டி நிற்றலும் ஆகிய இரு தன்மைகள் பளிங்கிற்கு உண்டு என அறியலாம். பளிங்கிற்கு அவைமுறையே பொதுவியல்பும், தன்னியல்பும் ஆகும். அவ்விரு தன்மைகளையும் பளிங்கிற்குத் தருவது சூரியனது ஒளியேயாகும். சூரியவொளி இன்றேல் பளிங்கு பிற பொருள்களின் நிறங்களைக் கவர்தலும், தனது ஒளியை மட்டும் தோற்றி நிற்றலும் ஆகிய இரண்டும் இல்லையாம். அச்சூரியவொளி போன்றது இறைவனது திருவருள். திருவருளின் உதவியாலேயே உயிர்களுக்குக் கட்டு நிலையில் பொது வியல்பும், முத்திநிலையில் தன்னியல்பும் விளங்குகின்றன.
சொற்பொருள் :
இப் பூ - இவ்வுலகில்
மன் நிறம் - இறைவனது திருவருள் (நிற்கும் முறைமை)
தன் நிறமும் - தனது நிறத்தையும்
பன்னிறமும் - பிற பொருள்களின் நிறத்தையும்
தான் ஆம் - தன்னிடத்தே காட்டி நிற்கும்
கல் - பளிங்குக் கல்லிற்கு
தன்மை தரும் - அவ்இரு தன்மையையும் கொடுக்கின்ற
பொன்நிறம்போல்- சூரியனது ஒளி நிற்கும் முறைமை போன்றதாகும்.
விளக்கம் :
ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சேர்க்கையால் செயற்கையாக வருகிற இயல்பு பொதுவியல்பு எனப்படும். அவ்வாறின்றி ஒரு பொருளுக்கு இயற்கையாய் உள்ள இயல்பு தன்னியல்பு எனப்படும். அதனை உண்மையியல்பு எனவும் கூறுவர். உயிர் பிறப்பு நிலையில் உடம்பின் சேர்க்கையைப் பெற்று நிற்கிறது. உடம்பின் சேர்க்கையால் உயிருக்குப் பிறப்பும் இறப்பும் நிகழ்கின்றன. பிறத்தலும் இறத்தலும் ஆகிய இவை உயிருக்குப் பொதுவியல்பு ஆகும். மேலும் உடம்பிலுள்ள ஐம்பொறி முதலிய கருவிகளின் சேர்க்கையால் சிற்றறிவாகிய மயக்க அறிவு உண்டாகிறது. இந்தச் சிற்றறிவும் உயிருக்குச் செயற்கையாக வருகிற பொதுவியல்பே யாகும். இன்னும் உயிர் உடம்பிற் கட்டுண்டு உடம்பையே தானாக நினைக்கிறது. உடம்பின் தன்மைகளையே தன்னுடைய தன்மைகளாகக் கருதுகிறது. அஃதாவது, பசி, தாகம், உறக்கம், விழிப்பு முதலியவை உடம்பிற்கு உரியவை. அவற்றைத் தன்னுடைய இயல்புகளாகக் கொள்கிறது. இவையெல்லாம் உயிருக்குப் பொது வியல்புகளேயாகும். திருவருள்தான் உயிர்களுக்கு உடம்பைக் கூட்டி உலக வாழ்வில் செலுத்தி மேற்கூறிய பொதுவியல்புகளை அடையும்படி செய்கிறது. பொதுவியல்பு என்பது இடையில் வருவது. அவ்வியல்புக்கு எப்பொருளின் சேர்க்கை காரணமோ அச் சேர்க்கை நீங்கும்போது அவ்வியல்பும் நீங்கி விடும். அம்முறையில் மலங்களின் சேர்க்கையாகிய கட்டு நிலை நீங்கும் போது பிறப்பு, இறப்பு, சிற்றறிவு முதலிய பொதுவியல்புகள் நீங்கிவிடும். பொதுவியல்பு நீங்கினால் உயிர் தனது உண்மையியல்பாகிய தன்னியல்பைப் பெறும். வியாபக அறிவு (விரிந்த அறிவு) என்பது உயிருக்கு உரிய தன்னியல்பாகும். கட்டுநிலை நீங்கி முத்தி நிலையில் உயிர் தனக்குரிய இயற்கையாகிய வியாபக அறிவைப் பெறும். சிற்றறிவால் <உலகப் பொருள்களை அறிந்து வந்த சிறுமை நீங்கித் தனது வியாபக அறிவால் இறைவனை அறிந்து அனுபவிக்கும்.
திருவருள்தான் பக்குவமுற்ற உயிருக்கு மும்மலங்களின் தொடர்பை அறுத்து, <உடம்பின் சார்பை நீக்கி, அவற்றால் உண்டான பொதுவியல்பாகிய சிற்றறிவையும் ஒழித்துத் தன்னியல்பாகிய வியாபக அறிவை விளங்கச் செய்து இறைவனை உணரும்படி செய்கிறது. உயிருக்குப் பொதுவியல்பு, தன்னியல்பு என்னும் இரண்டு இயல்புகள் உள்ளன என்பதும், பளிங்கிற்குப் பொதுவியல்பும் தன்னியல்பும் சூரியனது ஒளியால் விளங்குவது போல உயிரிடத்து அவ்விரு வகை இயல்புகளும் இறைவனது திருவருளாலேயே விளங்குவன என்பதும் இச்செய்யுளில் உணர்த்தப்பட்டன. இதனால் உயிர்கட்குப் பெத்தம், முத்தி இரண்டினையும் தருவது திருவருளே என அறிதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.
குறிப்பு : கல் என்பது பளிங்குக் கல்லைக் குறிக்கும். பொன் என்பதற்குச் சூரியன் என்பது பொருள். நிறம் என்பது ஒளி. சூரிய ஒளியைப் பொன்னிறம் என்றார். மன் - தலைவன்; இங்கு இறைவனைக் குறிக்கும். இறைவனது ஒளியாகிய திருவருளை மன்னிறம் எனக் குறிப்பிட்டார். பூ - உலகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக